1.
பறப்பதும்
அமிழ்வதும்
இயலாதென புழுதி பறக்க
கிடக்கிறது
முயற்சியாய்
அலைகளில் சறுக்கி
பாய்மரமேறி பறக்கிறது
அது..
அடிவானம்
தூரத்தில் உள்ளது
அங்கே
பறந்தமிழ்ந்திருக்கக்கூடும்
2.
மெல்லிய மஞ்சள் வெளிச்சத்தில்
அவ்வளவாய் நீளாத
அப்பொழுது
அவ்வளவு அழகு
இன்னும் சிறிது நேரத்தில்
விலகும் குளிர்
போர்வைக்குள்
ஒடுங்கியிருந்தது
கிளம்பத் தயாராகும்
அத்தனை இருளும்
இடதோரமாய்
ஜன்னலுள்ள அறையில்
இருக்கக்கூடும்
தீக்குச்சி தலைபோல
ரோஜா மலர் மாடியில்
ஏற்கனவே விரிந்திருக்கக்கூடும்
நுரையீரல் நிரம்பிய
குளிர் காலைத் தென்றல்
சாவித் துவாரத்தை
தேடிக்கொண்டிருந்தது
திடீரென கையருகே
வந்து கிடந்ததது
நிறம் மாறத் தொடங்கிவிட்டது
அறை
3.
நீயொரு நிலமடந்தை
நீலயிருள் வனமகள்
நீளாழத்தின் வழியுலவும் விழி
நீயுறையூற்றி தண்ணிழலான ஒளி
நீர்த்தாரைகளில் கரைந்தொழுகு மை
நீர்க்கணை சிந்தித்தெறித்த கூர்மை
நீலவான் விழாயிருள் தடாகம்
நீருடல் ஏகி நிலம் படர் நிலவுமேகம்
நீள் சாலையுடைத்து போகும்போகம்
4.
தமஸோ மா ஜோதிர்கமய
மூழ்கயியலாமல்
காற்றடைத்த பந்தென
வெளிவந்தது என்னுடன்
என்னிழல்
சினந்து
தன்னளவில்
சிறு இருளைக் கொண்ட
ஒரு கல்லொன்றை
ஆழத்திலெறிந்தேன்
இப்போது
துளித்துளியாய்
விழுந்து
கறையத்தயாராகிக்
கொண்டிருக்கிறது
காரிருள்.
மெல்ல மெல்ல
நதி இவ்வாறே
உருவாகி ஓடுகிறது
மூழ்கிய வானம்
மேல்வந்து
வட்டமான ஒளியாய்
மிதக்கிறது.
5.
முழுமை
————-
பார்த்தன் கீழெறிந்தனன்
வண்ணங்கள் பலவாக
அரைவட்டமாக
கிடந்தது
நீலத்தில் கரைந்ததும்
நிராயுதபாணியின்
கரத்தில் சுழல்கிறது
சக்கராயுதம்
அருமை
அழகான தமிழில்
அழகிய கவிதைகள்
இரண்டாம் கவிதை அழகு