1.வைக்கம் முகம்மது பஷீரின் ‘எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது’

யானையைப் பற்றிய கதை என்றாலே எல்லோருக்கும் சுவாரஸ்யம் உண்டாகும். இந்திய நாட்டில் வயதானவா்களானாலும் சரி, இளையவர்களானாலும் சரி, யானையைப் பற்றிய கதைகளில் எல்லாருக்கும் ஏற்படும் ஈடுபாட்டை யாரும் மறுக்க மாட்டார்கள்

ஆனால் வைக்கம் முகம்மது பஷரீன் மலையான நாவலான யானைக் கதை, ஒரு வித்தியாசமான கதை. 1951-ம் ஆண்டு அது வெளியானதிலிருந்து கேரளக்காரர்கள் ஒவ்வொருவரும் அதைப் படித்து அனுபவித்து வருகிறார்கள். இந்தக் கதை இலக்கிய பூர்வமாகவும், பொதுவாகவும் கேரளத்தில் நிறையப் புகழ் பெற்றிருக்கலாம். ஆனால், இந்தியாவில் பிறவிடங்களுக்கு அது எந்த அளவிற்குப் பரவிப் பெயர் பெற்றிருக்க வேண்டுமோ அந்த அளவிற்குப் பெயர் பெறவில்லை.

நவீன இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் வெளி வந்திருக்கும் மிகச் சிறந்த நாவல்களில் இது ஒன்று. எடின்பரோ பல்கலைக் கழகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பாக (யுனெஸ்கோவின் இந்திய மொழிபெயர்ப்பு வரிசையில்) அது எழுபதே பக்கங்களில் வெளிவந்துள்ளது. நம்மை ஈர்த்து வசப்படுத்துகிற ஒரு புதிய உலகத்தைச் சிருஷ்டிப்பதற்கு, ஒரு சிருஷ்டிகர்த்தாவுக்கு நூற்றுக்கணக்கான பக்கங்களோ, ஆயிரக் கணக்கான பக்கங்களோ தேவையில்லை என்பதற்கு இந்த நாவல் நிரூபணம். நூற்றுக்கும் குறைவான பக்கங்களைக் கொண்டே அதைச் சாதித்துக் காட்ட முடியும் என்று பஷீர் அவர்களே கூறியிருக்கிறார்.

முன்னுதாரணம்

இந்தியாவின் மிகச் சிறந்த பத்து நாவல்களுக்கு முன்னுதாரணமாக நான் முதலில் இந்த நாவலைக் குறிப்பிடக் காரணம், பங்கிம் சந்திரரால் பிரபலமாக்கப்பட்ட காதல் செறிவுப் பின்னணியைவிட, ஷெல்லியின் கவித்துவ லயத்தில் அல்லது உணர்ச்சிக் கனிவுப் புனைகதைப்படைப்பில், நகைச்சுவைச் செறிவு கொப்பளிக்கும் பின்னணியுடன் இந்த நாவல் சொல்லப்பட்டிருக்கும் நேர்த்தியேயாகும். பல இடங்களில் முற்றிலும் கவிதை அழகுடைய வார்த்தைகளைக் கொண்டு பஷீரே தனது முதல் நாவலான இளம் பருவத்துத் தோழியை (பால்யகால ஸஹி) எழுதியிருக்கிறார். இளம் பருவத்துத் தோழியின் அந்தப் பகுதிகள் மலையாளத்திலோ அல்லது வேறு  எந்த மொழியிலுமோ வெளிவந்த கவிதைச் செறிவுள்ள எழுத்துக்களில் மிகவும் உன்னதமானவை. ஆனால்  இந்த யானைக் கதையில்தான் பஷீர் மிக உயர்ந்த கவிதைச் செறிவுள்ள எழுத்துக்களைப் படைத்திருக்கிறார் என்பது என் அபிப்பிராயம்.

சமூக விழிப்புணர்வும் கவிதைச் செறிவின் தீவிரமும் ஒருங்கே அமையப்பெற்று, நாவலை வாசிப்பதில் ஒரு மகத்தான மன நிறைவை ஒருவர் பெறமுடியும் இந்த நாவலில்தான்.

ஆர்.ஈ.ஆஷேர், அச்சம்மா கோயில் பறம்பில் சந்திரசேகரன் ஆகியோரால் 1980-ம் ஆண்டு ஆங்கிலத்தில் அற்புதமாக மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்த இதன் ஆங்கிலப் பதிப்பில் கூட – முற்றிலும் வேறுபட்ட மொழியான ஆங்கிலத்திலும் -நாம் இதே சந்தோஷத்தை அனுபவிக்க முடிகிறது.

சமயப்பற்று மிகுந்த பணக்காரப் பெற்றோர்களின் கபடு சூதில்லாத, வெள்ளையுள்ளம் கொண்ட சிறு பருவப் பெண்ணாகக், குஞ்சுப்பாத்துமா நமக்கு அறிமுகப்படுத்தப்படுகிறாள். அவள் தலைமுதல் கால்வரையிலும் ஒரே தங்கமயம்தான். அவள் நடக்கும்போது அவளது காற் சிலம்புகள் கணகணவென்று ஒலி எழுப்பும். அவளைப் (பெண்) பார்க்கிற முஸ்லிம் நாரீமணிகள் அல்லாஹ் பற்றியும், நபிகள் நாயகம் பற்றியும். உலகில் குழப்பத்தை விளைவித்து வருகிற இபிலீஸ் என்கிற பகைவனைப் பற்றியும், சொர்க்கத்திலிருக்கிற ‘ஹஜரத்துல் முத்தஹா என்ற உலகின் சகல ஜீவராசிகளின் பெயர்களும் எழுதப்பட்ட அற்புதமான மரத்தைப் பற்றியும் கேட்கக் கூடிய எல்லாக் கேள்விகளுக்கும் அவளால் பதில் கூற முடியும்.

தான், கரிய கொம்பன் யானை வைத்திருந்த யானை மக்காருடைய அருமந்தப் பேத்தி என்பதும் அவளுக்குத் தெரியும். அறியாப் பருவத்தில் குஞ்சுப்பாத்துமா அம்மா சொல்கிற அந்த யானையைத்  தன் விளையாட்டுத் தோழனாகக் கற்பனை செய்து, அதனோடு மானசீகமாக விளையாடுவாள். ஆனால், அவளுடைய அம்மா குஞ்சுத்தாச்சுமாவுக்கோ அது உண்மையான விஷயம். காலம் கடந்துபோன பழைய விஷயம் என்றாலும், அவளுக்கு அந்த யானை கம்பீரமும் கௌரவமும், பெருமையும் தரக்கூடிய விஷயம். தன் தந்தைக்கு ஒரு யானை இருந்ததைப் பற்றி அவள் யாரிடமும் பெருமையாகப் பிரஸ்தாபிக்காமல் விட்டதில்லை.

குஞ்சுப்பாத்துமாவுக்கு கன்னத்தில் ஒரு கருத்த மறுஉண்டு. அந்த மறு அவளுடைய தாத்தாவின் யானையினுடைய நிறம். அது அதிர்ஷ்டத்தைத் தருகிற பாக்கிய மறு. அவளுக்கு நல்ல கணவன் கிடைக்கப் போகிறான் என்பதற்கு அந்த மறு அடையாளம்.

திருமணத்திற்காகக் காத்திருக்கும் பணக்கார வீட்டுப் பெண்ணான குஞ்சுப்பாத்துமா மிகுந்த கட்டுப்பாடுகளுடன் வளர்க்கப்படுபவள். அவள் நினைக்கிற எல்லாக் காரியங்களையும் அவளால் செய்துவிட முடியாது. இதைத்தான் செய்யவேண்டும். இதையெல்லாம். செய்யக்கூடாது என்று மிகுந்த கட்டுப்பாடுகள். சில கட்டுப்பாடுகளை எதிர்க்கும் எண்ணம் அவளுக்கு உண்டு. ஆனால், எப்படி எதிர்ப்பது என்பதுதான் தெரியவில்லை.

அவளைக் கல்யாணம் செய்துகொண்டு அழைத்துச் செல்லப் போகிறவனை முன்கூட்டியே பார்க்கவேண்டும் என்று மனசுக்குள்ளே அவளுக்கு விருப்பம். ஆனால், அனுமதி கிடையாது. அவளது வாப்பாவும் உம்மாவும் அவளுடய கல்யாணத்திற்குப் பிறகு ஹஜ் யாத்திரை செல்லும் போது தானும் போகவேண்டும் என்பது அவளது ஆசை.ஆனால், அது அவளைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறவனைப் பொறுத்திருக்கிறது. அவன் அனுமதித்தால்தான அவளால் போகமுடியும். எப்போதும் தன்தந்தையின் யானையைப் பற்றிப் பேசிக்கொண்டு கவுளி கவுளியாக வெற்றிலை போட்டுக்கொண்டிருக்கும் அவளுடைய உம்மா,குஞ்சுபாத்துமாவின் காதுகளைத் துளைத்து இரு காதுகளிலும் இத்தனை (21) பொன் வளையங்களைப் போட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்பதிலும், தலையில் எப்போதும் முட்டாக்குப் போட்டுக் கொள்ளவேண்டும் என்பதிலும் கவனமாக இருந்தாள்.  இதற்கெல்லாம் அவள் கட்டுப்பட்டே ஆக வேண்டும்.

அவள் வீட்டிற்குள் கூட அங்கு இங்கு நடமாட முடியாது. சிறிது அசைந்தாலும் அவளது காற்சிலம்பு ஒலித்து, அவளது இருப்பைக் கட்டிக் கொடுத்துவிடும். அது மிகவும் சோர்வூட்டுகிற வெறுப்புத் வருகிற வாழ்க்கைதான். ஆனாலும் அல்வளவு மோசமான வெறுப்புத் தருகிற வாழ்க்கை என்று சொல்லமுடியாது. விரைவில் அவளுக்கு விடுதலை கிடைக்கிறது. அவளது தந்தைக்கும். அவரது எழு சகோதரிகளுக்கும் நீண்ட நாள் நடந்துவந்த வியாஜ்யத்தில் அவளது தந்தைக்கு எதிராகத் தீர்ப்புச் சொல்லிவிட்டார்கள்.

குஞ்சுப்பாத்துமாவின் தந்தை பட்டனடிமை., தன் சகோதரிகளுக்குச் சேரவேண்டிய சொத்துக்களைத் தன் தாயார் புத்தி சுவாதீனமில்லாமல் இருந்தபோது, ரிஜிஸ்தர் பத்திரத்தில் கையெழுத்துப் போடவைத்து, சட்ட விரோதமாக அனுபவித்து வருகிறார் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தார். கோர்ட் தீர்ப்பின்படி அவர் எல்லாவற்றையும் இழந்தார். குடியிருந்த வசதியான வீட்டையும் காலிசெய்துவிட்டு, எஞ்சியிருந்த ஆற்றங்கரைச் சாலை வீட்டுக்குப் போக வேண்டியதாயிற்று, மிகவும் ஏழ்மையான வாழ்க்கை. சிறிது பணத்தைக் கொண்டுபோய் எதையாவது வாங்கி எங்காவது விற்றுப் பிழைப்புக்குச் சிறிது பணம் சம்பாதிப்பதில் பட்டனடிமை ஈடுபட்டார்.

இந்த வாழ்க்கைக்குத் தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு. ஆனால், அவருடைய மனைவி குஞ்சுத்தாச்சுமா -பெரிய கொம்பன் யானை வைத்திருந்த யானை மக்காருடைய அருமைப் புதல்வி – அவள் இதற்குப் பழகிக் கொள்ள மறுத்தாள்.

இப்பொழுதெல்லாம் அவள் குஞ்சுப்பாத்துமாவிடம் அடிக்கடி குற்றம் காண்கிறாள். அவளுடைய கறுப்பு மறு துரதிரிஷ்டம் பீடித்தது என்றும், அவள் அவர்களுக்குக் கஷ்டம் கொண்டு வந்தவள் என்றும் திட்ட ஆரம்பிக்கிறாள்.

இந்த இடத்தில் நாவலாசிரியர் மிக அற்புதமாகக் கதையை கடத்திக் கொண்டு போயிருக்கிறார். அவர்களது அவல நிலையினைப் பற்றிச் சொல்வதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், பஷீர் குஞ்சுப்பாத்துமா கவலையற்ற மனநிலையோடு தனது சுதந்திரத்தை அனுபவிப்பதை மட்டுமே சித்தரிக்கிறார். மிக வசதியான நிலையிலிருந்து ரொம்பவும் வறிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்ட அந்தக் குடும்பத்தின் கஷ்டங்களையும், மனவேதனையையும் -தனது வாசகர்கள் ஒவ்வொருவருக்கும் அது புரியும் – என்று சொல்லாமல் விட்டுவிடுகிறார்.

புதிய வீட்டின் தோட்டத்தில் இருந்த அல்லிக்குளம் குஞ்சுப்பாத்துமாவுக்கு மிகவும் பிடித்துவிட்டது. இதற்கு முன்னால் அவள் குளம் எதையும் பார்த்ததே இல்லை. முதன்முதலாக அந்த அல்லிக்குளத்தில் அவன் குளித்த போது ஒரு கறுப்பு அட்டை அவளுடைய தொடையைக் கடித்து நிறைய ரத்தத்தை உறிஞ்சிவிட்டது, அந்தக் குளம்தான் அவளுக்குப் போக்கிடம். மிகவும் பிரியத்தோடு அந்தக் குளத்திற்கு அடிக்கடி சென்றுவிடுவாள்.

ஒரு நாள் ஆண் குருவியிடம் கொத்துப்பட்டு மயங்கி விழுந்த ஒரு சிட்டுக் குருவியைக் காப்பாற்ற முயலும்போது, அங்கிருந்த ஒரு பள்ளத்தில் தவறி விழுந்து முழங்கையில் காயம் பட்டுக்கொள்கிறாள் குஞ்சுப்பாத்துமா. குருவியைக் காப்பாற்றிய அவளுக்குப் பள்ளத்திலிருந்து மேலே ஏறிவர முடியவில்லை. அப்போது எங்கிருந்தோ ஒரு இளைஞன் வந்து அவளைக் கைகொடுத்து மேலே கொண்டு வருகிறான். தன் சிகரெட்டை உடைத்து அந்தப் புகையிலையைக் காயத்தில் வைத்துக் கட்டுகிறான். அக்கறையுடன் அவனை விசாரிக்கிறான். அவனுடைய பெயர் கூட அவளுக்குத் தெரியாது. அவனுடன் பேசுவது தவறான காரியம் என்பது அவளுக்குத்  தெரியும். ஆனால் அவனுடன் பேசுவதில் ஒரு புதிய சந்தோஷம் இருப்பதை அவள் உணர்ந்தாள்.

வீட்டில் அமைதியென்பது கிடையாது. குஞ்சுத்தாச்சுமா எப்போதும் அவளது கணவனை எதற்கும் குற்றம் சாட்டியும், பரிகசித்தும் பேசிக்கொண்டே இருந்தாள். ஒருநாள் அவர், அவளது கழுத்தை நெரிக்கும் அளவுக்கு அது போய்விட்டது. அதன்பின், அவர்கள் மூவரும் சேர்ந்து பயபக்தியோடு தௌபா சொல்லித்தங்கள் தவறுகளை மன்னித்து நல்வழி காட்டி சொர்க்கத்தைத் தரக் கருணை புரிய வேண்டும் – என்று இறைவனிடம் வேண்டிக்கொள்கிறார்கள். ஆனால், சில தினங்களில் குஞ்சுத்தாச்சும்மா தனது பல்லவியை மறுபடியும் ஆரம்பித்து விட்டாள்.

பட்டனடிமையால் வீட்டுக்குத் தேவையானதைச் சம்பாதித்துக் கொடுக்க முடியவில்லை. அவர்களின் வாழ்க்கை மிகவும்  சிரமதசையிலேயே நடந்து வந்தது. வீட்டு வேலைகள் எல்லாம் குஞ்சுப்பாத்துமாவின் தலையில் விழுத்தன. அவள் எப்படியோ சமாளித்துக் கொண்டாள். அவள் அம்மா, அப்பாவை வார்த்தையால். குத்தித் துன்புறுத்தியபோது அவரைக் கோபம் தணித்துச் சாந்தப்படுத்தக்கூட அவளால் முடிந்தது.

அல்லிக்குளத்தில் அட்டை கடித்த பிறகு, மஞ்சுப் பாத்துமா குளிப்பதற்குப் பக்கத்து வீட்டுக் கிணற்றுக்குத்தான் போவாள். அந்த வீட்டில் யாரும் இல்லை. பூட்டிக்கிடந்தது. ஒரு நால் அந்த வீட்டுக்குச் சிலர் குடிவந்தார்கள். ஆயிஷா அவர்கள் வீட்டுப் பெண்.

ஆயிஷா அல்லிக்குளத்தினருகில் நின்று கொண்டிருந்தபோது தான், குஞ்சுப்பாத்துமா அவளைச் சென்று கண்டு அவளுடன் சிநேகிதமானாள். தாங்களும் முஸ்லிம்கள்தான் என்றும், ஆனால், முற்போக்கான குடும்பம் என்றும் ஆயிஷா சொல்லிக் கொண்டாள்.

முற்போக்கான குடும்பங்கள் எல்லாம் குஞ்சுத்தாச்சுமாவிற்குப் பிடிக்காதவை. ஆனால், குஞ்சுப்பாத்துமா அப்படியில்லை, அவள் அவர்களிடமிருந்து நிறையக் கற்றுக்கொண்டாள்.

ஆயிஷா தன் சகோதரனைக் குறித்துப் பிரியத்துடன் பேசும்போது, அவன்தான் தன்னைப் பள்ளத்திலிருந்து கரையேற்றில் காயத்துக்குக் கட்டுப்போட்டு, காயம்பட்ட அந்தக் குருவியைப் பற்றி விசாரித்தவன் என்பதைக் குஞ்சுப்பாத்துமா தெரிந்து  கொண்டுவிட்டாள். அவளுடைய இதயம் அப்போது இனம்புரியாத உணர்வுகளுடன் ஒரு புதிய சந்தோஷத்தில் திளைத்தது. அது புதிய அனுபவம்.

சொல்லாமல் சொல்லியவை

குஞ்சுப்பாத்துமாவுக்கு, நிஸார் அகம்மதுக்கும் இடையில் அரும்பிய காதலும், சம்பவங்களும் சொல்லப்பட்டிருக்கும் விதம் படித்து அனுபவிக்க வேண்டிய ஒன்று. தெய்வீகம் என்று சொல்லத்தக்க ஓர் அமைதியுடன், வெள்ளை உள்ளம் கொண்ட ஒரு பெண்ணுக்கும் முற்போக்குக் குணம் கொண்ட ஓர் இளைஞனுக்குமிடையில் வளருகிற காதலைப் பஷீர் அதிகமாகச் சொல்லாமவே நிறைய உணர்த்துகிறார்.

இந்த நாவலில் பஷீர் சொல்லாமல் விட்டிருக்கிற விஷயங்களே அவரது தனிச்சிறப்பை எல்லா வாசகர்களுக்கும் உணர்த்தி, அவர்மேல் பிரியம் கொள்ள வைக்கின்றன. அவர் சொல்லலியிருக்கிற விஷயங்களைவிட அவர் சொல்லாமல் விட்டிருக்கிற விஷயங்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்தக் கற்பனைத் திறன் இந்தியக் கதைகளில் ஓர் அபூர்வமான விஷயம் என்று சொல்லவேண்டும். எந்த விஷயம் பற்றியும் வார்த்தைகளைச் சொரிந்து ஓரே குழப்பம் செய்து வைப்பதே நமது வழக்கம்; நாம் நமது அரசியலை நடத்துவது மாதிரி! வைக்கம் முகம்மது பஷீரின் (பேசுகிற ) மௌனங்கள் தாம் அவர் தலைசிறந்த நாவல் ஆசிரியர் என்ற புகழுக்கு அவரை உயர்த்துகின்றன.

குஞ்சுப்பாத்துமாவின் அம்மாவின் தந்தையாரிடமிருந்த யானையைப் பஷீர் நாவலில் கையாண்டிருக்கும் விதம் ரொம்பவும் அலாதியானது, அந்த யானை தாச்சுமாவுக்குக் கௌரவம் தரும் விஷயம் மட்டுமல்ல. அவளது பிறந்த குடும்பத்தின் பாரம்பரியப் பெருமைக்கும் ஒரு சின்னமாகும்.

பணமும் வசதியும் இருந்த காலத்தில் எந்த விஷயம் பெருமையும் கௌரவமும் தருகிறதாக இருந்ததோ, அது கஷ்டங்களும் ஏழ்மையும் வந்த நாட்களில் அயளுக்குப் பொய்யான ஓர் ஆறுதலாகவும். சோர்வகற்றும்  செய்தியாகவும் மட்டுமே ஆகிவிடுகிறது.

நிஸார் அகமதுவின் தாத்தாவுக்கு வெறும் காளைமாட்டு வண்டி மாத்திரமே இருந்தது. அவனுடனும் அவன் தங்கையுடனும் குஞ்சுத்தாச்சுமாவின் மகள் – யானை மக்காருடைய அருமைப் புதல்வியின் அனுமத்தப் புதல்வி – எந்த வகையில் சிநேகிதம் பாராட்டவும். அவர்களைப் பற்றிப் பெருமையாகக் குறிப்பிடவும், அவர்கள் சார்பாகக் குஞ்சுத்தாச்சுமாவை எதிர்த்து வாதாடவும், இவர்களை அவர்கள் நெருங்கிவர அனுமதிக்கவும் முடியும்?

முற்போக்கான ஒரு முஸ்லிம் குடும்பத்துக்கும், பழமையும் பிற்போக்குத்தனங்களும் கொண்ட ஒரு முஸ்லிம் குடும்பத்துக்கும் இடையில் எதிர்ப்படும் ஒரு சுவர் போல இருந்தது, தாச்சுமாலின் அப்பாவைத்திருந்த யானையைப்பற்றி அவள் அடித்துக் கொள்ளும். பெருமை.

அந்த யானை -நாவலில் அதன் பிரசன்னம் இல்லாவிடினும் – நாவல் முடிகிற பகுதியில் அது நாச்சும்மாவுக்கும் கடுப்புத் தருகிற ஒரு விஷயமாகச் சித்தரிக்கப்படுகிறது. இந்தச் சித்தரிப்பு சார்லி சாப்ளினின் பாணியான அவலம் தொனிக்கும் நகைச்சுவையை  வெளிப்படுத்துகிறது.

கடைசிக் காட்சியில் தாச்சுமா, அவளைக் கிண்டல் செய்கிற சிறுவர்களைப் பார்த்துக் கத்துகிறாள். அவர்களும் பதிலுக்குச் கத்துகிறார்கள்.

அவள் திருப்பி உச்ச ஸ்வரத்தில் இரைகிறான் “உன்னை அவர்கள் பார்க்கட்டும், யானை மக்காருடைய அருமைப் பெண்ணின், அருமந்தப் பெண்ணை அவர்கள் பார்க்கட்டும்; உங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்ததடி; பெரிய கருத்த கொம்பன் யானை”

பதிலுக்குச் சிறுவர்கள், “அது கொம்பன் யானை இல்லை, குழி யானையாக்கும்; வெறும் குழி யானை ! மண்ணில் இருக்கிற சிறு குழி யானை” என்று கத்துகிறார்கள்.

சிறுவர்களின் ஏளனம் அவளுக்கு மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. அவளது வாழ்வின் பெருமை தரக்கூடிய விஷயமாக இருந்த அவளது தந்தை வைத்திருந்த கொம்பன் யானையைச் சிறுவர்கள் முற்றத்துச் சுவர்க் குழியிடுக்குகளில் புதைந்து கொண்டிருக்கும் குழி யானை என்று ஏளனம் செய்வதைக் கேட்டு, அவர்களை எதிர்த்து வாதாடுவதை மனக்குமுறலுடன் அவள் விட்டு விடுகிறாள்.

விரக்தியில் உலகமெல்லாம் தகர்ந்து கிடக்கிறது  போல அவளுக்குத் தெரிகிறது.  இனி எதற்காக உயிர்வாழ வேண்டும்? அவளின் தொண்டை தழுதழுத்துக் கண்களில் நீர் வழிகிறது

அவலம் தொனிக்கும் நகைச்சுவை, நாவலின் முடிவில் கிளைமாக்ஸாக வெளிப்படுகிறது. ஆனால் அது நாவல்  முழுக்க கூடிழையாக வியாபித்து இந்த நாவலை  மிக உயர்ந்த தரத்துக்கு உயர்த்தி, கற்பனைக் கலையின் உன்னதத்திற்கு இந்த நாவலை ஒரு முன்னுதாரணமாக ஆக்குகிறது.

இந்த இடத்தில் மலையாளத்தில் முதன் முதலில் வெளிவந்த  ஒ.சந்துமேனனின் ‘இந்துலேகா’ என்ற நாவல் நினைவுக்கு வருகிறது. இந்துலேகாவும் ஒரு நகைச்சுவைச் சித்தரிப்பு முயற்சிதான். ஐம்பதுகளில் ஆரம்பக் கால கட்டத்தில் மலையாளத்தில் நாவல்கள் தோன்ற ஆரம்பித்தபொழுது, ஹிந்துக்களைப் பின்னணியாகக் கொண்டு எழுந்த நாவல் தோற்றம், அதே கால கட்டத்தில் முஸ்லிம்களைப் பின்னணியாக் கொண்டு தோன்றிய இந்த நாவலில்தான் சரியாக முழுமை பெற்றது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

முகம்மது பஷீர் நகைச்சுவை மிளிரும் வகையில் மலையாளப் பாரம்பரியத்தையும், பழக்க வழக்கங்களையும், தன்மையையும் சித்தரிப்பதில் மிருந்த வெற்றியுடன் செயல்பட்டிருக்கிறார்.

இந்த நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள டாக்டர் ஆர்.ஈ.ஆஷேர். தன்னுடைய சிறிய முன்னுரையில், வைக்கம் முகம்மது பஷீர் இந்தியாவின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவா் என்ற கருத்தைத் தெரிவித்திருக்கிறார். இது மிகைப் புகழ்ச்சி வார்த்தையாக இருக்க முடியாது. அவர் மேலும் சொல்கிறார். ‘இளம் பருவத்துத் தோழி,பாத்துமாவுடைய ஆடு, எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது” ஆகிய இம்மூன்றிலும் நடையழகிலும் கதை  சொல்லப்பட்ட உத்தியிலும் எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது நாவலே நுணுக்கம் நிறைந்தது. (ஆங்கிலத்தில் இம்மூன்றும் ஒரே தொகுப்பாக வெளிவந்திருக்கின்றன.) ஒரு கதையை நேரடியாகவும், குழப்பமில்லாமலும், சொல்வதைவிட வேறு எதுவும் பஷீருக்கு எண்ணமில்லையெனிலும், இந்த நாவல் மிகுந்த நுட்பம் பொதிந்தது.

ஒரு அழகிய காதல் கதையுடன் கூட நபிகள் நாயகத்தின் எந்தப் போதனை அடிப்படையும் இல்லாத, முஸ்ஸீம்களின் பழைய பழக்க வழக்கங்களைக் குறித்த விமர்சனம், இந்தக் காலத்துக்குத் தகுந்தவாறு அவர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை, பழைய நம்பிக்கைகளையும் பாரம்பரியத்தையும் கூர்மையாகக் கவனித்து அதை அப்படியே கையாண்டிருக்கும் கவனம்,  நிறைந்த நகைச்சுவை – எல்லாம் இந்த நாவலில் நேர்த்தியாக அடங்கியுள்ளன; ஒன்றுடனொன்று பிரிக்க முடியாதபடி பின்னிப் பிணைந்துள்ளன. அதுபோலவே ஒன்றுடன் ஒன்று சம்பந்த முள்ளவையாக ஒரு நோக்கத்துடன், புத்தகத்தின் அத்தியாயங்களிலும், அத்தியாயத்தில் சில சொற்றொடர்களிலும் மீண்டும் மீண்டும் வருகிற வாக்கியங்களும், முதலில் சொல்லிய சில வார்த்தைகளும் திரும்பத் திரும்ப வந்து ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொருவிதமான சுவையுடன் கூடிய பொருளைத் தருகின்றன. முக்கியமாக அத்தியாயத் தலைப்புக்கள். இவை நாவலின் வெவ்வேறு கருக்களுக்கு நம்மை அடையாளம் காட்டி இட்டுச் செல்லும் குறியீடுகளாக அமைந்திருக்கின்றன. அத்தியாயத் தலைப்புக்கள் வைப்பதையும் கற்பனைக் கலையின் ஒரு முக்கியமான அம்சமாக பஷீர்செய்திருக்கிறார்.

நான், திரு.கிருஷ்ண சைதன்யா தன் ‘மலையான இலக்கிய வரலாற்றில் குறிப்பிட்டிருப்பதைச் சொல்ல விரும்புகிறேன்.

இந்த நாவலில் பஷீர் பல சமூக விமர்சனங்களை உள்ளடக்கியுள்ளார். இந்த நாவலில் முன் வைக்கப்படுகிற சமுதாயம் ஏற்றுக்கொள்ளக்கூடிய கோரிக்கையும் நாவலுக்குக் கிடைத்திருக்கிற சுய விமரிசனப் பரிமாணமும், அதன் ஆசிரியர் ஒரு முஸ்லிமாக இருப்பதனால் மட்டுமல்ல,  ஆக்கப்பூர்வமான நாவலை அமைப்பதில் அவருக்கிருந்த திறமையே, ஒரு முற்போக்கான குடும்பத்தைப் பழமையில் ஊறிய ஒரு குடும்பம் கட்டாயமாக எதிர்கொள்ளும்படி செய்திருப்பதற்குக் காரணமாகும்.

மேலும் அவர் கூறுகிறார் “இந்த நாவலில் கையாளப்பட்டிருக்கிற எளிமை ஒரு மாயமான விஷயம். இந்த எளிமைக்குப் பின்னால்  முகத்திரைப் போட்டுக்கொண்டு ஏராளமான நுட்பங்கள்  அமிழ்ந்துள்ளன.  அந்த எளிமை ஆழமான விஷயங்களுக்கு நம்மைக் கொண்டு நிறுத்தும் சக்தி கொண்டது.”

கிருஷ்ண சைதன்யா ஒன்றை மட்டும் குறிப்பிடுகிறார்.

நாவலில் இதைப்போல மிகப்பெரிய விஷயங்கள் உள்ளடங்கியுள்ளன.

ஆனால், சந்தேகமில்லாமல் முகம்மது பஷீர் முஸ்லிம் மக்களின் வாழ்க்கை முறை,பாரம்பரியம், செயல்பாடுகள் ஆகியவற்றின் சில கூறுகளைத் தன் பாத்திரப் படைப்பின் மூலம் படம் பிடித்துள்ளார். அந்தப் பாத்திரப்படைப்பு மனித சமுதாயம் அனைத்துக்கும் பொருந்தும் வகையில் உலகம் தழுவியதாக அவர் தனது எழுத்தினால் மாற்றிக் கொடுத்துள்ளார். அதில்தான் அவருடைய கற்பனைத் திறனின் மகத்தான சக்தி வெளிப்படுகிறது.

ஆடையிலுள்ள பூ வேலைப்பாடுகள் அந்த ஆனடயின் முழுப் பரிமாணத்தையும் எடுத்துக் காட்டுவதுபோல இதில் வருகிற பெயர்களும், இடங்களும், சமுதாயம் முழுமையையும் இனம் காட்டுவனவாக அமைத்திருக்கின்றன.

சுருங்கச் சொன்னால், ‘எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது“ எந்த வகையிலும் இந்தியாவின் மகத்தான நாவல்களில் ஒன்று என்பது ஒவ்வொரு இந்தியனும் பெருமைப் படக்கூடிய, பெருமை பாராட்டக் கூடிய விஷயமாரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *