நிகழ்தல் – அனுபவக் குறிப்புகள் – தேர்வு -9

இன்று அஜிதனுக்குப் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள். நாலைந்து நாட்களாகவே அருண்மொழி பதற்றமாக இருந்தாள். பதற்றத்தை எனக்கும் தொற்றவைக்க முயன்றாள். நான் பதற்றப்படக் கூடாது என்ற எண்ணத்துடன் இருந்தாலும் மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பதாகவும் எனக்கு ஓர் எண்ணம்.

காலையில் அருண்மொழி எழுந்துவந்ததும் நான் என் வழக்கமான உபதேசத்தை ஆரம்பித்தேன். “இதோ பார் அருணா, அவன் என்ன மார்க் வாங்கிறானோ அதான் அவன்…அவன் எப்டி இருந்தாலும் அவன் நம்ம புள்ளை..அந்த மார்க் இந்த மார்க்னு அனாவசியமா நீ எதிர்பார்ப்புகளை வளத்துக்காதே..அதை அவன் மேலே சுமத்தி அவன் மனசில கவலைய வளர விடக்கூடாது..தயவு செஞ்சு நான்  சால்றரைதக் கேள். மார்க்கைப்பத்தி நீ இலட்டிக் கிடாதே…அவன் வாங்குற மார்க்கை அவனே வந்து சொல்லட்டும்..நல்ல மார்க்கா இருந்தா சந்தோஷப்படுவோம்..இல்லேண்ணா விட்டிருவோம்…”

“இல்ல ஜெயன், ஒரு நானுாறாவது இல்லாட்டி அவன் ஃபஸ்ட் குரூப் எடுக்க முடியாது…சரி, உனக்கு எல்லாரையும் தெரியும்…ஆனா முந்நுாத்தி எழுபத்தஞ்சாவது எடுக்கணும்ல?” நான் எரிச்சலுடன்” ஏன் ஃபஸ்ட் குரூப் எடுக்கணும்னு ஏதாவது வேண்டுதலா? மத்த குரூப்லயும் பிள்ளைங்க படிக்குதுல்ல? பேசாம இரு..பாஸ் ஆனாபோரும்..அதுகூட எதிர்பார்ப்பா இல்ல..” அவள் சோகமாக “நான் அதுக்காக சொல்லல்லை”என்றாள். “நீ..எதுக்காகவும் சொல்ல வேண்டாம்..””நல்லாத்தான் எழுதியிருக்கான்னு சொன்னான்..” ”அது அவன் சொல்றது.அவன் கையெழுத்தைப்பத்தி உனக்குத்தான் தெரியுமே”

எல்லா சிக்கல்களும் ஆரம்பித்தது அங்கிருந்ததுான். அதற்கு முக்கியமான காரணமும் நானே. முதிரா இலட்சியவாதங்கள். அப்போது தருமபுரியில் வேலை பார்த்தோம். எல்.கே.ஜி.யில் பையனைச் சேர்க்க முனைந்தபோது “நல்ல ஸ்கூல் அது இதுன்னு சொல்றதெல்லாம் சும்மா டுபாக்கூர்…ஏதாவது ஒரு ஸ்கூலிலே போய் எழுத்து கத்துக்கிடணும்…அவ்வளவுதான்…இது இப்ப என்ன? எந்த ஸ்கூல் பக்கத்துல இருக்கோ அதுல சேக்கணும். அதான் நல்லது. சும்மா குழந்தைகளை அங்க இங்கனு வேன்லயும் ஆட்டோலயும் போட்டு அலைக்கழிக்கக் கூடாது…“என்றேன்.

அதை அவள் ஏற்றுக்கொள்ளவே அவனை அருகே செந்தில்நகரில் ஒரு பள்ளியில் சேர்த்தோம். அங்கே கூலிவேலைக்கு ஆளெடுப்பதுபொல வீட்டில் சும்மா இருக்கும் பெண்களை வைத்து வகுப்பு எடுத்தார்கள். “இப்பவே படிப்பு அது இதுன்னெல்லாம் ஓவர் எக்ஸைட் ஆக வேண்டாம்..பிள்ளை அவன் பாட்டுக்கு வளரட்டும். கொஞ்சம் தெளிஞ்சதுக்குப் பிறகு அவனே படிப்பான்” என்றேன். சதா குழந்தைகள் படிப்பைப் பற்றியே பேசும் சக ஊழியர்கள் மேல் இருந்த கசப்பும் எகத்தாளமும் அப்படிச் சொல்லவைத்தன. அவனுடன் இரவு பகலாக விளையாடுவதில் காட்டிய உற்சாகத்தை அவன் என்ன படிக்கிறான் என்பதில் செலுத்தவில்லை.

யு.கே.ஜி.முடித்து ஒன்றாம் வகுப்பு குமரி மாவட்டத்தில் பத்மநாபபுரம் பள்ளியில். அங்கே சென்றபோது அவர்கள் சொன்னார்கள் பையன் சராசரிக்கும் மிகக் கீழே,அவனுக்கு எழுதவே வரவில்லை என. சோதித்துப் பார்த்தால் அது உண்மை.அவனுக்கு ஒன்றுமே தெரியாது. மெல்லமெல்ல அவனைப் பயிற்றுவிக்க முயன்றபோதுதான் மெல்லமெல்ல அதன் உள் விஷயங்கள் எனக்குத் தெரிந்தன. அஜிதனுக்கு சிறுவயதிலேயே இடது கைப்பழக்கம்.அதைப் பொதுவாகக் கவனித்திருந்தோம் என்றாலும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.அடிதடி,நுட்பமான வேலை என்றால் மட்டுந்தான் இடது கை. அவன் பள்ளியில் அவனை முரட்டுத்தனமாக வலது கைக்குப் பழக்கியிருக்கிறார்கள். அவன் அதற்கு ஒத்துவராதபோது அவனைத் தொடர்ந்து அடித்திருக்கிறார்கள். அந்தப் பள்ளி பாதிரிமார்கள் நடத்துவது. “டிசிப்ளின் இருந்தா எல்லாம் வந்திரும்சார்…” என்பார் அந்தப் பாதிரியார். கூட எப்போதும் கையில் கம்புடன் ஒரு கன்யாஸ்திரி.

சின்ன வயதில் மழலையர் பள்ளிக்குப் போகமாட்டேன் என்று அவன் தொடர்ந்து அடம்பிடிப்பான். அது சிறுவயதில் என் வழக்கமும் கூட. நான் ஐந்தாம் வகுப்புவரை அடம் பிடித்தவன். “நீ..இப்டி ராப்பகலா அவன்கிட்டே கொஞ்சிக் குலவினா அவன் எப்டி ஸ்கூலுக்குப் போவான்..?” என்று அருண்மொழி சொல்வாள். அதற்காக அவனைக் கொஞ்சாமல் விடமுடியுமா? நான் அவனிடமிருந்து புதிதாகக் கற்றுக்கொண்டே இருந்த நாட்கள் அவை. “இப்டி பையன்கிட்டே பேசிட்டே இருக்கக்கூடாது சார்…அப்றம் அவங்க செல்லம் கொஞ்ச ஆரம்பிக்சிருவாங்க” என்றார் பக்கத்து வீட்டுக்காரர்.“கொஞ்சிட்டுப்போறான் சார்” அதை அப்போது அப்படித்தான் எடுத்துக்கொண்டிருந்தேன். ஆனால் அவன் மனதில் பள்ளிக்கல்வி பற்றி மிக ஆழமான ஒரு கசப்பை, எதிர்ப்புணவர்வை அந்த மழலையர் பள்ளி உருவாக்கியிருந்தது.

நான் அவனை மீண்டும் இடது கைக்கு மாற்ற முயன்றேன். அது இன்னும் சிக்கலை உருவாக்குகிறது என்று தோன்றவே விட்டு விட்டேன். வலது கைக்குப் பழகிவிட்டிருந்தான். ஆனால் எழுத்துகள் மிக மிகச் சிக்கலாக இருக்கும். ஆச்சரியமாக சிலசமயம் அப்படியே கண்ணாடிப்பிம்பம் போலவே முழு வார்த்தையையும் எழுதிவிடுவான். அவனைப் பயிற்றுவிக்க முயலும் தோறும் அவனுக்குப் பீதியும் விரக்தியும் ஏற்பட்டது. முதல் பத்து நிமிடங்களுக்குப் பின் அப்படியே மூளை ஸ்தம்பித்து விடும். அதன் பின்னர் ஒரு சொல் கூட கற்பிக்க முடியாது.

சுந்தர ராமசாமியிடம் இதைப் பற்றி சொன்னேன். “நீங்க டீச் பண்ணாதீங்கோ..பிள்ளைகளை டீச் பண்றதுக்கு சுத்தமா தகுதியில்லாத ஆள் அவங்க அப்பதான்..இப்ப உள்ள தேவை ஏபீசீடீ சொல்லிக் குடுக்கிறது. நீங்க அவன் எதிர்காலத்தைப் பத்தி கவலைப் பட்டு அவன்மேலே ஏறி உக்கார டிரை பண்ணுவீங்க…டியூஷன் வைங்க..அப்டியே விட்டிருங்க..செடிகள்லாம் பாளையையே மீறி வளந்திருது..குழந்தைகளுக்கு எல்லாத்தையும் தாண்டி வளரக் கூடிய உயிர்ச்சக்தி இருக்கு…?” என்றார்.

அப்போது ஆரம்பித்த டியூஷன். ஆனால் டியூஷன் ஆசிரியர்கள் என்னைத்தெருவில் பார்த்தால் புலம்புவார்கள். “இ-ங்கிற எழுத்தை மட்டும் ஒரு ரெண்டாம் கிளாஸ் பையனுக்கு ஒரு வாரமாச் சொல்லித் தாறேன் சார்..என்ன சார் சொல்றது?“ அவன் எப்படியோ ஒன்றைக் கற்றுக்கொண்டான். மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகளின் சில பாவனைகள். இதை எங்கோ அவன் கவனித்திருக்க வேண்டும். ஆசிரியைகள் எது சொன்னாலும் வாயை ஒருமாதிரி காட்டுவான். மண்டையை உருட்டுவான். அவர்கள் மெல்லமெல்ல அவனை அடிப்பதை நிறுத்தவே அதைத் தொடர ஆரம்பித்தான். ஆனால் இது வெளியேதான். வீட்டில் அவன் அசாதாரணமான சுட்டி. அவனுடைய நகைச்சுவை உணர்வையும் சாகசத்தன்மையையும் நான் ஒவ்வொரு கணமும் வியந்துகொண்டிருந்தேன்.

இரண்டாம் வகுப்பு ஆசிரியை என்னிடம் சொன்னாள். “சார்..பையனுக்கு எதாவது டிரீட்மெண்ட் எடுங்க சார்..பொறவு சொல்லலேண்ணு சொல்லப்பிடாது“ அடிவயிற்றைக் கவ்விய அச்சத்துடன்“என்ன மேடம்?” என்றேன். “அவனுக்கு பிரெய்ன் குரோத்ல என்னமோ பிரச்சினை இருக்கு சார்..”நான் கடும் சினத்துடன் “சும்மா எதாவது சொல்லி அவன் வாழ்க்கையை கெடுத்திராதீங்க..அவனுக்கு ஒண்ணுமில்லை.கைமாறி எழுதவச்சதினால கொஞ்சம் எழுத்து மோசமா இருக்கும். அதுக்காக?”என்றேன். எனக்குக் கண்ணீரே வந்துவிட்டது.“நாங்க சொல்லியாச்சு..இனி எங்கமேலே பழி சொல்லக்கூடாது..” “ஏய்..இனி இந்தப்பேச்சை எவளாவது எடுத்தீங்கண்ணா வெட்டிப்போட்டிருவேன்…” என்று தெருவில் நின்று கூவினேன். பையனை அணைத்தபடி கிட்டத்தட்ட ஓடினேன்.

அருண்மொழியிடம் சொன்னபோது அவள் கதறிவிடடாள். ஒன்றும் தெரியாமல் அஜிதனும் அழுதான். அவனையே பார்த்தேன். உண்மையிலேயே மூளைத்திறனில் ஏதாவது சிக்கலா? வீடு முழுக்க புத்தகங்கள். இரவுபகலாக புத்தகம் பார்க்கும் புத்தகப் பிரியன்  அவன். அந்த வயதிலேயே நான் அவனுக்கு பலநுாறு கதைகளைச் சொல்லியிருந்தேன். கணிசமான கதைகளை அவனே மீண்டும் சொல்வான். மொத்த ராமாயண, மகாபாரதத்தையே அவனுக்கு நான்கு நான்கு மணிநேரம் வீதம் சொல்லி கேசட்டில் பதிவு செய்து வைத்திருந்தேன்.(அதில் “தசரதனுக்கு நாலு மனைவில..மனைவீண்ணா..” என நான் இழுக்க “எங்க அம்மா உனக்கு மனைவி தானே..மேலே சொல்லு” என அவன் மழலையில் சொல்லும் இடம் என் நண்பர்களால் மிக விரும்பப்பட்டிருந்தது).மந்தபுத்தி என்று சொல்லும்படி என்ன இருக்கிறது? ஒருவேளை வளரவளரத்தான் தெரியுமோ? ஒன்றும் புரியவில்லை.

சிலநாட்கள் கழித்துதான் அவன் பள்ளியில் அப்படி நடிப்பதைக் கண்டு பிடித்தேன். ஆனால் அது அவனுக்கே தெரியாது. அவனுக்கு எல்லா மிஸ்ஸீம் “கெட்டமிஸ்“, “தடிச்சி மிஸ்“தான். ஆசிரியர்கள் அவனை மனமார வெறுத்தார்கள். அவனது கல்வி வாழ்க்கையில் அவனை விரும்பிய ஒரு ஆசிரியரை ஒன்பதாம் வகுப்பு வரை அவன் காண நேர்ந்ததில்லை. எல்லா பாடங்களிலும் அவனுக்குச் சிவப்பு மைதான். எப்போதோ ஒருமுறை எழுபது மதிப்பெண் கணிதத்துக்கு வாங்கியது தவிர்த்தால் அவன் எப்போதுமே தேர்வுகளில் வென்றதில்லை. அவனது வகுப்புப் பாட நுால்கள் எழுதப்படாமலிருக்கும். அவற்றை, ஆசிரியர்கள் அவனை அடித்து வதைத்துப் பார்த்தபின் வேறு பையன்களை வைத்து எழுத வைப்பார்கள். அந்த எழுத்துகளை இவனது எழுத்துகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து அருண்மொழி கண்ணீர் விட்டு அழுவாள்.

ஆனால் மூன்றாம் வகுப்ப முதல் அவன் பெரும் வாசகன். ஒரே இரவில் சிவகாமியின் சபதத்தை வாசிக்கும் போது அவன் ஐந்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான். அப்போது தமிழுக்கு அவனுக்கு நுாற்றுக்கு பூஜ்யம் மதிப்பெண் அளித்தாள் ஆசிரியை. சோவியத் ருஷ்ய வெளியீடுகளான அறிவியல் நுால்களை இரவு பகலாகப் படிப்பவனுக்கு அறிவியலில் ஒரே பாடத்தில் ஒரே வினாவைக்கூட எழுதத் தெரியவில்லை. முனைவர் ஏ.கே.பெருமாளின் அத்தனை வரலாற்று நுாற்களையும் ஆறாம் வகுப்புக்குள் அவன் வாசித்திருந்தான், வரலாற்றில் ஒருபோதும் இரட்டை இலக்க மதிப்பெண் வென்றதில்லை.

வீட்டுக்கு வந்திருந்த நண்பர் பாவண்ணனிடம் புலம்பியபோது அவர் சொன்னார். “தம்பிக்கு அறிவில்லண்ணா அறிவான பிள்ளைகளே உலகத்திலே இல்லைண்ணு அர்த்தம்…அவனுக்குச் சொல்லிக் குடுக்க டீச்சர்களால முடியலை..கவலைப்படாதீங்க..அவனே படிப்பான்..”முதல் பிரச்சினை எழுத்துதான். ஃபூக்கோ சொல்லியிருக்கிறார் என்று நினைவு.நம் பண்பாட்டில் முதலில் குழந்தையின் விரல்களுக்கு ஆக்ரோபேடிக்ஸ் சொல்லிக்கொடுக்கிறோம் என. அதைக் கற்காமல் உலகமே அவனுக்கு இல்லை. எழுத முடியாமையில் இருந்து உருவான கசப்பு காரணமாக பள்ளிமேலேயே கடும் துவேஷம்.

அதன்பின் நாகர்கோயிலில் புகழ்பெற்ற கிறித்தவப் பள்ளியில் அவனைச் சேர்த்தோம். அவன் வாழ்க்கையை நரகமாக்கியது அந்தப் பள்ளி. கூடவே என் வாழ்க்கையையும். அனேகமாக தினமும் குற்றவாளியை நடத்துவது போல நடத்துவார்கள். மணிக்கணக்காக யார் யாருக்காகவோ காத்திருக்க வேண்டும். முதலில் ஃபாதர், அவரிடம் அனுமதி பெற்றபின் ஸிஸ்டர். அவர் சொன்னபின் வகுப்பு ஆசிரியை. அதன் பின் பாட ஆசிரியை. ஒவ்வொருவரும் எனக்கு உபதேசங்கள் அளிப்பார்கள். வசைபாடுவார்கள். மிரட்டுவார்கள். என் இதுநாள் வரையிலான வாழ்க்கையில் நான் மிக அதிகமாக எங்காவது அவமானமும் சிறுமையும் பட்டிருக்கிறேன் என்றால் அந்தப் பள்ளியில்தான்.

அஜிதனை அவன் ஒரு உதவாக்கரை என்றும், முட்டாள் என்றும் முழுமையாக நம்பச் செய்தது அந்தப் பள்ளி. அந்தப் பள்ளி அளித்த அழுத்தம் காரணமாக நானும் அக்காலத்தில் அவனிடம் சற்றே கடுமையாக நடந்துகொண்டேன். நாலைந்துமுறை அவனை அடித்திருக்கிறேன். “முன்னேற்ற”சீட்டைத் துாக்கி வீசியிருக்கிறேன். புத்தகங்களைக் கிழித்து எறிந்திருக்கிறேன். அதன்பின் அவனை அணைத்து கண்ணீருடன் சமாதானம் செய்வேன். இரவில் துாங்கும் அவனைப் பார்த்தபடி நிற்பேன். என் தந்தைக்கு நான் கடுமையான மன உளைச்சல்களை அளித்திருக்கிறேன். ஆன்மீகத்தேடல் அது இது என்று வீட்டை விட்டு ஓடியிருக்கிறேன். என்னைப் பிரிந்தபோது அவர் மனம் உடைந்து பலநாட்கள் ஆஸ்பத்திரியில் கிடந்திருக்கிறார். அந்தப் பாவம்தான் என்னைத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறதா என மனம் ஏங்கும்.

அவன் ஆறாம் வகுப்பு படிக்கும்போது ஒருநாள் என் கழுத்து வலிக்காக காயத்திருமேனி எண்ணையைப் போட்டு நீவி விட அவனிடம் சொன்னேன். நான் குப்புறக் கிடக்க அவன் என் மீது அமர்ந்திருந்தான். அருண்மொழி அவ்வழியாகச் சென்றாள். என்னிடம்,“ஏன், சொல்லியிருந்தா நான் போட்டுவிடமாட்டேனா?” என்றாள். “இதில போட்டிருக்கு..உலகத்திலேயே நமக்கு யாரை ரொம்ப பிடிக்குமோ அவங்கதான் போட்டு விடணும்னு..” என்றேன்.

 சட்டென்று முதுகில் கண்ணீர் சூடாக விழுவதை அறிந்தேன். எழுந்து பார்த்தால் அழுதுகொண்டிருந்தான். “என்னடா? என்னடா?” என்றேன். பதில் சொல்லாமல் குறுகி அமர்ந்து அழுதான். “என்னடா..?” என்று கேட்டபோது “உனக்கு நெஜமாவே என்னைய ரொம்ப பிடிக்குமா?” என்றான். “என்னடா இது முட்டாத்தனமா கேட்டுட்டு..அப்பாக்கு உலகத்திலேயே உன்னைத்தான் ரொம்பப் பிடிக்கும்…இதுகூடத் தெரியாதா உனக்கு?” என்றேன். அப்படியே சீறல்போன்று ஒலி எழுப்பி அழுதான். “நான் நெனைச்சேன், உனக்கு என்னைப் பிடிக்கல்லேண்ணு..நீ பெரிய ஆளு..புக்கெல்லாம் எளுதறே..காலேஜ் சாரெல்லாம் உன்னைத் தேடி வராங்க…நான் மக்குதானே..எனக்கு ஒண்ணுமே தெரியல்ல..அதான் நீயும் அம்மாவும் என்னை அடிக்கறீங்க..நான் இனிமே ஸ்கூலுக்குப் போகல்லை…என்னைய ஓட்டலிலே சேத்துவிடு..நான் கஷ்டப்பட்டு வேலை செஞ்சு ரூபா கொண்டுவந்து அம்மாட்ட கொடுப்பேன்..”

அந்த நிமிடத்தில் என் நெஞ்சு பொங்கியதை இப்போதும் கை நடுங்காமல் எண்ண இயலவில்லை. எப்போதோ அந்த ஓட்டல் பேச்சு அருண்மொழி வாயில் வந்திருக்கிறது. –படிக்காவிட்டால் ஒட்டல் வேலைக்குத்தான் போக வேண்டும் என்று.அப்படியே அவனை அணைத்துக்கொண்டேன்.

“நீ மக்குன்னு யாருடா சொன்னா?”..” எங்க மிஸ் எல்லாருமே சொல்றாங்க..அம்மாவும் சொன்னாங்க..நீ கூட சொன்னே..” நான் அவனை அணைத்து “நீ மக்குன்னா உலகத்திலேயே யாருமே புத்திசாலி இல்லை…அப்பா உன் மேல உள்ள ஆசையிலதானே அப்டி சொன்னேன்”என்றேன்.

அன்று அவனிடம் வெளியே கூட்டிப்போய் பேசினேன். நான் ஒரு மாணவனாக எத்தனை கொடுமைப்படுத்தப்பட்டேன் என்று சொன்னே். என்னை பெரும்பாலான ஆசிரியர்கள் வெறுத்தார்கள். அடித்தார்கள். எனக்குக் கணக்கு கொஞ்சம்கூட வரவில்லை. என் அப்பா என் விருப்பத்தை மீறி என்னை வணிகவியல் பாடத்தில் சேர்த்தார். நான் அதில் ஒரு முறை கூடத் தேர்ச்சி பெறவில்லை. படிப்பை முடிக்கவும் இல்லை.

“எங்க அப்பாட்ட பணம் இல்லை. அதனால பயப்பட்டார். நான் அப்டி இல்லை. பணம் வேணும்னா அதை நான் சம்பாதிப்பேன். அதனால் நீ இனிமே உனக்குப் பிடிச்சதை மட்டும் படி..உனக்கு வேண்டிய பணத்தை நானே சம்பாதிக்கிறேன்” என்றேன். “இனி மூணுமாசம் . இந்தப் பள்ளிக்கூடத்திலே இருந்து உன்னைக் கூட்டிட்டுப் போய் கவர்மெண்ட் ஸ்கூலிலே சேக்கிறேன்..அங்க உங்கிட்ட யாருமே படிக்கச் சொல்ல மாட்டாங்க..நான் இனி ஒருமுறைகூட உங்கிட்ட படிக்கச் சொல்லமாட்டேன்..மார்க் என்னன்னே கேட்க மாட்டேன்..இனிமே உன்னை யாருமே படிப்பு விஷயமா திட்ட மாட்டாங்க போருமா?”

மறுவருடம் அரசினர் பள்ளியில் சேர்த்தபோது நண்பர்கள் எதிர்த்தார்கள். நீலகண்டன் அரவிந்தன் “நீங்கள் உணர்ச்சிவசப்படுறீங்க…இதெல்லாம் அப்டி முடிவுசெய்ற விஷயம் இலலை” என்றார். வசந்தகுமார் மட்டும்தான் “சேர்த்து விடுங்க ஜெயன். படிப்பு வரலேண்ணா என்ன, போராடி ஜெயிக்கிற புத்தி வரட்டும்” என்றார்.

ஏழாம் வகுப்பு முதல் அரசாங்கப் பள்ளி. அப்பள்ளி அவனுக்குக் காட்டிய உலகமே வேறு. வீட்டில் சாப்பாடு இல்லாமல் பையன்கள் மதியம் சாப்பிடாமல் பசித்திருப்பார்கள் என்ற தகவல், அவன் தனிமையில் பல நாட்கள் பல மாதங்கள் கொந்தளிக்கச் செய்திருக்கிறது. தனிமையில் அதை எண்ணி அவன் கண்ணீர் விட்டிருக்கிறான். அவனது சக மாணவர்கள் சனி ஞாயிறில் கூலிவேலைக்குச் சென்று வருவார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளவே அவனுக்கு கஷ்டமாக இருந்தது. பெரும்பாலான நாட்களில் அவன் கொண்டுபோகும் சாப்பாட்டை பையன்கள் சாப்பிட அவன் சத்துணவாக அளிக்கப்படும் உணவை உண்பான். மீன், இறைச்சி கொண்டுபோகும் நாட்களில் பெரிய டிபன் கேரியர் நிறைய கொண்டு சென்றாக வேண்டும். எங்கே முத்தாரம்மன் கோயிலில் கஞ்சி ஊற்றினாலும் பையன்களுடன் சேர்ந்து போய் சாப்பிட்டுவிடுவான். அவனைப் போன்ற பையன்கள் வளரும் பருவத்து வயிற்றின் தீவிரத்தால் அலைவதை அவனே அவர்களுடன் வாழ்ந்து கற்றான். நானே ஒருமுறை அவனை ஒரு அன்னதான வரிசையில் அமர்ந்திருப்பதைக் கண்டேன்.

புதிய பள்ளி அவனுக்குக் நண்பர்களை அளித்தது. நண்பர்கள் அவனுக்குத் தன்னம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்தார்கள். பள்ளிக்கு மகிழ்ச்சியாகச் செல்லும் அஜிதனை முதல் முறையாகக் காண ஆரம்பித்தோம். அவன் படித்த கிறித்தவப் பள்ளியில் பள்ளிக்குள் நுழைந்த மறு கணமே வரிசை உருவாகிவிடும். எப்போதும் ஆசிரியர்களின் கண்காணிப்பு இருக்கும். விளையாட்டுகூட விளையாட்டு ஆசிரியரால் அளிக்கப்படும் ஒரு பயிற்சி மட்டுமே. ஒருவரோடு ஒருவர் பேசுவதும் சிரிப்பதும் கடுமையான குற்றம் அங்கே. அத்தனை வருடங்கள் அத்தகைய பள்ளிகளில் படித்தும்கூட அவன் நட்பு என்றால் என்ன என்று அறிந்தது இல்லை. அதைவிட மோசமான விஷயம், நட்பு என்றால் தவறு என்றே கற்பிக்கப்பட்ட குழந்தைகள் அங்கே படித்தார்கள். அந்தஸ்து, சாதி, மதம் நோக்கி கணக்கிட்டே நட்பு கொள்ள வேண்டும் என்று அங்குள்ள குழந்தைகளுக்குச் சொல்லப்பட்டிருந்தது.

இதை ஒரு கொள்கையாகச் சொல்லவில்லை. இப்போதெல்லாம் எனக்கு கொள்கை என்றாலே பயமாக இருக்கிறது. பள்ளிக்கல்வியை இப்போது நேர் பாதிக்கு மேல் நாம் பாதிரிமார்கள் அல்லது துறவியர் கையில் ஒப்படைத்திருக்கிறோம். அவர்கள் அதற்கான தகுதி கொண்டவர்கள்தானா என்றே எனக்கு ஐயமாக இருக்கிறது. பொதுவாகவே அவர்கள் உலக நிராகரிப்பை இயல்பாகக் கொண்டவர்கள். உற்சாகம்,உயிர்த்துடிப்பு அனைத்தையும் அவர்கள் மீறல்களாகவே காண்கிறார்கள். கொஞ்சம் கூட படைப்பூக்கம் அவர்களிடம் இருப்பதில்லை. அவர்களின் உலகம் “கூடாதவற்றின் தொகை”. அவர்களின் ஞானம் என்பது விலக்குகளின் பட்டியலே. அவர்களிடம் புத்துலகம் நோக்கி உற்சாகமாக மலர்ந்தெழ வேண்டிய குழந்தைகளை நாம் ஒப்படைக்கலாமா? அவர்களின் பள்ளியில் பயின்ற மாணவர் ஒரு “பயிற்றுவிக்கப்பட்ட” மூளையாக ஆகலாம். லௌகீகமாக வெல்லலாம். ஆனால் அவன் இழப்பவை அவன் அடைவனவற்றை விடப் பல மடங்கு அதிகம் அல்லவா?

இப்போது அந்தப்பள்ளியில் ஆசிரியை வகுப்பில் இல்லாதபோது மாணவர்களைக் கண்காணிக்க “குளோஸ்டு சர்க்யூட்“ காமிராக்களைப் பொருத்தியிருப்பதாகவும், அதைச் சொல்லியே பெற்றோர்களைக் கவர்வதாகவும் சொன்னார்கள். நம்பவே முடியவில்லை. கண்காணிப்பின் அடக்குமுறையைப் பற்றி எழுதிய பூக்கோ இங்கேவந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த அரசுப்பள்ளியில் எல்லாமே கட்டற்றுதான். சட்டை கிழியாமல் அஜிதன் பள்ளி விட்டு வரும் நாட்கள் குறைவு. சண்டைகள் சச்சரவுகள். அதைவிட தீவிரமான நட்புகள். பரீட்சைக்கு முந்தைய நாள் இரவில் கூப்பிட்டு பொங்கும் பேரார்வத்துடன் ஸிலபஸ் என்ன என்று கேட்கும் சக மாணவன் அஜய்குமார்தான் அஜிதனின் உயிர்நண்பன். ஒருவனின் பையில் இருந்து பணத்தைப் பிடுங்கி இன்னொருவன் சாப்பிடலாம். “எங்க வீட்லே அம்மை தேங்காத் தொவையலையே போட்டு கழுத்தறுக்கிறாடா. பணமில்ல பாத்துக்குா..உங்கம்மைட்ட நல்ல கோழியா குடுத்தனுப்பச் சொல்லு” என்று எந்தவிதமான கூச்சமும் இல்லாமல் சொல்லியனுப்பலாம். இந்த உலகமே வேறு. அஜிதனுக்கு அழுக்கில்லா சீருடை அணிந்து போகும் “கான்வெண்ட்“ பையன்கள் மேல் உள்ள இளக்காரமும் நக்கலும் சாதாரணமல்ல. “என்னடா பண்ணுவீங்க?” “கொடுமைல்லாம் ஒண்ணும் பண்றதில்லே அப்பா..டேய், இங்கவாடான்னு கூப்பிட்டு மண்டையிலே ஒரு தட்டு தட்டி அனுப்பிருவோம். முறைச்சான்னா மட்டும்தான் அடி.”

ஆனால் நான் அவனைக் கைவிட்டுவிட்டதாக நண்பர்கள் சொன்னது தவறு என நானறிவேன். அவனுடன் எப்போதும் பேசிக்கொண்டே இருந்தேன். அவன் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருந்தேன். அது ஒரு கடமையாக அல்ல. உண்மையிலேயே பையன்களின் உலகம்போல உற்சாகமான ஓர் உலகம் வேறு இல்லை. நகைச்சுவை உணர்வு கொண்ட அஜிதனைப்போன்ற ஓர் பையனின் உலகம் குமிழியும் கொப்பளிப்புமான ஒன்று (ஒரு டீம் பையன்க அவனுகளுக்குள்ள பேசறது வேற லேங்வேஜ் அப்பா…அதில் ஒருத்தனை தனியா கூப்பிட்டேன். சின்னப்பையன். “டேய் என்ன பாசைடா பேசறீங்க?”ன்னு கேட்டேன். அதுக்கு அவன் “தெலுங்கு டப்பிங் அண்ணா“ன்னு சொல்றான்)

மேலும் அவனிடம் நான் எதைவேண்டுமானாலும் பேசலாம். அத்வைதத்துக்கும் விசிஷ்டாத்வைதத்துக்கும் உள்ள வேறுபாடு. தல்ஸ்தோய் ரயில் நிலையத்தில் இறந்ததில் உள்ள குறியீட்ட அர்த்தம். வீட்டுக்கு தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும் பேராசிரியர்கள், விமரிசகர்கள், ஆய்வாளர்கள் அனைவருக்கும் அவனைத் தெரியும். அவர்கள் பேசுவது அவனுக்கப் புரியும் என்று அவர்கள் அறிவார்கள். அவன் கேட்டு அறிந்து வளர்வது ஓர் அறிவார்ந்த உலகம். அவனது மோகமே அதில்தான். “தோளுக்குமேலே வளர்ந்தா தோழன்னு சொல்றாங்களே அப்பா” ” ஆமாடா..அது ரைட்டுதான்…” ”அப்றம் சொல்லு மச்சி..” என்பது அவன் பாணி. “என்னடா சினிமாக்குப் போனியா?” என்று ஒருநாள் விளையாட்டாக கேட்டேன். “இந்த பார். நான் போனா உன்னால இந்த ஜென்மத்திலே கண்டுபிடிக்க முடியாது…நீயே ஒரு தத்தக்காபித்தக்கா எங்க போனாலும் நான் கூட்டிட்டுபோகணும் உன்னை..சினிமாவுக்குப் போகல்லை..தெரியாம போக மாட்டேன் போருமா?”

ஒரு கட்டத்தில் அஜிதனுக்குப் புனைகதைகளில் ஆர்வம் போய் இயற்கையியலில் ஆர்வம் பிறந்தது. அதற்கு முதற்காரணம் சு.தியோடோர் பாஸ்கரன். இரண்டாம் காரணம் அ.முத்துலிங்கம். அது தீயாகப் பற்றிக்கொள்ள அதிலேயே நாட்கள். பறவைகளைப் பார்ப்பது “லைஃப் லிஸ்ட்“ தயாரிப்பது(117) அதைப்பற்றிய நுால்களைச் சேகரிப்பது என ஒரு உக்கிரமான பொழுது போக்கு பற்றிக்கொண்டது. “நேஷனல்  ஜ்யாக்ரஃபிக் சேனலில் ஒரு நிகழ்ச்சிக்குப் பிறகு பெயர்கள் ஓடிக்கொண்ட்டிருந்தன. “எவ்ளவு பேரு..“என்றேன். “அந்த லிஸ்டுல ஒரு நாள் ஜெ.அஜிதன் பேரும் இருக்கும்” என்றான். பிறகு சிறிய சிரிப்புடன் “அந்த ஏரியால உள்ளவங்க யாருக்கும் ஜெயமோகன்னா யாருண்ணே தெரிஞ்சிருக்காது….அய்யாதான் பெரிய ஆளு அங்கே.”

ஒரு கனவு உருவாகி விட்டிருப்பதை நான் கண்டேன். வெற்றியும் தோல்வியும் காலத்தின் அளவிலா ஆட்டத்தில் எங்கோ எப்படியோ தீர்மானமாகிறது. ஆனால் இதே வயதில் என்னை அலைக்கழித்தது இதேபோன்ற ஒரு பெருங்கனவுதான். உக்கிரமான மின்சாரம் ஓடும் கம்பிபோல என்னை அது தகிக்க வைத்தது அன்று. அந்தத் தகிப்பைக் கண்டேன். இளமைக்கு அழகு அத்தகைய கனவுதான்.

அவன் படிப்புமீது கவனம் செலுத்துவதாகவும் அதற்குக் காரணம் அந்தக்கனவே என்றும் அருண்மொழி சொன்னாள். வாக்குறுதியின்படி நான் மதிப்பெண்களைக் கவனிப்பதில்லை. சிலமாதம் முன்பு சொன்னா் “இப்ப நீ வேணுமானா மார்கைப் பார்க்கலாம்.“ “ சிரித்தபடி வேண்டாம்” என்று பேனாவை மூடினேன்.

ஒன்பது மணிக்கு இணையத் தொடர்பு மூலம் தேர்வு முடிவுகளைப் பார்த்தேன். அருண்மொழி பதற்றமாக இருந்தாள். அவனும் பதற்றமாகவே இருந்தான். நான் பதற்றமில்லை என்று சொல்லிக்கொண்டேன். மதிப்பெண்கள் ஐநுாறுக்கு நானுாற்று அறுபது. 92 சதவீதம். கணிதத்தில்99. அறிவியலில் 97. மதிப்பெண்கள் குறைந்தது தமிழில்தான். கையேழுத்து காரணமாக. “அப்பா உன் மூஞ்சியிலே கரிய அள்ளிப் பூசிட்டேன்ல?” என்றான் சிரித்தபடி. “ஆமாடா” என்றேன். ”சும்மா ஜாலியாச் சொன்னேன்பா..உனக்காகத்தானே நான் படிச்சதே”

சாயங்காலம் அ.கா.பெருமாள் வந்தார்.“நல்ல மார்க்..இனி எதுக்கு சர்க்கார் ஸ்கூல்? பேசாம கான்வெண்டிலே சேருங்க” என்று பல பக்கங்களில் இருந்தும் உபதேசங்கள் வந்தன என்பதை அவரிடம் சொன்னேன். “அதுபின்னே நம்மாளுக புத்தி அப்டித்தானே போகும்?” என்றார்.

ஆனால் இப்போது இதெல்லாம் நாம் சொல்லும் இடத்தில் இல்லை. அஜிதன் அவனே போய் அரசுப்பள்ளியில் தலைமையாசிரியரைப் பார்த்து விண்ணப்ப படிவமே வாங்கி வந்துவிட்டான். “ஃபஸ்ட் குரூப் கெடைக்குமா?” என்றான். “கெடைக்குமாவா? கூப்பிட்டு உக்கார வச்சு குடுப்பாங்க…” என்றார் அ.கா.பெருமாள். “பிள்ளைகளுக்கு மார்க் இருந்தாலே பெத்தவங்களுக்கு ஒருகெத்து தான்”

நாளை மறுநாள் மதிப்பெண் அட்டை கிடைக்கும். அதற்கு அடுத்த நாள் சேர்த்துவிட வேண்டும். நான் “நீ போனால் போதாதா அருணா?” என்றேன். அஜிதன் “இல்லப்பா நீ வரணும்…நீ தான் வரணும்..” என்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *