நினைவோடையில் நீந்தும் மீன்கள் – 2

இருவர்

அம்பிகா இரண்டாம் முறையாக என் வாழ்வில் திரும்ப வந்தாள். அதற்குள் நான் அமலா பக்கம் பாய்ந்திருந்தேன். அமலா செல்லப்பனை கைவிட்டு என்னுடன் நட்பு பேண ஆரம்பித்திருந்தாள். செல்லப்பனும் அமலாவும் வெவ்வேறு வகுப்பினைச் சேர்ந்தவர்கள். அவர்களின் காதல் ஆரம்பித்து, வளர்ந்த வேகத்தில் சட்டென்று முடிவுக்கு வந்தது. அதற்குள் ஆறுமாதங்கள் அவர்கள் காதலர்களாக வாழ்ந்திருந்தார்கள். நானே நான்கு முறை அஜந்தாவிலும் எல்லோராவிலும் திரையரங்க இருட்டிற்குள் கண்கள் மின்ன பம்மி இருந்து, அவர்களை ஒற்றறிந்திருக்கிறேன். செல்லப்பன் கைகளின் முரட்டுத்தனம் நரம்போடியிருக்கும் புடைப்புகளில் தெரியும். அவன் நட்போடு கைகளைப் பிடித்து குலுக்கும்போது பிடரி வரை வலி தெறிக்கும்.

ஒரே நேரத்தில் மூன்று பெண்களைக் காதலித்துக் கொண்டிருந்தேன். அவர்களும் காதலித்தார்களா என்றால் ஆம் என்றுதான் சொல்வேன். ஆனால் என்னையா? என்று கேட்டால், இல்லை. அவர்களுக்கு வேறு காதலர்கள் இருந்தார்கள். மண்ணின் மைந்தர்கள். அன்றைய பிரபு தேவாக்கள் அவர்கள். தாடியும், அழுக்கு ஜீன்சும், பான்பராக் வாயும், ஒற்றைக் காதுகளில் கடுக்கனும் கொண்டிருந்தார்கள். சனிக்கிழமைகள் தோறும் பீர்போத்தல்களை வழிபடக் கூடியவர்கள்.

நானோ அசோகமித்திரனும், சுந்தர ராமசாமியும், சா.கந்தசாமியும் வளர்த்தெடுத்த இளைஞனாக இருந்தேன். அந்தக் கோலத்தில்தான் அவர்களின் “பின்சுற்றியாக“ அலைந்து கொண்டிருந்தேன். வேலைக்குச் செல்லும் டெக்ஸ்களில் அவர்களைச் சந்திக்க நேரிட்டது. மீரா ஜாஸ்மினைப் போன்று கண்ணாடியும், சுருண்ட கூந்தலும், துரு துரு துடுக்குத்தனமும் கொண்டிருந்தவள் விஜி. பின் எப்படி நான் அவளைக் காதலிக்காமல் உயிர்வாழ முடியும்? காதலைத்தவிர வேறு நினைப்பே இல்லாதிருந்த நாட்கள். அமலாவைப் போல அவர்களில் யாருக்காவது காதலில் முறிவு ஏற்பட வாய்ப்பு உண்டு அல்லவா? அப்போது அவர்களின் இரண்டாவது தேர்வாக நான் அமையக் கூடும் என்ற எதிர்பார்ப்பு. என் கணிப்பு வீண் போகவில்லை.

யூமா வாசுகியின் அமுத பருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு கவிதைத் தொகுப்பினை காயத்ரி மந்திரம் போன்று நாள்தோறும் வாசித்து, செயற்கைப் பித்தினை உருவேற்றிக் கொண்டிருந்தேன். அப்பித்து பயிராக,  காதலின் விளைநிலம் தேவை.  ஒரு செடியில் ஒரு பூ ஒரு முறைதான் மலரும் போன்ற உடோப்பியன் வசனத்தை நடிகர் விஜய் கண்ணீர் மல்க பேசிக்கொண்டிருந்தாலும், யதார்த்தம் என்றும் போல வேறு விதமாக தன்போக்கில். அவ்விதம் என் காதலியாக பின்னாட்களில் மாறியவர்கள் மூன்று பேர். அதில் ஒருத்தி மட்டுமே உதட்டு முத்தம் வரை அனுமதித்தாள். காதலித்த மூன்றாவது மாதத்தில் திருமணம் வரை விரட்டி வந்தாள். நான் தங்கையின் திருமணத்தைக் காரணம் காட்டி வாய்தா கேட்டேன். வாய்தா தான் கேட்டேன். உதட்டு முத்தத்திற்கே மாதாந்திர ரேசன். முத்தமிட்டு முடித்த ஒவ்வொரு முறையும் ஓடிச்சென்று வாய் கொப்பளித்து என்னை அவமானப்படுத்தினாள்.

அந்நகரத்தில் எந்த நேரத்திலும் வெளியே சென்று திரும்பும் சுதந்திரம் பெண்களுக்கு உண்டு. தமிழக நகரங்களில் சில நகரங்களுக்கு மட்டுமே உரிய சிறப்பம்சம் இது. டெக்ஸ் வேலையின் பணி நேரம் அப்படி. மூன்று மாதம், ஆறு மாதம் என ஒரு வெளிநாட்டு ஆர்டர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும். அதற்குள் பஞ்சை நுாலாக்கி, நுாலை சாயம் முக்கி, கைத்தறியில் பாவாக்கி, நெசவு செய்து, திரைச்சீலைகளாக, போர்வைகளாக, தலையணை உறைகளாக, கர்ச்சீப்களாக வெட்டி, தைத்து, பிசிர் பார்த்து, பெட்ரோல் கேன் கொண்டு அடித்து அழுக்கு நீக்கி, அயர்ன் செய்து, பளீர் பாலீத்தின் கவர்களில் பேக் பண்ணி, துாத்துக்குடிக்கு கண்டெய்னர் லாரிகளில் பெட்டிகள் ஏற்றி விட வேண்டியது வரை தொடர் நெருக்கடி.

சுற்றி உள்ள கிராமங்கள், நகரங்களில் இருந்து கூலித்தொழிலாளிகள் நகரை நோக்கி வந்து கொண்டே இருப்பார்கள். திருச்சிக்கும் கரூருக்கும் இடையே சென்று வரும் பாசஞ்சர் ரயில்களில் வேறொரு உலகம் இருந்தது, வேலை இல்லாத நாட்களில் தியேட்டர்கள் நிரம்பி வழியும். அஜந்தா, எல்லோரா, அமுதா, கலையரங்கம், லட்சுமி என ஐந்து தியேட்டர்கள். நகரம் முழுக்க குறுக்கும் நெடுக்குமாக நகரப்பேருந்துகளும் மினி பஸ்களும் ஊடாடிச் செல்லும். மினி பஸ்களில் நுாற்றுக்கணக்கான காதல் கதைகளும் நம்மிடையே சேர்ந்து பயணிக்கும். “அடி அனார்கலியோ..…மன்மத ராசா..மன்மத ராசாவோ” கேட்காத நாளே இல்லை. ஐயங்கார் பேக்கரிகளில் இஞ்சி டீயும் தேங்காய்ப் பன்னும் எப்போதும் கிடைக்கும். நாளிற்கு இரண்டு வேளை புரோட்டோ சால்னா உண்டு உயிர் வாழ்ந்து கொண்டிருந்தேன். மதியம் சத்தியம் மெஸ்சில் புல் மீல்ஸ்.  நான் சொல்வது சுமார் பதினைந்தாண்டுகளுக்கு முந்தைய நிலவரம்.

இரவு பத்து மணிப்போல, இரண்டாம் காட்சி சினிமா முடிந்து திரும்பும் போது, அதிகாலை நான்கு, ஐந்து மணி என. இரவு முழுக்க அணி அணியாக பெண்கள் வேலை முடிந்து தங்கள் வீடுகளுக்குத் திரும்பிக்கொண்டிருக்கும் காட்சிகள் காணக்கிடைக்கும். உடல்கள் சோர்ந்து, வியர்வை வாசம் நெறிபட, கண்களில் துாக்கம் துளிர்த்து நிற்க, தலைரோமங்களில் டெக்ஸ்களின் பிசிர்கள் அப்பிய வண்ணம், காலையில் எடுத்துச்சென்ற உணவுப்பாத்திரங்கள் எடை குறைந்திருக்க, வயர்கூடைகளை கைகளில் கோர்த்திருப்பார்கள்.  டெக்ஸ்களில் பெட்டி ஏற்ற வேண்டிய கெடு நாட்கள் நெருங்கி விட்டால் வாரம், மாதக்கணக்கில் இரவு பகல் என தொடர்ந்து வேலை நடக்கும். நான் அப்போது வெங்கமேட்டில் புளியமர ஸ்டாப்பில் தங்கியிருந்தேன். சைக்கிளில் வேலைக்குச் சென்று திரும்புவேன்.

பெரும்பாலும் பெண்களுக்கு பிசிர் பார்க்கும், பேக்கிங் செய்யும், தைத்துக்கொடுக்கும், வெட்டிக்கொடுக்கும் வேலைகள் இருந்தன. கட்டர்கள் என அழைக்கப்படும் சிறிய கத்தறிக்கோல்களே அவர்களின் தளவாடச்சாமான்கள். ஊடு பாவில் ஏற்படும் தறித்தவறுகளை சரிசெய்யும் கைவேலைதான் புரசல். இடியாப்பச் சிக்கலைப்போன்ற அமைப்பு. சிலந்தி வலை என்றோ, சிரங்குக்கூட்டம் என்றோ உவமை சொல்லலாம். ஊசி, கட்டர் கொண்டு பீஸை மடியில் கிடத்தி, ஒத்த வர்ண நுாலை ஏற்றி சரி செய்வோம். காயம் இருந்த தழும்பு காணாமல் ஆகி, இயல்பு நிலைக்கு சமுக்காளம் திரும்பியிருக்கும். சாதா, ஜக்காடு, வாயில் என ரகங்கள். புரசல் கணக்கிற்கு கூலி. ஆங்கிலத்தில் மெண்டிங் என்பார்கள். எட்டாண்டுகள் புரசல்காரனாக இருந்தேன்.  நவீன தமிழ் இலக்கியத்தின் பிடிகிட்டியதும் அக்காலத்தில்தான். மூலத்தின் விதை விழுந்த பருவமும் அதுதான். செங்குந்த புரத்தில் மாவட்ட மைய நுாலகத்தில் அநேகப் பகல்கள் இருண்டன. சந்தியா, புதுமைப்பித்தன், ராஜராஜன், தமிழினி, காலச்சுவடு என பதிப்பகங்கள் பெருந்தொகை நுால்களை அள்ளி வீசியிருந்தன. அவை நுாலகங்களுக்கும் வந்திருந்தன.

மேட்டு நிலத்தில் இருந்து வழிந்தோடும் நீரைப்போன்று எட்டுத்திக்கும்  வேலைகள் முடிந்து வீடு திரும்புவார்கள். நகரத்தின் மையத்தை தாமரையின் மகரந்த மேடு எனக்கொண்டால் சுற்றி இருக்கும் இதழ்கள் என கிராமங்கள், நகரத்தின் புற நகர்ப்பகுதிகள்.  வெங்கமேடு மும்பையின் தாராவி போன்ற தனிப்பகுதி. உழைப்பாளர்களின் மண். சிற்றுண்டிகளும், சிறு தீனிகளும் வெகு பிரசித்தம். ஐம்பது பைசா உளுந்த வடைகள், உள்ளிப்போண்டாக்கள், கார வடைகள், பஜ்ஜிகளை வாழ்வில் அங்குதான் முதன் முதலில் கண்டேன். பானி பூரி, மசால் பூரி, குழிப்பனியார வகையறாக்களையும். எட்டுச்சட்னிகள், ஐந்து சட்னிகள் ஊற்றி நிலாக்களைப் போல இட்லிகள் மிதந்தலையும் கையேந்தி பவன்களும்.

நகரத்திற்கும் வெங்கமேட்டிற்கும் இடையில் ஒரு லெவல் கிராசிங். சேலம் செல்லும் மெயின்ரோடும் அதுதான். இன்று அங்கே ஒரு மேம்பாலம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. நான் வசித்தபோது லெவல் கிராசிங்கில் ரயில்கள் கடந்து செல்ல வாகனங்கள் இருபுறமும் தேங்கி, காத்து நிற்கும். பாலம் கட்டுமானப்பணிகள் நடந்த போது குளத்துப்பாளையம் வழியாக நகருக்குள் வருவோம். லெவல் கிராசிங்கிற்கும் குளத்துப்பாளைத்திற்கும் இடையே உள்ள ரயில் தண்டவாளங்களில் அவ்வப்போது உறுப்புகள் சிதைக்கப்பட்ட மனித உடல்களைப் பார்க்க நேரிடும். தற்கொலைகள் சாதாரணமாக நிகழும் பகுதி. இரவுகளில் குளத்துப்பாளையம் வழியே திரும்பும்போது சைக்கிள் கேரியர்களில் திடீரென்று கனம் கூடி பயணம் தள்ளாடும். வீல்கள் சுமையில் திணற, உந்தி மிதிப்பேன்.

கடைசி நான்கு ஆண்டுகள் ஒரு பெரிய டெக்சில் நிரந்தரப் பணி. இது எப்படி என்றால் உதவி இயக்குநராக இருந்து தனியே படம் பண்ண தயாரிப்பாளர் அமைவதைப் போல. எடுத்த உடன் யாருக்கும் பெரிய டெக்சில் டீம் தலைவர் பதவி கிடைத்து விடுவதில்லை. அந்த டெக்சில்  பணியாற்றிய தற்காலிக கூலிப்பெண்களில் ஒருவர் தான் அம்பிகா. கற்சிலை போன்ற கச்சிதமான, வாளிப்பான உடல். இடை சிறுத்து மேற், கீழு் பகுதிகள் செழித்திருக்கும் அற்புதம். கற்சிலையின் நிறம். கருப்பான பெண்களில் அவள் பேரழகி. பதினைந்து பதினாறு வயதிருக்கும். அவள் அம்மா அதே டெக்சில் நீண்ட நாள் பணியாளர். அம்பிகா பள்ளிப்படிப்பை முடித்த உடன் டெக்ஸ் வேலைக்கு வந்திருந்தாள்.

என் இயல்பின்படி அவளையும் தொழுது கொண்டிருந்தேன். அவள் என்னைப் பொருட்படுத்தியதாக நினைவில்லை.  ஒன்பது, பத்து மாதங்களில் திடீரென்று ஒருநாள் அவளுக்குத் திருமணம் ஆனது. மாமன் மகன். எதற்கு இந்த அவசரம் என்று அம்புஜம் மாமியிடம் கேட்டேன்.  அம்பிகா அவளைச் சுற்றியலைந்த பிரபு தேவாக்களில் ஒருவனின் வலையில் வீழ்ந்திருந்தாள், அந்த பிரபு தேவாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இரண்டு. வையாபுரி நகரில் அவனுக்கு குடும்பமும் இருந்தது. அம்புஜம் மாமி டீ பிரேக்கின் போது என்னிடம் சொன்னார்.

நாற்பெத்தெட்டு வயதான போதும் அம்புஜம் மாமிக்கு திருணம் ஆகியிருக்கவில்லை. அது குறித்த எந்தவித ஆற்றாமைகளும், தத்தளிப்புகளும் அவரிடம் இருக்காது. தேன்சிட்டுப் போல பறந்து கொண்டிருப்பார். நரை முடிகளுக்கு தவறாமல் சாயம் பூசிக்கொள்வார். குழந்தைகளுக்கு உரிய உற்சாகம் கொண்டு சதா பூரிக்கும் முகம்.

வெண்ணைமலை முருகன் கோவிலில் வைத்து அம்பிகாவின் திருமணம். மாப்பிள்ளை என்னை விட அழகன். உருண்டு திரண்ட புஜங்கள். நெஞ்சு நிறைய கரு கரு மயிர். திருமணப் பரிசாக அணிந்திருந்த பிரேஷ்லெட் மணிக்கட்டு ரோமங்களில் மிதந்து கொண்டிருந்தது.  “எங்கிருந்தாலும் வாழ்க” என மனமுருகி வாழ்த்தி விட்டு, டெக்ஸ் வேனில் திரும்பினேன்.

அந்தப் பயணத்தின் போதுதான் என் எதிரில் அமலா அமர்ந்திருப்பதைப் பார்த்தேன். அதற்கு முன்பும் அவளை ஆயிரம் முறைகள் பார்த்ததுண்டு. ஆனால் அன்றுதான் அவளை முழுதாக, அவ்வளவு அருகாமையில் பார்க்கத் தோன்றியது. வியர்வை அரும்பிய நெற்றி. கர்ச்சீப்பால், லாவகமாக அடிக்கடி ஒற்றிக்கொண்டாள். தாம்பூலம் பூசிய உதடுகள். திருமண வீட்டிற்கென்றே தனிக்கவனத்தோடு அணிந்து வந்திருந்த ரோஸ் கலர் பட்டுப்புடவை. திருமண வீடுகளில் பெண்களுக்கு கூடுதல் அழகு வந்தமர்ந்து விடுகிறது.  அவளும் என்னைப் பார்த்தாள். பூசின மாதிரியான உடல்.  பட்டுப்புடவை அவளை மேலும் குண்டாக்கிக் காட்டிற்று. குழந்தை பிறந்தால் உடல் இன்னும் பெருத்துப்போகும் சாத்தியம் கொண்டிருந்தது. ஏற்நெற்றி, அதில் வீம்பாக வந்து விழுந்து, காற்றில் அலை பாயும் ரோமச் சுருள்கள். வெளீர் பற்கள். குழிகள் விழும் கன்னங்கள். அந்த வயதில் பருவப் பெண்கள் என்றாலே அத்தனைப்பேரும் பேரழகிகள். ஆண்பசலை நோயின் முற்றிய பருவம்.

அமலா என்னிடம் தயங்கியதே இல்லை. என் கண்களின் மொழியை அவளால் வெகு சீக்கிரத்தில் கற்றுக்கொள்ள முடிந்தது. மதிய இடைவேளையின் போது என்னைத் தேடி வர ஆரம்பித்தாள். நானும் வெளியே செல்லாமல் அவளுக்காக வராண்டாவில் காத்திருந்தேன். வழி தேர்ந்து கொண்ட ஆற்று நீர்தான் காதலின் பாதையும். ஈஸ்வரன் கோவில் சென்று வருவோம். டெக்சிற்குள் எங்கள் பழக்கம் ஊர்ஜிதம் ஆக ஆரம்பித்தது. எனக்கு செல்லப்பனை நினைத்தால்தான் பகீர் என்று இருந்தது. அமலா டெக்ஸை விட்டு வெளியே வந்தால் அந்நியமாகி விடுவாள். ஏறிட்டோ, திரும்பியோ பார்ப்பதில்லை. ஒருமுறை அவள் பின்னே மினி பஸ் ஸ்டாண்ட் வரை சைக்கிளில் சென்றேன். அமுதா தியேட்டர் திருப்பத்தில் வழி மறித்த என்னை கடும் சினத்தோடு கடந்து சென்றாள்.  தள்ள நின்று திரும்பி காறித்துப்பினாள்.

இனி பார்க்கவே வாய்ப்பில்லை என நான் மறந்திருந்த அம்பிகா டெக்சிற்கு அவள் அம்மாவோடு திரும்ப வேலைக்கு வந்தாள். இதை நான் எதிர்பார்க்கவில்லை. நான் நினைத்தே பார்த்திராத வேகத்தில் அவள் என்னிடம் ஆர்வமும் காட்டத்தொடங்கினாள். “மாமா..மாமா..” என்று கெஞ்சல் வேறு. எங்கள் சாதியில் மாமாவை திருமணம் செய்துகொள்ள மாட்டோம் அப்படிக் கூப்பிடாதே என்று சொல்லியும் பார்த்தேன். அவள் சாதியில் மாமாவைத் திருமணம் செய்து கொள்வார்கள் என்றாள்.

அம்புஜம் மாமிதான் அம்பிகாவின் திருமண முறிவின் முன்கதைச் சுருக்கத்தை என்னிடம் சொன்னார். அம்புஜம் மாமிக்கு டெக்ஸ்ல் நடக்கும் அத்தனை ஆண் பெண் உறவுகளின் பரிமாணங்களும் தெரிந்திருந்தது. அதற்கான பிரத்யேக புலன்களை அவர் பெற்றிருந்தார். மாப்பிள்ளைக்கு கல்யாணப் பண்டம் உயிர்ப்போடு இல்லையாம். அதனால் அம்பிகா வாழப்பிடிக்காமல், அம்மா வீட்டிற்கே திரும்ப வந்துவிட்டாளாம். அவள் இன்னும் கன்னிதானாம். இதில் எத்தனை சதவீதம் உண்மை என்பது ஒரு பொருட்டே அல்ல. இம்முறை அம்பிகாவைத் தவற விடக்கூடாது என்று மட்டும் எண்ணிக்கொண்டேன். சம்மந்தமில்லாமல் மணிமேகலா தெய்வம் என்ற படிமம் என் நினைவில் வந்துகொண்டே இருந்தது. என் பசிப்பிணி போக்கும் அட்சயபாத்திரம்.

அம்பிகாவும் அமலாவும் என் பொருட்டு முறைத்துக் கொண்டார்கள். ஒவ்வொருவரும் தனித்தனியே என்னைச் சந்தித்து ஒருவரைப் பற்றி ஒருவர் அவதுாறுகள் செய்தார்கள். ஒரு புறம் பயங்கர திகிலாக இருந்தாலும், மற்றொரு புறம் அதில் திளைத்து நீந்தப் பழகினேன். சொந்த ஊரில் இருக்கும் வரை பெண்களோடு பேசுவதற்கே தவமிருக்க வேண்டும். பள்ளியில் பெண்கள் உடன் படித்தார்கள். பள்ளிக்குள் இருக்கும் வரை பேசிக்கொண்டதே இல்லை. என் ஆசையில் சட்டென்று மண் விழுந்ததை நான்கே வாரத்தில் கண்டுகொண்டேன்.

சங்கரலிங்கம் என்னுடன் அதே டெக்சில் புரசல்போடும் எதிர் அணியைச் சோ்ந்தவன். எனக்கு வரவேண்டிய ஆர்டர்களில் பங்கு கேட்டு நிற்கும் மாரியப்பனின் முக்கிய கூட்டாளிகளில் ஒருவன். தென்காசிப் பசங்க என்பது எங்கள் அத்தனைப்பேருக்குமான குழுஉக்குறி.  சாதிகளால் நாங்கள் பிரிந்திருந்தோம். அம்பிகாவின் பின்னால் சங்கரலிங்கமும் சுற்ற ஆரம்பித்தான். அம்பிகாவிற்கும் அவன்மேல் ஆசையும் ஈடுபாடும் இருந்தது. புரசல்காரர்கள் வாரத்திற்கு வாங்கும் கூலி இன்று கேட்டால் கூட நம்ப முடியாதது. விடிந்து எழுந்து முகம் கழுவுவதே பீரில் தான் என்பார்கள். நாளொன்று குறைந்தபட்சம் இரண்டாயிரம் சம்பாதிப்பார்கள். சாத்தியம் இருந்தது.  சங்கரலிங்கத்தின் சமாச்சாரத்தை அம்புஜம் மாமி என்னிடம் சொன்னார். அம்புஜம் மாமி ஒருநாள் சாயந்திரம் வேலை முடிந்து வெளியே சென்று, நான் வரும் வரை டெக்ஸ் முக்கில் காத்து நின்றார்.

“உன்கிட்ட ஒரு தகவல் சொல்லணும்..நீ..அமலாவை கட்டிக்கோ..இந்த அம்பிகா ரொம்ப மோசம்..அவ சங்கரலிங்கத்துக்கிட்ட நெருங்கிப்பழகுறா”

ஆனால் அம்பிகா எந்த வித பாகுபாடும் இல்லாமல் என்னுடனும் பேசிப் பழகினாள். “ஊர் ஆயிரம் சொல்லும் அதை நீ நம்பலாமா..மாமா?” என்று என்னிடம் கேட்டாள். அந்த வார ஞாயிற்றுக்கிழமை வீட்டில் அம்மா இருக்கமாட்டார் என்று சொல்லி, சாயந்திரம் ஏழு மணிப்போல அவள் வீடிருக்கும் கொங்கு நகருக்கு வரச் சொன்னாள். இரண்டொருமுறை நான் அந்தப் பகுதிக்குச் சென்றிருக்கிறேன். உடைமுள் மரங்கள் மண்டிய செம்மண் பாதை. நகரத்தில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தள்ளி உள்ளடங்கி இருக்கும் சிறிய கிராமம். பத்திருபது வீடுகளே இருக்கும் பகுதி.

துாங்கி எழுந்து, வீங்கிய கன்னங்களில் பாண்ட்ஸ் பவுடரை அப்பிக்கொண்டு சைக்கிளில் கிளம்பினேன். ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் அறையில் நண்பர்கள் சேர்ந்து சமைப்போம். மட்டன் குழம்பில் சோற்றைத்துாவி, நாசித்துவாரங்களில் நீர் கோர்க்க, உறிஞ்சிக்கொண்டே உண்பது வாடிக்கை. அதன் பின்னர் இரண்டு மணிநேரத் துாக்கம். சாயந்திரம் ஒரு சினிமா. ஒரு வாரத்திற்கான உற்சாகம் அந்நாளில் ரீசார்ஜ் ஆகிவிடும்.

வாங்கப்பாளையத்தில் இருந்து இடதுபக்கம் பிரியும் சாலை.  சீமைக் கருவேலம் இருபுறமும் அணி வகுத்து நிற்கும் ஏகாந்தம். பெரிய ஆலமரத்தைத் தாண்டியதும் சாயப்பட்டறை ஒன்று சாயக்கழிவுகளை வெளியே தள்ளி நுரைத்துக் கிடந்தது. சைக்கிளை மிதிக்க வேண்டிய தேவை ஏதும் இல்லை. பள்ளமும் காற்றும் இழுத்துச் சென்றது. அம்பிகாவின் வீட்டை ஒட்டி, ஒரு கலுங்கு உண்டு. அதன் கல்வெர்ட்டில் சைக்கிளை நிறுத்திச் சாய்த்து ஏறி அமர்ந்தேன். அவள் வரச் சொல்லிய நேரம் ஆகியிருக்கவில்லை. என் அவசரம் புரியாமல் சாவகாசமாக மாலை ஓய்ந்து இரவு படிய ஆரம்பித்தது. கையெழுத்து காணாமல் போகும் இருட்டில் அவ்விதம் தனித்து அமர்ந்திருப்பதே அச்சத்தை அளித்தது.

வெகுதுாரத்தில் சைக்கிள் ஒன்று வேகமாக குலுங்கி வரும் சத்தம்.  யாராக இருக்கும் என்று உற்றுப் பார்த்தேன். சைக்கிள் கேண்ட் பாரில் பச்சைக்கலர் குதிரைவால் தோகைகள் காற்றில் குலுங்கி ஆடின. வெகு தொலைவில் வரும்போதே சைக்கிளில் வரும் உருவம் சங்கரலிங்கம் என்பது தெரிந்து போயிற்று. அவன் எதற்கு இந்த நேரத்தில் இங்கே வருகிறான்?. அச்சம், திகில், குழுப்பம். ஒருவேளை என் நோக்கத்தை அறிந்து கொண்டு என்னைப் போட்டுத் தாக்கத்தான் வருகிறானா? அல்லது அம்பிகாவும் அவனும் சேர்ந்து போட்டிருக்கும் சதித்திட்டமா? அமலாவோடு நான் கொண்டிருக்கும் நெருக்கம் அம்பிகாவிற்கு தெரிந்திருக்குமோ?  என் முயற்சி இன்றியே தொடைகள் ஆட்டம் போட்டன. இருளுக்குள் மேலும் பம்மி, தலையை கவட்டைக்குள் புகுத்தி அமர்ந்திருந்தேன்.

சங்கரலிங்கம் வேகம் குறையாமல் என்னைக் கடந்து சென்றான். அப்போதுதான் எனக்கு வேறோரு கோணம் சட்டென்று திறந்து கொண்டது. அழுகையும் ஆத்திரமும் வந்தது. ஏமாற்றமும் அவமானமும் பொங்கி வழிந்தது. என்ன செய்யலாம்? என்ன செய்யலாம்? என்று தரையை உதைத்தபடி கொஞ்ச நேரம் அங்கும் இங்கும் நடந்தேன். ஒன்றும் செய்ய முடியாது என்பது தெரிய வர இருளுக்குள் சைக்கிளை துாக்கி நிறுத்தினேன். அம்பிகா இல்லை. அம்பிகா இல்லை. அம்பிகா இல்லவே இல்லை என்று வெறிகொண்டு புலம்பினேன். நாளையே அமலா வீட்டிற்குச் சென்று அவளின் பெற்றோரிடம் பேசி அறிமுகம் செய்துகொள்ள வேண்டும் எனச் சபதம் செய்து கொண்டேன். எல்லா இடங்களிலும் நான் இரண்டாவது ஆணாகத்தான் இருக்கிறேன்? பிளான் பி. என்னதான் என் பிரச்சினை? சங்கரலிங்கத்தையும் அவள் ஏன் இதே நேரத்திற்கு வரச்சொல்லியிருக்கிறாள்? கேள்விகள் கேள்விகள் கேள்விகள்.

மறுநாள் காலையில் நான் சோர்ந்து போய் வேலைக்குக் கிளம்பினேன். அம்பிகாவிடம் இனி எந்தவித பேச்சுவார்த்தையும் வைத்துக்கொள்ளக் கூடாது. என்னை வரச்சொல்லியிருந்த அந்த நேரத்திற்கே அவனையும் ஏன் வரச்சொல்ல வேண்டும்? அல்லது வழக்கமாக அவன் வரக்கூடிய நேரத்தில் என்னை  வரச்சொன்னாளா, அவர்களுக்குள் ஏதேனும் சண்டை வந்திருக்குமோ?

அம்புஜம் மாமிதான் அந்தச் செய்தியையும் வந்து சொன்னார். சங்கரலிங்கம் உடல் முழுக்க மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீ வைத்து தற்கொலை செய்து கொண்டான் என. அம்பிகா ஒன்றுமே நடவாததைப் போல பிசிர் பார்த்துக் கொண்டிருந்தாள். டீக்கடைக்கார அண்ணாச்சியிடம் முட்டைப் போண்டாவிற்காக மல்லுக்கு நின்றாள். வழக்கம்போல என்னைப் பார்த்து உதடுகள் உள்மடிய சிரித்தாள். அரசு மருத்துவமனையில் அவன் உடலைப் பெற்றுக்கொள்வதற்காக காத்திருந்த போது மேலும் ஒரு தகவல் கிடைத்தது.

அன்றிரவு சங்கரலிங்கம் வீடு திரும்பியபோது உடல் முழுக்க காயங்கள். கெந்தி கெந்திதான் நடந்து வந்திருக்கிறான். மாடி ஏற முடியாமல் கீழே இருந்து, உதவிக்கு அறை வாசிகளை அழைத்திருக்கிறான். சினிமா முடிந்து திரும்பியபோது யாரோ நான்குபேர் அவனை வழிமறித்து, அடித்து உதைத்து, கையில் வைத்திருந்த பணத்தையும், வாட்ச்சையும் பிடிங்கிவிட்டு ஓடிவிட்டார்கள் என்று காரணம் சொன்னான். அருகில் உள்ள மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றிருக்கிறார்கள். டாக்டர் வலி நிவாரணி ஊசி ஏற்றி, மாத்திரைகளும் ஆயில்மெண்டும் எழுதித் தந்திருக்கிறார். காவல் நிலையம் வரை சென்று திரும்பி இருக்கிறார்கள். ஆனாலும் இரவு முழுக்க சங்கரலிங்கம் வலியால் பிணாத்திக்கொண்டே, துாங்க முடியாமல் தவித்திருக்கிறான். காலையில் அவனுடைய விதைப்பை ஒரு பலுானைப்போல வீங்கியிருந்ததை அறை நண்பர்கள் பார்த்திருக்கிறார்கள்.

என்னைப் போலவே சொந்த ஊரில் பிழைக்க வழி இன்றி, முன்னுாறு கிலோமீட்டர்கள் தள்ளி இருந்த நகரத்திற்கு வந்தவன்தான் அவனும்.  ஆயுள் முழுக்க அவனுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அன்று அவன் மட்டும் வராமல் போயிருந்தால் ?. “பிழைக்க வந்த நாய்களுக்கு எங்க ஊர் பொண்ணு கேட்குதோ?” என்று உதைகள் வாங்கியிருப்பேன். அப்படிச் சொல்லித்தான் சங்கரலிங்கத்தை சட்டைக்காலரைப் பிடித்து இழுத்துச் சென்றார்களாம். அடிப்பதற்கு முன்பு அவன் சாதியை விசாரித்திருக்கிறார்கள். ஒரே சாதி என்பதனால் உயிரோடு  விட்டிருக்கிறார்கள்.

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *