பனி உருகுவதில்லை – அருண்மொழி நங்கை- ஒரு வாசக பார்வை

Bicycle thieves, Malena, Life is beautiful போன்ற படங்களில் உலகப்போர் காலகட்டத்தில் அந்த போரின் அரசியலுக்கு முற்றிலும் தொடர்பில்லாத தனிமனிதர்களின் கண்கள் வழியே அந்த சூழல், நெருக்கடிகள், வாழ்க்கை சொல்லப்பட்டிருக்கும்.  ஒரு பிரமாண்டமான செயல்திட்டத்தில் தனி ஒரு அலகின் செயல்பாட்டின் வழியே அந்த பிரமாணடத்தை காட்டி நம்முள் பல கேள்விகளை எழுப்பும்  படங்கள்.

அருண்மொழி அவர்களது  கட்டுரைகள் அனைத்தும் பிரமாண்டம் எனும் அலகையே கேள்வி கேட்பது போலிருந்தது எனக்கு. போர், அதில் ஒரு மனிதன், அவனது குடும்பம், சமூகம், நாடு என்பது அதற்கு பொருந்துகிறது. ஆனால் ஒரு ஊர், அதன் தெரு, அதில் ஒரு குடும்பம், அதில் ஒரு சிறுமி அவளது கணகளின் வழியே அங்குள்ள மனிதர்களின் வாழ்க்கையைப் பார்ப்பது இத்தனை பிரம்மாண்டமானதா? ஏனென்றால் இங்கே வாழும் அத்தனை மனிதர்களும் இந்த கட்டமைப்பில் தான் அனுதினமும் வாழ்ந்து மடிகிறார்கள். நானும், நீங்களும், அனைவரும். யாரும் அன்றாடத்தில் இத்தனை அவதானங்களை, ஆச்சரியங்களை, பிரமாண்டங்களை உணர்வதில்லை. முடிந்த அளவுக்கு நம் அன்றாட வாழ்க்கை களத்தை நிராகரித்து வேறு வாழ்க்கையையே கனவு காண்கிறோம்.  ஆனால் இந்தக் கட்டுரைகள் அனைத்தும் ஒன்றை சொல்கிறது,  எப்படி இப்புவியின் பெரு நிகழ்வுகளின் வழியே நாம் பிரமாண்டத்தை உணரலாமோ, அதுபோலவே வாழ்வின் மீச்சிறு விஷயங்களிலும் பிரமாண்டத்தை உணரலாம். ராவுத்தரின் கணக்கு, இருளும் நிழலும், நிலை, மனோகரன் சாரும் ஜோதி டீச்சரும், ஊர் நடுவே அரசமரம் போன்ற கட்டுரைகள்  கால நாடகத்தில் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்ற கேள்வியையே எழுப்புகிறது.

அந்த படங்களில், போர் என்ற பெரும் நிகழ்வு நடக்க வேண்டியுள்ளது இந்த பிரமாண்டத்தை கேள்வி கேட்க. ஆனால் இந்த கட்டுரைகள் அனைத்தும் நமது அனைவரின் அன்றாட வாழ்விலிருந்தே பிரமாண்டத்தை நோக்கி விரிகிறது. ஆனால் எங்கும் கேள்வி கேட்கவில்லை. ஏனென்றால் அதைப் பார்த்துக் கொண்டிருப்பது ஒரு பெரும் செயல்பாட்டினை எதிர்கொள்ளும் தூய மனம் அல்லவா. அந்தச் சிறுமி அதை வேடிக்கை பார்க்கிறாள், ருசிக்கிறாள், அணைக்கிறாள், பிரிகிறாள், சிரிக்கிறாள், அழுகிறாள், விளையாடுகிறாள். ஆனால் எல்லா இடங்களிலும் அவள் ஒரு சாட்சி மட்டுமே. அந்த பிரம்மாண்டம் அவளை அணைக்கும் போது மகிழ்ந்து திழைக்கிறாள், விளக்கும்போது உடைந்து அழுகிறாள், அவளுடன் வாழும் மனிதர்களும் அவ்வாறே. அதன் வழியே அவளது உலகத்தின் வண்ணங்களை, இனிப்புகளை, முறிவுகளை, இசையை, அரவணைப்பை, பாசத்தை, அரசியலை, கையறு நிலையை, மகிழ்சியை, குறும்புகளை, வேடிக்கையை, மனநிறைவை நாமே அடையும்படி செய்து நம்மையே அந்த ஊரில், தெருவில், வீட்டில், குடும்பத்துடனும், நண்பர்களுடனும், சுற்றத்துடனும் வாழ வைத்து விடுகிறாள். இது அருண்மொழி அவர்களின் படைப்பாற்றலாலா அல்லது அந்தச் சிறுமியை இன்னும் தன்னுள் தக்க வைத்திருப்பதால் சாத்தியப்பட்டதா?  இரண்டுமே என்றுதான் தோன்றுகிறது. புத்தகத்தை அவரிடம் கொடுத்து எனது மனைவியின் பெயருக்கு கையெழுத்திட்டு கொடுங்கள் என்று கூறியபோது, அவரது  கண்களிலும், உடலிலும்  வெளிப்பட்ட சந்தோஷமும், அப்போது  அருகிலிருந்த அஜியும், ஜெ யும் நக்கலடித்த போது வெளிப்பட்ட வெட்கமும், எனக்கு  அருணா என்ற அந்தச் சிறுமியைத்தான் நான் அங்கு கண்டது.

சிறுவர்களின் உலகம், பெரியவர்களின் உலகம், உறவுகள், நண்பர்கள், காதலர்கள், தம்பதிகள், இசை, கம்பூனிசம், திராவிட கட்சி அரசியல், இந்திய அரசியல் தலைவர்கள், பிராமணர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சாமியார், பெயரற்றவர்கள் என கட்டுரைகளில் உள்ள அனைவரின் உலகமும் எந்த சார்புகளும்,  முன்முடிவுகளும் இல்லாமல் அவர்களின் வாழ்க்கை சிறுமியின் கண்கள் வழியே ஒரு படம் போல் ஓட்டிக்காட்டப்படுகிறது. ஒரு சிறு எல்லைக்குள் அவர்கள் குடும்பம், உறவுகள், நணபர்கள், சுற்றங்கள் என்று அவசரமற்ற, மாற்றங்களில்லாத தினசரிக்குள் வாழ்ந்த மனிதர்களிடமிருந்த  நேசமும், அரவணைப்பும், கனிவும்,  உதவும் மனநிலையும் இன்றைய பௌதீக எல்லைகள் மறைந்து கொண்டிருக்கும், தகவல் தொழில்நுட்ப வசதிகள் வாழ்க்கையை விஸ்தாரப்படுத்தியிருக்கும் அவசரமான நவீன வாழ்க்கையில் மனிதர்களின் சுபாவங்களில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளதா?  மனிதர்களுக்கிடையேயான உறவுகளில் நேசம், அரவணைப்பு, உதவும் மனநிலை அனைத்தும் குறைந்து வருகிறதா? உலகம் வெளியே விரிய விரிய மனதர்கள் உள்ளே சுருங்குகிறார்களா? கட்டுரையின் காலத்திலிருந்து நம் காலகட்டத்திற்கு மனம் தன்னிச்சையாக ஒரு கோடிழுத்து விடுகிறது.

இந்தக் கட்டுரைகளில் பல மனிதர்கள் வந்தாலும், பெண்களின் அக உலகம் சார்ந்து பல வாழ்க்கை தருணங்களும், நுண்ணிய மன வெளிப்பாடுகளும் பதிவாகியுள்ளது. ராவுத்தர் மாமா ஆளே மாறிப்போய் இவர்கள் அனைவரையும் சிக்னலில் பார்த்து அழுதுவிட்டு சென்றபின் , ஹோட்டலில் அப்பா ஆர்டர் செய்யச் சொல்ல, அருணா அழுதுகொண்டே “வேண்டாம்” என்றும், அம்மாவும் “காபி போதும்” என்றும் சொல்லும் இடம். ஆண்களால் ஏதாவது காரணத்தை கூறி எளிதில் கடந்து விடக்கூடிய விசயங்களை பெண்களால் ஏன் கடக்க முடியவில்லை? அம்மாவும், டெய்சி பெரியம்மாவும் அழும் இடம், தந்தை இல்லாத வயலட் வீட்டின் சூழல், பட்டானி இன்னொரு பெண்னை கூட்டி வந்தபின் கண் தெரியாத மனைவியால் ஏற்படும் சச்சரவு, ராஜம்மாள் பாட்டியின் நிமிர்வு, அருணா ஜோதி டீச்சரை வெறுப்பேற்றும் தருணம், யசோதை கட்டுரையில் லெனினை கட்டியணைக்கும் இடம் என இப்படி நாம் அகழ்ந்து எடுக்க வேண்டிய ஆழமான பல இடங்கள் உள்ளன.

இந்த நூலின் ‘விட்டு வந்த இடம்’ என்ற கடைசி கட்டுரையை படிக்கையில் அருண்மொழி அவர்கள் கடந்து வந்த இந்த காலகட்டத்தை  ஏக்கத்துடன் பார்க்கவில்லை, தனது அதற்கு பின்னான வாழ்க்கையை இன்னும் சந்தோஷமாக கழித்துள்ளார் என்று உணர முடிகிறது. தற்போது அவரது வாழ்வின் சுதந்திரமான காலகட்டத்தில் இருப்பதாக கூறுகிறார். இங்கிருந்தே திரும்பி கடந்து வந்த வாழ்வை, மனிதர்களை ஞாபகப்படுத்தி பார்த்து அந்த சாதரணர்களை என்றும் அழியாதவர்களாக காலத்தில் நிறுத்தியிருக்கிறார். கடந்து வந்தது குறித்த எந்த ஏக்கமும் எழுத்தில் தென்படவில்லை.

காலத்தில் சாதரணத்திலும், அண்றாடத்திலும் இருக்கும் பிரமாண்டத்தை படைத்து காட்டியுளளார்.

ஜெ வுடைய வார்த்தைகள்.

“வாழ்க்கையின் சாரமென்ன என்ற கேள்விக்கு சாராம்சமாக மிகப்பெரிய, மிக மர்மமான, முற்றிலும் தர்க்கபூர்வமான ஒரு பதில் இருக்கமுடியும் என்பதே மனிதனின் மாயை. தன்னை பெரிதாக எண்ணிக்கொள்ளும் அகந்தையில் இருந்து முளைப்பதல்லவா அது? மிகச்சிறு விஷயங்களிலும் ஒவ்வொரு தருணத்திலும் ததும்புகிறது வாழ்க்கையின் பொருள். வெற்றியில், உச்சத்தில், மையத்தில் மட்டும் அது இல்லை. எங்கும் எக்கணத்திலும் உள்ளது”

பனி உருகுவதில்லை எனக்கு என்ன கொடுத்தது என்பதை ஜெவுடைய இந்த வார்த்தைகளை கொண்டே என்னால் விளங்கி கொள்ள முடிகிறது.

நான் ஒரு உணர்ச்சி வேகத்தில் என் மனைவியின் பெயருக்கு அருண்மொழி அவர்களிடம் புத்தகத்தில் கையெழுத்து வாங்கி அவளிடம் கொடுத்து விட்டேன். நான் கொடுக்கும் புத்தகத்தை மறுப்பு சொல்லாமல் வாங்கி படிப்பாள். பிடிக்கவில்லை என்றால் சொல்லிவிடுவாள். இந்த புத்தகத்தை விரைவாக வாசித்து முடித்துவிட்டாள். கேட்டதற்கு பெரிதாக எதையும் காட்டி கொள்ளவில்லை. ஆனால் அதன்பிறகு நான் அதை பெற்று படிக்கும்போது தான் கவனித்தேன். புத்தகத்தின் பக்கங்கள் செல்ல செல்ல தாள்களின் அடிப்புறம் விரல்களின் வியர்வையால் நனைந்து கொஞ்சம் நைந்திருந்தது. அவளது பதட்டத்தின் தடங்கள் அவை. அதன்பின்பு ஒரு சிறு சண்டையில் ‘ஆமா அதுக்காக மட்டும் தானே எங்கள வளத்திருக்காங்க’ என்று கோபித்தாள். அப்போது எனக்கு அவளது விரலின் வேர்வை தடங்கள்  மேலும் கொஞ்சம் அழுத்தமாக பதிந்து நைநிதிருந்த அரசி கட்டுரையின் கடைசி பக்கத்தில் உள்ள “வேங்கைபோல வாழ்வதும் பறவைபோல மறைவதும் தான் வாழ்க்கை என்று இன்று தோன்றுகிறது” என்ற வரிகள் தான் ஞாபகத்திற்கு வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *