சென்னை புத்தகத் திருவிழா -2023 – 17.மழைப்பாடல்-ஜெயமோகன்

நீண்ட இடைவெளிக்குப்  பிறகு தொடர்ச்சியாக இலக்கியம் வாசிக்க வேண்டும் என்றே இந்த வாசிப்பு சவாலில் கலந்துகொண்டேன். மழைப்பாடல் 92 பதிவுகளைப் படிக்க ஏறக்குறைய 30 நாட்களில் 45 மணி நேரம் எடுத்துக்கொண்டு நிதானமாக வாசித்தேன். இது முன்னரே திட்டமிட்டது தான். இதனால் கற்றதும் பெற்றதும் அதிகம் என்றே சொல்ல வேண்டும்.

“தவளைக்கூட்டம் வான்மழை வேண்டி நிற்பது போல இந்த மண் குருதிமழை வேண்டி நிற்கிறது” என்ற உணர்வுடன் தொடங்குகிறது மழைப்பாடல். போரை நோக்கிச் செல்லும் பல்வேறு நிகழ்வுகளின் தொகுப்பாக மழைப்பாடல் நம் கண்முன் விரிகிறது. முதற்கனலின் மையச்சரடான கதாபாத்திரங்கள் பீஷ்மரும் சத்யவதியும் அம்பையும் எனில் மழைப்பாடலின் மையச்சரடான கதாபாத்திரங்கள் விதுரனும் திருதராஷ்டிரனும் பாண்டுவும் காந்தாரியும் குந்தியும் என பட்டியல் நீள்கிறது. இதனாலேயே போர்க்களம் தயாராகிறது என்னும் உணர்வு வந்துவிடுகிறது.

முதற்கனலில் பீஷ்மர் மீதான பெருஞ்சுமை சொல்லப்பட்டது போல் மழைப்பாடலில் விதுரன் மீதான பெருஞ்சுமை சொல்லப்பட்டுள்ளது. ஆனால் பீஷ்மர் போரைத் தவிர்க்க விரும்புகிறார். விதுரன் போர் இன்றியமையாததாகிவிட்டது போர் முடிவில் நன்மை விளையும் என்றெண்ணுகிறார்.

விதுரனுக்கும்  சார்வாகருக்கும் நடக்கும் உரையாடல் தத்துவ நோக்கில் மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறது.

பைரவி அன்னை நாயின் வடிவில் வந்து குந்தியின் முலைப்பாலை ராதைக்கு மாற்றும் காட்சிகளில் மெய்சிலிர்க்கிறது.

அரண்மனையில் நோய்வாய்ப்பட்டிருந்த பாண்டு நகர்நீங்கி சதசிருங்கத்தில் வலிமைபெற்று காடு மலைகளில் வேட்டையாடி சுற்றித் திரிவது வாழ்க்கை முறை பற்றிய ஒரு முக்கியமான திறப்பாக அமைந்துள்ளது.

காந்தாரத்திலிருந்து பெரும் செல்வத்துடன் அஸ்தினபுரிக்குள் நுழையும் சகுனி அவ்வளவு எளிதில் திரும்பிச் செல்ல மாட்டான் என்னும் தருணத்தில் இன்றைய சர்வதேச அரசியல் கண்முன் வந்துபோகிறது.

பாண்டு தன் மைந்தருடன் மகிழ்ந்திருக்கும் தருணங்கள் கவித்துவத்துடன் விவரிக்கப்பட்டுள்ளன.

பாண்டு இறந்ததும் குந்தியின் அறிவுத்திறன் வெளிப்படும் என்று நினைக்கும் போது தருமன் சிறுவயதிலேயே குந்தியை விஞ்சும் வகையில் அறிவும் அறமும் கொண்டு மேலெழுந்து வருவது ஆச்சர்யத்தையும் ஏமாற்றத்தையும் ஒரு சேர அளிக்கிறது.

மீனவப்பெண் சத்யவதிக்கு கிடைத்த பேரரசி என்னும் அங்கீகாரத்தில் கால் பங்கு கூட சூதப் பெண்ணான அரசி சிவைக்கு கிடைக்கவில்லையோ என்னும் வருத்தம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

காந்தாரத்துடன் மண உறவை விரும்பும் சத்யவதி,

“தேவவிரதா, இந்த அரியணையுடன் தெய்வங்கள் சதுரங்கமாடுகின்றன. பெருந்தோள்கொண்ட பால்ஹிகனையும் வெயிலுகக்காத தேவாபியையும் மீண்டும் இங்கே அனுப்பிவிட்டு அவை காத்திருக்கின்றன. நாம் என்ன செய்வோமென எண்ணி புன்னகைக்கின்றன. நாம் நம் வல்லமையைக் காட்டி அந்த தெய்வங்களின் அருளைப் பெறும் தருணம் இது.” என்றுரைக்கும் நிலையிலிருந்து,பாண்டுவின் மரணத்திற்குப் பின் வனம் புகும் போது விதுரனிடம்  “நான் இதுவரை சொன்ன எந்தச்சொல்லுக்கும் இனி நான் பொறுப்பல்ல. நான் கண்டகனவுகள் கொண்ட இலக்குகள் அதற்காக வகுத்த திட்டங்கள் அனைத்தும் இன்று சற்றுமுன் இறந்த இன்னொருத்தியுடையவை. நான் வேறு” என்று சொல்லும் கனிந்த நிலையை அடைகிறார்.

இவ்விரு உரைகளுக்கு இடையேயான அனைத்து நிகழ்வுகளையும் வாசிக்கும் போது ஒரு முழுமையான வாழ்க்கையின் அனுபவத்தை நாமும் அடைகிறோம்.

அஸ்தினபுரிக்குள் இணைந்தே நுழைந்த அம்பிகையும் அம்பாலிகையும் அன்னையராகி பின் மனதளவில் எதிரிகளாகி பாண்டுவின் மரணத்திற்குப் பின் ‘எல்லாம் மாயை’ என்றுணர்ந்து இணைந்தே வனம் புகும்போது வாழ்க்கை ஒரு வட்டம் என்ற உணர்வு வந்துவிடுகிறது.

மொத்தத்தில், மழைப்பாடல் – நிறைவாழ்வு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *