18.எதுவுமே அறியாமல் எல்லாமுமான கவிஞன்

வாழ்வின்மீதும் மொழியின்மீதும் அலாதியான வேட்கையும் தீராத மோகமும் கொண்டவர் விக்ரமாதித்யன். கோப்பையை விடாது பிடித்துக்கொண்டிருப்பவர். இவ்வகையில் சற்றும் மனம் தளராதவர் நம் விக்ரமாதித்யன். ஒருபோதும் கோப்பையைத் தூக்கி எறிந்ததோ உடைத்துப்போட்டதோ இல்லை. வெற்றுக்கோப்பையைக்கூட, மாய ஊற்றுச் சுரக்கக்கூடுமென விடாது உறிஞ்சிக்கொண்டிருப்பவர். அப்படியாகச் சுரக்கவும் செய்திருக்கிறது. இவருடைய ஆசைகளும் அவதிகளுமே இவருடைய கவிதைகள். எதுவுமே அறியாமல் எல்லாமுமான கவிஞர் இவர். இவருடைய எல்லாமுமாகவே இவருடைய கவிதைகள் இயங்குகின்றன.

மொழிசார்ந்த இவருடை வாழ்க்கையும் அதற்கான கடும் உழைப்பும் மிகவும் பெறுமதியானவை. பல ஆயிரங்களை சம்பளமாகப் பெறும் பல பேராசிரியர்கள் வாழ்நாள் பணிகளின் மொத்தத்தையும்விட, கூடுதல் உழைப்பு. அது வருமானமற்றது என்பதால் உழைப்பற்றது என்பதல்ல. அவரே ஓரிடத்தில் இப்படிக் கூறியிருக்கிறார்:

“எனக்குத் தரித்திரம் என்பது தமிழால் வந்தது. அது தமிழால் போகுமானால் போகட்டும். தமிழாலேயே கவிதையும் வந்தது. கவிதையை ஏற்றுக்கொள்கிறவன் தரித்திரத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்குமென்றால், அது தமிழினத்துக்குக் கேவலமே தவிர எனக்கல்ல”.

ஆக, மொழிசார்ந்த வாழ்க்கையும், அயராத உழைப்பும் அவருடையவையாக இருக்கும்போது கேவலம் அவருக்கல்ல. மொழி, இன, பண்பாட்டுப் பாதுகாவலர்களே இவருடைய தரித்திரத்துக்கான கேவலத்தை ஏற்கவேண்டும். மொழிசார்ந்த கடும் உழைப்பை நாற்பது ஆண்டுகளாகத் தரித்திரத்தோடு தொடர்ந்து கொண்டிருப்பவர். வெகு சமீபத்தில் வெளிவந்திருக்கும் “வியாக்கிழமையைத் தொலைத்தவன்” உட்பட பதினைந்து கவிதைத் தொகுப்புகள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், எட்டு கட்டுரைத் தொகுப்புகள் ஆகியவை இன்றுவரையான இவருடைய வாழ்வின் பங்களிப்புகளாக அமைந்து மொழிக்கும் மரபுக்கும் வளம் சேர்த்திருக்கின்றன.

தம் படைப்புவெளிப் பயணத்தில் தமக்கென ஒரு தனித்துவமிக்க மொழிநடையைக் கண்டடைந்தவர்களும் வசப்படுத்தியவர்களும் பெரும் பாக்கியசாலிகள். அப்படியான ஒரு பாக்கியசாலி விக்ரமாதித்யன். அவருடைய கவிதைமொழி தனித்துவமானது. அவருடைய பிரத்யேக பாக்கியசாலிகள். அப்படியான ஒரு பாக்கியசாலி விக்ரமாதித்யன் அடையாளங்கள் கொண்டது. எளிமையின் வசீகரத்தோடு அது அமைந்துவிட்டிருப்பது இன்னும் விசேஷம். உள்ளார்ந்த வறுமையிலி ருந்து உருவாகும் பதற்றத்தையும் அச்சத்தையும் மூடி மறைப்பதற்கான உபாயமாக வெளியீட்டு முறையிலும் மொழிநடையிலும் நிகழ்த்தப்படும் பூச்சுவேலைகள் எதுவும் இவர் அறியாதது.

படைப்பு மனத்தின் ஸ்ருதிகூடிய இசைமொழியே இவருடைய கவிதைமொழி; நம்மைத் தொடக்கூடியது, மாயமாய்; நம்மால் தொட்டுணரக்கூடியது. மொழிப் பிரயோகத்தில் துல்லியம் கூடிய மொழி ஆளுமையாளர்.

விக்ரமாதித்யனைப் பற்றிப் பேசுவதும், அவருடைய கவிதைகளைப் பற்றிப் பேசுவதும் வேறுவேறானவை அல்ல. அவர் என்னவாக இருக்கிறாரோ அதுதான் அவருடைய கவிதையாகவும் இருக்கிறது. நான் என்னவாக இருக்கிறேனோ அது இல்லை நான்’ என்பதான ஒரு ஸ்திதி அவருக்கு ஒருபோதும் நேர்ந்திருக்காது என்றே நினைக்கிறேன். நவீனத்துவத்தின் சிறு பாரத்தையும் அவர் சுமக்க நேரிட்டதில்லை. அவர் எழுதத்தொடங்கிய எழுபதுகள்தாம் தமிழில் நவீனத்துவம் உச்சத்தை எட்டிக்கொண்டிருந்த காலம். அப்போதும்கூட மரபின் தொடர்ச்சியாக, தனித்துவத்திறனோடும், படைப்பூக்கத்துடனும் தனித்ததொரு பாதையில் சற்றும் சளைக்காது பயணம் செய்தவர். ஓர் அழகிய பாதையாக அதை வடிவமைத்தவர். எந்தவொரு மோஸ்தரும் அவரை அண்டியதில்லை. இது சாதாரண விஷயமில்லை. தான் என்ன செய்கிறோம், தான் யாராக இருக்கிறோம் என்பதில் தீர்க்கமான பிடிமானம் கொண்டிருந்தால் மட்டுமே இது சாத்தியம் விக்ரமாதித்யனுக்கு இது மிக சகஜமாக சாத்தியப்பட்டிருக்கிறது. மரபின் உள்ளார்ந்த பலத்திலேயே இது கூடியிருக்கும் என்று தோன்றுகிறது.

நல்லதொரு குடும்ப மனிதனாகவும் சமூக மனிதனாகவும் வாழவேண்டுமென்ற ஏக்கத்துடனேயே, அதற்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பவர். இவருடைய இத்தகைய நடவடிக்கைகள் கொஞ்சம் கலவரத்தையும் சலசலப்பையும் உண்டுபண்ணுகிறவை. அவை உள்ளார்ந்த பலத்துடன் கூடிய கலகமில்லை. அதே சமயம், அவை நோக்கமற்றவை என்பதுமல்ல. சலிப்பும் உற்சாகமுமாகத் தொடர்ந்து  கொண்டிருக்கும் ஒரு பழக்கமாக அது அவரிடமம் இருந்துகொண்டிருக்கிறது. வேறு வழி அறியாது அவரைத் தொடர்ந்து  கொண்டிருக்கிறது அது. வேறுவழி அறியாது அதைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் இவர்.

எது எப்படியென்றாலும் ஒரு விந்தையான அழகும் ஈர்ப்பும் இவர் வாழ்விலும் எழுத்திலும் இருந்து கொண்டிருக்கின்றன இவரின் ஏக்கமாக மற்றவரும் மற்றவரின் ஏக்கமாக இவரும் இருந்து கொண்டிருப்பதால் ஈர்க்கப்படும் கவர்ச்சியாகவும் இது இருக்கலாம். ஒவ்வொரு காலமும் வாழும் நெறிகளை விதிகளாக வலியுறுத்திக்கொண்டே இருக்கின்றன. அதேசமயம், வாழ்தலின் வேட்கைக்கான மீறல்களும் முரண்டுகளும் போராட்டங்களும் அவ்விதிகளுக்கெதிராக நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இந்த மோதல்களில் இருந்துதான் புதிய நியாயமும் புதிய விதிகளும் உருக்கொள்கின்றன. இவ்விரு பாத்திரங்களையும் ஒருசேர ஏற்றுத்திரியும் சுவாரசியம்தான் விக்ரமாதித்யன்

‘மொஹல் ஏ ஹாசம்’ என்ற திரைப்படத்தில் ஒரு காட்சி: அனார்கலி மீது கொண்ட எல்லையற்ற காதலுக்காக, அவளை மீட்கும் பொருட்டும் அடையும் பொருட்டும் அரச பதவியை உதறிவிட்டு, தன் தந்தை அக்பருக்கு எதிராக யுத்தம் மேற்கொள்கிறான் சலீம். அக்பரின் தூதுவராக சலீமிடம் வருகிறார் ஓர் அமைச்சர். அவர் சலீமிடம், “அரச பதவியைத் துறந்துவிட்டு எனக்கும் நாட்டுக்கும் எதிராக யுத்தம் தொடங்குமளவு சலீமை ஆட்டுவிக்கும் அனார்கலி அப்படியொன்றும் அழகாகவும் இல்லையே” என்று அக்பர் வருத்தப்பட்டதாகத் தெரிவிக்கிறார். அப்போது அவரிடம் சலீம் சொல்லும் ஒரு வரிப் பதில்: “சலீமின் கண்களால் பார்க்கச் சொல்”.

விக்ரமாதித்யனின் அருமையை உணர, சமூக மதிப்பீடுகளின் கண்களோ, கோட்பாடுகளின் கண்களோ, மோஸ்தர்களின் கண்களோ கொஞ்சமும் உதவாது. அதற்கு, மொழியும் மரபுமான கண்கள் வேண்டும்.

சிறந்த எழுத்துகள் ஒருபோதும் எவருக்கும் சொந்தமானவை அல்ல. அவை மொழிக்கும் மரபுக்கும் உரியவை. விக்ரமாதித்யனும் அவ்வாறே, நம் மொழிக்கும் மரபுக்கும் பெறுமதி. இவர், எதுவுமே அறியாமல் எல்லாமுமான கவிஞன்.

விளக்கு விருதளிப்பு விழாவில் படிக்கப்பெற்ற கட்டுரை

(மந்திரச்சிமிழ் ஜனவரி – ஜூன் 2010)

நன்றி – சி.மோகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *