ஆராய்பவனல்ல கவிஞன்.
அளந்தும் பார்ப்பவனல்ல.
வாழ்வை அதன் சகல பரிமாணங்களிலும் பார்த்துப் பார்த்து வியப்பவன். வியந்ததைக் கொண்டாடுபவன்.
உள்ளிலிருந்து வெளியையும், வெளியிலிருந்து உள்ளையும் இருப்பின் வினோதத்தை அதன் / ஹெகலிய (Hegelian) முரண்தன்மை இயக்கவியலை அதிசயமாக ஆராதிப்பவன்.
புலன்வழி தாண்டி நுட்பமாக பிரக்ஞைப் பூர்ணமானவன்.
மொழியின் எல்லையை எந்நேரமும் அகலப்படுத்தும் தன்மை கொண்டதாக ஆக்குபவன்.
எத்தோடும் சமரசம் செய்து கொண்டும் நுண்ணியமாக எத்தோடும் சமரசம் செய்யாமலும், எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டும் நுட்பமாக எதையும் ஏற்றுக் கொள்ளாமலும் இருப்பை இல்லாதிருப்பதன் மூலமாகவும் இல்லாதிருப்பதில் இருப்பையும் கொண்டாடுபவன்.
எதையும் எதாலும் விமர்சிப்பவனல்ல.
மொழி ஊடகத்தின் மூலம் பிரபஞ்ச தரிசனமும் ஆன்ம மையத்தில் அமைதிப் பூர்ணமடைதலுமே கவிமனம்.
எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டு பெற்றுக்கொள்ளாமலும், கற்றுக் கொண்டு கற்றுக்கொள்ளாமலும், இருந்துகொண்டு இல்லாமலும், துன்பப் பட்டுக்கொண்டு துன்பப்படாமலும், துன்பமில்லாமலும், வாழ்ந்துகொண்டு வாழாமலும், இருப்பை அதனளவில் அப்படியே ஏற்றுக்கொண்டு கவிதானுபவம் மூலம் கொண்டாடுபவன்.
இந்த உச்ச முரண்தன்மை அபூர்வமானது. இந்தக் கோட்டித்தனம் ஆசிர்வதிக்கப்பட்டது.
கோட்டித்தனம், பைத்தியக்காரத்தனமல்ல.
பைத்தியக்காரத்தனம், அறியாமையில் பிறக்கிறது.
கோட்டித்தனம், அறிவு விழிப்புத்தன்மையிலிருந்து பிறக்கிறது.
பைத்தியக்காரத்தனம் அறிவை அழிக்கிறது.
கோட்டித்தனம், ஞானத்தைப் பிரசவிக்கிறது. வளைத்தல் என்ற வேர் வார்த்தை ‘கோட்டிக்கு.
அறிவை, அனுபவத்தை, போதனையை, இயல்களை, சரித்திரத்தை எல்லாவற்றையும் வளைத்துப்பார்த்து வியப்பவன் கோட்டி.
மனிதத்தில் இந்தக் கோட்டித்தன்மையால் ஆசிர்வதிக்கப் பட்டவர்கள்…
இசையில் மொஸார்ட்,
ஓவியத்தில் வான்கோ
சினிமாவில் கொடார்ட். ரித்விக் கதக்
விஞ்ஞானத்தில் தெஸ்லா
இலக்கியத்தில் தாஸ்தாய்வெஸ்கி,
கவிதையில் பாரதி, கபீர்…
விக்ரமாதித்யன்.
பூர்ண பிரக்ஞைநிலைக்கு அருகிலுள்ளது கோட்டித்தன்மை.
Cosmic Silence – பூர்ண பிரக்ஞை. கோட்டித்தன்மை ஒரு உச்சத்தில் அமைதிபூசி நிற்கும். மறு உச்சத்தில் ஆனந்தத் தாண்டவமாடும்.
“மழை
பெய்யாமல் காயும்போது
பெய்து நனைத்ததையும்
பெய்து பெருக்கும்போது
பெய்யாது கெடுத்ததையும்
மறுகிமறுகி நினைக்கும் மனம்”
இந்தக் கவிதையில் ‘பொருள்’ சம்பந்தப்பட்ட, ‘அறிவுஜீவிதம்’ சம்பந்தப்பட்ட, ‘ஆத்மவிசாரம்’ சம்பந்தப்பட்ட அனுபவங்கள். ‘மழை’யைச் சுற்றி அமைதியாக இருக்கிறது.
கவிதையைச் சுற்றிய அமைதி ஒரு தியானநிலைக்குச் செல்கிறது.
அடுத்து:
ஒரு குடம் தண்ணி ஊத்தி
ஒரு பூ பூத்ததாம்
கிச்சுகிச்சுத் தாம்பாளம்
கிய்யா கிய்யா தாம்பாளம்
குலைகுலையா முந்திரிக்கா
நரிநரியா ஓடிவா
*
நீச்சல் பழகு
சைக்கிள் பழகு
சண்டை பழகு
சமாதானம் பழகு
*
இல்லை இல்லை
இல்லை இல்லை
இதுதானே
எப்போதும் தொல்லை
*
உடைச்சுராதடா
நம்பி
கிழிச்சிராதடா
விக்கி
உடைச்சும் கிழிச்சும்தான்
உன் கோபம் தீர்க்கணும்
*
என்வினை முன்வினை
தன்வினை தமிழ்வினை
*
என்றாலும்
கரடி சைக்கிள் விடும்போது
நாம்
வாழ்க்கையை அர்த்தப்படுத்த முடியாதா
*
தில்லாலங்கடி தில்லாலங்கடி
தில்லாலங்கடி டோய்
தெம்மாங்கு பாடும் மனசை
தொலைச்சிடாத டோய்
கொண்டாடிக் கூத்தாடுகிறது கவிமனம்.
மகான்கள் அனைவரும் கோட்டித்தன்மை பெற்றவர்களே.
கோட்டித்தன்மை எதையும் தீர்க்க முயலாது.
எதிலும் ஐக்கியமாகவே செய்யும்.
பூவென்றால் பூவாகவே
காற்றென்றால் காற்றாகவே
எதுவென்றாலும் அதுவாகவே ஆகும் கவிமனம்.
இவர்
வார்த்தையில் இருக்கிறது வார்த்தை
வார்த்தையுள் இருக்கிறது வார்த்தை
வார்த்தை தாண்டி இருக்கிறது வார்த்தை
வார்த்தை மீறி இருக்கிறது வார்த்தை
வார்த்தையில் அடங்கி இருக்கிறது வார்த்தை
வார்த்தையுள் அமிழ்ந்து இருக்கிறது வார்த்தை
வார்த்தை நடுவே இருக்கிறது வார்த்தை
வார்த்தையில் பிரிந்து இருக்கிறது வார்த்தை
வார்த்தையில் இல்லாமல் இருக்கிறது வார்த்தை
வார்த்தையில் இருக்கிறது தரிசனம்
வார்த்தையுள் இருக்கிறது தியானம்
வார்த்தையில் அடைகிறது பிரக்ஞை.
“தன்னிலிருந்து தானெழுந்து தன்னிலிருந்து தன்னையெடுத்து தானே எஞ்சி…ஓம் சாந்தி ஓம் சாந்தி”
கவிமனம் விக்ரமாதித்யன்.
நன்றி – கே.ராஜேஷ்வர்

