காலை எல்லைநல்லை சத்திரத்தின் அருகே இருந்த ஓடையில் குளித்தான் கைம்மா. பின் சத்திரத்தில் காலை உணவை அருந்தி விட்டு பன்றி மலை நோக்கிச் சென்றான். அவன் சத்திரத்தின் தலைவரிடம் தன்னை ஒரு வரலாற்று ஆய்வாளன் என்றே கூறி இருந்தான். பன்றி மலையின் அருகே இருந்த குறுங்காட்டைக் கடந்து குகையைத் தேடிச் சென்றான். குகை மலையின் மேற்குச் சரிவில் இருந்தது. அவன் மலைச் சரிவில் ஏறிய போது வெயில் நன்கு ஏறிவிட்டிருந்தது. அவன் குகையின் வாயிலை அடைந்த போது அது அடர்ந்து வளர்ந்திருந்த செடிகளாலும் மரங்களாலும் மூடப்பட்டது போல இருந்தது. அவற்றின் இடையே புகுந்து அவன் குகையின் உள்ளே நுழைந்த போது எதையுமே காண முடியாதவாறு இருள் சூழ்ந்திருந்தது. தீப்பந்தம் ஒன்றை தயார் செய்து கொண்டு உள்ளே செல்லலாமா என்று அவனுக்குத் தோன்றியது. பின் அது தேவையற்றது என்று நினைத்தான். அவன் தன் ஊரின் அருகே இருந்த காட்டின் அடர்ந்த இருளில் சென்று பழகியவன். குகைகளும் அவனுக்கு புதியவை அல்ல. அவனுடைய ஊரின் அருகிலேயே ஒரு குன்றில் மூன்று குகைகள் உண்டு். அவன் அங்கு சென்றிருக்கிறான்.
எல்லைநல்லையின் குகை அவன் உள்ளே நுழைந்தபோது சிறியது போலத் தோன்றியது. பிறகு இருளுக்கு அவன் கண்கள் பழகிய போது அது சற்று பெரிய குகை தான் என்று கண்டு கொண்டான். குறுகிய நுழைவும் அதை விட சற்று அகன்ற இடைப் பகுதியும் கொண்டது அந்த குகை. அதன் இடைப்பகுதிக்கும் அப்பால் அது மேலும் விரிந்ததாக பெரிய அறை போல தோன்றியது. அதன் தரை சமதளமாக இல்லாமல் மேற்கிலிருந்து கிழக்காக லேசான சரிவாக இருந்தது.
கைம்மா குகையின் பாறைச் சுவரைப் பார்த்துக் கொண்டே மெதுவாக சுற்றி நடந்தான். அக்குகையின் உள்ளே எல்லா பக்கங்களிலும் ஓவியங்கள் செதுக்கப் பட்டிருந்தன. அவற்றை அவனால் உடனடியாக என்ன என்று அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. மீண்டும் மீண்டும் ஒவ்வொரு பகுதியாக பார்த்துக்கொண்டு வந்தான்.
பின் பலவற்றை மிகவும் எளிதாக அவனால் அடையாளம் காண முடிந்தது. யானைகள், மான்கள் போன்ற விலங்குகள். ஆனால் அவற்றிற்கு சிறகுகள் இருந்தன. கைம்மாவிற்கு வியப்பாக இருந்தது. நட்சத்திரங்கள் புள்ளிகளாக செதுக்கப்பட்டிருந்தன. அவற்றின் நடுவே செதுக்கபட்டிருந்த வட்டம் நிலவாக இருக்க வேண்டும் என்று ஊகித்தான்.
அவனுக்கு தான் கொண்டு வந்திருந்த திண்டு வரைந்த ஓவியத்தின் நினைவு வந்தது. அந்த ஓவியத்தை தன்னுடைய பையில் இருந்து எடுத்து விரித்தான். அதை குகையின் தரையில் வைத்துக் பார்த்தான். வெளிச்சம் போதுமானதாக இல்லாததால் சரியாகப் பார்க்க முடியவில்லை. எனவே ஓவியத்தை குகையின் சுவற்றில் வைத்து பார்த்தான். ஒவ்வொரு இடமாக நகர்த்தி வைத்துப் பார்த்தபோது சற்று நன்கு வெளிச்சம் கிடைத்த இடத்தைக் கண்டு கொண்டான். அது குகையின் வடக்குப் பக்க சுவர். அங்கு வைத்துப் பார்த்தபோது அந்த துணி ஓவியத்தை நன்கு பார்க்க முடிந்தது. நட்சத்திரங்கள் நிறைந்த வானில் சிறகுகள் உள்ள குதிரையில் பறக்கும் ஒருவரது ஓவியம்.
அதைப் பார்த்துவிட்டு தலையைத் திருப்பிய போது அவன் ஒரு கணம் திகைத்து நின்று விட்டான். அந்த துணி ஓவியத்தில் வரையப்பட்டிருந்த காட்சி தெற்கு பக்க சுவற்றில் அப்படியே செதுக்கப்பட்டிருந்தது.
அங்கு செதுக்கப்பட்டிருந்த ஓவியத்தைத் தான் திண்டு அப்படியே துணியில் வரைந்திருக்கிறான்.
தன்னுடைய தாத்தா குறிப்பிட்ட குகைத் தெய்வம் அந்த சுவற்றில் இருக்கும் ஓவியம் தான் என்பதை கைம்மா கண்டு கொண்டான். பறக்கும் குதிரையில் இருக்கும் தாடிக்காரர் !
கைம்மா அதை நோக்கியவாறு அதன் முன்னால் கீழே அமர்ந்தான். அவனுடைய தாத்தா சொல்லிக் கொடுத்திருந்த முறையில் வழிபாடு செய்தான். மந்திரங்களை சொன்னான். பிறகு அந்த குகைத் தெய்வத்திடம் உருக்கத்துடன் வேண்டினான்.
பிறகு காத்திருந்தான். குகை வாசலில் இருந்த மரம் செடிகளின் வழியாக ஊடுருவி வந்த மெல்லிய காற்று அவன் மீது பட்டது. அவன் அங்கு என்ன செய்ய வேண்டும் என்று அவனுடைய தாத்தா சொல்லி அனுப்பினாரோ அவற்றை எல்லாம் அவன் செய்து விட்டான். மேற்கொண்டு என்ன செய்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. இனி அந்த குகைத் தெய்வம் தான் அவனை வழி நடத்த வேண்டும்.
மாலை நேரம் ஆகி விட்டது. குகை வாயிலில் இருந்து வந்த வெளிச்சம் குறையத் தொடங்கியது. கைம்மா வருத்தமடைந்தான். அந்த தெய்வத்திற்கு தான் செய்த வழிபாட்டில் ஏதேனும் பிழை செய்து விட்டோமோ என்று அஞ்சினான். தான் அப்படி ஏதேனும் அறியாமல் பிழை செய்திருந்தால் மன்னிக்க வேண்டும் என்று அந்த தெய்வத்திடம் வேண்டினான். திண்டுவை அந்த தெய்வம் அறியும் என்று தன்னுடைய தாத்தா சொல்லி இருந்தது அவன் நினைவுக்கு வந்தது. நிச்சயம் திண்டுவைக் காப்பாற்ற இந்த தெய்வம் அருளும். எவ்வளவு நேரமானாலும் இங்கேயே காத்திருக்க வேண்டியது தான். திண்டுவையும் முத்துவையும் மீட்க ஒரு வழி கிடைக்காமல் இங்கிருந்து செல்லக் கூடாது என்று கைம்மா நினைத்தான்.
இரவு ஆகி விட்டது. குகை முற்றிலும் இருண்டு விட்டது. கைம்மா இருட்டில் அசையாமல் அமர்ந்திருந்தான். அந்த இருட்டில் எதிரே சுவற்றில் இருந்த ஓவியத்தை அவனால் காணமுடியவில்லை. அவன் உறங்கவில்லை. விழிப்புடன் இருந்தான்.
குகை வாயிலில் இருந்து ஈரமான குளிர்ச்சியான காற்று வந்தது. குகை வாயிலில் ஒளி தோன்றி மறைந்தது. மின்னல்கள் வெட்டி இடி முழங்கியது. இடி ஓசை குகைக்குள் பட்டு எதிரொலியாகக் கேட்டது.
கைம்மா எழுந்து குகையின் வாயிலருகே வந்து நின்றான். மழை பெய்து கொண்டிருந்தது.
”கைம்மா” என்று யாரோ அழைப்பது போல அவனுக்குக் கேட்டது. குரல் குகையின் உள்ளிருந்து தான் வந்தது. அவன் குகையின் உள்ளே சென்றான்.
மின்னலின் ஒளியில் நீண்ட தாடியுடன் ஒரு வயதானவர் உள்ளே நின்றிருப்பது தெரிந்தது. மீண்டும் ஒரு பெரிய மின்னலின் ஒளியில் அவரது முகம் தெளிவாகத் தெரிந்தது. தொடர்ந்து மின்னல் வெட்டிக் கொண்டிருந்தது. அவர் சிரித்துக் கொண்டு இருப்பது போல தோன்றியது. அவரது பற்கள் ஒளி வீசின. கைம்மா அவரது அருகே சென்று பார்த்தான். அருகில் பார்த்த போது அவர் வயதானவராக தெரியவில்லை.
அவர் அந்த ஓவியத்தின் எதிரே நின்றிருந்தார். கைம்மா ஒரு கணம் யோசித்தான். இவர் தான் குகைத் தெய்வமா?
”கைம்மா…..நீ நினைத்தது சரி தான். உன் தாத்தா குகைத் தெய்வம் என்று குறிப்பிட்டது என்னைத் தான்”
கைம்மா கரம் கூப்பி வணங்கினான். அவன் கண்களில் நீர் திரண்டது. அவன் அவரது காலில் விழுந்தான்.
அவர் அவனை தன் கரங்களால் பற்றி எழுப்பினார்.
”கைம்மா….திண்டு என்னை குகைத் தாத்தா என்று அழைப்பான். அவனுக்கு நான் தெய்வம் அல்ல தாத்தா மட்டும் தான்” என்று சொல்லி சிரித்தார்.
”ஆம். அவன் உங்களை ஓவியமாக வரைந்துள்ளான்”
”ஆம். அவனுக்கு என் மீது மிகுந்த அன்பு”
”ஆம். அவன் தற்போது விண்ணில் எங்கோ கொண்டு செல்லப்பட்டுவிட்டான்…அவன் நண்பன் முத்துவும்..”
”தெரியும் கைம்மா” என்றார் குகைத் தாத்தா.
”நீங்கள் தான் உதவ வேண்டும். அவர்கள் எங்கே போனார்கள்? அவர்களை எப்படி மீட்பது?” கைம்மா கேட்டான்.
”திண்டு முத்துவின் அப்பாவைத் தேடி பயணம் புறப்படும் முன் என்னிடம் ஆசி பெற்றுச் சென்றான். அவனது இந்த பயணம் அவனுக்கு பல சுவாரஸ்யமான அனுவபங்களை அளிக்கும் என்று கூறி இருந்தேன்” என்றார் தாத்தா. அவர் தொடர்ந்து பேசினார்.
”திண்டு விளையாட்டாகத் தான் இந்த குகைக்கு வரத் தொடங்கினான். இந்த குகையில் தொல்பழங்காலத்து மனிதர்களால் வரையப்பட்ட பல ஓவியங்களில் ஒன்று தான் நான்”
”என்னை இங்கு வரைந்த மிகப் பழங்காலத்து அந்த ஓவியன் என்னைப் பற்றி அவன் காலத்தில் எழுதப்பட்டிருந்த காவியம் ஒன்றில் படித்து தெரிந்து கொண்டான். நான் அவனது காலத்திற்கும் வெகு காலம் முந்தியவன்”
”அப்படியென்றால்…..” கைம்மா தயங்கினான்.
”புரிகிறது கைம்மா. இது நிஜமா அல்லது கனவா என்று அய்யப்படுகிறாய். காவியத்தில் வரும் கதாபாத்திரம் கற்பனை அல்லவா? என்று எண்ணுகிறாய். இதோ நான் உன் கண் முன்னே நிஜமாக நிற்கிறேனே? அதே சமயம் நான் கற்பனையும் தான்” என்று சிரித்தார் தாத்தா.
கைம்மா குழப்பமடைந்தான்.
”நீ குழப்பமடைய வேண்டாம் கைம்மா. நீ பின்னொரு காலத்தில் எல்லாவற்றையும் அறிந்து கொள்வாய். நான் திண்டுவிற்கும் அவ்வாறே சொன்னேன்.
பிறகு அவர் சொன்னார் ”கைம்மா….இனி நீ செய்ய வேண்டியது என்ன என்று சொல்கிறேன் கவனமாகக் கேள்” என்றார்.
கைம்மா இன்னும் அவர் அருகே சென்று அவர் சொல்வதை கவனமாக செவி மடுத்தான். அவர் கைம்மாவிற்கு அவன் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கூறி விட்டு அடுத்து ஒரு மின்னல் மின்னி மறைந்த போது மாயமாக மறைந்து விட்டார்.
கைம்மா குகையின் வாயிலில் வந்து செடிகளை விலக்கிக் கொண்டு வெளியே வந்தான். மழை நின்று விட்டிருந்தது.
முகில்கள் கலைந்து நிலாவும் நட்சத்திரங்களும் தெரியத் தொடங்கின.
பன்றி மலையின் குகையின் அருகே சென்ற ஒரு சிறு ஓடையை ஒட்டி கைம்மா சென்றான். அது மலையை சுற்றி கீழிறங்கிச் சென்றது. பிறகு ஓரிடத்தில் ஓடையை விலகி நடந்தான். மலையை விட்டு கீழிறங்கிய பிறகு அங்கே சமவெளியாக இருந்தது. சற்று தொலைவில் ஒரு மிகப் பெரிய அரச மரம் இருந்தது. கைம்மா அந்த மரத்தை நோக்கிச் சென்றான்.
காற்றில் அசைந்த அந்த மரத்தின் இலைகள் நிலவின் ஒளியை தட்டி விளையாடிக் கொண்டிருப்பது போல காட்சியளித்தது. அந்த மரத்தின் பின்னாலிருந்து ஒரு பெரிய குதிரை கனைத்துக் கொண்டு முன்னால் வந்தது. அது பால் வண்ணத்தில் வெண்மையாக ஒளி வீசியது. அதன் பிடரி மயிர் சிலிர்த்து நின்றது.
கைம்மா அதன் அருகே சென்றான். அதன் முகத்தருகே சென்று அதனிடம் என்னவோ சொன்னான். பிறகு அந்த குதிரையின் மீது ஏறிக் கொண்டான்.
அதன் மீது ஏறி அமர்ந்த பிறகு தான் கைம்மா கவனித்தான். அந்த பெரிய குதிரை மிகவும் குண்டான குதிரை போலத் தோன்றியது. அதன் மீது நடுவில் சென்று அவன் உட்காரந்த போது அவனால் இரண்டு பக்கமும் கால்களை கீழே தொங்கப் போட்டுக் கொள்ள முடியவில்லை. உண்மையில் அது குண்டானது அல்ல. அது தன் சிறகுகளை மடித்து வைத்திருந்ததால் அப்படி தோன்றியது. கைம்மா அதன் சிறகுகளை அறிந்து கொண்ட பிறகு மிகவும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தான்.
பறக்கும் குதிரை அது! மற்ற குதிரைகளில் அமர்வது போல அதில் அமர முடியாது. இதில் எப்படி அமர்வது?
அவன் குகைத் தாத்தாவின் ஓவியத்தை நினைத்துப் பார்த்தான். தாத்தா எப்படி அமர்ந்திருந்தார்? அவன் கண்கள் மூடி நினைவு கூர்ந்தான்.
ஆம்! அவன் சற்று முன்னால் அதன் கழுத்தின் அருகே நகர்ந்து அமர்ந்து கொண்டான். சிறகுகளுக்கு முன்னால் கால்களை இருபுறமும் தொங்கப் போட்டுக் கொண்டான். குதிரை தன் தலையைத் தூக்கியது. அவன் அதை அணைத்து அதன் பிடரியிலும் பின்தலையிலும் முத்தமிட்டான். பின்னர் அதன் கடிவாளத்தைக் கையில் பற்றிக் கொண்டான்.
குதிரை தன் சிறகுகளை விரித்தது. அதன் சிறகு பன்னிரெண்டு அடி நீளம் இருந்தது. குதிரை தன் விரிந்த சிறகுகளை அடித்துக் கொண்டு ஓடி வானில் எழுந்தது.
அந்த இரவு வானில் தூய பால் வெண்ணிறம் கொண்ட அந்த குதிரையில் கைம்மா பறந்தான். அவன் மகிழ்ச்சியில் கூச்சலிட்டான். குளிர் காற்று வேகமாக வீசியது.
அவன் பன்றி மலையைச் சுற்றி வானில் வட்டமடித்தான்.
”பார்த்தீரா…இவன் ஏதோ வரலாற்று ஆய்வாளன் என்று நினைத்தால் மாயாவியாக இருக்கிறானே” என்றார் ஒருவர்.
”ஆமாம்…எப்படிப் பறக்கிறான்! பறக்கும் குதிரை! என்ன ஆச்சரியம்? உண்மையிலேயே இப்படி ஒன்று இருப்பதை இப்போதுதான் பார்க்கிறேன்” என்றார் இன்னொருவர்.
எல்லைநல்லை சத்திரத்தின் திண்ணையில் சண்டை போட்டுக் கொண்ட பாவலர்கள் தான் அந்த இருவரும். பெரிய உடல் கொண்டவர் பெயர் கனசேகரன். மெலிந்தவர் பெயர் தினசேகரன்.
”யோவ்…கனம்…..இப்போது என்ன செய்வது?” என்று கேட்டார் தினசேகரன்.
”வாரும் அவன் இந்த பக்கமாகத்தான் பறந்து வருகிறான். நாம் அவனை அழைப்போம்” என்றார் கனம்
இருவரும் வான் நோக்கி இரு கைகளையும் விரித்து ’கைம்மா..கைம்மா” என கத்திக் கொண்டே ஓடினர்.
(மேலும்)