நிலையற்றவற்றின் பேரழகு – கீரனூர் ஜாகிர்ராஜாவின் புனைவுலகை முன்வைத்து

1

எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜா அவர்களின் படைப்புகளை நான் வாசிக்கத் தொடங்கி பத்து வருடங்கள் கடந்துவிட்டன. ஆகவே முதன்முறை ஒரு படைப்பாளியை கண்டுணர்ந்த எளிய பரவசக் குறிப்பாக அல்லாமல் அவருடைய படைப்புலகம் பற்றிய ஒரு முழுமையான மதிப்பீட்டினை உருவாக்கும் செயலை இக்கட்டுரையின் வழியாக செய்து பார்க்க முயல்கிறேன். ஒரு சிறிய முரணிலிருந்து கீரனூர் ஜாகிர்ராஜாவின் படைப்புகள் பற்றிப் பேசத் தொடங்கலாம்.

கடந்த சில வருடங்களாக நண்பர்கள் பலரிடமும் ஜாகிர்ராஜாவை வாசிக்கும்படி பரிந்துரைக்கிறேன். மேலும் அவர் படைப்புகள் பற்றி சூழலில் பேசப்படுவதையும் அவதானிக்கிறேன். இந்த அடிப்படையில் கீரனூர் ஜாகிர்ராஜா எவ்வாறாக தமிழ்ச்சூழலில் உள்வாங்கப்படுகிறார் என்றொரு புரிதல் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. கீரனூர் ஜாகிர்ராஜாவின் படைப்புகளுடன் பரிச்சமியமில்லாதவர்கள் அவரை வாசிக்கத் தொடங்கியதும் ஓரிரு நூல்களுடன் நிறுத்திக் கொள்வதில்லை. கூடுமானவரை அவருடைய படைப்புகளை முழுமையாக வாசிக்க விரும்புகின்றனர். ஆனால் நாமாகக் கேட்டாலொழிய அவருடைய படைப்புகள் பற்றிய ‘அபிப்ராயத்தை’ அவர்களாக முன்வந்து பகிர்ந்து கொள்வதில்லை. படைப்புகள் ஈர்க்கின்றன, தொடர்ந்து படிக்கவும்படுகின்றன ஆனால் பேசப்படுவதில்லை. இந்த முரணுக்கு என்ன காரணம்? (ஏதும் சதிக்கோட்பாட்டை சொல்லப் போகிறேன் என்று அஞ்ச வேண்டாம்.) கீரனூர் ஜாகிர்ராஜாவின் படைப்புகளைப் புரிந்து கொள்ள அவர் படைப்புகள் எவ்வாறாக இங்கு உள்வாங்கப்படுகின்றன என்பதை அறிந்து கொள்வதும் அவசியமாகிறது என்பதாலேயே இந்த முரணை சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.ஒரு வகையில் கீரனூர் ஜாகிர்ராஜா எவ்வகையிலான படைப்பாளி என்பதை அறிந்து கொள்ளவும் இந்த முரண்தான் எனக்கு உதவி புரிந்திருக்கிறது. இந்தக் கட்டுரை கீரனூர் ஜாகிர்ராஜாவின் படைப்புலகைச் சுற்றி இருக்கும் இந்த முரணான மர்மத்தை சற்று தெளிய வைப்பதையும் தன் நோக்கமாகக் கொண்டுள்ளது. அதற்கு முன்பாக ஜாகிர்ராஜாவின் படைப்பாக்கத் தளம் பற்றிய ஒரு புரிதலை நாம் கொண்டிருப்பது நல்லது.

‘அமைப்புக்கு எதிரான கலகம்’ , ‘மையத்தை சிதறடித்தல்’ போன்ற சொல்லாட்சிகள் தமிழ்ச் சூழலில் கால் நூற்றாண்டாக காரணம் புரியாமலேயே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அமைப்பில் வலுவாகக் காலூன்றி நிற்கும் பேராசிரியர்களே இத்தகைய சொற்களை அதிகமாக பயன்படுத்துவது வேடிக்கையானதும்கூட. இந்த சொற்களுடன் இணைந்து எழும் இன்னொரு சொல் ‘பின் நவீனத்துவம்’. பின் நவீனத்துவ எழுத்துமுறை என்பது மையத்தை எதிர்த்து விளிம்பிலிருந்து எழுதப்படுவது அமைப்புக்கு எதிராக கலகம் செய்வது என்று இச்சொற்களை உத்தேசமாகக் கோர்க்கலாம். உண்மையில் பின்நவீனத்துவ எழுத்துமுறை என்பது இந்த வறட்சியான வரையறை மட்டும்தானா? இந்த வறண்ட வரையறை வழியாகத்தான் தமிழில் பின்நவீனத்துவ எழுத்துமுறை என்று சொல்லப்படுவது நிகழ்ந்திருக்கிறதா? கீரனூர் ஜாகிர்ராஜாவின் படைப்புகள் அப்படி இல்லை என்ற அழுத்தமான பதிலைச் சொல்கிறன. அது எப்படி என்று பார்ப்பதற்கு முன் நம்முடைய நவீன கதைமரபின் இருபெரும் போக்குகள் பற்றிய ஒரு புரிதல் நமக்கு அவசியமாகிறது.

தமிழில் இதுவரை எழுதப்பட்ட சிறுகதைகளை ‘சொல்லப்படக்கூடியவை’, ‘சொல்லிவிட முடியாதவை’ என்று இரண்டாகப் பகுத்துக் கொள்ளலாம். முன்னதற்கு உதாரணமாக புதுமைப்பித்தனின் பெரும்பான்மைக் கதைகளையும் பின்னதற்கு உதாரணமாக மௌனியின் பெரும்பான்மைக் கதைகளையும் சொல்ல முடியும். சமீபத்தில் ஜெயமோகன் கி.ராஜநாராயணன் பற்றிய உரை ஒன்றில் இன்னொருவருக்கு ‘சொல்லப்படக்கூடியதே’ சிறந்த கதையாக இருக்க முடியும் என்று கி.ராஜநாராயணன் அபிப்ராயம் கொண்டிருந்ததாகச் சொல்லி இருந்தார். புதுமைப்பித்தன் இன்று பிரபலமாக இருப்பதற்கும் அவருடைய பல கதைகள் ‘சொல்லத்தக்கவையாக’ அமைந்தது ஒரு காரணம். இன்று தமிழ்ச்சூழலில் வலுவான பாதிப்பை செலுத்தியவர்கள் என்று நாம் நம்பும் படைப்பாளிகள் அனைவருமே இப்படி ‘சொல்லப்படக்கூடிய’ கதைகளை எழுதியவர்கள்தான். வாய்மொழியாக சொல்லத்தக்க கதைகள் மாற்றுக் குறைவானவை என்று நான் கருதவில்லை. அதேநேரம் வாசிப்பின் வழியாக மட்டுமே உணரத்தக்க கதைக்களங்களை கட்டமைக்கும் படைப்பாளிகள் கொண்டாடப்படாமல் போவதற்கு நம்முடைய ‘வாசிப்புச் சோம்பலும்’ புதிதாக உள்ளே வருகிறவற்றை புரிந்து கொள்ளும் திராணி குறைவாக இருப்பதும் முக்கியமான காரணம். புதுமைப்பித்தனில் தொடங்கி குபரா, சுந்தர ராமசாமி, கி.ராஜநாராயணன்,  ஜெயமோகன் வரை ‘சொல்லத்தக்க’ கதைகளை எழுதிய படைப்பாளிகள் என ஒரு பெரும்நிரை நம்மிடம் உள்ளது. இணையாகவே மௌனியில் தொடங்கி சுரேஷ்குமார இந்திரஜித், கோபி கிருஷ்ணன், யுவன் சந்திரசேகர் என்றொரு நிரையும் நம்மிடம் உள்ளது. இந்தப் பிரிவிணையை இவர்களுடைய பெரும்பாலான கதைகளின் பொதுத்தன்மை என்று வரையறுக்கலாம். விதிவிலக்குகளும் இவர்களுடைய படைப்புகளிலேயே உண்டு. நான் இங்கு குறிப்பிட விரும்பியது இந்த வேறுபாட்டை மட்டுமே. இந்த வேறுபாடு உருவாகும் புள்ளி எது?

/எம்.டி.முத்துக்குமாரசாமி அமைப்பியல் நோக்கில் மெளனியைப்பற்றி கடுமையான விமரிசனத்தை முன்வைத்தார். மெளனியின் மொழி அகவயமானது எனவே மானுட அறத்தை கையாள திறனற்ற மொண்ணை மொழி என்பது அவரது முக்கியமான குற்றச்சாட்டு/

மேற்சொன்னது ஜெயமோகன் மௌனியின் படைப்புகள் பற்றிய தன்னுடைய விமர்சனத்தில் எழுதி இருக்கும் வரி. திலீப்குமாரும் மௌனி பற்றிய எழுதிய ‘மௌனியுடன் கொஞ்சதூரம்’ என்ற கட்டுரையில் எழுத்தாளனின் ‘அற இயல்பு’ பற்றி பேசி இருக்கிறார். நான் சொன்ன ‘பிரிவிணையின்’ தொடக்கப் புள்ளியில் மௌனியும் இருப்பதால் மௌனியைத் தொடர்ந்து எழுத்தின் வழியாக மட்டுமே வாசகனுக்கு அனுபவத்தைக் கடத்தும் எல்லா படைப்பாளிகள் மீதும் இந்த அறம்சார் ‘குற்றச்சாட்டை’ வைத்துப் பார்க்க முடியும்.

எழுத்தாளனுக்கு சமூக போதம் என்ற ஒன்று இருக்க வேண்டுமா வேண்டாமா என்பது நெடுநாட்களாகவே தமிழ்ச்சூழலில் விவாதிக்கப்பட்டு வரும் ஒரு விஷயம்தான். இந்த விவாதத்தில் எழுத்தாளனின் சமூக போதத்துக்கு சான்றாக விளங்கும் படைப்பாளிகள் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் ‘சொல்லத்தக்க’ கதைகளை எழுதியவர்களாகவே இருக்கின்றனர்.‌ இவ்வகை படைப்பாளிகளின் பொது இயல்பென ஒன்றைச் சுட்ட முடியும். இவர்கள் அனைவருமே சமூகத்தின் புறவயமான இயக்கத்தை கூர்ந்து கவனிக்கிறவர்களாக அதன் சறுக்கல்களைக் கண்டு கோபப்படுகிறவர்களாக உள்ளனர். அந்த அவதானிப்பும் கோபமும் இவர்கள் படைப்புகளில் ஏதோவொரு வகையில் பிரதிபலிக்கிறது. அந்தப் பிரதிபலிப்புதான் சமூகமும் படைப்பும் உரையாடும் வெளி. புதுமைப்பித்தனின் நாசகார கும்பலும் ஜெயகாந்தனின் அக்னிப்பிரவேசமும் சுந்தர ராமசாமியின் பள்ளமும் ஜெயமோகனின் வெற்றியும் பேசுவது நம் சமூகத்தின் ஆதாரமான பிரச்சினைகளை. அறம்சார் போதம் கொண்ட எல்லோருமே இக்கதைகளுடன் உரையாடத் தொடங்குகின்றனர். வாய்மொழியாகக் கதைகளை பகிர்ந்து கொள்கின்றனர். ஆனால் வாசிப்பின் வழியாக மட்டுமே அர்த்தத்தளத்தை உருவாக்கும் படைப்புகள் பொதுச்சமூகத்தால் அவ்வளவாக விவாதிக்கப்படுவதில்லை. அதற்கு முக்கியமான காரணம் இவ்வகைமையின் பெரும்பான்மை படைப்புகள் ஒரு குறிப்பிட்ட தனிமனிதனின் பிரச்சினையை பேசுவதாகவே இருந்தன. இவ்வெழுத்தின் வழியாக அடையப்படும் உச்சங்கள் அனைத்தும் நெடுநாள் இலக்கிய பரிச்சயம் உடையவர்களாலேயே புரிந்து கொள்ளப்பட்டது. ஓரளவு இவ்விரு எல்லைகளுக்கும் நடுவில் நின்ற படைப்பாளி என அசோகமித்திரனைச் சொல்லலாம். அசோகமித்திரன் கதைகள் சொல்லக்தக்கவையாக இருந்தன. அதேநேரம் வாசிக்கப்படும்போது முற்றிலும் வேறு அனுபவத்தையும் அவை வழங்கின. மொழியின் நுண்ணிய சுவைகளை வெளிப்படுத்த இதுமாதிரியான ‘சொல்லவிட முடியாத’ கதைகளில் வாய்ப்புகள் அதிகமும் இருந்தன. மொழியின் சுவை பற்றி பேசுகிறவர்கள் எல்லோரும் பூர்ஷுவாக்கள் என்று முற்போக்காளர்கள் பிரகடனம் செய்தார்கள். அது இயல்பும்கூட. முற்போக்கு எழுத்தாளர்களின் மொழி பெரும்பாலும் தட்டையானது!

வாசகனின் மொழிச்சுரணையை மட்டுமே நம்பி இயங்கும் படைப்புகள் பற்றி பொதுவெளியில் பெரிய அளவில் விவாதங்கள் நடைபெறாததற்கு சமூகமாக நாம் சூடிக்கொண்டிருக்கும் முற்போக்கு பாவனை ஒரு காரணம். மற்றொரு காரணம் மொழிவழி அனுபவத்தை நல்கும் படைப்புகள் பெரும்பாலும் சமூக போதம் அற்றவையாக தனிமனிதனின் அகச்சிக்கல்களை பேசுவதாக அமைவது. இதுவரை பேசியவற்றை இப்படித் தொகுக்கலாம்.

சமூக அறத்தை ஊன்றி கவனித்து எழுதப்படும் படைப்புகள் விவாதிக்கத்தக்கவையாகவும் அதனை பொருட்படுத்தாத படைப்புகள் வாசிப்பின் வழியாக மட்டுமே உயிர் கொள்கிறவையாகவும் இருக்கின்றன.

கீரனூர் ஜாகிர்ராஜாவின் படைப்புகள் இந்த வகைமையில் எங்கு பொருத்துவது? அவருடைய படைப்புகளைச் சூழ்ந்துள்ள மௌனம் அவரைப் பெரும்பாலும் ‘சொல்லிவிட முடியாத’ படைப்புகளை எழுதியவர் என்ற வகைமையில் வைக்கவே நம்மைத் தூண்டும். ஆனால் கீரனூர் ஜாகிர்ராஜா அகவுலகப் பயணி அல்ல. அவருடைய படைப்புகள் மிக வலுவாக மண்ணில் கால் ஊன்றி இருக்கின்றன. சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகள், பெண்களின் கையறு நிலை போன்றவற்றை மிகத் தீவிரமாகவும் இலக்கிய உலகின் ஜோடனைகளை கூர்மையாக கேலி செய்தும் அவர் நிறையவே எழுதி இருக்கிறார். கீரனூர் ஜாகிர்ராஜாவின் தனித்தன்மை என்று நான் காண்பது இப்பபண்பினைத்தான். ஒரு அகவயமான படைப்பாளியின் மொழிக்கூர்மை கீரனூர் ஜாகிர்ராஜாவிடம் உள்ளது. அவர் தன் கதைகளிலும் நாவல்களிலும் தேர்ந்து கொள்ளும் வடிவம்கூட சிதறலானதுதான். ஆனால் அவர் பேசும் விஷயங்கள் அனைத்தும் சமூகத்தின் மையத்தில் உக்கிரமாக தகிக்கக்கூடிவையாக உள்ளன. இந்தத் தனித்தன்மைதான் ஜாகிர்ராஜாவின் படைப்புகளை நோக்கி வாசகனை ஈர்க்கிறது. தொடர்ந்து அவரை வாசிக்கவும் வைக்கிறது. அதேநேரம் அவர் தன் பேசுபொருளுக்கு தேர்ந்து கொள்ளும் புதுமையான வெளிப்பாட்டு வடிவம் வாசகன் அவர் கதைகளை பொதுவெளியில் விவாதிக்கும் எல்லையில் இருந்து நகர்ந்து முழுமையான அகவய அனுபவமாக மாற்றிவிடுகிறது. சொல்ல வந்த விஷயத்தை வாசகனுக்குள் முழு அனுபவமாக இருத்தி வைப்பதில் ஜாகிர்ராஜா அளவுக்கு வெற்றி பெற்ற இன்னொரு படைப்பாளி இல்லை என்று சொல்லிவிடலாம். பிரச்சினை அவருடைய படைப்புகளைச் சூழ்ந்துள்ள மௌனம்தான். அந்த மௌனத்தைக் களைந்து பேசத் தொடங்க வேண்டும்.

2

கீரனூர் ஜாகிர்ராஜாவை வாசித்திருப்பவர்கள் அவர் படைப்புகளைச் சூழ்ந்து ஒரு ‘மௌனம்’ நிலவுவதாக நான் சொல்வது ஏற்க முடியாததாக இருக்கலாம். ஏனெனில் ஜாகிர்ராஜா ‘அறியப்படாத’ எழுத்தாளர் இல்லை. அவருடைய முதல் நாவல் மீன்காரத்தெரு வெளியானதிலிருந்து தொடர்ச்சியாக அவர் படைப்புகள் மீது வாசக கவனம் இருந்தே வந்திருக்கிறது. அப்படியெனில் நான் மௌனம் என்று எதைச் சொல்கிறேன்?

நம் சூழலில் ஒரு படைப்பாளி குறித்து ஒரு கருத்து முன்வைக்கப்பட்டால் அதையே மீண்டும் மீண்டும் எதிரொலித்துக் கொண்டிருப்போம். அதிலும் எழுத்தாளன் பொதுச்சமூக வெளி என்று நாம் நம்பும் தமிழகத்தின் நிலவுடைமை இந்து இடைச்சாதிகள் என்ற பின்புலத்துக்கு வெளியே இருந்தால் பிரச்சினையே இல்லை! எழுத்தாளரின் பிறப்பு சார்ந்த அதுவரை அறியப்படாத வாழ்க்கைச்சூழலை எழுதியவர், தலித் மக்களின் வாழ்க்கையை எழுத்தில் பிரதிபலித்தவர், வேலைக்குச் செல்லும் பெண்களின் பிரச்சினையை பேசியவர் என்றெல்லாம் விமர்சனம் எழுத ஒரு ‘டெம்ப்ளேட்’ உருவாகிவிட்டது. ‘கீரனூர் ஜாகிர்ராஜா இஸ்லாமிய அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை எழுத்தில் கொண்டு வந்தவர்’ என்ற வரி அவரை எந்த அளவுக்கு அறிமுகம் செய்கிறதோ அதே அளவு அவர் படைப்புகளின் முக்கியமான கூறுகளை கடந்து செல்லவும் வழிவகுக்கிறது.

முதலில் அதைப் பேசிவிடலாம். நவீன ஊடகங்களான தொலைக்காட்சி, இணையவெளி போன்றவை ஒரு சமூகம் பற்றிப்பேசும் போது அச்சமூகத்தின் பிரபலமான பிரச்சனை அல்லது அடையாளம் என்னவோ அதையே பிராதனப்படுத்தும். ஆனால் ஒரு இலக்கிய படைப்பு நுண் தரவுகளையும், நுண்ணிய வேறுபாடுகளையுமே சொல்ல முனையும். ஜாகிர்ராஜாவின் எழுத்துக்களின் படைப்புகளின் பின்புலமாகவும் இந்த நுண்தரவுகளே உள்ளன. இஸ்லாமியர்கள் என்றதும் நம் மனதில் உருவாகும் பொதுப்பிம்பத்தை கலைக்கும் விதமாக அத்தரவுகள் அமைகின்றன. ராவுத்தர், லெப்பை என்ற இரண்டு பிரிவுகளுக்கு இடையேயான அதிகாரப்போட்டி , உருது முஸ்லிம் தமிழ் முஸ்லிம் என்ற இருமை போன்றவை தொடங்கி கருகமணி கட்டிக் கொள்ளுதல், குல்உ கொடுத்தல் என ஒரு பொதுவாசகன் அறிந்திருக்க அவ்வளவாக வாய்ப்பில்லாத தரவுகள் கீரனூர் ஜாகிர்ராஜாவின் படைப்புகளில் மீள மீள வருகின்றன. ஜாகிர்ராஜாவின் படைப்புகள் அதிகமும் பேசப்படுவது இத்தகைய பண்பாட்டுத் தரவுகளை ஒட்டித்தான். அறியப்படாத ஒன்றை எழுதிக் காட்டுவதை படைப்பாளியின் வெற்றி எனக் கொள்ள முடியாது. ஆனால் ஜாகிர்ராஜா பண்பாட்டுக்கூறுகள் வழியாக மானுட உள்ளத்தின் அலைக்கழிப்புகளை மிக நேர்த்தியாக சொல்லிவிடுகிறார்.

மரபான இஸ்லாமிய குடும்பங்களில் புகைப்படங்கள் விலக்கப்பட்டவையாக உள்ளன. ஆனால் இறந்த மனைவியின் முகத்தை மெல்ல மறந்து கொண்டிருக்கும் ஒரு மௌலவியின் வழியாக இதைச் சொல்லும்போது இந்த ‘உருவத்தடை’ முழுமையாக வேறொரு பரிணாமம் கொள்கிறது(உருவம்). மீன்காரத்தெரு நாவலில் வரும் நைனா முகம்மது கட்டற்றவனாக இருக்கிறான். இஸ்லாம் விலக்கி இருக்கும் குடியில்தான் எப்போதும் திளைக்கிறான். இறந்துபோன தன்னுடைய மனைவி போல வாழ்ந்த இந்துவான வள்ளிக்கு பள்ளிவாசலுக்கு எதிரே ஒரு நினைவிடமே கட்டுகிறான். இவ்வளவு கட்டற்றவன் விருப்பமிருந்தும் பன்றிக்கறி உண்ணத் தயங்குகிறான். இதுமாதிரியான எண்ணற்ற இடங்கள் ஜாகிர்ராஜாவின் கதைகளிலும் நாவல்களிலும் இடம்பெறுகின்றன. அத்தாவின் நினைவு தினத்தில் தானமளிப்பதற்காக எடுத்துச் சென்ற மீன்கறியை பிச்சைக்காரர்கள் தட்டுப்படாததால் தஞ்சாவூர் பெரிய கோவிலில் அமர்ந்து உண்ணும் ஒரு சித்திரம் ‘இயல்பு’ என்ற கதையில் உள்ளது. காஃபிர் என்ற கதை இப்படித் தொடங்குகிறது.

/நெடிய மர பெஞ்சின் மீதேறி நின்று அப்துல்லா வரிசைக் கிரமமாய் மாட்டப்பட்டிருந்த சுவாமிப் படங்களுக்கு பூப்போடத் தொடங்கி இருந்தான்/

ஆசாரவாதிகளை (எந்த மதத்தவராயினும்) சீண்டக்கூடிய இது மாதிரியான பல இடங்களை ஜாகிர்ராஜாவின் புனைவுலகிலிருந்து எடுத்துக்காட்ட முடியும். ஜாகிர்ராஜாவின் படைப்புகளை முற்போக்காளர்கள் கொண்டாடியதற்கு இந்த சீண்டும் தொனி பிரதான காரணமாக இருந்திருக்கும் என்று ஊகிக்கலாம். ஆனால் இந்த சீண்டல் தொனி ஒரு பாவனையே அன்றி அவர் படைப்புகளின் ஆதாரக் கேள்விகளை விளங்கிக் கொள்ள எவ்வகையிலும் உதவிகரமானவை அல்ல.

ஜாகிர்ராஜாவின் சிறுகதைகள், நாவல்கள் இரண்டிலிமிருந்தும் வாசகனை சீண்டக்கூடிய அம்சங்கள், வாசகன் அறிந்திருக்க வாய்ப்பில்லாத பண்பாட்டுத் தரவுகளும் வெளிப்பட்டபடியே உள்ளன. உண்மையில் ஜாகிர்ராஜாவை ‘அறியப்பட்ட’ படைப்பாளியாக தமிழ்ச்சூழலில் நிறுத்துவது இந்த மேலோட்டமான அடையாளங்கள் மட்டுமே. எளிமையானது என்பது போல தோற்றங்கொள்ளும் அவருடைய வசீகரமான மொழியையோ அல்லது வாசிக்கும் கணத்தில் முற்றிலும் புதிதாக உருவாகிவரும் படைப்புலகத்தையோ விளங்கிக் கொள்ள இந்த மேலோட்டமான அடையாளங்கள் போதுமானதாக இல்லை.

3

/வாழ்க்கை வினோதங்களால் புனையப்பட்டது. எதிர்பார்க்கிறபடியெல்லாம் நடப்பதற்கு எதுவும் இங்கே எழுதிவைக்கப்படவில்லை. பெயரறியாத வினோதப் பறவை ஒன்று அதன் முதுகில் நம்மை அமர்த்திக் கொண்டு பறக்கிறது. அது எந்த நீர் நிலைக்குச் சென்று இறக்கி விடுகிறதோ அங்கே இறங்கிக் கொள்ளவும் வேட்கை தணித்துக் கொள்ளவும் கடமை உண்டு. – மீன்குகைவாசிகள் நாவலில்/

கீரனூர் ஜாகிர்ராஜாவின் ஒட்டுமொத்த புனைவுலகையும் ஒரு வசதிக்காக இரண்டு அலகுகளாக பிரித்துக் கொள்ளலாம். ஒன்று அவர் இளமையில் கண்ட மனிதர்களின் வாழ்விலிருந்து சொல்லப்படும் கதைகள். மீன்காரத்தெரு நாவலிலும் அவர் தொடக்க நாட்களில் எழுதிய பெரும்பாலான கதைகளிலும் கீரனூர் ஜாகிர்ராஜா சிறுவனாக கண்டிருக்கக்கூடிய ஒரு வாழ்க்கைச் சித்திரம் நம் முன்னே விரிகிறது.

மற்றொன்று எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜா இலக்கிய உலகத்தை அவதானித்து எழுதிய படைப்புகள். ஜின்னாவின் டைரி, குட்டிச்சுவர் கலைஞன் போன்ற நாவல்களை இவ்வகைப் படைப்புகளுக்கு உதாரணமாகச் சொல்ல முடியும். இந்த இரண்டு வகையான படைப்புகளின் உணர்வுத்தளமும் முற்றிலும் வேறு வகையானதாக இருக்கின்றன.

மீன்காரத் தெரு மற்றும் அதன் தொடர்ச்சியாக எழுதப்பட்ட மீன்குகைவாசிகள் ஆகிய இரண்டு நாவல்களும் மீன்காரத்தெரு , பங்களாத்தெரு என பொருளாதார அடிப்படையில் வேறுபட்ட இருவேறு வாழ்க்கை முறைகளை சித்தரிப்பதாக வெளிப்பார்வைக்குத் தெரிகிறது. தொடக்கத்தில் சொன்னதுபோல் கீரனூர் ஜாகிர்ராஜாவின் எல்லா படைபபுகளிலும் இந்த சமூக போதம் ஆழமாக வேரோடி இருப்பதைக் காண இயலும். ஆனால் இதுவொரு தோற்றம் மட்டுமே. முற்போக்கு படைப்புகளில் இந்த ‘வர்க்க வேறுபாடு’ மிகத் தெளிவாக கோடிட்டுக் காட்டப்பட்டிருக்கும். இயல்புவாத படைப்புகள் இந்த வேறுபாடும் வாழ்க்கையின் ஒரு அம்சம் என்றே சாதிக்க முனையும். ஆனால் கீரனூர் ஜாகிர்ராஜாவின் படைப்புகள் மிகச்சரியாக இவ்விரு தன்மைகளுக்கும் நடுவே இயங்குகின்றன. முதல் வாசிப்பில் பங்களாத் தெருவிற்கு வீட்டு வேலைகள் செய்து கொடுப்பதற்காக மீன்காரத் தெருவிலிருந்து செல்கிறவர்களின் வாழ்க்கையை மட்டுமே மீன்காரத்தெரு நாவல் பேசுவது போலத் தெரிகிறது. ஆனால் முற்போக்கு படைப்புகளும் சரி இயல்புவாதப் படைப்புகளும் சரி ஒரு வாழ்க்கையை ‌’காட்ட’ மட்டுமே முனைவதால் மிகச்சீரான வடிவத்தைக் கொண்டிருக்கும். ஆனால் மீன்காரத்தெரு நாவல் அநேர்க்கோட்டு பாணியில் எழுதப்பட்டுள்ளது. தன் வாழ்க்கை சீரழிக்கப்பட்டதாக ஆமீனா உணர்ந்தபிறகே அவளுடைய காதல் அரும்பும் கடந்த காலம் பேசப்படுகிறது. நாவலின் மற்றொரு சிடுக்கான பாத்திரமான நைனா முகம்மதுவின் வாழ்வும் அவ்வாறே சொல்லப்படுகிறது.

பங்களாத் தெருவில் செல்வாக்குடன் வாழ்ந்து அதன்பிறகு வாழ்வில் சீரழிந்து மீன்காரத் தெருவுக்கு குடிவரும் ஹனீபா ராவுத்தரின் வாழ்வும் அதுபோலவே சிதறலாக சொல்லிச் செல்லப்படுகிறது. சலீமின் வீட்டின் அன்றாடம் விவரிக்கப்படுவதிலிருந்து அந்தப் பகுதியையே மட்டுமே விரித்து ஒரு பெருநாவலாக எழுதுவதற்கான வாய்ப்பினை காண முடிகிறது.‌ ஆனால் இவ்வளவு சாத்தியங்கள் இருந்தும் கீரனூர் ஜாகிர்ராஜா சிதறலான தீற்றல்களை மட்டுமே அளிக்கிறார். மீன்காரத்தெரு நாவலை குறிப்பிட்ட ‘நோக்கம்’ கொண்ட படைப்பாக வகைப்படுத்த இயலாமல் போவதற்கு இந்த சிதறலான வடிவம் காரணமாக அமைகிறது. ஒப்பிட இந்நாவலின் தொடர்ச்சியாக (ஆனால் தனி நாவலாகவும் வாசிக்க இயலும்) மீன்குகைவாசிகள் சற்றே சீரான வடிவம் கொண்டது எனலாம். ஒரே வாழ்க்கைச் சூழலின் தொடர்ச்சியாக இருந்தபோதிலும் மீன்குகைவாசிகள் நாவலைச் சொல்வதற்கு ஜாகிர்ராஜா புதியதொரு சொல்முறையை எடுத்துக் கொள்கிறார். முதல் நாவலில் இரண்டு தெருக்களின் இயல்பு, ஆமீனாவின் மன அவசங்கள், சலீமின் ஜமீன்தார்தனம் போன்றவை பேசப்பட்டுள்ளன. மாறாக மீன்குகைவாசிகள் ஆழமான தருணங்களால் கட்டப்பட்ட படைப்பாக உள்ளது. இரண்டு நாவல்களிலும் ஷேக்கத்தாவின் மனைவி சுபைதா இவர்களின் மூன்று பிள்ளைகளான காசிம், நைனா , ஆமீனா , காசியின் மனைவி ராஜியா ஆகியோரே பிரதான பாத்திரங்கள் என்றாலும் மீன்குகைவாசிகள் இக்குடும்பங்களின் கதையை விரிவாகப் பேசுகிறது. சுபைதாவுக்கும் ரஜியாவுக்கும் நிகழும் உரசலின் கணம் இரண்டு நாவல்களின் ஒட்டுமொத்த உணர்வு நிலையை காட்டித் தருவதாக அமைகிறது. மீன்காரத்தெருவாசிகளின் பிரதானத் தொழில் மீன்பிடித்து விற்பது. கூடுதலாக பங்களாத் தெருவிலுள்ள பணக்கார வீடுகளில் வேலைக்காரிகளாகவும் இப்பெண்கள் செல்கின்றனர். மீன்பிடித்து விற்பதை விட எளிதான வேலை என்றாலும் அங்கு நிகழும் பாலியல் சுரண்டல் ஒரு வகையான தன்னிழிவை மீன்காரத்தெருப் பெண்களிடம் திணிக்கிறது. எல்லாவற்றையும் கேலி செய்யும் இலுமு, ஜைத்தூன் போன்ற பாத்திரங்களின் வழியே அத்தெருவின் பெண்கள் உணரும் தன்னிழிவு பேசப்படுகிறது. அவ்விழிலிருந்து மீண்டு செல்வதற்கான வழிகள் சொற்பமாகவே உள்ளன. இந்த மொத்த சிக்கலும் ராஜியாவுக்கும் சுபைதாவுக்குமான உரையாடலில் சொல்லப்படுகிறது. கூனன் லியாக், லைலா, சண்முகம் என பல்வேறு வகையான பாத்திரங்கள மீன்குகைவாசிகள் நாவலில் விரிவாகப் பேசப்படுகின்றன.

மீன்காரத்தெரு மற்றும் மீன்குகைவாசிகள் இரண்டு நாவல்களையும் வாசிப்பதன் வழியாக கீரனூர் ஜாகிர்ராஜாவின் படைப்புலகம் பற்றி அடையும் அடிப்படைப் புரிதல்களை இப்படித் தொகுக்கலாம்.

1.சீரான கதையோட்டம் என்பதற்கு எதிராக அதீதமான இடைவெளிகளுடன் கதை சொல்லும் பாணியையே ஜாகிர்ராஜா பின்பற்றுகிறார்.(எச்சில் உமிழும் படிக்கம் அல்ல)

2.கதைத் தருணங்களை உணர்ச்சிகரமான உச்சங்களை நோக்கி நகர்த்தாமல் உணர்ச்சிகரமான தருணங்கள் பாத்திரங்களுக்குள் உருவாக்கும் விளைவுகளை அதிகமும் கவனிக்கச் செய்கின்றன.

3.எந்தவொரு பாத்திரத்தின் மீதும் கதைப்போக்கின் மொத்த கனத்தையும் குவிக்காமல் நெருக்கடிகளை சந்திக்கும் எல்லா பாத்திரங்களின் வழியாகவும் நகர்ந்து செல்லும்படியான நெகிழ்வான ஒரு கதைப்பரைப்பை ஜாகிர்ராஜாவின் படைப்புகள் கொண்டுள்ளன.

முன்பு சொன்னதுபோல ஜாகிர்ராஜாவின் புனைவுலகின் ஒரு கூறு அவருடைய கடந்த காலத்துடன் தொடர்புடையது. அங்கு ‘அறிவார்ந்த’ பாத்திரங்களுக்கு பெரிய பங்கில்லை. அரசியல் விழிப்புணர்வுடைய காசிம் மாற்றுத் திறனாளியான நசீர் என எல்லோருமே அவர்களுடைய எல்லைகளுடனேயே சித்தரிக்கப்பட்டுள்ளனர். மாறாக அவருடைய மற்றொரு வகையான படைப்புகள் முழுக்கவும் இலக்கியம், சினிமா என கலையும் அறிவார்ந்த தன்மையும் கொண்டதாக இருக்கிறது. வடக்கேமுறி அலிமா, ஜின்னாவின் டைரி, குட்டிச்சுவர் கலைஞன் ஆகிய மூன்று நாவல்களும் இவ்வுலகைச் சேர்ந்தவை.

முதல் வாசிப்புக்கு மூன்று படைப்புகளுமே தோன்றியதை எல்லாம் எழுதி ஒன்றிணைத்து நாவலாக்கப்பட்டது போன்ற தோற்றத்தை அளிக்கின்றன. பொதுவாக இத்தன்மை கீரனூர் ஜாகிர்ராஜாவின் படைப்புகளின் பொதுத்தன்மை என்றே சொல்லிவிடலாம். நாவல் மற்றும் சிறுகதையின் செவ்வியல் வடிவங்களை இவர் படைப்புகள் முற்றாக உதறிவிடுகின்றன. நினைவுகளிலிருந்து சொல்லப்படும் படைப்புகளில் குறைந்தபட்சம் அந்த நினைவின் தொடர் சரடினை உணர முடியும். ஆனால் கலையிலக்கியம் மற்றும் சினிமா உலகம் பற்றி பேசும் படைப்புகளில் அத்தகைய தொடர்ச்சி எதையும் நம்மால் கண்டுணர முடிவதில்லை. முதல்வகை படைப்புகளில் உள்ள தீவிரமான மொழிநடைக்கு மாறாக இப்படைப்புகளின் மொழி சற்றே அரட்டையடிக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. அலிமா (வடக்கேமுறி அலிமா) , அல்லாப்பிச்சை (ஜின்னாவின் டைரி) ஆகியோரின் நீண்ட நேர்காணல்களில் தொனிக்கும் பகடி இந்த நாவல்கள் பகடியானவை என்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. ஜாகிர்ராஜாவை தமிழின் முதன்மையான பின்நவீனத்துவ படைப்பாளியாக அடையாளங்காட்டுவது இந்நாவல்களில் பகடியின் அடியோட்டமாக அமைந்திருக்கக்கூடிய ஒரு வகையான இருப்புசார் துயரம்தான்.

தமிழ்ச்சூழலில் எப்போதும் தவறாகவே வாசிக்கப்படுகிறவர்கள் வடிவரீதியான உத்திகளை கதைகளில் கையாளும் எழுத்தாளர்கள்தான். வடிவப்புதுமை கொண்டிருக்கும் எழுத்து பாசாங்கானது என்று தமிழ்ச்சூழலில் ஒரு சாரார் நம்புகின்றனர். மற்றொரு எல்லையில் சீரான கதைப்போக்கு கொண்ட யதார்த்தவாதப் படைப்புகள் சலிப்பூட்டுகின்றன என்றொரு பேச்சும் நிலவுகிறது. வாஸ்தவத்தில் வடிவமும் உள்ளடக்கமும் தனித்தனியாக பேசப்பட வேண்டிய சங்கதிகள் அல்ல.‌ ஒரு படைப்பின் வடிவம் அதன் உள்ளடக்கத்திற்கு நியாயம் செய்திருந்தால் அது எவ்வகையிலான ஆக்கமெனினும் நல்ல ஆக்கமே. ஜாகிர்ராஜாவின் இரண்டாவது படைப்புக்கூறினை பிரதிபலிக்கும் மூன்று நாவல்களையும் மறுவாசிப்பு செய்யும்போது சில ஒற்றுமைகளை கண்டறிய முடிகிறது. முதலில் வெளிப்படையாகத் தெரிவது போல இந்நாவல்கள் அனைத்தும் நவீன சொல்முறைகளை பகடி செய்து எழுதப்பட்டுள்ளன. கட்டுரைகள், கடிதங்கள், நேர்காணல்கள், இலக்கிய உரையாடல்கள் என எல்லாமும் எந்த ஆதாரப்புள்ளியில் நிற்கின்றனவோ அந்தப் புள்ளியில் திகழும் பாவனைகளை தாக்கும் விதமாக இந்த மூன்று நாவல்களின் பல தருணங்களைச் சொல்ல முடியும்.

அலிமா தன்னுடைய சுயசரிதையை தொடர்ச்சியாக கழிவறைகளில் எழுதியதாகச் சொல்கிறாள். அல்லாப்பிச்சை ஒரு லட்சம் பக்கத்தில் ஒரு நாவல் எழுதுவதாகச் சொல்கிறார். குட்டிச்சுவர் கலைஞனைப் போலவே ஊரில் பலரும் உருவத்தை மாற்றிக் கொண்டு திரிகின்றனர். இரண்டு பதிப்பாளர்கள் ‘புத்தகம் போடுங்க’ என்று தெருத் தெருவாக பண்ட பாத்திரங்கள் விற்பவர்கள் போல கூவித் திரிகின்றனர். நாவல் எழுதுவதற்காக ஒரு எழுத்தாளரும் அவருடைய உதவியாளரும் மலைப்பகுதியில் வந்து தங்குகின்றனர். திரும்பும்போது அவர்கள் தங்கியிருந்த குடிசையை எரிக்கின்றனர். செருப்புக்கடையில் ஒரு அடுக்கில் புத்தகங்களை ஒரு முதலாளி வைத்திருக்கிறார். இதுமாதிரியான விநோதமான தருணங்கள் அனைத்தும் தமிழின் அறிவியக்கச்சூழலில் நிகழும் ஏதோவொன்றின் எதிர்வினையாக அமைந்திருக்கின்றன என்ற வகையில் ரசிக்கும்படியாக உள்ளன. ஆனால் இந்த மனம்போன போக்கில் எழுதப்பட்டதாக தோற்றந்தரும் அத்தியாயங்களின் ஊடுபிரதியாக அலிமா, அல்லாப்பிச்சை, குட்டிச்சுவர் கலைஞனின் வாழ்க்கையும் பேசப்படுகிறது.

பணக்கார குடும்பத்தில் பிறந்தாலும் சிறு வயதிலேயே பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு தொடர்ச்சியாக முஸ்லியார், மம்முது என்று அலிமா ஏமாற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறாள். அல்லாப்பிச்சை சிறுவனாக இருக்கும்போதே தகப்பனால் பிச்சை எடுக்க வற்புறுத்தப்பட்டிருக்கிறார் என்று ஊகிக்க இடமிருக்கிறது. குட்டிச் சுவர் கலைஞன் நாவலில் வரும் பன்னீர் வஸந்தனுக்குள் எதிர்வீட்டுப் பெண் தன்னால் தற்கொலை செய்து கொண்டாள் என்ற எண்ணம் ஆழமாக வேரூன்றி இருக்கிறது. இதுபோல பல்வேறு கோணங்களில் இருந்து வாசித்துச் செல்லும் வாய்ப்பை கீரனூர் ஜாகிர்ராஜாவின் புனைவுலகம் கொண்டிருக்கிறது.

இந்த அத்தியாயத்தின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் மேற்கோள் போன்ற ஒரு தன்மையை ஜாகிர்ராஜாவின் எல்லா வகையான புனைவுகளிலும் மீள மீள காண்கிறோம். நியதிகளுக்கு உட்படாமல் அதன் போக்கில் நகரும் ஒரு வாழ்க்கையை வாழும் பொறுப்பு மட்டுமே நமக்கு உள்ளது.

அவருடைய கடந்த கால வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும் படைப்புகளிலும் இலக்கியச்சூழலை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட புனைவுகளிலும் ஜாகிர்ராஜா ஒரு ‘கலைந்து கிடக்கும்’ சித்திரத்தையே மீண்டும் மீண்டும் உருவாக்குகிறார். அவருடைய நாவல்களின் அத்தியாயங்களோ சிறுகதைகளோ ‘முற்றுபெற்ற’ உணர்வை அளிப்பதில்லை. முன்பே சொன்னதுபோல ஒவ்வொரு வாசிப்பிலும் முற்றிலும் புதிதான ஒரு உலகம் திறந்து கொள்வதையே ஜாகிர்ராஜாவின் படைப்புகளில் காண்கிறோம். இந்தத் தன்மைமை எவ்வாறு விளங்கிக் கொள்வது? இதுபற்றி பேசுவதற்கு அவருடைய சிறுகதைகள் பற்றிய ஒரு பார்வை நமக்கு அவசியமாகிறது.

4

/அப்படியே சொல்வது மாதிரி இருக்கிறது.

ஆனால் ஏற்கனவே சொல்லப்பட்டவற்றைவிடவும் கூடுதலாகச் சொல்கிறது. அந்த மனிதர்கள் நீங்களும் நானும் பேசுவது போலத்தான் பேசுகிறார்கள். ஆயின், நாம் எதைப் பேசாமல் இருக்கிறோமோ அதை எல்லாம் அவர்கள் பேசிவிடுவதை உணர முடிகிறது. வாழ்வும் மனிதர்களும் , பசியும் காமமும் வசப்பட்ட மனதிற்குத்தான் இப்படியொரு தீர்மானமிக்க மொழி பிடிபடும் – ஜாகிர்ராஜாவின் கதைகள் குறித்து வண்ணதாசன்/

தேய்பிறை இரவுகளின் கதைகள் (முப்பத்தொன்பது கதைகள் கொண்ட சற்றே பெருந்தொகுப்பு) கொமறு காரியம், பஷீரிஸ்ட், ஹலால் என ஜாகிர்ராஜாவின் அறுபதுக்கும் அதிகமான சிறுகதைகள் வாசிக்கக் கிடைக்கின்றன. தேய்பிறை இரவுகளின் கதைகள் தொகுப்பில் உள்ள முப்பத்தொன்பது கதைகளை ஜாகிர்ராஜா பதினேழு ஆண்டுகால இடைவெளியில் எழுதி இருக்கிறார். ஜாகிர்ராஜாவின் தொடக்ககால கதைகள் உருவ அடிப்படையில் நவீனத்துவ பாணியை பின்பற்றுகின்றன. குறைந்த சொற்களில் கூர்மையான சூழல் விவரிப்புகள் இடம்பெறுவதால் இக்கதைகள் ‘சிறிய’ கதைகளாக தோற்றம் தருகின்றன. இக்கதைகளின் பொதுவான உணர்வுநிலையென புதிய ஒன்றை சொல்லிப் பார்க்கும் தீவிரமான ஆர்வம் என்று சொல்லலாம். தனக்கு நன்கு பரிச்சயமான வாழ்வின் முரண்களை அல்லது உணர்வுநிலைகளை ஜாகிர்ராஜா இலக்கியமாக மாற்றிப் பார்க்கிறார். இஸ்லாமியர் என்றதும் பொது வாசகனின் மனதில் உதிக்கும் பிம்பத்தை இக்கதைகள் கலைக்கின்றன என்பதைத் தாண்டி இஸ்லாமியர்களும் தங்களைப் பற்றி கொண்டிருக்கும் பிம்பத்தை கேள்விக்கு உட்படுத்துப்படியான நிறைய தருணங்களை ஜாகிர்ராஜா இக்கதைகளில் கொண்டு வருகிறார்.‌

இறந்துபோன சிநேகிதியின் நினைவாக ஒரு ஆட்டுக்குட்டியை ஆயிஷா வளர்க்கிறார். குடும்பத் தேவைக்காக அது ரம்ஜான் சமயத்தில் எந்த சிநேகிதியின் நினைவாக அந்த ஆட்டினை வளர்க்கிறாளோ அவளுடைய அத்தாவிடமே விற்கப்படுகிறது. அந்த ஆட்டுக்குட்டி வெட்டப்பட இருப்பதை தவிர்க்க முடியாமல் ‘எளங்கறியாமே டீ… நீசா…நீ…ஒங்கத்தாவுக்கு எளங்கறியாமே…? அய்யோ..அல்லா’ என்று அவள் கதறும் இடத்தில் இக்கதை பேச நினைக்கும் சிக்கல் வெறுமனே கழிவிரக்கம் மட்டுமில்லை என்பதை உணர்கிறோம்(நீஸா என்றொரு சிநேகிதி). பல கதைகளில் இந்தக் கையறு நிலையை ஜாகிர்ராஜா மீள மீள பேசுகிறார். ராஜமீன், ராட்சச பறவையின் சிறகுகள், ஒரு பகல்பொழுது என்று கையறு நிலையைப் பேசும் பல கதைகள் கலாப்பூர்வமான வெற்றியை எய்துகின்றன. கையறு நிலையை ஏற்றுக் கொண்டு ஆழ்ந்த அமைதி உருவாகும் தருணங்களையும் கீரனூர் ஜாகிர்ராஜா எழுதி இருக்கிறார். அப்படியான ஒரு உச்சம் மனுஷி என்கிற கதை. வகாப்பிற்கு வாழ்க்கைப்பட்ட காத்தூன் என்கிற பெண்ணின் ஒரு நாளை பேசுகிற கதை. காத்தூன் எளிமையான நல்லுணர்வு கொண்ட பெண். கணவனில்லாத போது தன்னிடம் முறைமீறி நடந்து கொள்ள முயன்ற வகாப்பின் தம்பி ஈசாக்கை அவளால் மன்னிக்க முடிகிறது. ஈசாக் உடல்நலம் கெட்டு கிடக்கும்போது அவனுக்காக வருந்தவும் செய்கிறாள். தன் வீட்டிலிருந்து விரட்டிவிட்ட குளவி பக்கத்து வீட்டில் ஒரு குழந்தையை கடித்துவிட்டதற்காக தவிக்கிறாள். நல்ல உணவில்லை என உண்ணாமல் உறங்கிப்போகும் சகோதரர்களை பார்த்தபடியே அவளும் உண்ணாமல் உறங்கிப் போகிறாள். இக்கதையில் எங்குமே நம்பிக்கையின் ஒளி தென்படவில்லை. அடுத்தநாள் அவர்களுடைய வாழ்வு மாறுவதற்கான மெல்லிய உத்திரவாதம்கூட இல்லை. ஆனாலும் மனுஷி கதையை இப்படி முடிக்கிறார்.

/காத்தூனுக்கு வயறு கபகபன்னு பசியெடுத்தது. தண்ணியில கரச்சாவது கொஞ்சம் குடிக்கலாம்னு அடுப்புப் பக்கம் வந்தாள். தன் புருஷனும் கொளுந்தனும் வெறும் வயித்தோடுகிடக்கறாங்களே என்று நினைத்தபோது வேதனையாக இருந்தது.   சோத்துப் பானையை திறந்து நிறைய தண்ணீரை ஊற்றி மூடி வீட்டுக்குள் வைத்துவிட்டு தரையில் கிடக்கும் இரண்டு ஜீவன்களோடு மூன்றாவதாக அவளும் படுத்துக் கொண்டாள். நிம்மதியாக இருந்தது அவளுக்கு. /

ஒன்றுமே இல்லாவிட்டாலும் காத்தூன் நிம்மதியாக தூங்கப்போகிறாள்.‌அவள் நிம்மதி வாசகனையும் தொற்றுகிறது. இது மாதிரியான அபாரமான பல தருணங்களை ஜாகிர்ராஜாவின் கலையுலகில் காண முடியும்.

மனிதர்களின் கையறுநிலையை கூர்மையாக சித்தரிக்கும் இக்கதைகளின் மறு எல்லையில் பகடிக் கதைகள் உள்ளன. அற்றைநாளின் விசேஷம், மழை போல வாசித்ததும் புன்னகைக்க வைக்கும் கதைகளும் லவ்கீஹா, பெருநகரக் குறிப்புகள் போல சற்றே கசப்பு தொனிக்க பகடியுடன் கூடிய கதைகளையும் ஜாகிர்ராஜா எழுதி இருக்கிறார். தேய்பிறை இரவுகளின் கதைகள் மற்றும் கொமறு காரியம் ஆகிய இரண்டு தொகுப்புகளுமே கையறுநிலை மற்றும் பகடி என்ற இரு எல்லையிலும் மாறி மாறி பயணிக்கின்றன. பஷீரிஸ்ட் தொகுப்பு இந்த தன்மையில் இருந்து முற்றிலும் மாறுபடுகிறது.

ஜாகிர்ராஜாவின் புனைவுகளை காலவரிசைப்படி வாசிப்பவர்கள் ஒன்றை அவதானிக்க முடியும். அவர் தன்னுடைய புனைவுகளை பெரும்பாலும் தன்னுடைய வாழ்க்கைக்கு நெருக்கமான ஒன்றாகவே கட்டமைக்கிறார். மீன்காரத்தெரு, துருக்கித் தொப்பி, கருத்தலெப்பை போன்ற நாவல்களை எழுதும் ஜாகிர்ராஜா தான் அறிந்த வாழ்க்கையை உற்சாகம் கொப்பளிக்கும் மொழியில் துடிப்பாக எழுதிச் செல்லும் ஒருவர். ஆனால் இவற்றை எழுதிய பிறகு வடக்கேமுறி அலிமா, ஜின்னா டைரி போன்ற நாவல்களை எழுதுகிறவர் தானொரு எழுத்தாளன் என்ற போதத்தை எழுத்தில் வெளிப்படுத்துவதற்கான நம்பிக்கையை பெற்றுவிட்ட ஒருவர். இந்தத் தன்மை ஜாகிர்ராஜாவின் கதைகளிலும் பிரதிபலிப்பதைக் காண்கிறோம்.

தகிக்கக்கூடிய அன்றாடம் வாய்த்தவர்கள் அந்த தகிப்பிலிருந்து தப்பிப்பதற்காக சிரிக்கத் தொடங்குகிறவர்கள் என்ற இரு வகையான மனிதர்களை கொமறு காரியம் தொகுப்புவரை காண முடிகிறது. பஷீரிஸ்ட் தொகுப்பில் இந்த இரண்டு இயல்புகளும் உருகி ஒன்றிணைந்து விடுகின்றன! கதைகளின் உருவத்திலும் மிகத்தெளிவான வேறுபாட்டினை இத்தொகுப்பில் காண முடிகிறது. ஜாகிர்ராஜாவின் கதைகளும் நாவல்களும் விறுவிறுவென உச்சம் நோக்கி நகரும் தன்மை கொண்டவை அல்ல. ஆனாலும் கூர்மையான சொல்முறை அவர் கதைகளுக்கு ஒரு நவீனத்துவ தன்மையை அளிக்கின்றன. மாறாக பஷீரிஸ்ட் தொகுப்பில் உள்ள வெண்ணிற மதுவகை, சிதைந்த மனம் , எழுத்தாளன்னா பொறுப்புணர்ச்சி வேணுமப்பா மற்றும் ஹலால் தொகுப்பில் உள்ள திருமதி சின்னத்துரையின் வியூகம், நட்பதிகாரம் போன்ற கதைகள் ஒரு வகையான உணர்ச்சிகளின் மீது பயனிக்காமல் கலவையான பல்வேறு உணர்ச்சிகளின் தொகுப்பாக உள்ளன. உதாரணமாக நட்பதிகாரம் கதை கபிலன், விஜயன், கதிர்வேல் என்ற மூன்று நண்பர்களின் கதையாகத் தொடங்கி கபிலனின் பால்ய வாழ்க்கை, அவன் அம்மா, ரயிலில் அவன் எதிரே நாவல் வாசிக்கும் மனிதர், அவனுடைய சித்தி என பலரையும் தொட்டுத் தொட்டு நகர்கிறது. சிதைந்த மனம் என்ற கதையும் கதை நாயகனான ‘சிதைந்த மனதின்’ தாம்பத்ய வாழ்வின் சிக்கலில் தொடங்கினாலும் அக்கதையும் வெவ்வேறு விஷயங்களைப் பேசியே முற்றுபெறுகிறது.

ஜாகிர்ராஜாவின் புனைவுலகம் கொண்டிருக்கும் நெகிழ்வுத்தன்மையை மெல்ல மெல்ல இக்கதைகளில் நிகழ்ந்திருக்கும் வடிவமாற்றங்களை கட்டுரையின் இப்பகுதியில் பேசிவிட்டோம். ஆனால் இன்னமும் ஜாகிர்ராஜாவின் படைப்புகளில் இந்த ‘கலைந்த சித்திரம்’ மாதிரியான தன்மை ஏன் வருகிறது என்று பேசவில்லை.

5

/எந்த மகுடங்களும் என் தலையில் இல்லை. இருந்தாலும் கழற்றி எறிந்துவிட்டு நெடுஞ்சாலையில் கைவீசி நடக்கவே விரும்புவேன். எதிர்ப்படும் மனிதர்களின் முகங்களைப் படிக்கிறேன். திரும்பத் திரும்ப அவர்களின் புன்னகையை,சலிப்பை,துக்கத்தை, பரிகாசத்தை மனதுக்குள் மீட்டிப்பார்த்து ,அவர்களுடைய மொழிக்குள்ளும் என் பாஷையைக் கலந்து, அவர்களை வேறொருவர்களாக புனர் நிர்மாணம் பண்ணுகிறேன். இது ஒன்றும் தொழில் ரகசியம் இல்லை. வாழ்க்கையை எழுதும்போது, அதை வாசிப்பவன், நிஜத்தின் நெடி கமழ்வதை நுகர்ந்தே தீருவான். பஷீரிஸ்ட் தொகுப்பின் முன்னுரையில்/

கீரனூர் ஜாகிர்ராஜாவின் படைப்புகளை வாசிக்கத் தொடங்கிய நாளிலிருந்து சமீப காலம்வரையிலும்கூட அவர் படைப்புகள் எனக்குள் ஒரு எதிர்ப்புணர்ச்சியை தூண்டிக்கொண்டே இருந்தன. தொடர்ந்து வாசித்தாலும் அவருடைய சொல்முறையால் கவரப்பட்டாலும் அவர் படைப்புகள் மீது ஒரு வகையான தர்க்கமற்ற விலக்கம் உருவாகிக் கொண்டே இருந்தது. திரும்பத் திரும்ப வாசிக்கும்போதுதான் அதற்கான காரணத்தை உணர முடிந்தது. அவருடைய பெரும்பாலான கதாமாந்தர்கள் நிலையற்ற வாழ்க்கையைக் கொண்டவர்கள். அடித்தட்டு மனிதர்கள் என்பதுகூட சரியில்லை. சொற்பமானதே என்றாலும் ஒரு நிலையான வருமானம் உடையவர்களின் வாழ்க்கை முறை ஸ்திரமானதாக இருக்கும். வாழ்க்கையின் ஸ்திரத்தன்மை கொடுத்த மதிப்பீடுகளை சுமந்து வாழ்கிறவர்களாக அவர்கள் இருப்பார்கள். அவர்கள் மீற நினைத்தாலும் அன்றாடத்தை ஓட்டுவதில் இருக்கும் இடர்கள் அவர்களை மதிப்பீடுகளுக்கு உள்ளேயே இருத்தி வைக்கும். (அரசு ஊழியர்களின் காமம் கூட க்ரேட் பே உடன் தொடர்புடையது என்று என் நண்பர் சொல்வார்!) ஜாகிர்ராஜாவின் புனைவுகளின் மீது நான் கொண்ட விலக்கத்தின் காரணம் அவர் பாத்திரங்களின் ‘மதிப்பீடற்ற’ தன்மைதான் என்று தாமதமாகவே புரிந்து கொண்டேன்.

அவருடைய கதைகளிலும் நாவல்களிலும் நிலையான வருமானம் கொண்டவர்கள் ஏறத்தாழ இல்லை. ஆகவே நிலையான வருமானம் கொண்டவர்கள் சுமக்கும் மதிப்பீடுகள் ஏதுமற்ற சுதந்திரத்தன்மை கொண்டவர்களாகவே அவருடைய பாத்திரங்கள் வருகின்றன. வாழ்க்கை லௌகீக அழுத்தங்களால் அவர்களை நையப்புடைக்கிறது. ஆனால் அந்த அழுத்தங்களின் மீது ‘இன்னொன்றை’ அவர்கள் ஏற்றிக் கொள்வதில்லை. மீன்காரத்தெரு நாவலில் கல்வியின் வழியாக சற்றே வேறுபட்டவளாகத் தெரியும் ஆமீனா சலீம் தன்னை ஏமாற்றியதற்காக கொந்தளிக்கிறாள். ஆனால் அவளே ஒரு சூழலில் பங்களாத் தெருவுக்கு வேலைக்குப் போனால் எவனோ ஒரு ஆணிடமிருந்து உடல் சார்ந்த தேவைகள் பூர்த்தி அடையுமே என்றும் ஏங்குகிறாள். ஆமீனாவைப் போலவே எல்லா பாத்திரங்களுக்கும் அன்றாடத்தை கடத்த வேண்டிய தேவை இருக்கிறது. அதற்காக மட்டுமே சிந்திக்கின்றனர். ஒரு வகையில் கடவுள், அரசாங்கம் உள்ளிட்ட நிறுவனங்கள் என அனைத்தையும் ஜாகிர்ராஜாவின் எழுத்து புறக்கணிக்கிறது என்று சொல்லலாம். எதன் பிரதிநிதியாகவும் அல்லாமல் ஒரு எழுத்தாளன் தன் புனைவுலகில் நிற்பது அரிதாகவே நிகழும் ஒன்று.

ஒரு தருணத்தின் உயிரோட்டத்தை மட்டுமே ஜாகிர்ராஜாவின் புனைவுக்குள் இலக்காக்குகின்றன. இப்படி ஒரு புனைவுலகம் இருக்க முடியுமா என்று கேட்டால் இருக்கிறது என்பதே பதிலாக இருக்க முடியும். மதிப்பீடுகளின் கனம் இல்லாததாலேயே கதைகளில் எதையோ ஒன்றை நிறுவ வேண்டிய தேவை இல்லாமல் போகிறது. நிறுவ வேண்டியது என எதுவும் இல்லாதபோது எல்லா பக்கங்களிலும் உடைந்து சிதறும் வாய்ப்பினை இப்புனைவுகள் மிக எளிதாக உருவாக்கிக் கொள்கின்றன. இந்தத் தன்மை ‘தற்செயலாக’ அடையப்படும் ஒன்றல்ல. கட்டுரைத் தொகுப்புகள், இஸ்லாமிய சமூகம் பற்றி இஸ்லாமியரல்லாத படைப்பாளிகள் எழுதிய கதைகளை தொகுத்த காஃபிர்களின் கதைகள் போன்ற தொகை நூல்கள் என அபுனைவிலும் ஜாகிர்ராஜா சீராக இயங்கி வருகிறார். ஆகவே அவருடைய இந்தக்கூறுமுறையும் வாழ்க்கைப் பார்வையும் தமிழ்ச்சூழலை அவதானித்து அதிலிருந்து விலகி நடக்கும் எத்தனத்துடனேயே உருவாகி வந்திருக்கிறது. அந்த எத்தனத்தில் வென்றும் இருக்கிறார். வடக்கேமுறி அலிமா போன்ற ஒரு புறனடையாளனாகவே கீரனூர் ஜாகிர்ராஜா புனைவுலகிலும் சொந்த வாழ்விலும் இருந்திருக்கிறார். அமைப்புக்கு எதிராக எழுத வேண்டும் பேச வேண்டும் என்று வலிந்து உருவாக்கிக் கொண்ட நோக்கம் எதுவும் இல்லாமலேயே ஜாகிர்ராஜாவின் ஆக்கங்களும் கதாமாந்தர்களும் அமைப்புக்கு எதிராக நிலைகொள்கின்றனர். எல்லாமும் நிறுவனமயப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு சூழலில் ஒரு படைப்பாளி அமைப்புக்கு எதிரான போதத்தை தொடர்ந்து தக்க வைப்பதும் அமைப்புகளின் மதிப்பீடுகளை நிராகரித்துவிட்டு எழுதுவதும் அவ்வளவு எளிதாக நடந்துவிடக்கூடிய காரியமல்ல. கீரனூர் ஜாகிர்ராஜாவின் படைப்புகள் பின்நவீனத்துவ சாயல் கொண்டவை மட்டுமல்ல. அவை அமைப்புகளின் குரூரங்களின் கறை படியாத தொலைவிலும் தங்களை தள்ளி நிறுத்திக் கொள்கின்றன என்ற வகையிலும் தமிழ்ச்சூழல் மீள மீள வாசிக்கப்பட வேண்டிய எழுத்து.

இக்கட்டுரையை முடிக்கும் இந்தத் தருணத்தில் ஜாகிர்ராஜாவின் புனைவுகளை இன்னும் ஆழமாகப் பேசி இருக்கலாமோ என்றொரு நிறைவின்மை தோன்றுகிறது.‌ ஆனால் இக்கட்டுரையின் நோக்கம் அவர் படைப்புகள் பற்றிய ஒரு மதிப்பீட்டினை உருவாக்குவதுதான் என்று தொடக்கத்திலேயே சொல்லிவிட்டேன். ஜாகிர்ராஜா தமிழ்ச் சூழலில் இன்னும் ஆழமாகவும் தீவிரமாகவும் வாசிக்கப்பட வேண்டும். இத்தகைய எழுத்துக்களை பேசுவதன் வழியாகவே புதிய சாத்தியங்களை நோக்கி நம் புனைவுகளை நகர்த்திச் செல்ல முடியும். இன்னும் சில வருடங்கள் கழித்து கீரனூர் ஜாகிர்ராஜா அவர்களின் படைப்புகள் பற்றி எழுதும் போது இக்கட்டுரையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வேறொன்றை எழுதிக் கொண்டிருப்பேன் என நினைக்கிறேன். அதுவே அவர் புனைவுகளின் வெற்றியும் கூட!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *