சென்னை புத்தகத்திருவிழா 2023-20.கானல் நதி -யுவன் சந்திர சேகர்

 

கானல் நதி ஒரு வீழ்ச்சியுற்ற வங்காள ஹிந்துஸ்தானி இசைக் கலைஞனை  பற்றியது. இது தமிழ் நாவல் என்றாலும் கதை நிகழும் இடம் மேற்கு வங்காளம்.தனஞ்சய் இளவயதிலியே தன்னுடைய இலட்சியத்தை கண்டுகொள்கிறான்,அவனுடைய குடும்பத்தாரும் அதற்க்கு துணை நிற்கின்றனர், ஆனால் அவன் தன்னுடைய இலட்சியத்தை இடையில் கைவிடுகிறான், காதல் தோல்வியினால். அவனுடைய காதல் தோல்விக்கு அவன் கலையே காரணமாகிறது .

கதை நான்கு பாகங்களாக சொல்லப்படுகிறது , பால்யம் ,வாலிபம் ,நாட்குறிப்பு , அழைப்பு . பால்யத்தில் நாம் காணாத அறுபதுகளின் வங்காளமும் அவர்களின் வாழ்க்கை முறையும்,கல்வி முறையும் சொல்லப்படுகிறது.தன்னுடைய இலட்சியத்தை தனஞ்சய் உணரும் இடமும் அதை அவன் பெற்றோர்கள் ஆமோதித்து அவனை வளர்க்கும் இடமும் கவிதை போல் விவரிக்க படுகிறது.

தனஞ்சையின் குருநாதர் விஷ்ணுகாந்த் சாஸ்த்ரியுடனான உறவு குரு சிஷ்யன் ஆக அல்லாமல் தந்தை மகன் உறவு போலவே சொல்லப்படுகிறது.தனஞ்சய் – குருசரண்தாஸ் இருவருக்கும் இடையேயான நட்பு தனஞ்சையின் மது பழக்கத்தால் முறிகிறது, குருசரண்தாஸ் மிகுந்த சகிப்புத்தன்மையுடனே தநஞ்சையுடன் பழகுகிறான் ,நட்பின் முறிவுக்கு பிறகும் தனஞ்சய்க்கு உதவி செய்கிறான்,அதற்க்கு தனஞ்சையின் இசை ஞானமே காரணம் .குருசரண்தாஸ் -ஐ விட தனஞ்சய் வயது குறைவாக இருந்தாலும் அவர்கள் சாதகம் முடிக்கும் போது குருசரண்தாஸ் தனஞ்சையின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்துவிடுவான்.

தனஞ்சய்க்கும் சரயுக்குமான காதல் இளவயதிலேயே தொடங்கிவிடுகிறது , திருமணத்துக்கு பின்னும் அவன் அதே அளவில் அவளை காதலிக்கிறான், அவள் கணவன் அவளை துன்புறுத்துகிறான் என்று அவளின் தந்தையே இவனிடம் வந்து அழுது ,மன்னிப்பு கோருகிறார் , இறுதியில் அவள் இவனை சந்திக்கும் போதும் ,உனக்காக நான் தர எத்தனித்த என் உடலின் பகுதி இன்னும் என்னிடம் தான் இருக்கிறது என்கிறாள்.

 தனஞ்சையின் அத்தை அவனது இலட்சியத்தை கண்டெடுத்தவள் அவனை விட்டு வெகு சீக்கிரமாகவே விலகி விடுகிறாள்,காஞ்சனை தேவி இவனை அவளின் தேவைக்கு பயன்படுத்தி விட்டு விலகிவிடுகிறார்.

தனஞ்சயன் குடும்பம் உடைகிறது ,அண்ணன் பெற்றோர்களை சரியாக கவனிப்பதில்லை ,தங்கை கன்னியாஸ்திரி ஆகிறாள் ,அவன் தங்கையை கோதாவரி கரையில் சந்திக்கும்போது அவள் மட்டும்தான் குடும்பத்தில் சற்றேனும் நிம்மதியாக இருக்கிறாள் என்று தனஞ்சய்க்கு தோன்றுகிறது. அவன் இறுதியில் கங்கை கரையில் ஒதுங்குகிறான் தன் வாழ்க்கையை அங்கேயே தொடர நினைக்கிறான் ஆனால் அதுவும் அவனால் முடியவில்லை ,சரயுவின் எண்ணம் வந்து அவனை வதைத்து கொண்டே இருக்கிறது. இந்திய தேசம் முழுக்க பயணிக்கிறான் , இறுதியில் ஒரு புகைவண்டி நிலையத்தில் ஒரு நண்பனுடன் பொழுதை கழிக்கிறான் , தீராத மது பழக்கத்தால் புற்றுநோய் வருகிறது.

இசை அவனை நிறைய இடங்களில் காப்பாத்துகிறது ,ரயிலில் பயணசீட்டு இல்லாமல் பயணிக்க , யாசகம் செய்யாமல் உணவருந்த என்று, இசை மட்டும் தான் அவனை சகித்துக்கொண்டு கடைசி வரை அவன் உடன் வருகிறது.

தனஞ்சயன் வீழ்ச்சிக்கு காரணமாக சொல்லப்படும் காதல் தோல்வி சற்று வலிமையற்று இருந்தாலும் விதியின் பிடியில் இருந்து தனஞ்சயன் மீள முடியாமல் தவிப்பது மிகையாக இல்லை.மேடையில் முதல் முறை பாடும் போது அவனிடம் முன்வக்க படும் பயத்தை பற்ற கேள்விக்கு அவன் அளிக்கும் பதில் “ஜீ , எவ்வளவு பெரிய சபையாய் இருந்தால் என்ன ? நாம் பாடுவது நமக்காகத்தானே ?”, இது அனைத்து கலைகளுக்கும் பொருந்தும் விடையாக தோன்றியது.

அவன் ஒரு மேடை பாடகனாக முடியாமல் போகும் போது அவன் அளிக்கும் பதில் தான் இந்த நாவலின் அடி நாதமாக தோன்றியது ,

                                           சூடுவதற்காகப் பூப்பதில்லை எல்லா மலர்களும்

                                           நாவில் கரையவென்று கனிவதில்லை எல்லாக் கனிகளும்

                                           எந்த நதியின் நீரும் மொத்தமாய்ச் சென்று சமுத்திரம் சேர்வதில்லை

                                           பாடப்படாத சங்கீதத்திற்கு ஈடு இணையும் இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *