பிரவேசம்

1

அப்பா இறந்தபின்  இந்த வீட்டிற்கு இப்போதுதான்  வருகிறோம். இந்த வீட்டுக்கு வந்த பின், அப்பா எங்களை விட்டு ரொம்ப தூரம் விலகி சென்றுவிட்டார்சாயுங்காலத்தில் பின் திண்ணையில் அமர்ந்து  பனைமரத்தை பார்த்துக்கொண்டிருக்கும்  அப்பாவை பார்க்கவே பயமாக இருக்கும். அவர் உடலில் இருந்து விநோதமான நெடி வீசும். உடல் கொதித்து ஆவியாக வெளியேறி அருகிலிருக்கும் என்னை சுடும். கண்களின் வெறிப்பு மட்டும் மாறாது.

அப்பா உடலில் எல்லா பாகங்களும் உருண்டையாக இருக்கும். உருண்டையான நெஞ்சு. உருண்ட கைச்சதை, தோள் மூட்டுகள். வயிறும் தொடையும் அப்படியே. அவ்வளவு உயரமில்லை. அப்பா சிறுவயதிலிருந்தே உடற்பயிற்சி செய்பவர்

ஆனால் அவர் எப்பொழுதும் அப்படி இருந்ததில்லை. மாமா இறக்கும் பொழுது தன் பூர்வீக சொத்து அனைத்தையும் அம்மா பெயரில் எழுதி வைத்தார்.

அம்மாவிற்கு மாமா ஐந்து வயது மூத்தவர். தாத்தாவின் இரண்டாம் தாரத்து பிள்ளைகள் மாமாவும் அம்மாவும். முதல் மனைவிக்கு இரண்டு பேர் பிறந்தனர். மூத்தவன் பிறந்து தவழும் போது தீடீரென இறந்தான். இளையவர் நன்றாக வளர்ந்து ஊரில் ஆளாகி ஒரு பெண்ணை காதலித்து பைத்தியமானார். அதிலிருந்து ஊரில் தாத்தா வீட்டை கண்டால் இளக்காரம்.

தாத்தா வீட்டை முதலாளி வீடு என்பார்கள். பிள்ளைகள் இரண்டு விதமாக வளருகிறார்கள். ஒன்று அப்பாவைப் போல, மற்றொன்று அப்பாவுக்கு நேரெதிராக. தாத்தா வாத்தியாராக இருந்தார். மூத்த இருவரும் நேரெதிரானவர்கள். அதனால் அனைவரும் மாமாவை துருவி துருவி பார்பார்களாம்

மாமா, அம்மா ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொழுது வீட்டை விட்டு சென்றார். அம்மாவும் மாமாவும் பெரிதாக பேசிக்கொண்டதில்லை. ஆனால் மாமா இல்லாத நாட்களில்தான் அம்மாவுக்கு மாமாவுடன் பேச வேண்டிய ஆவல் எழுந்தது. அம்மாச்சி தேடி அலுத்து மேலுக்கு முடியாமல் போய் படுத்த படுக்கையாகிவிட்டார்கள். அதிலிருந்து தோட்ட வேலை, வீட்டை கவனிப்பது, மாடு கன்னுகளை பார்த்துக்கொள்வது, வயல் வேலை எல்லாம் பாண்டியுடன் இணைந்து அம்மா கற்றுகொண்டது.

வெகுநாள் கழித்து ஒருநாள், அப்போது அம்மா வயதுக்கு வந்திருந்தது, அம்மாச்சி படுக்கையில் இருந்து எழுந்து வீட்டை தூத்தியது. வாசலில் சாணிகரைத்த கோலம் போட்டது. நடுவில் தெய்வம் இறங்கும்படி பூ வைத்து காலையில் சமைக்கத் தொடங்கியது. நீரில் கரையும் துளி நீலம் போல் காலை வெளுத்துக் கொண்டிருந்தது. ஆட்காட்டிகளும் செம்போந்துகளும் மாறி மாறி அழைத்துக்கொண்டன

அம்மாச்சி அன்றுதான் இறந்தார்கள். மாமாவுக்கு பிடித்த பாசிப்பருப்பு பாயாசம், வெண்டக்காய் பச்சடி, கருப்பட்டி போட்டு ஆட்டி எடுத்த  எண்ணெயில் வறுத்த சேனக்கிழங்கு , மாங்காய் பச்சடிகீரக்கடையல், பூசணிக்காய் சாம்பார், ரசம், வரமிளகாய் பெருங்காயம் போட்டு தாளித்த மோர், விளக்கெண்ணெயில் வறுத்த சீனியரக்காய் வத்தல் என விருந்து சமைத்தார்கள்.

அன்று மதியம்  மாமா வந்தார். அம்மாவுக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. அம்மாச்சி எங்க போன என கேட்கவில்லை. இலை எடுத்து பரிமாறத் தொடங்கியது.  

அதற்கு பின் மாமா ஊரிலே தங்கினார். ஆள் வேற்றாளாக இருந்தார். தோல் தடித்து மீசை தாடி அடர்த்தியாயிருந்தது. எந்நேரமும் சிரித்தபடி பேசினார்

2.

பத்துபேருக்கு மேல் இருக்கும். கருப்பை வளைத்து பிடித்திருந்தார்கள். மூச்சு விடக்கூட ஆசுவாசம் அளிக்காத முரட்டு பிடி. கருப்பு மனதின் கயிறை ஒவ்வொன்றாக உதறினான். அவன் சதையின் ஒவ்வொரு நாரும் பெருத்தன. நிதானமாக நின்று ஆழமாக மூச்சிழுத்தான். ஒரு உழுக்கு. சிறிது சலனம் ஏற்பட்டது. அதை பயன்படுத்தி ஒவ்வொருத்தராக  தூக்கி எறிந்தான்.  

கருப்பன் மாவீரன். பேருக்கேற்றார் போல உடம்பு. கூடவே அவன் காலளவுக்கு கருப்பு நாயுண்டு. அது சிறு காளை போலஇருக்கும். சுள்ளிக்கங்கு போல மிணுங்கும் கண்கள்

அருகில் வந்த முதலொருவனின் கைகளை பற்றி திரிகினான். அடுத்தவனின் தலையைப் பற்றி பிய்த்தெடுத்தான். உள்ளிருந்து ஊற்று போல பீய்ச்சி அடித்த ரத்தத்தினால் போக வெறி கொண்டான். அடுத்து வந்த ஒவ்வொருவருரையும் சதை பிண்டமாக பிய்த்து எறிந்தான். உடல் முழுவதும் பிய்த்து நசுக்கி ரத்தத்தில் தோய்ந்த சதை ஒழுகியது. கண்கள் விழித்தபடி நெஞ்சிலிருந்து சறுக்கி நின்றது. கடைசியாக நின்றவனின் தலையை பிய்த்து மூளை குழம்பை குடித்தான். மேலும் மேலும் வெறி ஏறியது

மீந்து குவிந்திருந்த சதைக்கூழை அள்ளி குடித்தது நாய். உடல் முழுவதும் வடியும் சதைக்கூழ் சேற்றுடன். நெத்தியில்மத்தியில் மினுங்கும் ஒற்றைக்கண்ணுடன் ஊருக்குள் வந்தான். அவன் வருவதை அறிந்த ஆடுமாடுகள் கழுத்து மணிகள் குழுங்க அலறத் தொடங்கியது. வானம் இடிஇடித்து கருமை கொண்டது. மெலிந்த நீலநிறக் காற்று அடங்காமல் வீசியது

ஊருக்குள் ஓசை அடங்கியது. வெறும் மூச்சின் ஓசை மட்டுமே எழுந்தது

என் பின்னபக்கம் இருந்த சாவடி திண்ணையில், திண்டில் சாய்ந்து கால்களை சாவகாசமாக நீட்டி சம்முகம் அண்ணன் அமர்ந்திருந்தார். உறவு முறை அண்ணன் என்றாலும் என்னை விட முப்பது வயது மூத்தவர். அண்ணனைச் சுற்றி நாலைந்து பேர் படுத்தபடியும் சம்மணங்கால் போட்டு கேட்டுக்கொண்டிருந்தனர்..

ஒரு சாவகாசமான கதை. ஆனால் அதற்குள் அந்த ஊரின் வரலாறு ஒன்று அடங்கியிருந்தது. ஊருக்குள் கோவில் வீடு உள்ளவர்களின் அமைப்பு அவர்கள் எப்போதெல்லாம் குடியேறினர் என கணிக்க முடியம் என தோன்றியது

சிலர் ஆங்காங்கே அமர்ந்து பீடி இழுத்தடி தாயம் ஆடிக்கொண்டிருந்தனர். சிலர் கைகளில் தலையை தாங்கியபடி கருங்கல்லினால் வயிற்றை குளிர்ச்சியாக்கினர். அலுத்த போது மல்லாக்க படுத்து அல்லது ஒருக்களித்து கிடந்தனர். வெயிலுக்கு ஓட்டு சாய்ப்பு குளுமையாக இருந்தது. இன்றும் கடும் வெயில். இங்கு வெயில் தாள முடியாமல் உள்ளது. தண்ணீர் சப்பென்று உள்ளது. எவ்வளவு குடித்தாலும் தாகம் அடங்குவதில்லை. எனக்கு இங்கு இருக்கவே பிடிக்கவில்லை. ஒருவித படபடப்பும் கூடியிருந்தது. எல்லோரிடமும் சங்கோஜத்துடன் தான் பேச முடிகிறது. மனம் விட்டு பேச யாருமே இல்லைசாவடிக்கு இதற்கு முன்பு வந்ததில்லைசிறுவயதில் மாமாவுடன் வந்துள்ளேன். தோட்டம் என்பது தனித்தீவு. அங்கிருக்கும் போதெல்லாம் மனிதர்களை காண ஏக்கமாக இருக்கும்.

காதாட்டி வீட்டு தாத்தாவைச் சுற்றி கிழவர் கூட்டம் அமர்ந்திருந்தது. இரு கூடடத்திற்கும் நடுவில் நான் அமர்ந்திருந்தேன். அவர் சொன்னார்அய்யனாருக்க பேரு மாணிக்கம். அழகு பெத்ததது மாரி பூங்கொடி பொற்கொடி ரெண்டு பக்கமும் உட்காந்திருக்கு. ஐயனாருக்கு எப்பவும் வெள்ளக்குருததா வேணும். வெள்ளன்னா வெள்ள, துளி கர இல்லாத வெள்ள. அதுல ஏறி ஊர வலம் வருவாரு. அப்ப ஊருக்குள்ள இருந்தது மொத்தமே பத்து வீடு தான். ஐயனாரு மட்டுந்தான். பின்னாடி ஒவ்வொருத்தறா வர்றாங்க. வர்றவங்கெள்ளாம் அவங்க அவங்க ஊரிலிருந்து பஞ்சம் பொழைக்க, கொடுமைக்காரனுகிட்ட இருந்து உசுர காப்பாத்திக்கன்னு வந்து சேர்றாங்க. அப்ப என்ன வானம் இப்படியா இருந்துச்சு. ஐயனாரு நின்னு ஒரு பார்வ பாத்தா மொத்த வானமு தரைக்கி ஏறங்கி வந்து கட்டுபட்டு நிக்கும்

அப்ப எல்லா மழையும் இங்கேயே பெய்யுது. எப்ப பாத்தாலும் வானம் கருத்து சினப்பாலு மானி முட்டிட்டு நிக்குது. இத கண்ட இந்திரனுக்கு ஒன்னும் சொகப்படலஎல்லா மேகத்தையும் செற புடுச்சுட்டு போயிறான். சனம் தண்ணியில்லாம தவிக்குது. ஊரே வெங்காடா மாறி வேகுது. இதுக்கு ஒரு வழி பண்ணனும் யோசிச்சு தவம் இருக்காரு ஐயனாரு. ஐயனாரு செவனோட மவன். அவர எதுத்து நிக்க முடியாதுன்னு இந்திரனுக்கு தெரியும். அதனாலயே வரம் ஒன்னு வாங்கிட்டா

அப்பதான் கருப்பு வர்றாரு, கூடவே வெள்ளச்சாமியும்கருப்புன்னா யாருன்னு நெனக்க , அந்த கண்ணன்ந்தான் கருப்பு. கருப்பு வெள்ளச்சாமியோட போயி இந்திரன் கூட ஒரே சண்ட. சுத்தி வளச்சவங்கள தூக்கி எருஞ்சுட்டு அதே கோவத்தோட ஊர வலம் வர்றாரு.

தோத்துபோன இந்திரன் மறுபடியும் போயி மணிகண்டன பாத்து வெவரம் சொல்றா. இந்த கருப்ப அடக்கனும்னா அதுக்கு அந்த அழகு நாச்சியதான் சரி

அழகு நாச்சியா பல்லாயிரம் காலமா அந்த குதிருக்குல்ல அடஞ்சு கெடக்கா. காஞ்சு போன தொண்டைய நனக்க சொட்டு தண்ணி கெடயாது. முதுகெலும்புல ஒட்டிப் போன வயிறு. உடம்பெல்லாம் வத்தி கண்ணுல வஞ்சத்தோட காத்துட்டுருக்கா”.

நாச்சியாவின் பெயர் எனக்குள் அடங்கியிருந்த விதிர்ப்பை கிளப்பிவிட்டது

3.

மறுபடியும் ஊருக்கு வந்த மாமா எல்லா வேலையையும் மேல எடுத்துப்போட்டு செஞ்சாரு. எந்நேரமும் படிப்பதான். காலையில நாலு மணிக்கு எந்துருச்சு தியானம் செய்வாரு. காட்டு வேல, வரப்பு வெட்டுறது. தண்ணி பாய்ச்சுறது கள பிடுங்குவது, ஊருக்குள்ளுருந்து அன்னக்கி வேலக்கி வந்துருவக்களுக்கான வேலைய பிருச்சு கொடுத்துட்டு வந்து பின்னால இருந்த ஊருணில குளிச்சுட்டு காலையில சாப்பிடுவாரு. சுடுசோறு மோரு தான் அவருக்கு புடுச்ச சாப்பாடு

மாமா கீதை பேருரை, ரமண மகரிஷியின் வாழ்க்கை வரலாறு, பைபிள், சத்திய சோதனை மாதிரியான புத்தகங்களை சேர்த்து சிறு அலமாரியில் வைத்திருந்தார் நான் பார்த்திருக்கிறேன். பழைய அட்டையில் கரு நிறத்திற்கு நெருங்கிவிட்ட தாள்களை  கரையான் அறிக்கும் நிறைய புத்தகங்களும் இருந்தன. அம்மணமான ஒரு சாமியார் கைகளில் இரண்டு விரல்களை மடக்கி மீத விரல்களை நீட்டி சுகாசனத்தில் அமர்ந்திருந்த ஒரு புத்தகமும் இருந்தன

பின்ன அம்மாவ கல்யாணம் பண்ணி கொடுத்தாரு. மறுபடியும் மாமா காணாம போனாரு. ஆனாகெணத்த ஒட்டி கிழக்கு மூலையோரமா கம்மாவ பாத்தமாறி இருந்த பனை மரத்தில ஒரு கல் வச்சு தெனமும் பூவும் மஞ்சளும் வச்சு, குங்குமம் பூசி சாவ அறுக்க பாண்டிக்கு சொல்லிட்டு போயிருந்தார். பாண்டி நாள் தவறாம எல்லா சாங்கியம் செஞ்சாரு

திரும்பி வந்த மாமா முகமெல்லாம் தளர்ச்சியாகி தாடி மண்டி நிலைத்த விழியோட இருந்தாரு. பாண்டிக்கும் அடையாளம் தெரியல. காற்று சூரியாக வீசியது. ஆச்சா மர இலை மேலிருந்து கொட்டுது. வந்தவரு நேரா கல்லுக்கு முன்னாடி விழுந்து கும்பிட்டு பையிலிருந்து ரெண்டு வெள்ளிக்கண் தகட அந்த சாந்துல வச்சாரு. பாண்டிக்கு காத்துல ரெத்த வாடை இருக்கமாறி தோனுச்சு, பின்னாடி மயிர் பொசுங்கும் கொடும் நாற்றம். மல நாற்றம், ஊன் எறியும் நாற்றம். மாமா எதையுமே அறியாம அதையே பாத்துக்கிட்டு இருக்காரு. அப்படியே அதுக்கு முன்னாடி உட்க்கார்ந்தவர் ஓரிரவு முழுக்க அமர்ந்திருந்தார். எதுவும் பேசவில்லை. இரவு முழுவதும் அதே வாடையுடன் காற்று ஊதலாக வீசியதுவளையல்கள் குலுங்கும் சத்தம்கொடும் நாற்றத்திற்கிடையில் மல்லிகைப்பூவின் மணம் குமட்டலைக் கொடுத்தது. பலநூறு எலிகள் மேலேறி ஊர்வது போன்ற கனவாக வந்தது தானும் எலியாக இருப்பதாக பாண்டிக்கு தோன்றியது

புலர் காலையிலே எழுந்த பாண்டி அப்படி ஒரு நிசப்தத்தை அறிந்ததில்லை. மழையிரவுக்கு பின்னான காலை போல எல்லாம் துடைத்து வைத்த சுத்தத்துடன் இருந்தது

அன்றிலிருந்து மாமாவிடம் பொலிவு கூடியிருந்தது. சிரிப்பில்லாத அவர் முகம் யாருக்கும் நினைவில் இல்லை. எது செய்தாலும் அது கூடி வந்தது. அம்மா மாமாவுக்கு கல்யாணம் செய்து வைக்க எவ்வளவோ முயன்றது. முடியவில்லை. அவர் வார்த்தையை தாண்டி யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. தனித்திருந்த மாமாவை தேடி இரவில் பெண்கள் வரத்தொடங்கினார். யாராலும் மாமாவை இணங்க வைக்க முடியவில்லை. பின் இரவில் தோட்டம் பக்கம் செல்லும் போதே பிணம் எறியும் வாடை அடிக்கும். அதை சுவாசித்தவர்களின் கனவில் உடலை துண்டாக்கி சமைப்பது போன்ற கனவு வந்து கனவிலே வாயுமிழ்ந்தனர். மீறி சென்ற சிலர் அரண்டு விழுந்து விழித்து அலறி பிணத்தினர். எது எப்படியானாலும் யாரும் அவரை அண்டவில்லை. ஆனால் அது பெண்களுக்கு கடினமானதாக இருந்தது. மாமவை பார்க்கும்போது அடி வயிற்றில் ஒரு உந்துதல் கிளம்பும்

தோட்டம் விரிந்தது. விதைத்ததெல்லாம் பெருகி  வளர்ந்தது. மாமா எதையும் கணக்கு பார்ப்பதில்லை. சில நேரங்களில் பசுக்கள் விளைந்த கதிர்களை மேய்ந்தன. மயில்கள் சிந்திய மணிகளை தேடி பொறுக்கி திண்றது. பசிய இலைகளினால் ஆர்வம் கொண்ட வெட்டுபூச்சிகளை பிடிக்க சிட்டுகள் மரங்களில் அமர்ந்து கரைந்தது. யாருமறியாமல் உயிர்களின் பேரியக்கம் நிகழ்ந்தது. நண்டு வளைகட்ட எலி வலை பறிக்க பாம்புகள் ஊர்ந்தன. கீரிகள் எழுந்து நின்று சுற்றி பார்த்தபின் பதுங்கி ஓடின. உயிர்தடங்களின் புல்லரிப்பினால் நிலம் கனிந்து புதிய அன்னைப் போல் தயங்கியும் தாராளமாகவும் ஊட்டியது.

மாமா எதுவும் செய்யவில்லை. அதை காண்பதை தவிர. எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி அதன் செயலை பார்த்தபடி நிலத்திலிருந்து மிகத்தொலைவில் இருந்தார். தினமும் இரவில் நாச்சியாருக்கான பூஜை மட்டும் தொடர்ந்தது

மாமா நிலத்தை அம்மா பெயருக்கு மாற்றி எழுதினார்மாமா எங்களை வரச்சொன்னார். ஊரிலேயே தங்கத் தீர்மாணித்தோம். நான் உழவர் உற்பத்தியாளர் கம்பெனிகளுக்கு ஆலோசனை வழங்கும் தன்னார்வ நிறுவனத்தை நடத்தினேன். இந்த சுற்று வட்டாரத்திலே ஐந்து கம்னெிகளுடன் இணைந்து பணியாற்றினோம். அரசாங்கத்தில் இருந்து வரும் சலுகை   பணம் மாணியம் புதுத் திட்டங்கள், திட்டத்திக்கான விளக்கம், புது திட்டத்தின் வடிவமைத்து அனுப்புதல் என சகலமும் எங்களாலே நடந்தன. அது தவிர சிறுதானிய மருத்துவ தாவரங்களின் வியாபாரத்திலும் முக்கியமாக பணியாற்றினோம்

அப்பா வந்ததிலிருந்து ஒருவித சாம்பல்நிறம் கவிழ்வதை உணர்ந்தேன். எனக்கு எல்லா  இரவிலும் கனவில் பெண் வந்தாள். ஆடையில்லாமல். பல்வேறு உடல்களில் ஒரே முகம். சில பெண்கள் பூசினாற் போல் இருந்தனர். சிலர் வற்றி, சிலர் இடை பெருத்து. ஆனால் அனைவரும் அழகாகவே தோன்றினர். ஆனால் அனைவருக்கும் ஒரே கண்கள். ஒரே உணர்வு. கனிவு கொண்டு ஈரத்துடன் அணைத்துக்கொள்ளும் உணர்வு.

 நாங்கள் வந்த ஒரு மாதத்தில் மாமா இறந்தார். நுனா மரத்தில் செய்த வெளிர் நிறக்கட்டில் நான் அமர்ந்திருந்தேன். மாமா கழுத்து வரை போர்த்தி இருந்த போர்வையை விலக்கி விட்டு என் கைகளை பிடித்து கொண்டார். மாமாவின் அதே சிரிப்பு. ‘ என்ன நேத்தும் கெனாவாஎன்றார். ஆனால் இப்போதெல்லாம் வரும் கனவில்தோன்றும் பெண் முகம் தாங்க முடியாத அழகுடன் அடிபணிய வைக்கும் ஆற்றலுடன் வந்தன. நான் எதுவும் சொல்லவில்லை.

பின் அப்பா அனைத்தையும் கவணிக்கத் தொடங்கினார். மாமா தெளித்திருந்த மீன்ரசத்திற்கு பதிலாக மருந்துகளை போட்டார். அப்பாவினால் பூச்சிகளாலும் பறவைகளாலும் எலிகளாலும் உண்ணப்படுவதை தாங்க முடியவில்லை. அப்பா வயல் வேலை ஆரம்பித்த இரண்டு வாரங்களில் பூச்சிகள் மறைந்தன. பறவைகள் சிறகசைக்கவில்லை. எலிகளும் பாம்புகளும் இடம் மாறின. எங்கும் அமைதி. நாச்சியாருக்கு பாண்டி இரவில் விளக்கேற்றி வைத்தார்

 ஒரு மாதம் கழித்து பால்கட்டும் பருவத்தில் வெட்டுக்களி மாதிரியான பூச்சிகள் பறந்தன. முதலில் அது தட்டான் என தோன்றியது. காண ரம்மியமாக இருந்தது. நிலம் பச்சையமாக பூத்திருந்தது. புதப்புது செடிகள் முளைத்திருந்தன. அப்பா ஆள்விட்டு களைபிடுங்கினார். களைபிடுங்க பூச்சிகள் நெல்லிலைகளை உண்டன. அடுத்தவந்த நாட்களில் பச்சையத்தை திண்று கொழுத்த பூச்சிகளை பிடிக்க சிட்டுகள் வந்தன

அடுத்த வந்த வாரங்களில் நிலம் மொத்தமாக காலியாகி கிடந்தன. என் கனவுகளில் ரத்தம் தோய்ந்த நாய்நாக்குடன், உருத்திர தேவதையாக வந்தனர். கனவிலே பயந்து கை நடுங்க  நெடுநேரம் நின்றிருந்தேன். அப்பா அதை பெரிதாக எடுத்துக்கொள்வில்லை. அம்மாவிற்கு அது நல்ல சகுணமாக தோன்றவில்லை. குறி கேட்டு சென்றது. சோளி பார்த்ததில் வீட்டை பிடித்திருக்கும் துர் தேவதையை கண்டனர். பசி அடங்காத தேவதை

அவர் சொன்னார். முன்பொருகாலத்தில் உங்கள் மூதாதையர் வாழ்ந்த ஊரின் அரசன் கன்னி ஒருத்தி மேல் மையல் கொண்டு உடல்கொள்ள விழைந்தான். அரசன் ஆனாலும் குலத்தில் தாழ்ந்தவன் ஆனதினால் யாருக்கும் கொடுக்க மனமில்லை. ஆனால் அந்த பெண் ஆழுள்ளத்தில் தன்னை ஆட்கொள்ளும் ஆணைப்பற்றிய கனவுகள் பெருகின. ஒருபறம் பயமும் மறுபுறம் ஆர்வமும் கொண்டு காத்திருந்தாள்

பெண்னை கொடுக்காமல் நாட்டில் வாழ முடியாத காரணத்தினால் நாடுநீங்க விழைந்தனர். எங்கு சென்றாலும் அவள் அழகும் ஈர்ப்பும் ஒருவித தரித்திரியம் என நினைத்து அவளை குதிருக்குள் அடைத்தனர். அதை ஆழப்புதைத்து பிடி மண் எடுத்து நாடு நீங்கி இங்கு வந்து சேர்ந்தனர்

 இவ்வூரில் முதல் காலடி எடுத்து வைத்ததும் ஒரு பெண்ணுக்கு அலறி உடல் விதிர்க்க சாமி வந்தது. அது அழகிய நாச்சி என்றார். கைகளை நெட்டி முறித்தபடி வெறித்த விழிகளில் இளிக்கும் வாயில் தலைவிரி கோலமாக இருந்தாலும் அனைவரும் அரியநாச்சியை கண்டனர். அரியநாச்சியின் துக்கம் அடங்கவில்லை. கருத்த கிடாவும் கருத்த பன்றியும் கருஞ்சேவலும் பலி கொடுக்கப்பட்டு மூன்று பூசனை செய்தபோதும் வெறி அடங்கவில்லை. யாருக்கும் என்ன செய்வது என புரியவில்லை. இப்போது மீசை அறும்பியிருந்த கன்னிப்பையனை பலி கொடுக்கு முடிவு செய்யப்பட்டது. அவனின் ரத்தத்தால் பதிட்டை செய்யப்பட்ட கருங்கல் குளிர்விக்கப்பட்டது. மேலும் அன்று முழுவதும் ரத்தம் உலராமல் இருக்க வெள்ளை காளையாலும் வெள்ளைக்கிடாவாலும் குளிர்விக்கப்பட்டன. பின் அமைதியடைந்த தேவியை பதித்திருந்தகல்லை கண்பரித்து தூரமான ஊரில் பிரதிஷ்டை செய்தனர்.

அமாவாசை தோறும் பூசை செய்துமாசிமகத்துக்கும் சித்ரா பௌர்னமிக்கும் கொடையெடுத்து வருடம் முழுவதும் சாந்திப்படுத்தினர். பின் பலகாலம் கழித்து அந்த வழக்கத்தை மறந்ததினால் குடும்பங்களில் துர்நிமித்தங்கள் நிகழ்ந்தன.  

மாமவை அலைக்கழித்தது அந்த பெண்ணின் இரைஞ்சல்தான். அந்த அழுகை சத்தத்தில் இருந்து தப்பிக்க ஊருராக சுற்றினார்.

இதுபோன்ற பல கதைகளை நான் வாசித்துள்ளேன். மீண்டும் அதே போன்ற கன்னி மீது மோகம் கொள்ளும் அரசன், கையலாகாத ஊரார், நாடு நீங்கல். ஆனால் ஒன்று மட்டும் தான் கடினமானதாக இருந்தது. அவளை ஏன் குதிருக்குள் அடைத்தனர். அழகு அவ்வளவு ஆபத்தானதா

4.

தூரமாக சாமியாடிகள் ஆடிச் சென்றனர். கருப்பு கச்சையும் ஜரிகை ஓரம் பளபளக்கும் வெள்ளை துண்டு இடுப்பிலும் தலையிலும் கட்டி துடி எடுத்து ஆடி கையில் இருந்த அரிவாளை தூக்கி  ஆட்டியபடி இடதுகையில் இருந்த சாட்டையால் சுள்ளென காற்றை வீசி சென்றனர்

பெரிய கருப்பு, இருளப்பன், முத்துக்கருப்பன், முனுசு என தொடர முன்னால் அக்கினி தலையில் பெட்டி சுமந்துபடி ஊரை வலம் வந்தனர்

ஐயனாரு தான் ஊரை காவல் காப்பவர். அவர் ஆடி வருவதில்லை. மெய்காப்பாளர்கள்  வந்து ஐயனாரிடம் சேதி சொல்வார்கள். அதில் கருப்புதான் துடியான சாமி

அந்த முறை சாமியாட்டத்தின் போது அப்பா  தெற்குத்தெருத் தாண்டி திரும்பி ஆடி வந்தபோது ஒன்று அப்பாவை அறைந்தது. லேசாக அசந்தாலும் பின் சுதாரித்துக்கொண்டு ஆடியது கருப்பு. கை நீட்டமுள்ள அரிவாளை தூக்கி காற்றை கிழித்து  நாக்கு நெறிபடி கடித்து ரத்த சிவப்பான விழிகளால் வெறித்து ஊளையிட்டபடி ஆடியது. மாலைகள் வெக்கையில் வாடின, சதங்கை குலுங்கின, கை காப்பும் தோள் வளையும் முறுக்கின. என்றும் நிகழும் போர்.

எதிரே ஊன் உண்ட இளித்த வாயில் கூர்பற்களில் சதைகள்  ஒட்டிக்கிடக்க சிறு சிறு பூச்சிகள் பற்களை சுற்றின. மூஞ்சூர் ஒன்று முகர்ந்து வந்து முன்பற்களைப்பற்றி தலையை தூக்கி பார்த்தது. ஒசையுடன் பற்கள் மோத துண்டான சதைகளை பற்கள் அரைத்தன. விடைத்த நாசியின் வழியே வந்த அனல் நிலத்தை பொசுக்கின. மருட்டும் விரிந்த விழிகளின் இரக்கமின்மையும் வன்மமும் அடி வயிற்றில் ஒரு தொடுகையாக உணர, கருத்து, வடிவாக இறுகிய சதைக்குன்றைப் போல ஒரு பெண் நின்றிருந்தாள். இடதுகையில் சூலாயுதம், ஓங்கிய வலது கையில் வச்சிராயுதம். விரியன்பாம்புக்குட்டிகள் காதில் தொங்கி ஆடின.

அன்று மயங்கி விழந்த அப்பா, அதற்குபின் உளம்சுருங்களானார். மனம் கொதித்து தனித்தே இருப்பார். யாருடனும் பேசுவதில்லை. உணவின் மீதான நாட்டமும் குறைந்தது. முதல் சில நாட்கள் உள்ளறையிலேயே இருந்தவர் சாயுங்காலத்தில் வெளிவரத் தொடங்கினார். எதேச்சையாக அரியநாச்சியின் முன் நின்று வெறித்து பார்த்துக்கொண்டிருந்தார். பின் சாயுங்காலம் முதல் இரவு வரை அதையே பார்த்தபடி இருப்பார். எதுவும் அவருக்குள் நுழையமுடியாத தூரத்தில் கண்கள் சுழல முகம் வியர்த்து பொங்கும். களைத்து காலை முழுதும் தூங்கினார். சாப்பிடுவது கிடையாது. காலையில் அரிசிக் கஞ்சி குடிப்பார். தெளிந்த மனநிலையில்  சில நேரம் சிரித்து பேசும்போது பழைய அப்பா அதில் வெளிப்படுவார். ஆனால் அதற்கு பின் மேலும் உக்கிரமாக தேவியினால் ஈர்க்கப்பட்டார். சில நேரம் தானாக சிரிப்பார். இனிய மணத்தினை முகர்ந்த குறியுடன்  கனவிலே அமர்ந்திருப்பார்

இரவில் தேவியுடன் சிரித்து பேசுவும் தொடங்கிய போது எங்களுக்கு என்ன செய்வது என தெரியவில்லை . எந்த மந்திரங்களுக்கும் கட்டுபட விரும்பவில்லை அப்பா. ஆனால் முகம் அப்படி அழகில் லயித்திருந்தது. காணாததை கண்ட சாமானியன் கொள்ளும் பதற்றமும் கூடியிருந்து இரண்டுக்கும் இடையில் அலைக்கழிக்கப்பட்டார். அது இறப்புக்கான அலைக்கழிப்பு என அப்போது எங்களுக்கு தெரியவில்லை

அப்பா இறந்த பின் தோட்டத்தை பாண்டியை பார்த்துகொள்ள சொல்லிவிட்டு கிளம்பினோம். என் வேலையை நான் மதுரையை சுற்றிய கிராமங்களில் மேற்கொண்டேன்.

5.

கால்களில் சதங்கையை வைத்து இழுத்து கட்டினார் சம்முகம் அண்ணன். பின் கைச் செண்டை, காப்பு, காலில் சிலம்பு, தண்டை, கால் சலங்கை, இடுப்பு சலங்கை, கச்சை, நெஞ்சு ஜரிகை, தோள் வளை மாட்டினார். காதோலை கருமணியை காதில் அணிவித்து சாட்டையும் வீச்சரிவாளும் கைகளில் கொடுத்தனர். நெற்றியில் திருநீறு பூசி பொட்டு வைத்தனர் , தலையில் துணியால் தைத்த மகுடம். ஒவ்வொன்றாக ஏற ஏற எனக்குள் ஏதோ நிகழ்வதை உணர்ந்தேன். சுற்றி நின்றிருந்தவர்களின் பணிவும் ஒன்றுதலும் எனக்கு கிளர்ச்சியை கொடுத்தது. பின்னால் கொடை பிடித்தபடி யாரோ நின்றிருந்தனர். சூடம் ஏற்றி ஆரத்தி எடுத்து அனைவருக்கும் திருநீறு கொடுத்தனர். என் கைகளில் கொடுக்கப்பட்ட திருநீற்றை என் கால்களில் விழுந்தவருக்கெல்லாம் பூசி விட்டேன். என் ஆட்டத்தினால் அது பலநேரங்களில் நெற்றியை விலகி சென்றது

இன்று சாமியாட்டம் என்றதிலிருந்து எனக்குள் பதட்டம் கூடியிருந்தது. இன்று முக்கியமான நாள். நாளை முதல் இன்றோ நேற்றோ இருந்தவன் இருக்கமாட்டான் என்ற உணர்வு தோன்றிக்கொண்டே இருந்தது

கையிலிருந்த அரிவாளையும் சாட்டையையும் தூக்கி ஆட்டி ஆட்டி நடந்து சென்றேன். கொஞ்சம் கூச்சம் இருந்தது ஆரம்பத்தில், பின் அது விலகியது. தெற்குத் தெரு திருப்பத்தில் வடிவான பெண்ணைக் கண்டேன். ஆர்பரித்து விழும் கருநிற அருவியை சுருட்டி கட்டியது போன்ற கூந்தல். திரண்ட தொடையும் கொழுமிய பின்னழகுடன் முலைகள் வற்றியிருந்தது . இது எதற்கும் சம்பந்தமில்லாத விகல்பமில்லாத முகம். லேசான பூனைமயிர் மேலுதட்டில், குவிந்த கீழ்உதடு, நீண்ட கழுத்தில் வரியோடியிருந்தது. கூர்ந்த நாசியின் நேர்கீழே பிளவுண்ட நாடி, நிறைந்த ஏரி போல தன்மை கொண்ட கண்கள்.

அனைவரும் கண்டு மயங்கி பேதலிக்கும் பெண்மையின் பூரணம். இருந்தும் எனக்குள் மற்றொன்று எழுந்து அதை வெல்ல துடித்தது. இதுவரை அழகாக மனதை உருக்கியது எரிச்சலூட்டியது. வெல் வெல் என உள்ளிருந்து விசையில் இழுத்து செல்லப்பட்டேன். அங்கு நான் இல்லை

காலம் காலமாக தொடர்ந்து நிகழும் போர் என் மூலமாக நிகழ்வதை அறிந்தபோது நான் விலக வேறொன்று எனக்குள் குடியேறியது

வெறியின் உச்சத்தில் நிகழ்ந்த நிகர் சமரில் மிக அருகே அவள் கண்களை கண்டேன். கருணையும் அலைக்கழிக்க வைக்கும் ஏதோ ஒன்றும் இருந்தன அந்த கண்கள். சாசுவதமும் தவிப்பும் கொண்டவை. முன்பு எங்கோ கண்ட அனுக்கம் வந்தது. நான் நன்கு அறிந்தவை அவை. எனையும் நன்கு அறிந்தவை. ஆனாலும் விலக்கமும் இருந்தனஅந்த கணத்தில் முழுதாக அதற்குள் விழ எழுந்த ஆவலை வெறுமனே பார்த்திருந்தேன். இதழ்கள் கோடிலித்து இளிவரல் கொள்ள எனக்குள் மீண்டும் சீற்றம்

இருவரும் ஒரு துலாதட்டின் இரு நிகர் வைப்பு எனத்தோன்றியது. அவளை எனக்குள்ளும், அவளுக்குள் என்னையும் கண்டேன்ஒருகணம் அசையாது நிற்க இருவரும் ஓய்ந்தோம்

 ஒரு கணத்தில் தன் முழு ரூபம் காட்டியவள் பின் சுருங்கி தன் வாலாள் கழுத்தருத்து வீழ்ந்தாள். கீழே விழுந்து துடித்துக் கொண்டிருக்கும் உடலில் இருந்து தனியே கிடந்த முகத்தில் வெகு தூரத்தில் இருந்தன கனவில் வந்த கனிவு கொண்ட அதே கண்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *