
‘கேரம்’ விளையாட்டின் தொடக்கத்தில் ஆட்டப் பலகையில் வெள்ளை நிறக் காய்களை ஆங்கில எழுத்தான Y யின் வடிவில் அடுக்கி, அவற்றுக்கு இடைப்பட்ட பகுதிகளில் கறுப்பு நிறக் காய்களை நெருக்கமாக அடுக்குவர். அது பார்ப்பதற்கு வட்டத்தில் Y என்ற எழுத்து இருப்பது போலத் தெரியும். அதன் இரு கிளைகளையும் தனித்தனியே எதிர்த்திசையில் இருக்கும் இரண்டு வட்ட இலக்குப் பள்ளங்களை நோக்கியவாறு சாய்வுக் கோணத்தில் திருப்பி வைத்துவிட்டு, Y யின் அடிப்பகுதியில் ஆட்டக்காயால் ஓங்கி அடிப்பர்.
அப்போது ஆலமரத்தில் மாலை வேளையில் கூடடைந்த பறவைகள் அதிர்வெட்டு கேட்டு எண்டிசையிலும் சிதறி, விரைந்து பறப்பதைப் போல வெள்ளை நிறக் காய்களும் கறுப்பு நிறக் காய்களும் எதிர்த் திசையில் சிதறும். எதிரெதிர் திசையில் இருக்கும் வட்ட இலக்குப் பள்ளங்களில் தலா ஒரு வெள்ளை நிறக் காய் விழுந்து விடும். கறுப்பு நிறக் காய்களோ இலக்குப் பள்ளம் எங்கே இருக்கிறது என்று தெரியாமல் திருவிழாவில் காணாமல் போன சிறார்களைப் போலத் தவித்து நிற்கும்.
ஒவ்வொருவரின் பால்யமும் ஒரு ‘கேரம்’ ஆட்டம்தான். விதி முன்னமே திட்டமிட்டு நம்மைக் கறுப்பு நிறக் காயாகவோ அல்லது வெள்ளை நிறக் காயாகவோ படைத்திருக்கும். அதிலும், Y என்ற எழுத்து வடிவில் பிரிந்திருக்கும் இரண்டு கிளைகளின் முனையில் முதலில் இருக்கும் வெள்ளை நிறக் காய் யார் என்பதையும் அதுவே தீர்மானித்திருக்கும். விதி ஆட்ட காயாக மாறி வலுகொண்டு Y என்ற எழுத்தின் அடிப்பகுதியைத் தாக்கும். சிதறும் காய்களில் சில இலக்குப் பள்ளத்தில் விழும். சில பள்ளத்தை நெருங்கிச் சென்று நிற்கும். இன்னும் பல திக்குத் தெரியாமல் தெறித்துக் கிடக்கும்.
‘கேரம்’ ஆட்டத்தில் மிகச் சில காய்கள் மட்டுமே ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இலக்குப் பள்ளத்தில் விழுகின்றன. பல காய்கள் ஆட்டத்தின் பாதியில்தான் இலக்கினை அடைகின்றன. ஆனால், மிகச்சில காய்கள் மட்டும் ஆட்டப்பலகையில் அங்குமிங்கும் என இழுத்தடிக்கப்பட்டு, நெடுநேரத்துக்குப் பிறகு ஒருவழியாக இலக்குப் பள்ளத்தில் விழும்.
இந்த ‘கேரம்’ ஆட்டத்தைப் போலவே உலக வாழ்க்கையில் மனிதர்களுக்கு விதியின் ஆடலால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகவே வாழ்க்கை அமைகிறது. ஒரே பள்ளியில் ஒரே வகுப்பறையில் என ஆண்டுதோறும் ஒன்றாகவே படித்துத் தேர்ச்சியைப் பெற்றவர்கள் எட்டாம் வகுப்பிலோ அல்லது பத்தாம் வகுப்பிலோ இவையும் தவறினால் இறுதியாகப் பன்னிரண்டாம் வகுப்பில் திசைக்கு ஒருவராகச் சிதறுவது இயல்பே. மிகச் சிலர் மட்டுமே கல்லூரியிலும் இணைந்து படிக்கிறார்கள்.
வளரிளம் பருவமான ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான காலக்கட்டம் ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமானது. அங்குதான் அவர்களின் எதிர்காலத்துக்கான ‘அஸ்திவாரம்’ அமைக்கப்படுகிறது என்று நம்பப்படுகிறது. ஆகவே, இந்தக் காலக்கட்டம் ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஆனால், இதைவிட மிக முக்கியமானது, ‘இந்தக் காலகட்டத்தில் அவர்கள் பெறும் அனைத்து விதமான அனுபவங்களும் அவர்களின் வாழ்நாள் முழுக்க நினைத்துப் பார்க்கத் தக்கனவாக அமையும்’ என்பதுதான்.
அத்தகைய முக்கியத்துவம் உடைய இந்தக் காலக்கட்டம் பலருக்குக் கசப்பாகவும் சிலருக்கு இனிப்பாகவும் இன்னும் சிலருக்கு இரண்டும் கலந்ததாகவும் அமைந்து விடுகிறது. இதுவும் விதியின் ஆடல்தான். அந்த ஆடலுக்கு நாம் ‘சரணாகதி’ அடைவது மட்டுமே நம்மால் இயல்வது. ஆனால், அது அப்போதும் நமக்குப் புரியாது.
நடுத்தர வயதில் வாழ்க்கையில் அல்லாடும்போது, “படிக்கிற காலத்துல ஒழுங்காப் படிச்சிருந்தா வாழ்க்கையில நல்ல நிலைமைக்கு வந்திருக்கலாம்” என்று கூறிக் கொண்டு நம்மை நாமே தேற்றிக்கொள்வோம். ஆனால், அது ஒரு பாவனையே. என்னுடன் பத்தாம் வகுப்பு வரை படித்த மாணவர்களுள் மிக அதிக மதிப்பெண் எடுத்தவன் இப்பொழுது ‘குட்டியானை’ (TATA Ace) ஓட்டும் வாடகை ஓட்டுநராகப் பணியாற்றுகிறான். எப்பொழுதுமே எல்லாத் தேர்வுகளிலுமே தோற்றுப் போனவன், பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் மட்டுமே அதுவும் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்று தன் தேர்ச்சி பெற்றவன் இப்பொழுது BSNL இல் வருவாய்த் துறையில் நான்கு மாவட்டங்களுக்கு ஒருங்கிணைந்த வருவாய் உயர் அதிகாரியாகப் பணியாற்றுகிறான்.
நடுவயதைக் கடந்து விட்டால் மட்டுமே இந்த விதியின் ஆடலைப் பற்றி நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். ‘நாம் அனைவருமே விதியின் கைப் பாவைகளே!’ என்பதை அப்போதுதான் நாம் முழுமையாக ஒத்துக் கொள்வோம். பின்னர் நம் மனது நமக்கு வாய்த்துவிட்ட வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு, பால்யத்தைப் பற்றி அசைபோடத் தொடங்கிவிடுவோம்.
வளரிளம் பருவத்தில் நம் மனத்தில் பதிந்த வடுக்களை (கசந்த அல்லது மகிழ்ந்த) மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்து அந்தக் காலத்தில் (இறந்த காலத்தில்) நம் மனத்தை மட்டும் நிறுத்தி, இந்தக் காலத்தில் (நிகழ்காலத்தில்) நினைவுகளால் வாழ்வது மட்டுமே நம் கையில் இருக்கும் நிலைத்த பொருள் என்பேன். இதை விடுத்து வீராப்புப் பேசுவதும் விதியை வசை பாடுவதும் எந்த வகையிலும் பொருளற்றதே!
இந்த நாவல் இதைத்தான் நமக்கு கற்றுக் கொடுக்கிறது. ஒவ்வொருவரும் இந்த வளர் இளம் பருவத்தைக் கடந்து வந்தவர்களே! அவ்வாறே கடந்து வந்த ஒரு குழுவினரைப் பற்றி, அவர்களின் ஏறத்தாழ 40 ஆண்டுகால வாழ்வு குறித்து இந்த நாவல் பேசுகிறது. ஆம்! பேசுகிறது. எழுத்தாளர் அந்தக் குழுவில் தன்னையும் ஒருவராக (உண்மையிலும் அவர் அவர்களுள் ஒருவர்தான்) இணைத்துக் கொண்டு அவர்களின் வாழ்வியலைப் பேசுகிறார். தேவைப்படும் இடங்களில் மட்டும் காட்சிகளைச் சித்தரித்துக் காட்டுகிறார்.
இந்த நாவல், ஒரு குறிப்பிட்ட கிராமம் அல்லது சிற்றூரின் நாற்பது ஆண்டுகால வாழ்க்கைப் பயணத்தை முழுமையாகப் பதிவு செய்கிறது. அந்த ஊரின் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள், காலம் காலமாக அவர்களின் பழக்கவழக்கங்கள், சிந்தனைகள், நம்பிக்கைகள் எப்படி மாறின என்பதைக் கதைநடையில் நம்முன் விரிக்கிறது. குறிப்பாகப் பள்ளிச்சூழல் இந்த நாவலின் முக்கியமான மையமாக இருக்கிறது. கல்வி என்பது தனி மனிதனின் வாழ்க்கையை மட்டுமல்ல, ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே மாற்றக்கூடிய சக்தி என்பதைக் கதையாசிரியர் பல நிகழ்வுகளின் வழியாக அழுத்தமாகச் சொல்கிறார்.
முதிராத இளமையில் உருவாகும் ஆண்-பெண் நட்புறவுகள், அவற்றைச் சுற்றிய சமூகக் கட்டுப்பாடுகள், தவறான புரிதல்கள், சந்தேகங்கள் ஆகியவையும் நாவலில் நுட்பமாகச் சொல்லப்படுகின்றன. இந்நட்புகள் இயல்பானவை என்றாலும் அவற்றைப் புரிந்துகொள்ளாத பெரியவர்கள் அதைத் தவறான கோணத்தில் பார்க்கும் நிலை எவ்வாறு இளம் மனங்களைப் பாதிக்கிறது என்பதும் தெளிவாக வெளிப்படுகிறது. இதனுடன் ஆசிரியர்–மாணவர்–பெற்றோர் என்ற மூன்று தரப்பினருக்கிடையேயான உறவுகள், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் இடங்களும் புரியாமல் மோதிக்கொள்ளும் தருணங்களும் இயல்பாகச் சித்தரிக்கப்படுகின்றன.
சாதிய அடக்குமுறைகள் இந்த நாவலில் மறைக்கப்படாமல் பேசப்படுகின்றன. கிராமச் சமூகத்தில் சாதி எவ்வாறு மனிதர்களைப் பிரிக்கிறது, ஒரே ஊரில் வாழ்ந்தாலும் சிலருக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவது எப்படி என்ற உண்மை மிக நேரடியாகச் சொல்லப்படுகிறது. அதேபோல் பொருளாதார வேறுபாடுகளும் முக்கிய இடம் பெறுகின்றன. வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் குடும்பங்களின் துயரம், வளமைக்கோட்டுக்கு மேல் இருப்பவர்களின் வசதி ஆகிய இரண்டையும் எதிரெதிராக நிறுத்தி, சமூகச் சமநிலையை நாவல் காட்டுகிறது.
சத்துணவுத் திட்டத்தின் இன்றியமையாமை பற்றியும் இந்த நாவல் முக்கியமாகப் பேசுகிறது. பல ஏழை மாணவர்களுக்குப் பள்ளி உணவே ஒரு நாள் முழுவதற்கான ஆற்றலை வழங்குவதாகவும் கல்வியைத் தொடர அதுவே ஒரு பெரிய காரணமாக இருப்பதாகவும் நாவல் உணர்த்துகிறது. இதன் மூலம் அரசுத் திட்டங்கள் சாதாரண மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றங்கள் தெளிவாகப் புரிகின்றன.
மூன்றாந்தர அரசியல் போக்குகள், அரசியல் இயக்கங்களின் செயல்பாடுகள், அரசு எந்திரத்தின் உள்ளரசியல்கள் போன்றவை கிராம மட்டத்தில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதையும் நாவல் வெளிப்படுத்துகிறது. அதிகாரம், அரசியல், நிர்வாகம் ஆகியவை ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து மக்களின் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதும் இதில் தெரிகிறது.
இது ‘தன் வரலாற்று நாவல்’ என்பதால், இதில் சொல்லப்படும் நிகழ்வுகள் கற்பனைக்கானவை அல்ல; அந்த ஊரின் உண்மையான அனுபவங்களின் பிரதிபலிப்புகள். ஆகவே, இந்த நாவல் ஒரு கதையாக மட்டுமல்ல, ஒரு சமூகத்தின் நம்பகமான வரலாற்றுச் சாட்சியாகவும் விளங்குகிறது.
தமிழ் இலக்கியத்தில் கைத்தேந்தவர்கள் மட்டுமே இந்த நாவலில் பல இடங்களில் வரும் எள்ளல் சுவையின் ஆழம் புரியும். இந்த நாவலில் கையாளப்பட்டுள்ள இலக்கிய சொற்கள் சார்ந்த சொல்லாடல்கள் அனைத்தும் எனக்கு மறைந்த எழுத்தாளர் க.சீ. சிவகுமார் (கன்னிவாடி) அவர்களையே நினைவூட்டின. அவருக்குப் பின்னர் அந்த வகையான ஓர் எழுத்து நடையினை நான் ஜா. ராஜகோபாலன் அவர்களிடமே, குறிப்பாக அவருடைய இந்த நாவலில் வழியாக மட்டுமே காண்கிறேன்.
நாம் ஒவ்வொருவரும் கடந்து வந்த பால்யத்தின் நிழலில் மீண்டும் மீண்டும் அமர்ந்து இளைப்பாற இந்த நாவல் நமக்கு நிகழ்காலத் தளமாக அமைந்துள்ளது.
(தெய்வநல்லூர் கதைகள் – நாவல், ஜா. ராஜகோபாலன், எழுத்து பிரசுரம், ஸீரோ டிகிரி பப்ளிஷிங், சென்னை. பக்கங்கள் – 395, விலை ரூபாய் – 475.)
– – –
