திண்டுவின் பயணங்கள் – 15

திண்டுவும் முத்துவும் விண்கலத்தில் பூமியில் இருந்து கொண்டு செல்லப்பட்டு பல நாட்கள் ஆகிவிட்டன.  ஆனால் எத்தனை நாட்கள் ஆகின என்று திண்டுவிற்கும் முத்துவிற்கும் தெரியவில்லை.

இன்னும் அவர்கள் விண்கலத்தில் தான் இருந்தார்கள்.  விண்ணில் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்தது விண்கலம்.  ஆனால் அசைவற்று ஒரே இடத்தில் இருப்பது போல அவர்களுக்கு தோன்றியது.  அந்த மிகப் பெரிய அறையில் அவர்கள் இருந்தார்கள்.  அவ்வப்போது விண்கலம் திசை மாறிய போது அதன் அறையின் சுவர்கள் இடம் மாறுவதைக் கண்டார்கள்.  ஆரம்பத்தில் மிகவும் பயந்த அவர்கள் பிறகு அச்சம் நீங்கியவர்கள் ஆனார்கள்.  அந்த அறை அவர்களுக்கு பழகி விட்டது.

விண்கலத்தில் அவர்கள் கொண்டு செல்லப்பட்ட முதல் நாளில் முத்து பசியில் அழுத போது அறையின் கதவு திறந்தது.  பக்கத்து அறையில் இருந்து ஒரு இயந்திர மனிதன் வந்தான்.  அவன் முத்துவை தன் கைகளால் தூக்கிக் கொண்டு சென்றான்.  முத்து பயத்தில் அழுதான்.  திண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தான்.  இயந்திர மனிதன் முத்துவை அறையின் வலது பக்க சுவற்றின் அருகே கொண்டு சென்று நிறுத்தினான்.  பிறகு அந்த சுவற்றில் இருந்த சிவப்பு, பச்சை, நீல வண்ண வட்டங்களில் நீல வண்ண வட்டத்தைத் தொட்டான்.  உடனே சுவற்றில் இருந்து பெட்டி போன்ற ஒன்று நீண்டு வெளியே வந்தது.  முத்துவைத் தூக்கி அதில் படுக்க வைத்தான்.

திண்டு பாய்ந்து இயந்திர மனிதனை நெருங்கினான்.

”என்ன செய்கிறாய்? என்று அச்சத்துடன் கேட்டான்.

”பயப்படாதே.  இவனுக்கு பசிக்கிறது அல்லவா? அதனால் தான்” என்றான் இயந்திர மனிதன்.

திண்டுவிற்கு புரியவில்லை.  ”தயவுசெய்து முத்துவை ஒன்றும் செய்து விடாதே” அவன் அழும் குரலில் கெஞ்சினான்.

”உன் பயம் தேவையில்லாதது” என்று சொன்ன இயந்திர மனிதன் முத்துவை அந்த பெட்டியில் படுக்க வைத்தான்.

முத்து ”திண்..டு” என்று கத்தினான்.

”பயப்படாதே” என்றான் இயந்திர மனிதன்.

பிறகு அவன் மீண்டும் சுவற்றின் நீல வண்ண வட்டத்தை தொட முத்துவை படுக்க வைத்திருந்த அந்த பெட்டி உள்ளே சென்று விட்டது.

”முத்து…முத்து…முத்துவை என்ன செய்தாய்? திண்டு கூச்சலிட்டான்.  இயந்திர மனிதன் பதில் சொல்லவில்லை.

சுவற்றின் நீல வட்டத்திற்கு மேலே வினாடி காட்டும் கட்டம் ஒன்று தோன்றியது.  ஒன்று…இரண்டு…மூன்று….  முப்பது வினாடிகள் ஆனவுடன் இயந்திர மனிதன் பச்சை வட்டத்தைத் தொட்டான்.  மீண்டும் பெட்டி வெளியே வந்தது.  இப்போது பெட்டியில் முத்துவின் அளவிற்கு உயரம் இருக்கும் ஒரு இயந்திர மனிதன் படுத்திருந்தான்.

”முத்து..முத்து …முத்து எங்கே? என்று திண்டு பதறினான்.

”இது தான் முத்து” என்றான் இயந்திர மனிதன்.

”இதுவா?…முத்துவுக்கு என்ன ஆனது?” இது முத்து அல்ல” என்று கூச்சலிட்டான்.

”இது தான் முத்து.  சொல்வதை முதலில் கேள்” என்றான் இயந்திர மனிதன்.

பெட்டியில் இருந்து அந்த புதிய இயந்திர சிறுவனை தூக்கி வெளியே எடுத்தான் இயந்திர மனிதன்.  வெளியே எடுத்து விட்ட பிறகு அந்த சிறுவன் திண்டுவின் அருகே வந்தான்.

”திண்…டு..” என்று அவன் அழைத்தான்.

முத்துவின் குரல் போலத் தான் இருந்தது.

”முத்துவா….இது”

”ஆமாம் திண்டு …நான் தான்” என்றான் அவன்.

திண்டுவிற்கு ஒன்றும் புரியவில்லை.

இயந்திர மனிதன் விளக்கினான்.

”நீங்கள் இனி பூமியில் இருப்பது போல இருக்க முடியாது.  இவன் உடல் இப்போது இயந்திர உடலாக மாற்றப்பட்டுள்ளது.  இவனுக்கு இனி பசித்தால் இந்த பெட்டிக்குள் முப்பது வினாடிகள் படுத்திருந்து கதிர் வீச்சைப் பெற்று வெளியே வந்தால் போதும்.  பல நாட்களுக்குத் தேவையான ஆற்றல் கிடைத்துவிடும்” என்றான் இயந்திர மனிதன்.

தன் உலோக கைகால்களைக் கண்டு முத்து அஞ்சினான்.

”அய்யோ…இனி நான் பழையபடி ஆகவே முடியாதா? எதுவுமே சாப்பிட முடியாதா?” என்றான்.

”பழைய படி நீ ஆக முடியும்.  நீ பூமியில் வாழ வேண்டி இருந்தால் அப்படி ஆகலாம்.  இப்போது நாம் யுரேனசுக்கு சென்று கொண்டிருக்கிறோம்.  பூமியைப் போல அங்கு உண்ணவோ நீர் அருந்தவோ முடியாது.  அவ்வளவு ஏன் பூமியைப் போல அங்கு சுவாசிக்கக் கூட முடியாது.  இப்படி இருந்தால் தான் அங்கு வாழ முடியும்” என்றான் இயந்திர மனிதன்.

”யுரேனசில் எதற்கு நாங்கள் வாழ வேண்டும்? எங்களை தயவுசெய்து பூமியில் கொண்டு சென்று விட்டு விடுங்கள்” என்றான் திண்டு.

”அது எப்படி திண்டு? உன் நண்பர் குகைத் தாத்தா யுரேனசுக்கு சென்ற பழங்கால சாகச கதையை மட்டும் ரசித்துக் கேட்டாய்.  இப்போது யுரேனசுக்கு வர மாட்டேன் என்கிறாய்? என்று கேட்டான் இயந்திர மனிதன்.

ஒரு கணம் திண்டு அதிர்ச்சி அடைந்தான்.  தாத்தா என்னிடம் சொன்ன கதை இந்த இயந்திர மனிதனுக்கு எப்படித் தெரிந்தது என்று அவன் ஆச்சரியமடைந்தான்.

”அவர் உனக்கு சொன்ன கதை எனக்கு எப்படித் தெரியும் என்று எண்ணுகிறாய்.  எனக்கு எல்லாம் தெரியும்.  பூமியில் நான் அறியாதது எதுவும் இல்லை” என்றான் இயந்திர மனிதன்.

” க்க்ர்க்க் க்க்ர்க்க் க்க்ர்க்க்” ..என்று இயந்திர மனிதன் சிரித்தான்

”உன் குகைத் தாத்தாவிற்கும் எங்களுக்கும் தீர்க்க வேண்டிய பழைய கணக்கு ஒன்று இருக்கிறது” என்றான் அவன்.

இயந்திர மனிதன் பேசும் போது அவனது குரல் உலோகத் தன்மையுடன் இருந்தது.  சிரிக்கும் போது மட்டும் ” க்க்ர்க்க் க்க்ர்க்க் க்க்ர்க்க்” என்று கேட்டது.

சற்று நேரத்தில் இயந்திர மனிதன் திண்டுவையும் தூக்கி அந்த பெட்டியில் போட்டு வெளியே எடுத்தான்.  சற்று நேரத்தில் திண்டுவும் இயந்திர சிறுவனாக ஆகி விட்டான்.

பிறகு இயந்திர மனிதன் அந்த அறையில் இருந்து சென்று விட்டான்.  பிறகு நீண்ட காலத்திற்கு அவன் மீண்டும் அந்த அறைக்கு வரவே இல்லை.

திண்டுவும் முத்துவும் அந்த அறையின் கூரையில் இருந்த பெரிய கண்ணாடியின் வழியாக விண்வெளியைப் பார்த்துக் கொண்டே காலத்தை கழித்தார்கள்.  ஆரம்பத்தில் தங்களுக்குள் பேசிக் கொண்டே இருந்த அவர்கள் இருவரும் பிறகு மௌனமாக ஆனார்கள்.  அருகருகே மிதந்து முடிவில்லாது கடந்து சென்று கொண்டிருக்கும் விண்மீன்களையும் கோள்களையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

எவ்வளவு பெரியது இந்த விண்வெளி! எத்தனை வண்ணங்கள்! எத்தனை விதமான ஒளி ஓவியங்கள்! பல வண்ண கோள்கள்! பல வண்ண நிலவுகள்! மஞ்சள் வண்ண, வெள்ளி வண்ண, நீல வண்ண, செவ்வண்ண கோளங்கள்!  அந்த கண்ணாடியின் வழியாக பார்த்துக் கொண்டே இருந்தார்கள்

 உறக்கம் வரும் போது இயந்திர மனிதன் அவர்களுக்கு சொல்லித் தந்திருந்த முறையில் உறங்கினார்கள்.  வலது தோளின் அருகே இருக்கும் பட்டனை அழுத்தினால் அவர்களது இயந்திர உடல் அறையின் சுவற்றில் சென்று பதியும்.  அப்படியே உறங்க வேண்டும்.  பிறகு எழுந்த பிறகு மீண்டும் அந்த பட்டனை அழுத்தினால் சுவற்றில் இருந்து விடுபடலாம்.  பூமியைப் போன்று ஈர்ப்பு விசை விண்வெளியில் இல்லாததால் அவ்வாறு செய்யப்பட்டிருந்தது.

பசிக்கும் போது பெட்டியில் முப்பது வினாடிகள் படுத்துக் கொள்ள வேண்டும்.  பிறகு நீண்ட காலத்திற்கு உணவு தேவைப்படாது.

பல நாட்களுக்குப் பிறகு அல்லது சில மாதங்களுக்குப் பிறகு அந்த அறையின் கதவு திறந்தது.  பக்கத்து அறையில் இருந்து இயந்திர மனிதன் வந்தான்.  அவன் வந்ததை திண்டுவும் முத்துவும் கவனிக்கவில்லை.  அவர்கள் இருவரும் வழக்கம் போல விண்வெளியைப் பார்த்துக் கொண்டு மிதந்து கொண்டு இருந்தனர்.

”நாம் யுரேனசை நெருக்கிக் கொண்டிருக்கிறோம்.  அதற்கு முன்பாக சிலவற்றை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்” என்றான் இயந்திர மனிதன்.

”நான் ஏற்கனவே சொன்னது தான்.  பூமியில் வாழ்வது போல யுரேனசில் வாழ முடியாது.  வாழ்க்கை என்பது இங்கே வேறு விதம்”

திண்டுவும் முத்துவும் மௌனமாக கேட்டுக் கொண்டிருந்தனர்.

”இந்த கோள் முழுவதுமே உறைந்த பனி தான்.  சூரியனை தொலைவில் இருந்து சுற்றி வரும் மிகப் பெரிய பனிக்கட்டி போன்றது இந்த கோள்.  சூரியனின் வெப்பம் இங்குள்ள காற்று மண்டலத்தை லேசாக சலனப்படுத்துகிறது.  மற்றபடி சூரியனின் வெப்பம் இங்குள்ள பனியை மாற்ற போதுமானதல்ல.  அண்டத்தின் இருளுக்குள் மிகக் குறைந்த ஒளியுடன் அமைந்திருக்கும் மிகப் பெரிய கோள் இது”

”மனித உடலால் இந்த கோளின் இயற்கையை ஒருபோதும் நேரடியாக தாங்கிக் கொள்ள முடியாது.  உடலின் ரத்தம் உறைந்து கட்டியாக ஆகிவிடும்.  எனவே தான் நாம் உலோக இயந்திரங்களாக நம்மை மாற்றிக் கொண்டுள்ளோம்” என்று இயந்திர மனிதன் சொன்னான்.  பிறகு அவன் சென்று விட்டான்.

அறையின் கண்ணாடியில் நீலப்பச்சை வண்ணத்தி்ல் யுரேனஸ் தெரிந்தது.  அதனைச் சுற்றி பட்டையாக வளையங்கள் தென்பட்டன.

யுரேனஸ் அதன் வளையங்களுடன் மிகவும் அழகாக தென்பட்டது.  நேரம் செல்லச் செல்ல விண்கலம் யுரேனசை நெருங்க நெருங்க அது மிகவும் பெரிதாகிக் கொண்டே வந்தது.  அதன் வளைங்களை நெருங்கி விண்கலம் கடந்தபோது அவை பக்கவாட்டில் நீண்டு தெரிந்தன.  ஏராளமான பாறைகள், மிதக்கும் மலைகள் போன்றவற்றைக் கடந்து விண்கலம் சென்றது.

”அந்தரத்தில் மதிக்கும் பனி மலைகள்” என்றான் முத்து.

நீண்ட காலத்திற்கு பிறகு முத்து பேசுவதை கேட்டு திண்டு திடுக்கிட்டான்.

”ஆம் முத்து.  இவைதான் யுரேனசின் வளையங்கள்” என்றான் திண்டு.

”இவையா?”

”ஆமாம்.  இவையெல்லாம் சேர்ந்து தான் தொலைவில் வளையங்களாகத் தென்படுகின்றன” என்றான் திண்டு.

”ம்..”

”என்ன முத்து? 

”அம்மா…அம்மா…” முத்து அழத் தொடங்கினான்.  அவனுக்கு அம்மாவின் நினைவு வந்து விட்டது.

திண்டு அவனை அணைத்துக் கொண்டான்.  

”அழாதே முத்து.  எனக்கு நம்பிக்கை இருக்கிறது…..”

திண்டு மேற்கோண்டு சொல்வதற்குள் ”இப்படியெல்லாம் என் வாழ்க்கையில் நடக்கும் என்று நான் கற்பனை கூட செய்து பார்த்ததில்லை” என்றான் முத்து.

”ஆம் முத்து.  ஆனால் இவையே நம் வாழ்க்கையின் மிகச் சிறந்த அனுபவங்களாக அமையக் கூடும்”

”இவையா? இப்படி அடுத்து என்ன நடக்கப் போகிறது அஞ்சிக் கொண்டிருப்பதா? இவையா சிறந்த அனுபவங்கள்?” என்று முத்து கேட்டான்.

”அஞ்ச வேண்டாம் முத்து.  இது வரை நமக்கு ஒன்றும் ஆகவில்லை.  இனிமேலும் ஒன்றும் ஆகாது.  நாம் புதிய அனுபவங்கள் பெற்று வெற்றியுடன் பூமிக்குத் திரும்புவோம்”  திண்டு நம்பிக்கையுடன் பேசினான்.

”அப்படியா? அப்படி எவ்வாறு உறுதியுடன் உன்னால் நம்ப முடிகிறது?” என்று முத்து கேட்டான். 

”நம்பு முத்து.  அதோ நீலப்பச்சை வண்ணத்துடன் அழகாக இருக்கும் இந்த யுரேனசைப் பார்.  புவியன்னைப் போல யுரேனசும் ஒரு அன்னை தான்” என்றான் திண்டு.

முத்து திண்டுவை அணைத்துக் கொண்டான்.

திண்டு முத்துவின் தலையை தன் தோளில் சாய்த்துக் கொண்டான்.

திண்டு யுரேனசைப் பார்த்தான்.  விண்கலம் அதை நோக்கி வேகமாக நெருங்கிக் கொண்டிருந்தது.

திண்டு மனதிற்குள் சொன்னான், ”யுரேனஸ் அன்னையே நாங்கள் உன் பாதுகாப்பு வளையத்திற்குள் வந்து விட்டோம்”

விண்கலம் சுழன்று கீழ் நோக்கிச் சென்றது.

திண்டுவிற்கு குகைத் தாத்தாவின் நினைவு வந்தது.

(மேலும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *