நினைவோடையில் நீந்தும் மீன்கள் – 1

அப்பா மிசின் தறி நெய்த நெசவாளர். திருமணம் ஆனதும் முகவூர் தளவாய்புரத்திற்கு பிழைப்புத் தேடி இடம் பெயர்ந்தார். முதல் பெண்குழந்தை அம்மாவின் பிறந்த வீட்டில் இறந்து பிறந்தது. இரண்டாவதாக நான். தளவாய்புரத்தில், வீட்டில் சுகப்பிரசவம். அப்பாவின் மூத்த சகோதரியை அங்குதான் கட்டிக்கொடுத்திருந்தது. அப்பாவின் அத்தான் சிவகிரி வைத்தியர் குடும்பத்தைச் சேர்ந்தவர். மாமாவிற்கு சித்த வைத்தியம் போக தறிநெசவும். மூன்று வயது வரை தளவாய்புரத்தில் வளர்ந்தேன். நாடார்கள் நிறைந்த தெருவில் அப்பா வாடகைக்கு இருந்தார். பெரிய திண்ணைகளும் உருண்டு திரண்ட கற்றுாண்களும் கொண்ட மட்டப்பா வீடு.

அப்பா சின்னப் பத்தில் தேறியிருந்தார். நெடுநெடுவென்ற வளர்த்தி, அகன்ற தாடைகள், ஏற்நெற்றி, பென்சில் மீசை, பாதிக்கன்னம் வரை நீண்ட பட்டைக்கிருதா, கருகருவென சுருண்ட ரோமம், கன்னங்கள் ஒட்டி எண்பதுகளின் இளைஞர்களுக்குரிய உடல்மொழி. ஆட்டுக்காது காலர் வைத்த சட்டை அணிந்து டை கட்டி நண்பர்கள் இருவரோடு இருக்கும் கருப்பு வெள்ளை புகைப்படம் ஒன்றே அப்பாவின் நினைவாக இன்று இருப்பது. அம்மா இறந்த முப்பதாவது நாள் சாமி கும்பிட பெற்றோரின் படம் தேவைப்பட்டது. அப்பா அம்மா இருவரையும் சேர்த்து வைத்து வணங்கலாம் என்று உறவினர்கள் சொன்னார்கள். அப்போதுதான் நான் அப்பாவின் புகைப்படத்தைக் குறித்து யோசித்தேன்.

அப்பா சம்பந்தப்பட்ட ஒன்றுமே எங்கள் வீட்டில் இல்லை. இராயகிரியில் இருந்தவரை அப்பாவின் பொருட்களாக ஒரு அலுமினிய கையடக்கப்பெட்டியும் அதில் ஒரு டைரியும் சில வார இதழ்களும் இருந்தன. அப்பா பயன்படுத்தியவை. அவற்றின் ஊடே குற்றாலத்தில் அம்மாவும் அப்பாவும் மெயின் அருவிக்கு அருகே நின்று எடுத்துக்கொண்ட கருப்பு வெள்ளைப் புகைப்படம் ஒன்றும். அந்த புகைப்படத்தில் நான் மூன்று வயதுக்குழந்தை. கையில் முட்டைக்கோசினை ஏந்திக்கொண்டு, அப்பாவின் இடதுகையில் அமர்ந்து, போட்டோவை வெறிக்கிறேன். அம்மாவின் முகம் நடிகை சரிதாவினுடையதைப்போல இருந்தது.

புளியங்குடிக்கு இடம் மாறிய பின்னர் அப்பா தொடர்பான எந்த ஒரு பொருளும் வீட்டில் இருக்கவில்லை. அம்மா, அப்பா மீதான கோபத்தில் அனைத்தையும் கைவிட்டு வந்திருந்தாள். அவை அவளுக்கு தாளாத தொந்தரவினைத் தந்திருக்க வேண்டும். பிறந்தகம் வந்த பின்னர் தாத்தா பாட்டி ஜென்ம விரோதிகளாக கருதப்பட்டனர். அத்தைமார்களும் மதினிமார்களும் நிரந்தரமாக விலகிச்சென்றார்கள். இராயகிரி பெயர்ப்பலகை தாங்கிய டவுண் பஸ்சைப் பார்க்க நேரிடும் போதெல்லாம் எனக்கு கண் இமைகள் துடிக்கும். அழுகையும் கிளம்பும்.

 மூத்த மயினியின் வீட்டில் அப்பாவின் படம் இருப்பதாகக் கேள்விப்பட்டு, தேடிச்சென்று வாங்கி வந்தேன். தாய்மாமனைப் பற்றி பேசும்போதெல்லாம் மயினியின் கண்கள் கலங்கும். என்னைப் பார்க்கும் ஒவ்வொருமுறையும் அழுதுவிடுவார்கள். அப்பாவின் இளவயது முகம் என்னில் எழுந்து வருவதாகச் சொல்வார். தாய்மாமனின் தோளில் சவாரி செய்து தளவாய்புரத்தின் வீதிகளில் அலைந்த அனுபவங்கள் அவருக்கு உண்டு. தாய்மாமன் தெய்வமாகிப் போனார். அவரின் நினைவாகவே தன் மகளுக்கும் தமிழ்ச்செல்வி என்று பெயர் வைத்திருக்கிறார். என் தங்கையின் பெயர் அது. அப்பா விரும்பி இட்டது. அந்த போட்டாவில் இருந்த அப்பாவிற்கு முப்பதையொட்டிய வயது. குறும்புத் துடுக்குத்தனமும் தளும்பும் கண்கள். ஐம்பத்தெட்டு வயது அம்மாவோடுச் சேர்த்து போட்டோவை தயார் செய்தேன். அம்மையும் மகனும்போல இருந்தார்கள்.

எனக்குப் பெயரிடும் அதிகாரத்தை அப்பா இழந்திருந்தார். அம்மாவழிப் பெற்றோரின் ஆதிக்கம் என் பெயரைத் தேர்வு செய்வதில் முன் நின்றது. அப்பா தீவிர பெரியாரியர். அப்பாவின் டைரிக்குறிப்புகளில் பெரியாரின் பொன்மொழிகளை அப்பாவின் கையெழுத்தில் வாசித்திருக்கிறேன். பார்ப்பான் பாம்பு என்று செல்லும் புகழ்பெற்ற பொன்மொழி அந்தச் சின்ன வயதில் வாசித்தது, இன்றும் அழியாத வடுவாக நினைவில் தங்கிப்போய்விட்டது. சங்கரன்கோவில் சாமியின் நினைவாகவும், பனையூர் ஒடுக்கத்தின் நினைவாகவும் எனக்குப் பெயரிட்டார்கள். இரண்டாவது பெண்குழந்தைக்கு பெயரிடும் உரிமையை அப்பா விட்டுக்கொடுக்கவில்லை. திராவிட இயக்கத்தின் அந்நாளைய வழக்கப்படி பெயரிட்டார்.

செவி வழியாக அப்பாவைப் பற்றிகேள்விப்பட்டச் செய்திகளே என்னிடம் இருப்பவை. அவரின் முகமோ தொடுகைகளோ ஒன்றுமே ஓர்மையில் இல்லை. அங்கே இருந்த வரை அப்பாவைப் பற்றியத் தகவல்கள் காதில் விழுந்து கொண்டே இருந்தன. விரும்பி இருந்தால் அவரைப் பற்றிக் கூடுதல் தகவல்களைச் சேகரித்து இருக்கலாம். அந்த சிறிய வயதிலேயே அப்பாமீது ஏற்பட்ட வெறுப்பு காரணமாக அவர் சார்ந்த எந்த ஒரு தகவலையும் நான் பொருட்படுத்தியதில்லை. திதி , திவசம் போன்ற நீத்தார் சடங்குகளைப் பேணவும் இல்லை. என்னை ஒரு கணம் நினைத்துப் பார்த்திருந்தால் அந்த முடிவினை அப்பா எடுத்திருக்க மாட்டார்.

ஒரு குடும்பச் சண்டை காரணமாக அப்பா அரளி விதைகளை அரைத்துக்குடித்து தற்கொலை செய்துகொண்டார். எல்லாக் குடும்பங்களிலும் இருப்பதைப் போன்ற மாமியார் மருமகள் சண்டை. காரணம் மிக எளிது. அப்பாவின் வீட்டில் அன்று மாடுகள் இருந்தன. வடக்குப் பார்த்த குடிசை வீடு. பனையோலை வேய்ந்தது. வாசலில் மாட்டுத் தொழு. அதற்கு அடுத்து பெரிய திண்ணை. அதுவும் பனையோலையால் கூரையிடப்பட்டது. காலையில் எழுந்தால் நேராக மாட்டுச்சாணியில்தான் கண்முழிக்க வேண்டும். கொசுக்கள் மொய்க்கும். எலிகளைத் தேடி வரும் பாம்புகள் கூரையில் தொங்குவது அடிக்கொரு தரம் நிகழும். அம்மா நகரத்தில் வளர்ந்தவள். படித்தவள். பெரிய குடும்பத்துப் பெண் என்ற குடிப்பெருமையும். தொழுவும் சாணமும் நிறைந்த சூழல் அவளுக்கு அருவருப்பை உண்டு பண்ணிற்று. எனவே தனிக்குடித்தனமாக வேறு வீட்டிற்குப் போகவேண்டும் என்று விரும்பினாள். பாட்டிக்கு மகனை வெளியே அனுப்ப விருப்பமில்லை. இரண்டு ஆண்டுகளாக மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே அவ்வப்போது பொங்கி வழிந்த பூசல்.

எனக்கு அப்போது நான்கு அல்லது ஐந்து வயதிருக்கலாம். ஊர் ஓய்ந்த நேரம். மாடசாமிக் கோவில் தோப்பில் இருந்து அரளி விதைகளைப் பறித்து வந்தார் அப்பா. வீட்டுத் திண்ணையில் கிடந்த அம்மியில் மசியாக அரைத்தார். என்னை கையில் ஏந்தியபடி அஞ்சடிச்சான் முக்கிற்கு வந்து, பெட்டிக்கடையில் கடலைமிட்டாய் பாக்கெட் ஒன்று வாங்கித் திரும்பினார். அன்று அவர் முகம் கன்னங்கள் உள்ளொடுங்க, கடுமையில் உறைந்து இறுகியிருந்தது. பகலில்தான் அம்மாவிற்கும் பாட்டிக்குமான பிரசித்தி பெற்ற குருசேத்திரப் போர் நடந்து முடிந்து, ஊரெல்லாம் அது குறித்த ஆவலாதி. சண்டையின் உச்சமாக பாட்டியின் முலைகளை அம்மா கடித்துவிட்டார் என்ற பொரணி பெட்ரோல் தீ போன்று தெருவெங்கும் பரவிற்று. உண்மையில் நடந்தது வேறு என்று அம்மா என்னிடம் சொல்லியிருக்கிறார். அம்மா திட்டமிட்டு அப்படிச் செய்யவில்லை. எதிர்பாராமல் நடந்துவிட்ட விபத்து அது. வாய்ச் சண்டை வலுத்து, அம்மாவின் தலைமுடியைப் பற்றி இழுத்து, பாட்டி உதைக்க முயன்றார். அம்மா தடுக்கப் பார்த்திருக்கிறார். ஆவேசத்தில் அம்மாவை இடதுகையால் நெஞ்சோடு அணைத்திருக்கிறார் பாட்டி. அந்த வேகத்தில் அம்மாவின் முன்பற்கள் பாட்டியின் மார்பில் பதிந்து விட்டன. பாட்டிக்கு ஜாக்கெட் அணியும் பழக்கம் இல்லை. பல்பதிந்து இரத்தம் கட்டியது. பாட்டி வீடு வீடாகச் சென்று காட்டி அழுதாள். அப்பா அதை எதிர்கொள்ளும் திராணியற்று சுருங்கிப்போனார். பெரிய மானக்கேடாக அச்சம்பவம் அவர் மனதைக் காயப்படுத்திற்று.

அப்பா தொட்டாற்சிணுங்கி உள்ளம் கொண்டவர். சுடு சொல் சொல்லாதவர். பழிச் சொல்லுக்கு அஞ்சக் கூடியவர். கூடவே முன் கோபியும். அவரின் முன்கோபத்திற்கு உதாரணமாக அம்மா ஒரு சம்பவத்தைச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

பத்தாவது தேறியதை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதற்காக அப்பா கொக்கிரகுளத்திற்கு சென்றிருக்கிறார். கடுமையான வெய்யில். காலையில் ஒன்றும் சாப்பிட்டுருக்கவில்லை. அதிகாலை மூன்றுமணிக்கு வரும் முதல் பஸ்சான கணபதியில் ஏறிவிட்டார். நீண்ட வரிசையில் நின்று வேலைவாய்ப்பு பதிவு அட்டையை வாங்கி, தெரிந்த தகவல்களை நிரப்பிக் கையில் வைத்துக்கொண்டு காத்திருக்கிறார். அட்டையை வாங்கி சரிபார்த்த அலுவலர், அதில் சில தவறுகளைச் சுட்டிக்காட்டி “இதைக்கூட ஒழுங்கா எழுத முடியாதா? நீயெல்லாம் என்னத்தை படிச்சிக்கிழிச்ச” என்று ஏசியிருக்கிறார். அங்கிருந்த கூட்டத்தில் அது மெல்லிய சிரிப்பலையை உண்டு பண்ணியிருக்கிறது. அப்பா காயம்பட்டார். எதிர்வினை செய்தே ஆகவேண்டிய நெருக்கடி. கையில்வைத்திருந்த கல்விச்சான்றுகளை அந்த அலுவலர் முன்பே நான்காக கிழித்தார். அவரின் முகத்தில் விட்டெறிந்துவிட்டு விருவிருவென்று நடந்து வந்தார். ஜங்சனில் வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு ஊருக்குப் பஸ் ஏறினார். அன்றோடு அவரின் வேலை வாய்ப்புக்கான சாத்தியங்கள் இல்லாமல் ஆனது. தறி நெய்யக் கற்றுக்கொண்டது அதன்பின்னர்தான்.

அப்பாவை எளிதாக காப்பாற்றி இருக்கலாம் என்றார்கள். அப்பா அரளி விதை துவையலை அண்ணாந்து உள்ளே போட்டுவிட்டு, கடலை மிட்டாயை வாயில் திணித்திருக்கிறார். கண்களில் இருந்து கண்ணீர் பீறிட்டிக்கொண்டு வந்திருக்கிறது. அப்பா இருந்த கோலத்தைக் கண்டதும் பாட்டிக்குத் தெரிந்துவிட்டது. அழுது கூப்பாடு போட்டாள். டாக்டருக்கு ஆள் அனுப்பினார்கள். சித்த மருத்துவர்தான் உள்ளுரில் இருந்திருக்கிறார். முதல் உதவி சிகிச்சை அளிக்கும்போது உள்ளே செலுத்திய குழாய்க் குத்தி குடல் கிழிந்தது. குருதியாக வாந்தியெடுத்தார் அப்பா. அந்த மருத்துவருக்கு இதைப்போன்று பலகேஸ்களை காப்பாற்றிய முன் அனுபவம் உண்டு. கைராசியானவர். வாய் கூசாமல் கடவுளை பழித்துப் பேசியதே காரணம், சாமி காப்பாத்தவில்லை, கைவிட்டுவிட்டார் என்றார்கள். தெருக்கோவிலில் இருந்த ஆண் பெண் தெய்வங்கள் குறித்து அப்பா வக்கிரமாக பேசியிருந்த பாலியல் சொற்கள் அன்று சுட்டிக்காட்டப்பட்டன. கடவுள் இல்லை என்று துாற்றித்திரிந்ததே அப்பாவின் இறப்பிற்கு அடிப்படை என்று பேசிக்கொண்டார்கள்.

அப்பாவின் இறுதிச்சடங்கில் கட்சியின் தோழர்கள் கலந்து கொண்டார்கள். தோழருக்காக வசூலான ஆயிரம் ரூபாயை என் தங்கையின் பெயரில் ராஜபாளையம் மாவட்ட கூட்டுறவு வங்கியில் நிரந்தர வைப்பு செய்தார்கள். அவளின் பதினெட்டில் வயதில் முதிர்ந்த பின்னர் எடுத்துக்கொள்ளும் விதத்தில்.அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியாதவனாக இருந்தேன். அப்பா வேலைக்காக வெளியூர் சென்றிருக்கிறார். விடுமுறை கிடைத்ததும் ஊர் திரும்புவார். என்றாவது ஒருநாள் அதிகாலையில் அவரை தீனிப்பையோடு வீட்டில் பார்க்கலாம் என்று நம்பிக்கொண்டிருந்தேன். அப்படி நம்புவது எனக்கு ஆறுதலாக இருந்தது. எனக்கான மீட்சியாக இருந்தது.

தீராத நோயைப் போன்றதே அப்பா இல்லாமல் போவதும். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து விடும் கையறுநிலைக்கு சமமானது. வாய்ப்பு வசதிகள் இருந்தால் ஒருவேளை அந்நோயின் தீவிரத்தாக்குதலில் இருந்து ஒருவர் தப்பித்துக் கொள்ளலாம். “கூல் பானை ஒடைஞ்சா குருட்டு நாய்க்கெல்லாம் கொண்டாட்டம்” என்று அம்மா அடிக்கடி எச்சரிப்பதுண்டு. நாசிகள் புடைக்க, பிள்ளைக்கறி ருசி தேடி அலைந்தவைகளில் திடகாத்திரமும், கூரான கோரைப்பற்களும் கொண்டிருந்த நாய்களும் இருந்தன. இன்றாவது போக்சோ சட்டம் இருக்கிறது.

ஐந்தாண்டுகளுக்கு முன்னர் அம்மா இறந்த துஷ்டி கேட்க பாபநாசம் வந்தார் சின்ன மாமா. அப்பாவின் இளைய சகோதரியின் கணவர். அம்மா டிசம்பர் மாதத்தின் ஒரு அதிகாலையில் இறந்திருந்தார். வந்தவர் அன்றும் குடித்திருந்தார். இறதி யாத்திரைக்கான முன்னேற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. ப்ரீசர் பெட்டிக்குள் அம்மா கால் நீட்டி படுத்திருந்தாள். தள்ளாடியபடியே நடந்து வந்த மாமா என் கைகளைப் பிடித்து குலுங்கி அழுதார். பிலாக்கணம், ஒன்றுடன் ஒன்று ஒட்டாத வார்த்தைக் குவியலாக வழிந்தது. ”மருமகனே..உங்க அப்பன் சாவுக்கு நான்தான் காரணம்..மருமகனே” என்று சொல்லி, தோளோடு அணைத்து தேம்பினார். அதுவரை அப்பா மீது எனக்கிருந்த நம்பிக்கைகளை மாமாவின் அந்த ஒப்புதல் வாக்குமூலம் உடைத்து எறிந்தது. ஒருவிதத்தில் தலைகீழாக்கம்.

முப்பத்தைந்து ஆண்டுகளாக நான் புறக்கணித்திருந்த அப்பாவை மீண்டும் தேடி எடுக்க முயன்று வருகிறேன். தன் அக்காவின் மீது தீராத பாசம் கொண்டிருந்த தம்பி அவர். அக்காளின் வாழ்க்கைக்கு ஒரு கேடு வருவதைத் தடுத்து நிறுத்த தன்னால் இயன்ற முயற்சியை செய்து பார்த்திருக்கிறார். உயிரை விட்டால் ஒருவேளை அந்த திருமண முயற்சியை அத்தான் கைவிட நேரிடலாம் என்று முடிவு செய்திருக்கிறார். அவர் எடுத்திருந்த அந்த முடிவினை மேலும் வலுப்படுத்தும் ஒரு கூடுதல் காரணியாக மாமியார் மருமகள் சண்டையும் அமைந்தது.

எனக்கும் நீண்ட நாட்களாக குழந்தைகள் இல்லை. அப்பாவைப் போன்றே முதல் மகள் இறந்து பிறந்தாள். சினைப்பையில் நீர்க்கட்டி என்றார்கள் மருத்துவர்கள். லேப்ராஸ் கோப்பியும் செய்து பார்த்தாயிற்று. அலோபதி, சித்தா என்று ஆண்டு முழுவதும் மாத்திரைகள். மருந்து மாத்திரைகளோடு பத்தாண்டுகள் கழிந்தது. மெல்ல மெல்ல மருத்துவத்தில் நம்பிக்கை இழந்தேன். சோசியம், மாந்ரீகம் உதவக்கூடும் என்றார்கள். “நோய்க்கும் பாரு, பேய்க்கும் பாரு” என்றும் ஆலோசனை.  குழந்தை வரம் தரும் தெய்வங்களின் பட்டியலை பரிந்துரை செய்தார்கள். பகவதி அம்மன் சாமி கொண்டாடியை உறவினர் ஒருவர் அறிமுகம் செய்து வைத்தார். அரையில் செங்காவி வேட்டி உடுத்திய, கண்களில் விநோதமான ஒளிர்வினைக் கொண்டிருந்தார் சோதிடர். அருகில் நின்றாலே சுகந்தம்.

“நிம்மதியில்லாத ஆத்மாதான் குழந்தைப் பிறப்பை தடுத்து நிறுத்துது. முன்னோர் சாபம். கண் திருஷ்டி. ஒரு மண்டலம் மந்திரித்த தகடை வீட்டில்வைத்து சாமி கும்பிடுங்கள், அப்பாவுக்கு  தர்ப்பணம் கொடுங்கள், சரியாகி விடும்” என்றார் சோதிடர்.

அடுத்த மாதம் பிரக்னென்சி டெஸ்ட் கார்டில் இரண்டு கோடுகள் ஒளிர்ந்தன. நெஞ்சளவு நீரில் நின்றபடி, ”காசி காசி” என்று சொல்லி மாப்பிண்டத்தைக் கரைத்து, மூழ்கி எழுந்த போது “இதென்ன பைத்தியக்காரத்தனம்” என்றே தோன்றிற்று.

நுாற்றியெட்டு நெய்த்தீபங்கள், அமாவாசைத் தர்ப்பணம், தேவியின் காலடியில் வைத்து மந்திரிக்கப்பட்ட செம்புத் தகடு என்பவை அப்பாவைச் சென்று சேர்ந்திருக்குமோ?

(மீனின் பயணம் தொடரும்)

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *