மறுவாசிப்பு – ‘வெண்முரசு’ – 25 – ‘கல்பொருசிறுநுரை’

‘வெண்முரசு’ நாவல்தொடரின் இருபத்து ஐந்தாவது நாவலான ‘கல்பொருசிறுநுரை’ மனித வாழ்க்கையின் அழகு, அதனுடைய நிலையற்ற தன்மை ஆகியனவற்றை மிக ஆழமாக விளக்குகிறது. இது, சிக்கலான அரசியல் சூழ்நிலைகளும் ஆழமான மனித உளவியலும் வன்முறையும் சிதைவும் கலந்து, கண்ணைக் கட்டும் சரித்திரக் காவியமாக மாறியுள்ளது.

பொதுவாகவே மனித வாழ்க்கை ஒரு நீர்க்குமிழியுடன் ஒப்பிடப்படுகிறது. நீர்க்குமிழி என்பது மிகச் சிறியதொரு பொருள். ஆனால் அது தோன்றும் அந்தச் சில நொடிகளில், அதனை நாம் ரசிக்கும்படி இருக்கும். அதனுள் ஏழு வண்ணங்கள் சுடர்கின்றன. ஒளி விழும்போது அது வானத்தைப் பிரதிபலிக்கிறது. மெல்ல நசுக்கப்படும் வரை, அது தன் உள் ஆற்றலை வெளிக்காட்டி, மகிழ்வாகக் காட்சியளிக்கிறது. ஆனால், அந்த மகிழ்ச்சி மிகவும் குறுகிய கால அளவிலேயே நிலைபெறும். அந்த நீர்க்குமிழி மெல்ல நடுங்குகிறது, உடைந்து சிதறுகிறது. ஒருவேளை அதை நாமே கைத் தொடும்போது உடைந்தும் போகலாம்; இல்லை என்றாலும் அது தானாகவே அழிந்து விடும். மனித வாழ்க்கையின் உண்மையான தன்மையும் இதனைப் போன்றதுதான். 

நாம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக, ஒளியுடன், நிறங்களுடன் வாழ முயற்சி செய்கிறோம். ஆனால், அந்த வாழ்க்கையே மிகக் குறுகியதுதான் என்பதை நாம் மறந்துவிடுகிறோம். நம்மில் பலர் நிலையான ஓர் வாழ்வு என்று நினைத்து ஆசை, வெற்றி, சொத்து, புகழ் என ஏராளமானவற்றிற்குப் பின்னால் ஓடுகிறோம். ஆனால் நிஜமாகப் பார்த்தால், இந்த வாழ்க்கை என்பதே ஒரு நீர்க்குமிழிபோலத்தான். அது எப்போது நசுங்கி விடும் என்பதைக் கணிக்கவே முடியாது.

இந்த நாவலில் மனித வாழ்க்கைக்கு இணையாக, துவாரகை என்ற நகரத்தின் நிலையும் சொல்லப்படுகிறது. துவாரகை என்பது பழமையான அழகிய நகரம். ஒரு காலத்தில் அது வளமுடன், மகிழ்ச்சியுடன், நாகரிகத்துடன் இருந்தது. ஆனால், அந்த நகரமும் ஒரு நீர்க்குமிழிபோல், ஒரு கட்டத்திற்குப் பிறகு அழிந்து போகிறது. எதுவும் நிலைத்ததல்ல. மனிதனின் வாழ்வோடும் அவரால் உருவாக்கப்படும் எதையாலும் – அது நகரம், மரபு, நாகரிகம் எதுவாக இருந்தாலும் – அதுவும் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வரும். இதுவே இந்த நாவலின் ஆழமான கருத்து.

‘கல்பொருசிறுநுரை’ என்ற பெயரே இந்த உண்மையை வெளிக்காட்டுகிறது. ‘நுரை’ என்பது நம்மால் கையால் பிடிக்க முடியாத ஒன்று. அது எப்போதும் மாறிக் கொண்டிருக்கும். அதேபோலதான் வாழ்க்கையும். இந்த நாவல், வாசகனை வாழ்க்கையின் சுகந்தமான, பொற்கால நிமிடங்களை நினைவூட்டுவதுடன், அதன் நிலையற்ற தன்மையை ஒளிமிக்க வண்ணங்களில் வழியாக எடுத்துக்காட்டுகிறது.

இந்த உலகில் வாழும் ஒவ்வொரு உயிரின் வாழ்வும் நிலையற்றது என்பதே இயற்கை நமக்கு அளிக்கும் முரண்நகை. அதாவது, எதுவும் நிரந்தரமில்லை – பிறப்பு இருந்தால் இறப்பும் இருக்கிறது; தொடக்கம் இருந்தால் முடிவும் நிச்சயம். ஆனால் மனிதன், இந்த உண்மையை அறிவதாக இருந்தும் அதைப் புறக்கணித்து, தன்னம்பிக்கையிலும் இறுமாப்பிலும் வாழ்கிறான்.

“எனதால்தான் எல்லாமும் நடக்கிறது”, “எனக்குத்தான் எல்லாமும் உரியது” என்ற ஒரு தவறான நம்பிக்கைகளை மனிதன் தன்னுள் கருக்கொண்டுள்ளான். இதனாலேயே மனிதன் பெருமையடைகிறான், மற்ற உயிர்களிலேயே தன்னைச் சிறந்தவன் என நினைக்கிறான். ஆனால் அவனுடைய அந்த துள்ளலும் ஆட்டமும் மிகவும் சிறிய காலத்துக்கே. காரணம், மனித வாழ்க்கை ஒரு நீர்க்குமிழிதான். அது எந்த நேரத்தில் உடைந்து சிதறும் என்று யாருக்கும் தெரியாது.

நீர்க்குமிழிக்குத் தெரியாதுதான் தான் எப்போது அழிவோம் என்று. ஆனால், மனிதனுக்கு நன்றாகவே தெரியும். அவன் அறிவு பெற்றவன். அவனுக்குப் பிறப்பு, மரணம், வாழ்க்கையின் நிலையற்றதன்மை பற்றிய புரிதல் உள்ளது. ஆனால் அவன் அந்த உண்மையை அவமதித்து, சொந்த சுகங்களை மட்டுமே நாடுகிறான். இறுதியாக, அவன் தன்னைத்தானே அழித்து விடுகிறான். இதுதான் மனித இனத்துக்கே உரித்தான விசித்திரமான தன்மை.

மனிதன் தான் சிந்திக்கக் கூடியவன், அறிவு கொண்டவன் என்று பெருமைப்படுகிறான். ஆனால், அந்த அறிவைப் பயன்படுத்துவதில் அவன் மிகவும் சீரழிந்து விட்டான். அவனுடைய ஆசை, காமம், கோபம், பொறாமை ஆகியவை அவனை வழிவிலக்க வைக்கின்றன. இவையெல்லாம் அவனையே அழிக்கின்றன. உண்மை தெரிந்தும் தவறு செய்யும் உயிரினம் மனிதன் மட்டும்தான். மற்ற உயிர்கள் இயற்கைக்கு உட்பட்டு வாழ்கின்றன. ஆனால், மனிதன்தான் இயற்கையையே கட்டுப்படுத்த நினைக்கிறான்.

இந்த எண்ணங்களை மிக அழுத்தமாக மகாபாரதம் காட்டியுள்ளது. அஸ்தினபுரி நகரம் முழுவதுமாக அழிந்துவிட்டது. ஒரு ராஜ்யம் முழுமையாக அழிந்த பிறகும் துவாரகை என்ற நகரம் அதை எண்ணிக் கவலை கொள்ளவில்லை. அதுபோலவே மனிதனும், ஒருவரது வாழ்க்கையில் அல்லது சமூகத்தில் நடந்த பெரும் நாசங்களைக்கூடப் பாராட்டாமல், அதே தவறுகளை மீண்டும்  மீண்டும் செய்ய முனைகிறான்.

மனித மனம்தான் உலகிலேயே மிக எளிதாக மாறக் கூடியதும் ஒரேநேரத்தில் மிக கடினமாகப் புரிந்து கொள்ளக்கூடியதும்கூட. இது ஒரு நிமிடத்திற்குள் நல்லதோ அல்லது தீமையோ என்றாகிவிடக்கூடும். அதனால்தான் மனிதனின் வாழ்க்கையும் செயல்களும் மிகுந்த சிக்கலானதாயிருக்கின்றன. 

மனித வாழ்க்கை நிலையற்றது. இதனை, அந்த நிலையற்ற தன்மையை மனிதன் உணர்ந்தும் ஏன் அதைப் புரிந்து கொண்டு வாழ மறுக்கிறான்? உண்மையை அறிந்தும் திருந்தாத மனம், மனிதனுடைய வியப்புக்குரிய சாபம்தான்.

இந்த உலகில் எதுவும் நிலைத்ததல்ல என்பது நாம் அறிந்த உண்மை. அதனை எழுத்தாளர் ஜெயமோகன், தனது ‘வெண்முரசு’ நாவல்தொடரில் மிகவும் நுட்பமாகவும் அர்த்தமுள்ள உவமைகளால் விவரித்தும் ‘கல்பொருசிறுநுரை’ நாவலை உருவாக்கியுள்ளார்.

இந்த நாவலில் ‘துவாரகை’ நகரத்தின் வீழ்ச்சி பற்றி விரிவாகப் பேசப்படுகிறது. துவாரகை என்பது ஒரு காலத்தில் மிகச்சிறந்த நகரமாக விளங்கியது என்றால் அதற்கு முழுமுதற்காரணம் இளைய யாதவர். அவர் வாழ்ந்த காலத்தில், துவாரகை நிலைத்திருந்தது. அதாவது, ஒரு பெரிய அம்பாரி – அதில் அவர் அமர்ந்திருந்த வரை அது தள்ளாடாமல் நின்றது. ஆனால், அவர் அந்த அம்பாரியிலிருந்து இறங்கிச் சென்றதும் அதாவது அவர் வாழ்க்கையிலிருந்து விலகியதும் துவாரகை நகரமும் படிப்படியாக அழியத் தொடங்கியது.

இதை மிக அழகாக உவமையால் விளக்குகிறார் — “கல்மீது நிற்கும் சிறு நுரைக்குமிழி”. அது எப்போது வேண்டுமானாலும் சிதறிவிடக் கூடியது. இந்த உவமையே நாவலின் தலைப்பாக அமைக்கப்பட்டுள்ளது – ‘கல்பொருசிறுநுரை’. இதன் மூலம், துவாரகையின் நிலையற்ற தன்மையை, அதன் அழிவை, அதன் பொய்யான மெருகைக் காட்டுகிறார் எழுத்தாளர்.

இளைய யாதவரின் குடும்ப அமைப்பும் சிக்கலானது. அவருக்கு எட்டு மனைவிகள்; அவர்களிடமிருந்து பிறந்த எண்பது மகன்கள். ஆனால், இவர்களில் மூன்று பேருக்கே துவாரகையின் மணிமுடியைச் சூடும் தகுதி உண்டு. இதனால் அரசாட்சி, அதிகாரம், அதிகார வாரிசுகள் பற்றிய போட்டி உண்டாகிறது.

மூன்று பேருக்கே தகுதி இருந்தாலும், எண்பது பேரும் ஆட்சி செய்யவே விரும்புகிறார்கள். இந்தச் சூழ்நிலையே துவாரகையின் அழிவுக்கு வழிவகுக்கிறது. தகுதியற்றோர் ஆட்சிக்கு ஆசைப்படும்போது, அந்த நாட்டின் நிலை என்ன ஆகும்? இப்படித்தான் ஆகும்.

இந்த மகன்களில் ஒரே ஒரு தனித்துவமான மனிதர் இருக்கிறார் — முரளி. அவர் மற்றவர்களைப் போல ஆட்சிக்காகப் போட்டியிடவில்லை. அவர் தன் தந்தை இளைய யாதவரைப் போலவே, குழல் இசைக்கக் கூடியவர். ஆனால், அவர் ஒரு மாற்றுத்திறமையாளர். அவர் அரசாட்சி, ஆதிக்கம், ஆழ்ந்த அரசியல் சுழற்சி ஆகியவைகளைத் தவிர்த்து, வேறோர் ஒளிமிகு பாதையில் தன் மனத்தாள் செல்கிறார்.

இங்கு முரளி என்பது மறுமலர்ச்சியின் அல்லது மாற்றுப் பார்வையின் சின்னமாகக் காட்டப்பட்டுள்ளார். அதாவது, பழைய சிந்தனைகள் வீழ்ந்தாலும் அவற்றில் இருந்து ஒரு புதிய பார்வை, ஒரு புதிய கலாசாரம், உயிர்பெற முடியும் என்பதை அவரின் இருப்பு உணர்த்துகிறது.

துவாரகையின் அழிவையும் அதன் பின்னணி அரசியல் சிக்கல்களையும் அதிகார போராட்டங்களையும் மனித ஆசையின் விளைவுகளையும் நுணுக்கமாகக் கூறுகிறார் எழுத்தாளர். இவற்றோடு இணைத்து துவாரகை மக்களின் மனோநிலைகளையும் மிக அழுத்தமாக விவரித்துள்ளார்.

துவாரகை, ஆரம்பத்தில் சத்யபாமையின் ஆட்சியில் இருந்தது. சத்யபாமை என்பது ஒரு சக்தி வாய்ந்த பெண் ஆளுமை. பின்னர், அந்த ஆட்சி துரியோதனனின் மகள் கிருஷ்ணையின் கைக்குச் சென்றது. இங்கே, இந்த ஆட்சி மாற்றமே துவாரகையின் நிலையற்ற தன்மையைக் காட்டிவிடுகிறது.

பின்னாளில், இளைய யாதவரின் மகன்கள், துவாரகையைத் தாங்களே முழுமையாக ஆளவேண்டியதென எண்ணத் தொடங்குகிறார்கள். இதில் முதன்மையாக முன்னேறுகிறார் மூத்த மகன் ஃபானு. அவர் ஒரு பெரும் அரசியல் ஆளுமை. அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் அவரது சகோதரர்களும் துவாரகை மக்கள் சிலரும் திரள்கிறார்கள். உள்கட்சிப் பிரிவுகள், அரசியல் பிளவுகள் என்று நகரத்துக்குள் அகமுகமாக வெடிக்கத் தொடங்குகின்றன.

இதில் மிக கவலைக்குரிய உண்மை என்னவென்றால், இளைய யாதவரின் மகன்கள் அனைவரும் தங்கள் தந்தையை வெறுக்கிறார்கள். ஒரு காலத்தில் துவாரகையின் நிர்வாகத்தையும் பாதுகாப்பையும் ஏற்று வந்த இளைய யாதவரையே, இப்போது அவரது பிள்ளைகளே எதிர்த்து, அவரைப் போரில் கொல்லத் திட்டமிடுகின்றனர். இது குடும்பத்தில் ஏற்படும் சிதைவின் உச்சம். இது ஒரு நகரம் அழிவதற்கான முதல் அடியாக அமைந்துவிடுகிறது.

இந்த நேரத்தில்தான், அஸ்தினபுரியின் முற்றழிவுக்குக் காரணமான கணிகர் துவாரகைக்கு வருகிறார்.  துவாரகையையும் முற்றிலும் அழித்துவிட வேண்டும் என்பதுதான் அவரது எண்ணம். இங்கே ஒரு முக்கியமான செய்தி உள்ளது — ஒரு நகரத்தின் அழிவு என்பது வெளிப்புற எதிரிகளால் மட்டுமல்ல, அதன் உள் சிக்கல்கள், அரசியல் பேராசை, குடும்ப பிளவு, தகவலற்ற மக்களின் ஆதரவு, இவை அனைத்தும் சேர்ந்து உருவாக்கும் தன்னிழிவு சக்திதான். துவாரகையின் சிதைவு என்பதற்குப் பின்னணியில், உண்மையில் அந்த நகரத்தின் ஆளும் வர்க்கத்தினரின் அழிவு நோக்கிய உள்மனநிலைதான் காரணமாக இருக்கிறது.

‘கல்பொருசிறுநுரை’ என்ற தலைப்பு இங்கு மீண்டும் பொருந்துகிறது. துவாரகை என்பது கல்மீது நுரைபோல இருந்தது – அழகாக இருந்தாலும் உடனே உடைந்துவிடக் கூடிய நிலையற்ற அமைப்பாக. அதன் அழகு, பெருமை, வீரக் கதை எல்லாம் ஒரு மாயைப் போலவே முடிவடைந்துவிடுகிறது.

ஒரு நகரத்தின் வீழ்ச்சி என்பது எவ்வாறு வெளிப்புற தாக்கங்களையும் உள்நோக்கச் சிக்கல்களையும் இணைத்தே நடக்கிறது என்பதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டு துவாரகையின் பேரழிவு. 

கணிகர் ஒரு நச்சுநிழல். அவர் எங்குச் சென்றாலும் யாரைத் தொட்டாலும் அவர் சுற்றியுள்ள உலகமே பாழாகி விடுகிறது. நச்சுநிழல் என்பது ஓர் உருவகம்; உண்மையில், கணிகர் அழிவு, விஷம், சூழ்ச்சி, பிணைப்பு, சிதைவு ஆகியவற்றின் உருவகமாக அமைக்கப்படுகிறார்.

கணிகர், எங்குச் சென்றாலும், அந்த இடத்தில் உள்ள மக்களை ஒருவருக்கொருவர் எதிர்த்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளுகிறார். தன்னையும் அழித்து, தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் அழிக்க, அழியச் செய்கிறார். இதை அவரது தீய சிந்தனைகளும் அதிசூழ்ச்சிகளும் ஏற்படுத்துகின்றன.

அனைத்தையும் அழித்தபின், கணிகர், இளைய யாதவரின் பாதங்களில் சரணடைகிறார். இது மிகவும் முக்கியமான திருப்பம். இளைய யாதவர் பரந்த ஞானத்தையும் சக்தியையும் கொண்டவர். ஒருவகையில் பார்த்தால், இளைய யாதவர், கணிகரின் சக்தியைத் தனது நலனுக்காக, தன்னுடைய செயலுக்காகப் பயன்படுத்தியவர் போலத் தோன்றுகிறது. அதாவது, அவர் அழிவின் சக்தியையே தன்னுடைய ஆயுதமாகப் பயன்படுத்தியிருக்கலாம்.

இதனுடன், இன்னொரு உள்விரிவும் நிகழ்கிறது. கிருதவர்மா மற்றும் ருக்மி என்ற இருவரும் துவாரகையை ஒருபுறம் ஆதரித்தும் மறுபுறம் எதிர்த்தும் இருக்கிறார்கள். இதுவே துவாரகையின் நிலையை மேலும் குழப்பமாக மாற்றுகிறது. இருபுறமும் மாறுபட்ட நிலைப்பாடுகள் உள்ளதால், நகரின் மையம் சீர்கெடுகிறது. அழுத்த அலைகள் விளிம்பிலிருந்து மையத்திற்கும் மையத்திலிருந்து விளிம்புக்கும் என மாறி மாறி, எதிரெதிரே எழுகின்றன. 

இந்நிலையில், சாத்யகி என்ற நல்ல உள்ளம், துவாரகையின் நிலையை, நிலைமையைத் திருத்தப் போராடுகிறது. அவர், இளைய யாதவரின் மனைவியர், மகன்கள் ஆகியோரை ஒன்றுபடுத்த முயற்சி செய்கிறார். கிருதவர்மருடன் இணைந்து, ஒரு பிதாமகர் போன்று, நலமாய் நகர்த்த முயற்சி செய்கிறார். ஆனால், அவரின் அனைத்து முயற்சிகளும் கணிகரின் சூழ்ச்சியால் முற்றிலும் தோற்கின்றன.

கணிகரின் திட்டப்படி, இளைய யாதவரின் மகன்கள் ஒருவரையொருவர் அழித்துக்கொள்கிறார்கள். இது ஒரு மர்மமான, நெருக்கடியான சூழ்நிலை. குடும்பமே குடும்பத்தை அழிக்கிறது, சகோதரன் தன் சகோதரனையே விலக்குகிறான். இதன்பின் ஆழிப்பேரலை. துவாரகை நகரம் முழுவதும் அழிபடுகிறது. 

அழிவும் சிதைவும் வெளியிலிருந்து மட்டும் வருவதில்லை; அது உள்ளிருந்து தோன்றும். ஆசை, வெறுப்பு, பொறாமை, துரோகங்கள், குறைபாடுகள் – இவை அனைத்தும் சேரும்போது, எந்த அமைப்பும் நிலைத்திருக்க முடியாது. இதைக் கணிகர் போன்ற ஒரு நிழல் உருவம் வாயிலாக நம்மிடம் எழுத்தாளர் ஜெயமோகன் மிக நுணுக்கமாக எடுத்துச் சொல்கிறார். துவாரகையின் வீழ்ச்சி, அதன் அழிவின் மனநிலை மற்றும் மனிதர்களின் எதிர்மறையான நடைமுறை ஆகியனவற்றை நுட்பமாகப் படைத்துள்ளார்.

இந்நாவலின் அமைப்பில் ஒரு புதுமை இருக்கிறது. நாவலில் நேரடி சம்பவங்களை மட்டும் கூறாமல், முக்கியமான நாயகர்களான சாத்யகி, பிரதிபானு, சோமன், ஸ்ரீகரர் போன்றோர் ஒவ்வொருவரும் தனித்தனியாக இளைய யாதவரைச் சந்தித்து உரையாடுகிறார்கள். இந்த உரையாடல்கள் மூலமாகத்தான் துவாரகையில் நடந்த முக்கியமான நிகழ்வுகள் வாசகர் மனத்தில் காட்சிச் தொடர்களாக விரிகின்றன.

இதனால், இந்த நாவல் முழுவதுமே ஒரு நீண்ட உரையாடல்களின் தொகுப்பாகத் தோன்றலாம். ஆனால் உண்மையில், இந்த உரையாடல்களின் வழியாக, ஒவ்வொரு கதைமாந்தரும் தன் துயரத்தை, எண்ணங்களை, அச்சங்களை வெளிப்படுத்துகிறது. முக்கியமாக, இளைய யாதவரை மீண்டும் துவாரகைக்கு வரும்படி கேட்கும் உருக்கமான வேண்டல்களாக இந்த உரைகள் அமைந்துள்ளன.

ஆனால், இளைய யாதவர் எப்போதும் ஒரு காலத்திற்குள் அகப்படுவதில்லை. அவர் தன் மனத்தை யுகத்தின் முடிவில் வைத்திருந்தார். இது மிக முக்கியமான உளவியல். துவாரகை அழிந்துவிட்டதா இல்லையா என்பது இவருக்கு முக்கியமல்ல. இடத்தின் அழிவைக் கடந்த, காலத்தின் முடிவை உணர்ந்த நிலையில் இவர் இருக்கிறார். அதனால்தான் அவர் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப மறுக்கிறார்.

இதேவேளை, இளைய யாதவரின் சில மகன்கள் துவாரகையின் கருவூலத்தோடு (அதாவது, செல்வம், நம்பிக்கைகள், மரபுகள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு) புதிய நிலத்திற்குப் புலம்பெயர்கிறார்கள். இந்த இடமாற்றம் வாழ்வின் அழிவில் இருந்து மீண்டும் தொடங்கும் ஒரு முயற்சி. ஆனால், அவர்கள் சென்ற அந்தப் புதிய நிலம் வாழ்வளிக்காத நிலமாக இருக்கிறது. அதுவும் இளைய யாதவரின் ஆடல்தானே!

அதாவது, பழைய உலகம் அழிந்துவிட்டது, புதியது இன்னும் வரவில்லை. அதன் நடுவே அவர்கள் தாங்க முடியாத துயரத்தில், வாழ்க்கையை நடத்த முயற்சி செய்கிறார்கள். இப்போது அவர்கள் இளவேனில் விழா நடத்துகிறார்கள். ஆனால் அந்த விழாவும் மகிழ்ச்சிக் கொண்டாட்டமல்ல — அது களத்தில் மயங்கிய மனங்களின் விளையாட்டு. விழாவின் மத்தியில் அவர்கள் ஒருவரையொருவர் தாக்கி, சிதைத்து, மடிந்து விடுகின்றனர்.

இதில் மிகப் பெரிய உண்மை ஒன்று இருக்கிறது – மனிதர்கள் இடம் மாறினாலும் நிலம் மாறினாலும் அவர்கள் உள்ளத்தின் தீமைகள் மாறாதவரை, வாழ்வு மாறாது என்பதே! துவாரகை அழிந்தாலும் அதன் ஆவி இன்னும் மனிதர்களின் மனத்தில் உயிர்வாழ்கிறது. 

அழிவும் புது தொடக்கமும் மனிதனுடைய மனத்தில்தான் நிகழவேண்டும்; இடம் மாறினால் மட்டும் வாழ்க்கை மாறாது. நம் உள்ளம் மாற்றப்பட வேண்டும், அப்போதுதான் யுகம் மாற்றம் அடையும். 

இந்த நாவலில், மீண்டும் ஒரு சூதாட்டம் நடைபெறுகிறது என்பது முக்கியச் சிறப்பு. நாம் அறிந்ததுபோல, அஸ்தினபுரியில் நடந்த சூதாட்டம் ஒரு யுகத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. சகுனியின் கள்ளாட்டம் மூலம் பாண்டவர்கள் தங்கள் ராஜ்யத்தை இழந்தனர், திரௌபதி அவமானப்பட்டாள். இதுவே குருக்ஷேத்திர யுத்தத்துக்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது.

இப்போது, மதுரா நகரில் மீண்டும் ஒரு சூதாட்டம் நிகழ்கிறது. இதில், முக்கியமான இரண்டு மூத்த யாதவர்கள் — பலராமர் மற்றும் ருக்மி பங்கேற்கின்றனர். ஆனால், இங்குக் கள்ளாடுபவர் சகுனி அல்லர்; ஊழே கள்ளாடுகிறது. இது மிக ஆழமான கருத்து. அதாவது, ஒருவரும் திட்டமிட்டு வஞ்சகம் செய்யவில்லை, ஆனால் சூழ்நிலைகளும் காலச்சுழலும் தாமே களமாடுகின்றன.

இதன் விளைவாக, ருக்மி கொல்லப்படுகிறார். இது, வெறும் ஆட்டத்தின் முடிவாக அல்ல, ஒரு வரலாற்று வன்முறையின் வெடிப்புப் புள்ளியாக அமைந்துவிடுகிறது. இது உண்மையில், துவாரகையின் வீழ்ச்சியை முடிவுக்குக் கொண்டு செல்லும் முக்கியமான கட்டமாக விளங்குகிறது.

இந்தச் சூதாட்டம், நாவல் கதையை பரபரப்பான, மர்மமயமான பாதையில் இட்டுச் செல்கிறது. இது, வாசகர்களை ஆழமாக ஈர்க்கிறது. சிக்கல்கள், சூழ்ச்சிகள், ஆளுங்கட்சிகளின் வஞ்சகங்கள், திடீர்த் திருப்பங்கள் — இவை அனைத்தும் சேர்ந்து, இந்த நாவலைத் திகட்ட திகட்டக் கொடுக்கும் அளவுக்கு ஆழமாக, விரிவாகவும் பரபரப்பாகவும் வடிவமைக்கின்றன.

எனவேதான், இந்த நாவல் வெறும் ஒரு பெருநாவலின் ஒரு பாகமாக இல்லாமல், தனித்ததொரு சரித்திர நாவலாகத் திகழ்கிறது. இதில் வரும் சம்பவங்கள், கதாப்பாத்திரங்கள், அவர்களுடைய சிந்தனைகள், தற்கொலை, துரோகங்கள் — இவை அனைத்தும் மிக நேர்த்தியாகக் கட்டமைக்கப்பட்டுள்ளன.

இதை நாவலை ஒரு சரித்திரத் திரைப்படமாக எடுக்கலாம். காரணம், இது நிகழ்வுகள் நிறைந்ததும் கதாபாத்திரங்களின் ஆழமான உளவியல் கோணங்களையும் அவர்களுக்குள் நடக்கும் உணர்ச்சிப் போரையும் மிக நுட்பமாகச் சித்தரிக்கிறது.

‘கல்பொருசிறுநுரை’ என்பது ஒரு நகரத்தின் வீழ்ச்சி மட்டுமல்ல, மனித இயல்பின் தன்மையை எடுத்துக்காட்டும் ஒரு கலைநேர்த்தியான சரித்திரக்கதை. கடந்த யுகத்தின் பிழைகளை மறுபடியும் நிகழ்த்தும் மனித மனத்தின் மறதி, அசட்டுத்தனம், மற்றும் அழிவை நோக்கி விரையும் இயல்பு — இவையனைத்தும் இந்த நாவலை மரபார்ந்த கலை, இலக்கிய, அரசியல், வரலாற்றுப் படைப்பாக உயர்த்துகின்றன.

– – –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *