காயத்ரி பரபரப்பாய் இருந்தாள்.

“எங்களோட வேன்ல வர்றியா.. இல்லே பைக்ல வர்றியா மணி?”

“வேன்ல இடமில்லையா காயத்ரி?”

“இல்ல..”

தயங்கினாள்.

“என்ன ..?”

“கொஞ்சம் சாக்லேட் வாங்கிட்டு வரணும்.”

“சரி.”

“அம்பது வாங்கிட்டு வந்துடு… அட்ரஸ் தெரியும்ல?”

“நம்பர்.4 பாரதியார் தெரு தானே?”

“அதே.”

நகர்ந்தாள்.

மகேஷ் புன்னகையுடன் வந்தான்.

“சாதிச்சுக் காட்டிட்டியே காயத்ரி.”

“அடங்க மாட்டியா மகேசு?”

“சரி.. சரி.  ஜி.எம்மையே ஒத்துக்க வச்சுட்டே.. நான்லாம் என்ன ஒரு குமாஸ்தா..!”

கேலியாகச் சொன்னான்.

“வருஷா வருஷம் மேனேஜ்மெண்ட் அலாட் பண்ற காம்பிளிமெண்ட் அமெளண்ட் இருபதாயிரம் ரூபாவ வச்சு ஒரு சினிமா, ஹோட்டல்ல நைட் டின்னர்னு தானே காலி பண்ணிருக்கோம்.”

”:குடும்பத்தோடன்னு சொல்லு”.

“மனசத் தொட்டு சொல்லு மகேஷ். நம்ப அப்பா மாதிரியா இருக்கோம்.

வாரம் ஒரு நாள் ஹோட்டல் சாப்பாடு, மாசம் ஒரு சினிமான்னு போய்ட்டு தானே இருக்கோம்.”

“சரி.. தாயே.. ஆளவிடு. நானும் மணியோட வந்த்துர்றேன்.”

 

அந்திமந்தாரை முதியோர் இல்லம்.

ஊருக்கு வெளியே இருந்தது.

வண்டியை நிறுத்தி உள்ளே போனார்கள்.

காயத்ரியிடம் சாக்லேட் பொட்டலம் நீட்டினான்.

முப்பது பேர் இருந்தனர்.

எழுபது வயதைக் கடந்தவர்கள்.

“முதல்ல சாக்லேட் கொடுப்போம்.”

:”இன்சார்ஜ்கிட்ட கேட்டுட்டியா காயத்ரி? யாருக்காவது சுகர் இருக்கப் போகுது?”

“இல்ல மணி. கேடுட்டேன். எப்பவோ ஒரு சாக்லேட்.. ஒண்ணும் பண்ணாதுன்னு சியாமளா மேடம் சொல்லிட்டாங்க..”

முதல் சாக்லேட்டை ஜி.எம் கொடுத்தார்.

கடைசியாகத் தயங்கி தயங்கி வந்தவர்….

திருக்குமரன் சார்.

ஓடிப் போய் அவர் கை பிடித்தான்.

”திரு சார் .. நீங்க இங்க எப்படி?”

இவனைப் பார்த்ததும் அடையாளம் கண்டு கொண்டார்.

:”மணி தானே.. நல்லாருக்கியாப்பா?”

“நான் நல்லாருக்கேன் சார். நீங்க ஏன் இங்க?”

மெளனமாய் நின்றார்.

” சீனு எங்க இருக்கான்..?”

மெலிதாகப் புன்னகைத்தார்.

“அவன் இங்க அனுப்பலை மணி. நானாதன் இங்க வந்துட்டேன்.”

“கல்பனா?”

“அவளுக்கே கஷ்ட ஜீவனம். மாப்பிள்ளை ஆக்சிடெண்ட்ல போய்ட்டார்.”

அவர் கண்கள் கலங்கின.

கையை இறுகப் பிடித்துக் கொண்டார்.

நிறையப் பேசினார்.

 

கதவைத் திறந்த அம்மா ஆச்சர்யப் பட்டார்.

“என்ன மணி சொல்லாம கொள்ளாம திடும்னு வந்து நிக்கறே இந்த விடிகாத்தால.”

“அம்மா..”

“சரி..சரி.. உள்ற வா. பல் தேச்சுட்டு வா. காப்பி தர்ரேன்.”

அம்மாவின் காப்பிக்கு தனி ருசி.

“என்னடா ஆச்சு.. நந்து எப்டி இருக்கா? மேகாக் குட்டி எப்படி இருக்கு?”

“எல்லாம் நல்லாருக்காங்க..”

“ சரி..”

“நேத்து நம்ப திரு சாரப் பாத்தேன்.”

“எங்கே?”

“முதியோர் இல்லத்துல..”

“என்னது?.. சீனு வந்து வீட்ட வித்துட்டு அவர அழச்சிட்டுப் போனானே?’ அம்மா அதிர்ந்தார்.

”சீனு விரட்டிட்டான் போலருக்கு.”

“ரிடையர்மெண்ட் பணம் வச்சிருப்பாரே.”

“அதயும் வாங்கிட்டானாம்.”

“அடப் பாவமே.”

அம்மாவின் கண்கள் கலங்கின.

துடைத்துக் கொண்டார்.

“சரி.. இப்ப நீ இத சொல்லதான் வந்தியா?”

“இல்ல..”

“பின்ன?”

“உன்ன அழச்சிட்டுப் போக வந்தேன்.”

“எங்க?”

“ஊருக்கு. எங்களோட இருக்க..”

அம்மா சிரித்தாள்.

“லூஸாடா நீ… எதுக்கு இப்ப?”

”நந்துதான் என்ன விரட்டி விட்டா.. கையோட அழச்சிட்டு வரச் சொல்லி..”

“அவ என் பொண்ணுடா.. எனக்குத் தெரியாதா?.. இப்ப உனக்கு என்ன பிரச்னை?”

”இனிமே நீ தனியா இருக்க வெண்டாம்.”

இவன் கண்களை உற்றுப் பார்த்தார்.

“என்ன  மணி.. குற்ற உணர்வா? என் புள்ள சீனு இல்லேன்னு எனக்குத் தெரியும்டா..?”

“அத விடு.. நங்க இருக்கறப்ப இங்க நீ ஏன் தனியா இருக்கணும்.”

“மணி.. கொஞ்சம் அமைதியா நான் சொல்றதக் கேக்குறியா?”

தலையசைத்தான்.”

“உங்கப்பாவக் கல்யாணம் பண்ணிட்டு வந்ததுலேர்ந்து கிட்டதட்ட முப்பதஞ்சு வருஷமா இந்த ஊர்ல தான் இருக்கே.ன். இங்க  எனக்கு ஒண்னும் கஷ்டமில்லேப்பா.”

“அப்பா இல்லாம நீ தனியாத் தானே இருக்கேமா?”

“அப்பா இல்லதான்.. ஆனா அவர் சேத்து வச்ச மனுஷங்க இங்க தானே இருக்காங்க..”

“ப்ளீஸ்மா.. என்னோட வந்துடுமா.”

“இங்க பாரு.. பத்து புள்ளைங்களுக்கு இங்கிலீஷ் டியூசன் எடுத்துட்டு இருக்கேன். நம்ப ஊர் பசங்க இங்கிலீஷ்லதான் தடுமாறுதுங்க,,:

”அங்கேயும் பிள்ளைங்க இருக்கு. அங்க வந்து டியூசன் எடுமா.”

“திரு சாரப் பாத்த அதிர்ச்சி உனக்கு. நந்து வேற உன்னக் குழப்பி விட்டு அனுப்பிச்சிருக்கா… நான் சொல்றதக் கேளு.”

“என்ன?”

“நாந்தான் மேகாவுக்கு லீவு உடறப்ப வந்து பாக்கறேனே….நீங்கலாம் மலைஉச்சிய நோக்கி ஓடறவங்க. விழுந்து புரண்டு கை,காலெல்லாம் காயப்படுத்தி கொண்டு பின்னாடி வர்றவனத் திரும்பி திரும்பி பாத்துட்டு முன்னாடி ஓடறவனத் துரத்திட்டு இருக்கீங்க. எனக்கு இதெல்லாம் சரிப்படாது மணி…”

“என்ன சொல்றீங்க அம்மா?.. எல்லாம் மேகாவுக்காகதான்..”

“புள்ளைங்கலாப்பா இதெல்லா கேக்குது? பக்கத்துல இருக்கறவன போட்டியாளனா நீங்களே நினச்சுக்கிட்டு ஓடுறீங்க..வயசானதும் திரும்பி பாத்தா யாருமே இருக்க மாட்டாங்கப்பா.”

 

மணி தலை குனிந்திருந்தான்.

“நான்லாம் அந்த மலையடிவாரத்துல காலாற நடந்து அந்த ஜில் காத்த சுவாச்சிட்டு, பாதையெல்லா பூத்திருக்கிற பூவ ரசிச்சுட்டு வர்ற ஆளு. எனக்கு அது போதுமே.”

“நீ எப்பமா என் பேச்சக் கேட்டுருக்கே”

“டேய் செல்லம் அப்படி சொல்லாதடா? திரு சாரப் பாத்த அதிர்ச்சில இங்க ஓடி வந்துட்டே.. எமோஷனலா முடிவு பண்ணாதே.. என்ன அங்கக் கூப்பிடறத விட அவர இங்க கொண்டாந்து விடு.. நானும் இந்த ஊரும் அவர நல்லாப் பாத்துக்கறோம்.”

மணி ஆச்சர்யமாய்ப் பாத்தான்.

“முடியுமா அம்மா.. அவரு ஒத்துக்குவாரா/”

“ஒத்துகலைன்னா என்னக் கூப்பிடு வர்றேன். இப்ப படிக்கறப் புள்ளைங்களுக்கு தமிழும் வரமாட்டேங்குது. அவர் வந்து இங்க சொல்லிக் கொடுக்கட்டும்.”

மணி அம்மாவைக் கட்டிக்கொண்டான்.

”நீ க்ரேட்மா.”

“எம்புள்ளயும் க்ரேட் தான். ராவோட ராவா தவிச்சுப் போய் ஓடிவந்திருக்கியே..!”

அம்மா சிரித்தார்.

இனிக்கும் சிரிப்பு.

***********

 

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  1. மனதை கரையவைத்தாலும் யதார்த்தம் நிஜ உலகை காட்டுகிறது. நன்றி. தேஜு சார்