
கவிஞர் சீனு ராமசாமியின் ‘முதல் ருசி’ கவிதைத் தொகுப்பு வாசித்தேன்.
ஓவியர் ரவி பேலட்டின் அழகான ஓவியம். சந்தியா பதிப்பகத்தின் சிறப்பான வடிவமைப்பு.
ஆளில்லா காட்டில் காணும் மரமெல்லாம் துணைவன் என்னும் கவித்துவமான தலைப்பில் கவிஞரின் கவிதைப் பயணத்தை தன்னுரையில் சொல்கிறார். ஆளுமைகள் மற்றும் வாசிப்புப் பட்டியல் பிரமிக்க வைக்கிறது.
முதல் கவிதையான, அவனின் அவன் கவிதை, கோபத்தில் கைகள் நீளும், நமக்குள்ளிருக்கும், நமது நிழலைக் காட்டுகிறது.
ஓடை கவிதையில், தொலை தூரப் பறவையின், வயிற்றிலிருக்கும் ஓடையும் பறவையாகிறது. அழகு.
வழி கவிதை, வாழ்தலை, நமது தேவைகளை, மிகவும் எளிமையாக்கி விடுகிறது.
’எவருக்காவது உணவு தர
கொஞ்சம் பணம்
காலில் விழுந்து ஆசிபெற
வாழ்வாங்கு வாழ்ந்த
ஒரு மூத்த உயிர்’
பிதாவிடம் விண்ணப்பம் கவிதையில், கெட்டவற்றை காட்டும், பார்க்கும், ஆதரிக்கும் கண்களில் இருள் மூடிய, ஒரு பிடி மண் வேண்டுமென பிதாவிடம் வேண்டுகிறார் கவிஞர். ரௌத்திரம்.
கூடு கவிதை எனது கோழிக்குஞ்சை மிதித்தவன் கவிதையை ஞாபகப் படுத்தியது.
அறியாப் பருவத்தில் கூடு கட்டிய கிளையை முறித்தவனின் நினைவில், பறவை கூடு கட்டிக் கொண்டேயிருக்கிறது. குற்றவுணர்ச்சி.
சரண் கவிதையில் சரணாகதி:
‘கண் பார்த்து
வணங்கி நிற்கிறேன்
சொற்களற்று
இதற்குமேல்
எண்ணெய் குறைந்துகொண்டிருக்கும்
ஒரு விளக்கு
என்ன செய்யமுடியும்’
அனாதை நாய் கவிதை, நாயை மட்டுமா குறிக்கிறது?
‘தாமாக வளர்ந்து
அடித்தால் கேட்க ஆளில்லாத
ஒரு உயிர் என்றால்
இப்படிச் செய்கிறார்கள்’
பரிதாபம்.
பதைபதைப்பு கவிதையில், பறவை முயல்வதைப் போல, தினமும் நாமும் முயற்சி செய்து கொண்டேதான் இருக்கிறோம்.
‘உயிருக்கு முயல்வதென
ஒரு நாளைக்கு
ஒரு முறையேனும்
அடைபட்ட கூண்டின் கம்பிகளை முட்டி
சிறகுகள் படபடக்கிறது’
கவிதை எனும் தலைப்பிலான கவிதை ஒரு அழகு:
‘பலத்த காற்று வீசும்போது
மரத்தைக்
கட்டிப்பிடித்துக் கொள்கின்றன
அச்சிறுவனின் கவிதைகள்’
கவிஞனுக்கு கவிதையைத் தவிர, வேறேது புகலிடம்?
சுயம் அறிதல் கவிதையில், அவனிடம் மட்டும் அவனால் மன்னிப்பை பெற இயலவில்லை.
அம்மையின் பிள்ளைகள் கவிதையில், சோறிடும் அனைவரும் தாமாகவே தெரிகிறார்கள் கவிஞனுக்கு.
‘உச்சிப்பொழுதின் பசியில்
கண்கட்டும் வேளையில் உணவிட்டு
மறுசோறு கேட்காமலே
அள்ளி இலையில் இடும்
இரத்த உறவில்லாப் பெண்களெல்லாம்
அம்மைகளாகத் தெரிந்த
நிராதரவான அந்நாளை எனக்கு நினைவுறுத்தி’
வாழ்வு கவிதையில் வாழ்வின் நிலையாமைக்கு கவிஞனின் படிமத்தைப் பாருங்கள், எவ்வளவு அழகு:
வாழ்வு
மிகமிகச் சிறியது
பனியாரக்குழி அளவு’
முதல் ருசி கவிதை அருமையான படிமங்களால் நிரம்பி வழிகிறது:
‘நீ நீங்கத் தெரியாது
நாக்கில் ஊறும் முதல் கவுச்சியின் ருசி
—++
நினைவில் குழிவிழுந்த
பெரும் பள்ளம்’
உடன் வந்தவர்கள் கவிதையில் கீழ்க்கண்ட வரிகள் எனக்குப் பிடித்த வரிகள்:
‘அவர்கள் இரத்த உறவில்லாத
உற்றவர்கள்
இடறிய பெருவிரல் கட்டியவர்கள்’
சந்ததிகள் கவிதை சுயநலத்தை வெளிக்கொண்டு வந்து, கண்ணீரை வரவழைக்கும்:
‘எதுவும் சேர்த்துவைக்காத
தகப்பனின் கருப்பு வெள்ளைப் புகைப்படங்களை
மறதியாக
பழைய வாடகை வீட்டில்
விட்டு விட்டுப் போய்விடுகிறார்கள்
சந்ததிகள்’.
எனக்கு கவிதை, தன்னையே தேற்றிக் கொள்கிற ஒருவனின் குரல்:
எனக்கு
யாருமே இல்லாத வில்லை
நான்
என் கண்ணீரைத்
துடைத்துக் கொள்ள
நானிருக்கிறேன்’
சிறப்பான வாசிப்பு அனுபவம்.
