நிகழ்தல் –அனுபவக் குறிப்புகள்.12.கொட்டம் சுக்காதி

 

சில நாட்களாக நெருக்கமான பலருக்கும் சிறு விபத்துகள். நாஞ்சில் நாடன் பத்துநாட்களுக்கு முன்னால் அறிவன் என்ற நண்பருடன் பைக்கில் கோவையில் சாலையில் செல்லும்போது எந்திரம் அணைந்து விட்டது. அறிவன் காலைத்துாக்க, இவரும் காலைத் துாக்கியிருக்கிறார். வண்டி ஒரு பக்கமாகச் சாய்ந்து விழுந்து தோளில் மெல்லிய அடியும் சற்றே சிராய்ப்பும். இப்போது அனேகமாகச் சரியாகி விட்டார்.

அ.கா.பெருமாள் நான்கு நாட்களுக்கு முன் மழைநாளில் தன் பஜாஜ் ஸ்கூட்டரில் வழக்கமான வேகமான, மணிக்கு பத்து கி.மீ.இல் வந்து கொண்டிருக்கும்போது ஒரு குழியில் விழுந்து முட்டில் அடி. வலி ஓரளவு இன்னும் இருக்கிறது.

நாஞ்சில்நாடனுக்கு ஏற்கனவே அதே தோளில் ஊமைவலியும் கடுப்பும் வந்திருக்கிறது. ஊட்டியில் நான் நடத்திய ஒரு கூட்டத்துக்கு வந்தவர் குளிரில் உற்சாகமாக சட்டை போடாமல் அலைந்து அடுத்த நாளே கைவலி தொடங்கி ஒருமாதம் கையைத் துாக்க முடியாமல் அவதிப்பட்டுத் தேறினார். அப்போது நான் அவருக்கு “கொட்டம் சுக்காதி” என்ற பேருள்ள ஆயுர்வேத  எண்ணையைப் பரிந்துரை செய்தேன். கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலைகளில் இது கிடைக்கும். இப்போது நாஞ்சிலிடம் எப்போதுமே அந்த எண்ணை இருக்கும். அ.கா.பெருமாளும் கொட்டம்சுக்காதியைப் பயன்படுத்தி வருகிறார்.

இந்த எண்ணையை நான் அனுபவபூர்வமாக உணர்ந்தது எட்டு வருடங்களுக்கு முன்னர் அருண்மொழிக்குக் குதிகால் வலி வந்த நாட்களில். கடுமையான வலியால் அவளால் காலைத்துாக்கி வைக்கவே முடியாது. பேருந்து நிலையத்திலிருந்து வீட்டுக்கு வரும் அரைக்கிலோ மீட்டர் துாரத்தைத் தாண்ட அரைமணி நேரம் ஆகும்.வலியால் நடமாட்டம் குறைய, அதனாலேயே எடை கூட, அதனால் மீண்டும் வலி அதிகரிக்க என ஒரு தொடர் செயல் அது.

முதலில் டாக்டர்கள் வலிநிவாரணிகளாக எழுதித் தந்து கொண்டிருந்தார்கள். அதைத்தின்று வாயில் புண் வந்ததும் நிபுணர்களிடம் காட்டினேன். அக்குவேறு ஆணிவேறாக ஆயிரம் சோதனைகள் செய்தபின் குருத்தெலும்பு வளர்ச்சி என்று சொல்லி அதை அறுவை சிகிச்சை செய்து அகற்றலாம் என்றார்கள். அதெல்லாம் வெறும் வணிகம் என்றார் வேதசகாய குமார். உண்மையான ஒரு டாக்டரிடம் காட்டுங்கள் என்றார். அவர் சொல்ல,சுசீந்திரம் அருகே தன் பூர்வீக கிராமத்திலேயே மருத்துவமனை வைத்திருக்கும் டாக்டர். மனோகரனிடம் சென்றோம்.

மனோகரன் தெளிவாகச் சொன்னார். இந்த வலிக்கான காரணங்களைச் சொல்ல முடியாது. எடை காரணமாக இருக்கலாம். ஆனால் இவள் எடை அதிகமானவளல்ல. காலின் குதிகால் எலும்பு முனையில் ஒரு நீட்சி காணப்படுவதை வைத்து அதனால்தான் வலி என்பார்கள் சில டாக்டர்கள். அதை நீக்கினாலும் சில நாட்களிலேயே வலி மீண்டும் வரும். பயிற்சிகள் மூலம் காலைப்பழக்குவது மட்டுமே ஒரே வழி. ரத்த ஓட்டத்தை அதிகரிக்க குளிர்நீரிலும் வெப்ப நீரிலும் கால்களை மாறி மாறி வைக்கும் பயிற்சியைச் செய்யலாம். அதனால் காலப்போக்கில் நிவாரணம் இருக்கும். மற்றபடி அலோபதி ஒன்றும் செய்யும் நிலையில் இல்லை.

அப்போதுதான் வேதசகாயகுமார் கொட்டம்சுக்காதி தைலத்தைப் பற்றிச் சொன்னார். அவரது அப்பா முத்தையா நாடார் சிறந்த சித்த மருத்துவராக இருந்தவர். அவரது குடும்பமே இன்று மருத்துவக் குடும்பம்- ஆனால் அனைவருமே அலோபதி. வேதசகாயகுமார் மட்டும்தான் சித்த வைத்தியத்தில் சற்றே ஈடுபாடு கொண்டவர். அவர் ஒரு அரை வைத்தியர். ஆரிய வைத்தியசாலைக்குச் சென்று கொட்டம் சுக்காதி தைலம் வாங்கி வந்தேன்.

ஒவ்வொருநாளும் நானே அருண்மொழிக்கு சிகிழ்ச்சை செய்ய ஆரம்பித்தேன். முதலில் கொட்டம்சுக்காதி போட்டு நீவுதல். பின்பு வெப்ப-குளிர் நீர் சிகிழ்ச்சை அரைமணிநேரம்.பின்பு அரைமணி நேரம் மீண்டும் கொட்டம் சுக்காதி போட்டு நீவுதல். இரண்டு மாத்தில் முழுமையாகவே வலி நீங்கியது. இன்றுவரை மீண்டும் வரவும் இல்லை.

கொட்டம் சுக்கு ஆகிய இரண்டையும் அடிப்படையாகக் கொண்ட இந்தத் தைலம் எண்ணையில் வறுத்த சுக்குபோல ஒரு வாசனை கொண்டது. பச்சை நிறம். கொழுகொழுப்புள்ளது. அந்த மருந்து நாகர்கோயிலில் பல கடைகளில் கிடைக்கிறது. ஆரிய வைத்திய சாலை, தலைச்சேரி சித்தாஸ்ரமம் ஆகியவற்றின் தயாரிப்புகள் விரைவான திட்டவட்டமான பயனை அளிக்கும்போது பல உள்ளுர்த் தயாரிப்புகள் எந்தவிதமான பயனையும் அளிப்பதில்லை. எண்ணையில் தழைமணம் அல்லது பாசியின் மணம் இருந்தால் அது வீண்.

கொட்டம்சுக்காதியை நான் என் உடன் பணியாற்றும் பதினைந்து பெண்களுக்காவது பரிந்துரை செய்திருப்பேன். சென்னை திருச்சி மதுரை எனப் பல நண்பர்களுக்குச் சொல்லி என்னையே அவர்கள் ஒரு அபூர்வ மருத்துவன் என்று நம்பச் செய்தேன். அவர்கள் அனைவருக்குமே அது பயன் அளித்தது என்றாரகள். நம் சமூகத்தில் பெண்களின் குதிகால் வலி ஒரு பெரிய சிக்கலாக உருவாகியிருக்கிறது. குறிப்பாக முப்பத்தைந்துக்கு மேல் வயதான பெண்களுக்கு. முக்கியமான காரணம் இப்போது வீடுகளில் தரையில் போடும் மார்பிள் கிரானைட் மற்றும் உயர் ரக ஓடுகள்தான் என்று தோன்றுகிறது. அவை எப்போதுமே குளிராக இருக்கின்றன. மழைக் காலத்தில் இன்னும் குளிராகின்றன. மருத்துவர்களும் வீட்டுக்குள் செருப்பு போடும்படி சொல்கிறாரக்ள்.

கொட்டம் சுக்காதி பற்றிச் சொல்லும்போது இன்னொரு தைலத்தையும் சொல்லியாக வேண்டும். காயத்திருமேனி. ஆயூர்வேத எண்ணையாகிய இதைப்போல உடல் உளைச்சல்,தலைவலி, துாக்கமின்மை போன்றவற்றுக்குப் பயன்படும் மருந்துகள் மிகமிகக் குறைவு. கடந்த பல தலைமுறைகளாக குமரி மாவட்டத்தில் இம்மருந்துகள் இல்லாத வீடே இருக்காது. ஆனால் இப்போது வணிக முறையில் தயாரிக்கப்படும் புட்டிகளில் உள்ள தைலங்களில் அந்தப் பயன் இருப்பதில்லை.

ஆயூர்வேதம் நம்மால் இன்னமும் புரிந்துகொள்ளப்படாத ஆழம் கொண்ட ஒரு மருத்துவமுறை என்றே நினைக்கிறேன். ஒருபக்கம் அது பெரிய அளவில் வணிக உற்பத்தியாகச் செய்யப்பட்டு பரப்பப்படுகிறது. ஆரியவைத்தியசாலை போன்ற சில நிறுவனங்கள் மட்டுமே தரத்தைப் பேணுகின்றன. மற்றபடி அவை பெரும்பாலும் எவ்விதமான உறுதிப்பாடும் இல்லாதவையாக உள்ளன. தொலைக்காட்சிகளில் பத்திரிகைகளில் எந்தவித நம்பகத்தன்மையும் அளிக்க முடியாத “கிராக்பாட்” ஆசாமிகள் குங்குமப்பொட்டு விபூதி போட்டு அமர்ந்து உலகுக்கே மருத்துவம் சொல்கிறார்கள்.

புதிய ஆய்வுகள் இல்லாமலும் மரபின் தொடர்ச்சி அறுபட்டுப்போவதனாலும் ஆயுர்வேதத்தின் சாத்தியங்கள் குறைந்தபடியே செல்கின்றன. நான் சிறுவனாக இருக்கும்போது குமரி மாவட்டத்தில் எல்லா ஊர்களிலும் ஆயூர்வேத வைத்தியசாலைகள் உண்டு. இப்போது அவை அனேகமாக இல்லாமல் ஆகிவிட்டன. குமரி மாவட்டத்தில் நாடார்கள் ஆயூர்வேதத்தில் முக்கியமான அறிஞர்களாக இருந்திருக்கிறார்கள். வர்ம மருத்துவம் அவர்களுக்கே உரிய கலையாக இருந்தது. அவர்களில் அடுத்த தலைமுறைக்கு அந்த ஞானம் கையளிக்கப்பட்டது மிகமிகக் குறைவே.

நான் சிறுவனாக இருக்கையில் ஒருமுறை பாறை ஒன்றில் இருந்து தவறி விழுந்துவிட்டேன். கூரிய கருங்கல் என் முழங்கால் எலும்பிலேயே குத்தி ஆழமாகப் பதிந்துவிட்டது. அதை எடுக்க முடியவில்லை. உடலை உலுக்கும் கடும் வலி. அலறிக்கொண்டே இருந்தேன். அப்படியே துாக்கி கம்பவுண்டர் ராசப்பன் கடைக்குக் கொண்டு வந்தார்கள். அவரால் அதை எடுக்க முடியவில்லை. நான் கதறிக் கூச்சலிட்டு அவரைத் தடுத்தேன்.

அப்போதுதான் ஆசான் வந்தார். ஆசான் எங்களுரின் வர்ம மருத்துவர். கைசுட்டி அவரால் ஒருவரைக் கொல்ல முடியும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். எங்களுக்கு அவர் ஒரு விளையாட்டுத் தோழர். எந்த வகையான தன்னுணர்வும் இல்லாத ஆசான் மன அளிவல் பத்து வயதுப் பையன் போன்றவர். எங்களுடன் கிளித்தட்டும்,தள்ளும்புள்ளும் விளையாடுவார். பாலியல்கதைக் களஞ்சியம். சாயங்காலமானால் “மாம்பட்டை வெள்ளம்” மோந்திவிட்டு சுடலைமாட உபாசகனாகிவிடுவார். அப்போது அவர் ஒரு கரடி.

ஆசான் என் குதிகாலில் ஒரு குறிப்பிட்ட புள்ளியை இரு விரலால் அழுத்தினார். என் வலி அப்படியே மறைந்தது. “பிடிச்சு உருவணும் பிள்ளே” என்றார் ஆசான். கம்பவுண்டர் கல்லைப் பிய்த்து எடுப்பதை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு சிறுகிருகிருப்பு மட்டுமே எனக்கு இருந்தது. தண்ணீர்விட்டு காயத்தை உரசிக் கழுவும்போது குதிரைவால்முடி செலுத்திய ஊசி வைத்து குத்தித் தையலிட்ட போதும் எனக்கு வலியே இல்லை. கட்டுப்போட்டு முடித்ததும் ஆசான் பிடியை விட்டார். மெல்ல மெல்ல வலி ஆரம்பித்தது.

வீடு வந்து சேர்ந்தபோது மீண்டும் வலி. ஆசான் என்னைப் படுக்க வைத்து என் நெற்றியில் மெல்ல அழுத்திக்கொண்டிருந்தார். அவரது அழுத்தங்கள் இதமாக இருந்தன. சில கணங்களில் நான் துாங்கிவிட்டேன். மறுநாள் வலி இல்லை. ஒரு மாத்தில் காயம் ஆறியது. அந்த வடு இன்றும் உள்ளது. ஆசானுக்குப்பின் அவரது மகன்கள் அந்தக்கலையைக் கற்றுக்கொள்ளவில்லை. அவருக்கு சீடர்களும் இல்லை.

இப்போது என் கால்வலியின் போது ஆசானை நினைத்துக்கொண்டேன். குதிகாலில் மீண்டும் மீண்டும் அழுத்திப் பார்த்துக் கொண்டே இருந்தேன். ஏதோ ஒரு கணத்தில் வலி ஒரு முறை ஸ்தம்பித்தது போல் உணர்ந்தேன். பிரமையாகக் கூட இருக்கலாம். ஆனால் அந்தப்புள்ளி அங்கேதான் இருக்கிறது.

மண்ணில்,விண்ணில்,மனித உடலில் உள்ள பலநுாறு ரகசியங்களை அறிந்த மூதாதையரின் ஒரு யுகமே முழுமையாக அழிந்து வருகிறது என்று எண்ணிக்கொண்டேன். எஞ்சுவதையாவது அமெரிக்கா திருடிக்கொண்டால் அவை அழியாமல் இருக்கும். நாம் பத்துமடங்கு விலை கொடுத்தாவது நல்ல காலம் பிறக்கும்போது வாங்கிக் கொள்ளலாம்.

அக்டோபர் 18,2008

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *