இதழ் பற்றி

கலை இலக்கிய செயல்பாடுகளே பிரதானம். அவற்றின் வழியாக ஆழ் மனங்களோடு உரையாடுவதே நோக்கம்.  பேரிடர்களும் நெருக்கடிகளும் நம்மைத் துயரப்படுத்தும் கொடுங்காலமாக இருக்கிறது இன்று. எங்கெங்கும் இருள் சூழ்ந்திருப்பதான ஆருடங்கள். சோர்வும் அவநம்பிக்கையும் சதா நிழல்களாக பின் தொடர்கின்றன. செயலின்மையில் உறைந்து போகச் செய்கின்றன. இப்பகைப்புலத்தில் தான் இந்த  உரையாடலை உத்தேசித்துள்ளோம். கதைகளின் ஊடாக, கவித்துவம் ததும்பும் சொற்களின் ஊடாக, உணர்வுகள் உறைந்த படிமங்களின் ஊடாக, தருக்கங்கள் அடுக்கிய பத்திகளின் ஊடாக தொடர்ந்து உரையாட விழைகிறோம். அதற்காக  தேர்ந்து கொண்ட ஒரு கலை வடிவமே இலக்கியமும் இலக்கியம் சார்ந்த செயல்பாடுகளும்.

நவீன இலக்கியம் நவீன மனிதனைக் கனவு காண்கிறது. நவீன மனிதன் இந்தப் பிரபஞ்சத்தையே தானாக உணர்பவன். அவனுக்கு இன்றைய வரையறைகள் இல்லை. நேற்றைய காலச்சுமைகளும் இல்லை. எல்லைக்கோடுகள் இல்லை. சமகாலம் அளிக்கும் கீழ்மைகளும் பெருமைகளும் இல்லை. அவன் சுதந்திரமானவன். ஷோர்பாவில் இருந்து புத்தாவை உத்தேசிப்பவன்.  கூடவே நவீன மனிதன் அறிவார்ந்த தன்மையில் உயிர்த்திருப்பவன். ஜனநாயகத்தன்மையினை தனது வாழ்நிலமாகக் கொண்டிருப்பவன். சக மனிதனையும், பிற உயிர்களையும் தன்னைப்போலவே பொருட்படுத்தும் பேரன்பன்.

பிறர் மீது ஈரம் கொண்டிருப்பதே சம காலத்தின் சவால். நிகழ்காலம் அளிக்கும்  அத்தனை வாய்ப்புக்களையும், உரிமைகளையும், சக மனிதனுக்கும் பகிர்ந்து கொடுப்பதே இந்நுாற்றாண்டின் பெருங்கனவு. கற்றுத் தேரிய கல்வி அந்நோக்கில் எவ்விதத்திலும் மனிதனைப் பண்படுத்த வில்லை. இனக்குழுத் தன்மைகளைக் களைந்து பொது வெளியில் சேர்ந்து வாழ இன்னும் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது. அவற்றை அறிமுகப்படுத்தும் ஒரே திறப்பாக இலக்கியம் ஒன்றே தென்படுகிறது. இந்நோக்கில் படைப்பாளிகளே தற்காலத்தின் ஞானச் சுனை. ஆகவே இலக்கியம் உயிர்மூச்சாக கருதப்படுகிறது. படைப்பாளிகள் ஆசிரியர்களாக தொழப்படுகிறார்கள்.

இலக்கியம் தவிர்த்த பிறவற்றை இவ்விதழ் பேசுவதும் இல்லை. பகிர்வதும் இல்லை. ஆயினும் இவ்விதழின் அக்கறைகளில் அவை கிடையாது என்பது இதன் பொருள் அல்ல.  எல்லாச்  செயல்களுக்கும் பின்னர் அரசியல் உள்ளது, ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவனுக்கே உரிய  அரசியல் அவதானிப்பும், ஆசையும், ஆவலாதியும் உள்ளது.   இந்நிலையில் அரசியல் சார்ந்த உரையாடல் என்பது தனி மனிதனின் அந்தரங்கமாக மாறியுள்ளது.  அரசியல் உங்களின் எதிர்பார்ப்பு என்றால் எங்களைப் பொறுத்துக்கொள்ளுங்கள். அதற்கான தளம் இதுவல்ல. நன்றி