வெண்முரசு – (சொல்வளர்காடு, கிராதம், மாமலரை முன் வைத்து)

வெண்முரசு நாவல் வரிசையில் பாண்டவர் மூவரின் பெரும் பயணங்களைச் சொல்லும் நாவல்கள் சொல்வளர்காடு, கிராதம், மாமலர்.  சொல்வளர்காடு தருமனின் பயணத்தையும், கிராதம் அர்ஜுனனின் பயணத்தையும், மாமலர் பீமனின் பயணத்தையும் கூறுகின்றன.  இப்பயணங்கள் அவர்களது இயல்புக்கு இயைந்தவை (அறம், வீரம், காதல்).  அவர்களுக்குரிய மெய்யறிதல்களை அவர்களுக்கு வழங்குபவை.  தருமன் தத்துவப் பள்ளிகளினூடாகத் தன் பயணத்தை மேற்கொள்கிறான்.  அர்ஜுனன் இளைய யாதவருடன் அவனுக்கு ஏற்படும் கசப்பான நிகழ்வு ஒன்றின் தொடர்ச்சியாக அவருக்கு இணையானவனாக ஆக வேண்டும் என்பதன் பொருட்டு பாசுபதம் என்னும் பேராற்றல் போர்க்கருவியை பெறும் பொருட்டு பயணம் மேற்கொள்கிறான்.  உண்மையில் அது பாசுபதம் என்னும் ஒரு உச்ச மெய்மையை அறியும் பயணமே.

அறத்தோன் என்று குறிப்பிடப்படும் தருமன் அறத்தின் பொருட்டு குழப்பத்திற்கு ஆட்படுபவனாகவும் இருக்கிறான்.  நூலாய்வோனாகவே எப்போதும் இருக்கும் அவன் இந்நிலத்தின் தொன்மையான வெவ்வேறு தத்துவப் பள்ளிகளின் ஊடாகப் பயணித்து தன் கல்வியை விரிவும் ஆழமும் கொண்டதாக ஆக்கிக் கொள்கிறான். பன்னிரு படைக்களத்தின் தொடர்ச்சியாக சொல்வளர்காடு வருகிறது.  திரௌபதியின் அவைச் சிறுமை, அதற்குத் தான் காரணமென்னும் குற்றவுணர்ச்சி, திரௌபதி அவனிடம் காட்டும் கோபமும் விலக்கமும்.  இவற்றின் பின் தொடர்ச்சியாக அவனது பயணங்கள் அமைகின்றன.  இப்பயணங்களின் விளைவாக கிடைக்கும் அறிதலால் தன்னை அவன் நிலைப்படுத்திக் கொள்கிறான்

சொல்வளர்காட்டில் இரண்டு விஷயங்களைக் குறிப்பிட வேண்டும்.  ஒன்று – பாண்டவர் மீதும் இளைய யாதவர் மீதும் கோபத்தில் இருக்கும் திரௌபதியிடம் இளைய யாதவர் பேசுவது.  தன்னை எளிய பெண் போல முன் வைத்து பாண்டவரையும் இளைய யாதவரையும் குற்றம் சாட்டும் அவளிடம் அவள் அரசி என்று நடந்துகொண்டதை, தன் ஆணவத்தால் பிற அரசர்களது ஆணவத்திற்கு அவள் விடுத்த அறைகூவலை சுட்டிக் காட்டுகிறார்.  அதன் பிறகே அவள் அமைதி அடைகிறாள்.

இரண்டு – வெண்முரசு நாவல்களில் வேறு எங்கும் இல்லாத வகையில் வரும் இளைய யாதவரின் நொய்மையான இடம், ஒரு மனிதனாக அவர் அஞ்சிய, தோற்கவிருந்த தருணங்களை தருமனிடம் பகிர்ந்துகொள்கிறார்.  சாந்திபனி குருநிலைக்கு அவர் வரும்போது அது நிகழ்கிறது.

முன்பு சாந்திபனி குரு நிலையில் நிகழ்ந்த ஒரு நிகழ்வின் வாயிலாக இளைய யாதவர் தன் குரு பேசும் மெய்யறிவை அவர் தன் மகன் மீது கொண்ட பற்றினை சுட்டிக்காட்டி கேள்விக்கு உட்படுத்த குரு அந்த குருநிலையை விட்டு நீங்குகிறார்.  அவ்வாறு சுட்டும் இளைய யாதவன் உண்மையில் தனிப்பட்ட பற்றுகள் எதுவும் இல்லாதவனா? அவன் தன் குடியினர் மீது பற்றுக்கொண்டவன்.  அந்த பற்றை கடக்கும் வாய்ப்பை அவனுக்கு ஊழ் வழங்குகிறது.  அதன்பின் அதுவரையில் இல்லாத வேறொருவனாக அவன் ஆகிறான்.  அவனே, அந்த மாற்றம் பெற்ற இளைய யாதவனே மெய்யாசிரியன்.  இளைய யாதவர் தருமனிடம் பகிர்வது தருமனுக்கு ஒருவகையில் ஆற்றுப்படுத்தல் போலவும் திசை தேர்ந்து கொள்ள உதவுதாகவும் அமைகிறது எனலாம்.

பன்னிரு படைக்களத்தில் ஊழ் தன் ஆடலை நிகழ்த்திய அதே காலத்தில் தான் இளைய யாதவர் தன் குடியினரால் சிக்கலை எதிர்கொள்கிறார்.  அதன் தொடர்ச்சியாக அவர் மேற்கொள்ளும் பயணங்கள் அதனால் பெற்ற அறிதல்களும் மெய்மையும் விரிவாக தனித்துக் கூறப்படவில்லை எனினும் தொடர்ந்த, அர்ஜுனனின் பயணத்தைக் கூறும் கிராதம் அவ்வாறான பயணம் அவருக்கு இருந்தது என்பதை தெரிவிக்கிறது.

கிராதத்தில் அர்ஜுனன் அருக நெறியின், யமனின், குபேரனின், இந்திரனின் மெய்யறிதல்களைக் அறிந்து கடந்து இறுதியாக உச்ச மெய்மையான பாசுபதத்தை அறிகிறான்.  அவ்வழிகளில் முன்பே பயணித்து கடந்து வந்தவர் இளைய யாதவர்.  அப்பயணத்தின் மூலம் அவன் பெறும் அறிதல் இளைய யாதவருடன் அவன் என்றும் முரணற்று இயைந்து கொள்ளவும், தானும் தன் வாழ்வும் அவரின்று பிரிக்க முடியாத அங்கம் என அறிந்துகொள்ளவும் பயன்படுகின்றன.  உண்மையில் அர்ஜுனனின் கிராத பயணம் அவன் தன் ஆசிரியரான இளைய யாதவரை அறியும் பயணமே.  தன்னை அறிவதன் வாயிலாக அவரையும் அவரை அறிவதன் வாயிலாக தன்னையும் அறிகிறான்.

இந்திரனின் மகனான அவன் இளைய யாதவனுடன் கொள்ளும் பெரும் காதல் முன்பு இரணியனின் மகனான பிரகலாதன் அவன் எதிரியாகக் கருதும் திருமாலின் மீது கொண்ட பக்தியுடன் ஒப்பிடத்தக்கது.  பிரகலாதன் கதையும் கிராதத்தில் கூறப்படுகிறது.

எல்லாவற்றையும் கடந்து செல்லும் இயல்பு கொண்ட அர்ஜுனனுக்கு கடக்கப்பட முடியாதவன் இளைய யாதவன் ஒருவனே.  பிரகலாதன் ஒருவகை ராதை ஒருவகை என்றால் அர்ஜுனன் ராதையாகவும் பிரகலாதனாகவும் அவர்கள் அறிந்திராத விண்ணோனின் பிற வடிவங்களை அறிந்தவனாகவும் ஆகிறான் அர்ஜுனன்.  இளைய யாதவனுக்கும் அர்ஜுனன் போன்ற பிறிதொருவன் என்றும் கிடைக்கப் போவதில்லை.  அவனது அனைத்துவித ஆடல்களையும் அறிந்த முதலும் கடைசியுமான ஒரே ஒருவன், தோழன், மாணவன், காதலன் அர்ஜுனன்.

தன்னையும் தன் தலைவனையும் அறியும் பயணமாக அர்ஜுனனின் பயணம் அமைகிறது என்றால் மாமலரின் பீமனின் பயணம் தனிமையில் திரௌபதி அறியும் இன்மணம் கொண்ட தெய்வீக மலரை, சௌகந்திகத்தைத் தேடி அதை அவளுக்காக கொண்டுவரும் பொருட்டு செல்லும் பயணமாக அமைகிறது.  திரௌபதியின் மீதான அவனது பெரும் காதலின் பொருட்டு நிகழ்கிறது.  பாண்டவரில் திரௌபதியின் பெரும் காதலன் பீமன் மட்டுமே.  பிற நால்வருக்கும் அல்ல.  அவனது திரௌபதியின் மீதான காதல் எவ்வித நிபந்தனைகளும் அற்றது.  ஏராளமான பெண்களால் விரும்பப்படும் அர்ஜுனனின் உண்மையில் எந்த பெண்ணையும் காதலிப்பவன் அல்ல.

பெரும் பொழுதுகளை காட்டில் கழிப்பவனும் ஒரு வன விலங்கென – குறிப்பாக குரங்குகளில் ஒருவன் என்பதாக சுட்டப்படும் பீமனுக்கு தருமனைப் போன்று அய்யங்களோ தத்துவக் குழப்பங்களோ எப்போதும் இல்லை.  அர்ஜுனனின் எதையும் கடந்து சென்று கொண்டே இருக்கும் இயல்பும் இல்லை.  அவன் மண்ணின் வாழ்க்கையுடன் இயைந்தவன்.  இப்போது, இங்கே, இம்மண்ணில், ஒரு உடலாக, எவ்வித சிக்கலுக்கும் உள்ளாகாத, அதிக யோசனைகள் அற்ற மனம் கொண்ட ஒருவன்.  பெண்ணை மண்ணுடன் ஒப்பிடும் வழக்கைக் கொண்டு பார்த்தால் பீமன் பெருங்காதலனாக இருப்பது பொருத்தமானதே.  திரௌபதிக்கு மட்டுமல்ல இடும்பிக்கும் அவன் பெருங்காதலனே.

திரௌபதியின் பொருட்டு வெகுண்டு ஜெயத்ரதனை கடுமையாக தண்டிக்கும் பீமன் தன் உடன்பிறந்தார் அதை மிகவும் மோசமானது என்று கருதுவதை பொருட்படுத்துவதில்லை.  மிகவும் மோசமான நிலையில் சிதைந்து இருக்கும் ஜெயத்ரதனைக் கண்டு திரௌபதியே அவன் மீது பரிவு கொள்கிறாள்.  அக்கணத்தில் ஒரு தாயாகவே நடந்து கொள்கிறாள்.  எனினும் பீமனின் தன் மீதான பெரும் பற்றை ஜெயத்ரதனை அவன் கொடூரமாகத் தண்டித்ததை அவள் உள்ளூர விரும்பவும் செய்கிறாள்.  போர்களில் வன விலங்கினைப் போன்று நடந்துகொள்ளும் தன்மையுடைய பீமனையே அவளது அவ்விருப்பம் அச்சம் கொள்ளச் செய்கிறது.  அதை அவன் தன்னுடன் பயணிக்கும் முண்டனுடன் பகிர்ந்து கொள்கிறான்.

பீமனின் மாமலர் தேடிச் செல்லும் பயணத்தில் அவனுக்கு துணைவனாக இணைந்து கொள்கிறான் முண்டன் எனும் அனுமன்.  அவன் உடன் செல்பவன் என்றாலும் மற்றொருவகையில் அவனை அழைத்து செல்வதே முண்டன் தான்.  இப்பயணத்தில் முண்டன் பீமனின் தோழன், ஆசிரியன்.  முண்டன் இப்பயணத்தின் வாயிலாக மூதன்னையர் ஊர்வசி, அசோக சுந்தரி, தேவயானி, சர்மிஷ்டை ஆகியோரின் கதைகளை அவனுக்குச் சொல்கிறான்.  அவனது முன்னோர்களான புரூரவஸ், நகுஷன், யயாதி ஆகியோரின் வாழ்க்கையை அவர்களாகவே வாழ்ந்து பார்க்கும் அனுபவத்தை அவனுக்கு அளிக்கிறான்.  

அந்த மூதன்னையர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அம்சத்தில் திரௌபதியை ஒத்தவர்கள் எனலாம்.  போலவே, புரூரவசும், நகுஷனும், யயாதியும் தம் இயல்புகளில் சில வகைகளில் பாண்டவ உடன் பிறந்தாரை ஒத்தவர்கள்.  அவ்வகையில் பீமன் தன் முன்னோர்களை அறிவதுடன் அதன் வாயிலாக திரௌபதியையும் தன்னையும் தன் உடன் பிறந்தாரையும் குறித்து ஆழ்ந்த புரிதல் கொள்கிறான் எனக் கொள்ள முடியும்.

பேரழகின் மீது மையல் கொண்டு புலன் இன்பங்களில், பெருங்காதலில் திளைத்திருத்தல், ஆசிரியர்-மாணவர் உறவு, தந்தை-மகன் உறவு, பீஷ்மரைப் போலவே யயாதிக்காக அவரது மகன் புரூ முன்பு மேற்கொண்டிருந்த தியாகம் என மீள மீள நிகழும் நிகழ்வுகளை அவனது முன்னோர்களின் வாழ்விலிருந்தே பீமனின் அறிதலுக்கு கொண்டுவருகிறான் முண்டன்.  வாசனை என்ற மணத்தைக் குறிக்கும் சொல்லைக் கொண்டு, அதன் தத்துவப் பொருளைக் கொண்டு பார்த்தால் முண்டன் இவற்றை, இச்சுழற்சியைக் கடந்து செல்லும் மெய்மையின் வாய்ப்பை பீமனுக்கு வழங்குகிறான்.

சொல்வளர்காட்டில் தருமனும் கிராதத்தில் அர்ஜுனனும் தம் கடும் முயற்சியுடன் மேற்கொண்ட பயணத்துடன் ஒப்பிட பீமனின் பயணம் இனிமையானது.  அத்துடன் அவர்கள் போல் அல்லாமல் பெருமுயற்சி இன்றியே முண்டன் எனும் அனுமனால் மெய்மை அவனுக்கு அருளப்பட இருக்கிறது.  முயற்சி இன்றியே கிடைக்கும் அரியதொன்றான அதை அவன் மறுத்து திரௌபதியின் காதலன் என்ற அளவிலேயே நின்று கொள்கிறான் பீமன்.  அதற்கு அவன் முண்டனிடம் கூறும் காரணம் உன் தலைவன் வேறு என் தலைவன் வேறு என்பது.  அனுமனின் தலைவனையும் அவனுக்கும் அனுமனுக்கும் உள்ள உறவை நாம் அறிவோம்.  இளைய யாதவன் என்னும் கண்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் உள்ள உறவையும் அறிவோம்.  பீமனுக்கும் இளைய யாதவனுக்கும் உள்ள உறவு அத்தகையது என்று கூறமுடியாது எனினும் பீமனின் தலைவன் இளைய யாதவனே.  உன் தலைவன் காட்டிய பாதையில் நீ சென்றாய்…எங்கள் தலைவன் காட்டும் பாதையில் நாங்கள் செல்கிறோம் என்ற பொருளில்.

ராமாயணத்தில் இடம் பெறும் அனுமனை மாமலரில் முண்டனாக வரும் அனுமனுடன் ஒப்பு நோக்குகிறேன்.  எழுத்தாளர் அஜிதன் சமீபத்தில் எழுதிய ”நமது தெய்வம்” என்ற குமரித்துறைவி நாவல் குறித்த கட்டுரை இங்கு நினைவுக்கு வருகிறது.

”சிலை வடிக்கும் சிற்பி எவ்வளவு வினையாற்றுபவனாக இருக்கிறானோ அதேயளவு சிற்பத்தின் கோரிக்கைக்கு வினைப்படுபவனாகவும் இருக்கிறான். கடவுள் மனிதனால் மாற்றப்படுவதில்லை என கூறுபவர்கள் இங்கு பல சமயம் கடவுளின் குரலாக ஒலிக்கும் அடிப்படைவாத போலிக்குரலாளர்களாகவே இருக்கிறார்கள்” (நமது தெய்வம் – அஜிதனின் கட்டுரையில் இருந்து)

ராம பக்தனும் பிரம்மச்சாரியுமான அனுமன் ராமாயணத்திற்கு வெளியே வந்து மாமலரின் முண்டனாக பயணம் மேற்கொள்கிறான்.  இங்கும் அவன் ராம பக்தனும் நல்லொழுக்கம் கொண்டவனும் என்பது மறுப்பதற்கில்லை.  ஆனால் பகடி செய்பவனாக, பாலுறவு சார்ந்த நகைச்சுவை பேசுவனாக, அதே சமயம் பீமனுக்கு அருளி வழி காட்ட விழைபவனாகவும் இருக்கிறான்.

தருமனும், அர்ஜுனனும் போலவே பீமனுக்குத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளும் பயணமாக அமைகிறது மாமலர்.  அறத்தின் பொருட்டு, இளைய யாதவன் வழியில், திரௌபதியின் பொருட்டு என தங்களை பன்னிரு படைக்களம் அளித்த குலைவிலிருந்து மீண்டு நிறுத்திக் கொள்ள இந்த அறிதல் பயணங்கள் உதவுகின்றன.  பின்னர் வரவிருக்கும் பெரும் போருக்கு முன் அவர்கள் அவ்வாறு அமைந்தாக வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *