ரகசியத்தின் நிழல்

1
படுக்கையில் ஒருபக்கமாக சாய்ந்து கால்களைத் தளர விட்டுக்கொண்டேன். சுவற்றில் மாட்டியிருந்த கடிகாரம் பல நாட்களாக ஒரே காலத்தில் உறைந்து விட்டிருந்தது. செல்போனின் அருகாமை அதை பற்றிய சிந்தனையை தள்ளிப்போட்டிருந்தாலும் எப்போதாவது மனைவியுடன் கூடலில் இருந்து கீழே சிதறிக்கிடக்கும் ஆடைகளை பொறுக்கும் போது பார்ப்பதோடு சரி. மற்ற நேரங்களில் அந்த அறையில் வேறு விஷயங்களை சிந்திக்க நிறைய இருந்தது. முக்கியமாக என் அம்மாவைப் பற்றி அவளை துரத்தும் என் மனைவின் இளமை பற்றி.
காதல் திருமணத்தில் தவறில்லை என சொன்னதும் இல்லாமல் கையோடு அவளை அழைத்து வரச் சொல்லி ஒரு உணவகத்தில் அவளைச் சிரிக்க வைத்து  உறவை பலப்படுத்திக் கொண்டாள். ஆனால்,  அப்படி ஒரு அம்மாவை நான் பார்த்ததில்லை. அவளை பொறுத்தவரை எனக்கும் என் அப்பாவிற்கும் எந்த ரகசியங்களும் கிடையாது. ஒன்றை மனதில் நினைத்து ஏக்கம் கொண்டால் கூட அடுத்த நாள் ‘அது உனக்கு எதுக்கு தங்கம்’ என சிரித்துவிட்டுச் சொல்லும் போது அந்த உருண்டை கண்கள் வார்த்தையை கக்கி வளைவை அடைந்திருக்கும்.
வாழ்நாள் முழுக்க அம்மாவிடமிருந்து தப்பிப்பதற்காக அப்பா முயற்சி செய்துகொண்டே இருந்தார். பின் ஒருநாள் இடுகாட்டிற்கு அவரைக் கொண்டு சென்றபோது வாசலுக்கு வெளியே வந்தவள் ‘என் தெய்வம் போகுதே…எதை மறைச்சிட்டு போகுதோ..’ எனக் கூவி கொண்டிருந்தவளைத் திரும்பிப் பார்க்காமல் அசைந்து கொண்டே  இருந்த சட்டியை சுமந்துகொண்டு சென்றேன். சில மாதங்கள் கடந்தது.
மனிதனுக்கு என்றாவது ஒருநாள் பொங்குகிற தனிமையின் தன்னிரக்கத்தைப் போல வேறு எதுவும் ஒரு யோக்கிய நிலையை அளிப்பதில்லை. அப்படி அந்த நாளில் தொலைக்காட்சியில் பாதியைக் கடந்து சென்றுகொண்டிருந்த ‘இது ஒரு பொன்மலைப் பொழுது’ பாடலைக் கண்டதும் ஒலியைக் கூட்டி கேட்க ஆரம்பித்தேன். என் அப்பா சாகும் வரை அவர் செல்போனில் ஒலித்துக்கொண்டிருந்த பாடல் அது.  நினைவின் தீவிரம் அதிகரித்து அப்பா மிதந்து கொண்டே இருந்தார். ஒருகணம் கண்ணீர் தளும்பி நின்றது. எதிரே அமர்ந்து உணவை உருட்டிக்கொண்டிருந்த அம்மாவிடம் ‘ உனக்கு அப்பா நியாபகம் வர்ரதே இல்லியாமா?’என்றேன் .
‘வந்து என்ன ஆகப் போது?”
” நான் செத்தாலும் இப்படித்தான இருப்ப?”
அம்மா என்னைக் கூர்ந்து பார்த்தாள். உணவை உண்டபடி குளறிய மொழியில் ‘அதை உன் பொண்டாட்டிகிட்ட கேளு’ என்றதும் நான் நாற்காலியின் முனைக்கு வந்தேன்.அவளை அதற்கு மேல் நெருங்காதே என  மனம் ஒரு குரலை உள்ளிருந்து வீசியது. ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் மேலும் அந்தரங்கமாக நெருங்கி ‘அந்தாளு உன் புருசன் தான’? என்றேன்.
அம்மா என்னை நிமிர்ந்து பார்த்தபடி ‘ஒரு நெசத்தை சொல்லவா? உங்கப்பன் போனதுக்கு அப்றம் தான் நிம்மதியான சோறு’ ஒரு கவளத்தை விழுங்கினாள். தொண்டையில் நின்றுகொண்டிருந்த எச்சிலை எவ்வளவு முயன்றும் என்னால் உள்ளே கொண்டு போக முடியவில்லை. எழுந்து வெளியே வந்தேன். ஒருநாள் நானாக ஒரு உண்மையை அடைந்தேன். அப்பா என்ன செய்தாலும் அவர் அடிப்படைவாதி. பக்கத்து மளிகை கடைக்கு கூட அம்மாவை அனுப்பாதவர். பாட்டி இருந்தவரை எல்லாமே அவள் தயவில் தான் நடந்து கொண்டிருந்தது.வளரத் தொடங்கிய நாட்களில் அந்த சுதந்திரத்தின் முக்கியத்துவம் புரிய ஆரம்பித்ததும்  அவளைக் காதலிக்கும் நாட்களில்  கூட்டிக்கொண்டு சுற்றாத இடங்கள் இல்லை. தனியாக பலமுறை அவளை எங்காவது சென்று வா என வற்புறுத்தியிருக்கிறேன்.புதிய அனுபவங்களைப் பெற்றால் மற்ற பெண்களைப் போல அல்லாமல் வேறு கோணத்தில் வாழ்க்கையை சிந்திக்கும் திறன் வாய்க்கும் என்பதால் அவள் விரும்பாதவற்றைக் கூட செய்ய தூண்டி அதில் ஒன்றை கற்று அதில் வேறு ஒன்றைப் பெற விரும்பினேன்.
அப்பா சென்றபின் அம்மாவுடைய மீறல்கள் ஒருபக்கம் என்னை அச்சுறுத்திக்கொண்டிருந்தது. பல நாட்கள்  லல்லியிடம் எதோ குழம்பை வாங்கிக்கொண்டு வந்தவள் சோற்றில் ஊற்றும் போது அதில் எழுந்த நல்ல மணத்தை கண்டு ‘எல்லாம் எவன்காசுன்னு நினைக்கற? அவ புருசன் கொண்டாரதுல இப்படி திங்க முடியுமா? என்ற படி ஒரு நமட்டுப் புன்னகையை உதிர்த்தாள். அத்தனை நாள் வைத்திருந்த பாசம் அந்த வார்த்தைகளில் ஒன்றுமில்லாமல் ஆனது. அவளுடைய கணவன் வேலைக்குச் சென்ற பின் ஒவ்வொரு நாளும் அவன் கொடுத்த ஒவ்வொரு காயங்களையும் என் அம்மாவிடம் காட்டிக்கொண்டிருக்கும் அந்த துயர் முகமே என்றும் என் நினைவிற்கு வருவது. அப்படி தொடையில் கடித்த பற்தடங்களை பாவாடையைத் தூக்கிக் காட்டும் போது எதார்த்தமாக உள்ளே நுழைந்த போது கருமையில் மிளிர்ந்த கால்களைக் கண்டதும் தலை குனிந்துகொண்டேன்.அம்மா என்னை ஒரு அதட்டலில் வெளியே கொண்டு சென்றாள். சிறிது நேரம் கழித்து லல்லி தேங்கிய கண்ணீரில் கலைந்த மையுடன் வெளியே வந்து ‘ வாரேன் ஜீவா’ எனத் தடுமாறி நடந்தவளின்  பின்பக்கத்தை அன்று என்னால் பொருட்படுத்த முடியவில்லை.  துயரத்தை மட்டுமே  சொல்லித் திரியும் லல்லியின் அன்பு எந்த கபடமும் இல்லாதது. தெருக்கடையில் வாங்கிய சிகரெட்டை வீதிக்கு வெளியே  மறைத்துக்கொண்டு ஒதுங்கி இழுத்துக்கொண்டிருந்த போது அந்த இடத்தை கடந்து சென்றவள் அணிந்திருந்த நைட்டியின் ஒரு பக்க முலையை அழுத்திப்பிடித்தபடி இடையில் அமர்ந்திருந்த அவள் மகனை  கவனித்த நேரத்தில் கையிலிருந்த சிகரெட்டை மறந்துவிட்டேன்.ஒரு கணமே என் பக்கம் திரும்பி ஒரு அருவருப்பான பார்வையை காட்டினாள். எதையும் என் பெற்றவளிடம் மறைக்கத் தெரியாதவள் இதை விடுவாளா? என்கிற ஆத்திரத்தில் அன்று இரவு வெகுநேரம் பிந்தியே வீட்டிற்குச் சென்றேன். அம்மா பேசப்போகும் நாராச வார்த்தைகளை புளித்து போன காதுகள் அறிந்ததுதான் என்றாலும் எதை தொடவே கூடாது எனச் சொல்லிவளர்த்தாளோ அதை விதவிதமாக தொட்டுப் பழகியிருந்தேன். ‘எனக்கு பிறக்கல ‘ என்கிற வசையைத் தாங்கும் அளவு நான் பக்குவப்படாத பிராயம் அது. ஆனால் அன்றிரவு அவள் எதையும் என்னிடம் கேட்கவில்லை.
 விடிந்ததும் பால் வாங்கிக்கொண்டு வீட்டின் வாசலில் நின்றிருந்த லல்லியை முகம் கொடுக்காமல் கடந்ததும் ‘அக்காட்ட எதுவும் சொல்லல..இப்பதான் காலேஜ் போற, இந்தப் பழக்கம் வேண்டாம்’ என்றாள். அந்த நொடியில் அவள் மீது நான் வைத்திருந்த  எண்ணங்களை மாற்றிக்கொண்டேன். நாட்கள் செல்லச் செல்ல அவள் மீது கருணையைத் தவிர வேறு எதுவும் படறாமல் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தேன்.
ஒருநாள் பிளக்கப்பட்ட நெற்றியுடன் அம்மாவைப் பார்க்க வாசலில் அமர்ந்திருந்தவளைக் கண்டதும் மனம் பதறி என்ன ஏது என விசாரிப்பதற்குள் கட்டியவன் குடித்துவிட்டு அடிக்க ஆரம்பித்ததை சொல்லித் திணறிக் கொண்டிருந்தாள். என்றும் இல்லாமல் வந்த கோபத்தில் விறகு கட்டை ஒன்றை எடுத்ததும் வேண்டாம் எனக் காலில் விழுந்தளைப் பார்த்து  மூச்சு வாங்க ‘தாயோளி..அவனை’ என்றபடி அம்மாவைத் தேடி வீதியில் இறங்கினேன். அடுத்த தெருவில் லல்லியின் மாமியாரிடம் எதையோ பேசியபடி விடைபெற்றுக் கொண்டிருந்தவளை தூரத்தில் இருந்து கையசைத்து வரச் சொன்னேன். நெற்றியில் வைத்த மஞ்சளைப் பிளந்து கொண்டு ரத்தம் உறையத் தொடங்கியது. ஒருவாறாக பேசி அம்மாவே அவள் வாசலில் விட்டுச் சென்று வந்தாள் .
பின்னிரவில் பாத்திரங்களைக் விளக்கியபடி ‘பாவம்’ என்கிற குரல் வந்ததும் அருகே சென்று அமர்ந்தேன். லல்லி எத்தனை காயப்பட்டிருப்பாள் என எண்ணிக்கொண்டிருந்த போது ‘இவமேல தப்பு இல்லாம என்ன மயித்துக்கு அவன் அடிக்கப் போறான்..தண்ணி பம்புல என்னென்னமோ பேசறாளுக, நான் என்னத்த கண்டேன்..வீடு வாச..நீயு..’ என்றபடி அம்மா அறைக்குள் நுழைந்தாள். மீண்டும் ஒருநாள் வீட்டில் மாமியார் இல்லாததால் சாம்பார் எப்படி வைக்க என கேட்டபடி கதவோரத்தில் நின்று கொண்டிருந்தவளை வெளியிலேயே வைத்து ‘3 கரண்டி மிளகாய்த்தூள் போடு’ என உள்ளிருந்து குரல் சென்றது. அடுத்த நாளும் அடிவாங்கிய வீங்கிய முகத்துடன் வாசலில் அமர்ந்து அழுது கொண்டிருந்தவளிடம் காரணத்தை கேட்கும் முன்னே ‘கொழம்புல காரம்னு அடிச்சுட்டான்’ என அம்மாவிடம் வெதும்பினாள். ‘நினைப்பு எங்க இருந்துச்சியோ’ என்றபடி அம்மா உள்ளே வந்தாள்.நேரடியாக  லல்லியைப்  பார்த்து அம்மாவிடம் எந்த விஷயத்தையும் சொல்லாதே அவள் உன்னையும் ஒரு தவறாக நினைக்கிறாள் என்பதைச் சொல்ல துடித்துக்கொண்டிருந்தேன்.
பின் சில வாரங்கள் அவளுடைய வருகை குறையத் தொடங்கியதும் அம்மாவே ஒருநாள் அழைத்து வந்தாள். சில நிமிட தயக்கத்திற்கு பின் எப்போதும் போல அம்மா ஊரை இழுத்து வந்து இது யார் என தெரிகிறதா? என அவளிடம் போதித்துக் கொண்டிருந்தாள். அவளும் முன் இல்லாத கூர்மையுடன் அவற்றைக் கேட்கத் தொடங்கியதை அறிந்து கொண்டேன்.  ஆனால் ஒவ்வொரு முறையும் அம்மாவைப் பார்க்க லல்லியின் மாமியார் வந்து செல்லும்போதெல்லாம் அன்றிரவு அவளுக்கு அடிவிழுந்ததை புரிய முடியாமல் குழம்பிக் கொண்டிருந்தேன். ஒருகட்டத்தில் அம்மாவின் போக்கு நாளுக்கு நாள் மோசமாகி  சாலைகளில் பழைய பொருட்களை எடுத்துச் செல்லும் பிச்சைக்காரனைப் போல  ஊர் ரகசியங்களை பொறுக்கிக்கொண்டிருந்தாள். சலவைக்  கல்லில் பலம் கொண்டு துணிகளை அடித்துக்கொண்டிருக்கும் வேகத்தில்  எழுகிற ‘உஷ்..’  சத்தத்திற்கு இடையே கைக்கு அகப்பட்டவளின் முன் ஜென்ம வாழ்வின் கறைகளைகூட ஆராய்ந்து என்னிடம் திரும்பி அலசிக் கொண்டிருந்தவளைப் பொருட்படுத்த முடியாமல் பலமுறை இருவருக்குள்ளும் சண்டை வரத் தொடங்கியது. தேவையில்லாமல் அடுத்தவரின் வாழ்க்கையைப் பற்றி பேசித்திரிந்தால் நமக்கு செருப்படி கிடைக்கும் என்றேன். உன்கிட்ட தவிர யார்கிட்ட சொல்லப்போறேன் என்றபடி சமையலை கவனித்து எனக்குள் இருக்கும் நெருப்பை காலத்தால் அணைத்துக் கடந்தாள்.
ஆனால் இத்தனைக்கு பின்பும் லல்லி அம்மாவைத் தேடி வந்து கொண்டிருந்தது என்னை காயப்படுத்தியது.தன் கணவன் தூங்கிய பின்  மாமியார் அவனது பர்ஸை திறந்து பணத்தை எடுப்பதை பார்த்ததும் ஒன்றும் சொல்ல முடியவில்லை என புலம்பியவள் ‘வாழவே புடிக்கல’என தேம்பிக் கொண்டிருந்தாள்.
 2
லல்லிக்கும் அம்மாவுக்கு பேச்சு குறைந்ததற்கு காரணம் காயு தான் என நினைத்திருந்தேன். எந்த மிரட்டல்களையும் பொருட்படுத்தாமல் அவளைத் திருமணம் செய்த நாளில் என்னுடன் அம்மாவும் லல்லியும் அவளது கணவனும் மட்டுமே துணை நின்றார்கள்.இருவரும் அவளை தாங்கியதை பலவீனமாக பார்த்துக்கொண்டிருந்தாலும்  அம்மா எல்லாவற்றயும் நேர்த்தியுடன் செய்யத் தொடங்கிய காலகட்டம் அதுதான் . எப்போதும்  இல்லாத ஒழுக்கம் வீட்டின் தரைகளில் படர்ந்து கிடந்தது. என்னுடைய பொருள்கள் சரியாக அடுக்கப்பட்டன. எந்த இடத்திலும்  குப்பைகள் சேராத வண்ணமும் பாத்திரங்களை உடனுக்குடன் கழுவும் சுகாதாரத்திற்கு வந்தாள் சொந்த வீட்டையே ஒரு ஒப்பந்த ஊழியரைப் போல மாறி பராமரித்துக் கொண்டிருந்தாள்.
லல்லி வரும்வரை அவளே தன் முழுக்கட்டுப்பாட்டில் வீட்டை வைத்துவிட்டு பின் காயுவுடன் சிறிய வேலைகளை ஒதுக்கி தருவாள்.எப்போதும் எதையும் கேட்க மட்டுமே செய்யும் லல்லி முதல் முறை காயுவை முழுப்பெயரைச் சொல்லி உரிமையுடன் அழைத்து பேசிக்கொண்டிருந்ததை புன்னகையுடன் கேட்டுக்கொண்டிருந்தேன். எந்த குழம்பிற்கு எந்த மசாலா என்பது வரை சொல்லிக்கொண்டே சென்றவள் ‘ அந்த மளிகை கடைல எதுவும் வாங்காத..ஏன் ன்னா…’குரலின் ஒலி அடர்த்தி குறைந்து ‘அய்ய’ என்கிற காயுவின் குரல் மட்டும் கேட்கவும் மெல்லிய பதற்றம் உருவானது. பின் சிறிய சிறிய கீச்சுக் குரல்கள். இப்படியாக வீடு மாறிக்கொண்டே வந்தது. அம்மா முழுப்பொறுப்பையும் அவளிடம் கொடுத்துவிட்டு காலை 9 மணிக்கெல்லாம் சாய்ந்து உட்காரத் தொடங்கினாள். அவளுக்கென வாங்கிக்கொடுத்த கைபேசியில் லல்லியை அழைக்கச் சொல்லி வாசலை எதிர் நோக்கி காத்திருந்தவளின் வேண்டுதலை ஒவ்வொரு நாளும் அவளும் பூர்த்தி செய்து கொண்டிருந்தாள்..சில நாட்கள் இலகுவாக போய்க்கொண்டிருந்த பேச்சுக்கள் ஒருநாள் உக்கிரத்தை அடைவதுண்டு.அப்போது காயுவை உள்ளே போகச் சொன்னதும் வெடிச் சிரிப்புகள் கிளம்புவதை அடுப்பறை பக்கம் நின்று கேட்டிருக்கிறேன். அம்மா குரலைக் குறைத்து அந்தரங்ககங்களை வீசிக்கொண்டிருந்தாள்.
சில வாரங்கள் அம்மா தன்னுடைய இடத்தை பளிங்கு மாதிரி வைத்து இத்தனை நாளும் இப்படித்தான் இந்த வீடு இருக்கிறது. கண்ட இடத்தில் எதுவும் கிடக்காது. இனி நீ அதை சரியாக பார்க்க வேண்டும் என சொல்லி மனைவியைத் தயார் செய்தாள். சில கட்டளைகளை மட்டும் விதித்தாலும்  காயுவை நான் காதலித்ததிற்கு முக்கிய காரணம் அவள் என்னுடைய அம்மாவின் ஒரு சாயலும் இல்லாதவள் . பணம் , பொருள் , அடுத்த வீட்டின் கதவு இடுக்கு  என எந்த ஒன்றின் மீதும் அக்கறை அற்றவள். அதைத்தாண்டி அவளிடம் நெருக்கமானத்திற்கு ஒருவரின் வாழ்க்கை அந்தரங்கங்களை  ஒருநாளும் என்னிடம் பகிர்ந்ததில்லை.அறிவுரை என்கிற பெயரில் தன்னுடைய சிறிய வட்டத்தின் குப்பைகளை யார் மீதும் இறைக்காதவள் . முதலில் வீட்டுக்கு அழைத்து வந்தநாளில் அவளுடைய அருகாமையை தேடி துடித்துக்கொண்டிருந்தேன். எந்நேரமும் அம்மா அவளை பேச்சுத் துணைக்கு அழைத்துக் கொள்வாள்.பக்கத்தில் இருக்க வைத்து தான் பட்ட துயர்களை ஒவ்வொன்றாக அவளிடம் இறக்கிக்கொண்டிருந்தாள் அறையில் அமர்ந்து கைபேசியை நோண்டிக் கொண்டிருக்கும் போது ‘அழுகாதீங்க ..ம்ம்மா’ என்கிற காயுவின் குரல் என்னை கொதிக்கவைத்துக் கொண்டிருந்தது.ஒருநாள் அப்படியான வார்த்தைகள் வந்தபோது வெறுப்பின் பிடியில் அகப்பட்ட வேகத்தில் மனைவியைப்  பார்த்து  ‘அதுக்கு தான் வேல மயிறு இல்ல..வா..’ என அதட்டினேன்  ‘வாசலில் தலையைக் கோதிக்கொண்டிருந்த அம்மாவிற்கு பின்னால் லல்லி எழுந்து கிளம்பினாள். காயு அங்கிருந்தே ‘என்ன வார்த்தை பேசற..அசிங்கமா இல்லையா? என்றதும்  மேற்கொண்டு எதுவும் பேசாமல் அறைக்குச் சென்றேன். ‘உங்கொண்ணன் எதோ ஒருத்திய இழுத்துட்டு வந்துட்டாணாமே…’ என இழுத்ததும் அவளும் கண்களில் நீரை வைத்துக்கொண்டு ‘நானும் வந்துட்டேன்.அவனும் போய்ட்டான்.அப்பாவை நினைச்சா கஷ்டமாக இருக்குமா ‘ என்றபடி அம்மாவிடம் சொல்லியிருக்கிறாள்.
அப்போது என் தாயிடம் இருந்து வந்த ஓகோ வின் அர்த்தத்தை நான் அறிவேன்.
சில மாதங்கள் கழித்து காயும் லல்லியும் நெருக்கமானார்கள் . இருவரும் சேர்ந்தே கடைகளுக்குச் செல்வது , பிரதோஷ நாட்களில் மணி கணக்காக கோயில் படிக்கட்டுகளில் அமர்ந்து தங்களை பகிர்ந்து கொள்வது , அம்மாவிடம் பேசி விடைபெறும் போது அவளுக்குத் தெரியாமல் ஜன்னல் கதவைத் திறக்கச் சொல்லி இவளிடம் ஒரு அடிக்கு மேல் பரவாத ஒலியில் பேசிக்கொள்வது, வீட்டில் அசைவம் செய்தால் தனியாக  டப்பாவில் அடைத்து துண்டில் சுற்றிக்  கொடுப்பது என இருவரும் இணைந்தே இருந்தார்கள். அம்மாவிடம் படிக்கட்டுடன் துண்டித்துக் கொள்ளும் நட்பை காயுவிவின் படுக்கையறை வரை விரித்துக் கொண்டாள். இது எதுவும் அம்மா இல்லாத சமயங்களில் மட்டும். பெரும்பாலும் அவள் நடை இருக்கும் நேரத்தில் இருவரும் ஒரு சொல்லைக் கூட தேவையில்லாமல் பகிராதது விந்தையாக இருந்தது.
சில நாட்கள் உணவில் ஆரம்பித்த சண்டை சச்சரவுகள் முடிய இருக்கும் மெழுகின் ஒளி போல பிராகாசித்தது. திடீரென நடு இரவில் லல்லியிடமிருந்து வரும் அழைப்பை எடுத்து ‘ம்ம்…; என்கிறதை மட்டும் கக்கிக்கொண்டிருக்கும் என் மனைவியின் முகத்தில் ஒருமுறையும் சிரிப்பைக் கண்டதில்லை. சில சமயங்களில்  அம்மா கொஞ்சம் கொஞ்சமாக என்னைவிட்டு விலகிக்கொண்டிருந்ததை உணர ஆரம்பித்தேன்.எப்போதும் அவள் எரிந்து விழுவது இயல்புதான் என்றாலும் எதற்கெல்லாம் எரிய வேண்டும் என அவள் காத்திருந்தது சகிக்க முடியாதது.
சமைத்துக்கொண்டிருக்கும் போது அடுப்பின் நெருப்பிற்கு மிக அருகில் நின்றுகொண்டு குற்றத்தை துழாவ தொடங்கியதை கீழே கொட்டிய ஒரு சிட்டிகை உப்பினை மிதித்த போது அறிந்து கொண்டேன். விழிகள் வெறிக்க உக்கிரம் அடைந்து என் காயுவைப் பார்த்து ‘அறிவில்ல.. சாமியை மிதிச்சிட்டு இருக்க, தேவ இல்லாம சோத்துல கூட போடக்கூடாது ‘ எனக்  கூறியதை அமைதியாக நானே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது தவறு எனத் தோன்றினாலும் ஒன்னும் செய்ய முடியாத நிலை. எண்ணெய் ஒரு கரண்டி அதிகமானதை ‘உங்கப்பா வீட்ல இதை நெறய குடுத்தாங்க இல்ல’ என்றவளை முதன் முதலாக என் மனைவி முறைத்ததை பின் அவள் சொல்லி அறிந்துகொண்டேன். வேண்டுமென்றே பாத்திரங்களை எடுத்து பரப்ப ஆரம்பித்திருந்த அம்மாவிடம் மென்மையாக சொல்லியும் அவள் கேட்காதது எனக்கு ஆத்திரத்தை வரவழைத்தது.
அப்படி  இரவுபணி முடந்து  வந்த ஒரு  நாளில் அறையில் காயு அழுது கொண்டிருந்ததும் அவளை லல்லி சமாளித்துக் கொண்டிருந்ததையும் பார்த்த போது உள்ளம் நடுங்கியது. என்ன? எனக் கேட்பதற்குள் ‘உங்கம்மா என்ன நினைச்சுட்டு இருக்கு? எப்ப பாரு தேவ இல்லாம சண்ட போடுது. எங்கேயாச்சு நான் போயிரவா? என்றவளைப்  பார்த்து பிரமை பிடித்து நின்றேன்.
‘மத்தியானம் சாம்பார்ல கொஞ்சம் தான் உப்பு போட்டேன். இந்தக்கா கொண்டு போன சாம்பார்ல உப்பு சரியா இருந்துருக்கு. உங்க அம்மா சாப்பிடும் போது அப்பிடி கரிக்குதாம் கோவத்துல எல்லாத்தையும் கீள கொட்டிருச்சு’
நான் ஓரளவு நடந்ததைப் புரிந்துகொண்டேன். இப்ப எங்க அம்மா உப்பை போட்டத நீ பாத்தியா? என்றதும் லல்லி என்னை வெளியே அழைத்துச் சென்று அம்மா எங்கெல்லாம் ஒளிந்து இருக்கிறாள் என நோட்டத்தை விட்டு  ‘ வயசானவங்க தம்பி.. விடு, எங்கயும் நடக்காததா இங்க நடக்குது..ஆனாலும் கல்யாணி அக்கா இப்டி ஏன் நடந்துக்குதுனு தெரில, இவ மேல வெறுப்புல இருக்கு ‘ என்று என் பதிலுக்கும் கூட காத்திருக்காமல் வாசலுக்குச் சென்றாள். அந்த  வார்த்தைகள் என் அம்மாவின் மீது மேலும் ஒரு விலகலை உருவாக்கியது. அவளுடனான பேச்சுக்களை  காயு குறைத்துக்கொண்டதற்கு பின் இருவருக்கும் மையச் சரடாக லல்லி இருந்ததாள் குழப்பங்கள் மறையும்  என நினைத்திருந்தேன். அது  அப்படியே நீண்டு சென்றுகொண்டிருந்தது. என்னிடம் எதையும் மறைக்காதவள் கூட ‘கேட்டு என்ன செய்யப் போற?’ என்றதும் உள்ளே துடித்து அடங்கிக் கொண்டிருந்தேன். நேற்று மாலை விரைவாக பணி முடிந்து வாசலை அடைந்தபோது லல்லியிடம் ‘அவகூட பொறந்தவன்  சக்கிலிய பொண்ண இழுத்துட்டு போயிட்டானாம்டி’என்றதும் நான் நுழைந்ததற்கும் சரியாக இருந்தது. லல்லி அதை பொருட்படுத்தியது போல இல்லாமல் ‘ வா தம்பி’ என்றாள். நான் கடுமையான முகத்துடன் அவர்களைக் கடந்து சென்றேன். லல்லியை போல வேறு யாரிடமாவது இதைச் சொன்னால் என்ன ஆவது என மெல்லிய பதற்றம் உண்டானது.
 3
கடிகாரத்தை பார்த்தபடி அமர்ந்திருந்தேன். சிறிய முள் இரண்டு நொடிகளுக்கு சென்றும் வந்தும் கொண்டிருந்தது. பாட்டரி அதன் இறுதியிலும் உயிரை வழங்கிக்கொண்டிருந்ததை பார்க்கும் போது சிறிய ஆச்சரியம்.கைபேசியில் நேரம் மணி 11.30யை நெருங்கிக்கொண்டிருந்தது. புதிய பழக்கமாக தைலத்தை தேய்த்து காயு பக்கத்தில் உடல் ஒடுங்கி கன்னம் வீங்கி சுருண்டு படுதுக்கிடந்தாள்.
வெளியே  அம்மாவும் லல்லியும் சேமித்து வைத்திருந்த ஊர் ரகசியங்கள் படிக்கட்டுகளில் மெல்ல ஏறி என்னை நோக்கி வந்தபடியே இருந்தது. ஒரு சண்டை நடந்ததற்கான எந்த சாயலும் இல்லாதது போல சிரிப்புகள் . புரண்டு புரண்டு படுக்க முயற்சித்தவளுக்கு தூக்கம் பிடிகிடைக்காமல் போனதற்கான காரணம் தெரிந்தும் ஒன்றையும் கேட்டுக்கொள்ளவில்லை. நேரடியாக பேசியே பழகிவிட்டதால் அம்மாவிடம் வார்த்தைகளை வீச முடியாது. லல்லி எதுவும் கேக்காத என்றதால் அதை விளங்கிக்கொள்ள முயன்று கொண்டிருந்தேன். இத்தனை ஆண்டுகளில் பெண்களால் மட்டுமே சூழப்பட்ட ஒரு உலகில் தனித்துவிடப்பட்ட என்னை எங்கிருந்து மீட்டுக்கொள்வது என திணறினேன். வெளியிலிருந்து குரல் வந்தது. ‘நேரம் ஆச்சு இன்னைக்கு அம்மாவாசை வேற..இவளை வீடு வரை விட்டுடு வா’ என்றதும் நான் லுங்கியை மடித்துக் கட்டி செருப்பை அணிந்துகொண்டு செல்போனை எடுத்துக்கொண்டேன். ‘வரேன் க்கா..சாப்பிட்டு தூங்கு’ ‘அது ஒண்ணுதாண்டி இங்க குற ‘ என வாசல் கதவை மூடும் போது கேட்டது. இரண்டு தெருக்களை கடந்தால் லல்லி வீடு . சிறுவயதில் இப்படி துணைக்கு செல்வது வழக்கம். பழைய கல்லூரி நட்புகள் , காதல்கள் எல்லாம் கேட்டுக்கொண்டே வருவாள். தயங்கித் தயங்கி கதைகளை பேசிக்கொண்டு வருவேன்.  இப்போது  காலம் இருவருக்குள்ளும்  தூரத்தைக் கொடுத்துவிட்டது.
‘அதையே நினைக்காத, விடு .ஆனா காயத்திரி பாவம். உங்கம்மாட்ட மாட்டிகிட்டு முழிக்கிறா..ஒண்ணா இருந்தாலே பிரச்னைதான்’ என ஒரு கள்ளப் பார்வையைப் வீசினாள்.
செல்போன் ஒலித்தது ‘அவதான் கூப்பிட்றா ..தூக்கிக்கிட்டு இருந்தா, என்னனு தெரில’ என அழைப்பை துண்டித்தேன்.
மேற்கொண்டு எதையும் சொல்லாமல் தரையில் செருப்பை உரசி நடந்து  இடையே உருவான மௌனத்தை உடைத்து   ‘இப்படி நடக்கும்னு நினைக்கவே இல்ல’ என்றேன்.
‘விடு. என் மாமியா பண்ணாத கொடுமயா? கொழம்புல காரம் அதிகம், உப்பு கம்மின்னு வீட்டுக்காரன்கிட்ட சொல்லி அவன் குடிச்சுட்டு வந்து கொஞ்ச நஞ்ச அடியா அடிச்சான் ?  முடிஞ்ச வரை பாத்துட்டு கடைசில கெளவிய  அத்துவிட்டு வந்தாச்சு’ அதே அமைதியுடன் என் பதிலுக்காக காத்திருந்து ‘எனக்கென்னவோ உப்பு போட்டது இவ இல்லலைனு தோணுது’ என நடையின் வேகத்தை குறைத்துக் கொண்டாள்.
‘அப்டினா..அம்மா, ச்சீ இந்த அளவுக்கு கேவலமா போகாது’
‘ஹ்ம்ம். வீடு வந்துருச்சு ஆனா ஒண்ணு உன் பொண்டாட்டிக்கு இங்க இருக்கவே புடிக்கல, அவகிட்ட இதை கேக்காத’ என்றபடி வீதி விளக்கின் வெளிச்சம் மட்டுமே எஞ்சியிருந்த சிறிய மண் சாலையில் அவளது வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தாள்.
அங்கேயே நின்று மீண்டும் வந்த அழைப்பை எடுத்தேன். ‘நான் சாகத்தான் போறேன்..உங்காத்தா திருந்த மாட்டா, எங்கண்ணன் எந்த ஜாதில பொண்ண கூட்டிட்டு போனா இந்த பொம்பளைக்கு என்ன? ‘என காயத்ரி கத்திக்கொண்டிருந்தாள். பதில் பேசுவதற்கு முன்பே வெடுக்கெனப் பிடுங்கப்பட்ட செல்போனில் அழுவதை போல அம்மாவின் குரல். ‘உன்னை கண்டிச்சு வளத்திருக்கனும்டா , கண்ட முண்டையெல்லாம் என்ன கேள்வி கேக்குது. திருட்டுத்தனமா நீ பீடி குடிச்ச போதே செருப்பால அடிச்சிருந்தா இந்த சனியன் பின்னாடியெல்லாம் போயிருப்பியா’
நான் வெடவெடத்து காதிலிருந்து கையை எடுத்து  தலையை நிமிர்த்திப் பார்த்தேன். தன் நிழல் அடுத்த வீட்டின்  வாசலில் விழுந்திருக்க லலிதா அவள் படிக்கட்டுகளில் நின்று என்னைத் திரும்பிப் பார்த்தாள்.

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *