வழுக்கு மரம்

எண்ணற்ற கால்கள் வாகனங்களுக்கிடையில் சிக்கி வெளியேறிக் கொண்டிருந்தன. இப்படியொரு பேரிரைச்சலுக்கு அவன் இதுவரை முகம் கொடுக்கவில்லை. அல்லது அவ்வப்போது அதிகப்படியான மன நெருக்கடிகளில் அன்றும் ஒரு நாள். ஏன் இத்தனை பரபரப்பு. ஒருவரை முந்தி ஒருவர் முட்டிமோதும் வேகம். நீ செல்கிறாயா அல்லது நான் முந்திச் செல்லட்டுமா என்ற போர்க்களம். எல்லோருடைய வாடிக்கையும் பெட்ரோல் டீசல் புகையாக மூண்டு சூழ்ந்திருக்க, சற்றுநேரம் கூட இங்கே நின்று நிதானிக்க முடியாது. கைக்கு கிடைத்ததை அள்ளித் தன் கைப்பைக்குள் திணித்து சிதறி ஓடுகிறார்கள். கொஞ்சம் தாமதித்தால் தன் மூச்சே  நின்று விடும்போல அவசரகதி. ‘இங்கே சிந்திக்கத் தகாத வார்த்தைகள் இவை, உன் ஆட்டம் குளோஸ் ஆகிவிடும்… சாவு கிராக்கி அப்பாலே ஒதுங்கு…’ ஒரு வெள்ளை ஷேர் ஆட்டோ உறுமிக்கொண்டே அவனை உரசிச் சென்றது.

மழை பருவ காலம். ஏதோ பெயரிட்ட புயல் ஒன்று மையமிட்டிருப்பதாகச் தலைப்புச் செய்தி போஸ்டர் பத்திரிகை விற்பனைக் கடையில் தொங்கிக் கொண்டிருந்தது. பிற்பகலில் மிதமான வெயிலும் மழையும் மாறிமாறித் தோன்றிக் கொண்டிருந்தன. மழையிருளுக்குக் கூடத் தன் உயரத்தைக் குறைத்துக் கொள்ளாத வியாபாரக் கட்டிடங்களின் வரிசையும் மக்கள் திரளும். யாரைப் பார்த்தாலும் அவனுக்கு வெறுப்பும் கோபமுமாக வந்தது. சாலையின் குறுக்கே புகுந்து எல்லா சந்தடிகளையும் நிறுத்தும்படியாக ஓங்கிக் குரலெடுக்க வேண்டும் போல் அவனுக்கு ஆத்திரம். இந்தப் பதட்டத்திற்கு வேறொரு காரணமும் இருந்தது.

காலையில் எழுந்ததிலிருந்து ஒரே தலைவலி. எந்த மாத்திரையைப் போட்டாலும் தீராத தலைவலி இது. எதனால் அடிக்கடி வருகிறது, நடந்துகொண்டே யோசித்துக் கொண்டிருந்தான். மிதமான காலநிலை அவனை உற்சாகப்படுத்தவில்லை. மனைவி காரணமா? அவளுக்கு இருந்த பிடிவாத குணங்களை அறவே அவனுக்குப் பிடிக்கவில்லை. எந்நேரமும் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பது, சமைப்பது தூங்குவது என்று தொடங்கி அவள் வீட்டுப் பெண்ணாக இருக்கும் அடக்க ஒடுக்கத்தை விமர்சிக்கத் தொடங்கிவிடுவான். இதனால் அடிக்கடி சீற்றம் கொண்டு கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் தூக்கி வீச ஆரம்பித்துவிடுவாள்.  அவளுக்கே புரிந்துகொள்ள முடியாத பெண்ணியம் குறித்த வலியுறுத்தல்கள்  ஆணாதிக்கப் போக்காக மாறிப்போய் கடைசியில்  அவளைத் தன்னிடமிருந்து அந்நியப்படுத்துகிறதோ… சில வேளைகளில் எதற்குத்தான் இந்தப் பிறவி.  இவள் உயிரோடு இருந்து என்ன பிரயோசனம் என்ன செய்யலாம் என்ற சிந்தனை வீபரீதக் கற்பனைகளுக்குக் கொண்டுபோய் அவள் மீதான வன்மத்தை அதிகரித்துக் கொண்டிருந்தது.

இருவருடைய சண்டைகளும் சமாதானமடைவது உடல் இன்பத்தில் தான். சுகம் தீர்ந்த மறுவினாடியே மீண்டும் சண்டை முன்னை விட ஆக்ரோஷமெடுக்கும். எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து இவனுக்கு இவள் என்று யார் யாரோலோ சேர்த்துவைக்கப்பட்ட இந்த மணவாழ்க்கையில்தான் இத்தனை வேதனைகளும் முரண்பாடுகளும். ஒருவரை ஒருவர் தின்னக் கொடுக்கும் யாருமற்ற தீவின் தனிமை.

வாழ்நாளில் எந்தப் பெண்ணையும் காதல் கொள்ளத் தெரியாதவன். தனிமையின் வறட்சியில் தூக்கம் வராமல் புரண்ட இரவுகள் திருமணத்திற்கு முன்பு இருந்தது. அதனால் திருமணமாகி மூன்று வருடத்தை நெருங்கும் சமயத்திலும் அவனால் ஒரு பெண்ணின்  ‘ஈகோ’விலிருந்து அவ்வளவு எளிதாகக் கடந்துவிட முடியவில்லை. கணவன் வேலைக்கான கட்டளைகளை அவன் மனைவி வீசியெறியும்போது ஏன் இவள் ஒரு பொதிமூட்டை போல கனக்கிறாள் என்று தனக்குள் புலம்பிக் கொள்வான். தன் மனைவி மீது கொண்ட காமமும், இனி வரும் காலமும் ஒரு கழுமரக் கொம்பா அல்லது துய்க்கத் துய்க்கத் தீராத  இரத்தபலி கேட்கும் முரண் சரண் வேட்டைகளா… அவனால் விடைகாண முடியாதிருந்தது.

எண்ணங்கள் நெஞ்சில் மோதிக் கொண்டிருக்கும் வேளையில் ஒரு செல்போன் அழைப்பு.“ நேற்று ஏங் லேட்டா வீட்டுக்கு வந்தீங்க உங்கள் முன்னால் காதலி வீட்டுக்குப் போனீங்களாக்கும்” மனைவிதான்.

“இருக்கும் வரும்படியில் இதுவேறையா” ஒன்றும் பதில் பேசாமல்  போனை அமர்த்தினான். ஏன் இவளுக்குத் தீடீர் தீடீரென இப்படி ஒரே சந்தேகம் முளைக்கிறது. அவளிடம்  தன்னை உண்மையாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்று திருமணம் முடிந்த அன்றே பழைய கதைகளை எல்லாம் சொன்னது எவ்வளவு தவறு.  சாலையில் யாரிடமும் காட்ட முடியாமல் கோபம் அவன் தலைக்கேறியது. விண்விணென்று தலைவலி வேறு.

ஒரு குழந்தை பெற்றால் எல்லாம் சரியாகிவிடும் என்று உற்றார் உறவினர்கள் சொன்னாலும் மேலும் மேலும் இக்கட்டில் மாட்டவைக்கும் முயற்சிதான் அது என்று விம்மிக் கொண்டான். என்றாலும் எல்லாவற்றுக்கும் பழக்கப்பட்டவன்தான் அவன். பதிவு செய்யப்படாத ரயில் பெட்டியில் பயணம் செய்கிறவன். ஆரம்பத்தில் பயணிகளுக்கிடையில் நடக்கும் சண்டைகள் தூங்குவதற்கு தலை சாய்க்க இடம்பிடிக்கத் தேடும்போது சமனிலைக்கு வரும். மல்லுக்கட்டிக் கொண்டவர்களே பால்வேறுபாடின்றி கால்மாட்டிலும் தலைமாட்டிலும் ஒருவர்மேல் ஒருவர் மாறிக் கிடப்பார்கள். இதோ போக்குவரத்து நெருக்கடி நிறைந்த இந்தச் சாலை வெள்ளத்தின்  மர்மம் என்ன. பரபரப்பில் பறந்து தவழ்ந்து முறைத்து பாய்ந்து மனிதர்கள் எப்படியெல்லாம் கபடி ஆட்டம் ஆடுகிறார்கள். அதில் அவனும் ஒரு ஆட்ட நாய்தானே.

தியாகாராயநகர் பேருந்து நிலைய நெருக்கடி ஒருவித மூளை அதிர்வுகளைத் தந்தது. ஹைட்ராலிக் இயந்திரம் பழைய கட்டிடத்தை இடித்துத் தகர்க்கும்போது கூசுவது போல காதுகள் அதிர்ந்தன. பொத்தினாலும் அடங்காத சப்தம். அடிக்கடி தலைவலி ஏன் வந்து தொல்லை செய்கிறது. மலச்சிக்கலும் கூட காரணமாய் இருக்கக் கூடும்.  சிந்தனைகளையும், சீற்றங்களையும் உடலிலிருந்து வெளியே தள்ள வேண்டும்.  இல்வாழ்க்கையின் சட்டதிட்டங்களுக்கு நடித்து, அவனையே அவன் ஏமாற்றி நேரத்தோடு தூங்கி காலையில் விழிக்கும்போதுதான் தலைவலி தீரும். அதுவரை அன்றைய நாள்முழுக்க அவன் மண்டைக்குள் வாகனங்கள் ஏறிமுட்டிமோதி ஹாரன்கள் ஒலித்துத் தெறிக்கும் கடுகடுப்புதான்.

பேருந்து நிலையத்தின் எதிர்ப்புறம் சாலையை கடந்து ஆவின் பாலில் டீ காப்பி போட்டுத் தரும் கடையை நோக்கி நடந்தான். தியாகராயா நகர் பேருந்து நிலையத்தின் வெளிச்சுவர் முழுதும் ஏதோ கல்லூரி மாணவர்களின் சூழலியல் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தது. முழுக்கவே ஆங்கிலத்தில் அறிவுறுத்தப்பட்டவை.  ‘ சூழலியல் போராளிகளாம்…  யாருக்காக இவர்கள் விளம்பரம்’ என்று சொல்லிக் கொண்டான். அந்தச் சாலையில் பழைய கட்டிடமான இந்த பேருந்து நிலையம் மணிக்கூண்டு தனது பழைய அடையாளத்தைக் காட்டிக் கொண்டிருந்தது. அதில் ஏதோ சிறு விச்சிராந்தி. ஆனால் எதிரில் அம்சா தியேட்டார் இடிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. மல்டிபிளஸ்ஸாக மாற்றுவதற்கு புதிய கட்டுமான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததில் அவனுக்கு வருத்தம்.  அவனது மனங்கவர்ந்த எழுத்தாளர் அசோகமித்திரன் சைக்கிளில் சென்ற சாலையில் இப்போது நடக்கக்கூட முடியாத இடிபாடுகள். அவர் கடந்து சென்ற கிருஷ்ண வேணி தியேட்டரா இடிக்கப்பட வேண்டும். அவர் எழுத்தோடு உறவாடிய தியாகராய  நகரின் எச்சங்கள் கொடுங் காலத்தில் கரைந்து கொண்டிருப்பதாய் நொந்து கொண்டான்

பேருந்துகள் நுழையும் வாயிலுக்கு இடது பக்கமிருந்து தாரை தப்பட்டைகள் முழங்கிக் கொண்டிருந்தன. உஸ்மான் சந்திப்பின் பெரியார் தன் ஆட்காட்டி விரலால் யாரையோ சுட்டிக் காட்டி  சாலையின் மையத்தில் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். வயோதிக விறைப்பும், சுருக்கமும் நகக்கண் மட்டும் சற்று உள்மடிந்த வடிவும் கொண்ட ஆட்காட்டி விரல் ஆளுயரச் சிலையின் கண்போன்று உயிர்ப் பொலிவாக வடிக்கப்பட்டிருந்தது. அதையொட்டி வலப்பக்கம் திரும்பிய சவ ஊர்வலம் சரவெடிகளுடனும், பூ மாலைச் சிதறல்களுடனும் நகர்ந்து கொண்டிருந்தது. சவத்தின் காலடியில் சிறிய கருங்கோழி. சனிக்கிழமை பிணம் என்பதால் கூடுதல் ஐதீகம்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு இப்படித்தான் தனது பெரியப்பா  சிதை எறிப்பின் போது கழுத்தை அறுக்காமலேயே உயிரோடு மின் அடுப்பில் அனுப்பப்பட்ட கருங்கோழிக் குஞ்சு அவனது நினைவிற்கு வந்து துன்புறுத்தியது. இரண்டு பீடிக்கட்டுகளை அவரது பைக்குள் வைத்தார்கள். நெஞ்சில் சூடம் ஏற்றினார்கள்.  பலிக்கோழியை வெட்டிப் பலிகொடுக்காமல் அவசரமாக உயிருடன்  அவரது வேட்டிக்குள் எறிந்தார்கள். இருளும் கனலும் மண்டிய  மின் மரண வாசல் கெல்லட்டின் போல அதிர்ந்து பெரும் சத்தத்தோடு மூடியது.  அடுப்புக்கு அனுப்பப்பட்டு எரிக்கப்படும்  சிதைச் சாம்பலோடு பிரிக்க முடியாமல் அது கலந்துவிடும். இங்கேயும் ஒரு சவத்தின் காலடியில் பலிக்கோழி கட்டப்பட்டு வன்மமாக அல்லலுறும் அதன் குரலற்ற ஒற்றைத் துயரம் அவனை வதைத்தது. ‘ நினைவுகளில் நிஜங்களில் துயர்படுவதாலேயே தலைவலி வருகிறதா’ குழம்பினான்.

டீ குடித்துவிட்டு ராஜமன்னர் தெருவின் மூலைக்கு வந்தான். அங்கிருந்த நாவல்மரம் பழங்களை உதிர்த்துக் கொண்டிருந்தது.  அந்தத் தெருவிலிருந்து பெரிய சாலைக்குத் திரும்பும் வாகனங்கள் அவற்றை நசுக்கி அழித்துக் கொண்டிருந்தன. கேட்பாரற்று அழுக்கிலும், சிகரெட், புகையிலை எச்சில்களிலும் வீழ்ந்த பழங்களை எப்படி எடுத்து உண்பது. ஒரு பழம் மட்டும் புதிதாக வீழ்ந்து உருண்டு ஓரமாக சுத்தமான இடத்தில் நின்றது. அதை எடுத்துத் துடைத்து வாயில் போட்டுக் கொள்ள குனிவதற்குள் உஸ்மான் சாலைக்குத் திரும்பிச் சென்றுகொண்டிருந்த குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ் ஒன்று சைலன்சர் புகைக் காற்றால் அதை ஊதித் தள்ளியது. அந்தக் குழந்தைகளுக்கான பிரத்யேக ஆம்புலன்சின் சைரன் ஒலியும், சிகப்பு வெளிச்சமும் அவன் தலையே போல சுழன்று கொண்டிருந்தது . உயிர்வலியை உணராத குழந்தை பிழைக்குமா? இத்தனை நெருக்கடியை தவிர்க்க வழியில்லையா..
………………………         …………………………..
பேருந்து நிலையத்தை ஒட்டிய வலப்புறம் மூன்றாவது கட்டிடம் ஒன்றில் இருக்கும் ஒரு புத்தகக் கடையில் அவனுக்கு வேலை. அந்தப் பழைய காம்பளக்ஸ் தரைத் தளத்தின் உள்ளே துணிக்கடைகள், காது கேளாதோருக்கு செவிட்டு மெஷின்கள் விற்கும் சென்டர், ஜெராக்ஸ் கடை, இரண்டு தையல் கடைகள், பழைய பட்டுச் சேலைகள் வாங்கும் கடை, டிராவல்ஸ் கம்பெனி, ரியல் எஸ்டேட் , வீட்டு உபயோகப் பொருட்கள் சர்வீஸ் ,  இன்டெர்னெட் சென்டர் என்று வரிசையாக இருபுறமும் இருந்தன. ஒரு வறிய பெண் அந்தக் கடை வாசலில் முன்னேயே வந்து காத்துக் கிடக்கிறாள். அங்கே மதுப் போதையிலிருந்து விடுபட மருந்து கிடைக்கிறது. கடைக்காரர் வெளியே போயிருக்கிறார். அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டே கூச்சம் பதட்டத்தோடு மேலே போர்டில் இருக்கும் செல்போன் எண்ணுக்கு அழைத்துக் கொண்டிருந்தாள். அவன் வேலை பார்ப்பது அதிலிருந்து இரண்டு கடை தள்ளியிருக்கும் புத்தகக் கடை.

பெரிய வியாபாரம் இல்லையென்பதால் கடையில் அவன் மட்டும்தான். கணிப்பொறியில் புதிய புத்தக வேலைக்கான தட்டச்சு, அட்டைப்படம் வரைவு வேலைகள். இடையிடையே ஒருசில புத்தக வியாபாரம். இடையிடையே ஆன்லைனில், தொலைபேசியில் வரும் ஆர்டர்களைக்  குறித்துவைத்துக் கொண்டு உறை எழுதி பார்சல் போடுவதுமாக அவனுக்கான வேலைகள். கணிப்பொறியில் தட்டச்சு செய்து கொண்டிருந்தவனுக்கு தாகம். தண்ணீர் அடியில் ஒட்டியிருந்தது. பாட்டத்திலிருந்து கேனை வெளியே எடுத்து பிளாஸ்டிக் கிளாசில் ஊற்றினான். அரைக் கிளாஸ்தான் தேறியது.  அவனது முதலாளி தண்ணீர்க் கேனுக்குக் கூட இம்மிக் கணக்குப் பார்த்து, காலியான சில நாட்களுக்கு அக்கம்பக்கத்துக் கடைகளுக்கு அலைய வைத்துவிடுபவராக இருந்தார். எங்கு போனாலும்  தன் வாழ்க்கை இப்படித் துரத்தும் தரித்திரமாக இருக்கிறதே என சலித்துக் கொண்டான்.

வழக்கம்போல் கடை மூடும் சமயத்தில் அவனது முதலாளி தமிழ்நம்பி கடைக்குள் நுழைந்தார். அதுவரைஅவர் ஒரு தனியார் தொலைபேசி நிறுவனத்தில் மேலாளர் பணி இருந்தது. அந்தப் பணியை முடித்ததும் வேகமாக பைக்கில் வந்த களைப்போடு கல்லா அருகே அமர்ந்து அன்றைய வரும்படிகள் என்னவென்று பில் புக்கையும், கால்குலேட்டரையும் முன்னே எடுத்து வைத்து கணக்கிடத் தொடங்கினார்.

முதலில் வீட்டில் வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். புத்தகங்கள் விற்று அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டே  புதிய புத்தகங்கள் பதிப்பிக்க  முதலீடு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பரபரப்பான சுயமுன்னேற்ற நூலகள், சமையல் குறிப்பு நூல்கள், அரசியல் நூல்களும், சுருக்க வரலாற்று நூல்களும், மாதமாதம் வெளிவரும் குடும்ப நாவல்களும்தான் அவரது விற்பனையின் இலக்கு. சுற்றிலும் ரேக்குகளில் அப்படியான புத்தகங்களே அதிகமும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. தீவிர இலக்கிய ஆளுமைகளை அவர் ஆணவமும் திமிரும் கொண்டவர்களாகச் சித்தரிப்பவர்.  பெரும்பாலும் தேசிய அளவிலான வர்த்தகப் பதிப்பகங்களுக்கு ஸ்டாக்கிஸ்ட் எடுத்து சிறிய புத்தக விற்பனையாளர்களுக்கு  சில்லரை வியாபாரம் செய்பவரானார். இதுபோக அவர் ஆர்வம் கொள்ளும் விசயம் அரசியல் மேடை நிகழ்ச்சிகளுக்குச் சென்று பிளாட்பாரத்தில் கடைவிரிப்பது.

“கடை ஆரம்பிச்சு மூன்று வருடங்கள் ஓடிப்போச்சு… இன்னும் நம்ம கடை அதே நிலையில்தான் இருக்கு.. ம்ம்..  இன்னைக்கு வித்தது இவ்வளவுதானா” கையில் ஏழெட்டு நூறு ரூபாய்களையும் சில்லரைகளையும் இவனிடம் காட்டி பெருமூச்சு விட்டுக் கொண்டார்.  தன் மணிப்பர்சுக்குள் திணித்தவர் ‘இதில உங்களுக்கு வேற சும்மா உக்கார வச்சு சம்பளம் கொடுக்கற மாதிரி இருக்கு.’ என்று ஏதோ வருமானத்தில் கொஞ்சத்தை கையார்டர் செய்திருப்பான்  என்பது போல்  இருந்தது அவர் பார்வை. என்ன பதில் சொல்வது. வழக்கமாக அவருடன் சோகபாவத்தைக் காட்ட வேண்டியதுதான். கடை வாடகை, தனக்கு சம்பளம், போக்குவரத்து செலவுக்காவது லாபம் வரவேண்டும்.  அப்படி ஒரளவு வருமானத்திற்காகவாவது  பிறர்  சொல்லும்  ஆலோசனைகளைக் கேட்க, மறுப்பவர் தமிழ்நம்பி.   கடையை மூடினார்கள்.  தன் பைக்கை எடுத்து வீட்டுக்குக் கிளம்பும் போது ‘வெற்றி வேந்தன் பதிப்பகம்…  நல்ல பேர்தான் வைத்திருக்கிறார்’ என்று அழுத்தமாகவும் சலிப்பாகவும் உச்சரித்துக் கொண்டான்.

                             ………………………             …………………………

இரண்டு முதுகலைப் பட்டங்கள் பெற்றவன் அவன்.  தான் ஒரு ஐஏஎஸ் ஆகும் கனவு இருந்தது . ஐஏஎஸ் தேர்வெழுத கடந்த ஆறு வருடங்களைச் செலவழித்தவன்.  மாணவ மாணவியர்களில் முக்கால்வாசி சதவீதம் பேருக்கு அதிகாரம் பதவியை வைத்துக்கொண்டு  ஊழல் செய்வதற்காகவே தாங்களும்   பயிற்சி மேற்கொண்டிருப்பதாகவும், சமூகப் பொறுப்புணர்வு அற்ற கூட்டமென்றும் அவனுக்குப் பட்டது.

அந்தப் பயிற்சி மையத்தின் இயக்குனர் ஒரே நேரத்தில் ஐந்நூறு மாணவர்களுக்குப் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். முடிவில் மாணவர்களுக்கும் அவருக்குமான கலந்துரையாடலில்  முதலாவதாக எழுந்து கேட்டான். “இத்தனை ஆயிரம் பேர்களில் யாரோ சிலபேர் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெறப்போகிறார்கள். ஒரு யோசனை…  நுழைவுத் தேர்வு வைத்து தன்னலமற்ற தொண்டுள்ளமும் துணிச்சலும் கொண்ட தரமான மாணவர்களை ஏன் தேர்ந்தெடுக்கக் கூடாது. அப்படி நீங்கள் செய்தால் இங்கே பல மாணவர்களின் உழைப்பும் நேரமும் வீணடிக்கப்படாமல் இருக்குமே.”

பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தவர் இடம்பொருள் அறிந்து மென்மையாகத் தனது தரப்பைக் கூறினார். பிறகு தனியாக அவனைக் கூப்பிட்டு “ நீங்கள் ஐஏஎஸ் ஆக முடியாது என்பது என் அபிப்பிராயம். சாலையை மறித்து கொடிபிடித்து அரசுக்கு எதிராக போராட்டம்  நடத்துங்கள். உங்கள் வருங்காலம் சிறப்பாக அமையட்டும். வாழ்த்துகள்” என்று விடை கொடுத்தார்.

“என் எதிர்காலம் குறித்து நீங்கள் கருத்து சொல்ல வேண்டியதில்லை. அதை நான் பார்த்துக் கொள்கிறேன். உங்கள் பயிற்சி மையத்திலிருந்து படித்துதான் ஐஏஎஸ் ஆகவேண்டும் என்பதில்லையே. தனியாக நானே வீட்டிலிருந்து படித்துகூட ஆக முடியும்” என்று வெளியேறினான்.

                                     ………………                          ………………………

அதனால் வயிற்றைக் கழுவுவதற்கு கிடைத்த எந்த வேலைகளுக்கும் செல்லும்படியானான்.  இலக்கியம் காட்டும் அறம் அவனைத் திசைமாறிச் சுழற்றியடித்து இங்கு வந்து சேர்த்தது. அவன் உலகியலோடு ஒட்டமுடியாமல் கொள்ளும் சீற்றத்திற்கெல்லாம் வடிகால் புத்தகங்கள்தான்.  இப்போது குடும்பம் மனைவி என்றான பிறகு முந்தைய முற்போக்கு ஆவேசத்தையெல்லாம் மூட்டைகட்ட வேண்டியிருந்தது.

தமிழ்நம்பியைப் பொறுத்தவரை நவீன இலக்கியப் புத்தகங்கள் விற்காத சரக்கு.  சரி அவரது மற்ற தேர்வுகளிலும் கூட அப்படி  விற்றுத் தீர்கிறதா…. அதுவும் இல்லை. வாராது வந்த மாமணி போல் வந்த ஒரு புதிய  நவீன இலக்கிய வாசகர் ஒருவர் அந்த விற்காத சரக்கை நோட்டமிட்டு ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு ரேக்கில் இன்னொரு புத்தகத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அவர் அந்தப் புத்தகங்கள் பற்றி விளக்கங்கள் எதுவும் கோரவில்லை. தமிழ் நம்பிக்கு ஒரு அவா. அவரை எப்படியாவது வாங்க வைக்கவேண்டும் என்று அந்த நாவலின்  பின் அட்டையில் பொறிக்கப்பட்ட வாசக சாரத்தையே முழுக் கதைபோல் பிலாக்கணம் செய்துகொண்டிருந்தார். அவன் தனக்குள் சிரித்துக் கொண்டான்.  எதையும் பொருட்படுத்தாமல் காதுகொடுக்காமல் அடுத்த ரேக்கில் இருந்த அவரது அன்றைய கணத்தின் தேர்வை உறுதி செய்துகொண்டு புத்தகம் ஒன்றை வாங்கிச் சென்றார்.

‘எப்படியோ ஒரு விற்பனை முடிந்ததா..’ என்று தன்னைத் தானே மெச்சிக் கொண்டவராய் அவனைப் பார்த்தார்.  அவன் மின்னணு பழுது பார்க்கும் எதிர்க்கடைக்கு முகம் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தான்.  பிறகு தமிழ்நம்பியின் மனப் போக்கை மாற்ற அந்தக் கடையைச் சுட்டிக் காட்டி  “சார்.. அங்க பாருங்க…  பழுதுநீக்கித் தருபவர் அதன் பாகங்களையும், திறனையும் நுட்பமாக அறிந்திருக்கிறார். அதனால்தான் அவர் கடைக்குக் கூட்டம் வருகிறது. அப்படித்தானே  நாமும். இருக்கும் புத்தகங்களில் கால்வாசியாவது முழுசா படிச்சுட்டு பேசுனா வாடிக்கையாளர் இன்னும் நம்மோடு நெருக்கமாவார் அல்லவா ”  என்றான்.

தமிழ்நம்பியின் முகம் மாறியது. என்றாலும் கோபத்தை காட்டிக் கொள்ளாமல் தமிழின் நம்பர் ஒன் பதிப்பாளர் ஒருவரின் பெயரைச் சொல்லி “அவர் புத்தகங்களை வாசிப்பதற்கும் கருத்துச் சொல்வதற்கும் ஒரு குழுவை நியமித்திருக்கிறார். அவர்கள் இதையெல்லாம் பார்த்துக் கொள்கிறார்கள். உங்களைக் கூட அதற்காகத்தான் பணியில் சேர்த்திருக்கிறேன்” என்றார்.

 “தன்னம்பிக்கை புத்தகங்களையும், மலினமான குடும்ப நாவல்களையும், மேம்போக்கான சுருக்க வரலாற்று நுல்களையும் விற்பதே வாசகனை தற்காலிக போதையை ஏற்றி ஏமாற்றும் வியாபாரம்தான்”

“நீங்கள் பிழைப்பதற்கான வழியைச் சொல்லவில்லை. என்னை வீழ்த்துவதற்குத்தான் வந்திருக்கிறீர்களோ என்று சந்தேகம் வருகிறது”.

அதற்கு அவன் “ நாம் பார்ப்பது வெறும் வியாபாரம் மட்டுமல்ல. வியாபாரத்தோடு இணைந்த வாழ்வியல் கலை . இந்தக் கலை வேறெதையும் கணக்கில் கொள்வதில்லை. நீண்ட கால மானுட பண்பாட்டு வளர்ச்சியின் விழைவுக்கு என்ன செய்தோம் என்பதைத்தான்”   இப்படி அவன் பேசப்பேச ஒரு தொழிலாளியின் வரம்பு மீறலை தமிழ்நம்பியால் சகித்துக் கொள்ளவே முடியாதிருந்தது. வாதங்கள் இப்படியாக இருவேறு ஒற்றையடிப் பாதைகளுக்கு சென்றது. மற்ற கடைக்காரர்களெல்லாம் மூடிவிட்டு சென்றிருக்க இருவரின்  காரசாரமான உரையாடல் காம்ப்ளக்ஸில் எதிரொலித்தது

இப்படி அடிக்கடி சீண்டும் போதெல்லாம் அவருக்கு ஏண்டா வேலைக்குச் சேர்த்தோம் என்றாகிவிடும். எதற்கெடுத்தாலும் அவன் தன்னோடு முரண்படுவது எரிச்சலை ஏற்படுத்தியது.  கடைசியில்  கருணையின் அடிப்படையில் பொறுத்துக் கொள்வதாகச் சொல்லி “வீட்டுக்குக் கிளம்ப நேரமாகிவிட்டது” என்று பேச்சைத் துண்டித்து அவர் தன்னியல்பிலிருக்கும் உலக சமாதானத்தோடு வீட்டிற்குக் கிளம்பினார்.

வேலைக்குச் சேர்ந்து எட்டு மாதங்கள் முடிந்திருந்தது. அடிக்கடி நேரம் தவறாமை, ஒழுக்கம், கொடுக்கல் வாங்கலில் நேர்மை போன்றவை பற்றியெல்லாம் பேசி இட்ட வேலையை குறித்த நேரத்தில் முடித்துக் கொடுக்கச் சொல்வார். அவனால் பிரதிகளைப் பிழையின்றி தட்டச்சு செய்வதற்காகவும், புத்தக உருவாக்கத்திற்காகவும் நேர்த்திக்காக அவகாசம் எடுத்துக் கொள்வான். அதனால் தாமதம் நேரும்படியாக தமிழ்நம்பி கண்டிப்பார்.

ஒரு வாசகராவது வந்த பிறகுதான் கடையைச் சாத்த வேண்டும் என்பது தமிழ் நம்பியின் கட்டளை. அதனால் பக்கத்துக் கடைகளெல்லாம் அடைத்துபிறகு கடைசியாகத்தான் இவன் கடையை சாத்துவதுண்டு.  இப்படியே இரவில் வீடு திரும்பும் வேளைகளில் எல்லாம் முடிவெடுப்பான். இனி தமிழ் நம்பியிடம் வாக்குவாதம் வேண்டாம். வேலையைத் தக்கவைக்க இட்ட வேலையைச் செய்வோம் அவரை இனி சலனப்படுத்தி தானும் சிக்கலுக்குள் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று எண்ணுவான். தீவீர வாசகனை நவீன இலக்கியத்தின் அறம் அவ்வளவு லேசில் விடுமா என்ன?

                                          ……………………                       ………………….

அன்று சம்பளம் கொடுக்கும் நாள். ஒரு முடிவோடுதான் வந்திருப்பார் போலிருந்தது.  ஏதும் இவனோடு பேசவில்லை. ஒன்றிரண்டு உதிர்த்தாலும் இவனைக் குத்திக் கிளறுவதுபோலிருந்தது.   இருவருக்குமான எதிரும்புதிருமான விவாதங்கள் அதிக வெம்மை  கொண்டிருந்தது.

கடைசியாக தன் மனதில் பட்டதை பட்டவர்த்தமான வார்த்தைகளால் பதிலடி கொடுக்க நினைத்தான்.  “நீங்கள் வீட்டிலிருந்தோ அலுவலக அழுத்தங்களிலிலிருந்தோ தப்பித்துக் கொள்ளத்தான் இந்தப் புத்தகம் பதிப்பிக்கவும் விற்பதற்குமான ஆர்வம் கொண்டீர்கள். மேலும் உங்களுக்கு அறிவார்ந்த சமூகத்தின் எண்ணிக்கையில் ஒருவராகக் காட்டிக் கொள்ளும் அடையாளத் தொந்தரவிலும்தான்…” என்றான். அது தமிழ்நம்பியின் ஆழ்மன குணங்களைக் கிளறிப் பார்த்தது.

மேலும் அவன் அத்தோடு  நிறுத்தாமல் “டென்னிஸ் மைதானத்துக்கு வெளியில் நின்று பந்து வீசும் வேலையைத்தான் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்றான்.

 “ நீ வேலைக்கே வரவேண்டாம்.. யார்கிட்ட எப்படிப் பேசணும்கிறது கூடத் தெரியல. என்ன வாசித்து என்ன கிழித்தாய். கணக்க முடிச்சுக்கலாம் வேற இடம் பாத்துக்கோ” என்றார் அடித்துவிரட்டாத குறையாக.

சம்பளத்தை வாங்கிக் கொண்டவன் “உங்கள் ஈகோதான் உங்களுக்கு எதிரி” என்று விடைபெற்றான்.

                           ……………..                                  ……………………

வீட்டில் தினமும்  அவனது மனைவிக்கும் வறுமையை முன்னிட்டு இடையே நடந்த சண்டைகள் அப்போது அக்கம்பக்கத்து வீட்டார் எல்லாம் பயப்படும்படியாக அமைந்தது. வீட்டின் உரிமையாளர் “தயவுசெய்து வீட்டைக் காலிசெய்து விடுங்கள்” என்று கெஞ்சாத குறையாக மன்றாடத் தொடங்கி விட்டார்.

அவன் “இனி இப்படியெல்லாம் நடக்காது” என்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டான்.

வேலையை விட்டு ஒருவாரம் ஓடியது. அப்போது வந்த செல்போன் அழைப்பில் தமிழ்நம்பி. மீண்டும் புத்தகக் கடை வேலைக்கு வரச் சொல்லியிருந்தார்.‘அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. வீட்டில் மனைவி அலுவலகத்தில் தமிழ்நம்பி. வாழ்க்கை இழுத்துச் செல்லும் பெருஞ்சாலையின் நீளத்திற்குப் பணிந்தான்.

முதலாளியின் அனேக ஆற்றாமைகளுக்கும் காது கொடுப்பதற்கும்தான் சம்பளம் என்பதாக நடந்து கொண்டான். எல்லாம் சரியாக  நடந்தது. அவனது நேரம்தான் அவனிடம் இல்லை. வேறு வழியில்லை தன் சுயம் தலை தூக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டான்.

                                        ………………………            ………………

அன்றிரவு தமிழ்நம்பி தனக்கு இடப்பட்டிருந்த வேலை முடித்து தி.நகர் பேருந்து நிலையத்துக்குள் நுழைந்தான். பலத்த மழையினால் ஓடுதளம் முழுவதும் நீர் தேங்கியிருந்தது. கே.கே.நகர் செல்லும் பேருந்து எப்போதும் போல் தயாராக நின்று கொண்டிருந்தது. சிறுநீர் கழிக்க முடுக்கிக் கொண்டிருந்தது. ஒதுக்குப் புறமாகச் சென்றான். ஏற்கனவே இருந்த கழிப்பிடம் இடிக்கப்பட்டு பெயர்ந்து அலங்கோலமாகி நெடுநாட்களாகியிருந்தது. மூத்திர நெடியிலிருந்து கிளம்பிய அமோனியா வாயு மூக்கைத் துளைத்துக் கொண்டிருந்தது. மக்கள் கூட்டம் மழை நீரோடு கலந்த மூத்திரத்தில் நடந்துதான் தங்கள் பேருந்துகளைத் தேடிக் கொண்டிருந்தார்கள்.

இவ்வளவு கூட்டத்தை ஈர்க்கும் வகையில் இருக்கைகள் எல்லாம் உபயம் செய்யும் ஜவுளி நிறுவனங்கள் ஏன் ஒரு கழிப்பறை கட்டிக் கொடுப்பதில்லை. கழிப்பறைச் சுவரில் அவர்கள்  நிறுவனங்களின் விளம்பரங்களை பொறிப்பதை அவமானமாகக் கருதுகிறார்கள். பேருந்து நிலையத்தில் போதுமான மின் விளக்குகளும் இல்லை. மேற்கூரை ஆங்காங்கே பெயர்ந்திருந்தது. கோடி கோடியாய் மக்களிடமிருந்து பணத்தைக் கறப்பவர்களை எதிர்க்கத் திரணியற்ற ஜனம்.  எல்லோர் மீதும் வெறுப்பை உமிழ்ந்தவாறு அவன் தனது பேருந்தை நெருங்குவதற்குள் எல்லா இருக்கைகளும் நிறைந்தன.

அன்று சனிக்கிழமையாதாலால் ஐந்தாறு நபர்களை அவன் குடி போதையில் பார்க்க நேரிட்டது. அவர்கள் அழுக்குப் படிந்த ஆடையில் இருக்கும் உடலுழைப்புத் தொழிலாளிகள். பேருந்து முழுவதும் டாஸ்மாக் நாற்றம். குடிபோதையில் ஐம்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவர் நிற்க முடியாமல் தள்ளாடிபடி உட்கார இடம் கேட்டுக் கொண்டிருந்தார்.  ஒரே ஹெட்செட்டில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்த காதல் ஜோடியின் பக்கம் வந்து “ஆண்கள் வரிசைப்பா இது… ஏழ்ந்திரிங்கோ” என்றார். அவர்கள் அலட்சியமாக இசையில் சங்கமித்திருந்தனர்.  யாராவது ஒருவர் அவரை ஒரு குடி நோயாளியாக மதித்து இடம்தர மாட்டார்களா என்று எதிர்பார்த்தான். அவர் தன்னைப் போலவே மனைவியுடன் தகராறு செய்து கொள்கிறவரா. கையில் துணிப்பையும், பாயையும் ஏன் தூக்கிக்கொண்டு அலைகிறார். ஆனாலும் அவ்வளவு போதையிலும் எவ்வளவு கண்ணியமாக நயந்து இடம் கேட்டார்.

கூட்டத்தை விலக்கி மெல்ல அவர் பக்கத்தில் சென்று  “பாயையும் ஏன் தூக்கிச் சுமக்கிறீங்க” என்று கேட்டான்.

“கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில பிரண்டு வெயிட் பண்ணிக்கினு ருப்பாரு. அவருக்குக் குடுக்கக் கோசரம்..” என்று சிவந்த கண்களால் அவனை ஏறிட்டுப் பார்த்தார்.

“இது கோயம்பேடு போகாதே… கோயம்பேடு செல்லும் பேருந்தில் ஏறியிருக்கலாமே”

அவர் காதில் சரியாக விழவில்லை.

“உண்மையச் சொல்லுங்க அண்ணாத்த… வீட்ல ஏதும் என்னமாதிரி பிக்கல் பிடுங்கலா… பஸ் ஸ்டாண்டில போய் படுக்கப் போறீங்க அப்படித்தான…” என்று பணிவாகக் கேட்டான்.

அலையும் சிவந்த கண்களை நிறுத்தி கோபத்துடன் “அடப்போப்பா.. நான் ஆட்டோ பிடிச்சிக்கினுகூட வூட்டுக்குப் பூடுவேங்…. இது என் பிரண்டுக்கு”  சொல்லிவிட்டு முன்வாசல் நோக்கி நகர்ந்தார். முதலில் இருந்தே கவனித்துக் கொண்டிருக்க வேண்டும்.  திருநங்கைகளில் ஒருவர் எழுந்து அவருக்கு இடமளித்தார்.

மழை வலுத்துப் பெய்து கொண்டிருந்தது. பேருந்து கே.கே. நகரை நெருங்கியது. பேருந்திலிருந்து இறங்கி ஒரு ஹோட்டல் பக்கமாய் ஒதுங்கினான்.  மழை நிற்கும் சமயத்திற்காகக்  காத்திருந்தான். அவன் எதிர்பார்க்காத ஒரு அதிசயம் நடந்தது. அவன் மனைவி அவனுக்கு முன்னே குடையோடு வந்திருந்தாள். பிடித்தமான தொலைக்காட்சித் தொடரை விட்டு இந்நேரம் எப்படி வந்தாள்.. ஒரு நாளும் இப்படி நடந்ததில்லையே என்று அவள் முகத்தைப் பார்த்தான். “வாங்களேன்.. சீக்கிரம்” என்று அதட்டலோடு  கூப்பிட்டாள். ‘அந்த அன்புக்கு என்ன அர்த்தம்… என்ன விழைவு’  அவனால் விளங்கிக்கொள்ள முடியவில்லை.

காலையில் வேலைக்குக் கிளம்பும் நேரம். வீட்டு  நிலைவாசல் பக்கமாய்  ஊர்ந்து உள்ளே வந்து கொண்டிருந்த கறுப்பு எறும்புக் கூட்டத்தை பெருக்குமாரால் அவள் வெளியே தள்ள முற்பட்டபோது  “அது உன்னைய என்ன பண்ணுச்சு.. அதுபாட்டுக்கு போகட்டும்.. அது தன்னோடமுட்டைகள எடுத்துக்கிட்டு பாதுகாப்பான வேறு இடத்துக்கு மாறுது. அது வாயப் பாரு…. வெள்ளையா இருக்குல்ல அதுதான் அதன் முட்டை. சற்று நேரத்தில் காணாமல் மறைந்துவிடும்” என்று தடுத்தான்.

“ஈ எறும்பு மேலயெல்லாம் பாவம் பாக்கிறவர் கட்டின பொண்டாட்டிக் கிட்ட எறிஞ்சு எறிஞ்சு விழறீங்க” என்று சொன்ன அவளது வார்த்தைகளை இப்போது நினைத்துப் பார்த்தான்.

மழையில் நீண்டு கிடந்த அந்தச் சாலை வழுக்குமரமாய் பளபளத்தது. தன் மனைவியுடன் பிணைக்கப்பட்ட உறவில் ஏற்படும் சண்டைகளும் சமாதனங்களும் கூட ஏறஏற சறுக்கும் வழுக்குமரமாகவே அவனுக்குப் பட்டது.  அபூர்வங்களும்,  அசட்டுத்தனங்களும் சுயம் நசித்தலும் அறச்சீற்றங்களும் மாறிமாறி  நிரம்பி வழியும் வாழ்வின் அத்தனை சந்திப்புகளிலும் அவன் மனம் யாரோடும் எதனோடும் ஒட்டிக் கொள்ள மறுக்கிறது. தன் புலனுணர்வுகளுக்குப் பிடித்த எந்த ஒன்றின் மீதும் உச்சபட்ச கலவித் திளைத்தலுக்கு  உடன்பட்டவன்தான்.

பள்ளிக்காலங்களில் தன் சொந்த ஊரில் பொங்கல் விழாக்களில் வழுக்குமரப் போட்டிகளில் பங்கேற்றவன் அவன். ஒருமுறை கூட வெற்றி அடைந்ததில்லை. ஆனாலும் எந்த வருடமும் கலந்துகொள்ளாமல் இருந்ததில்லை. இப்போதும் அதே வழுக்குமர விளையாட்டு. மறுமுனை எதுவென்று கண்ணுக்குத் தெரியாத வகையில் இருட்டில் நிலை கொண்டிருக்கிறது. அங்கு கட்டப்பட்டிருகும் பரிசுப்பொருள் என்னவென்றும் அறியமுடியவில்லை. சறுக்கச் செய்யும் கசட்டு எண்ணையினை பொருட்படுத்தாது அவன் முன்னேற வேண்டும். அதுவே தற்காலிகத்தில் தனது உயிர்கொண்ட விதியும் வேட்கையும் என்று சமாதானம் கொண்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *