வங்காளி நாவலாசிரியர் விபூதி பூஷன் பானர்ஜி தனது முதல் நாவலான பதேர் பாஞ்சாலியை ‘விஸித்ரா’ என்ற பத்திரிகையில், 1928-29 51ம் ஆண்டுகளில் தொடர்கதையாக வெளியிட்டார். 1929-ம் ஆண்டின் இறுதிக் கட்டத்தில் அதைப் புத்தகமாக வெளிக் கொணர்ந்தார். ‘பதேர் பாஞ்சாலி’ ஒரு தனி ரகம் என்று குறிப்பிடப் படக்கூடியது. உள்ளடக்கத்திலும் கதை சொல்லும் முறையிலும் வரையறுத்துக் கூறமுடியாத இந்தியத் தன்மையைக் கொண்டது. கற்பனைப் படைப்பில் ஏற்கனவே நிலவிவந்த அல்லது தற்காலத்திய உத்திகளை முற்றிலும் விட்டொழித்து உருவானது. முற்போக்குக் கருத்தையோ அல்லது அதுபோன்ற ஏதாவதொரு கொள்கையின் கருத்தையோ எந்த வகையிலும் அடிப்படையாகக் கொள்ளாத படைப்பு.
பானர்ஜியின் முதல் நாவல் இது. அவருக்கு நற்பெயரையும் புகழையும் உருவாக்கி நிலைபெறச் செய்த பெருமை இந்த நாவலையே சாரும். ரவீந்திரநாத் தாகூரும், சரத் சந்திரரும் எழுதிக் கொண்டிருந்த காலம் அது. மதிப்பு மிக்க இலக்கிய கர்த்தா என்ற நற்பெயரை ஒரு புதிய படைப்பாளிக்கு இந்த நாவல் வாங்கிக் கொடுத்தது.
யுனெஸ்கோ வெளியீடுகளுக்காக இதை ஆங்கிலத்தில் திரு. தரபாதா முகர்ஜியுடன் இணைந்து மொழிபெயர்த்த திரு டி. டபிள்யூ. கிளார்க் கூறுகிறார் : ‘ஒரு எழுத்தாளர் என்ற வகையில் பானர்ஜியை மதிப்பீடு செய்யும் போது வங்காளத்தில் அவரது பிரஸித்தியையும் கண்டிப்பாகக் கவனத்தில் கொள்ள வேண்டும். பதிப்பிக்கப்பெற்ற அவருடைய ஐம்பது படைப்புகளில் பன்னிரண்டுக்கு மேற்பட்ட படைப்புகள் மறுபதிப்புச் செய்யப்பட்டுள்ளன; மூன்று அல்லது நான்கு படைப்புகளின் மூன்றாவது பதிப்பும் வெளிவந்துள்ளன. மூன்று அல்லது நான்கு படைப்புகளின் மூன்றாவது பதிப்பும் வெளிவந்துள்ளன. வங்காளி மக்கள் அவர் எழுத்துக்களில் கொண்டிருந்த மதிப்புக்கு இவை சான்றுகளாக அமைகின்றன. எந்தக் கேள்விக்கும் இடமின்றி, ‘பதேர் பாஞ்சாலி’ அவருடைய மகத்தான வெற்றிப் படைப்பு ஆகும். 1929 நவம்பரில் அது புத்தகமாக வெளிவந்ததைத் தொடர்ந்து, ஆறு பதிப்புகள் வெளியிடப்பட்டன. அவற்றுள் இரண்டு சுருக்கப்பட்ட பதிப்புகள். அவற்றில் ஒன்று தற்போது பள்ளிகளில் பாடப்புத்தகமாக வைக்கப்பட்டிருக்கிறது. சத்தியஜித்ராய் இதைத் திரைப்படமாக்கினார். வங்காளத்தில் அந்தத் திரைப்படம் மிகுந்த பிரஸித்தி பெற்றது. கான் திரைப்பட விழாவில் பரிசு பெற்றதன் மூலமாக உலகப் பிரஸித்தியும் பெற்றது. அதன் பிறகு மேலை நாடுகளனைத்திலும் திரையிடப்பெற்று சிறந்த வெற்றியை அடைந்தது.
பானர்ஜி அவரது முதல் படைப்பான பதேர் பாஞ்சாலியினால் புகழ் பெற்றாரா, அல்லது அவருடைய பிந்தைய படைப்புகளின் வெற்றி, முதல் படைப்பின் பிரபலத்தால் ஏற்பட்டதா என்பது பற்றிச் சிறிது சந்தேகம் இருக்கிறது. பதேர் பஞ்சாலியின் தொடர்ச்சியான அபராஜிதா உட்பட அவற்றுள் ஒன்றுகூடப் பதேர் பஞ்சாலியைப் போல உற்சாகமான வரவேற்பைப் பெறவில்லை. அவற்றுள் சில மிகச் சிறந்த படைப்பான பதேர் பாஞ்சாலியின் புகழினால் தவிர, சிறிய அளவிலேனும் வாசகர்களைக் கவர்ந்திருக்கக்கூடுமோ என்று நான் சந்தேகிக்கிறேன். ரவீந்திநாத் தாகூர், சரத் சந்திர சட்டார்ஜி போன்ற பெரிய வங்காளி நாவலாசிரியர்கள் வரிசையில் பானர்ஜியும் ஒருவராக இடம் பெறுகிறார். ஆனால் அவர்களைப் போலல்லாமல் பானர்ஜியும் புகழ், மிக உயர்ந்த தரமும் எக்காலமும் நிலைத்திருக்கிற கவனமும் பெற்ற அவருடைய இந்த ஒரே ஒரு படைப்பினாலேயே உருவானது.
விமரிசன மதிப்பீட்டில் பார்த்தால் இந்த விமரிசகர்களும் வங்காளி விமரிசகர்களும் இந்தக் கருத்திலிருந்து முற்றிலும் மாறுபடக்கூடும். ஆனால் சந்தேகத்துக்கிடமின்றி மிகச் சிறந்த வங்காளி நவீனங்களில் “பதேர் பாஞ்சாலி”யும் ஒன்று என்ற கருத்தை அவர்கள் ஒவ்வொரு வரும் ஏற்றுக்கொண்டே ஆவார்கள். மேலும் மிகச் சிறந்த இந்தியக் கற்பனைப் படைப்புகளில் ஒன்று என்ற அபிப்பிராயத்திலும் அவர்கள் அனைவரும் ஒத்துப்போவார்கள். ஆரம்ப காலமாகிய இருபதுகளில் பிற்பகுதியில் தோன்றிய மிகச் சிறந்த படைப்புகளில் பதேர் பாஞ்சாலியும் ஒன்று என்பது உண்மை. மேலும் பெரும்பாலான தொடர்கதைகள் பிரபலமாக எழுதப்பட்டிருந்தும், இலக்கியப் பத்திரிகைகள் கூடச் சிறந்த நாவல்களை உருவாக்க முடியவில்லை எனினும், அபூர்வமாக ஒரு எழுத்தாளர் உண்மையிலேயே மிகச் சிறந்தவொரு நல்ல படைப்பிற்குத் தொடர்கதைப் பாணியைப் பயன்படுத்த முடியும் என்ற உண்மைக்குப் ‘பதேர் பாஞ்சாலி’ ஒரு நிரூபணமாகும்.
எல்லாம் சரி, ஆனால் ஒரு நாவலைத் திரைப்படமாக்குவது நிச்சயமாக மிகுந்த பிரபலத்தைக் கொடுக்க கூடுமாயினும் அது ஒரு இலக்கியப்பூர்வமான பெருமையா? அல்லது அவ்வாறு திரைப்படமாக்கப்படுவது மிகுந்த பாராட்டுக்குரியதாக ஆக்குகிறதா? என்பது சங்கடத்துடன் வெளிப்படும் கேள்வி. இந்தியாவில் இலக்கியம் மற்றும் பிற இயக்கங்களில் தாங்களே முன்னோடிகள் என்ற பெருமை பாராட்டிக் கொள்ளும் வங்காளிகள் (முழுமையான அல்லவெனினும் ஓரளவு ஏற்றுக்கொள்ளக் கூடிய அந்தப் பெருமைக் குரிய அவர்கள்) யுனெஸ்கோ வெளியீடாக ஆங்கிலத்தில் வெளிவந்த பதேர் பாஞ்சாலியின் சுருக்கத்தை ஏற்றுக்கொண்டு ஒத்துப் போய்விட்டார்கள்.

இது நாவலாசிரியருக்குச் செய்யப்பட்ட ஒரு அநீதி ; விளக்கம் சொல்லப்படக் கூடியதெனினும், நியாயமானதல்ல. இந்த நாவலின் சுருக்க வெளியீடுகள் மற்றும் இதன் மூன்றாவது பாகத்தைப் பற்றிய வாதங்கள் வேண்டுமானால் நியாயப்படுத்தப்படலாம். இந்த நாவலை யுனெஸ்கோவிற்காக மொழி பெயர்த்த மொழி பெயர்ப்பாளர்கள், இரண்டாவது பாகத்தோடு நாவல் முடிவு பெற்றுவிடுகிறது என்று வாதிக்கிறார்கள். சத்தியஜித்ராய் அதோடு நிறுத்துவதே சரி என்று நினைத்தார் என்பதற்காக அல்ல மூன்றாம் பாகம் தேவையேயில்லை. சொல்லப்போனால் மூன்றாவது பாகம் முதல் இரண்டு பாகங்களையும் கலாபூர்வமானதாக நிறைவு செய்கிறது. வயதான அத்தை என்று முதல் பாகத்திற்குத் தலைப்பிடப்பட்டிருந்தாலும், அது ஒரு பூர்வாங்கமான தொடக்கம் போலவே அமைந்திருக்கிறது. பிரதானமாக கதைக்குச் சிறிதும் பொருத்தமில்லாமல் இருக்கிறது. நாவலின் இரண்டாம் பாகம் நீளமானது. குழந்தைகள் செய்து கொள்ளும் விளையாட்டுப் பொம்மைகள் (Children Make their own toys) என்று அதற்குத் தலைப்பிட்டிருக்கிறது. ஒபுவின் உலகத்தை அவனது தன்மைகளின் அடிப்படையில், அவனது பார்வை அவனது பார்வையில் சித்தரிக்கிறது. இந்த நாவலின் அதிகாரப்பூர்வமான ஆங்கில மொழிபெயர்ப்பில் நாவலின் மூன்றாவது பாகம் வாசகர்களுக்குத் தரப்படவில்லை. அந்த மூன்றாவது பாகம்தான் கதையை மேலும் நடத்திச் செல்கிறது. ஒபு சிறு பையனாகவும், பெரியவனாகவும் வளர்ச்சியுறுகிற கதை மூன்றாம் பாகத்தில்தான் சொல்லப் படுகிறது. நாவலின் கதாநாயகனான பையனின் பால்ய கால நிகழ்ச்சிகளைச் சித்தரிக்கும் இரண்டாவது பாகத்தைவிட, மூன்றாவது பாகமே கதையை இன்னும் நன்றாக முழுமைப் படுத்துகிறது. சினிமா தயாரிப்பவர் என்ற சுதந்திர அதிகாரம் எவ்வளவுதான் இருந்தபோதிலும் சத்யஜித்ராய் போன்ற ஜாம்பவான்கள் அவ்வாறு நாவலைக் குறுக்கும் காரியத்திற்குப் பின்னணியாக இருந்த போதிலும், மூன்றாவது பாகத்தை முற்றிலும் கைவிடுவது நாவலாசிரியரின் நோக்கத்தை அவமதிப்பதாகும். இந்த ரீதியில் நாவலாசிரியரின் நோக்கத்திற்கும், கற்பனை படைப்புக் கலைக்கும் திரைப்படம் அநீதி இழைக்கிறது.பதேர் பாஞ்சாலி (சினிமா) வங்காளிகளுக்கு மிவும் பிடித்திருக்கலாம். ஆனால், அவர்கள் அதன் நாவலாசிரியருக்கு முற்றிலும் உடன் நிற்கவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.
குழந்தைகளும், குழந்தைகளின் நோக்கும் பிரதானம் பெறும் ஏராளமான காட்சிகளைச் சித்தரித்தது இந்திய நாவலாசிரியர்கள் எழுதியிருப்பதை யாரும் ஞாபகம் வைத்திருப்பார்கள். சில சமயங்களில் பெரியவர்களின் பார்வைக் கோணத்திலிருந்து குழந்தைகளைப் பற்றியும் குழந்தைகளின் உலகத்தைப் பற்றியும் எழுதுவதில் மட்டுமே இந்தியக் கற்பனைப் படைப்பாளர்கள் கலையின் உன்னதமான சிகரங்களுக்கு உயர்ந்திருக்கிறார்கள். இந்த வரிசையில் முதலில் நாம் எடுத்துக்கொண்ட முகம்மது பஷீரின் எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது நாவலில் கூட நாம் ஒரு குழந்தையையும், குழந்தையின் பார்வைக் கோணத்தையும் பார்த்தோம். நாம் இதுவரையில் சிறந்த குழந்தை இலக்கியங்களைப் படைத்திருக்கவில்லையெனினும், இந்தியாவின் மிகச் சிறந்த கற்பனைக் கலைப் படைப்புகள் குழந்தைகளை மையமாகக் கொண்டே படைக்கப்பட்டிருக்கின்றன. வசதியற்ற சூழ்நிலையில் வளர்கிற ஒரு பையனும் ஒரு பெண்ணுமான இரு பிராமணக் குழந்தைகளின் உலகத்தை ஆராய்கிறதெனினும், பதேர் பாஞ்சாலி குழந்தைகளைப் பற்றிய ஒரு புத்தகமல்ல.
துர்கா மூத்தவள். வயதான, விரும்பப்படாத, பாசமுள்ள, உண்பதற்கு உணவின்றிப் பட்டினி கிடக்கும் இந்திர் தாக்ரூன் துர்க்காவின் அத்தையாக நமக்கு அறிமுகப்படுத்தப்படுகிறாள். அவள் விதவை.கடந்து போன முந்தைய நாட்களின் ஒரு மனைவியாகவும் தாயாகவும் வாழ்ந்திருந்த பெருமையான நாட்களை அவள் பெற்றிருந்தாள். ஆனால், அவளுக்குப் புகலிடம் எதுவுமில்லை. ஹரிஹர் குடும்பத்தின் வறுமைச் சுமையை அவளும் பகிர்ந்து கொள்கிறாள். துர்காவின் அம்மாவிற்கு அத்தை சிறிதளவுதான் உதவிகரமாக இருக்கிறாள்; ஏற்கனவே குடும்பத்தைப் பீடித்துள்ள வறுமையையும், பட்டினியையும் தாங்கிக் கொள்ள முடியாமல், அவளைத் துர்காவின் அம்மா எப்போதும் திட்டிக் கொண்டேயிருக்கிறாள். தீவிரமாகக் கவனித்தால், நாவலின் முதல் பாகத்தின் முதல் ஏழு அத்தியாயங்களும் உண்மையில் நாவலோடு எந்தத் தொடர்பும் இல்லாததாகவே அமைந்திருக்கின்றன. ஆனால், அதன் பிந்தைய அத்தியாயங்கள் ஒபுவின் உணர்வுகளையும், துர்காவின் விஷமங்களையும், அவளின் நிறைவேறாத ஆசைகளையும் குழந்தை உலகத்தின் பிரக்ஞையையும் வெளிப்படுத்துகின்றன. ஆனால் முதல் பாகம், எங்கும் நிலவுகிற ஒரு இந்திய அனுபவத்தைக் காட்சிக்கு முன்வைக்கிறது. அது நமது நாட்டுக்கும் நம் இனத்திற்கும் உரித்தான தனிப்பட்ட குணம்.அது அத்தையைப் பற்றியது. மரணத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிற ஏழை உறவினளான அவள். யாராலும் விரும்பப்படாதவள். ஆனால், அவளோ குடும்பத்தின் கஷ்டங்களையெல்லாம் பகிர்ந்து கொள்கிறாள். குடும்பத்தின் குழந்தைகள் அனைவருக்கும் உண்மையான சிநேகிதி அவள், வயதான இந்திர் தாக்ரூன் இல்லாமல்போனால், ஹரிஹர் குடும்பத்தின் இரண்டு குழந்தைகளின் சந்தோஷ உலகம் முற்றிலும் சிதைந்தும், பொருளற்றும் போய்விடும் என்று எல்லோரும் உணர்கிறார்கள்.
நாவலின் பிற்பகுதிகள் முழுவதிலும், முக்கியத்துவமிழந்த தன்மையுடனும் நினைவில் மங்கலாக ஞாபகத்துக்கு வரும் ஒரு உருவமுமாகவே அவளைப் பறிய சித்திரம் தென்படுகிறது. ஸ்பஷ்டமாக அவளைக் குறித்த தெளிவான சித்திரம் எதுவுமில்லை. இந்தியாவில் குடும்பத்துடன் இணைந்த இந்த உறவின் முழுமையையும் வெளிக்கொணரப் பல நாவலாசிரியர்கள் முனைந் ‘திருக்கிறார்கள். ஆனால் விபூதி பூஷன் இந்த நாவலில் சித்தரிப்பதைப் போல் வெற்றிகரமாகச் சித்தரித்தவர்கள் மிகச்சிலரே. நாவலின் முதல் பாகத்திலேயே விதவை அத்தையையும் அவளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிற ஆறு வயதுச் சிறுமியையும் எவ்வளவு அற்புதமாகச் சித்தரிக்கிறார் ஆசிரியர்.
ஹரிஹரின் தூரத்து உறவினளான இந்திர் தாக்ரூன் வராந்தாவில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவளின் விரதம் முடிந்த அடுத்த நாள் அது. பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு பதினோராவது நாளும் விதவைகள் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் அது. அவள் தனது காலை உணவான பொங்கிய அரிசிச் சாதத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். ஹரிஹரின் ஆறு வயது பெண் அவளுடன் இருந்தாள். குழந்தை எந்த விபரத்தையும் பெறவில்லை, அவளுடைய கண்கள் அகலத் திறந்திருந்தன. அவற்றில் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.உணவுக் கலத்திற்கும் வாய்க்குமாக இயங்கிக்கொண்டிருக்கும் முதியவளின் கையின் ஒவ்வொரு அசைவையும் அவள் பின்பற்றிக் கவனித்துக் கொண்டிருந்தாள். பாத்திரத்திலிருந்து சாதத்தின் அளவு சிறிது சிறிதாகக் குறைந்து கொண்டே வந்தது. சிறுமி அதிகமான முக வாட்டத்திற்குட்பட்டாள். ஓரிருதடவை அவள் தனக்கும் கொஞ்சம் வேண்டுமென்று கேட்பதற்கு யத்தனித்தாள். ஆனல் அவளால் கேட்கமுடியவில்லை. எல்லா உணவும் காலியான பிறகு முதியவள் அவளை நோக்கினாள்; பிறகு ஆதுரத்துடன் சொன்னாள்; ‘அடடா, என் கண்ணே/ உனக்கு ஏதும் வைக்காமல் சாப்பிட்டு விட்டேனே! எவ்வளவு தன்னை மறந்தவள் நான்!’
சிறுமியின் கண்களில் ஏமாற்றம் தெரிந்தது. இருந்தும் அவள் ‘அதனால் என்ன அத்தை; நீங்கள் சாப்பிடுங்கள்’ என்றே பதில் சொன்னாள்.
இந்திர் இரண்டு பெரிய வாழைப் பழங்கள் வைத்திருந்தாள். அவற்றில் ஒன்றை இரண்டாக வெட்டி ஒரு பாதியைச் சிறுமியிடம் கொடுத்தாள். சிறுமியின் கண்கள் உடனே பிரகாசமாயின. அதை அத்தையின் கையிலிருந்து எடுத்துக் கொண்டாள். நிதானமாக சந்தோஷத்துடன் பழத்தை அனுபவித்துச் சுவைக்க ஆரம்பித்தாள். ஆனால், அந்தச் சந்தோஷம் நீடிக்கவில்லை. உள்ளிருந்து அவளுடைய அம்மா கூப்பிட்டாள். “அங்கே எதற்காகத் தொண்ணாந்து கொண்டிருக்கிறாய் ? உள்ளே வா.”

யாருமற்ற விதவை இந்திர் தாக்ரூனின் மரணம், நிஷ்சிந்திபூர் கிராமத்தில் அவளது பழமைப்பட்ட நாட்களுக்கு ஒரு முடிவைக் கொண்டு வருகிறது. ஆனால், பழைய நாட்களோ, புதிய நாட்களோ ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும், எல்லாம் ஒன்றுதான். தாம் ஏழைகளின் மத்தியில் வாழ்கிறோமோ அல்லது பணக்காரர்களின் மத்தியில் வாழ்கிறோமா என்பதைப் பற்றிக் கவலை எதுவுமில்லாதவர்கள், குழந்தைகள் தாம். இந்த நாவலை ஆசிரியர் எழுதியிருக்கும் நேர்த்தியானது, நாவலில் வருகிற பையன் ஒபு மற்றும் துர்காவின் பார்வைக் கோணங்களையும், அதே நேர்த்தியுடன் கூடிய அழுத்தமான சித்தரிப்பாக உருவாக்கியுள்ளது. ஒபு உயிருடன் இருக்கிறான். ஆனால், துர்கா தன் அத்தையாலும் -. வாசகர்களாலும் நேசிக்கப்பட்ட அவள் – மரணமடைய வேண்டியிருக்கிறது. குறைந்தபட்சம் ஒரு கண நேரமாயினும் ஒபுவின் உலகத்தை வெறுமையாக்கிவிட்டு அந்தச் சிறுமி இறந்து போய்விடுகிறாள்.
சம்பிரதாயமான சித்தரிப்பா? ஆமாம்; சம்பிரதாயத்தை மேற்கொள்ள வேண்டிய எந்த வாய்ப்பையும் இந்தியர்களால் ஒதுக்கிவிட முடியாது. அதிலும், வங்காளிகள் சம்பிரதாயத்தில் இந்தியர்களுக்குச் சிறந்த உதாரணம் போன்றவர்கள். ஆனால், சம்பிரதாயம் ஒருபோதும் மிகையாகச் சித்தரிக்கப்படவில்லை. இந்தியக் குழந்தைகளின் பொதுவான போஷாக்குக் குறைந்த தன்மை, வாழ்க்கை முழுவதும் வறுமையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறவர்களின் உதவியற்ற நிலை ஆகியவை தவிர, துர்காவின் மரணத்திற்காக ஒரு சொட்டுக் கண்ணீர் வடிக்கக்கூட நாம் தூண்டப்படவில்லை. வாசகர்களின் நெஞ்சிலும், மனத்திலும் தன்னை முழுமையாகப் பொதிந்து சென்றுவிட்ட துர்கா, அவளது மரணத்தின்போது தன் முழு வாழ்க்கையையும் வாழ்ந்துவிட்டவள் போலக் காணப்படுகிறாள். விஷமம் நிறைந்தவள் அவள்; திருடியும்கூட. ஆனால், அவளைக் குற்றஞ்சாட்டும் அடுத்த வீட்டு வாயாடிக்காரிக்கும் எதிராக, நாம் அவள் திருட்டுக்கள் குறித்து அனுதாபமே கொள்கிறோம். அவள் சில மாங்காய்களையும் அற்ப மதிப்புடைய மணிக்கற்களையும் மட்டுமே திருடினாள். தான் திருடவில்லை என்ற துர்கா மறுத்துவிட்ட மணிக்கல் மாலையை ஒபு யதேச்சையாகக் காண நேர்கிற சம்பவம், நாவலின் நெகிழ்ச்சியான கட்டங்களில் ஒன்றாகும். அவன் தனக்குள்ளே அவள் ஒரு திருடியா? என்று கேள்வியைக் கேட்டுக் கொண்டாலும், ஒபு அதைப் பற்றி யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. புத்திசாலித்தனமாக, தான் கண்டு பிடித்ததைப் பற்றி யாரிடமும் சொல்லவில்லை. அவனும் நம்மைப் போலவே, தன் சகோதரியும் தனக்கு வழிகாட்டியுமான அந்தப் பெண்ணை மிகவும் நேசிக்கிறான்.
தந்தை வெளியிடங்களுக்குப் பயணம் போகும்போது அவருடன் ஒபுவும் உடன்சென்று நீண்ட ரயில் பாதைகளையும், இந்த உலகத்தையும்,ஆண்களையும், பெண்களையும் பரந்த அளவில் பார்த்திருக்கிறான் எனினும், அவனுடைய உலகம் எந்த வகையிலும் ஒரு ஆண் மகனுடைய உலகமாக இல்லை. துர்காவின் தம்பியானதால் அவனுடைய உலகம் பெரும்பாலும் அவளால் உருவாக்கப்பட்டதே. நல்ல குடும்பத்தில் பிறந்த குழந்தைகளின் பண்பு எதுவும் அவளிடம் இல்லாமலிருக்கலாம்; அவள் குறும்புத்தனங்கள் நிறைந்த பெண். வேண்டுமானால் நாம் அவளை ஒரு சாகஸம் நிறைந்த பெண் என்று சொல்லலாம். ஆனால் அவள் ஒபுவுக்கும் நமக்கும் பிரியமானவள்.
அதிசயமான வகையில் நம்மை நெகிழ வைக்கும் ஒரு மிகச் சாதாரணமான கட்டத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். ஏனெனில் யதார்த்தத்தையும், சாதாரணத்தில் ஒரு தனித் தன்மையையும் அது மிகத் துல்லியமாக, நேர்த்தியாகப் படம் பிடிக்கிறது – அதன் உண்மைத் தன்மை இந்தியத் தன்மையின் பாற்பட்டது.
அவர்கள் ஓடிக்கொண்டிருக்கையில் ஷோட்டு குனிந்து பிறகு திரும்பி ஓடுவதை துர்கா பார்த்தாள். அதே கணத்தில் ஒபு திடீரென நின்றான். ஷோட்டு தொடர்ந்து ஓடி விரைவில் பார்வையிலிருந்து மறைந்துவிட்டாள். துர்கா ஒபுவை நெருங்கியபோது அவன் ஓடுங்கி மடிந்து உட்கார்ந்திருப்பதைப் பார்த்தாள். அவனுடைய கண்கள் மூடியிருந்தன. அவன் தன் கைகளால் கண்களைக் கசக்கிக் கொண்டிருந்தான்.
“என்ன ஆயிற்று ஒபு”-அவள் கேட்டாள்.
ஒபுவால் சரியாகப் பார்க்க முடியவில்லை. தொடர்ந்து அவன் கண்களைக் கசக்கிக் கொண்டிருந்தான். அவனுடைய குரலில் கூட வலி இருந்தது.
“ஷோட்டு என் கண்களில் மண்ணை வீசி விட்டாள். என்னால் பார்க்க முடியவில்லை தீதி (அக்கா)! என்னால் பார்க்கவே முடியவில்லை.”
துர்கா அவசரமாக அவனது கைகளைப் பிரித்து விலக்கி விட்டாள். “ஒரு நிமிடம் இரு; நான் பார்க்கிறேன். நீ உன் கண்களை இது மாதிரி கசக்கக் கூடாது.”
ஒபு கைகளை விலக்கினான். ”எனக்கு வலிக்கிறது, தீதி, நான் குருடனாகிவிட்டேன்” – அவனுடைய குரல் மிகுந்த கிலியுடன் ஒலித்தது.

”இரு, இரு! என்னதென்று நான் பார்க்கிறேன்! கண்ணைக் கசக்காதே. கைகளைத் தூர எடு, அவள் தனது சேலையின் ஒரு முனையைச் சிறிது சுருட்டி வாய்க்குள் வைத்துச் சூடுபிடித்து அவன் கண்களில் ஒத்தடம் கொடுத்தாள். சில நிமிடங்களுக்குப் பிறகு அவனால் கண்களைத் திறக்க முடிந்தது; சிறிது பார்க்க முடிந்தது. பிறகு அவனது கண் இமைகளை விரித்துப் பின்புறம் மடக்கி அவற்றின் மேல் பலமுறை துர்கா வாயால் ஊதினாள். “இப்பொழுது உன்னால் சரியாகப் பார்க்க முடிகிறதா? நல்லது. நீ வீட்டுக்குப் போ. நான் அவள் அம்மாவிடமும் பாட்டியிடமும் இதைப் பற்றிச் சொல்லிவிட்டு வருகிறேன். சீக்கிரம் வந்து விடுவேன்.”
மிகச் சாதாரணமான சுவையற்ற ஒரு நிகழ்ச்சி. ஆனால் ஆசிரியர் இதை எத்தனை அழகாகக் கையாண்டிருக்கிறார்! எவ்வளவு பொருத்தமாக, ஒரு தாயைப் போல துர்கா செயல்படுகிறாள்! இந்த முழுச் சித்தரிப்பும் எவ்வளவு திருப்திகரமாக அமைந்திருக்கிறது!
நாவலாசிரியர் மனிதர்களுக்காக மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர். அதுவும் முக்கியமாகக் குழந்தைகளிடத்தில் அதிகம் உணர்ச்சிவசத்துக்கு உட்படுபவர். அவர் இயற்கைக் காட்சிகளை வருணிக்கும்போதுகூட உணர்ச்சிவசப்படுதலின் மாறுதல்கள் வெளிப் படுவதைக் காணமுடியும். சென்னையில் ஒரு கருத்தரங்கில் விமர்சகரும் கவிஞரும் நாவலாசிரியருமான திரு. எஸ்.எச்.வாத்ஸ்யாயன் இந்தியச் சொல்நடை குறித்துப் பேசும் போது, இயற்கையின் பால் இந்தியர்கள் கொண்டிருக்கும் தனித்த ஈடுபாட்டைப் பற்றியும், தங்களது நாவல்களில் அவர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்கிற தன்மை பற்றியும் குறிப்பிட்டார். உண்மையில் விபூதி பூஷன் பானர்ஜி தனது நாவலில் இயற்கையை நன்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். கை சென்ற இடமாக நாவலில் ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்து அடியில் தருகிறேன். இயற்கையை அவர் எவ்வாறு கையாண்டிருக்கிறார் என்பது அதிலிருந்து விளங்கும்.
“காட்டின் இந்தப் பகுதி அவர்களது வீட்டுக் காம்பவுண்டுச் சுவரிலிருந்து தொடங்கி தொழிற்கூடம் இருக்கிற இடம் வரையில் எந்த இடைவெளியுமில்லாமல் ஒரு திசையில் நதிக்கரை வரை நீண்டு செல்கிறது. ஒபுவிற்கு அது முடிவேயில்லாதது போலத் தோன்றியது. தன் சகோதரியுடன் அவன் அந்தக் காட்டுக்குள் நீண்ட தூரம் நடந்து சென்றிருக்கிறான்; ஆனால் அது முடியும் இடத்தை அவன் அடைந்ததேயில்லை. அவன் அந்தக் காட்டைப் பற்றித் தெரிந்திருந்ததெல்லாம் ‘டிட்டிராஜ்’ மரத்தின் பக்கத்தில் செல்கிற பாதை எந்த இடத்திலும் வளரக் கூடிய ‘பான்சால்டா’ மரத்தில் தொங்குகிற பழக் குலைகள்; ‘குலாஞ்ச்சா’ கொடிகளின் பூங்கொத்துத் தோரணங்கள் -இவற்றைத்தான். ஒற்றையடிப் பாதைகள் எல்லாம் மாஞ்சோலையில் வந்து முடிந்து விடுவதாகத் தோன்றின. உண்மையில் எங்கே எப்படியென்று யாருக்கும் எதுவும் தெரியாதெனினும், மாஞ்சோலையின் அடுத்த பக்கத்திலும் அந்தப் பாதை தொடர்ந்து சென்றது. அங்கு ஒரு பெரிய திறந்தவெளி இருந்தது. அந்த வெளியில் ஒரு வெள்ளரிக் கொடி சுதந்திரமாகப் படர்ந்து ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது. மிகப் பழமையான ஒரு வேல மரத்தின் பாசி படர்ந்த கிளைகளைச் சுற்றிப் பின்னிப் படர்ந்திருக்கும் ஒரு கொடியும் அங்கு கண்ணுக்குப் புலப்படும்.
தன் புது மலர்ச்சியோடும் அடர்ந்த பசுமையான நிழல்களோடும் காடு தன் கரங்களால் ஒபுவின் மீதும் அவன் சகோதரியின் மீதும் ஒரே மாதிரி தொட்டுப் பரவியிருந்தது; அவர்களது மனத்தில் அமைதியையும் ஆறுதலையும் கொண்டு வந்து நிறைத்தது. அவர்கள் தங்கள் வாழ்க்கை முழுவதும் அதை அறிந்திருந்தார்கள். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும் காட்டின் அமைதியும், அதனால் ஏற்படும் பெருமகிழ்வும், தாகம் கொண்ட அவர்களது ஆன்மாக்களின் மேல் வளமையும் விதவிதமான அமிழ்தமும் சொரிந்து நிறைப்பதாக அமைந்தன. மழையால் புது மலர்ச்சியூட்டப் பெற்றதும், ஒரு முள் மரத்திலிருந்தும் அதற்கு மேலிருந்தும் உதிர்கிற மணமிக்க நீளமான மஞ்சள் மலர்களின் இதழ்களால் மணிமுடிபோல் அலங்கரிக்கப்பட்டதுமான அடர்ந்த பசுமையான புதர் ஒன்று அங்கு இருந்தது. அந்த முள் மரத்தின் உச்சிக் கிளைகளில் சூரியன் மறையும்நேரத்தில் நிழல் படர ஆரம்பித்தவுடன், அணில்கள் இங்கு மங்குமாக ஓடித் திரிந்தன.
காட்டைப்பற்றிய வியப்பும், நேரத்துக்கு நேரம் மாறிக் கொண்டிருக்கிற சந்தோஷங்கள் ஒபுவிடம் மனக்கிளர்ச்சிகளை உண்டுபண்ணி நிறைந்தன. வார்த்தைகள் எதுவும் வெளிவராத அளவிற்கு அவை மனத்தின் ஆழத்துள் ஊடுருவிப் புகுந்து படிந்தன. அதோ / ஏராளமான செழித்த இலைகள், மலர்கள், எதையும் தொடாது அலட்சியம் செய்யும் பெயர் தெரியாத அந்தச் சின்னப் பறவை. அந்தப் பறவை வந்து எதுவும் காய்க்காத ஒரு மரத்தின் திருகலான கிளையின் மீது அமர்ந்தது. அவனைச் சுற்றி ஒலித்த பறவைகளின் பாடல்கள் அவனுக்கு ஒரு கனவில் நிகழ்வதைப் போன்ற தோற்றத்தைத் தந்தன. இந்த நனவுலகத்தில் நிகழும் செயலாகவே தோன்றவில்லை. மேலிருந்து உதிர்ந்து மிதந்து அமைதியாகக் கீழிறங்கிய மலர்களின் இதழ்கள் மென்மையான மழை பொழிவதைப் போலிருந்தது. சூரிய அஸ்தமனத்தின் ஒளி இன்னும் கடினமடைந்து இருட்டாகியது.
அந்தக் காட்டின் நடுவில் எங்கோ ஓரிடத்தில் மிகப் பழமையான சிறு குளம் ஒன்று இருந்தது….
கிராமம் ஆண்களும் பெண்களும்; வயது வந்த பெண்களும் இளைஞர்களும்; சிறுவர்களும் சிறுமியர்களும்; விதவைகளும் மணப்பெண்களும், குறும்புக்காரர்களுமாகப் பலதிறப்பட்ட மக்கள் கூட்டம் வாழும் இடமாக, இன்றைய நாளில் கூட நிலவுகிற இந்திய வாழ்க்கையின் ஒரு அங்கமாகத் திகழ்ந்தது. இரவில் ஜாத்ரா கூத்துக்கள் நிகழ்ந்தன. ஜாத்ரா கூத்தில் அதுபோன்ற கிளர்ச்சியூட்டுகிற பாத்திரமேற்று ஆடுகிற. அதி இனிமையாகவும், சில நேரங்களில் துயரம் மிகுந்தும் பாட்டுப்பாடுகிற பையனை ஒபுவின் வீட்டில்தான் உபசரிப்பார்கள்; அவர்கள் மிகவும் ஏழையாக இருந்தும்கூட, ஒபுவின் அம்மா, தான் இன்னொரு புதிய மகனைப் பெற்றது போல உணர்வாள். பெரியவர்களின் வாழ்க்கை கவனிப்புகள், ஆர்வங்கள், கடும் உழைப்புகள், சந்தோஷங்கள் – இவை கலந்ததாகச் சென்று கொண்டிருக்கிறது. ஆனால்இதைப் பற்றி ஒபுவின் பார்வை மூலமாக நாம் ஒரு சில குறிப்புகளை மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது. அது ஒரு முழுமை பெற்ற உலகம். நுணுக்கமான அளவிலான பிரபஞ்சத்தின் ஒரு மாதிரிப் படிவம். புத்தகத்தில் வார்த்தைகளால் கட்டுப்படுத்திச் சொல்லி வைக்கப்பட்டிருந்தாலும், முடிவில்லாத தொடர் நிகழ்ச்சிகளாகவே இந்தக் காட்சிகள் எல்லாம் விரிகின்றன.
இந்தப் புத்தகத்தின் தலைப்பைப் பற்றியும் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முடியாமை பற்றியும் குறிப்பிடும் போது, இதன் மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவரான திரு டி.டபிள்யூ. கிளார்க் கூறுகிறார்.
முதல் வார்த்தையான பதேர் (Pather) ஒரு பெயர்ச் சொல்லின் ஆறாம் வேற்றுமையைக் குறிப்பது. அதற்குச் சாலை (Road) என்று பொருள். ஆனால் இரண்டாவது வார்த்தையான பாஞ்சாலி (Panchali) என்பதற்கு இணையான ஆங்கில வார்த்தை கிடையாது. நீண்ட கதை பொதிந்த (காதை) கவிதைகளைக் கொண்ட ஒரு வகைக் கவிதைப் பிரிவின் பெயர் அது. மத்திய கால வங்காளி இலக்கியத்தில் பெரும் பங்கு வகிக்கிற, இந்தியாவின் பாரம் பரியமான இரண்டு பெருங்காவியங்களின் வட்டார வழக்குப் பாடல்களைக் கொண்டது இந்த வகை. இதன் கவிதைக் கட்டமைப்புகூட மங்களகாவியம் என்று (Mangalakavya) அழைக்கப்படுகிற, காவியம் போன்ற நீண்ட கவிதை அமைப்பைக் கொண்டது. இந்தப் பாடல்கள் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வருபவை. பாடகர்கள், பத்து அல்லது அதற்கும் மேற்பட்ட நாட்கள் வரை தொடர்ந்து இசைக்கருவிகளின் துணையோடு குறிப்பிட்ட அந்தந்தக் கொண்டாட்டக் காலங்களில் பாடுபவர்கள் குழுவினராலும்; அந்தந்த இடங்களுக்கேற்றவாறு நடிகர்களாலும் இந்தப் பாடல்கள் வழிவழியாக நிலவி வருபவை. இதில் அவர்கள் சித்தரிக்கிற கதாநாயகர்களும் சம்பவங்களும் வங்காளி கலாசாரப் பாரம்பரியம் வழங்கிய இன்றியமையாத முக்கியக் கூறுகளாகும். அவை இன்றும் நிலவி வருபவையுமாகும்.
வங்காளம் அல்லாத மற்ற பிராந்தியங்களைச் சேர்ந்த இந்தியர்களுக்கு இது போன்ற கலாசாரம் சார்ந்த பாரம்பரியச் சொத்துக்குக் குறைவில்லை. இந்தப் பாரம்பரிய விஷயங்களிலிருந்து புதிய கற்பனை இலக்கியப் பாணியை உருவாக்க இந்த நாவலாசிரியர் முயன்றிருப்பதை யாரும் கண்டுகொள்வார்கள். இந்த வகையிலேயே, வயது முதிர்ந்த அத்தை (The Old Aunt) என்று தலைப்பிடப்பட்ட முதல் பாகமும், மூன்றாவது பாகமும் பாஞ்சாலி மரபில் பொருத்தமானவையாக ஆகின்றன. அப்படியானாலும், இந்த நாவலின் சுருக்கப்பட்ட வடிவம், திரைப்பட வடிவத்தைக் கௌரவப்படுத்து வதைப் போல, இதன் முழு நாவல் உருவத்தைக் கௌரவப் படுத்தவில்லை. இந்தியாவின் மகத்தான நாவல்களில் ‘பதேர் பாஞ்சாலி’யைச் சிறந்தவொரு நாவலாக ஆக்குகிற திருப்திகரமான உயர்ந்த, ஒரு கலைத்துவ வெளிப்பாட்டை இதன் சுருக்கப்பட்ட வடிவம் ஓரளவே நமக்குத் தருகிறது. மற்ற பிராந்திய நாவலாசிரியர்ளகளும் தமது இடங்களின் பாரம்பரிய மரபுகளின் சாரத்தைத் தமது படைப்புகளில் கொண்டுவர முயன்றிருக்கிறார்கள். ஆனால் அவர்களால் அது இயலவில்லை என்றுதான் பொரும்பாலும் சொல்ல முடியும். அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகளும் சாதனங்களும் இல்லாமையால், ஒருவரின் அறிவு ஒரு வரையறைக்குட்பட்டதாக இருக்கக்கூடுமெனினும், விபூதி பூஷன் பானர்ஜியின் வெற்றியைப் போல வேறு எவரும் அடையவில்லை என்று கூறலாம்.
குறிப்பு:- பல ஆண்டுகள் முன்னே இதன் தமிழ்மொழி பெயர்ப்பு காலஞ்சென்ற எழுத்தாளர் திரு. ஆர். சண்முகசுந்தரம் மொழிபெயர்த்தது – கோவை மெர்க்குரி புத்தக நிலையத்தாரால் வெளியிடப்பட்டது.

