தமிழின் சமகால எழுத்துலகில் இயங்கிவரும் முக்கியமான எழுத்தாளுமை கீரனூர் ஜாகிர்ராஜா அவர்கள் . கருத்த லெப்பை , துருக்கித் தொப்பி , வடக்கே முறி அலிமா, மீன்குகை வாசிகள் , தேய்பிறை இரவுகளின் கதைகள், ஞாயிறு கடை உண்டு உள்ளிட்ட சிறப்பான பல படைப்புகளுக்குச் சொந்தக்காரர் .

நான் ஃபேஸ்புக்கிற்கு வந்த புதிதில் இவர்களெல்லாம் தமிழ் எழுத்தாளர்கள் என்று நான் அறிந்து வைத்திருந்த பலரும் இங்கு இயங்கிக் கொண்டிருந்ததில் எனக்கு ஒரே மகிழ்ச்சி . கொஞ்சம் தயங்கித் தயங்கி அவர்களுக்கு நட்பழைப்பு விடுப்பதும் ஏற்றுக் கொள்ளப்படுவதுமாக இருந்தேன். அப்போதுதான் கோம்பை அன்வர் அவர்களின் முன்னெடுப்பில் உருவான தமிழ் முஸ்லிம் திண்ணை என்ற ஃபேஸ்புக் குழுவில் உறுப்பினராகியிருந்தேன். அக்குழுவின் சார்பில் கீரனூர் ஜாகிர்ராஜா , களந்தை பீர்முகம்மது , மீரான் மைதீன் முதலான எழுத்தாளுமைகளுக்கு விருது வழங்கும் விழா ஒன்று நடைபெற்றது . அதில்தான் ஆசிரியரைச் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது . அப்போதும் கூட அதைச் சந்திப்பு எனச் சொல்லிவிட முடியாதுதான் …அவர் விருது பெறும் எழுத்தாளர் ; நான் அந்நிகழ்ச்சியின் பார்வையாளர் . சற்றுத் தள்ளி நின்று வணக்கம் சொல்லிப் புன்னகைத்து மேற்கொண்ட சம்பிரதாயமான ஒரு அறிமுகம்தான் அது . எனக்கு அது மறக்க வாய்ப்பில்லை . அவருக்கு அது நினைவிலிருக்க வேண்டிய கட்டாயமும் இல்லை . அப்படித்தான் நான் நினைத்திருந்தேன் .
பிரபலங்களாக , எழுத்தாளர்களாக இயங்கும் பலருள் தம்முடைய நட்பில் ஃபேஸ்புக்கில் மட்டுமே பதிவிடும் சாதாரண பதிவர்களின் பதிவுகளையும் பார்த்து விருப்பம் தெரிவிப்பவர்களாக , பாராட்டுபவர்களாக , கருத்துரைப்பவர்களாகச் சிலரே இருக்கிறார்கள் . அந்தச் சிலரில் கீரனூர் ஜாகிர் ராஜாவும் ஒருவர் . பல படைப்புகளைத் தமிழுலகிற்குத் தந்தவர் நம்முடைய பதிவையும் பாராட்டுகிறார் என்பது என்னைப் போன்றவர்களுக்குத் தரும் மகிழ்ச்சியும் பெருமிதமும் உண்மையில் பெரிதுதான் .
சில மாதங்களுக்கு முன் அவர் தன்னுடைய பத்தாவது நாவலான இத்தாவை எழுதி முடித்திருந்தார். நாவல் வெளிவந்திருக்கவில்லை . அந்தச் சமயத்தில் அவரிடமிருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு , இத்தா நாவலின் பிரதியை வாசித்து அதுபற்றி என்னுடைய கருத்தை எழுதித் தரமுடியுமா என்ற ஒரு வேண்டுகோளுடன் .
என்னிடமா கேட்கிறார் என்று எனக்கு முதலில் ஏற்பட்ட வியப்பிற்கு அளவேயில்லை. // உங்களுடைய வாசிப்பிலும் உங்களுடைய பார்வையிலும் எனக்கு மதிப்பு உண்டு . நீங்கள் நேர்மையாகச் சொல்வீர்கள் என்ற நம்பிக்கையும் உண்டு// என்று அவர் சொன்னபோது வியப்பை மீறி அவர்மீது மிகுந்த மதிப்பு உண்டாயிற்று .
அதேபோல அவர் அனுப்பி வைத்த நாவலை வாசித்து நான் கருதியதை எழுதினேன் . //சுருக்கமாக அழகாக எழுதியிருக்கிறீர்கள் . இதை அப்படியே பதிப்பாளருக்கு நீங்களே அனுப்பி வைத்து விடுங்கள்// என்றார். நானும் அவ்வாறே செய்தேன் .
நாவலைப் பற்றிய என் வாழ்த்துரையை “தமிழ் கூறும் நல்லுலகிற்கு வணக்கம்” என்று கூறித் தொடங்கியிருந்தேன் . பதிப்பாளர் , வணக்கத்திற்குப் பதிலாக “அஸ்ஸலாமு அலைக்கும்” எனத் தொடங்கியிருக்கலாமே எனப் பிரியப் பட்டார் போலும் . ஆசிரியரோ இல்லை அவர் எப்படிச் சொல்லியிருக்கிறாரோ அப்படியே வணக்கம் என்றே இருக்கட்டும் . அதில் தவறொன்று மில்லை எனக் கூறிவிட்டார் .
இப்படியாக , ஒரு புகழ்வாய்ந்த எழுத்தாளருடைய நாவலுக்கு என்னுடைய வாழ்த்துரையும் முதன்முதலாக அச்சிலேறி இடம்பெற்ற பெருமை கீரனூர் ஜாகிர்ராஜா அவர்களால் எனக்கு வாய்த்தது .‌ இதற்கான என்னுடைய நன்றியும் அன்பும் என்றும் ஆசிரியருக்கு உரித்தானது . இத்தா நாவலில் அவர் தன்னுரையிலும் கூட என்னிடம் உரையாடியதை என் பெயர் குறிப்பிட்டுப் பதிவு செய்திருந்தது என்றும் என் நினைவிலிருக்கும் .
மயிர் மின்னிதழ் கீரனூர் ஜாகிர்ராஜா சிறப்பிதழைக் கொண்டு வரும் இந்நல் வாய்ப்பினைப் பயன்படுத்தி , பெயர் கூறி நிலைத்திருக்கும் இன்னும் பல படைப்புகளைத் தமிழுக்குத் தந்து வாழ்கவென அவரை வாழ்த்தி மகிழ்வுறுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *