நிழற் கடிகை

அ.

வீட்டிற்குள் எப்போதுமே டி.வி. ஓடிக்கொண்டிருக்கிறது. நிரந்தர ஒலி மாசு. அலுவலகம் சென்று வீடு திரும்பினால் முதலில் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினை டி.வி.  நெடுந்தொடர்கள், சினிமாக்கள், சினிமாத் துணுக்குகள், நகைச்சுவை நிகழ்ச்சிகள், விவாத அரங்குகள், ஆடல் பாடல்கள் அல்லது சிறார் சேனல்கள் என்று.

சிறார் சேனல்களைப் பற்றி பெரிய அளவில் புகார்கள் ஒன்றும் இல்லை. என் மகளுக்கு சாப்பிடும்போது ஏதாவது ஒரு சிறார் சேனல் ஓடிக்கொண்டிருக்க வேண்டும் என்கிற கட்டாயந்தான் வயிற்றில் புளியைக் கரைக்கிறது. நீண்ட நாள் காத்திருப்பிற்கு பின்னர் கிடைத்த மகள். தேவைக்கு அதிகமாகவே செல்லம் கொடுத்து வருகிறோம். அவள் ஆசைகள் அனைத்தும் எங்களுக்கான உத்தரவுகளாக விழுகின்றன. மறுப்பது இயலாது.  வீம்பு கொண்டு மறுத்தால் அவள் அழுது அடம் பிடிக்கிறாள். அவள் அழுகை என் ஈரக்குலையைக் கசக்கும் கார்வை கொண்டது.

ஐந்து வயதே ஆன அவளுக்கு இந்த பொறுப்பற்ற போக்கிரிப் பெட்டியை பிரதானமாக பழக்கப்படுத்துவது குறித்து எனக்கு என்றுமே குற்றவுணர்ச்சிதான். பெற்றோர்களாக நாங்கள் அவள் விடயத்தில் அக்கறை அற்று இருக்கிறோமோ என்ற பரிதவிப்பும். அவளின் துரு துரு ஓட்டத்தை அஞ்சி, அவளை ஓரிடத்தில் நிலை நிறுத்தி வைக்க உடனே மேற்கொள்ளும் உபாயந்தான் டி.வி.யும் போகோ சேனலும். சோட்டா பீம், சிஞ்சான், இந்து பிந்து என்று நித்திய நிகழ்ச்சிகள். நுாறு முறைகளுக்கு மேலும் பார்க்க நேரிடுகிற காட்சிகள். வேறு வழியில்லாத இக்கட்டு.

அல்லது செல்போன். ஓய்ந்திருக்கும் நேரத்தில் செல்போன் அவளுக்குத் தேவைப்படுகிறது. செல்போன் டி.வி.யைவிட பன்மடங்கு விபரீதங்கள் அடங்கியது. தடை செய்யப்பட்ட டிக்டாக் செயலிகள் முகநுாலின் ஒட்டுண்ணிகளாக உருமாற்றம் எடுத்து  விரல் நுனிக்கு உடனே தட்டுப்படுகின்றன.

அதிலும் ஆண்களை விழத்தட்டும் ஆயிரம் சூழ்ச்சிகள். கண் பட்டதும் சுண்டியிழுக்கும் வெண் பெண்ணுடல்கள். தாண்டிச் செல்ல பெரும்பாலான சமயங்களில் கூடுவதில்லை. தொட்டு உள்ளே நுழைந்தால் தொலைந்தோம். அசால்டாக ஒருமணி நேரத்தை விழுங்கிக் கொள்கிறது. கண்ணி வெடிகளைப்போல வித விதமான பெரும் அழகிகள், அவர்களின் அதி பயங்கர வாளிப்புகள், ஊன் முகடுகள், உள்ளாடைக் கழட்டல்கள், உதட்டு உறிஞ்சல்கள், உடல்களின் உவத்தல்கள். ஒரு மணி நேரத்தில்  கண் ஓய்ந்து சோர்வு தட்டி முடிவில் திகட்டுகிறது. ஆனால் மறுநாள் அதே ஆர்வமும். கைநடுக்கமும்.

செறிந்து கிடக்கும் பாலியல் உபத்திரங்களை எண்ணும்போது பால்யத்தின் பரிதவிப்புதான் நினைவிற்கு வருகிறது. சுய இன்பத்திற்கான உத்வேக உடல்களைத் தேடித் தவித்த பரிதாபங்கள். அன்றைய வெகுஜன வாராந்திரிகள் ஒன்றே ஆறுதல். அவற்றின் நடுப்பக்கங்கள், முகப்புப் பக்கங்களில் காணக் கிடைக்கும் பெண்கள். மிகுதியும் சினிமா நட்சத்திரங்கள். இன்று பதின் பவருவத்தில் உள்ள சிறுவர்களுக்கு இந்த செல்போன்கள் பாலியல் காட்சிகளை அள்ளி அள்ளித் தருவதை நினைத்தால் பகீர் என்று இருக்கிறது. இவ்வளவும் காணும் அவர்கள் என்ன ஆவார்கள்? காமம் அவர்களை எந்தளவிற்கு உக்கிரம் கொள்ளச் செய்யும்? பெண்ணுடல்களின் மீது இத்தனை விருப்பக் கற்பனைகளை ஏற்றும் காட்சித் துணுக்குகள் தேவைதானா? அவை பெண்களுக்கு உண்டு பண்ணும் தொல்லைகள் எத்தனை?

  செல்போனும் இண்டர்நெட்டும் அறிமுகம் ஆகியிராத காலங்களில் வயல்வெளிகளிலும், பொட்டல்காடுகளிலும், நீர்நிலைகளிலும்  பொழுதுகள் கழிந்தன. கோவில் தோட்டங்களிலும், புறம் போக்கு நிலங்களிலும் காணக்கிடைத்த பறப்பன, ஊர்வன வேட்டை உயிர்களாக இருந்தன. ஊர்ச்சாவடிகளில் கதைகள் சொல்லும் பெரிசுகள் இருந்தார்கள். நான்கு புறமும் சுவர்கள் அற்ற கோவில் திண்ணைகளில் படுத்திருந்து மூன்றாம் சாமங்கள் வரை பழங்கதைகள் கேட்கலாம். வரலாறும், இனத் தொல்கதைகளும், சாமியார்களின் வாழ்க்கைச் சுவடுகளும், ஊரை மையம் கொண்டு நடந்து முடிந்திருந்த கொலைகளும் கொள்ளைகளும் செவிவழிச் செய்திகளாக, தீராக் கதையாடல்களாக பால்யத்தை நிரப்பின.

ஆனால் அப்போதும் சினிமா ஒரு கொள்ளை நோயாகத்தான் இருந்தது. வீட்டிற்குள் அதை அழைத்து வந்து விருந்து வைத்து உபசரிக்க அந்நாட்களில் கண்டு பிடிப்புகள் நிகழ்ந்திருக்கவில்லை அல்லது அவை இன்றைப்போல மலினப்பட்டிருக்கவில்லை. சினிமாக்களுக்கு சினிமாத் தியேட்டர்கள் ஒன்றே போக்கிடம். சினிமாக்களும் இத்தனை சீப்பட்டுப் போய் இருக்கவில்லை. மாவட்டத் தலைநகரங்களில் முதல் ரிலீசும், தாலுகா தலைநகரங்களில் இரண்டாம் ரிலீசும், கட்டக் கடைசியாக கிராமப்புறங்களையும் அன்றைய தமிழ் சினிமாக்கள் வந்தடைந்தன. கிராமங்கள் தோறும் டூரிங் டாக்கீஸ்கள் என்னும் யட்சிகள் உயிரோடிருந்தன. இரண்டு காட்சிகள் மட்டுமே ஓடக்கூடிய கேளிக்கை அரங்குகள்.

கருப்பு மழைக்கோடுகள் நெளியும் திரைச்சீலைகளில் சினிமாக்கள் பார்த்தோம். ஆற்று மணலைக் குவித்து  அமர்ந்து முறுக்கும், வறுத்த நிலக்கடலையும் வாங்கித்தின்று இரண்டாம் ஆட்டம். முடிந்து மைல்கணக்கில் ஒற்றையடிப் பாதைகளில் நடந்து வீடுகள் திரும்பினோம். கருப்பசாமியும், மாடசாமியும்,இசைக்கி அம்மன்களும், வடக்குவாச் செல்விகளும், காளியம்மன்களும், சுடலைகளும், சுடுகாட்டுப் பேய்களும், ஆல மர முனிகளும் உலாவிக் கொண்டிருந்தனர். அவர்களை வணங்கவும் விலக்கவும் மூத்தோர்களின் ஆலோசனைகள் கைவசம் இருந்தன. அவையெல்லாம் இன்று நம்ப முடியாத தகவல்கள்.

தெருவில் ஒரு சில வீடுகளில் மட்டுமே ஒளிர் விளக்குகள். என் வீட்டில் சிம்னி விளக்கு ஒன்றே இராத்துணை. பனையோலை வேய்ந்த குடிசைக்குள் எலிகளும் பாம்புகளும் பல்லிகளும் நாங்களும் வசித்தோம். ஒருவரின் பாதையை ஒருவர் மறித்துக்கொள்ளாமல். இரவில் படிப்பதற்காக தெருவிளக்கின் ஒளி வட்டத்திற்குள் அமர்ந்து கொள்வோம். எனக்கு இருபது வயதில் டி.வி.யும், இருபத்தைந்து வயதில் செல்போனும் சாத்தியமானது.

ஆறுமாதங்களே ஆன கைக்குழந்தை மூன்றாம் தர குத்துப்பாட்டுக்கு உடல் நெளித்து துள்ளி ஆட விழைவதைக் காண வாய்த்திருக்கிறது இன்று. அது வரமா சாபமா?

ஆ.

ஒரு வணிக நிறுவனத்தில் சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. எதிரே டேபிளில் கையடக்கப் புத்தகங்கள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஆர்வம் உந்த எக்கி எடுத்துப் பிரித்தேன். புதிய ஏற்பாடு. மேலோட்டமாகப் பக்கங்களை புரட்டினேன்.

பெரும்பாலான இடங்களில் கண்ணில் பட்டவை. நல்லுபதேசங்கள். பொய் சொல்லாதீர், சூது செய்யாதீர், பாவம் செய்யாதீர், பேராசை கொள்ளாதீர். இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒலித்துக்கொண்டேதான் இருக்கின்றன உபதேசங்கள். ஆயிரம் ஆயிரம் ஞானியர்கள் வந்து  போய் விட்டனர். கோடி கோடி மனித உயிர்கள் பிறந்து மறைந்து விட்டனர். ஆனால் உபதேசிகளும் உபதேசங்களும் நமக்கு எப்போதும் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

மனித மனங்களும் அவற்றின் இயல்புகளும் எப்போதுமே மாறப்போவதில்லை என்பதைத்தான் இவை ருசுப்படுத்துகின்றன. முன்பை விட இந்நாட்களில் மக்கள் தொகை அதிகம். காட்சிப்படுத்தும் தொழிற்நுட்ப ஊடகங்களும் அதிகம். ஆகவே அநீதிகளும் சுரண்டல்களும் அதிகம்.  எதுவும் புதிதாய் நடந்து விடவில்லை. கலிகாலம் என்று புலம்பத் தேவையில்லை. அயோக்கியர்கள் பெருகிவிட்டார்கள் என்று பிறரைச் சுட்டிக்காட்டி விட்டு அயோக்கித்தனங்களை தயக்கமின்றி செய்ய ஆரம்பிக்கலாம் போலும்.

இ.

ஈழத்தமிழ் இலக்கியங்களை நான் இதுநாள் வரை ஒதுக்கியே வைத்திருக்கிறேன். தமிழின் முக்கியமான படைப்பாளிகள் பலர் ஈழத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் அதிகம் வாசித்ததில்லை. ஷோபா சக்தி, அனோஜன் பாலகிருஷ்ணன் என சமகாலத்திலும், எஸ்.பொன்னுத்துரை, மு.தளைய சிங்கம் என சென்ற தலைமுறையிலும். முழுக்க வாசித்த ஒருவர் அ.முத்துலிங்கம் மட்டுமே. பிரமிளை தமிழ்ப்படைப்பாளி என்றே பாவிக்கிறேன்.

வாசிப்பின் முதற் தடை அந்நிலத்தில் ஏற்பட்டுள்ள மனிதப் பலிகள். அவற்றை வாசிக்கும் போது ஏற்படும் நிலையழிவுகள். கண் முன்னால் நிகழ்ந்துவிட்ட வரலாற்றுப் பேரழிவு. சராசரித் தமிழனாக நான் எவ்வளவு சௌகரியங்களோடு பாதுகாப்போடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதை கலைத்துப் போடும் இரத்த சாட்சிகள் அவை.

இன்று ஷோபா சக்தியின் ஸலாம் அலைக் வாசித்தேன்.

ஒரு விடுமுறை நாளினை தர்மசங்கடமும் குற்றவுணர்ச்சியும் கையறுநிலையும் மண்டி மூச்சுத் திணறலோடு கடக்க வேண்டியதாக இருந்தது.

துக்கத்தை என்ன செய்தாலும் கடந்து செல்ல முடியவில்லை.

ஈ.

சைதன்யாவை பள்ளியில் சேர்ப்பதில் எனக்கு ஈடுபாடு இல்லை. ஐந்து வயதாகிவிட்டது. இல்லாள் என் மீது தொடர்ந்து புகார்கள் தொடுக்க ஆரம்பித்தார். வேறு வழியின்றி வீட்டிற்கு அருகே உள்ள சி.பி.எஸ்.சி. பள்ளியில் சேர்த்துவிட ஒத்துக்கொண்டேன்.

அதற்கு முன்னேற்பாடாக நகரத்தைச் சுற்றிலும் செயல்பட்டு வந்த பள்ளிகளின் தகவல்களைச் சேகரித்தேன். அரசுப்பள்ளிகளை விட தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகம். அரசுப்பள்ளிகளை விட தனியார் பள்ளிகள் வாங்கும் கல்விக் கட்டணங்கள் மிக அதிகம். இருப்பதிலேயே மிகக் குறைந்த கல்விக்கட்டணம் எங்கே உள்ளது என்று விசாரித்தால் பெரும்பாலான பள்ளிகள் ஒரே விகிதத்தை கடைப்பிடிக்கின்றன. வேறு வழியின்றி வீட்டிற்கு அருகே உள்ள பள்ளி எது என்பதை மட்டும் கவனத்தில் கொண்டு தேர்வு செய்தேன். பெற்றோர்களாக வாழ நேரிடும் துக்கம் தொண்டையைக் கிழித்தது.

காலையில் அவளைப் பள்ளிக்கு அனுப்புவது தினசரி வாதை. பன்னிரெண்டு மணி வரை டி.வி. பார்த்துப்பழகி விட்டாள். காலையில் எழுந்திருப்பது எட்டுமணிக்கு மேல். அதுவும் ஆயிரம் முறை தட்டி எழுப்ப வேண்டியிருக்கிறது. காலைக்கடன்களைத் தீர்க்கவும், சீருடை அணிவித்து உணவு ஊட்டி கிளப்பி விடவும் பெரும் பிரயத்தனங்கள் தேவைப்படுகிறது. உச்ச நிகழ்வாக பள்ளி வேனில் ஏற்றி விடுவது. கதறி அழாத நாட்கள் மிகக் குறைவு. என்னிடம் செல்லம் அதிகம் என்பதால் பெரும்பாலும் பள்ளி அனுப்பும் படலத்தின்போது தலைமறைவாக இருந்து விடுவேன்.

இரண்டு கைகள் கூப்பி கும்பிட்டு “ஸ்கூலுக்குப் போகலப்பா” என்று கேட்கும் போது நாம் செய்வது சரிதானா என்ற நடுக்கம் ஏற்படுகிறது. இத்தனை வெறுப்பும் கசப்பும் அளிப்பதா பள்ளிகள்? குழந்தைகள் கொண்டாட்ட மனநிலையில் பள்ளிகளைத் தேடிச்செல்லும் காலம் எப்போது வாய்க்கும்?

உ.

கடும் ஒவ்வாமைகள் உள்ள இரண்டு தளங்கள் தமிழ் சினிமாவும், சமகால இந்திய அரசியலும். உண்மையென உணர்ந்த அரசியல் சமாச்சாரங்களை பொது வெளியில் பேசும் தைரியம் என்னிடம் இல்லை. பேசினால் நேரிடும் பின்விளைவுகளை எதிர்கொள்ளும் திராணியும் கிடையாது. யாரையும் அண்டிப் பிழைப்பதோ, யாரிடமும் ஆதரவு கோரி நிற்பதோ என் இயல்பில் இல்லை. எனவே சமகால அரசியலைப் பேசுவதையும் எழுதுவதையும் தவிர்க்கிறேன். அரசியல் பேடி நான்.

ஆனால் தமிழ் சினிமா மீது அந்தளவிற்கு அச்சம் இல்லை. அதைத் தொழுது உயிர் பிழைக்க வேண்டிய நிர்ப்பந்தமும் எனக்கு இல்லை. எனவே கொஞ்சம் உரிமையோடு அவற்றை விளாசலாம்.

முப்பதாண்டுகளுக்கும் மேல் இருக்கும் தமிழ் சினிமாக்கள் பார்க்க ஆரம்பித்து.  எண்பதுகளின் குழந்தை. ராமராஜனும், கார்த்திக்கும், கமல், ரஜினியும், விஜயகாந்தும் ஆட்டிப்படைத்த ரசிகப் பித்து என்னுடையது. ரஜினி ரசிகனாகவும் பிற்பாடு கமல் ரசிகனாகவும் வாழ்ந்திருக்கிறேன்.

பொங்கல், தீபாவளிக் கொண்டாட்டங்களில் முதன்மையான ஒன்று புதுப்படங்களைத் தேடிச்சென்றுப் பார்ப்பது. இராயகிரியில் இருந்து சினிமா பார்ப்பதற்கென புளியங்குடிக்கோ, சங்கரன்கோவிலுக்கோ செல்வேன். ராஜபாளையம் பக்கம் என்றாலும் பழக்கம் இல்லை.

என் பருவ காலத்தில் தெருக்கள் தோறும் டி.வி. டெக் வாடகைக்கு எடுத்துப் புதுப்படங்கள் போட்டுப்பார்க்கும் வழக்கம் இருந்தது. நானே கொஞ்சக் காலம் சைக்கிள் கேரியரில் குண்டி பெருத்த ஒனிடா டி.வி.யையும், அதற்கான டெக்கையும் உந்தித்தள்ளிச் சென்று படங்காட்டிவிட்டு திரும்பி இருக்கிறேன்.

வாசல்கள் தோறும் டி.வி.க்கள் வந்திருக்க வில்லை. சிலோன் ரேடியோ ஊடாக சினிமாப்பாடல்கள் தெருக்கள் எங்கும் கசிந்து பரவின. எட்டுமணிக்கும், பத்துமணிக்கும், மாலை மூன்றிற்கும், ஐந்திற்கும் இரவு ஏழிற்கும் ஒன்பதரை மணிக்கும் தேனிசை ஊற்றெடுத்துப் பருகக் கிடைக்கும். காத்திருப்போம்.

ஒரு தலைமுறைக்குள் எல்லாமே தலைகீழாக மாறிவிட்டன. இசையும் சினிமாவும் சலிக்க சலிக்க பார்க்கக் கிடைக்கிறது இன்று. அத்தனையையும் பார்த்துக் களிக்க வாழ்நாட்கள் கைவசம் இல்லை என்பதுதான் இன்றைய திகைப்பு. முப்பதாண்டுகளாக நான் இடைவிடாமல் பேணிவந்த தமிழ் சினிமா எனக்கு அளித்தது என்ன? அவை என் வாழ்வில் எந்த விதமான மாற்றங்களை உண்டு பண்ணியது? அவற்றில் இருந்து பெற்றுக்கொண்டதும் கற்றுக்கொண்டதும் உண்டா?

மாயக் காம உறுப்புகளைக் காட்சிகளாக பார்த்ததைத் தவிர வேறு ஒன்றும் நினைவில் எஞ்சவில்லை. கேளிக்கை என்பதில் கூட உயர் தரம்  வாய்க்கவில்லை. அன்றைய நட்சத்திர நகைச்சுவைக் காட்சிகள் இன்று வன் சுரண்டல்களாக, மனித குல விரோத நடவடிக்கைகளாகத் தோன்றுகின்றன. அன்றைய பெரும் நட்சத்திரங்கள் தவிர்க்க வேண்டிய கொள்ளை நோய்களாக அச்சுறுத்தி வருகின்றனர்.

பிற கலைகள் அனைத்தையும் ஒளித்துக் கட்டிவிட்டது தமிழ் சினிமா. அதன் விஸ்வரூபத்தின் முன் இலக்கியமும், இன்ன பிற கலைத்துறைகளும் உள்ளொடுங்கிப் போய்விட்டன. நவீன காட்சி ஊடகங்களின் வருகையும், கருவிகளின் தாராளப் புழக்கமும்  சினிமாவை காலத்தின் கட்டாயம் என்றாக்கிவிட்டன.

சரி. அவை சமகாலத்தின் சவால்களை பேசுகின்றனவா என்றால் துளியும் இல்லை. எண்பதுகளில் தொண்ணுாறுகளில் என்ன காணக்கிடைத்தனவோ அதே தரத்திலான பகற்கனவுகள். காமக் கிளர்ச்சிகள், வக்கிர நகைச்சுவைகள், உணர்ச்சி கர சுரண்டல்கள். போலிப் புரட்சிக் கூச்சல்கள் தான் தற்பொழுதும். முன்பை விட அவை பல்கிப் பெருகியிருக்கினறன.

என் தலைமுறையைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இந்தளவு சினிமா நெருக்கடி இருந்ததில்லை. நிறைய ஓய்வு நேரமும், விரும்பியதைச் செய்யும் சுதந்திரமும் இருந்தது. இன்றைய இளைஞர்களுக்கு அவை இல்லை. பகல் நேரத்தை பள்ளிகள் கொள்ளை கொள்கின்றன. ஓய்வு நேரத்தை காட்சி ஊடகங்கள் களவாடிக் கொள்கின்றன. போன்சாய் மரங்களைப் போல சிந்தனைக் கிளைகளை செதுக்கி ஒதுக்கி இன்றைய இளைஞர்கள் உருவாக்கப் படுகிறார்கள். பொருளியல் வெற்றியை நோக்கி குவிக்கப்படுகிறார்கள். அதன் பின்விளைவுகளை நாள்தோறும் வாசிக்க நேரிடும் செய்தித்தாள்கள் அப்பட்டமாக்குகின்றன. கேட்க நேரிடும் சம்பவங்கள் அச்சம் ஊட்டுகின்றன.

தமிழ் சினிமா, காட்சி ஊடகப் பெருக்கம், காசு ஒன்றை மட்டுமே நோக்கமாகக் கொண்ட தொழில் நிறுவனங்களின் சிந்தனைக் காயடிப்பு. இவைதான் இன்றைய சவால்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *