1.ஓர் இந்திய ஆன்மீக அனுபவம்

 

ஒரேயொரு அறுபது வோல்ட் விளக்கு மட்டும் எரிந்த அந்த மஞ்சள் நிற கட்டிடத்தை நெருங்கும் முன்னே நான்கு புறமிருந்தும் மூத்திர வாடை அமிலத்தின் காந்தலுடன் காற்றில் குப்பென்று எழுந்து வந்தது. ஆளுயுர கருவைப் புதர்களின் நடுவே ஒரு சொதசொதப்பான ஒற்றையடிப்பாதை, பேருந்து நிறுத்தத்தில் இருந்து அந்த பழைய கட்டிடத்தை நோக்கி பிரிந்து சென்றது. பாதையின் இருமருங்கிலும் நூற்றுக்கணக்கானோர் பெய்த சிறுநீரின் ஈரம். அதில் பளபளத்து மின்னியபடி ஆடும் சிறு செடிகள். சூழ்ந்திருந்த இருளில் கவனமாக அவற்றில் கால்களை உரசிக்கொள்ளாமல் நடந்து சென்று கொண்டிருந்தேன். உடலின் இரு புறமும் ஆயிரம் கண்கள் முளைத்துக்கொண்டது போன்ற எச்சரிக்கை. சற்று தொலைவு சென்ற பின்னர் தான் திரும்பி பார்த்தேன், என்னுடன் பேருந்திலிருந்து இறங்கியவர்கள் எல்லோரும் அருகிலேயே அங்கங்கே நின்று சிறுநீர் பெய்து கொண்டிருந்தார்கள். நான் மட்டும் தொலைவாக வெகு தூரம் வந்துவிட்டிருந்தேன். அப்போதும் கூட அங்கு அருகிலேயே ஒதுங்கியிருக்கலாம். ஆனால் ஏதோ ஓர் உணர்வு என்னை அந்த சிறு கழிவறை நோக்கி செலுத்தியது. அது வெறும் ஆணவமாக இருக்கலாம், அல்லது ஒரு வித சாகசத்தின் வசீகரம். சிறு வயதில் இருந்தே என்னால் எந்த அருவருப்பையும் தாங்கிக்கொள்ள முடியும் என்ற எண்ணம் எனக்கு உண்டு. இறந்த நாயின் அழுகி வெடித்து மயிர் உதிர்ந்த புழுக்கள் நெளியும் உடலையோ, சாலையோரம் கிடக்கும் மலத்தையோ என்னால் சற்றும் கண்களை விலக்காமல் பார்க்கவும் உடலை உலுக்கிக் கொள்ளாமல் கடந்து செல்லவும் முடியும். எத்தனையோ முறை கடும் நாற்றமடிக்கும், என் நண்பர்கள் நுழையவே கூசும் கழிவறைகளில் சகஜமாக நுழைந்து சிறுநீர் கழித்து வந்திருக்கிறேன். ஆனால் அதன் மறுபுறமாக, உடலில் சீண்டும் சிறு அசிங்கத்தையும் கூட என்னால் சகித்துக்கொள்ள முடியாது என்பதையும் கண்டிருக்கிறேன். சிறு எச்சில் கூட என்மேல் தீண்டிவிட்டால் உடல் உதறிக்கொண்டு சிலிர்த்து விடும். நெஞ்சு பதைபதைக்க பலமுறை நீரில் கழுவிக்கழுவி மெல்ல அதிலிருந்து மீள்வேன். என் மனம் தெளிவாக தனக்குள் புலன்களை பகுத்து வைத்திருந்தது. அருவருப்பு என்பதை நான் முற்றிலுமாக தொடுகை சார்ந்த ஒன்றாகக் கண்டேன். ஒருவேளை அந்த பகுப்பை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தவே நான் அத்தகைய அனுபவங்களை நோக்கிச் செல்கிறேன் என தோன்றும்.  தொடுகை அல்லாத எந்த புலனும் என்னை தீண்டியதில்லை. ஆனால் அந்த மானசீகமான பகுப்பு சற்று உடைந்தாலும் என்னால் தாங்கிக்கொள்ள முடிந்ததில்லை. இளமையில் ஒருமுறை ஒரு பொது கழிவறை தொட்டியில் கொட்டிக் கவிழ்க்கப்பட்ட சாம்பார் சாதத்தையும் பீன்ஸ் பொரியலையும் கண்டு குடலை உருவியது போல குமட்டல் எழுந்தது நினைவிருக்கிறது. 

காற்றில் இப்போது மலத்தின் வாசனை எழுந்தது. அந்த கழிவறைக்கு நான் முன்பு இதேபோல் ஊருக்கு செல்லும்போது பகலில் வந்தது உண்டு. அது ஒரு ஏரியின் கரையில் அமைந்திருந்தது. நகரத்தின் சகல கழிவுகளும் ஒழுகி வந்து சேர்வது அந்த ஏரியில் தான். குடலைப் பிறட்டும் நாற்றமடிக்கும் அந்த ஏரியின் மீது பகல் முழுக்க நூற்றுக்கணக்கான பருந்துகள் வட்டமிட்டபடி இருக்கும். ஏரியின் சதுப்பில் ஏராளமான பன்றிகள் நம்பமுடியாத அளவு பெரிய உடல்களுடன், கழிவு நீரில் தோய்ந்து கருமை ஊறி வழிய நடமாடிக்கொண்டிருக்கும். அந்த கழிவறை அப்போதே கைவிடப்பட்டது போலத்தான் இருந்தது. ஆனால் அன்று இரவில் அங்கு விளக்கு எரிந்தது. என் கால்கள் இயல்பாக அதை நோக்கி என்னை செலுத்திச்சென்றன. வந்துவிட்டேன். செம்மண் பாதையில் செல்லச் செல்ல, பாதையின் இருபுறமிருந்தும் சிறுநீர் வழிந்து சிறு சிறு குட்டைகளாக தேங்கி, மங்கிய மஞ்சள் விளக்கொளியை பிரதிபலித்தபடி கிடந்ததன. காற்று வீச வீச அழுகலின், மலத்தின், தேங்கிய சிறுநீரின் வாசம் வலுத்தது. பின் கழுத்தின் வியர்வை மெல்லிய காற்றில் கூசி மயிர்கள் சிலிர்க்க நான் அந்த கழிவறைக்குள் நுழைந்தேன். சட்டென்று நான்கு புறமும் சுவர்கள் என்னை சூழ்ந்து கொண்டன.  சாராய பாட்டில்கள் குவிந்து கிடந்த கழிவறைக்குள் செல்லும் அந்த குறுகிய பாதை ’ட’ வடிவில் வளைந்தது. என் கால்கள் மேலும் எச்சரிக்கை கொண்டன. உடலே பல மடங்கு விழிப்பு கொண்டிருந்தது. கழிவறையின் சிமண்டால் ஆன தரை வெடித்து பாளங்களாக உடைந்து இடையில் கொப்பளித்து எழுந்தது போல மண்ணும் கற்களுமாக கிடந்தது. ஏதோ நிலநடுக்கத்தின் நடுவே உறைந்து விட்டது போன்ற உணர்வு. ஏதோ ஒன்று அதை உடைத்து நொறுக்கி மண்ணுக்குள் இழுத்துக்கொண்டிருப்பது போல. உள்ளே சென்றதும் இடது புறம் மூத்திரம் அடிப்பதற்காக கட்டப்பட்டிருந்த சரிந்த டைல்ஸ் பதித்த சிமண்ட் திண்டில் பல ஆயிரமாயிரம் மூத்திரத்தின் உப்பு மேலே மேலே படிந்து இரண்டு விரல் கனத்திற்கு வெண்மஞ்சள் நிறத்தில் வரிவரியாக புடைப்புகள் ஓடின. புராதன குகைக்குள் நுழைந்தது போல, வெண் சுண்ணப்பாறை போல உறைந்திருந்த அந்த புடைப்புகள் தோற்றம் தந்தன. அங்கிருந்து வழிந்து சென்று திண்டின் சுவரோரத்தில் அடைத்துக்கொண்டு செம்மஞ்சள் நிற குளமாக நொதித்து நுரைத்தபடி தேங்கி நின்றது நூற்றுக்கணக்கானவர்களின் சிறுநீர். உலகத்தின் மீது தன் ஒட்டுமொத்த துவேஷத்தையும் வெளிக்காட்டியபடி அது ஊறித்தளும்பியது. அடக்க முடியாமல் தலையை குலுக்கிக் கொண்டு காறி உமிழ்ந்தேன். எச்சில் சளியுடன் கொழகொழத்து விழுந்தது. மூச்சு முட்டச்செய்யும் மூத்திரத்தின் அமில வாடை. தேங்கியிருந்த மூத்திரம் மெல்ல சொட்டு சொட்டாக வழிந்து தரையெங்கும் பரவியிருந்தது. பள்ளங்கள் எங்கும் அது ஓடிய தடங்கள் ஈரமாகவும் காய்ந்தும் கிடந்தன. சட்டென்று எதிரே கண்ட காட்சியில் என் இதயம் ஒரு கணம் நிலைத்தது.

சுவரோரம் குவிந்து கிடந்த நீண்ட மண் மேட்டின் மீது ஒருவன் கிடந்தான். அவன் உடலில் ஒட்டியிருந்த துணிகள் சருகைப்போல மண் படிந்து கிடந்ததால் அவனை முதலில் நான் கவனிக்கவில்லை. இறந்துவிட்டவன் போல அசைவில்லாது அவன் கிடந்தான். மங்கிய அந்த மஞ்சள் வெளிச்சத்தில் மிகுந்த சிரமத்துடன் உற்றுப்பார்த்த போதுதான் அவன் உறங்கிகொண்டிருப்பது தெரிந்தது. அவனது மார்பு ஆழ்ந்த துயிலில் சீராக மேலும் கீழும் ஏறியிறங்கி கொண்டிருந்தது. சுற்றிலும் பெருச்சாளிகள் குழித்த மாபெரும் வளைகள். அவன் கால்கள் ஒரு வளையின் வாய்க்கு அருகே நீண்டு கிடந்தது. அவனை நான் முன்பு கண்டிருக்கிறேன். அந்த பேருந்து நிலையத்தில் வாழும் ஒரு பைத்தியம் அவன். மிக இளம் வயது தான். தலையில் இருந்து எழும் சுருண்ட தலைமயிர் பாம்பு பத்தி விரித்தது போல திசையெங்கும் பிரிந்து நிற்கும், உடலில் வருடக்கணக்கிலான அழுக்கு படிந்து தோல் அங்கங்கே வெடிப்பு கண்டிருக்கும். அவனது கால் சராய் இடுப்பில் இறுக்கியிருந்த இடத்தில் நீண்ட புண் ஒன்று தோன்றி சீழ் வெடித்து வழியும். உடலில் எங்கும் ஈக்களும் பூச்சிகளும் மொய்க்கும், உடலிலும் உடைகளிலும் மலம் காய்ந்து உலர்ந்து ஒட்டிக்கிடக்கும். பெரும்பாலான நேரங்களில் தன் கரிய பெரும் ஆண்குறியை வெளியில் காட்டியபடி எங்காவது மூலையில் படுத்து கிடப்பான். அவனை கண்டு அதிர்பவர்களை, அஞ்சுபவர்களை கண்டு பற்களை காட்டி நகைப்பான். அவனை அடித்து விரட்டுவதற்காக பிரம்பு லத்தியால் தொடக்கூட காவலர்கள் அஞ்சினர். சில சமயம் கடை வியாபாரிகள் சிலர் ஏனென்று தெரியாமல் ஒரு கணத்தில் சட்டென்று அவன் மீது கொலைவெறி பொங்க பெரும் கற்களை எறிந்து விரட்டுவார்கள், அப்போது அவர்கள் உடலில் ஆதி விலங்கு ஒன்று குடியேறியது போலிருக்கும், பற்களை இறுகக்கடிக்க கண்கள் தீ போல் சிவந்திருக்கும், பூக்காரிகளும் கூடைக்காரிகளும் புகுந்து அவர்களை தடுப்பார்கள். சிரித்துக்கொண்டே அவன் எழுந்து சென்ற இடத்தில் சிந்திய கொழகொழப்பான ஈரத்தில் ஈக்கள் அழுகிய பழத்தை போல நூற்றுக்கணக்கில் மொய்க்கும். சில மாதங்களிலேயே இறந்து விடுவான் என்றுதான் எண்ணியிருந்தேன். அவனை கண்டு நெடுநாட்கள் ஆகியிருந்தது, வருடங்கள் இருக்கலாம். அவன் அமைதியாக மூச்சைத்தவிர எந்த அசைவுமில்லாமல் படுத்திருந்தான். நான் மூத்திரத்திற்காக கட்டப்பட்டிருந்த அந்த சிமண்ட் திண்டை நெறுங்க மனமில்லாமல் எதிர்புறம் வரிசையாக கட்டப்பட்டிருந்த மூன்று சிறு கழிப்பறைகள் நோக்கி சென்றேன். கால்களை தரையில் சிந்தி வழிந்திருந்த சிறுநீரில் பட்டுவிடாமல் மண் மேடுகளில் வைத்து முதல் கழிப்பறையின் துறுவேறியிருந்த தகரக் கதவை சுட்டுவிரலால் மெல்ல உந்தித்தள்ளி திறந்தேன். மலம். கழிப்பறை தொட்டிக்குள் குவிந்து கிடந்தது மலத்தின் மீது மலம். கரிய நிறத்தில் இருந்து தவிட்டு நிறம் வரை, மலத்தின் மீதே மேலும் மேலும் மேலுமென. எல்லாவ்வற்றின் மீது ஈரம் உலராத பொன் மஞ்சள் நிறத்தில். உடல் உலுக்கிக்கொண்டது. எப்படி இது சாத்தியம். தெய்வமே, எப்படி? பூமியில் உள்ள மொத்த மண்ணும் இதன் மீது சரிந்து விழுந்து மூடட்டும், மீட்க முடியாத இந்த நரகம். சட்டென்று கால்கள் எடுத்து வைத்து அடுத்த கழிப்பறைக்கு நகர்ந்தேன். அதன் கதவில் கொக்கி இடப்பட்டிருந்தது, திரும்பிப்பார்த்தேன். அவன் உறங்கிக்கொண்டிருந்தான். மெல்ல ஒலியெழாமல் அந்த கொக்கியை திறந்து உள்ளே நுழைந்தேன். அச்சிறு அறையின் சுவரெல்லாம் பெண் சித்திரங்கள், தலையில்லாமல் கோடுகளால் கரித்துண்டுகளில் அல்லது கற்களால் கீறி வரையப்பட்ட கோட்டு பிம்பங்கள். சுயமைதுனத்துக்காக வரைந்து அழிக்கப்பட்ட அவை கைவிடப்பட்ட சிறு தெய்வங்களை போல நின்றன. கழிப்பறை தொட்டியை கண்டபோதுதான் தான் கீழுடலை நடுக்கிக்கொண்டு மூத்திரம் முட்டியது. மூன்று மணிநேரமாக அடக்கி வைத்திருந்த அதை அதற்கு மேல் ஒரு கணம் கூட அடக்கிக்கொள்ள முடியாது என தோன்றியது. லிங்கத்தை வெளியே எடுக்கும்முன் கால்களை நடுங்க சில துளிகள் உள்ளே சிந்தியது. வெள்ளிக்கம்பியை போல சிறுநீர் ஒளிர்ந்த படி பாய்ந்தது. அத்தனைக்கும் நடுவில் மனம் ஒருகணம் விடுபட்டது. சற்றுநேரம் இதயம் சீராக தாளத்தில் வந்தமைந்தது போல. உடலின் ஒட்டுமொத்த கவனத்தையும் அங்கு செலுத்தியபடி அதை கூர்ந்தேன். சிறுநீர் கழிப்பறை தொட்டிக்குள் பட்டுத்தெறிக்கும் அந்த ஓசையை கேட்ட படி கண்கள் மூடி நின்றேன், சிறுநீரின் நடுக்கும் வேகம் சற்று குறைய மீண்டும் மூத்திரப்பைக்கு அழுத்தம் கொடுத்து பீய்ச்சினேன். காமத்தின் உச்சத்தைப்போல விதைப்பையின் கீழே கூசி அதிர்ந்தது. சீறி விழுந்த சிறுநீரால் எல்லாவற்றையும் கழுவிடலாம் என்பது போல அந்த தொட்டிக்குள் ஓட்டியிருந்த கரைகளின் மீது பீய்ச்சினேன், மெல்ல மெல்ல அனைத்தும் சுத்தமானது. உடல் லெகுவாகி சிறு உலுக்கலுடன் மீண்டது. புறங்கழுத்தின் வியர்வை குளிர்ந்து சில்லிட்டது. மெல்ல, மிக மெல்ல தன்னிலை பெற்று நான் வெளியே வந்தேன். அந்த கழிவறை இப்போது மிகச்சிறியதாக தோன்றியது. இன்னும் சில அடிகள் எடுத்து வைத்தால் வெளியே சென்றுவிடலாம். கால்களை கவனமாக சிறுநீர் ஊறிய சேற்று தடங்களில் படாமல் மேடுகளில் வைத்து நடந்தேன். சட்டென்று என் முதுகில் ஓர் உணர்வு, பார்வை ஒன்று அதன் மீது பட்டது போல சிலிர்த்து நான் திரும்பிய அக்கணம் விளக்கு அணைந்தது. அந்த அறை தன் அத்தனை ஆற்றலுடனும் எழுந்து வந்து என்னை விழுங்கிக்கொண்டது, ஒரு புலியின் உறுமலைப்போல அந்த கூரிருள் என்னை தாக்கியது, என் கால்கள் அசைய மறுத்து நிலைத்தன. கண்ட காட்சிகள் அனைத்தும் ஒரே கணத்தில் என் புலன்களில் மதகுகளை உடைத்துக்கொண்டு பாய்ந்த்தது. மலத்திலும் சிறுநீரிலும் உடல் விழுந்து தோய்ந்து சுவைப்பது போல. உடல் நடுங்க நான் அலறினேன். என் குரல் எங்கோ தொலைவில் எதிரொலித்தது. அந்த மூச்சை இப்போது மிக அருகில் உணர்ந்தேன். மீண்டும் அலறினேன். உடல் எங்கோ இருளுக்குள் புதைந்துகொண்டிருந்தது. அத்தனை நரகலும் சிறுநீரும் என் மீது அப்பிக்கொண்டது போல உடல் குளிர்ந்தது. ச்சீ, அருவருப்பு. பூமி இடிந்து என் மீது விழுந்து மூடட்டும், மானுடனின் அத்தனை மலத்தையும் அழுக்கையும் கொண்டு அடியாழங்களுக்கு சென்று மறைகிறேன். இனி ஒரு கணம் வாழ்ந்து பயனில்லை, ஆம் சாகிறேன். புதைந்து மறைகிறேன். என் உடல் இதை எரித்து அழிக்கட்டும், என் உடல் பற்றியெரியட்டும். மீண்டும் அவன் மூச்சு, என்னை தீண்டியது அது, மிக அருகில். என் உடல் தளர்ந்தது, கண்களில் கண்ணீர் பெருக நின்றேன். கால்கள் நகரவில்லை. அந்த மாபெரும் இருளின் முன் கைகூப்பி நின்றேன். என் உடலில் நெருப்பு என்னை பற்றியெரிந்து கொண்டிருந்தது. உடல் தகித்தது, பற்றியெரியும் இருள் நெருப்பு, எதுவும் தீண்டாத தூய சுடர், எத்தனை யுகங்கள். உடல் வியர்த்து சிலிர்க்க நான் அழுதேன், குரல் உடைய அழுதேன். மிக மெல்லிய ஒரு தொடுகை. என் உடல் விரைத்து மயிர்கூச்செரிந்தது. மீண்டும் வெளிச்சம். சட்டென்று அவன் திசை நோக்கி திரும்பினேன். அவன் அங்குதான் படுத்திருந்தான். சற்றும் அசைந்திருக்கவில்லை. சர்ப்பத்தின் பத்தியை போல விரிந்திருந்த கூந்தல் கற்றையுடன் ஒரு கையை தலையில் வைத்தபடி கால்கள் நீட்டி. முகத்தில் சற்றும் அசைவில்லை. ஆழ் துயிலில் மூடியிருந்த அவன் இமைகளுக்குள் ஒரு மெல்லிய புன்னகை விரிந்ததை கண்டேன்.    

 

 

5 Comments

  1. Near Death Experience – என்பது பெரும்பாலும் ஆன்மீக அனுபவத்திற்கு அணுக்கமாக வரக்கூடியவை. அவை பீபத்சவம்- (உயிர்வதை அருவருப்பு ) எனும் நிலையில் கூட நிகழலாம் என்று கூறுவதுண்டு. அஜிதன் மிக கச்சிதகமாக அந்த இடத்தை சொல்லிவிட்டார்.

  2. எப்படி அஜி இப்படியெல்லாம் எழுதமுடிகிறது ? கதையை எடுத்து விமர்சித்தால் அந்த அனுபவம் போய்விடுமெனப் பயப்படுகிறேன். ஒரு படைப்பை வாசித்தால் காதலை உணர்வோம், காமத்தை உய்ப்போம், கோபத்தில் பக்கத்தில் இருக்கும் மேசையில் குத்துவோம், அருகில் ஒருவர் அமர்ந்திருப்பதை மறந்து சிரிப்போம். இந்தக் கதையில் கிடைக்கும் உணர்வு அருவருப்பா, ஒவ்வாமையா? ஏதோ ஒன்றை உணர வைக்கிறதே ? ஆன்மிகம்தானோ? இன்னொருமுறை வாசித்து என்ன கிடைக்கிறது என்று பார்க்கட்டுமா ? இல்லை எல்லாம் முதல் வாசிப்பிலேயே அப்பிவிட்டதே! எல்லாம் கழுவி அலம்பியது போலும் ஆகிவிட்டதே! இனி என்ன வாசிக்க. அந்த முதல் அனுவத்தை அப்படியே சேமித்துக்கொள்கிறேன். நன்றி அஜி ! வாழ்க வளர்க!

  3. நன்றி அஜிதன்….. என் இத்தனை வயதுக்கு பிறகும் ஏற்றுக்கொண்டு கடக்கவே முடியாதது இந்த உணர்வு ‘அருவருப்பு’.
    இனி இந்த உணர்வு தீண்டும் போது முன்பைவிட தீவிரம் குறைந்திருக்கும் என்றே நம்ப விழைகிறேன்.
    நன்றி அஜி இந்த விடுதலை உணர்வை அளித்தமைக்கு.
    உங்களுக்கும் தன்யாவிற்கு என் அன்பும் ஆசிகளும்.

  4. Deeply affecting story. உங்கள் வார்த்தைகள் அந்த எடத்தை கண் முன் கொண்டு வந்தது. ஆனால் ஏனோ இந்த விவரிப்புகள் என்னுள் எந்த ஒரு அருவருப்பயும் ஏற்படுத்தவில்லை. இந்த கதை தரும் அகவய அனுபவத்தை சொல்வது மிகவும் கடினம். அதுதான் ஆன்மீகமோ?

  5. உணர்ச்சிகளின் உச்சத்தில் சொற்களற்றுப் போகும்….
    அதீத பயத்தின் உச்சத்தில் ஆன்மீக அனுபவம் …
    சிறப்பான சிறுகதை …வாழ்த்துகள் அஜிதன்!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *