ஒரு கிராமப் புறத்தின் பருவகாலங்களில் உருமாறும் இயற்கையை கவிதையின் வழியே காட்சிகளாகவும், அங்கு பூர்விகமாக வாழும் மக்களின் வாழ்க்கை முறையை அவர்களுக்கே உரித்தான வட்டார மொழியின் உரையாடல்களாகவும், மாங்கோணம் எனும் ஒரு கிராமப்புற வாழ்க்கையின் அடர் வனத்துக்குள் அழைத்துச் செல்கிறார் எழுத்தாளர் நாஞ்சில் நாடன்.
Prose Poetry எனும் அவ்வனத்தின் பச்சையானது நாவல் முழுவதும் படர்ந்து செழிப்பாக காட்சியளிக்கின்றது. குறிப்பாக,
”…வெயில் ஏற மிதக்கும் பாசியின் ஊர்வலம்…” என கோடைகாலத்தின் கடுமையையும்,
”….ஆறடி உயரம் இருந்த கரையான் புற்று அடியோடு சாய்ந்து கரைந்து கிடந்தது.புற்றின் நட்ட நடுப்பகுதியில் ஒரு முகம்….
அருளும் சினமும் கலந்து தெறிக்கும் கண்களையும் புன்னகைக் கீற்றையும் கொண்ட கல்முகம்….
உச்சிமீது படமெடுத்து நின்று வெயில் காய்ந்த செந்நாகம்.
காலை ஏழரை மணிச் சூரியனின் மஞ்சள் கதிர்களில் குளித்துக்கொண்டு, வெகு கம்பீரத்துடன் தலையை அப்புறமும் இப்புறமும் திருப்பித் தோரணையாய் பார்த்துக் கொண்டு….” எனக்கூறப்படும் காட்சிகளாகட்டும், இவை மனதில் நிற்கும் பாடல் வரிகளாக தங்கிவிடுகின்றன.
நாஞ்சில் நாட்டு நிலமான மாங்கோணம் கிராமத்தின் இயற்கையோடு சார்ந்திருக்கும் மக்களின் விவசாய தொழில்முறைகள், மரபுகளாக தொடர்ந்து வரும் ஆலய வழிபாட்டு முறைகள்,கோயில்களின் திருவிழாக்கள், உணவு முறைகள், மக்களின் பழக்கவழக்கங்கள், பாரம்பரிய வழக்கத்தின் ஏற்றத்தாழ்வுகள், என ஒரு கிராமப்புறத்தின் வாழ்க்கை முறையை படைத்திருக்கிறார். சுருட்டு, யாழ்ப்பாண புகையிலை என முதியவர்கள் பயன்படுத்த இளையோர்களோ சிகரெட், சீமை சாராயம், சினிமா என அன்றைய காலகட்டத்தின் பரிணாமங்களாக கதாபாத்திரங்கள் பிரதிபலிக்கின்றன. வெற்றிலை பாக்கிற்காக மடித்து வைக்கப்படும் பாலீதின் பை பயன்பாட்டிலிருப்பதை கடைகோடியில் இயற்கையையே சார்ந்து இருக்கும் மாங்கோணத்தில் காண்பது தொழில்மயமாதலா, காலநிலை மாற்றத்தின் பேரலையின் முன் அறிவிப்பா என்ற எண்ணமே எழுகின்றது.
கந்தையா எனும் கதாபாத்திரம் நாவலின் தொடக்கத்தில், கூலிக்கு நெல் கொடுப்பதாக கூறிய பின் ஏமாற்றும் முதலாளியிடம் “பூலிங்கம்… கொத்தை மாத்திரம் அளந்து வாங்கீட்டு வா. நமக்கு குறுணியும் வேண்டாம் பதக்கும் வேண்டாம்.” என அங்கிருந்து வெளியேறுகின்றான். முதலாளி வர்க்கமான கங்காதர பிள்ளைக்கும், உழைப்பாளியான கந்தையாவுக்கும் இடையே நடக்கும் அதிகாரம் மற்றும் வறுமையிலிருந்து மீள நினைக்கும் ஒரு உழைப்பாளியின் சமூக வாழ்க்கை போராட்டமே இந்த“மாமிசப் படைப்பு”.
நிச்சியதார்த்த சடங்குகளில் தான் உணவருந்தும் போது இலையில் வைக்கப்படும் வாழைப்பழங்களை மறைத்து வீட்டிற்கு எடுத்துச் சென்று தன் பிள்ளைகளுக்கு கொடுக்கும் வறுமையிலுள்ள தந்தை கந்தையா. முதலாளிகளின் பிள்ளைகளில் ஒருவனான சேணாசலம் எனும் இளைஞன் தெருவில் செல்லும் பெண்ணிடம் சீண்டலில் ஈடுபட்ட பொழுது கந்தையா அவனை கன்னத்தில் அறைந்து அச்செயலை கண்டித்து முதலாளியிடத்தில் முறையிடுகிறான். கோடை அறுவடைக்குப் பிந்தைய காலமான இரண்டு மாத இடைவெளியில் விவசாயம் செய்ய வழியின்றி வருமானம் இல்லாமல் ”கோட்டைக் கடன்” என்ற பெயரில் முதலாளியிடம் கடன் வாங்கி, பின் அவர்களிடமே கூலியாக கரையும் நிலைமையை தவிர்க்க நினைக்கிறான். ”கோட்டைக் கடன்” எனும் ஆழ்கிணற்றுக்குள் இறங்கியேறும் நடைமுறையிலிருந்து மீள்வதற்காக கந்தையா தன் உழைக்கும் மக்கள் ஒத்துழைப்புடன் பொறம்போக்கு நிலத்தை சீர்செய்து வருமானத்திற்காக சமூகமாக விவசாயம் செய்துவருகின்றனர்.
முதலாளிகள்; அத்தோட்டத்தில் கோடை மழையில் செழிப்பான சில வாரங்களிலே இரவோடு இரவாக உழுதுமாடுகளை மேய்ச்சலில் விட செடி, கொடிகளை அவை நாசமடையச் செய்கின்றன. இதற்காக பழி வாங்கவேண்டும் என நினைக்கும் கந்தையா, செல்ல வேண்டிய தொலைவையறிந்தவன் என்பதால் தன் தளராத முயற்சியால் சில நாட்களில் தன் மக்களுடன் அதே இடத்தில் மீண்டும் புதியதாக ஒரு தோட்டத்தை உருவாக்குகிறான். அவற்றில் வாழை, தென்னை, காய்கறிகள் என பல அடுக்குகளாக தோட்டத்தை மேம்படுத்திக் கொண்டேயிருக்கிறான். வரி ஏய்ப்பு, கோயில் நில குத்தகையில் ஊழல் என அதிகாரத்திற்கு அஞ்சி பலரும் கூற தயங்கியவற்றை கிராம பொது கூட்டத்தின் முன் வைக்கின்றான். அதிகாரவர்க்கத்திற்கு அடி பணியாது, பணக்கார வர்க்கத்தின் தேவையின்றி சுயமாக உழைக்கும் சமூகம் எளிதில் காலூன்றலாகாது. காலம் காலமாக முதலாளிகளிடம் அண்டி உழைக்கும் சமூகத்தில், மாற்றம் கொண்டுவர நினைக்கும் கந்தையாவை, அதிகார வர்க்கத்தின் காட்டுத்தீ விழுங்கிவிடுகின்றது. இந்நாவலிலிருந்து, சூழல் காற்றில் சிக்கிய மரமாக சாமானியர்கள் வாழ்க்கையில் முதலாளித்துவம் தன் தடத்தை வரலாற்றில் பதிவு செய்து கொண்டேயிருக்கின்றது எனலாம்.