’தாரா’காழ்ப்புணர்ச்சியின் யுத்தம்

 

படைப்பிலக்கிய வடிவங்களில் நாவல் வாசிப்பது நல்ல அனுபவம். சிறுகதைகள் போலல்லாமல் வாசகனைத் தொடர்ச்சியாக சிலபல நாட்களுக்கு தன்னுடன் பயணம் செய்யவைத்து அதன் தட்ப வெப்பச் சூழலோடு நம்மையும் பிணைத்து பரவசமூட்டக்கூடிய இலக்கியப் புனைவு நாவல். அதிலும் வாசகன் அறியா ஒரு கதைக்களத்தையும், கதை மனிதர்களையும், நில அமைப்பையும் அறிமுகம் செய்து அவனுக்குள் புதிய அனுபவத்தை ஏற்றி அறிவார்ந்த சூழலுக்குள்ளேயே அவனை வைத்துக்கொள்வது நாவல் எழுத்தின் பயனாகும். நாவல் நெடுக்க  புனைவுத்தர்க்க  எல்லைக்குள் இயங்கவைத்து, வாசித்து முடித்த பின்னரும் அதன் இயங்கு விசையை வாசகனிடம் கடத்தி பாதிப்படையச் செய்யும் நாவல் சிறந்த படைபென்பேன் . ‘தாரா’ அதனை செவ்வனே செய்திருக்கிறாள்.

தாரா நாவல் கரங்கான் எனும் சிற்றூரின் சுங்கை எனும் கிராமத்தின்  நிலப்பகுதியை மையமாகக்கொண்டியங்குகிறது. நவீன் அங்கு தன் பருவ வயதில் சிலகாலம் வாழ்ந்தவர். இந்த நாவலைப் படிக்கும்போதே எனக்குச் சில நினைவுகள் மலர்ந்தன. அவர் குடியிருந்த வீடமைப்புப் பகுதிக்குச் சென்று இலக்கிய நிகழ்ச்சி ஒன்றுக்கு அழைத்துச் சென்று திரும்பக்கொண்டுபோய் விட்டிருக்கிறேன். அந்த நிலப்பகுதி அவர் குடியிருந்த இடம் என்பதால் அந்தப்பகுதியை விரிவாகவும் தெளிவாகவும். காட்சியைப்படுத்த முடிந்திருக்கிறது அவரால். இன்றைக்கு இலக்கிய ஆன்மிக நிகழ்ச்சிகள் நடக்கும், சுங்கைகோப் பிரம்ம வித்யாரண்யம் இருக்கும் இடத்திலிருந்து  நான்கைந்து கிலோ மீட்டர் தூரத்தில்தான் கரங்கான் என்ற சிற்றூர் அமைந்திருக்கிறது. தன் பருவ வயதில் அலைந்த் திரிந்து பதிவு செய்துகொண்டவையே நாவலின் களமாக ஆகியிருக்கியிருப்பது வியப்பதற்கு ஒன்றுமில்லையென்றாலும், கரங்கான் சிறுபான்மை தமிழர்கள் வாழும் இடம். அந்தச் சிற்றூரில்  ஒரு ஆழஅகலமானகதையாக எழுதவதற்கான வாய்ப்பை ஒரு நல்ல நாவலாசிரியரால் மட்டுமே அகழ்ந்து எடுக்க முடியும். நவீனுக்கு அக்கலை கைவந்திருக்கிறது. நாவல் நிகழும் நிலம் நிஜமானது என்றாலும் கற்பனையால் எழுந்து வரும் பாத்திரங்களும் சம்பவங்களும் நம்பகத்தன்மைக்கு சற்றும் குறைவில்லாமல் எழுதப்பட்டிருக்கிறது.இயல்பாகவே தன் புலன்களால் உள்வாங்கிக்கொண்டவை ஒரு நல்ல புனைவாளனுக்கு நுண் விவரணைகளாக துலங்கிவரும்.நாவலில் பல இடங்களில் அந்த நுண்கலையை வாசிக்கமுடிகிறது.நாவல் அந்தாரா வரும் இடங்களில் மிகுபுனைவில் இயங்குகிறது ஆனாலும் அது நம்பகத்தன்மையை விட்டு வெகுவாக விலகிவிடாமல் ஒரு கட்டுக்குள்தான் இயங்குகிறது. இதனை கிட்டதட்ட மீமெய்யியல் ( metaphisics) என்று வரையறுக்கலாம். நம் அறிவுக்குப் புலப்படாத சில விஷயங்கள் நடக்கும். ஆனால் அதனை முற்றாக புறந்தள்ளிவிட முடியாது. நம்பகத் தன்மைக்கு மிக அருகில் இருக்கும் செயல்பாடுகள் அவை..

அவர்  நாவலை சொல்லிச்செல்லும்  விதம் தொடக்கத்தில் புரிபடவில்லை. ஏதோ அறுபடல் நிகழ்ந்துவிட்ட மயக்கத்தை உண்டாக்குகிறது. கடந்த காலக் கதையைச் சொல்லிவிட்டு நிகழ்காலத்துக்குத் தாவுகிறார் பின்னர் மீண்டும் கடந்தகாலத்துக்குப் போய் கதையை பின்னுகிறார். நான்கு அத்தியாயங்கள் வாசித்தவுடன் நமக்கு முதலில் தோன்றிய குழப்பம் தெளிவடைகிறது, இந்தச் அடுக்குமுறை நிரல் புதிய பாணியில்லை என்றாலும்  வாசகனைப் நாவலுக்குள் பிடித்துவைத்துக்கொள்ளும் உதவும் உத்தியாகவே இதனை நான் பார்க்கிறேன். நாவலோ சிறுகதையோ ஒரு குறிப்பிட்ட வடிவ வரையறைக்குள் அடக்கிவிட முடியாது, வடிவங்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கின்றன. ஒரு நல்ல நாவலாசிரியன் தன் கதைப்பின்னலைத் தானே தகவமைத்துக்கொள்கிறான். அந்தக் கதைப்பின்னல் நாவல் ஓட்டத்துக்கு தடையில்லாமல் ஒத்துழைக்கிறது. வாசகனின் எதிர்பார்ப்புக்கேற்ப அவன் இசைந்து போவானாயின் அவன் ஞனரஞ்சகப் படைப்பாள்னாகிவிடுவான்.நவீனின். பேய்ச்சியையும் சிகண்டியையும் வாசித்துப்  பழக்கப்பட்டவர்களுக்கு இந்தச் செய்முறை எந்த வகை குழப்பத்தையும் கொடுக்காது. புதியவர்களை சற்றே குழம்பினாலும் நான்காவது அத்தியாயத்தில் மீண்டு விடுவார்கள்.

நாவலின் முதல் அத்தியாயம் குகனின் கொலையால் பரபரப்படைகிறது. அந்தத் திகில் சம்பவம் நாவலை விடாமல் பின்தொடர ஏதுவாகிறது. அங்கிருந்து அது பரபரவென விரிவடைந்து உச்சத்தை அடைகிறது. எண்ணற்ற கதைப் பாத்திரங்களும், இணைக்கதைச் சம்பவங்களும் வந்தாலும் ஒன்றோடொன்று தொடர்புறுத்திகொண்டே இருக்கிறது. எங்கேயும் அந்தச் சங்கிலி அறுபடவில்லை. மாநுட செயல்பாடுகள் துண்டு துண்டாக இருப்பதுபோல தென்பட்டாலும் அவை ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. இந்த நாவலில் அந்த இயல்பான அமைப்பை அழுத்தமாகவே நிறுவிடுகிறது. இந்த தொடக்க அத்தியாயத்திலிருந்து நாவல் பந்தயக் குதிரையைப்போல் முடிவை நோக்கிப் பாய்ந்து ஓடுகிறது.

நாவலில் இன்னொரு கவனிக்கத்தக்க அம்சம் அதன் நுண்விவரணைகள்.

 மலேசியா விவாசாய நாடாக இருந்து தொழில்நுட்பத்துக்கு மெல்ல தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் காலத்தைக் காட்டுகிறது. சுங்கைவாழ் மக்கள்அந்த மாற்றத்திற்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ள துடித்த தொடக்ககால காட்சியைக் காட்டுகிறது. கரங்கானில் ஓடும் நதியின் காட்சியும் அந்த நதிநீரின் சுவையும், அந்த நீரால் விளைந்த பயிர்கள் சுவையாக இருப்பதையும் சொல்லும் இடங்கள் நுணுக்கமானவை.பதினோறவது அத்தியாயம் முழுதும் சுங்கை நில அமைப்பை கண்ணாடிபோல காட்டிச் செல்கிறது. இந்த நுண் விவரணைகளால் நாவல் செறிவடைந்திருக்கிறது.

நாவலை நகர்த்திச் செல்வதே உரையாடல்தான், அதில் தொனிக்கும் அடித்தட்டு மக்களின் மொழி கூர்மையாகவும் அதன் யதார்த்தத்திலிருந்து நழுவாத போக்கும் கொண்டிருக்கிறது, சில இடங்களில் காரசாரமான வாக்குவாதமும் சூழலுக்கேற்ப வலுவடைகிறது, அதற்குக் கம்பத்து மக்கள் பயன்படுத்தும் மொழியும் இடத்திற்கேற்ப பொருந்தி இயங்குகிறது. ஆனால்…இந்த ஆனாலுக்கு கட்டுரையின் கடைசி பக்கம் பதில் வைத்திருக்கிறது.

8வது அத்தியாயத்தில் ராக்கியிக்கும் குகனின் நண்பர்களுக்கும் நடக்கும் உரையாடலில் ராக்காயி மகன் முத்து போலீசாரல் கைது செய்யப்பட்டுதடுப்புக் காவலில் அடைபட்டு விடுவிக்கப்படுகிறான்.அவன் விடுவிக்கப்பட்ட பின்னர் குகன் அவனை மீண்டும் சண்டித்தனத்துக்கு அழைக்க வருகிறான். அதனை விரும்பாத அவனின் தாய்,

“ அவன் ஏன் வரணும்?” என்று சினத்தோடு கேட்கிறாள்.:

“ஏன் வயசுக்கு வந்துட்டானா அவன்? ஓல கட்டி ஒக்கார வச்ச்சிட்டீங்களா? ஒம்போது பய.” என்று பேச,

அதற்கு ரக்காயி பதிலிறுத்தும் போது ” ஒனக்கு அவ்ளோதான் மரியாத, நாக்க அறுத்திறுவேன்.” இந்த மொழி கமபத்தில் வாழும் அடித்தட்டு மக்கள் பயன்படுத்தும் மொழி.

அஞ்சலைக்கும் அவள் மகள் அமிர்தவல்லிக்கும் நடக்கும் உரையாடலும் உயிர்ப்போடு இயங்குகிறது. அந்த உரையாடல் மானுட இயல்பான அகம்பாவத்தோடு தொடங்கி  கடைசியில் தொப்புள்கொடி உறவான பேத்தி கிச்சியால் அஞ்சலையின் கோபம் தணிந்து  இரங்கி அவளை ஏற்றுக்கொள்வது வரை தீவிரமாக தொனிக்கிறது. இந்த உரையாடல் சம்பவங்கள் இயல்பாகவே அமைந்துவிடுகிறது.

ஒரு மனிதனின் குணத்தைக் கட்டமைக்க இரண்டு முக்கிய காரணங்களை முன்வைக்கிறது. ஒன்று அவன் தன் மூதாதயரிடமிருந்து ஏந்திவரும் மரபணு,அடுத்தது அவன் வாழும் சூழல்.இயல்பாகவே அப்பா அல்லது அம்மாவின் முகம் மற்றும் உடற் சாயல் அவனுக்கு வந்துவிடுகிறது. அம்மா அப்பா யாரோ ஒருவரின் குணமும் உடல் மொழியும்கூட பிள்ளைக்குள்ளும்பதிவாகிவிடுவது இயல்பாகவே,இந்நாவலின் நடக்கும் வன்முறைகளைப் பார்க்கும்போது இது நினைவுக்கு வருகிறது.

ஒருமுறை என் பள்ளிக்கு வரும் ஒரு பெற்றோரிடம் என் சந்தேகத்தைக் கேட்டேன். உங்கள் மூத்த மகள் குணத்தாலும் கல்வியிலும் சிறந்தவராக விளங்கிறார் உங்கள் இளைய மகன் அதற்கு முற்றிலும் வேறொருவனாக இருக்கிறானே என்றேன். அவன் கல்வியிலும் பின்தங்கி குணக்கேடனாகவும் இருந்தான். அவர் சொன்னார் அவன தத்தெடுத்து வளர்த்தோம், ஒரு சிறைக்கைதியின் மகன் அவன் என்றார். என் சந்தேகம் சரியாக இருந்தது. இப்படி பல மகன் மகள்களைப் பார்த்திருக்கிறோம். தாராவிலும் வரும் குகனும் அவன் சகாக்களின் போக்கும் மரபணும் சூழலும் பெரிதாகப் பாதித்திருக்கலாம் என்று தோணுகிறது.

நாவலில் கூச்சலில்லாமல் ஊடுறுத்தும் இன்னொரு அம்சம் சாதிமை.

நேப்பாளில் தாரா நடனத்தைக் கற்றுக்கொள்ளத் துடிக்கும் சனிலின் மகள் அந்தார மாட்டுக்கொட்டகையில் கட்டிப்போட்டு அடிக்கப்படுகிறாள். கீழ் சாதியினர் அந்த தெய்வீக நடனத்தை ஆடக்கூடாது என்று ஒரு சமூகக் கட்டுப்பாட்டை மீறியதால் அந்தச் சிறுமிக்கு லிந்தக் கடும் தண்டனை அளிக்கப்படுகிறது ! இதுபோன்ற  மாநுடப்பிரிவினை எதிர்கொள்ள முடியாமல் மலேசியாவுக்கு குடும்பத்தோடு புலம்பெயர்கிறார் சனில். அதே வேளையில் சுங்கை கம்பத்து சிறுபான்மை மக்களிடமும் சாதிமை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதையும் சம்பவங்களின் வழியே இழையோடவிட்டிருக்கிறார் நாவலாசிரியர். அஞ்சலையின் மகள் அமிர்தவள்ளி ஒரு தாழ்ந்த சாதிக்காரனோடு ஓடிவிட்டு. அவள் கணவன் சுப்ரமணியன் விபத்தில் இறந்துவிட மீண்டும் தாயின் அரவணைப்புக்குத் திரும்புகிறாள். அஞ்சலை அந்தத் தருணத்திலும் தங்களை தாழ்ந்த சாதியினரோடு ஓடிப்போய் குடும்ப மானத்தை வாங்கிவிட்டதாக ஏசுகிறாள் அஞ்சலை. இங்கே என்ன நகைமுரண் என்றால் சனில் சுங்கை கம்பத்தில் நடக்கும் இனக் கலவரங்களால் மிகவும் துயரப்பட்டு அதற்கான சமரசத்துக்கு நாடி வந்து அவ்வூர் மக்களிடம் மன்னிப்புக் கேட்டு நிற்கிறார். அங்கேதான் சனில் நடத்தப்ப்டும் விதம் சாதியக் கொடுமைகளைவிட கீழானாதாகக் காட்டப்படுகிறது நம் மக்களிடம் வேரூன்றிய சாதிய மேட்டிமை .சனிலை மண்டியிட வைக்கிறார்கள் கம்பத்து மக்கள். மோட்டார் சைக்கிளை தங்கள் முன்னால் ஓட்டக்கூடாது என்றும் வியாபாரம் செய்யக்கூடாது என்றும் சபதம் வாங்குகிறார்கள், சுங்கை கம்பத்துப் பையன்கள் சனிலின் தலையைத் தட்டிக் குல்லாயை மண்ணில் விழ தட்டிவிடுகிறார்கள். இந்தச் சம்பவங்கள். சக மனிதனைக் கேவலப்படுத்தும் விதம் தன் இளைய சந்ததியிடமும் பரவச்செய்யும் முறையைப் பார்க்கும்போது சாதி விடாது விரட்டும் பேய் என அறிந்து முடிகிறது. வயிற்றுப் பிழைப்புக்காக நாடி வரும் அந்நிய நாட்டினரை இங்கே நடத்தும் விதம் சாதியப் பிரிவினைகளை மேலும் விரிவாக்கும் நடைமுறை என்றே  கருதலாம். சுங்கை கம்பத்து மக்களைச் சாதித்தூய்மை பேணுபவர்களாக காட்டப்படுவது துல்லியமாய்த் தெரியும் இடம் ராக்காயியின் மகள் ஒரு நேப்பாளி இளஞரோடு ஓடிப்போய்விடும் கட்டம்.  . தன்னிலை உணராது ,நேப்பாள சமூகத்தையும் தங்களைவிடத் தாழ்ந்தவர்களாக நடத்தும் விதமும்கூட சாதிமை எந்நாளும் நிலைக்கும் அபாயத்தை நாசுக்காகச் சொல்லிவிடுகிறது. பிறரைவிட தாங்கள் மேலானவர்கள் என்று கருதிக்கொள்ளும்போதே அதிகாரத் தோரணை தன்னிச்சையாகவே வந்துவிடுகிறது, அதிலும் நன் அதிகாரத்துக்கு அவர்கள் அடிபணிகிறார்கள் அஞ்சுகிறார்கள் என்று எண்ணும்போது அந்த அதிகரம் துஷ்பிரயோகம் வரை போய் நிற்கிறது. நேப்பாளில்தான் இந்த ஒட்டுக்குமுறை நடக்கிறதென்றால் வயிற்றுக்காகப் பிழைக்க வந்த மலேசியாவிலும் அது தொடர்வதை அவர்கள் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

ஆனால் , சாதிமைப் பற்றி நாவலாசிரியர் முன்வைக்கும் சொந்தக்கருத்து நாசுக்கானது. அந்தாராவை தெய்வப்பிறப்பாக காட்டி தாழ்ந்த சாதியிலும் தெய்வம் குடியிருக்கும் என்று ஒரு  முற்போக்கு கருத்தை முன்வைக்கிறார் கதாசிரியர்.

நாவல் பெரும்பாலும் காதாபாத்திரங்களால் எழுந்து நிலைகொள்ளும்.

ஆனாலும் கரங்கானின் சுங்கை கம்பம் ஒரு பாத்திரமாகவே நாவலில் ஊடுறுத்து பரவி நிற்பதைப் பார்க்கிறேன். அந்த நிலத்தை அவர் விவரித்து சொல்லும் விதமும் அதில் குடியிருக்கும் வெவ்வேறு வகைப்பட்ட மனிதர்கள், அவர்கள் அந்த நிலத்தைச் தங்கள் சொந்த நிலமாக நினைப்பதும், நேப்பாளிகளின் இருப்பை காழ்ப்புணர்ச்சியோடு தடுக்கவுமான நிக்ழ்ச்சிகள் நடந்துகொண்டே இருக்கின்றன,நிலம் பேசுவதில்லை நகர்வதில்லை ஆனால் அதுதான் கலவர பூமியாக மாறவும், சமரசங்கள் நடக்கவும், சண்டையில் ரத்தத்தை உள்வாங்கிக்கொள்ளவும், விவசாயம் மேற்கொள்ளவும், காதல் செய்யவும், தாரா தேடிவரும் நீலத்தாமரை பூக்கவுமான பல்வேறு மாநுட செயற்பாடுகளில் இடமாக இருப்பதால் சுங்கை கம்பம் ஒரு பாத்திரமாகவே நிறுவப்பட்டிருக்கிறது என்று நான் கருதுகிறேன்.

நாவலை நிகழ்த்தும் மையப் பாத்திரமாக வரும் குகன் உள்ளபடியே ஒரு முழுமுற்றான ரௌடியாக இருக்கிறானா என்றால் இல்லை என்றே பதில் தருகிறது தாரா. அவன் உணர்ச்சிவசப்பட்டு வன்மத்தை நிகழ்த்துபவனாகக் காட்டப்பட்டாலும், போலிசுக்குப் பயந்தவானாவும், சிறைவைக்கப்பட்ட பின்னர் அவன் ஒடுங்கி அடங்கி வாழ்பவனாகவும்,ராக்காயியால் உசுப்பிவிட்ட பிறகு மீண்டும் தறுதலையாக மாறுபவனாகவும் காட்டப்படுகிறான். கெட்டவன் எப்போதுமே கெட்டவனாகவே இருந்துவிடுவதில்லை. நல்லவன் இயல்பாகவே நல்லவனாக இருந்துவிடுவதும் சாத்தியமே இல்லை. இரண்டு தரப்பினரும் சூழ்நிலை காரணமாக மாறுவதும் உண்டு. எனவே ஒரு நல்ல பாத்திரவார்ப்பு கலவையான குணமுடயவானக காட்டப்படுவதே யதார்த்தமானது.

சனிலும் கிட்டதட்ட ஒரு கலவையான குணாம்சம் கொண்ட பாத்திரம்தான என் கதை நெடுகிலும் காட்டப்படுகிறது,

நாவலின் சில பகுதிகளில் மட்டுமே தங்க நகை வணிகர் மருது வருகிறார்.தொடக்கத்தில் தொண்டராகக் காட்டப்பட்டாலும், கலவர பூமியாக மாறிய சுங்கை கிராமத்தை , தன் அரசியல்  கனவை அடைய,  அச்சூழலை ஒரு சந்தர்ப்பவாதியாக  நிறுவப்பட்டுவிடுகிறார். தன்னை முழுமையாக நம்பிவிட்ட மக்கள் திரலை  தன் சுயநலத்துக்காக மாற்றிக்கொள்ள முனையும் அவரின் தந்திரங்கள் தற்கால அரசியல்வாதிகளின் போக்கை படம்பிடித்துக் காட்டத் தவறவில்லை. தங்களைப் பாதுகாக்க வேண்டி தன்னையே சுற்றிவரும் சுங்கை கிராமத்து மக்களை ‘ பூச்சிகளாக ‘ அவர் வகைப்படுத்திக்கொள்ளும் குறியீடு நேர்த்தியாக வந்திருக்கிறது. மருதுவின் நிலைப்பாடு இன்னதுதான் எனத் தெளிவாகக் காட்டிவிடுகிறது நாவல்.

நாவலைச் செறிவூட்டும் மிகச்சிறந்த பாத்திரம் அந்தாரா. தொடக்கத்தில் அந்தாரா நாவலின் மையச் சரடோடு இணைகிறாளா இல்லையா என்ற சந்தேகம் வருகிறது . கடைசி அத்தியாங்களில் அதற்கான விடை கிடைக்கிறது நாவலின் மைய தரிசனத்தை நாவல் முழுக்க விரவி நிலைக்கச்செய்ய அவள் பயன்படுகிறாள் என்பதை நாவல் முடிவுறும் தருணங்களில் உணர்கிறோம்… நாவலின் மையக் கதைக்கும் அவளுக்குமான தொடர்புறுத்தல் நிகழ்ந்துகொண்டே இருப்பதை .இது இறுதி அத்தியாயங்களில் தெளிவாகக் காட்டப்படுகிறது.   அவளின் செயல்கள் , நீலத் தாமரையை அவள் தேடிச் செல்லும் இரவு நேரங்கள் அதனை கந்தாரம்மனுக்கு படைக்க வரும் திருப்பமான இடங்கள், அவள் கிச்சியோடு உரையாடும் இடங்கள் , அவள் சிலநேரங்களில் கிச்சியின் கண்ணுக்குத் தெரியாமல் மாயத்தோற்றத்தில் இருப்பதும், அவளின் பிற அமாநுட செயற்பாடுகளும், பேச்சும், அவளின்  தெய்வீகத் தன்மை நிறைந்ததாக இருக்கிறது.குறிப்பாகத் தாராவின் செய்கை நாவல் நெடுக்க படிமமாக நிலைகொள்கிறது.

இதுபோன்ற மிகுபுனைவு அம்சத்தை இந்த யதார்த்த நாவலுக்குள் நுழைப்பது நாவலை வலிமையாக்கிவிட்டதாகவே  கருதுவைக்கிறது.

தாரா நாவலில் இவர்கள் மட்டுமே வலுவான பாத்திரங்கள் என்று சொல்ல வரவில்லை. ஒரு தரமான நாவலில் எல்லா முக்கிய பாத்திரங்களையும் விரிவாக வளர்த்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். தாராவில் கிச்சி, அஞ்சலை,சங்கரன்,ராக்காயி,அமிர்தவள்ளி, முத்தையா பாட்டன்,திமிலா போன்றவர்களும் நாவலில் பன்முகத்தன்மைக்கு ஆதாரமாக விளங்குகிறார்கள்.

நாவலாசிரியர் வாழ்க்கை குறித்து புதிய கருத்தைச் சொல்ல தத்துவம் பெருமளவில் உதவுகிறது. நாவலைத் தர்க்கரீதியாக எழுதிச்செல்லும்போது ‘இதனை வாசகர்கள் அல்லது விமர்சகர்கள் ஏற்றுக்கொள்வார்களா?’ என்று புனைவாளனுக்கு ஐயங்கள் எழுவது இயல்பு. அத்தருணத்தில் தன் கூற்று சரிதான் என நிலைநிறுத்த தத்துவ எழுத்து கைகொடுக்கிறது. கதையை எழுதிச் செல்லும் போக்கிலேயே தத்துவம் தன்னைத் தானே எழுதிக்கொள்வதும் நிகழ்கிறது..  நாவலாசிரியனை மீறி நடந்துவிடும் செயல் இது. தாரா நாவலுக்குள் பல இடங்களில் அவ்வாறான தத்துவத்தெறிப்பைக் காண முடிகிறது.

ஒரு இனம் சில தலைமுறைகள் வாழ்ந்தவிட்ட நிலப்பகுதிக்கு வேற்றினம் வாழ்வாதாரத்திற்காக குடியேறும்போது, வெகுகாலம் வாழ்ந்த இனம் இந்தப் புதுக் குடியேற்றத்தை விரும்புவதில்லை. அவர்களைப் புறக்கணிக்கவோ அல்லது அங்கிருந்து விரட்டவோ பலாத்காரத்தை பயன்படுத்துகிறார்கள். இதனை மேலும் வலிமையாகச் சொல்ல;

 “அவர்கள் இந்நாட்டில் தங்களைப் பலவீனமாக உணர்கிறார்கள், பலவீனமானவர்கள் அச்சத்தை வன்மமாகத்தான் காட்டுவார்கள்’ என்று எழுதுவதை ஏற்றுக்கொள்கிறோம். வாழ்க்கை எழுப்பும் வினாக்களுக்கும்,புதிர்களுக்கும், சந்தேகங்களுக்கும் தத்துவம் சிறந்த பதிலாக நிலைகொள்கிறது.

‘யாராவது ஒருவன் தனது வலியைச் சொல்லிக் கத்தினால் அந்தக் குரலைத் தன் வலியுடன் இணைக்கின்றனர், அது பெரும் சத்தமாக மாறும்போது அதனைப் புரட்சி என்கிறார்கள்.. எல்லாமெ பொய் அவரவர் வலிக்கு அவரவர் கத்துகிறார்கள்’ என்று சனில் சொல்வதாக எழுதுவது கதை ஓட்டத்துக்குப் பொருந்தி வருகிறது.

எளிய மக்களை மருது தன் போலியான வாக்குறுதியாலும், பொய்யான சொற்களாலும் எப்படி தன் அரசியல் கனவை நனவாக்க முனைகிறார் என்பதை தத்வங்களாலும் சொல்லிவிடுகிறார் நாவலாசிரியர்.

‘பணம் எவ்வளவு இருந்தாலும் கிடைக்காத நிம்மதி அதிகாரத்தின் ருசியில் கிடைக்கப்போவதை கற்பனை செய்யவே இன்பமாக இருந்தது’ என்று மருது நினைப்பதாகச் சொல்லும் தத்துவம் வாழ்வியலின் உண்மையாக பரிணாமமாகஇருக்கிறது.

அதே அத்தியாயத்தில் மருது தன் மனசாட்சிய்ன் குரலே தன்னை இடித்துரைப்பதாக இவ்வாறு சொல்கிறார்,

“அப்படி பலி கொடுக்கத்தான் இத்தனை காலம் நீதி உணர்ச்சி போன்ற ஒன்றை ஆடு போல எனக்குள் வளர்த்துக்கொண்டே வந்தேனா.

அடுத்து அவர் தன்னைச் சமாதானம் செய்துகொள்ள  ‘சூழலைத்தனக்குச்சாதகமாகமாற்றிக்கொள்வதுஅரசியல்சாணாக்கியமேதவிரஅதுநீதிபிறழ்வல்லஎன்றுஅறமற்றஒன்றைஅறாமாக்கிக்கொள்கிறார் தன் சுயத்துக்காக.’தன் வாழ்க்கை அனுபவத்தை தத்துவமாக மடைமாற்ற  அவரின் மனசாட்சியே  கைகொடுப்பது இயல்பாக அமைந்துவிடுகிறது.

என்று எழுதிச் செல்வது அவரின் தத்துவார்த்த சிந்தனையின் தெறிப்பாக நாவல் நெடுக்க ஒலிக்கிறது. இவை கதையோடு பின்னிப்பிணைந்து வருகிறதே தவிர, கதாசிரியரின் குறுக்கிடாக நுழையவில்லை என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.

என்ன நடந்தாலும் கந்தாரம்மன் கோயில் பக்கமே வராமல் பிடிவாதமாய் இருக்கும் முத்தையா கிழவன் நமக்கு புதிராக இருக்கிறார். கோயில் கட்டப்படத்தான் வேண்டும் என்று ஊர்மக்கள் குரல்கொடுத்தபோது முத்தையா பிடிவாதமாய்த் தடுக்கிறார். ஆனால் அவரையும் மீறி கோயில் எழுப்பப்படுகிறது. கோயில் நிர்மாணிக்கப்பட்ட பின்னர்தான் சுங்கை கம்பம் அசம்பாவிதங்களை எதிர்நோக்கிக்கொண்டே இருக்கிறது. வாசிப்பு மனம் முத்தையா கிழவனின் கிளப்பிய புதிரில் தோய்ந்து நாவலை தொடர்ந்து வாசிக்க வைக்கிறது. நாவல் புனைவுக்கான முக்கியமான அம்சமாக இந்தப் புதிர்த் தன்மையைச் சொல்லலாம்.  அந்த ஊர் ரத்த பூமியாக மாறி உருக்குலைந்து சின்னபின்னமானவுடந்தான் முத்தையா கோயிலுக்கு வருகிறார். அவர் சொல்லும் இரு தலைமுறைக்கு முன்னால் நடந்த வரலாறு கடைசி அத்தியாயங்களாக பெரும் வீச்சசுடன் இயங்குகிறது. ஏன்  இந்தத் தலைமுறை இவ்வாறான அவலங்களை அநுபவிக்கிறது என்ற புதிருக்கு 19 அத்தியாயத்திலிருந்து நமக்குப் புலனாகத் தொடங்குகிறது. ஒரு தீர்க்கமான முடிவுக்கு இழுத்துச் செல்லும் இந்த இறுதி கட்டங்களை என்னை மிகுந்த கவன ஈர்ப்புடன் வாசிக்கவைத்தது. அந்த அளவுக்கு கதை சொல்லில் செறிவும் மொழியும் புதிருக்கான விடையை நோக்கி பரபரப்புடன் முன்னோக்கி நகரவைக்கிறது.  மிகுபுனைவாகச் சொல்லப்படும் இச்சம்பவங்களை நம்புவதா இல்லையா என்ற குழப்பத்துக்கு ‘ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்’ என்ற சிலப்பதிகாரத்தின் வரியை பொருத்திப் பார்க்கலாம். நம்முடைய ஆன்மீகம் இதைத்தான் வலிந்து முன்னிறுத்துகிறது. வாழ்வின் நல்லறத்தை மீறும்போது ஊழ்வினை சும்மாவிடாது என்ற வாழ்வியல் உண்மையை இந்தநாவலிலும் வைத்துப் பார்க்கலாம்.

இந்த நாவலின் கதாப்பாத்திரங்கள் பேசும்பொது கொச்சைமொழி பிரயோகம் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டிருக்கிறது. இது அம்மக்களின் யதார்த்த மொழிக்கு எதிரானது. பேய்ச்சியில் அடித்தட்டு மக்கள் பேசும் இயல்பாக  வந்திருக்க, இந்நாவலும் குண்டர்கள் வாழ்வையும் பின்புலமாகக் கொண்டது. அவர்கள் மொழியை நவீன் தவிர்த்திருப்பது வியப்பாகவே இருக்கிறது.

தொடக்க அத்தியாயங்களில் ஆசிரியரின் கதை விவரிப்பு மொழி பெரும்பாலான பக்கங்கங்களின் இடத்தை நிறைக்கிறது. இது கொஞ்சம் சலிப்பை உண்டாக்கியது.

கதை நிறைவை நோக்கிப் பயணிக்கும்போது அதன் மொழி வீச்சு வேகம் கொள்கிறது. ஆனால் தொடக்க அத்தியாயங்களின் மொழி சற்றே வேகம் குறைந்ததாக இருக்கிறது என்று எனக்குப் படுகிறது.

நாவலின் கதைப்பின்னலே இதனை முக்கியமான நாவலாக ஆக்குகிறது. அதன் அழகியல் ஒருமை பாதிப்புறாமல் இருக்க அதன் பன்முகத்தன்மை ஆதார சுருதியாக விளங்குகிறது. அந்தாரவின் நீலத்தாமரையைத் தேடிச்செல்லும் சம்பவங்கள், குகனின் தடித்தனங்கள் ,அஞ்சலையின் அலைக்கழிவுகள், ராக்காயியின் அங்கலாய்ப்புகள், மருதுவின் போலித் தனங்கள், முத்தையா பாட்டன் கோயில் காரியங்களில் தலையிடாமல் தனித்து நிற்கும் புதிர்த்தன்மை, சனிலின் இருத்தலியல் போராட்டம், மூன்று தலைமுறைக்கு முன்னால் பஹாங் காட்டில் பூழியன் சந்ததியினர் , ஜகூன் இனத்துக்கு இழைத்த துரோகம் என நாவலின் பன்மைத் தன்மை கலையமைதி கெடாமல் இயங்குகிறது.

‘தாரா’ மலேசிய நாவல் வளம் செழிக்க ம.நவீனால் அளிக்கப்பட்ட மேலுமொரு கொடை என்றே பெருமைப்பட சொல்வேன்..

                   ……………………………………………………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *