நிகழ்தல் – அனுபவக் குறிப்புகள் – 2. முதற் சுவை

அம்மாவுக்கு நல்ல குரல், ஆனால் பாட்டு பாடுவதில்லை. கவிதைகள்தான் மெல்லிய ராகத்துடன் சொல்லுவாள். சமஸ்கிருத யாப்பை ஒட்டி மலையாளத்தில் கவிதை இலக்கணம் அமைந்தபோது சம்ஸ்கிருதத்தில் உள்ள சந்தங்களும் கவிதையில் குடியேறின. அனுஷ்டுப்பு சந்தத்தில்தான் பழைய கவிதைகள் பெரும்பாலும் இருக்கும். துஞ்சத்து எழுத்தச்சன் கிளிப்பாட்டு என்ற நாட்டார் சந்தத்தில் தன் “அத்யாத்ம ராமாயணம்” காப்பியத்தை எழுதி அதை பிரபலப்படுத்தினார். பின்னர் கிளிப்பாட்டு முக்கியமான ஒரு சந்தமுறையாக மாறியது. கிட்டத்தட்ட சொல்வது போலவே ஒலிக்கும் கேக ஒருவகை ஆசிரியப்பா. பெரும்பாலான மலையாளிகள் கவிதைகளை செவியின்பமாகவே அறிந்திருப்பார்கள். அம்மாவும் அப்படித்தான்.

அம்மா இளம்பெண்ணாக இருக்கும்போதுதான் சங்கம்புழ கிருஷ்ண பிள்ளையின் ரமணன் என்ற கதைக்கவிதை வெளியாகி பெரும்புகழ் பெற்றது. அன்றெல்லாம் சந்தைகளில் அரையணாவுக்கு ரமணனின் மலிவுப்பதிப்பு கிடைக்கும். எழுதப்படிக்கத் தெரிந்த பெண்கள் எல்லாரும் அதை வாங்கி உணர்ச்சிகரமாக பாடுவார்கள். கற்பான வாதத்தின் கனிந்த நுனி அந்தக் கவிதை. இசைத்தன்மையும், இனிய சொல்லாட்சிகளும், மிகையுணர்ச்சிகளும் கலந்தது. மலையாளமொழி சங்ஙம்புழ கவிதைகள் வழியாகவே பதின்பருவத்தை அடைந்தது என்று பின்னர் விமரிசகர்கள் எழுதினார்கள்.

சங்ஙம்புழ கிருஷ்ணபிள்ளையும் அவரது நண்பர் இடப்பள்ளி ராகவன்பிள்ளையும் இரட்டையர் என்ற அளவில் புகழ்பெற்றவர்கள். இடப்பள்ளி ராகவன்பிள்ளை ஒரு பெண்ணைக் காதலித்தார். அவளுடைய பெற்றோர் இடப்பள்ளி ராகவன் பிள்ளையை ஏற்கவில்லை. பெற்றோரை மறுதலிக்க அவள் முன்வரவுமில்லை. ஆகவே இடப்பள்ளி ராகவன்பிள்ளை மனம் உடைந்து துாக்கு போட்டுக்கொண்டார். அந்தக் கொந்தளிப்பில் குடிகாரராக அலைந்த சங்ஙம்புழ கிருஷ்ணபிள்ளை ஆறுமாதம் கழித்து எழுதிய காவியம் ”ரமணன்”. அதில் ஆட்டிடையனாகிய ரமணன் பிரபுகுடும்பத்தைச் சேர்ந்த சந்திரிகையை காதலிக்கிறான். அவளும் காதலிக்கிறாள்.

”கானனச் சாயையில் ஆடு மேய்க்கான்

ஞானும் வரட்டயோ நின்றே கூடே?” என்று அவள் கேட்க

”எங்கிலும் சந்திரிகே லோகம் அல்லே?

பங்கில மானஸர் காணுகில்லே?” என்று அவன் நிராகரித்து விடுகிறான். 

அவளுடைய நினைவை அவன் பூத்த மலர்மரங்கள் நிறைந்த மலைச்சரிவில் அமர்ந்து புல்லாங்குழலில் இசைக்கிறான். அவளுடைய பெற்றோர் காதலை நிராகரிக்கிறார்கள். அவள் அவனுடன் வரத் தயார்தா்.. அவன்தான்

”பாடில்லா பாடில்லா நம்மை நம்மள்

பாடே மறந்து ஒந்நும் செய்து கூடா”

என்று நிராகரிக்கிறான். அவளுடைய திருமணம் நடக்கிறது. மனம் உடைந்த ரமணன் காடுகளில் புல்லாங்குழல் ஊதி ஊதி அலைகிறான். தன் நெஞ்சில் உள்ள இசை முழுக்க தீர்ந்து போனபின்னர் ஒரு பூத்தமரத்தில் காட்டுக்கொடியில் துாக்கிட்டு இறக்கிறான். 

பிரிட்டிஷ் கற்பனாவாதத்தில் இருந்து நேரடியாக இறங்கி வந்த கவிதை இது. வேர்ட்ஸ்வர்த்துக்குப் பிரியமான மேய்ச்சல் வாழ்க்கையைத்தான் அப்படியே சங்ஙம்புழ கிருஷ்ணபிள்ளையும் இலட்சியக்கனவாக ஆக்கிப் பாடியிருந்தார். கேரளத்தில் அடர்காடுகளும், நீர்நிலைகளும் வயல்களும்தான். ஆகவே அங்கே எந்தக்காலத்திலும் மேய்ச்சல் வாழ்க்கை இருந்ததில்லை. கன்றுகாலிகள் வீட்டில்தான் வளர்க்கப்பட்டன. முற்றிலும் தெரியாத ஒரு வாழ்க்கை மீது எழுந்த பிரியம் ஒரு கனவுபோல அனைவரையும் இழுத்துக்கொண்டது.

இன்னொன்றும் தோன்றுகிறது, ரமணனின் கதாபாத்திர உருவகத்தில் கிருஷ்ணன் இருக்கிறான். கேரளம் ஐந்து நுாற்றாண்டாக கிருஷ்ண பக்தி வேரூன்றிய மண். எங்கும் கோபிகாவல்லபனாகிய வேணுகோபாலன் காதலிசை எழுப்பி நிற்கும் ஆலயங்கள். அங்கெல்லாம் தினமும் ராதாகிருஷ்ண காதலைப்பாடும் ஜெயதேவரின் அஷ்டபதிப் பாடல்கள். சங்ஙம்புழ கிருஷ்ணபிள்ளையே அஷ்டபதியை மலையாளத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.

வேர்ட்ஸ்வர்த்தும் ஜெயதேவரும் கலந்த ஒரு வெற்றிகரமான கலவை ”ரமணன்”. கோபிகைகளை வென்ற கண்ணன் சங்ஙம்புழ கிருஷ்ணப்பிள்ளையின் காவியத்தில் காதலில் தோற்று உயிரை விடுகிறான். நாணயத்தின் மறுபக்கம். ஒருவகையில் இரண்டுமே காதலின் சர்வ வல்லமையை கொண்டாடக்கூடிய கதைகள்தானே? இதை சற்று நக்கலாக கே.ஜி.சங்கரப்பிள்ளை இப்படி ஒரு கவிதையில் எழுதினார்.

பதினாறாயிரத்து எட்டுக்கு

இடையன் 

என்றாலும் 

ஒன்று கைவிட்டுப்போனபோது

துாக்கில் தொங்கினான்

பரம கஞ்சன்

அம்மா ரமணனை முழுக்கவே மனப்பாடமாக்கியிருந்தாள். ரமணன் வழியாகத்தான் அவளுக்கு கவிதையில் ஈடுபாடு வந்தது. கோயில்குளத்துக்கு குளிக்கப்போகும்போது கூடவே சேர்ந்து குளித்த நெய்யாற்றின்கரை தங்கம்மை அக்கா ரமணனின் சில வரிகளைப் பாடுவதைக் கேட்டாள். மீண்டும் பாடச்சொல்லிக் கேட்டாள். அந்தவரிகள் அப்படியே மனதுக்குள் நுழைந்து கொண்டன. வீட்டுக்கு வந்து ரமணன் ஒரு பிரதி வாங்கித்தர வேண்டுமென அண்ணாவிடம் கேட்டாள்.

அன்றெல்லாம் குலஸ்திரீகள் கதை கவிதை வாசிப்பது கற்புக்கு இழுக்கு என்று எண்ணப்பட்டு வந்தது. மூத்த அண்ணா கை ஓங்கியபடி அடிக்கவே வந்துவிட்டார். ”நாயுட மோளே வெட்டிக் கொந்நு குழிச்சு போடுவேன். போடி உள்ள”. ஆனால் இளைய அண்ணன் அன்று புகழ்பெற்றிருந்த கம்யூனிஸ்டு. அவர் ரகசியமாக ஒரு பிரதி வாங்கி வீட்டில் வேலைக்கு வரும் காளிப்பெண்ணிடம் கொடுத்தனுப்பினார்.

காளிப்பெண்ணுக்கும் அம்மாவுக்கும் ஒரே வயது. ஒரே கனவு. இருவரும் ரகசியமாக தென்னந்தோப்புக்குள் ஓலையும் மட்டையும் சேகரித்து வைத்திருக்கும் கொட்டகைக்குள் அமர்ந்து ரமணனை மனப்பாடம் செய்தார்கள். காளிப்பெண்ணுக்கு எழுத்து தெரியாது. அவள் காதால் கேட்டே கற்றுக்கொண்டாள். இருவரும் மீண்டும் மீண்டும் அந்தவரிகளைப் பாடியபடி கனவுலகில் அலைந்தார்கள். பூவன்றி வேறில்லாத காடு. புல்லாங்குழலின் இனிய இசை. அதை உணர்ச்சிகரமாக வாசிக்கும் பேரழகன். காதலுக்காக, ஒரு பெண்ணுக்காக, உயிரையே இழக்கக்கூடியவன்.

அன்றெல்லாம் அம்மாவோ காளிப்பெண்ணோ ஒருவர் ரமணனில் ஏதேனும் ஒருவரியை முனகினால்கூட இன்னொருவர் அதை பாட ஆரம்பித்துவிடுவார். இருவரும் சேர்ந்து பாடுவார்கள். சிலசமயம் வேறு சமவயதுப்பெண்களும் சேர்ந்து பாடுவார்கள்.”ரமணன் கொஞ் நேரம் பாடினால் அப்டியே கண்கலங்கி அழுகை வந்துவிடும்” என்று அம்மா சொல்வாள். எல்லா பெண்களும் சேர்ந்து கண்கலங்கி இனிய துயரத்தை பெரூமூச்சாக வெளியே விடுவார்கள்.

ரமணனின் பாதிப்பு மலையாள மனதில் நிரந்தரமானது. அன்று முதல் இன்று வரை துயரத்தில் முடியும் காதல்கதைகள்தான் மலையாளத்தில் பெருவெற்றி பெற்றிருக்கின்றன. தகழி சிவசங்கரப் பிள்ளையின் “செம்மீன்” ஓர் உதாரணம். “மானஸ மைனே வரூ” என்று கடற்கரையில் நிலவில் அமர்ந்து பாடும் பரீக்குட்டி ஒரு ரமணன் அல்லவா? அப்படி எத்தனை திரைப்படங்கள்.

அம்மா ரமணனில் இருந்து குமாரன் ஆசானுக்கு வந்து சேர்ந்தார். ”நளினி”, ”லீலா” எல்லாமே காதல் தோல்வியின் கதைப்பாடல்கள்தான் என்று இப்பபோது தோன்றுகிறது. அவை எளிய மானுடக்காதல்கள் அல்ல, எய்தவே முடியாத இலட்சியக்காதல்கள், அவ்வளவுதான். அம்மா விடிகாலையில் எழுந்து சமையலை ஆரம்பிக்கும்போது மெல்லிய குரலில் குமாரன் ஆசானின் வீணபூவு (விழுந்த மலர்) நீள்கவிதையைப் பாடுவதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். உதிர்ந்த மலரை நோக்கி கவிஞன் பாடுகிறான்.

‘ஹா புஷ்பமே, அதி துங்க பதத்தில்

எத்ர சோபிச்சிருந்து ஒரு ராக்ஞி கணக்கே நீ?

(ஓ மலரே உன்னதமான இடத்தில் எத்தனை சோபித்திருந்தாய் நீ,

ஒரு மகாராணியைப் போல)

”அவனி வாழ்வு ஒரு கினாவு ”கஷ்டம்” என்ற கடைசி வரியை பலமுறை மெல்ல ஆலாபனை செய்து அம்மா நிறுத்துவாள். குளிருக்குப் போர்வையைப் போர்த்தியபடி கண்மூடிக்கிடந்து நான் உதிர்ந்த மலரின் விதியை எண்ணிக் கண்ணீர் விடுவேன். வாழ்வெனும் துயரக் கனவு. மகத்தான பிரபஞ்சவிதிகளால் கொஞ்சம் கூட கருணை இல்லாமல் தட்டித்தள்ளப்பட்ட மலர். உதிர்வதைத்தான் எல்லா மலர்களும் நுாறு நுாறு வண்ணங்களால் கொண்டாடுகின்றனவா என்ன?

அம்மாவுக்கு பின்னர் இடச்சேரி, ஜி.சங்கரக்குறுப்பு, வைலோப்பள்ளி ஸ்ரீதரமேனன் கவிதைகளில் ஈடுபாடு ஏற்பட்டது. ஆனாலும் அம்மாவுக்கு மிகவும் பிடித்த கவிஞர்களாக மூவரே இருந்தார்கள். சங்ஙம்புழ கிருஷ்ணபிள்ளைக்கு எப்போதும் ஒரு தனி இடம். அதன்பின்னர் குமாரன் ஆசான். முதலிடம் துஞ்சத்து எழுத்தச்சன்தான். அம்மாவின்  அத்யாத்ம ராமாயணம் பிரதி இப்போதும் என்னிடம் உள்ளது. வீட்டில் இருந்த புத்தகங்களை எல்லாம் செலவுக்கு விற்ற அண்ணா அந்நுாலை விற்கவில்லை. வீடுதோறும் அந்நுால் இருந்தமையால் யாரும் வாங்கவில்லை.

முழுக்கோட்டில் நாங்கள் இருந்த காலகட்டத்தில் வருடம்தோறும் ஆடிமாதம் அம்மா துஞ்சத்து எழுத்தச்சனின் அத்யாத்ம ராமாயணம் கிளிப்பாட்டு நுாலை வாசிப்பாள். அது ஒரு கேரளத்துச் சடங்கு. ஆடிமாதம் முழுக்க மழைச்சாரல் இருக்கும். நோய்கள் வரும் மாதம். விவசாய வேலைகள் குறைவானதனால் பட்டினி பரவும் மாதமும்கூட. ராமாயணம் அவை அனைத்தில் இருந்தும் ஒரு காப்பு என்று அக்காலத்தில் நம்பினார்கள்.

காலையில் குளித்து கூந்தலை பின்பக்கம் முடைந்திட்டு அதில் துளசி இலைசூடி அம்மா வரும்போது வ்ந்திருக்கும் பாட்டிகளும் பெண்களும் குழந்தைகளும் எழுந்து நின்று வணங்குவார்கள்.”விதுஷி” என்று அம்மாவை ஊரிலே சொல்லுவார்கள். குழந்தைகளை எழுத்துக்கு இருத்துவதற்கு முன்பு அம்மாவிடம் ஆசி வாங்க அழைத்து வருவதுண்டு. வித்யாதேவியின் ஆசிபெற்ற பெண்மணி. அம்மா அமர்ந்தபின் எல்லாரும் அமர்வார்கள்.

கூடத்தில் முறைப்படி குத்துவிளக்கு ஏற்றி வைத்து,வாழையிலையில் பூவும் பழமும் படைத்து, பூஸை செய்வோம். பெரும்பாலும் பூஸையை நான்தான் செய்வேன். அம்மா வாசிக்க ஆரம்பிப்பாள். முதலில் நுாலைத்திறந்து கும்பிட்டபின் கணபதி ஸ்துதி, சரஸ்வதி ஸ்துதி, ஹனுமான் ஸ்துதி, விஷ்ணு ஸ்துதி என்று வாசித்தபின் அம்மா எங்கிருந்தோ தாளில் பிரதி செய்து வைத்திருந்த எழுத்தச்சன் ஸ்துதியையும் வாசிப்பாள். அதன்பின்பு விட்ட இடத்தில் இருந்து கதை தொடங்கும்.

அம்மாவின் குரல் இனிமையான உலோகச்சத்தம் கலந்தது. எழுத்தச்சனைப் புரிந்துகொள்வது மிக மிக எளிது. நாட்டுப்புறப்பாடல் போலவே இருக்கும். புராண நுட்பமோ, தத்துவ ஆழமோ இருக்கும் இடங்களை இருமுறை வாசித்தபின் அவற்றுக்குப் பொருள் விளக்கம் சொல்வாள். உணர்ச்சிகரமான காட்சிகளை நாடகப்பாங்குடன் வாசித்துச் சொல்வாள். சீதையின் கதை கேட்கு ம்பொதெல்லாம் பெண்கள் அதில் மூழ்கிவிடுவார்கள்.

நன்றாக நினைவிருக்கிறது. ஒருமுறை நான் ஓரமாக அமர்ந்து கேட்கிறேன். சீதை அசோகவனத்தில் திரிசடையிடம் பேசும் காட்சி. அம்மா வாசித்துச்செல்கிறாள். அவள் தன்னையே மறந்து போய்விட்டிருந்தாள். அந்த கூட்டத்தில் இருந்து முப்பதுக்கும் மேற்பட்ட பெண்கள், பல வயதை, பலசாதிகளை,  பல குடும்ப நிலைகளைச் சார்ந்தவர்கள் அனைவருமே கண்களில் கண்ணீர் வழிய அமர்ந்திருந்தார்கள்.

ஒருமுறை அம்மா சீதை வசிஷ்டரின் ஆசிரமத்தில் இருக்கும் இடத்தை வாசித்துக்கொண்டிருந்தாள். சட்டென்று சந்தம் மாறுபட்டது. நான் உடனே கண்டுபிடித்து விட்டேன். அது குமாரன் ஆசானின் ”சிந்தா விஷ்டயாய சீதா” (சிந்திக்கும் சீதை) என்ற கவிதை. வசிஷ்டரின் ஆசிரமத்தில் சீதை ராமனைப்பற்றி ஆங்காரத்துடன் ஆவேசத்துடன் சிந்திக்கும் இடம் அது. ராஜதர்மத்துக்காக தன்னுடைய எல்லையில்லாத பிரியத்தை நிராகரித்த அவன் எப்படி ஒரு புருஷோத்தமன் ஆக முடியும் என்று அவள் கேட்கும் வரிகள் அக்காலத்தில் கேரளத்தை உலுக்கியவை.

அந்த ச்ந்தம் முடிந்ததும் ஒரு பிராமணப்பாட்டி ”இத இதுக்கு முன்னாடி கேட்டதில்லியே,” என்றாள். அம்மா மெல்ல ”இதும் ராமாயணம்தான்…”என்றாள். பாட்டி ”ஆரு எழுதினது?” என்றாள். ”குமாரன் ஆசான்” என்றாள் அம்மா மெல்ல. ஆசாரமான பாட்டி உடனே எழுந்து கத்தப்போகிறாள் என்று நான் எதிர்பார்த்தேன். ஆசான் ஈழவர் வேறு. பாட்டி அம்மாவையே கூர்ந்து பார்த்தபின் பெருமூச்சுவிட்டு ”இன்னொரு வாட்டி  படிடீ” என்றாள்.

அம்மா என்னை கர்ப்பமாக இருக்கும்போதுதான் காளிப்பெண் தற்கொலை செய்துகொண்டாள். அவள் கணவன் இன்னொருத்தியைக் கூட்டி வந்தான். புலையர்சாதியில் அன்று அது சாதாரணம். கடன் வாங்கிய பணம் கொடுக்க முடியாவிட்டால் மனைவியைக் கொடுத்துவிடுவார்கள். காளிப்பெண் அப்படியே ஓடிப்போய் பின்பக்கம் இருந்த ஆழமான கிணற்றில் குதித்து, கீழே சென்று சேர்வதற்குள்ளாகவே மண்டை உடைந்து இறந்தாள். அம்மாவுக்கு நாலைந்து நாள் காய்ச்சலும் வலிப்பும் இருந்தது.

அதன்பின்னர் அம்மாவுக்கு ரமணன் கவிதை பிடிக்காமல் ஆகியது. அதை பாடுவதே இல்லை. நான் பாடினால்கூட ”வேண்டாம்டா, அது ஒரு அச்சானியம் பிடிச்ச பாட்டு” என்று சொல்லிவிடுவாள். மலையாள நவீன இலக்கியங்களை படிக்க ஆரம்பித்து அப்படியே தீவிர இலக்கிய வாசகி ஆனாள்.ஆங்கில இலக்கியங்களில் ஈடுபாடு வளர்ந்தது. டபிள்யூ.டபிள்யூ.ஜேகப்ஸ், தாக்கரே, ஜார்ஜ் எலியட் என்று தீவிரமாகப் படிக்க ஆரம்பித்தாள். அக்கால மனநிலைப்படி பிரிட்டிஷ் மக்களே ஆகச்சிறந்த இலக்கியத்தைப் படைக்க முடியும் என்று அவளும் நம்பினாள்.

அம்மாவைக் கவர்ந்த எர்னெஸ்ட் ஹெமிங்வே அந்த எண்ணத்தை மாற்றினார். ஹெமிங்வேயின் ”யாருக்காக மணி முழுங்குகிறது?” நாவலை அம்மா நாலைந்து தடவைக்குமேல் வாசித்திருக்கிறாள். ”அது ஒரு கிளாஸிக். மொழியை அதுபோல யாருமே கையாண்டதில்லை” என்பாள்.

பிரெஞ்சு இலக்கியம் கொஞ்சம் பிந்தி அறிமுகமாயிற்று. அதற்குக் காரணம் தற்செயலாகக் கிடைத்த லே மிஸரபிள்ஸின் ஆங்கில மொழிபெயர்ப்பு. இரவெலெ்ல்லாம் துாங்காமல் அம்மா அதையே படித்துக்கொண்டிருந்தாள். அம்மாவின் வாசிப்பு எல்லாமே தற்செயல்தான். அவளுக்கு வாசிப்பை பகிர்ந்துகொள்ள  என்னைவிட்டால் யாருமே கிடையாது.

அம்மா தய்தயேவ்ஸ்கி, தல்ஸ்தோய் யாரையுமே கேள்விப்பட்டதில்லை. ருஷ்ய இலக்கியமே அறிமுகம் கிடையாது. தமிழிலக்கியத்தில் ஜேயகாந்தன்,தி.ஜானகிராமன் இருவரையும் பொருட்படுத்திப் படித்தாள். அவர்கள் ஆனந்த விகடன் வழியாக அறியப்பட்டிருந்தார்கள். புதுமைப்பித்தன், மௌனி எல்லாம் அக்காலத்தில் சிலநுாறு பேருக்கு மட்டுமே தெரிந்த ரகசியங்கள். அம்மாவுக்கு தமிழிலக்கியம் மீது பெரிய மதிப்பு ஏதும் உருவாகவில்லை. நான் முதலில் கல்கி,சாண்டில்யன் பின்பு ஜெயகாந்தன்,தி.ஜானகிராமன் என்று முன்னேறினேன். அம்மாவிடம் ஆவேசமாகப் பேசிப் புல்லரிப்பேன்.

அம்மா இருவரையுமே நிராகரித்தாள். இருவரும் இரண்டுவகை கற்பனாவாதிகள் என்றாள். ஜெயகாந்தனின் கற்பனாவாதம் கருத்துக்கள் சார்ந்தது. அவர் இலட்சியவாதி. தி.ஜானகிராமனின் கற்பாவாதம் மனித உறவுகளைச் சார்ந்தது. கற்பனாவாதம் எல்லாம் முதிராத வாசிப்புக்கு உரியவை. பக்குவமடைந்த மனிதர்களுக்கு அவை உதவாது. இலக்கியத்தின் உச்சக்கட்ட ஞானம் என்பது முற்றிலும் சமநிலை கொண்டதாக இருக்கும் என்றாள்.

ஆனால் அம்மா விக்டர் யூகோவின் லே மிஸரபிள்ஸ் நாவலை ஒரு கற்பனாவாதப் படைப்பாகக் காணவில்லை. அதை ஒரு கிளாசிக் என்றே சொல்லிவந்தாள். பிரெஞ்சு எழுத்தாளர்களில் எமிலி ஜோலா, மாப்பஸான், ரோமெய்ன் ரோலந்த் போன்றவர்கள் அம்மாவுக்குப் பிடித்திருந்தார்கள். எமிலி ஜோலாவின் பரபாஸ் நாவலை நாலைந்து முறை அம்மா படித்திருக்கிறாள். ஆனாலும் அம்மாவுக்கு லே மிஸரபிள்ஸ்தான் ”மேஜர் கிளாஸிக்”.

அம்மாவுக்கு துாக்கமின்மை வியாதி இருந்திருக்கலாம். ஒரு நாளைக்கு மூன்றுமணிநேரம் துாங்கினால் அதிகம். அதனால் உடல் மெலிந்துகொண்டே வந்தது. சிறுவயதில் மிக அழகானவள் என்று சொல்வார்கள். நாற்பத்தைந்து வயதுக்குள் நன்றாக மெலிந்து கன்னங்கள் ஒட்டி கண்கள் குழிந்து வயோதிகத்தோற்றம் வந்துவிட்டது. ஆனாலும் சட்டென்று மனதைக் கவரும் அழகிய தோற்றம் அம்மாவுக்கு இருந்தது. என் நண்பர்கள் எல்லாருமே அதைச் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு காரணம் அம்மாவின் கண்கள்தான் என்று நினைக்கிறேன். அவை மிக அழகானவை.

எங்கள் வீட்டில் மின்சாரம் இல்லை. அம்மா மண்ணெண்ணெய் விளக்கை அருகே வைத்துக்கொண்டு படுத்தபடி படிப்பாள். நான் துாக்கம் விழித்துப் பார்க்கும்போது மொத்த வீடே இருட்டில் இருக்கும். இருளின் திரையில் ஒரு ஓவியம் போல செஞ்சுடர் ஒளியில் நெளியும் அம்மாவின் முகம். நெற்றியின் இருபக்கமும் லேசாக நரை ஓடிய கூந்தலிலைகள். அம்மா படிக்கும்போது அழுவதோ உணர்ச்சிமாற்றம் கொள்வதோ இல்லை. முகம் கனவில் நிலைத்துப் போய் இருக்கும்.

ஏன் அம்மாவுக்கு லே மிஸரபிள்ஸ் அந்த அளவுக்குப் பிடித்திருந்தது? நான் அதை இருமுறை படித்திருக்கிறேன். அது ஒரு கிளாஸிக் என்றுதான் இப்போது நானும் நினைக்கிறேன். மனிதகுலம் தன்னைப் பற்றி தான் கொண்டிருந்த நம்பிக்கையின் ஆவணம் அது. அம்மா எப்போதுமே கனவுச்சாயல் கொண்ட நாவல்களை நிராகரித்து வந்தார். எம்.டி.வாசுதேவன் நாயரை அவளுக்குப் பெரிதாகப் பிடிக்கவில்லை. பிமல் மித்ராவைப் பிடிக்கவில்லை. சரத்சந்திரர் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. ஆனால் மீண்டும் மீண்டும் லே மிஸரபிள்ஸை நாடிக்கொண்டிருந்தாள். ”நன்மை மீதுநாட்டம் இல்லாவிட்டால் தீமைகளை எப்படித் தாங்கிக்கொள்ள முடியும்?” என்று ஒருமுறை அந்நாவலைப் பற்றிப் பேசும்போது சொன்னாள். அந்நாவலில் உள்ள உக்கிரமான துன்பநிலைகள் அம்மாவை கவர்ந்தனவா என்ன?

அம்மா 1985ல் தன் 54ஆம் வயதில் தற்கொலை செய்துகொண்டாள். பொதுவாக முதியவர்கள் தற்கொலைசெய்துகொள்வது மிக மிக அபூர்வம் என்பார்கள். ஏனென்றால் இனி நாட்கள் மிச்சமிலலை என்று ஆகும்போதுதான் வாழ்க்கையின் அருமை தெரிகிறது. வாழ்க்கையைப்பற்றி பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமலாகிவிடுவதானல் ஏமாற்றங்களும் இல்லாமலாகின்றன. இளம் வயதுத் தற்கொலைக்குப் பின்னால் ஒரு நம்பிக்கையின் முறிவு இருக்கிறது. முதிய வயதுத் தற்கொலைக்குப் பின்னால் ஒரு தத்துவப்பிரச்சினை இருக்கிறது.

அம்மா தற்கொலை செய்துகொண்டதற்குக் காரணங்களை எவ்வளளோ சொல்லலாம். அந்தத் தருணத்து வேகம். நெடுநாளைய வன்மம். தனிமை. அர்த்தமின்மையை உணர்ந்தது. ஆனால் ரமணனும் ஒரு காரணம் என்று எனக்குத் தோன்றுவதுண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *