ஜெயமோகனின் பத்து  கவிதைகள்

மா. அரங்கநாதன் ஆசிரியராகக் கொண்டு முன்றில் வெளிவந்தது. முன்றில் சிற்றிதழ்களின் முழுத்தொகுப்பினை காவ்யா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. முன்றில் இதழ்கள் 1988 முதல் 1996 வரை 9 ஆண்டுகள் 19 இதழ்கள் வெளிவந்தன. அவற்றில் ஏறக்குறைய 108 கவிதைகளும் 21 மொழிபெயர்ப்புக் கவிதைகளும், 32 சிறுகதைகளும், 74 விமர்சனக் கட்டுரைகளும், 3 பேட்டிகளும், 12 தலையங்கங்களும், 13 சிறு செய்திகளும் இடம்பெற்றுள்ளன என தொகுப்பாசிரியர் தெரிவிக்கிறார். 108 கவிதைகளில் ஜெயமோகன் எழுதிய 10 கவிதைகளும் இருந்தன. அவை இங்கே தொகுக்கப்பட்டு மீள் பிரசுரம் செய்யப்படுகின்றன. மேதையின் சொற்கள் எவை என்றாலும் அவை வாசிக்கப்படவேண்டியவை.

1. விடுபட்டது

 

என்னென்ன வாங்கிச் சேர்த்தால்

ஒரு வீடு செய்யமுடியும்

இங்கென வீட்டில்

அடுப்பிருக்கிறது

அரிசியும் பாத்திரங்களும் நீரும்

நெருப்பும்

தினம் சமையலும்

அந்தி தோறும் விளக்கேற்றுகிறேன்

காலையில் ரேடியோ பூபாளம்

சுவர் முழுக்க லாண்டரிக் குறிப்புகள்

தரையில் குப்பையும் ஓய்ந்த துடைப்பமும்

கொல்லைப்புற ஈரம்

எல்லாம் உண்டு

எனினும்

என்னென்ன வாங்கிச் சேர்த்தால்

ஒரு வீடு செய்ய முடியும்.

2.காட்டில்

 

புதையுண்ட பறவையின் இறகு போல

இரு இலை மேலெழும் சுடலைத் தென்னை

ஒரு ஞாபகம்

இலையுதிர் வடு தாங்கி வளரும்

வானொளி துழாவி தவம்  செய்யும்

துயில்கலைந்த நள்ளிரவில்

காதுக்குள் சிறகடிக்கும்

விடிகாலை மோனத்தில்

குளிர்சொட்டி சிலிர்க்க வைக்கும்

சிறுகாற்றின் இலையசைவில்

பறவைகளால் வான் கலைக்கும்

காய்களுக்குள் கண்ணீர் தேக்கும்

ஒரு ஞாபகம்

காடாகி இம்மசானம் நிறையலாம்

மரக்கூட்டங்களில் உன் மரந்தேடி அலையலாம்

தடமின்றி சரிந்தழிந்த

முதிர் மரங்கள் எருவான

கரு மண்ணில் பின் உதிரலாம்

உடலழியலாம்.

மீண்டுமொரு முளைமரம்

இன்னொரு ஞாபகம்

(முன்றில் இதழ் 2)

3.சருகு

 

அகன்ற மொசைக் வழவழப்பில்

சருகு

தவழ் காற்றில் ர்ர்ரிட்டு

நாற்காலி காலில் தங்கும்

செல்காற்று திரும்ப

மீண்டும் பழைய இடம்

குறும்புக்காற்றோடு கைகோர்த்து

வட்டமிட்டு

கிளுகிளுத்து

இறங்கும்

வெட்கிச் சுவரோரம் ஒண்டும்

ஜன்னல்திரை துாக்கி வரும்

முரட்டுக் காற்றில்

எம்பி மிதந்து

அலைக்கழிந்து

முட்டி மோதி

தரையிறங்கி

இழுபட்டு

சோர்ந்து

நடைபாதை கம்பளத்தில் ஒண்டும்

இதோ ஒரு பாத ஜோடி

தப்பிவிட்டது

இதோ அந்த செருப்பிற்கும் தப்பிவிட்டது

இதோ

இல்லை

ஏதும் நேரவில்லை

இதுவரை.

4.மழையீரம்

 

மழை ஓய்ந்த மவுனத்தில்

ஊரெல்லாம் குளிர்ந்திருக்கும்

உள்ளுக்குள் தீயெரியும்

உள்ளுக்குள் தீயெரிய

ஊர்சுற்றப் போனவன் நான்

ஊர் சுற்றப் போகையிலே

உள்ளத்தீ மறந்து போனேன்

கண்ணீரும் கம்பலையுமாய்

ஓய்ந்துபோய் செண்பகமரம்

உதிர்ந்து சுற்றும் நீலக்கண்கள்

நீலக்கண்கள் பொறுக்கி வந்து

என்வீட்டில் பதித்து வைப்பேன்

விழியில்லா என் வீட்டில்

சுவரெல்லாம் என்னைப் பார்க்கும்

மழைத்துளியை ஏந்தி நிற்கும்

செம்பருத்தி புன்னகைக்கும்

புன்னகைப்பூ பறித்துவந்து

என் வீட்டில் பரப்பி வைப்பேன்

உதடில்லா என் வீட்டில்

தரையெல்லாம் புன்னகைக்கும்

மாமரத்து மேட்டின்மேல்

மழைபோட்ட புள்ளிக்கோலம்

புள்ளிக்கோலம் பெயர்த்துவந்து

என்வீட்டில் பதித்துவைப்பேன்

விரலில்லா என் வீட்டில்

மங்கலமம் நிறைந்திருக்கும்

நிர்மாலிய பூஜைக்காய்

தேவி களைந்த மலர்ச்சரங்கள்

கூரைவிட்டு நனைந்திறங்கி

குவிந்திருக்கும் கோவில் முற்றம்

மழைபட்டு மணம் திரும்பி

மலர்சருகும் பூவாகும்

மலர்சருகு வாரி வந்து

என் வீட்டில் சேர்த்துவைப்பேன்

கூந்தலில்லா என் வீட்டில்

கூடமெல்லாம் பூமணக்கும்.

குளித்தீரக் கூந்தல் கோதி

கூவிப்போகும் மழைக்குருவி

மழைக்குருவி கூட்டிவந்து

என் வீட்டில் குடிவைப்பேன்

வாயில்லா என்வீட்டில்

காலையெல்லாம் பூபாளம்

ஒளிபட்டு முகம்கூசும்

வானத்துக் கருப்பழகி

கரிய பெண்ணை கூட்டிவந்து

என் வீட்டில் கூட்டி வைப்பேன்

தோளில்லா என் வீட்டில்

இருளெல்லாம் அணைப்பாகும்.

வெயிலடித்தால் காயாமல்

மழைபெய்தால் நனையாமல்

வீடொன்று எனக்கிருக்க

வீதியிலே அலைகின்றேன்

உடம்பெல்லாம் மழையீரம்

மழையீரம் கொண்டுவந்து

என் வீட்டில் நிறைத்து வைப்பேன்

தளிரில்லா என் வீட்டில்

விதையெல்லாம் முளையாகும்.

(முன்றில் இதழ் 4)

5.பிறகு

 

செத்துப்போன பாணனின்

மனைவி

திண்ணையில் துாக்கிப்போட்ட கடம்

கூசி வாய் திறந்து

குந்தியிருக்கிறது

வாய்விளிம்பில் அமர முயன்று

சிறகடித்துத் தவிக்கும் காகம்

திசைவெளியிலிருந்து

வந்ததாக இருக்கலாம்.

நீர்க்குடமாக மாறும் முன்

உடைத்து விட.

6.பறவை

 

இரவுதோறும் வந்து

என் கண்ணாடிச் சன்னலை மோதி

சிறகடிப்பது என்ன பறவை?

மழை பொழிகிறது மவுனமாய்

ஜிகினா உதிர்வது போல

இலைத்தகடுகள் பளபளத்து அசைகின்றன

கண்ணாடிச் சன்னலில் வழிகின்றன

தெருவிளக்குகள்

காத்திருந்து கண்கள் துவளும்

காலம் நிரம்பி மனம் கனக்கும்

ஏதேதோ உருட்டி விளையாடி

சலித்த மூளை புதைந்துறங்கும்

காலையொளிப் புகைப்பரப்பில்

ஈர வேம்பில் வந்தமர்ந்து

புகை விலக வெறுமை தந்து

ஏங்க வைப்பது என்ன பறவை?

நள்ளிரவில் மவுனத்தில்

துயில்களையும் பதற்றத்தில்

காதருகே பின்பு அறைக்கு வெளியே

சிறகோசை சடசடக்க

நகம் உரசி கண்ணாடி ஒலிக்க

பாய்ந்தெழுந்து விளக்கிட்டு

ஜன்னல் திறந்தால்

மதகுடைத்த காற்று வெள்ளம்

மரங்களின் வெறியாட்டம்

சருகுப் படலத்தின் ஊடே

சருகெனப் பறப்பது என்ன பறவை?

கனவுருக் காட்சியென

கண்கள் சிவந்து தெறிக்க

கூர்நகங்கள் பிதுங்கிவர

அலகு பிளந்தசைய

கண்ணாடிச் சட்டத்திற்குள்

உயிர்கொண்ட ஓவியமாய்

அலைமோதும் பறவை எது?

ஏதோ முன் நினைவில்

நெகிழ்ந்து கண்கள் பனிக்க

பார்த்திருந்த வெண்ணிலவை

மறைத்துப் பறந்த பறவை எது?

மழை தேக்கிய ஸ்படிகத் தட்டில்

என்வீடு அமர்ந்திருக்க

தோட்டத்து மரங்களெல்லாம்

நீராடும் சர்ப்பமென

நெளிந்துள்ளே வளைந்தாட

அறைச்சுவரின் பரப்பெங்கும்

ஒளியலைகள் ததும்பிநிற்க

குளிர்கொண்ட வீட்டுப்பூனை

வால்நீட்டி அழுதலைய

நீர் ஒலிக்கும் கார்காலம்

ஜலத்தட்டில் சுழல் உதிர

கிளையிலைகள் உலுக்கி எழுந்து

திண்ணைமேல் வந்தமர்ந்து

அபசகுண குரல்காட்டி

ஓடிவந்து பார்க்கையிலே

முக்கோண மூன்றுவிரல்

ஒற்றைக்கால் தடம்விட்டு

சென்றதுஎன்ன பறவை?

ஜன்னல்கள் அறைபட்டுடைய

கொடித்துணிகள் பதைபதைக்க

சுவரெல்லாம் பூசம் பூத்து

தலையெல்லாம் ஜில்லிட்ட

என்தனிமை அறைக்குள்ளே

மூடமறந்த கதவை மோதி

காற்றுபோல் உட்புகுந்து

மின்விளக்கை உடைத்தெறிந்து

சிறகடிப்பில் குளிர் சிதற

பறக்குமொலி விசுவிசுக்க

சுவர் தோறும் முட்டிமோதி

இருளெங்கும் நிறைந்தது

என்ன பறவை?

அதிகாலை மழைக்குப் பின்

ஜலச்சருமம் சிலிர்த்தலுங்க

கரை முட்டி கிளுகிளுத்து

களைப்படைந்த நதியோட

மறுகரையில் ஆம்பல்போல்

தனித்த கொக்கு தவம் செய்ய

ஈரக்கூந்தல் நுனியுசுப்பி

புன்னைமரம் பூச்சொரிய

வாளேந்தி தாழைமரச்

சேனைகள் திசைசூழ

கரைமுட்டி பிரவாகம் போல்

மோனம் ததும்பியோடும்

விரிமணற் கரையின்மேல்

நானறியா எழுத்தேதோ

கீறிவிட்டுப் போயிருந்த

பறவை என்ன பறவை?

7.மாயை

 

நரம்புக் கம்பி வலையில்

மையம் கொண்ட தொலைபேசி

கவர்ந்திழுக்கும் கரிய மினுங்கல்

துடிக்கும் அதன் விஷக்கொடுக்கு

கிணற்றுநீர் பிம்பம் போல

அலைகிறது உன்முகம் என்னுள்

விரல் நுனியில் நடுங்கும்

அலைமணற் கடலின் தாபம்

உலோகச் சுழல்களில்

மின்னலையாய் அதிர்வேன்

வானமெங்கும் விசிறப்படுவேன்

மூதாதையர் நட்சத்திரக் கண்கள் பார்க்க

பால்வழியில் அலைவேன்

இடிபடும் மவுனிக்கும்

இருளும் ஒளிரும்

சூனிய வெளிகளில்

உள் பெயர் சொல்லித் தவிப்பேன்

உன் கனவுகளுக்குள் புகுந்து ஒலிப்பேன்

ஒரு வார்த்தைகூட பேசாமல்

நான் என நீயும்

நீ என நானும்

அறியும் அக்கணம்

ஒரே ஒரு கணம்

உலர்ந்தழியும் பிரபஞ்சம்.

8.துளி

 

நீர்த்துளி வழிவதெங்கே

சன்னல் கண்ணாடிக்கு

அப்புறமா

இப்புறமா?

வான வெளியுரசிக்

கசிந்த துளியா?

குளிரா

என் அறைமூச்சு

வேர்த்த ஜலமா?

மன வெம்மையின் ஒளியா?

வழிவதென்ன மவுனமாய்

என் வானத்து மேகங்கள் நெளிய?

என் அறையெங்கும்

நிழல்கள் விரிய?

வானைப் பார்க்கும்

கண்ணாடியின் கண்ணா?

வானமென் அறை பார்க்க

வைத்த லென்ஸா?

9.பயணம்

 

ஏறிக்கொண்டேன்

உன் குரலில்

ஒரு நினைவில்

லயம்

பழுத்துதிரும்

யுகம் ஓய்ந்து

எங்கிறங்குவேன்?

காலம்

கண்காணா நதி

பூமி

வெறும் கூழாங்கல்

10.கூட்டுப்புழுவிற்கு

 

தெரியுமா

இளவெயில் இப்போது

காற்றுடன் மரங்களின்

ரகசிய உரையாடல் இப்போது

ஒளிர்ந்து சொட்டுகிறது

கூரை விளிம்பு இப்போது

உன்மீது கவிந்த இலைகூட

வெள்ளித் தகடுதான் இப்போது

ஓய்ந்த மழையின்

உக்கிரத்தை அறிவாயா?

சேற்று வெளியெங்கும் பதிந்த

ஓராயிரம் இறகுகள்

வண்ணக் காகித கிழிசல்கள் போல

அறிவாயா

மழைக்குமுன் அவை பறந்தலைந்த காற்றை

கனவு கண்ட வானை?

நன்றிகள்- ஜெயமோகன், முன்றில் சிற்றிதழ். காவ்யா சண்முக சுந்தரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *