மறைந்த இயக்குநர் ஒருவரின் நினைவேந்தல் கூட்டத்தில் மணி சாருடன் கலந்துகொண்டேன். என் முன்னால் இருக்கையில் கால்மேல் கால்போட்டு இரு கை விரல்களும் முட்டியுடன் கோர்த்தபடி தன் கூந்தல் பின்முதுகைத் தொட தலையைக் கொஞ்சம் சரித்து உரையைத் தீவிரமாகக் கேட்கும் கூர்மையில் இருந்தார். அந்த இயக்குநருடன் நெருக்கமானவர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு என்பதால், பலரும் தங்களுக்கான நினைவைப் பகிரக் காத்திருந்தனர். அதில், இயக்குநருடன் இருந்த ஒருவர் தனக்கும் மறைந்தவருக்குமான உறவு குறித்தும் அந்த இயக்குநர் என்னை ஏன் தேர்ந்தெடுந்தார், நாங்கள் இருவரும் இணைந்து என்னென்ன செய்யத் திட்டமிட்டிருந்தோம் என தன் சுயபுராணத்தை இணைத்து பேசிக்கொண்டே சென்றார்.
மணி சார் திரும்பி என்னைப் பார்த்து மெல்லிய குரலில், ‘ஓத்தா பேசிகினே இருக்கான். சாவுக்குனே தயார் பண்ண பேச்சு’ என்றார். நான் சிரித்துவிட்டேன். மணி சாரின் உரையிலோ நேர்ப்பேச்சிலோ எந்தவித சம்பிரதாயங்களும் இருக்காது அல்லது அப்படியான நேர்த்தியை அவர் விரும்பவில்லை. சில சொற்கள் வைத்திருக்கிறேன். உள்ளிருந்து வருபவையாகவும், உணர்ச்சி வேகத்தில் அவருடனான நினைவில் சிறு புனைவைக்கூட கலந்துவிடக்கூடாது என்பதால் நானும் அவரும் எப்படி நண்பர்களானோம், எப்படி சந்தித்துக்கொண்டோம் என்கிற ‘ஒழுங்கான’ நினைவுக்குறிப்பைத் தவிர்க்கிறேன்.
ஒருநாள் இருக்கிறாரா இல்லையா எனத் தெரியாமலே அவர் வீட்டுக் கதவைத் தட்டினேன். சில நொடிகளில் கதவு திறந்ததும் மலர்ச்சியுடன் என்னை எதிர்கொண்டார். ‘அய்யோ கால் பண்ணிருந்தீங்களா? பார்க்கவே இல்ல’ தன் படுக்கையறை நோக்கி தலை திருப்பியவரிடம் இந்தப் பக்கமாக வந்தேன் என பொய்யைச் சொல்லி அறைக்குள் நுழைந்தேன். உண்மையில், அன்று காலையிலிருந்து சில பொருளற்ற எதிர்மறை எண்ணங்களாக இருந்தன. மனநிலையை மாற்றிக்கொள்ளவே திடீரென சென்றிருந்தேன். வழக்கம்போல் தன் படுக்கையறை மெத்தையில் உட்கார்ந்தபடி, ‘நேத்து ஒரு ஸ்கிரிட் வேலைல இருந்தேன். நல்லா வந்துருக்கு. படமா பார்க்கற ஆவலை ஒன்னோ ரெண்டோதான் தரும். அதுல இது ஒன்னு.. என்ன பண்ணுவாங்கன்னு தெரியல’ என்பார். இந்த ‘என்பார்’ கான பொருள் சினிமாவில் எழுதிக்கொண்டிருக்கும் பெரும்பாலானவர்களின் நிலை. அதில், அவரும் விதிவிலக்கில்லாமல் இருந்தார். என்னென்னவோ கேட்டு, இறுதியாக பிரிந்த என் காதலியுடனான நினைவைப் பகிர்ந்தேன். உடனே, ‘ரொம்ப நல்லதுதான். எழுத வர்ரவங்க வாழ்க்கைல அடிக்கடி பிரிவுகளைச் சந்திச்சுகிட்டே இருக்கணும். அதுவும் கேள்விகளை எழுப்பி, ஒவ்வொரு முறையும் சுயவெறுப்புக்கு ஆளாகி நாம் எவ்வளவு பெரிய கிறுக்கர்கள்னு தெரியணும். அந்த வகையில உங்களுக்கு நடந்தது தேவையானதுதான்’ என்றார்.
“என்ன கொடுமை? இப்படியெல்லாம் ஒருத்தனுக்கு நடக்கலாமா?” என்கிற எந்த ஆறுதல் வார்த்தைகளையும் கேட்டதில்லை. “அனுபவம் வேணுங்க.. இப்படியெல்லாம் கிடைச்சாதான் உண்டு” என சாதாரணமாகக் கடந்துவிடுவார். பின்நாள்களில் காலம் கரையக் கரைய அவர் சொன்னவற்றின் அர்த்தம் அழகாக துலங்கி வரும்.
ஆச்சர்யமான ஒன்றை இப்போது நினைத்துப்பார்க்கிறேன். மணி சாரிடம் இதுவரை ஒருமுறை கூட நிலைகுலைவான குணத்தை எதிர்கொண்டதே இல்லை. முதல்முறையாக என்ன மனநிலையில் என்னை சந்தித்தாரோ இறுதிவரை அதுவே நீடித்திருக்கிறது. படைப்பாளிகளுக்கே உண்டாக இரண்டாம் கெட்ட மனநிலையை என்னையும் சேர்த்து பலரிடம் பார்த்தாகிவிட்டது. ஒருகணத்திலாவது எங்காவது உந்தப்பட்டுக்கொண்டே இருக்கும் மனதை ஏன் என்னால் அவரிடம் இறுதிவரை காண முடியவில்லை என்பது வியப்பானது.
இலக்கியம், சினிமா என மணிக்கணக்காக பேச்சுகள் நீண்டாலும் புறச்சூழல் அவரை துண்டிக்காது. வெளியிலிருந்து அறைக்குள் வரும் ஓசைகளோ, தேவையற்ற அழைப்புகளோ பேச்சை தடையிட்டாலும் மீண்டும் விட்ட விசையிலிருந்தே பட்டத்தை மேலேற்றுவார். இருபது வயது இளைஞரிடமும் மூத்தவர்களிடமும் ஒரே மாதிரியான பிம்பத்திலேயே நீடித்தார். தன் கருத்தை எப்படி சொன்னால் ஒருவருக்குப் புரியும் என்பதில் திறனாளர். ஓரிரு வரிகளிலேயே தான் அடைந்த சிந்தனை எப்படியானது என்பதைக் கடத்தி நம்மை திகைப்பில் ஆழ்த்திவிடுவார்.
ஹே ராமில் கமல்ஹாசன் என்னவெல்லாம் செய்தார் என நாம் காட்சிகளாக விளக்கிக்கொண்டிருந்தால், ‘சங்கர் அதுல அங்குசத்தைத் தூக்கிட்டு யானை ஒன்னு நடந்து வரும்… கண்ணு தெரியாத குழந்தை யாரையோ தேடிட்டு போகும்.’ என நம்முடைய சுதந்திர காலத்தை விளக்குவார். எந்த இடத்திலும் தன் ஆணவத்தை முன்னிருத்தும் தேவை அவருக்கு எழுந்ததில்லை. மேடையிலோ, விவாதத்திலோ நேர்த்தியான பேச்சால் அடித்து விடுவார். மடக்கிக் கேட்பதற்கு எதுவும் இருந்ததில்லை. ஒரு படைப்பு நமக்குப் பிடித்திருக்கின்றதென்றால் அது எல்லாரையும் கவர்ந்திருக்க வேண்டியதில்லை என்கிற அடிப்படை அறிவுகூட பலரிடம் இருப்பதில்லை. அப்படியான கோமாளிகளுக்கு மத்தியில் அவர் உரையாடிக்கொண்டிருந்தது பெரிய விசயம்.
அவர் சினிமாவிலேயே இருந்து மேதைகள் நம் வாழ்க்கைக்காக என்னென்ன செய்தார்கள் என்பதை நினைத்து வியந்தவர். சினிமாவிற்குள் இருந்தால் எப்படியாவது நமக்குள் வளைந்து கொடுக்கும் தன்மை வந்துவிடுகிறது. அதை எதைக்கொண்டும் நேராக்க முடியாது. சில விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால், பெரும்பான்மை திரையில் அடித்துச் செல்லப்படும். திரையுலகில் இருக்கும் அந்தரங்கமான விசயங்கள் பற்றி பகிர்ந்து கொள்ள மாட்டார். ஒருமுறை பேசிக்கொண்டிருந்தபோது ஒரு பெரிய நடிகரின் பெயர் விவாதத்திற்குள் வந்ததும் கூடவே ஒரு நடிகையின் பெயரை உச்சரிக்க வாயெடுத்தவர் அப்படியே நிறுத்திக்கொண்டார். நான் அவரைப் பார்த்ததும், ‘விடுங்க.. தேவையில்லாதது’ என்றார்.
ஆனால், எங்களின் பேச்சு மணிக்கணக்காக நீளும்போது அவர் இரண்டு பெண்களை நினைவு கூர்ந்திருக்கிறார். ஒன்று, இளவயதில் அவருக்கிருந்த காதல். அந்தக் காதலைப் பற்றி அவர் பேசும்போதெல்லாம் முகம் பளபளக்கும். எப்போதாவது, நிகழ்வுகளில் சந்திக்கும்போது அப்பெண்ணின் பார்வை இவரை ’கொன்று’ செல்வதைப் பற்றி நிறைய சொல்லியிருக்கிறார். காலம் கடந்தபின் காதல் என்பது மிக மிக அன்பான ஒன்றாக மாறிவிடுவதை அவரிடமிருந்தே உணர்ந்துகொண்டேன். இன்னொன்று, இவர் நேரடியாகப் பார்த்த ஒரு பெண் குழந்தை. அந்தப் பெண் குழந்தைக்குப் பத்தோ பன்னிரெண்டோ வயதிருக்கும்போது அவளின் தந்தை ஒருமுறை மணியை வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். மகளைத் தந்தையே வெந்நீரில் குளிப்பாட்டி கொஞ்சம் ஒயினைக் ஊட்டி உடல் சதைகளைப் (மார்பகங்கள் உள்பட) பிடித்துவிட்டு வேகவைத்த கோழியின் தொடைப்பகுதியைக் கொடுத்து தூங்க வைப்பாராம். இதனைக் கண்டு அதிர்ந்தவரிடம், ‘என் மகளை சினிமாவுல வாட்ட சாட்டமான நடிகையாக்கணும்’ என அவர் நண்பர் சொல்லியிருக்கிறார். காலப்போக்கில், அந்த நண்பரை மறந்துவிட்டார். ஆனால், சொந்த தந்தையால் தயார் செய்யப்பட்ட அந்த மகளை அவர் மறக்கவே இல்லை. அவர் திரைக்கதை எழுதிய, ‘சிகை’ திரைப்படத்தில் அந்தத் தந்தை கதாபாத்திரத்தை உருவாக்கினார். ஒருநாள், ‘அந்தப் பொண்ணு சினிமாவுக்குள்ள வந்துருக்கும்.. ஆனால்’ என சொற்கள் தடுமாற்றத்தை அடைந்தது. பேச்சை மாற்றினார். என்ன நடந்திருக்கும்? கரைந்த நிழல் அவ்வளவுதான்?!
அவர் எழுதிய, புயா இன்னா இதி குறுநாவல் சினிமாவால் சீரழியும் மனிதர்களின் கதையைத் திரைக்கதை தன்மையுடன் சொன்ன படைப்பு. அதில் என் மனம் கவர்ந்த ஒருவரி, “சினிமாவில எழுதறது சோத்துக்கு சூத்தைக் கொடுக்கற வேலை” நாம் எழுதியது நல்ல சினிமாவாக மாற வேண்டும் என்கிற வேட்கையுடன் இருந்தவர் மணி சார். ஆனால், அதே சினிமா டீயும் இட்லியும் வாங்கிக்கொடுத்து ஒருவனின் வாழ்நாள் அனுபவத்தைக் கறந்து சீரழித்த துயரங்களைக் கண்டு அவருக்கும் வேதனைகள் இருந்தன. மலையாளத்தில் எதேதோ செய்ய எழுத்தாளர்களுக்கு அழைப்புகள் சென்று கொண்டே இருக்கின்றன. தமிழில், நினைத்தாலே கசப்பாக இருக்கிறது என்பார். சினிமாவால் அவர் அடைந்த அவமானங்களையும் நிராகரிப்புகளையும் அதிகமாக என்னிடம் பகிர்ந்ததில்லை. அதனால் மதிப்பு குறைந்துவிடும் என்பதைத் தாண்டி இதெல்லாம் நடக்கக் கூடியதுதான் என்கிற புரிதலுக்குச் சென்றிருந்தார். அவர் பெயரைத் தேடினால் எந்தப் படமும் தெரியாது. உண்மையில், அவர் பணியாற்றிய படங்களின் பெயர்களைக் கேட்டால் ஆச்சரியமாக இருக்கும்.
மிக விரைவாக சிறுகதைகளை எழுதுவார். சொற்களின் எண்ணிக்கையில் அவை சிறியவை. ஆனால், தான் பார்த்த, அனுபவித்த வாழ்க்கைக்கு நேர்மையாக இருந்தார் என்றே சொல்வேன். கதைக்கு தூய தமிழில் பெயர் வைத்தால், ‘மீசையில் கறுப்பெழுதும் தினங்களின் காஸ்மிக் நடனம்’ என ஒன்றைப் பிடிப்பார். தான் செய்துகொண்டிருந்த செயலுக்கான இடம் என்ன என்பதை அறிந்திருந்தார். ஒரு பதிப்பகம் மணி சாருக்குக் கொடுக்க வேண்டிய ராயல்டியைக் கொடுத்தார்கள். அந்தப் பணத்தை வைத்து நான்கு பேர் மட்டன் பிரியாணி திங்கலாம். இதை, ஒருவித ஆத்திரத்துடன் அவர் என்னிடம் சொன்னார். என்ன சார் இது? என்றேன். ‘புத்தக வெளியீட்டு விழா, புத்தகக் கண்காட்சின்னு ஒரு வருசத்துக்கு 50 காபி கூட வித்துருக்காதா சங்கர்?’ என அவர் கேட்டபோது என்னவோபோல் இருந்தது. இனி எங்காவது அவர்களே, எழுத்தாளனை சமூகம் பிச்சையெடுக்க வைக்கிறது என ஆவேசமாக பேசுவதை நான் கேட்கக்கூடாது. கேட்டாலும் என்ன செய்ய முடியும்? அவரைப்போலவே மௌனமாக உள்ளுக்குள் குமட்டக் கடக்க வேண்டியதுதான். எந்தப் பதிப்பகம் என சொல்வதில் எந்தத் தயக்கமும் இல்லை. ஆனால், தொடர்புடைய மணி சார் இறப்புவரை அவர்களைத் தாக்கி எந்த அவமரியாதைக் குறிப்புகளையும் சொல்லவில்லை.
நம் அறிவும், ஞானமும் ஓங்கி வளர்வதில் முதன்மையானது எல்லாத் துயரையும் அருகிருந்து கண்டு மன்னிக்க வேண்டியதை மன்னித்து, விலக வேண்டியதை விட்டு விலகுதலே. மணி சார் வளர்ந்த மரம். அவர் மறைவிற்குப் பின் சிலர் பகிர்ந்த நினைவுகளையும் என்னுடனான பழக்கத்திலும் ஒன்றை புரிந்துகொள்ள முடிகிறது. இறுதிவரை, தன் உறுதியான கருத்துகளால் தன்னை முன்னிறுத்தி யாரையும் அவர் பகைக்கவோ, விலக்கவோ இல்லை. முதுமை அவர் உடலை மட்டுமே தாக்கியிருக்கிறது. ஆனால், மனம் அழகான இளம் யுவதிபோல் பார்ப்பவர்களையெல்லாம் ஈர்த்திருக்கிறது.
ஒருமுறை இரவு அழைத்தார். எழுத்தாளர் இமையம் அவர்களின் சிறுகதைகள் நாடக வடிவம் பெறுகின்றன, வருகிறீர்களா?. நான் அடுத்த நாள் மாலை அவர் சொன்ன நேரத்துக்கு முன்பாகவே வீட்டிற்குச் சென்றிருந்தேன். வழக்கம்போல கீழே வண்டியில் அமர்ந்தபடி அழைப்பேன். படியில் கொஞ்சம் சாய்வாக நடந்துவந்து ஏறிக்கொள்வார். அன்று நானே மேலே சென்றேன். குளித்து துண்டை இடுப்பில் சுற்றியபடி கதவைத் திறந்தார். ’இருங்க சங்கர் இப்ப வந்துடுறேன்’ என்றபடி உள் அறைக்குள் நுழைந்தவர், வெளியே வரும்போது மிக நேர்த்தியான ஒரு கட்டம்போட்ட சட்டை, அதற்கென கச்சிதமான கால்சட்டை. நீள முடிக்கு ஒரு ரப்பர் வளையம். ‘எங்க சார் வாங்குனீங்க’ என ஆச்சரியப்பட வைக்கும் காலணி ஒன்று. கிளம்பி வந்தார் என்றால், எவ்வளவு கூட்டத்திலும் மனிதன் ‘துண்டாகத்’ தெரிவார். தன் பேச்சிலும் தோற்றத்திலும் இயல்பாகவே ஆளுமையைக் கொண்டு வந்தவர். அதில், எந்தப் பாசாங்கும் இருந்ததில்லை. அழகான ஸ்டைலான கலைஞர்.
ஒருகாலத்தில் மிக ஜாலியான வாழ்க்கையை வாழ்ந்தவர். இப்படித்தான் நடக்கிறது என்பதில் எந்த குறைகளும் இருந்ததில்லை. அவரின் பொருளாதார நிலையையும் மிக இளவயது மகனுக்காகவும் ஒரே ஒரு முறை அவரிடம், ‘கோஸ்ட் ரைட்டராக சீரியல்கள் எழுங்க சார்’ என்றேன். அவர் சிறிது நேரம் யோசித்துவிட்டு, இனி ஒன்னும் பண்ண முடியாதுன்னு தோணுதுங்க என்றார். அவரே ஓஷோவின் கதையொன்றைச் சொன்னார். “ஒரு பாலைவனத்துல ஓட்டகத்துல ஒருத்தன் போய்ட்டு இருக்கான். கடுமையான அனல். திடீர்னு அவனுக்குள்ள காமம் தீ மாதிரி எரியுது. உடனே, அந்த ஒட்டகத்தை புணர முடிவெடுக்கிறான். கட்டுப்படுத்த முடியாத காமம். அந்த நேரத்துல ஒரு அழகான பெண் ரிப்பேரான தன் காரோட ரோட்ல நின்னுட்டு இருக்கா. இவனைப் பார்த்து உதவி கேக்கறா. அவன் அங்கபோய் அந்த பேரழகியோட காரை சரி பண்றான். இந்த இக்கட்டான சூழல்ல தனக்காக ஒருத்தன் உதவி பண்ணிருக்கான்னு அந்த பொண்ணு இவன்கிட்ட உனக்காக நான் என்ன வேணும்னாலும் செய்யறேன்னு சொல்றா. அவள், அவன்கூட படுக்கவும் தயாரா இருக்கா. இவன், ‘எனக்காக என்ன வேணாலும் பண்ணுவியா? அப்ப இந்த ஒட்டகத்தை கொஞ்ச நேரம் அசையாம புடிச்சுக்கோ’ என்கிறான். பழக்கம் ஒரு பெரிய பொறி. அதை அவ்வளவு எளிதாக மாற்ற முடியாது இல்லையா?
பத்மராஜன், எம்டி வாசுதேவன் நாயர், கேஜி ஜார்ஜ் படைப்புகளின் மீது கிறக்கமாகவே இருந்தார். திரைக்கதை எழுத்தாளர் லோகிததாஸின் கதாபாத்திரங்களின் உடைவை எண்ணி தன்னைத் திரும்பிப் பார்த்துக்கொண்டே இருந்தார். முக்கியமாக கிரீடம் மற்றும் அதன் தொடர்ச்சியான செங்கோல். கதைநாயகன் சேதுமாதவன் காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்பதற்காகக் கடுமையாக பயிற்சி செய்து அதற்கென தயாராகிறான். ஒரு கடைநிலை காவலரான சேதுவின் தந்தை மகனை அதிகாரியாகப் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் தன் கனவுகளை மகன் மீது ஏற்றி பெருமைப்படுகிறார். காலம் யாரை விட்டது? ஊரில் பெரிய ரௌடியான ஜோஸ், சேதுவின் தந்தையை சந்தையில் வைத்து அடிக்கிறான். அமைதியும் அழகும் ததும்பும் சேதுமாதவன் அந்த ரௌடியை மக்கள் முன்னிலையில் அடித்து வீழ்த்துகிறான். சட்டமும் ரத்தக்கறை படிந்த தன்னையும் உணரும் சேது, தன் வாழ்க்கை முடிந்தது என பரிதவிப்புடன் பெருங்குரலெடுத்து அழுவதுடன் படம் முடிவடைகிறது. தொடர்ச்சியாக, செங்கோல் வெளியாகிறது. சிறையிலிருந்து வெளிவரும் சேதுவை குடும்பம் முற்றிலும் புறக்கணிக்கிறது. முக்கியமாக, சேதுவின் தந்தை. வறுமையால் சொந்த தங்கை பாலியல் தொழிலில் இறங்குவாள். அதைப் பார்த்து திடுக்கிடுபவனுக்கு அதைவிட பெரிய மனவுடைவு இச்செயலுக்குத் துணையாக அவனுடையே தந்தையே இருப்பது. ஒரே ஒரு தவறுக்காக வாழ்நாள் நாசமாகிக்கொண்டிருக்க மீண்டும் விதி விளையாடுகிறது. வேறொரு ஒரு பிரச்னையில் படத்தின் இறுதியில் இன்னொரு ரௌடியை வீழ்த்தும் சேதுவை ஜோஸின் சிறுவயது மகன் சேதுவைக் கத்தியால் குத்துகிறான். எந்த தந்தைக்காக சேது அச்சிறிய கத்தியை உயர்த்தினானோ அதேபோல் இன்னொரு தந்தைக்காக ஒரு மகன் கத்தியை ஏந்தியிருப்பதைப் பார்க்கிறான். அதை சிறுவனிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிடுங்கும் சேது, ‘யாராவது பார்ப்பதற்குள் ஓடிவிடு’ என்கிறான். அதைக்கேட்டதும் கத்தியை தூக்கிவீசியபடி சிறுவன் ஓடி மறைவான். ஒருவகையில் அச்சிறுவன் சேதுதான். ஒருவேளை சந்தையில் யாரும் இல்லாது போயிருந்தால், சேதுவும் ஓடி மறைந்திருப்பான். இப்படம் எத்தனை பேரின் துயரங்களுக்கு ஆறுதலை அளித்திருக்கும் என நினைக்கும்போதே லோகிததாஸின் கலை வெற்றியைக் காண முடிகிறது. மணி சொல்வார், சேது மாதவனைவிடவா நமக்கு வாழ்க்கை அளித்த கிரீடமும் செங்கோலும் தாழ்ந்து கிடக்கின்றன? செங்கோலில் இடம்பெற்ற, ‘மதுரம் ஜீவாமிர்த பிந்து’ பாடலை அவர் கேட்டுக்கொண்டே இருந்தார் என நினைக்கிறார். படைப்பு மனம் கொண்டவர்களுக்கு ஜேசுதாஸின் குரல் கொடுக்கிற தத்தளிப்பில் அவர் திளைத்திருந்தார். சேதுவின் வாழ்க்கை.. அந்தக் குரல்…!
நல்ல வேலை, திருமணம், இன்னபிற லௌகீக தேவைகள் எல்லாம் ‘சரியான’ வயதில் கிடைக்க வேண்டும் என எவ்வளவு துடிப்பைப் பார்க்கிறோம்? ஆனால், மணி சார் இவற்றைக் கற்பனைகூட செய்திருப்பாரா எனத் தெரியவில்லை. ‘சும்மா பொறுக்கின்னு இருந்த டைம்ங்க அதெல்லாம்..’ அவ்வளவுதான் அவரின் கடந்தகாலம். தொலைந்த இளமை பற்றியோ தவறவிட்ட வாய்ப்புகளைப் பற்றியோ எந்தக் குறையும் அவரிடம் இருந்ததில்லை. 50 வயதில் திருமணம், உடனே மகன் பிறக்கிறான். இவர் உடல்நிலை சீரழியத் துவங்கும்போது வளரும் தளிர்போல மகன். இங்கு வாழ்வதற்கு எவ்வளவு சிரமங்கள் வரும் என்பதை அறிந்திருந்தவர். அபூர்வமாக சிலரது செயல்களும் சொற்களும் ஏற்படுத்துகிற தாக்கத்தைவிட அவர்களின் வாழ்க்கை மிகத்தீவிரமான ஒரு உண்மையைக் கடத்தி விடுகிறது. நாம் ஒருகாலமும் பதற்றப்பட வேண்டாம் என்கிற ஆறுதலாகவோ அல்லது என்ன நடந்தாலும் நமக்கு முன் சில உதாரணங்கள் உண்டு என்கிற புத்துணர்வையோ அவை அளித்துவிடுகின்றன. மணி சாரின் ஒட்டுமொத்த வாழ்வும் தர்க்கத்தைக் காணாத ஒழுங்கும் நம்மை வேறொரு தளத்திற்கு அழைத்துச் செல்பவை.
எழுத்தாளர் ஜெயமோகன் படைப்புகளின் மீது பெரிய மதிப்பு வைத்திருந்தார். ஒரு அசலான வியப்புடனே அப்பெயரைக் கேட்கும்போதெல்லாம் சிலாகிப்பார். ஜெ எழுதிய அம்மையப்பம் சிறுகதையின் மையத்தை தன் வாழ்வுடன் பொருந்திருப்பதைக் கூறுவார். அக்கதையில் ‘கையில் அகப்பட்ட ஒரு மர சாமானில் அழகான நுணுக்கமான பொம்மையைச் செய்யும் ஆசாரியால் ஒரு ஏணியைச் செய்ய முடியாது. அந்தக் கலைஞனின் மனம் அந்த ஏணியில் இசையாது. சோற்றுக்காக மட்டுமே ஏணிப்பணி. தமிழ் சினிமாவிற்குள் கோணலான ஏணியைச் சரிசெய்யவே எழுத்தாளர்கள் அழைக்கப்படுகிறார்கள். சிலர் மட்டுமே அதைச் சரியாக அடித்துக்கொடுக்கிறார்கள்’ என்றார். நான், ‘அதிலையும் முகநூல் விமர்சகர்கள் வரிசையா ஏறி ஒடைச்சுருவாங்க’ என்றேன்.
அன்றாடங்களிலிருந்து விலகியவனைப் பொருளாதாரம் விழுங்கியே விடுகிறது. மணி சாருக்கு இருந்த ஒரே கவலை பொருளாதாரம். வேலைக்குச் சென்று வீடு திரும்ப முடியாத அசாதாரண மனநிலைக்குச் சென்றிருந்தார். நண்பர்களே பெரும் துணையாக இருந்திருக்கின்றனர். என்னால் முடிந்த சில உதவிகளைச் செய்திருக்கிறேன். ஆனால், மிக அற்பமான தொகை. ஒருநாள் அவசரமாக பத்தாயிரம் தேவை என்றார். என் சம்பளத்தைவிட கடன் அதிகமாக இருந்த காலம். அன்று என்னிடம் சுத்தமாகப் பணம் இல்லை. நான் அவரிடம், ‘என்கிட்ட இல்லை சார்’ என்றேன். இணைப்பில், ஒரு சில வினாடிகள் இருவரும் அமைதியாக இருந்தோம். பனையேறும் ஒருவனின் காலம்போல் அந்த நொடிகள் எனக்குள் மின்சாரத்தைக் கடத்தியது. பதற்றமானதும், ‘யார்கிட்டயாச்சும் கேட்டுப்பார்க்கறேன் சார்’ என துண்டித்துக் கொண்டோம். நம்மால் அந்தக் கடனை திருப்பிச் செலுத்த முடியாது என விட்டுவிட்டேன். அதனால், எதுவும் மாறவில்லை. உதவி செய்தார்களோ இல்லையோ அவரால் இனிமையாகவே இருக்க முடிந்தது. அவர் இயக்கி வெளிவராத குறும்படத்தை எனக்கு போட்டுக்காட்டினார். ஒழுங்கில்லாத பாணியில் எடுக்கப்பட்ட கதை. எடிட்டிங், இசை சரியாக இல்லை. அவரே சொன்னார், ‘கொஞ்சம் வேலைகள் பாக்கியிருக்கு. காசு இல்லாததால விட்டுட்டேன். அப்படியும் ஒருத்தங்க பணம் கொடுத்தாங்க. ஆனா, நானே முழுங்க வேண்டியதா போச்சு’. கரோனா காலத்தில் கடுமையான நெருக்கடி. அந்த நேரத்தில் கிடைத்தவர்களிடமெல்லாம் உதவி கேட்டிருக்கிறார். முகநூலில் நீண்ட காலம் நட்பில் இருப்பவர்கள் உள்பட. அப்போது, ஒருவரைத் தொடர்பு கொண்டபோது, ‘சார் உங்களை மாதிரி என்னால இருக்க முடியலையேன்னு கவலைப்பட்ருக்கேன். சம்பாதிக்க மட்டுதான் தெரியும். என்னால முடிஞ்சது இதுதான் சார்’ என ரூ. 50 ஆயிரத்தை மணி சாருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அவர் இதை என்னிடம் சொன்னபோது அசந்துவிட்டேன். அந்த யாரோ முகம் தெரியாத பலர்தான் இங்கே கொலை செய்யக் கிளம்பியவர்களைக் கலை பக்கம் திருப்பிவிட்டவர்கள் என்பதை நாம் எப்போதும் மறந்துவிடக்கூடாது. அந்த நண்பர் யாரென்று தெரியவில்லை. ஆனால், எங்கிருந்தாலும் இனிய வாழ்க்கை அவருக்கு அமைய வேண்டும். பின், எப்போதும் பேச்சில் இடம்பெறுகிற எழுத்தாளர்கள் சுகா, ஜா.தீபா, மணி சார் நண்பர் முரளி திருஞானம் மற்றும் இயக்குநர் மிஷ்கின். மணி சாரின் இறுதிக்காலத்தில் மிஷ்கின் பெரிய துணையாக இருந்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் என்னிடம் மிஷ்கின் அவர்களின் உதவியை பெரிய நன்றிக்கடன்போல் சொல்லிக்கொண்டிருந்தார். மிஷ்கினை என்றாவது சந்தித்தால் இந்த ஒரு காரணத்திற்காவது இறுக அணைத்துக்கொள்ள வேண்டும்.
மணிசார் இறந்த செய்தியை அறிந்தவுடன் இரவெல்லாம் ஏதேதோ சிந்தனைகள். அதிகாலையில் எழுந்ததும் தம்பி ஜெகதீஸை அழைத்துக்கொண்டு அவர் வீட்டிற்குச் சென்றேன். நாங்களே முதலில் சென்றிருக்கிறோம். கண்ணாடிப் பெட்டியில் அவர் உருவத்தைப் பார்த்ததும் எந்தத் துயரும் நிகழவில்லை. எல்லாரும் ஒருநாள் இதற்குள்தான். அவருடனான நினைவுகளில் எந்தக் கண்ணீர் சிந்தலும் இல்லை. ’சார்’ என உள்ளிருந்து ஒரு குரல். அவ்வளவுதான். நான் சென்றபோது அங்கு அவர் மகன் உள்பட 10 பேரைத் தவிர எவருமில்லை. அந்த நேரத்தில் எழுத்தாளர் சுகா தன் நண்பர்களுடன் வந்தார். சோகத்துடன் நாற்காலிகளில் அமர்ந்தனர். நான் அதைப் பார்த்தபடி இனி நண்பர்கள் பார்த்துக்கொள்வார்கள் என கிளம்பிவிட்டேன்.
எனக்குள் இருந்த ஒரு வலி, அவர் மகன் யாழன். ஒன்றும் புரியாத பச்சிளம் பருவம். நான் கண்ணாடிக்குள் மணி சாரைப் பார்க்கும்போது அதன் அருகில் சம்மனமிட்டு அமர்ந்திருந்தான். மணி சார் வெளியிட்ட புத்தக நிகழ்விற்கு நண்பர்களை அழைத்துக்கொண்டு சென்றிருந்தேன். அவருக்குப் பெரிய சந்தோசம். அன்று, மிஷ்கின் வந்திருந்தார். நீண்ட சொற்களைப் பயன்படுத்தி உரை கொடுத்தார். நிகழ்வு முடிந்ததும், மணி சார் மனைவிடம், ‘பத்திரமா பாத்துகங்க… மணி மாதிரி ஒருத்தர் கிடையாது’ என்றார். நான் அருகில்தான் இருந்தேன். உண்மையில், மனைவியும் மகனும் அவர் வாழ்வில் பெரிய திறப்பைக் கொடுத்தவர்கள். ஒருநாள், மணி சாரை சந்திக்கச் சென்றபோது அவர் கீழிறங்கி வந்தார். மகன் யாழன் எங்களுக்கு நடுவே ஓடினான். அவனைப் பார்த்து, ‘வீட்லயே இரு, அம்மா வந்துருவா’ என்றார். அவன், ‘ஒக்கே.. ஒக்கே..’ என்றபடி படி வழியாகப் பறந்தான். நான் அவன் வேகத்தைப் பார்த்து திரும்பி, ‘ஏன் சார்.. குழந்தைகள் வந்துட்டா நம்ம வாழ்க்கைல கிடைக்காத ஒன்னு கிடைச்ச மாதிரி இல்ல’ என்றேன். அவர் விழிகளில் பொன்னொளி வீச என் தோள்களைப் பற்றியபடி சொன்னார், ‘ஆமாம். சங்கர். யாழன் வந்ததுக்குப் அப்றம் சிறகு முளைச்ச மாதிரி இருக்கு.”. தன் குழந்தைகள் விழிகள் சொருக உணவை உண்டபடியே மயங்கும் தருணத்தைக் கண்டு படைப்பின் மகத்துவம் அறியாத தந்தைகள் உண்டா? மணி சாரின் மனைவியும், யாழனும் இந்தக் காலகட்டத்தைத் தாண்ட வேண்டும். காலம் அவர்களை அரவணைத்துச் செல்லும்.
வாழ்க்கையின் மொத்த தருணங்களும் முழுமையடைகிற புள்ளியை மரணம் என அழைக்கலாமா? நெகிழ்ச்சிகளும் கண்ணீர்களும் மட்டுமேயான பிறவியே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. யாராலும் குடிக்க முடியாத கானல் நீர் இங்கு யாருக்காக படைக்கப்பட்டது? கானலுக்கு எந்த மதிப்பும் இல்லாமல் இருக்கலாம். ஆனால், கானல் நினைவுபோல பார்க்கும்தோறும் மாயை கலந்த எதார்த்ததைக் காட்டுகிறது. அக்கானலே, யாராலும் தீர்க்க முடியாத பெரும் தாகத்தையும் தீர்க்கிறது. நினைவுகள் அப்படிப்பட்டவை. மகன் வளரும்வரையாவது அவர் இருந்திருக்கலாம். கண்ணாடி பேழைக்குள் என்னுடன் இருந்த பெரும் அனுபவம் ஒன்று இருந்ததைப் பார்த்தபோது ஏற்பட்ட உணர்வுகள் உறைந்துவிட்டன. அவர் எப்போதும் வாழ்த்துவதுபோல், அவருடனான நினைவுகளுக்கு சியர்ஸ்!
சங்கர் சதா
I need to talk to Mani Sir’s family.. Could you please arrange or mail me the contact number.. Thanks