கருத்த லெப்பை- நாவல் வாசிப்பனுபவம்

இழுப்படிப்பட்டி என்றொரு கிராமம்‌. 50க்கும் குறைவான குடும்பங்களை கொண்டதாக வடகரை தென்கரை என்ற இரண்டு ஊர்களுக்கு நடுவில் ஓடும் ஆற்றின் மேல் சிறிய திட்டு போல காணப்படும். அந்த ஊரைப் பற்றிய நினைவைக் கிளறுவதாக கருத்தலெப்பை ஆரம்பிக்கிறது. அந்த கிராமவாசிகளுக்கு அடிக்கடி ஊரிலிருந்து வெளியே வந்து போவது சிரமம். அவர்களது வசிப்பிடத்தை சுற்றிலும் விவசாயம் நடந்து கொண்டிருப்பதும் அங்கு முளைத்துள்ள புற்களும் மட்டுமே அவர்களுக்கான தொழிலும் ஆசுவாசமும். பாலம் அந்த ஊருக்கு வருமா என்பது இன்றுவரையிலான கேள்விக்குறியே. ஆங்காங்கே மலைப்பகுதிகளில் மின்சாரம் இல்லை சரியான பாதை இல்லை போன்ற செய்திகளை அன்றாடம் பார்த்து வருகிறோம். அதற்கிடையே நகரங்களுக்கும் பெரும் கிராமங்களும் சில கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு சிறு கிராமத்திற்குள் பால வசதி கிடையாது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

இப்படியான பல கிராமங்கள் தமிழ்நாட்டில் உள்ளது. ஆற்றுப் பாதையில் தண்ணீர் ஓடினால் ஆடைகளை தூக்கிக் கொண்டு நடந்து சென்று கரையேற வேண்டும் இந்த கிராமம் ஓர் சிறிய உதாரணம் தான் இதை விட அதிக சிரமங்களுக்குள்ளான கிராமங்கள் தமிழ்நாட்டில் இருக்கத்தான் செய்கிறது. இருப்பினும் இந்த நாவலில் ஆறு பாலம் முதலான சொற்கள் அர்த்தமுள்ளவையாக கதாபாத்திரங்களின் நிலைப்பாடு வழியாக கடத்தப்படுவதால் அந்த கிராமத்தைப் பற்றிய சிந்தையை ஆரம்ப அத்தியாயத்திலேயே உருவாக்கி விட்டது. மூல வியாதி மல்லாக்க படுக்க கூட விடாத அளவிற்கு தன் வேலையை சிகப்பு தெறிக்கக் காட்டும் சக்தி வாய்ந்தது. எல்லா வியாதிகளுக்கும் நம்மை சுற்றி இருப்பவர்கள் ஆள் ஆளுக்கு தங்கள் அபிப்ராயங்களையும் கை வைத்தியங்களையும் சொல்லி நம்மை பெறும் நோயாளியாக்க தயங்குவதில்லை. பக்தி நூல்களுள் ஆழமான வாழ்வியலும் வாழத் தேவையான அனைத்து கருத்துக்களும் அடங்கியுள்ளது என்பதில் பலருக்கு முழு நம்பிக்கை உண்டு.

நம்முடைய பகுதியை பொறுத்தவரை இதற்கு எடுத்துக்காட்டாக கிறிஸ்தவர்களையும் இஸ்லாமியர்களையும் உதாரணமாக என்னால் சொல்ல முடியும். சீன படங்களில் புத்த பிக்குகள் வைத்தியம் செய்யும் காட்சி இடம்பெறவில்லை என்றால் தான் வியப்பு என சொல்லும் அளவு மருத்துவத்தோடு மதம் பிணைக்கப்பட்டிருக்கும். சீன படங்களை மட்டும் முன்வைக்கிறேன் என எவரும் குறைபட்டுக் கொள்ள வேண்டாம் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் இலங்கையில் அருண்மொழிக்கு ஏற்படும் ஆபத்தின் போது வரும் காட்சியில் மதத்திற்கும் வைத்தியத்திற்கும் இடையிலான ஆழமான பிணைப்புடன் கூடிய வேரைப் பார்க்கலாம். ஆகவே குர்ஆனை அடிப்படையாகக் கொண்டு நன்னி அத்திப்பழம் சாப்பிட்டால் ரத்தப்போக்கு நின்று விடும் என்று மூலத்திற்கு வைத்தியம் சொல்வதில் தவறு ஏதுமில்லை. ராவுத்தர், லெப்பை வேறுபாட்டுணர்வையும் இஸ்லாமிய சமூகத்திற்குள் சமரச குறைபாடாக நிகழும் சச்சரவுகளையும் முதல் அத்தியாயத்திலேயே கீரனூர் ஜாகிர்ராஜா தொட்டுவிட்டார்.

“குதிரைக்கார ராவுத்தர் உசத்தி. ஓதிக் கொடுக்கிற லெப்பை கீழ்மட்டம்." என்கிற வரிகள் இவர்களுக்குள் இருக்கும் வேறுபாட்டை உணர்த்தப் போதுமானது. குதிரை வீரர்களை ராவுத்தர் என்றும் யானைப் பாகனை மாவுத்தர் என்றும் மரக்கலத்தில் சென்று வியாபாரம் செய்பவர்களை மரைக்காயர் என்றும் அரபு நாடுகளில் இருந்து குடிபெயர்ந்து வந்து பள்ளிவாசலில் ஓதுபவர்களை லெப்பை என்றும் இசுலாமிய சமூகத்திற்குள் தங்களைத் தாங்களே பிரித்து அழைக்கின்றனர். இது குர்ஆன் வழிப்பட்ட பிரிவு இல்லையென்றாலும், இத்தகைய பிரிவு சமூகத்தில் செலுத்தும் ஆதிக்கத்தை சுருக்கமாகவும் தெளிவாகவும் பேசக்கூடியதாக கருத்த லெப்பை நாவல் இருக்கிறது. “பள்ளிவாசலுக்குள் இறைவனே முதலாளி." என்ற வரிகள் பள்ளிவாசலுக்கு வெளியே என்ன நிலைமை என்ற பக்கத்தைப் புரட்டிப் பார்க்க வைக்கிறது. உணவு அரசியல் இசுலாமிய சமூகத்திற்குள்ளும் புரையோடிக் கிடப்பதனை மாட்டுக்கறி சாப்பிடும் லெப்பைகள் பற்றிய ராவுத்தர்களின் குத்தல்கள் மூலம் வெளிவருகிறது. ராவுத்தர்களுக்கு முறுக்கு சுட்டு விற்கும் பாத்திமா சுரண்டப்படும் கணக்கை கருத்த லெப்பை கணக்கிடுவதற்கு கூட இடம் தராத அளவிற்கு லெப்பைகளும் தங்களை கீழ்நிலைப் படுத்திக் கொண்டுள்ளனர்.

இறைநம்பிக்கையை ஆழமாக கடைபிடிக்கும் இசுலாமிய சமூகத்திற்குள் பொருளாதார அளவில் உலகத்தொழில் செய்யும் ராவுத்தர்கள் உயர்ந்திருப்பதும் இறைத்தொழில் செய்யும் லெப்பைகள் ஏதுமற்றவர்களாக தாழ்ந்திருப்பதும் முரண். சாதி பார்க்கும் மனநிலையைப் போன்று உதவி செய்யக்கூடிய விசயங்களிலும் இந்த வேறுபாடு ஆழம் பதிந்திருக்கும் ஏற்றத்தாழ்வை கீரனூர் ஜாகிர்ராஜா வெளிப்படுத்தியுள்ளார். மனிதர்களுக்கு மட்டுமன்றி வளர்ப்பு பிராணிகளுக்கும் பெயர் சூட்டும் போது அந்த பெயருக்கு பின் உள்ள அல்லது அதே பெயரை முன்னர் வைத்திருந்த நபர்களின் குணாதிசயங்கள் சில சமயங்களில் ஒட்டிக் கொள்வதும் உண்டு பல சமயங்களில் ஒட்டிக் கொள்ளாமல் இருப்பதும் உண்டு இங்கு ஆக்ரோஷமான பூனைக்கு ஹிட்லர் என்று லெப்பை பெயரிட்டதும் அதற்கு இபிலீஷ் என பெயர் வைத்திருக்கலாம் என்ற அவனது அம்மா தன் அபிப்பிராயத்தை சொல்லி திட்டுவதும் கவனிக்கத்தக்கது.

ஜபருல்லாஹ் என்ற பெயர் கருத்த லெப்பை ஆனதும் இன்னும் பல லெப்பைகள் அவர்கள் செயல் மற்றும் உருவம் மூலம் பலவாறான பெயர்களைக் கொண்டு விளங்கியதையும் நாவல் குறிப்பிடத் தவறவில்லை. கொடிக்கால் மாமு, பாவா, அமீது ஆகியோரின் தாக்கத்துடனும் நூல் வாசிப்பு அறிவும் சிந்தனையும் அக்காவை பெண் என்ற நிலையில் வைத்து அவள் மூலம் எல்லாப் பெண்களையும் நினைவில் கொண்டு வந்து யோசிப்பவனாகவும் கருத்த லெப்பையின் சித்தரிப்பு யதார்த்த கலக குரலாக சித்தரிக்கப்பட்டு இருக்கிறது. இஸ்லாத்தில் பக்கிரிஷாக்களும் சூஃபிகளும் கவர்ந்திழுக்கும் கூடியவர்கள். கலைநயமும் தத்துவார்த்த அமைதியும் மெதுவாக அலையாடும் இயல்பு படைத்தவர்களாக எனக்கு அவர்கள் தெரிகின்றனர். பக்கிரிஷா ஒருவர் திப்புசுல்தான் காலத்தில் இருந்து தேசம் விடுதலையடையும் நாள்வரை பலவகையில் பாடுபட்டதைக் குறிப்பிடுகிறார். இந்த விடுதலைபோராட்ட வரலாற்றினூடே அரசியலுக்குள் இசுலாமியர்களுக்கு இருந்த தி‌.மு.க மோகத்தைக் குறிப்பிட்டதும் முக்கிய பதிவு. பாவா ஒரு பக்கிரி சூஃபி நிலை கொண்டவராகவே கருத்த லெப்பையின் கண்களுக்கு தெரிகிறார்.

அப்துல்லா பித்து லெப்பை ஆனதன் பின்னே ஒரு சூஃபியின் வேதனை மொழிகள் ஒளிந்திருக்கிறது. இதே கலைநயத்தைக் கொண்டவர் சவ்வுமிட்டாயில் கடிகார மிட்டாய் செய்து தொழிலோடு சந்தோஷத்தையும் மனைவி என்ற உறவில் ஏமாற்றத்தையும் சம்பாதித்து மரத்தடியில் உட்கார்ந்திருக்கும் அமீது. ஆண்புணர்ச்சியை பாவமென கருதும் இஸ்லாத்தில் அதை செய்யும் இசுலாமியர்களை விட ராதிம்மாவிடம் ரசூலின் உருவம் எப்படி இருக்கும் எனக்கேட்டு அதை ஓவியமாகத் தீட்டி அமீதிடம் கொடுத்து களிமண் சிலை செய்யச் சொல்லி அதைப் பார்க்கும் போது அடிபடும் கருத்த லெப்பையின் வீழச்சியுடன் கதை முடிகிறது. ரசூல் இப்படி இருப்பார் என்பது மறைவான வாக்குகளாக நாவலில் வெளிப்படாமல் ராதிம்மா மற்றும் கருத்த லெப்பையுடன் புதைந்துள்ளது. ராதிம்மா ஒரு லெப்பையாக குர்ஆன் பற்றுகொண்டிருக்க நன்னியம்மா இஸ்லாம் காஃபீர்களுக்கு வகுக்கும் இலக்கணத்தோடு சூனிய, மாந்திரீக வழக்கம் கொண்டு இருக்கிறாள். நூர் லெப்பையின் மறைவில் அவர் மனைவி பார்க்க நினையாது போவதும், சின்னப் பேச்சி கள் குடித்து மார்பை அறுத்தெறிந்து அழுவதும் முக்கியமான பகுதி. வேறொரு இசுலாமிய பெண் நூர்லெப்பைக்கு மற்றொரு மனைவியாக வாய்த்திருந்தால் அவள் அமைதியாக இருந்திருப்பாளா என்ற கேள்வியும் எழுகிறது. இந்த நாவலில் ருக்கையா முனியம்மாவுடன் ஒப்பிடப்படுகிறாள்‌.

ஏனைய பல பெண் பாத்திரங்களும் இந்த நாவலில் சில இடங்களில் தனது இருப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றனர். இந்த இருப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துதல் சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை நாவலில் வரும் பெண் பாத்திரங்களில் இருந்து வேறுபடுகிறது. ஆனால் இரண்டு நாவல்களும் இஸ்லாமிய சமூகத்திற்குள் இருக்கும் குறைகளை சுட்டிக்காட்டும் இடத்தில் ஒன்றுபடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *