ஆர்.சீனிவாசன் கதைகள் – ஸ்பேஸ்-ஜக்

 

சக்திவடிவேல், தன் புது விண்கலத்தை பெருமையுடன் பார்த்து ரசித்தான். சுமார் முப்பத்தைந்து அடி நீளமும், பதினைந்து அடி அகலமும், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட, மூன்றாம் கை மாறிய விண்கலம். இருக்கைகள், ஓட்டுனரையும் சேர்த்து இரண்டு. சரியாக அதன் புள்ளி விவரம் சொல்லவேண்டுமானால் கீழ்வருமாறு :

விதம் என்          : EN78324G 

உற்பத்தி வருடம் : புவி வருடம் 5789 

உற்பத்தி இடம்    : நட்சத்திர கூட்டம் AC87G , கிரஹம் : பிரிட்டோ.

என்ஜின்கள் : 2 (விதம் : P34TB ) அணுசக்தி விசை படகு. 

உச்சகட்ட  சக்தி பரிமாற்றம்: 35 x 10 ^ 345 நியூட்டன். 

உச்ச வேக வரம்பு : ஒலியின் நுறு மடங்கு.

இரண்டாயிரத்து முன்னூறு கோடி மயில்களுக்கு மேல் ஓடியிருந்தாலும், உள்ளிருக்கைகள், துலைகாட்டி, மானிட்டர் சகிரீன்கள், பல வரிசை அலைபேசி இவையெல்லாம் சரிவர இயங்கின. அணுவிசை என்ஜின்களை மட்டும்  சற்று பழுதுபார்த்து அதனை மேலும் சக்திவாய்ந்தவையாய் அப்கிரேடு செய்தான். அதனுடன் பல அலைவரிசை தொலைக்காட்சி ஒன்றை வாங்கி,  வெளித்தளத்தில் ஆன்டெனா ஒன்றையும்  இன்ஸ்டால் செய்தான். முதல் வெள்ளோட்டத்தில் கிடைத்த கிக்ககை வார்த்தைகளால் வர்ணிக்கமுடியவில்லை. அன்றைய சமூக ஊடகங்களில் தன்னையும், விண்கலத்தையும் சேர்ந்தவாறு எடுத்த புகைப்படங்களை மேல்சுமத்தி, நண்பர்களிடமிருந்து பொறாமையையும் பாராட்டுகளையும் சூடிக்கொண்டான். வேற்றுகிரஹ வாசிகள் தங்கள் விண்கலங்கலில்யிருக்கும் கேமரா மூலம் தன் காலத்தை பார்க்கும்போது  பெருமிதம்மடைந்தான். வானலை அடையாள அட்டையில் “தி கிரேட் ஸ்டீரிக் “, “ஸ்பேஸ்-ஹவுண்ட்” என வித விதமாய் பெயர்சூட்டிக்கொண்டான். 

இந்த மாடல் விண்கலம் அவனுடைய கனவு வாகனம். கல்லூரியில் இருந்தபோது அவன் படிப்பறை சுவற்றில் இந்த மாடல் விண்கலத்தின் சுவரொட்டிதான் இருந்தது. படிப்பை முடித்து வேலைக்கு சென்ற சில வருடங்களில் இந்தவகை விண்கலத்தை வாங்குவதற்கான தொகையை சேர்த்து, அதே விண்கலத்தின் இடை பிரிவில் ஓட்டும் உரிமம் பெற்றான்.  எளிதில் மார்க்கெட்டில் வரும் பொருள் இல்லை இந்தவகை விண்கலம். பணிமனையில் சொல்லிவைத்தும், இணையதளங்களில் வேட்டையாடியும், முடிவாக ஒரு வேற்றுக்கிருஹ வாசியிடமிருந்து மிக கடினங்களுக்கிடையே வாங்கினான். இந்த வகையின் முதல் வெளியீடான இந்த விண்கலம், சில வருடங்கள் தான் உற்பத்தியில் இருந்தது. சுற்றுசூழல் மாசு கட்டுப்பாடு சட்டத்தினால் இந்த மாடல் கைவிடப்பட்டது. இதன் பின் வந்த மாடல்கள் இதனைவிட சொகுசாய், கவர்ச்சியாய், பிக்காஸோவின் க்யுபிஸ்ட் வரைபடம்போல் பல்வேறு கூறிய வெட்டுகளுடன் , விஸ்தாரமாய், பல அப்கிரேடுகளுடன் வந்தன. ஆனால் வேகத்தில், முரட்டுத்தனத்தில், புகைமண்டல வேகசாகசங்களில் இந்த பழைய மாடல்ளை மிஞ்ச முடியவில்லை. இதனால் இளஞர்களிடையே மிகவும் பாப்புலரான, அறிய மாடலாகவும் திகழ்ந்தது. இதனை வாங்குவதற்கு பலபேர் வரிசையில் நின்றிருந்தனர். சகித்தவடிவேல், தன்னை அதிர்ஷ்டசாலியாக கருதினான். 

***

பூமி அப்போது ஞால குழுமத்தின் ஒரு சிறிய புள்ளியாக இருந்தது. ஒரே நட்சத்திர கூட்டத்தில் இருக்கும் கிரஹங்களுக்கிடையே பயணிப்பதெற்கென்றே ஹைவேக்கள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் அதிக தூரங்களுக்கு  ஹைப்பர்வேக்கள் இருந்தன. ஹைபெர்வேகளில் உச்ச வேகவரம்பு எதுவும் இல்லை. ஒளியின் பாதிவேகத்தில் செல்லக்கூடிய விண்கலங்கள் இருந்தன. அவையனைத்தும் ராணுவத்திடம் மட்டும் தான் இருந்தது. இந்நிலையில் அன்ரோமேடா கூட்டத்திலிருந்து BC – 74 கூட்டத்திலிருக்கும் ஒரு கிரஹத்திற்கு செல்லும் வேலை வந்தது. மொத்தம் முப்பத்தைந்து ஓளி வருட தூரம். அவனுடைய விண்கலத்தில் பதினெழு பூமிமணிநேர பயணம். மூன்று ஹைப்பர்வேக்களை கடந்து, சுவாரஸ்யமான காட்சிகளை பார்த்தவண்ணம் போகும் வாய்ப்பு. இளைப்பாறுவதற்கு நல்ல  ஓய்வு-விடுதிகள், ஸ்பேஸ் அருவிகள், ஆஸ்டராய்டு பெல்ட்டுகள், ஹைப்பர் மால்கள் என பார்ப்பதற்கும், அனுபவிப்பதற்குமென்றே அமைக்கப்பட்ட பாதை. பயண அட்டவணையை துல்லியமாக வரைந்து, விண்கலத்தை பிரயாணத்திற்கு முனபு பணிமனைக்கு அனுப்பி பழுதுபார்த்து ஆயுத்தப்பணிகளை மேற்கொண்டான். 

**

பயணத்தேதி வந்தது, காலையில் சீக்கிரமாக எழுந்து விண்கலத்தை ஹை வேக்களில் செலுத்தி, முடுவில் A-56 ஹைப்பர்வேயை அடைந்ந்தான். டிராபிக் அதிகமாக இல்லை, உச்சகட்ட சக்திபரிமாற்றத்தை இயக்கி, திசை பிடியை இலக்கின் கோ-ஆர்டினேட்டுகளை நோக்கி செலுத்தினான். ஆஹா, என்ன ஒரு தருணம்! சில மைக்ரோ மணித்துகளிலேயே ஒலியின் எழுபது சதவீகித வேகத்தை அடைந்தது விண்கலம். ஆஸ்டராய்டு கற்களை துல்லியமாக தவிர்த்து , வால்நட்சத்திரத்தின் மூல கல்லை சுற்றிவளைத்து, மற்ற விண்கலங்களை புழுதியில் தள்ளி சில மணி நேரம் ரம்யமாய் கழிந்தது. மாலை நெருங்கியது, இளைப்பாறுவதற்கு “தி பிங்க் டிராகன்” ஓய்வு-விடுதியில் பதிவு செய்திருந்தான். 

A-56 கடந்து M-9 ஹைபெர்வேயை அடைந்தான். M-9  ஹைபெர்வே காசினோக்களுக்கு பேர்போனது. பிரம்மாண்ட பொழுபோக்கு பூங்காக்கள் நிரம்பியது. வேகத்தை சற்றே குறைத்துக்கொண்டு வழி நிற்கும் கண்காட்சிகளை ரசித்துக்கொண்டே சென்றபோதுதான் அது அவன் கண்ணுக்கு தென்பட்டது. A- 56  லேருந்து  ஒரு மர்ம விண்கலம் அவனை பின் தொடர்ந்து வந்துகொண்டிருந்தது. வானிலை அடையாள ரேடாரில் அந்த விண்கலத்தின் அடையாளம் எதுவும் காண்பிக்கவில்லை. ஒருவேளை அந்த விண்கலத்தின் அடையாள அட்டையில் கோளாறுகள் இருக்கலாம் என எண்ணி, ‘தி பிங்க் டிராகன்”, ஓய்வு-விடுதியை நோக்கி, ஹைபெர்வேவிலிருந்து விலகி, பக்கத்தில் இருக்கும் மிதவேக பாதையில்   விண்கலத்தை திருப்பினான். மர்ம விண்கலமும் திரும்பி அவன் விண்கலத்தை பின்தொடர்ந்து, திடீரென வேகத்தை அதிகரித்தது.  சரி, சனியன் விட்டது என தன் முன் செல்ல, தன்  விண்கலத்தின் விளக்குகளால் செய்கை செய்தான். மர்ம விண்கலம் சரி மாறியாக வளைத்து அவன் முன்னே சென்று திடீரென முற்றுகை இட்டது. நின்ற வேகம் சக்திக்கு அதிர்ச்சியூட்டியது. மைக்ரோ மணித்துளிகளில் பிரேக்குகளை இயக்க மறந்திருந்தால் அவன் விண்கலம் மர்ம விண்கலத்தின் மீது மோதி இருவரும் பஸ்மமாகி இருப்பார்கள். 

“டேய் மூளைவளர்ச்சியில்லாத ஜடங்களா! என்னடா ஓட்டறீங்க?. மாடுமேய்க்க லாயக்கில்லாதவனெல்லாம் விண்கலம் ஏன்டா ஓட்டறீங்க?” கத்தினான் சக்தி. கணினி மொழிபெயர்ப்பு சாப்ட்வேர் “எந்த மொழியில் மொழிபெயர்க்கவேண்டும்?” என கனிவுடன் பெண்குரலில் கேட்டது. அப்போதுதான் அந்த விண்கலத்தில் இருப்பவர்கள் எந்த கிரஹ வாசிகள் என தெரியாமலேயே திட்டியது நினைவுக்கு வந்தது. கணினி சகிரீனில் அந்த விண்கலத்தின் அடையாளம் அறிய ஞால போக்குவரத்து கழகம் நிர்ணயித்திருந்த விளக்கு செய்கை வரிசையை துவக்கினான். சகிரீனில் எந்தவித பாதிப்பும் தெரியவில்லை. மெதுவாக சகிரீன் மங்கியது, விண்கலத்தின் உள்விளக்குகள் மங்கின, திசைகாட்டி முழுமையாக கருப்பானது. அப்போதுதான் அதனை உணர்ந்தான், அவனுடைய விண்கலம் மெதுவாக நகந்துகொண்டிருந்தது, முதலில் மெதுவாகவும்  இப்பொழுது ஒலி வேகத்தில் அந்த மர்ம விண்கலத்தின் இயர்ப்பினால்  அதனை பின்தொடர்ந்துகொண்டிருந்தது. நடப்பது என்ன என அவனுக்கு புரிந்தது, இது ஒரு ஸ்பேஸ்-ஜக். பதறினான். ஞால ஹைவே பொலிஸிற்கு எஸ்-ஓ-எஸ் அனுப்ப முயன்றான், முடியவில்லை. அவன் விண்கலத்தின் கட்டுப்பாடு அவனிடமிருந்து முழுமையாக போயிருந்தது. பதட்டத்தில் , “என்னடா வேணும் உனக்கு?. பணம் இல்லடா என்கிட்டே. மூஞ்சிய காமிங்கடா”. 

சகிரீனின் நிறம் மாறியது. அதில் தோன்றிய உருவத்தை பார்த்து அதிர்ந்தான். மர்ம விண்கலத்திலேருந்து மூன்று நபர்கள் சகிரீனில் வந்தார்கள், முதலை தலையன் ஒருவன், முட்டை கண்ணன் ஒருவன், மூன்றாம் நபரை வர்ணிப்பது வார்த்தையில் கடினம்.  

“சைடுல நிறுத்துடா! என்ன? எங்க விண்கலத்தின் மேல மோதிட்டு ஓடலாம்னு பக்கிரியா?” முதலை தலையன் கேட்டான். 

“எப்ப? மோதினத்துக்கான கேமரா அத்தாட்சி இருக்கா?. இருந்தா வா, M-9 ஸ்டேஷனுக்கு”. 

முன்னிருந்த விண்கலத்திலேருந்து கதவு திறந்தது, முதலை மண்டையன் தலைக்கவசம் அணிந்து வெளியில் வந்தான், முட்டை கண்ணன் பின்தொடர்ந்தான். முதலை மண்டையன் சக்தியின் விண்கலத்தின் வெளித்தளத்தில் பொருத்தப்பட்டிருந்த புதிய ஆன்டெனாவை உடைதான். முட்டை கண்ணன் இடுப்பில்லேருந்து கைப்பிடி ஒன்றை எடுத்து பட்டன்களை இயக்கினான், “டோய்ன்” என சத்தமிட்டு லேசர் கத்தி ஒன்று வெளிவந்தது. சக்தியின் விண்கலத்தின் திரையை லேசர் கத்தியால் கிழித்தான். 

“டேய் முதலை மண்டையா உனக்கு என்கையாலதான்டா சமாதி” என கத்தி நிறுத்தாமல்,  இந்த ஆசிரியர் அறியா, தற்போதைய தமிழ் அகராதியில் இன்னும் வழக்கில் வராத திவ்ய சொற்களிலினால் திட்டிகொண்டே, விண்வெளி தலைக்கவசத்தை  மாட்டிக்கொண்டு, லேசர் துப்பாக்கியை இடுப்பில் சொரிகி, அபாய கதவை திறந்து வெளியே வந்து முதலை மண்டையனின் தலைக்கு குறி வைத்தான் சக்தி. “என்னை என்ன பயந்தவன்னு நினைச்சியா? செய்யறதை நிறுத்தல, சுட்டு பொசிக்கிடுவேன், ஓடுங்கடா”. முதலை மண்டையனுனும், முட்டை கண்ணனும் உடைப்பதை நிறுத்தினர், நிசப்தமாய் மூவரும் நின்றனர். சில வினாடிகள் ஆனதும்  முதலை மண்டையனும், முட்டை கண்ணனும் பின்வாங்கினர். “ஓடுங்கடா பரதேசிகளா”. பின்வாங்கிய முதலை மண்டையனும், முட்டை கண்ணனும் மர்ம விண்கலத்தில் ஏறினர், சில மணித்துளிகளில் விண்கலம் மயமானது. 

“சே..தப்பு பண்ணிட்டேன். இவனுங்களை உறிச்சு எடுத்திருக்கணும்” தனக்கே பேசிக்கொண்டு தன் விண்கலத்தை நோக்கி திரும்பினான், ஸதம்பிதான். அவன் பின் கரும் வெறுமை தான் இருந்தது. விண்கலம் காணவில்லை. மெதுவாக அவன் சிந்தைக்கு விளங்கியது. கோபத்தில் தன் விண்கலத்தின் அவசர கதவை மூடாமல் வெளியேறியதும், மர்ம விண்கலத்தில் இருந்த மூன்றாம் கம்பிளிபூச்சி மண்டையன் எங்கு சென்றிருக்கக்கூடும் என்பதும்.

 

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  1. The writer has a fantastic futuristc imagination. தமிழ் சொற்கள் நம்பகமாக அமைந்துள்ளன!