சென்னை புத்தகத் திருவிழா 2023-9. ஒரு பாலுறவு – சில விவாதங்கள்-ஜெயமோகன்

 

ஒரு பாலுறவு குறித்த உகவர்களின் கடிதங்களுக்கு ஜெ அளித்த பதில்களும், அது சார்ந்த மற்ற நபர்களின் எதிர்வினைகளும் அடங்கிய சிறிய நூல் இது. இந்த நூலின் வழியே முதலில் நாம் அடையும் தெளிவு என்பது ஒரு பாலுறவு என்பது இயற்கையிலேயே அனைத்து உயிர்களிலும் உறைந்துள்ளது என்பதும், அது குறித்து 1970-ல் தான் முதன்முதலில் அறிவியல் ஆதாரங்கள் உலகின் முன்வைக்கப்பட்டது என்பதும். அதிலிருந்து தான் உலகில் அது குறித்த விவாதங்கள் தொடங்கி, கலைகளிலும், பண்பாட்டிலும் ஊடுருவி அதன் வழியே சட்ட ரீதியாக அதற்கு சில நாடுகளில் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இப்பொழுதுதான் அதற்கான உரையாடல் தொடங்கியுள்ளது. இனிமேல் தான் அது வளர்ந்து, பரவி பரவலாக ஏற்றுகொள்ளப்படும் காலம் வரும்.

 இந்து மதம் ஒரினச்சேர்க்ககைக்கு எந்த விதத்திலும் எதிரானது அல்ல. ஏனென்றால் இதுபோன்ற ஒழுக்க கட்டுப்பாடுகள் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் மாறுபடக்கூடியவை, அவை ஸ்மிருதிகள். இந்து மதம் எல்லா காலகட்டத்திற்கும் பொதுவான அறங்களை முன்வைப்பவை, அவை ஸ்ருதிகள். எனவே உகவர்கள் குறித்த மனமாறுபாடுகள் இந்தியாவில் சுமூகமாக நிகழவே வாய்ப்பிருக்கிறது. ஆனால் முதலாம் உலக நாடுகளை போலன்றி சமூகத்திலும், சட்ட ரீதியாகவும் அது மெதுவாகவே ஏற்றுக் கொள்ளப்படும் என்று கூறுகிறார் ஜெ. ஏனென்றால் இஸ்லாம் ஓரின சேர்க்கையை பாவமாக பார்க்கிறது. பிற மதங்களும் ஒழுக்க ரீதியான செயல்பாடுகளுக்கு கறாரான எல்லைகளை கொண்டுள்ளது. எனவே இந்தியா போன்ற பல்வேறு பிரிவினர் வாழும் நாட்டில் அரசால் மெதுவாகவே அதனை அங்கீகரிக்கும் நிலை வர இயலும்.

இந்த விவாதத்தை தொடங்கி வைத்தது விஜய் என்பவரின் கடிதம். அதை தொடர்ந்து பலரின் கடிதங்கள் வழியே தமிழ் நாட்டில் தலைமறைவாக மறைந்து வாழ்ந்து வரும் உகவர்களின் அக, புற நெருக்கடிகள் மற்றும் அவர்களின் உணர்வுகள் தெளிவாக பதிவாகியுள்ளது.

அனைத்து கடிதங்களிலும் எழுப்பப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு ஜெ அளிக்கும் பதில் என்பது கடிதம் எழுதிய நபரின் ஆளுமையை அவரது எழுத்தின் வழியே கண்டுபிடித்து அதற்கு ஏற்றாற்போல் அமைந்துள்ளது. ஜெ. பாலியல் சார்பை நீண்ட சமூக, வரலாற்று பரிணாம பின்னணியில் வைத்து அதற்கு சமூக உளவியலில் இயல்பாக ஏற்படும் எதிர்வினைகளை கூறி தெளிவான பதில்களைத் தருகிறார். மேலும் நாம் வாழும் சூழலில் அதனை ஒரு சமூகம் ஏற்றுக்கொள்ளும் வரை அதனோடு முட்டி மோதாமல் அவரவர் ஆளுமைகேற்றாற் போல வாழ்வை அமைத்துகொள்ள வலியுறுத்துகிறார். பாலியல் சார்பு  வாழ்வின் ஒரு சிறு விடையமே. அதை ஊதி வாழ்க்கை அளவுக்கு பெருக்காமல், அதை தாண்டி தான் ஆற்ற வேண்டிய களத்தை கண்டுபிடித்து அதில் வென்று, அதன் மூலம் தனது சமூக பங்களிப்பை நிலைநாட்டுமாறு வழியமைத்து கொள்ள சொல்கிறார். அதுவே மெய்யான வாழ்க்கை என்கிறார். அதற்கு உதாரணமாக எழுத்தாளர் ஸக்கி மற்றும் வங்க இயக்குனர் ரிதுபர்ணே கோஷை முன்வைக்கிறார்.

இந்த நூலின் வழியே நான் அடைந்த தெளிவு, ஓரினச்சார்பு என்பது உயிரினங்கள் அனைத்திலும் காணப்படும் ஒரு கூறு ஆனால் அந்த கூறு ஒரு சில மனிதர்களில் கொஞ்சம் கூடும் போது அதுவே ஒருவரை உகவராக (ஆணோ, பெண்ணோ) ஆக்குகிறது. இயற்கையில் நிகழும் ஒன்றை நம்மால் மாற்றி அமைக்கமுடியாது. மூளையுடன் யாராலும் சணடையிட்டு வெல்ல முடியாது.  எனவே நாம் திருநங்கையரை, மாற்றுத்திறனாளிகளை இயல்பாக ஏற்றுக்கொள்வதுபோல், இவர்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் அவர்களுக்கான சமூக, கலாச்சார மற்றும் சட்ட ரீதியான மாற்றங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பது தான்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *