11.விக்ரமாதித்யன் கவிதைகள் – ஒரு வாசிப்பு

சமீபத்தில் விக்ரமாதித்யன் முழுக் கவிதைகள் தொகுப்பை வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. தீர்க்கமான கண்கள், கூர்மையான நாசி, நீளமான தாடி  என்று அட்டையில் கன கம்பீரமாக இருக்கிறார் விக்ரமாதித்யன். நவீன கவிதைகள் பற்றி அதிகம் அறியாமல். படித்தாலும் பெரும்பாலும் புரியாமல், தலையைச்  சொறிந்து கொண்டிருந்த நிலையில் அந்த புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன்.

சுமைதாளாது

முறிந்ததென் அச்சு

பால் விஷமானது போலென் இருப்பு

கர்ணனைக் கொன்றது போல

கொல்கிறார்கள் என்னையும்.

என்னும் பின் அட்டைக் கவிதை கொஞ்சம் பயமுறுத்தினாலும் தைரியமாக புகுந்து விட்டேன்.

சும்மா சொல்லக் கூடாது. நவீன கவிதைகள் என்றால் என்ன என்பதன் விளக்கம் தெரியாமலேயே (பல நவீன கவிஞர்களுக்கே விளக்கம் தெரியாது என்பது வேறு விஷயம்) உள்ளே புகுந்த என்னை பல இடங்களில் கட்டிப்போட வைத்தன விக்ரமாதித்யன் எழுத்துகள்.

பல கவிதைகள் யதார்த்தமாய், வாசகனை வீணாய் சிரமப்படுத்தாமல் எழுதப்பட்டிருக்கின்றன. பெரும்பாலான கவிதைகள் நடைமுறை வாழ்வின் அனுபவப் பிழிவுகளிலிருந்துதான் எடுக்கப் பட்டிருக்கின்றன என்பது கூடுதல் சிறப்பு.

அன்று

மறதியில்

இன்று

போதையில்

செருப்பு தொலைவது மட்டும்

மாறவே இல்லை

என்பது அப்படிப் பட்ட கவிதைகளில் ஒன்று.

வண்ணத்துப்பூச்சிகளைக் கனவு காணாமல் சோற்றுப் பருக்கைகளைக் கனவு காணும் சிறுவர்கள், பாவப்பட்ட ஜனங்கள் என்று ஆங்காங்கே கவிதைகள் சமுதாயக் கவலை குறித்தும் பேசுகின்றன. ஆனாலும் கவிஞனையும் கவிஞனைச் சுற்றி நடக்கும் சம்பவங்களையுமே பெரும்பாலான கவிதைகள் பேசுகின்றன.

வெளி,அத்துவானம்,பிராணன்,நித்தியம்,ஜனங்கள்,ஸ்பரிசம்,ஆத்ம சமர்ப்பணம், நிர்விசாரம், ஷணம்,விருட்சம்,கால ஓர்மை, ஜ்வலிக்கிறது, சுயம்….போன்ற வார்த்தைகள் இல்லாமல் நவீன கவிதை இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை இந்தக் கவிதைகள் நிரூபிக்கின்றன.

அவர்கள்

பேசுவது பகவத் கீதை

பின்னால் இருக்கிறது

பாதுகாப்பான வாழ்க்கை

என்று நறுக்குத் தெறித்தாற்போல நேரடியாகச் சொல்லிவிட்டுச்  செல்லும் கவிதைகள் வெகுவாக ரசிக்க முடிகிறது.

ஒரு பசி தெரிந்து

உயிர்ப்பசி உணர்ந்து

ஒரு உயிர் உருகும்

ஊழியூழிக் காலமாக

என்னும் சாயல் கவிதைகள் என்னவோ வேண்டுமென்றே வார்த்தைகளைத் திணித்து வாசகனை மூச்சு முட்டச் செய்கின்றன போல் தெரிகிறது. இதை விட எளிமையாய் இந்தக் கவிதையை எழுத முடியாது என்று விக்ரமாதித்யன் வாதிடமாட்டார் என்று நம்புகிறேன். இது ஒரு சின்ன உதாரணமே.

இயல்பாய், எளிமையாய் சொல்லப்பட்டிருக்கின்ற கவிதைகள் தரும் ஈடுபாட்டை இந்தக் கவிதைகள் எனக்குத் தரவில்லை.அது நவீன கவிதைகளைப் பற்றிய என்னுடைய அறியாமை சம்மந்தப்பட்டதே என்று நம்புகிறேன்.

நதிகளை

மறிப்பதில்லை ஓடைகள்

மாறாக

கலந்து விடுகின்றன…

 

அவன் திருட

இவன் திருட

அதையெல்லாம் பார்த்து

நீயும் திருட

நான் மட்டும்

வானத்தில்

நிறைய நட்சத்திரங்கள்

பூமி

எதிர்பார்த்திருப்பது மழை

இப்படி நிறைய கவிதைகள் மின்னலாய் தெறிக்கின்றன. கவிதைக்கு வார்த்தைகளின் அலங்காரம் தேவையில்லை. அது  சொல்லும் உணர்வே முக்கியம் என்பதை இந்தக் கவிதைகள் சொல்லாமல் சொல்கின்றன.

தரித்திரத்தில் கெட்டது ருசி

இது தொகுப்பில் இடம் பெற்றுள்ள ஒரு வரிக்கவிதை. பசி வந்தால் பத்தும் பறந்துபோகும் என்பது பழமொழி. பசி ருசியறியாது என்பது வழக்கமாகச் சொல்லும் வார்த்தை. இங்கே தரித்திரம் என்னும் சொல்லையும் அழைத்துக்கொண்டு அது நவீன கவிதையாய் நிற்கிறது.

பூக்களும் பெண்களும்

பார்க்கச் சலிப்பதில்லை

என ஆங்காங்கே தெரியும் சில இருவரிக் கவிதைகள். “சரி..அதற்கென்ன?“ என்று கேட்க வைக்கின்றன. சாதாரண துணுக்குகள் போல ஒருசில கவிதைகள். உதாரணம் அடக்கியாளவும்- படிக்கவு வேண்டும். (அவ்வளவுதான் கவிதை)

சும்மா சும்மா

சும்மா

என ஆரம்பித்து

சும்மா சும்மா சும்மா

எல்லாமே ஒரு சும்மா

என முடிகிறது ஒரு கவிதை. கவிதையில் மொத்தம் 25 சும்மாக்கள். நானும் சும்மா வாசித்து வைத்தேன். அவர் சும்மா எழுதிப் பார்த்திருப்பார் என சும்மா நினைத்துக்கொண்டேன்.

இதே போல வரி/ வரி/ வரிசையாய் /வரி வரி.. என்று வரிக்கவிதை சொல்கிறார் ஓரிடத்தில். எல்லா வரியும் அரசுக்கே என்று முடிகிறது அந்த 12 வரிக் கவிதை. (வரி வரி யாய் வரி- வரிக்குதிரை முதுகில் வரி..என்று உங்களுக்கு இப்போது ஒரு கவிதை தோன்றினால் அதற்கு நான் பொறுப்பல்ல)

கண்ணாடியில்  தெரியும் கவிதை

கண்ணாடி பார்க்கும் வயசு

கண்ணாடியில் படியும் துாசு

போல சில கவிதைகள் சாதாரணமாய் தோன்றி சிந்திக்கச் சிந்திக்க பிரமிக்க வைக்கின்றன.

என்ன செய்வான் கவிஞன்-என்ன சொல்ல? என்றெல்லாம் பல கவிதைகள் பேசுகின்றன. கவிதைகளின் வார்த்தை அமைப்பு, நவீனம் இவைதான் வித்தியாசமே தவிர இதே கவிதைகளின் கருத்துகளை எல்லா விதமான கவிஞர்களும் சொல்லியிருக்கிறார்கள். அவரவர் பாணியில்.

எனக்குப் பிடித்த கவிதை இது

அரசியல் வாதிகள் /கனவுகள் வினியோகிக்கிறார்கள்

சினிமாக்காரர்கள் /கனவுகள் வினியோகிக்கிறார்கள்

மதவாதிகள் /கனவுகள் வினியோகிக்கிறார்கள்

ஆனாலும் ஜனங்கள் கஷ்டப்படுகிறார்கள்

கனவுகள்  போதாமல்

இங்கே கவிதை முடிந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அதை இன்னும் கொஞ்சம் நீட்டியிருக்கிறார் கவிஞர். யாருக்கு /வேண்டும் உண்மை.

ஜனங்களுக்குத் தேவை/ கனவுகள். கனவுகளிலேயே /வாழ்கிறார்கள் ஜனங்கள் என்று.

இந்தப் புத்தக வாசிப்பு, ஒரு வித்தியாச அனுபவம் என்பதை மறுக்க முடியாது. நவீனமானாலும், புதுக் கவிதையானாலும், மரபுக் கவிதை ஆனாலும், அவை தமிழுக்கு அழகாய் சில கவிதைகள் தந்தால் பாதுகாக்கப்பட வேண்டியதே.

அந்தப் பட்டியலில் இந்த தொகுப்பும் ஒன்று.

புதுமைப்பித்தன் பதிப்பகம், 52 முதல் தளம், 4 வது தெரு, அஞ்சுகம் நகர், அசோக் நகர், சென்னை 600083

விலை ரூ.100

நன்றி

திரு.சேவியர்

திண்ணை இணைய இதழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *