கொற்றவை – வாசிப்பனுபவம்

பெருநாவல்கள் முதன்மையாக அளிப்பதென்ன? தனிமனிதன் என்ற எண்ணத் தீவிரத்தின் முன் பெருங்கடல் நீரின் ஒரு துளி என்றும், பெருங்காட்டின் விரிவில் ஒரு சிறு இலை என்றும், பெரும்பாலையின் நிறைமணலில் ஒரு துகள் என்றும் உணர செய்வதுதான் என்று தோன்றுகிறது. இங்கு கடந்தும் எதிர்நோக்கியும் விரிந்திருக்கும் வரலாற்றின் ஒரு துளியாக எஞ்சி இருக்கும் அந்த மனநிலையை அடைந்து கொண்டே இருக்கும் கணங்கள் அச்சத்தின் நுனி முனையை உரசி அதே விரைவில் நிறைவின் நுனியையும் அடைந்து திகைக்க வைக்கிறது. இது ஒரு அடிப்படை என்று கொண்டால், இதன் அடுத்த நிலையில் உணரப்படும் இணைவை கூறலாம். எங்கோ மொழி அறியா தொல் காலத்தில்  ஏதோ பெயரிடப்படாத ஒரு மலை முகட்டில் மேலிருந்து இடிந்து விழும் மழையையும், பின்னர் அடர்ந்து நிறைந்திருக்கும் காட்டையும், முன்னர் தொலைவின் கணக்கறியா அலைந்து கொண்டிருக்கும் கடலையும் ஊன் விழி கொண்டு வெறித்தும் மண்ணில் ஊன்றி நின்றிருக்கும் அந்த தொல் மனிதனின் அக ஆழத்துடன் ஒரு நீள் சரடென இணைவு கொண்டிருக்கும் நான், என்ற பேருணர்வு. அங்கே அக விழி கொண்டு அவனும் இங்கே அக விழி கொண்டு நானும் மிக அண்மையில் விழி விரிந்து பார்த்து கொண்டிருக்கிறோம். அந்த புரிதலில் இணைக்கப்பட்டிருக்கும் சரடை பற்றியிருக்கும் அத்தனை மானுட விரல்களையும் நான் என்றே உணர்கிறேன். மேல் சென்று, அனைத்தும் ஒன்றே என்று உணர்தல் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

கொற்றவை என்ற பெருநாவல் அவ்வாறான ஒரு ஆழத்தில் இருந்து தொடங்குகிறது. நீர் என்று பெயரிடப்பட்டிருக்கும் முதல் பகுதி தொல் குடி உருவாகி வந்த வரலாறும் அதே நிகழ்வில் ஏற்கனவே ஆழத்தில் உறைந்திருக்கும் தெய்வங்களை அவர்கள் கண்டடைந்த வரலாறும் ஒரே சேர எழுந்து வருகிறது. அவர்கள் பேரச்சம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவ்வாறே இருக்க முடியும் என்று தோன்றுகிறது. அந்த அச்சமே அவர்களை கூர் நோக்கி உள் நோக்கவும் செய்கிறது. அதில் இருந்து தலைவன் உருவாகி எழுந்து வருகிறான். அவன் மேலும் உள் நோக்கி தெய்வத்தை கண்டடைகிறான். காலத்தின் மீளா சுழலில் அவனே தெய்வமும் ஆகிறான். ஆனால், அத்தனை குடிகளின் ஆதி தெய்வம் அன்னையே. அவள் ஒரு கன்னி. கடற்கோள் கொண்டு அழிந்து அவர்கள் ஒவ்வொரு முறை தென்னாடு நோக்கி நகர்ந்து நகரம் வடித்து வாழ்ந்தாலும், அவர்கள் துயிலில் எழுந்து வரும் கனவுகளில் அந்த கன்னி உறைந்திருக்கிறாள். விழவின் போது ஒரு சிறு கன்னியின் உள் சன்னதம் கொண்டெழும் அவள், அவர்கள் அறியா அல்லது மறந்துவிட்ட தொல் மொழி கொண்டு வாக்கிடுகிறாள். இந்த சன்னதம் நாவல் முழுவதும் வருகிறது. அத்தனை உருமாற்றம் கொண்ட அன்னையரும், அந்த தொல்மொழி எழும் நாக்கின் வழியாக ஒன்றே என்று உணர செய்து கொண்டே இருக்கின்றனர். அவர்களின் துணை கொண்டு குடிகள் அச்சத்தை விடுத்தும் பின்னர் வேறொரு அழிவில் அதை வெறிகொண்டு பற்றி கொண்டும் அவள் முன் மீண்டும் மீண்டும் நிற்கின்றனர். தன் குருதி அளித்து அவளை வணங்கி மீள்கின்றனர். அத்தனை குருதி கொண்டும் விடாய் அணையாமல் அவள் எங்கோ தொலைவில் நீரின் ஆழத்தில் அமிழ்ந்து  போன பொன்னகரத்தில் விழிவிரிய உறைந்திருக்கிறாள் அன்னை.

இரண்டாவது காற்று. கதை தொடங்கும் இடம் இங்கே. கண்ணகியின் பிறப்பும், கோப்பெருந்தேவியின் பிறப்பும், கோவலன் பிறப்பும் கூறி கதை ஊர்ந்து பெரும்பாலும் கோவலனை சார்ந்து நகர்கிறது. ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்ற கூற்றின் முதல் பொறி இங்கே நிகழ்கிறது. அவன் மாபெரும் வணிகனின் மகன் என்ற பொழுதும், இளமையில் இருந்தே அவன் கணக்கில் குழம்பியவனாகவே இருக்கிறான். அதன் விளைவாக அவன் வணிகம் தப்பி, மது கொண்டு பரத்தையர் வீடுகளில் அலைபவனாக இருக்கிறான். அவன் ஆழம் அவனது ஊழை நன்கு அறிந்தே உள்ளது. ஆனால், அவன் அறிவதில்லை. தான் யாரென்ற குழப்பம் மேலோங்கி அலைந்து கொண்டிருக்கும் வேளையில் அவன் தன்னை யாழின் இசையில் கண்டடையும் தருணம் ஒரு உச்சம். அவன் கண்ணகை என்ற கண்ணகியை மணந்து அவள் கண்ணகி ஆகும் தருணம் ஒரு ஊழின் தருணமே. அவனால் கண்ணகியை உள்நோக்கி அணுகமுடியவே இல்லை என்ற நினைக்கிறேன். முயலும்தொரும் விலகும் அவன் மனம் இயல்பாக மாதவியை கண்டடைகிறது. கூர்ந்து நோக்கினால், அவன் முன் சிறுபெண் என்று இருக்கும் கண்ணகி அவன் தேறி வந்திருக்கும் மரபின் வழியாக அடையும் பெண் என்ற உருவகத்தில் இருந்து என்றுமே வெளியே இருக்கிறாள். அவன் அதை பல்வேறு இடங்களில் பின்னர் கண்டு கொண்டாலும், அன்றே அவன் உள்ளத்தில் கண்டறிந்தே இருக்கிறான். மாதவி ஒரு கணிகை பெண் என்றாலும், அவள் கணவன் என்று கொண்டே கோவலன் பால் காதல் கொள்கிறாள். கோவலனும் தான் அறிந்த பெண்ணை இவளிடம் கண்டு கொள்கிறான். புணர்தல் என்ற ஒற்றை நோக்கு என்பது  விலகி அவர்களுக்குள் உருவாகி வரும் காதல் அழகிய உறவின் சான்றாக இருக்கிறது. வணிகம் இழந்து முடிவில் பொருள் இழந்து வாடி களைத்து திரிந்து கொண்டிருக்கும் பொழுதும் மாதவி அவனை விட்டுவிட சிறிதும் நினைக்கவில்லை. ஒரு மனைவியின் பண்பென்றே அதை கொண்டு அவள் அவனை அழைக்கிறாள். தன் நிலையறிந்து தன் காதல் துறந்து மாதவியை நிராகரிக்கும் இடம் துயரம் மிக்கது. இருந்தாலும் இத்தனை நாளும் தன் கொழுநன் வரவின் பொருட்டு காத்திருக்கும் கண்ணகியின் துயரம் முன் எத்துயரும் சிறிதே என்று தோன்றுகிறது. அவன் கண்ணகியிடம் மீண்டு, அவள் சிலம்பை மதுரை சென்று விற்று வணிகம் தொடங்கலாம் என்று இருவரும் ஊர்விட்டு கிளம்புவதும் இந்த பகுதி முடிகிறது. எங்கும் நிற்காமல் எங்கும் சிக்காமல் நிலையழிந்து சென்று கொண்டிருக்கும் காற்றை இங்கே நினைத்து கொள்வதற்கு அத்தனை பொருத்தங்களையும் கொண்டு முடிந்தது இந்த பகுதி.

மனிதகுலம் மரம் போன்று ஊன்றி எழுவதும் கிளை பரவி விரிந்து பரவுவதும் நிலம் பொருட்டே. அவன் நீரின் ஆழத்தை அஞ்சி மேலும் மேலும் நிலத்தை பற்றி கொண்டான். அதன் பொருட்டு வாளேந்தி குருதி கொடுத்தும், குருதி எடுத்தும் வாழ்ந்தான். அதன் அத்தனை சாத்தியங்களையும் கனவின் வழி கண்டு கொண்டான். பயிர் செய்தும், ஆநிரை மேய்த்தும், கிழங்கு அகழ்ந்தும் தன்னை வாழ்வித்தான். நெய்தல் கூட நிலம் என்ற வகைமையின் கீழ் வருவது அவன் நீருள் சென்று மீள்வதுனாலே. அவன் குடியும் உறவும் நிலத்திலேயே இருக்கிறது. அத்துணை கொடிய பாலையிலும் அவன் ஊன்றி இருப்பது தன் குடியின் பொருட்டே. நான்காவது பகுதி  நிலம். கண்ணகி ஒரு மனையாளாக கோவலனின் சிரம்பற்றி மாமதுரை நோக்கி துணிவின் துணை கொண்டு நகர்ந்தாலும், அவள் உள்ளம் ஒரு சிறு பெண்ணின் அளவே திறம் கொண்டது. ஆனால், அவள் கவுந்தியடிகளின் வடிவை கொண்டு துணை வரும் நீலியின் அணுக்கம் கொண்டதால், ஒவ்வொரு நிலத்திலும் தன்னை கண்டுகொண்டும் அறிதலை சேர்த்து கொண்டும் நகர்கிறாள். நீலி அளிக்கும் கண்கொண்டு அவள் பார்க்கும் அனைத்தும் அவளினுள் உறைந்திருக்கும் ஒன்றை மீட்டிக் கொண்டே வருகிறது. நீலி அவளில் அவள் சார்ந்த பெண்களின் நிலைகொண்டு சொல்லும் சொற்கள் எல்லாம் தெய்வங்களென உறைந்த பெண்களின் சொற்கள் போன்றே தோன்றியது. நிலங்கள் அனைத்திலும் தெய்வங்கள் நிறைந்திருக்கின்றன. குறிப்பாக பெண்தெய்வங்கள். அவர்களின் பின்கதைகள் அனைத்தும் முடிவிலா பெருகி இருக்கின்றன. அவை உருவாகும் ஊற்றுமுகம் ஒன்றே என்று தோன்றியது. நிலங்கள் பல கடந்தாலும், கண்ணகி தன் அணுக்கம் என உணரும் நிலம் பாலை என்றே நான் நினைக்கிறேன். அந்நிலத்தில் நுழையும் தருணத்தில் அவள் செந்நாய் ஈன்ற குட்டிகளை ஒரு அன்னை மனம் கொண்டு கொஞ்சி மகிழும் காட்சியில் இருந்து அதே செந்நாய் தன் குட்டி ஒன்றை தின்றுகொண்டிருக்கும் காட்சியை கண்டு உதிர்க்கும் ஒரு கோர சிரிப்பில் அவள் தன்னுள் வாழும் கொற்றவையின் முதற்கணத்தை அறிந்து கொள்கிறாள். அங்கு நிகழும் விழவின் பொருட்டு ஆண்களின் குருதிக்கொடை பெறும் தெய்வம் என உருவகம் கொள்ளும் கன்னி பெண்கள் எவ்வாறு கணவன் கொண்டும் மகவை ஈன்றும் இனி வாழ இயலும்? என்று கோவலனை நோக்கி கேட்க்கும் இடம் அவளுள் ஏற்பட்ட நகர்வின் சான்று. அங்கே அந்த கொதிபாலையில் தனித்து, செந்நாய் கடித்த சிதைந்த முலை கொண்டு உயிரை பற்றி கொண்டிருக்கும் அந்த முதிய கன்னியின் பால் அணுக்கம் கொள்கிறாள். ஆழத்தில் அவளும் அதுவே என்று உணர்கிறாள். கோவலன் தன் மனைவி என கண் கொண்டு நோக்கும் ஒவ்வொரு நொடியும் அவள் அது அல்ல என்ற துணுக்குறலையும், அச்சத்தையும் அடைகிறான். அவன் அவள் முன் எதிர்நோக்கி அமர்ந்திருக்கும் எந்த சொல்லையும் அவள் சொல்வதே இல்லை. தன்னுள் ஆழ்ந்து கூடவே வரும் கண்ணகியை அவன் பெருமூச்சுடன் நோக்குவது மட்டுமே அவனால் இயல்வது. தன் நிலம் விடுத்து ஐவ்வகை நிலங்களும் மாறி, தெய்வங்கள் கதையை நீலியின் வழி கேட்டு, உள்ளும் புறமும் மாறி வரும் கண்ணிகியின் கதையே இந்த பகுதி. கோவலன் ஒரு இடத்தில் கண்ணகியின் பாதங்களை நோக்கி மென்பஞ்சென இருந்த அவை பெரும் பாலை நிலமென வெடித்து பாலம் பாலமாக விரிந்து இருக்கும். அதுவே அவள் கடந்து வந்த நிலங்களின் தொலைவு, அவளுக்குள்ளும் அதுவே.

“அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என்ற கூற்றின் சான்றை நிருபணம் செய்வது இந்த பகுதியே. அதன் பெயர் எரி. கண்ணகியும் கோவலனும் நீலியும் ஐவ்வகை நிலங்கள் கடந்து மதுரை பெருநகரின் வாயிலில் உள்ள ஆய்ச்சியர் குடிவாழ் பகுதியை அடைகின்றனர். அங்கே நீலி மாதரி என்ற பெண்ணிடம் இவர்களை அடைக்கலம் விடுத்து அவள் மறைகிறாள். மதுரை பெருநகரின் விரிவையும், அதன் செயல்பாடுகளையும் விவரித்து நகரும் கதை அரசவையின் அறம் பிழைத்தலை விரிவாக பேசுகிறது. பாண்டியனுக்கும் அவன் பெருந்தேவிக்கும் உள்ள உறவின் கசப்பை, தன் அதிகாரம் மூலம் பெருக்கி கொள்கிறாள் கோப்பெருந்தேவி. அவனை தன் முழுவிசை கொண்டு கைக்கொள்ளும் பொருட்டு அவள் மேற்கொள்ளும் அனைத்தும் அதே அளவிலான விசையில் அவளை அவன் தொலைதூரம் நகர்த்தி விடுகிறான். இதன் அடிப்படையில் இருந்து ஒரு அரசன் என்ற பொறுப்பையும் மறந்து இன்பங்களில் துயித்து நாட்களை கடக்கிறான். அதன் விளைவாக, நாடு பெருந்தேவியின் மறவர் குலத்தின் கைகளுக்கு செல்கிறது. அவளின் தந்தை அதை வழிநடத்தி அத்தனை குடிகளையும் பகைத்து கொள்கிறார். இதனை பேரமைச்சர் பாண்டியனிடம் பல்வேறு வகைகளில் உணர்த்தியும் அவன் செவிமடுக்காமல் உதறி செல்லும் முடிவில் பேரமைச்சர் எதுவும் செய்ய இயலாமல் நின்றிருக்கும் இடங்கள், அறம் எச்சரிக்கும் அத்தனை வாய்ப்புகளையும் அவன் நிராகரிக்கும் தன்மைக்கு சான்று. சிலம்பின் களவின் பொருட்டு நிகழும் அரசியல் கீழ்மைகள், குடிகள் நகரை நோக்கி வந்துகொண்டிருக்கும் சித்திரம் என மதுரை பதற்றம் கொள்கிறது. பதற்றம் பற்றி எரிய காத்திருக்கும் பெருநகர் மதுரை பற்றி சிறிதும் அறியாமல் பெரும் கனவுகளோடு கண்ணகியின் சிலம்பினை கைகொண்டு நகர் வரும் கோவலன், சட்டென்று கொல்லப்படுகிறான். அறம் பிழைத்த உச்ச கணம். நகர் உயிர்கொள்கிறது. செய்தி பரவி கண்ணகியிடம் சேரும் கணத்தில் இருந்து அவள் தெய்வமாகும் கணமும் தொடங்குகிறது. அகம் கலங்கி அச்சமும், பதற்றமும் கொள்ளவைக்கும் இடங்கள் அவை. ஒரு நிலையழிந்த மனம் கொண்டே அதை வாசித்தேன். பெண்கள் எங்கும் பெண்கள், குடிகள், குலங்கள் என்ற பாகுபாடல்லாமல் ஒற்றை பெரும் சக்தியென திரண்ட பெண்கள். ஆயிரம் ஆயிரம் வருடங்கள் உறைந்திறந்த அத்தனை தெய்வங்களும் சன்னதம் கொண்டு எழுந்த அந்த கணம், ஆண்கள் செய்வதறியாது விலகி வழிவிடுகின்றனர். செந்நிற சேலையும், எரி விழிகளும் கொண்டு சிலம்பினை கையேந்தி நகர் எழும் கண்ணகி என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு உருவகம். பெண்கள் படை சூழ தன் கொழுநன் தலை கண்டு, அத்தனை தெய்வங்கள் துணைகொண்டு அரசவை நுழையும் பேராச்சி, சிலம்பை உடைத்து அறம் உரைத்து, இடமுலை அறுத்து நகர் நீங்கும் வேளையில் பின்னர் மாமதுரை பற்றி எரிகிறது. ஒரு பெரு நகரின் காலையின் அழகை, அதன் தொன்மத்தை, அதன் மாடவீதிகளை கட்டமைத்து பேரழகென மனதில் ஏற்றி, அதன் அழிவை வாசகனே வேண்டி நிற்க செய்யும் தூரம் அழைத்து வந்த அந்த இடம் அருமையானது. எரி மட்டுமே அனைத்தையும் பெரும்பசி கொண்டு அள்ளி வாயில் இட்டுகொள்வது. தன்னுள் ஒரு சுடரென என்றுமே எரியை வைத்திருந்தாள் கண்ணகி, அது பெரும் தோற்றம் கொண்டு எரிபரந்தெடுக்கும் பகுதியே இது. அங்கே தெய்வம் தன்னை நிறுவி அறத்தை மீட்டி கொள்கிறது. அது என்றுமே சன்னதம் கொண்டெழும். ஏனென்றால், அது அகவிழி கொண்டு காத்திருக்கிறது யுகம் யுகமாக.

“உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்”. தன் முலை அறுத்து நகர் நீங்கும் கண்ணகி தெய்வமென நிலைநாட்டப்படும் பகுதி. நீர், காற்று, நிலம், எரி என்று இங்கே மண்ணில் ஊன்றி விரிந்திருக்கும் அனைத்தும் முடிவில்லா வானை அறிந்திருக்கும். அதனால் சூழ்ந்து, அதன் ஆணை கண்டு இங்கே மண்ணில் அமர்ந்திருக்கிறது மற்ற பூதங்கள். இங்கிருந்து அங்கு செல்வதே தெய்வங்களின் நெறி என்றே தோன்றுகிறது. அவ்வாறாக கண்ணகி வான் எழுவதே இந்த பகுதி. வான். இப்பகுதியில் கண்ணகி கொற்றவையென பல மாந்தர்களின் கண் கொண்டு எழுகிறாள். காலம் கடந்து அவள் கோயில் கொள்கிறாள். சோழ தேசத்தில் பிறந்து, பாண்டிய தேசத்தை எரியூட்டி, சேர தேசத்தில் கோயில் கொள்கிறாள். சாக்கிய முறையில் தவம் இருந்து சமாதி கொண்டாலும், அனைத்து மதங்களின் பேரன்னையாக இருக்கிறாள். அதில் குறிப்பாக, டச்சு தளபதி போர்தொடுத்து வஞ்சியை கைகொண்டு கண்ணகி ஆலயத்தை சூறையாட கருவறை கதவை திறந்து, அதிர்ந்து அங்கிருந்து கிளம்பி உடனடியாக போர்நிறுத்தம் கொண்டு, கப்பலில் மொழிபெயர்ப்பாளனிடம் அன்னை மகவை ஏந்தி இருக்கும் காட்சியை கண்டேன் என்கிறான். மொழிபெயர்ப்பாளன் குழம்பி அவள் கன்னி அவள் குழந்தையற்றவள் என்று கூறும்பொழுது, இல்லை அவள் எங்கள் கன்னியையும் தேவகுமாரனையும் தன்னில் ஏந்தி இருக்கிறாள் என்று உணர்த்தும் இடம் மெய்சிலிர்ப்பது. குடிகள் எல்லாம் வான் போன்று பரவி கோயில் கொள்கிறாள். சேரன் இளவல் இளங்கோ அடிகளின் பயணம், அவரின் மணிமேகலையின் சந்திப்பு போன்றவை, மற்றும் ஒரு முறை திரும்பி கண்ணகியை ஆழமாக அறிந்து கொள்ள முடிகிறது. அவரின் இறுதி கட்ட பயணமாக அந்த கடல் குமரியை கண்டு மீளும் பகுதியில் இருந்து, சிலப்பதிகாரம் என்ற காப்பியம் உருவாகிறது.

சிறுவயதில் உறக்கம் கொள்வதற்கு முன்னர் அன்னையிடம் கதைகள் கேட்பது வழக்கம். இன்று நினைவில் எழுவது, எனது அன்னை எனக்கு முதல் கூறிய கதை கண்ணகியின் கதையையே. அவள் அன்று இருப்பத்தைந்து வயதிற்குள்ளாக இருந்தாள். ஒரு குழந்தையிடம் முதல் கதையென அவள் நாவில் எழுவது அந்த பேரன்னையின் கதையாக இருக்கும் அந்த ஆழ்தொடர்பை இன்று வியக்கிறேன். இந்த நாவலில் பெயரற்ற அல்லது பல பெயர்கள் கொண்ட ஒருவன் வருவான், உலகம் முழுவதும் பல குடிகள் கண்டு, பல மொழிகள் கற்று, பல தெய்வம் கண்டு அதன் ஒற்றுமையை கண்டுகொண்டு வியப்படைந்து கொண்டே இருப்பான். இறுதியில் தன் நகர் மீண்டு கிழமெய்தி தன்னுள் ஆழ்ந்து இருக்கும் பொழுது, தன் வீதியில் ஒரு பாணன் “யாதும் ஊரே, யாவரும் கேளீர்” என்று பாடி செல்வான். இவன் திடுக்கிட்டு வீடிறங்கி அந்த பாணன் கால் தொழுது உயிர்நீப்பான். அவனை என் மூதாதை என்று கொள்கிறேன். காலங்கள், நிகழ்வுகள், வேற்றுமைகள் என்று பகுத்துகொண்டே சென்றாலும், அனைத்தும் ஒன்றே. அந்த கடல் நீலத்தை தன் கூந்தல் என கொண்டே ஏதோ எங்கோ ஆழத்தில் வீற்றிருக்கும் அந்த அன்னை இங்கே பலநூறு ஆற்றல் கொண்டு பெருகி இருக்கும்  பெண்களில் காலம் கடந்து இன்றும் இருக்கிறாள், என்றுமே இருப்பாள் என்ற வியப்பில் இருந்து என்றுமே மீட்பில்லை எனக்கு.

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *