காணா நதி  (மறுவாசிப்பில் பா. ராகவனின் ‘சலம்’ நாவல்)

 

 

எழுத்தாளர் பா. ராகவனின் ‘சலம்’ நாவல், வேதங்களைப் பொதுமையாக்கக் கோரும் போராடும் ‘மாய யதார்த்தவாத’ நாவல் ஆகும். ‘மாய யதார்த்தம்’ (Magical Realism) என்பது அன்றாட மனித வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, அதனுடன் கற்பனை, புராணம், மாயம் போன்ற அசாதாரண கூறுகளை இயல்பாகக் கலந்துவைக்கும் இலக்கியப் போக்காகும். இந்த வகை எழுத்துகளில் “இது உண்மைதானா? கற்பனைதானா?” என்ற கேள்வி வாசகனுக்கு அடிக்கடி தோன்றும். ஆனால் அந்தக் குழப்பமே மாய யதார்த்தத்தின் தனித்துவம். இங்கு மாயமான நிகழ்வுகள் எதுவும் அதிசயமாக விளக்கப்படுவதில்லை; அவை அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே காட்டப் படுகின்றன.

மாய யதார்த்த உலகில் அசாதாரணமானது சாதாரணமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஒரு மனிதன் பறப்பது, இறந்தவர் மீண்டும் பேசுவது, நேரம் முன்னும் பின்னுமாக நகர்வது போன்ற நிகழ்வுகள் கதையில் வரும் போது, கதாபாத்திரங்கள் அதைக் கேள்வி கேட்காமல் இயல்பாகவே ஏற்றுக்கொள்கின்றனர். இதனாலேயே இதை “வியக்கத்தக்க யதார்த்தம்” அல்லது “அற்புதமான யதார்த்தவாதம்” என்றும் அழைக்கின்றனர். இருப்பினும், மாய யதார்த்தம் ஒரு குறிப்பிட்ட இலக்கிய வகை மட்டுமல்ல; அது ஒரு தன்மை, ஒரு பார்வை, ஓர் எழுத்து அணுகுமுறையாகவும் கருதப்படுகிறது.

இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் சில கலை மற்றும் இலக்கிய இயக்கங்களின் விளைவாக மாயாஜால யதார்த்தவாதம் வளர்ச்சி பெற்றது. 1925 ஆம் ஆண்டு ஜெர்மன் விமர்சகரான ஃபிரான்ஸ் ரோ “மேஜிக் ரியலிசம்” என்ற சொல்லை முதன்முறையாகப் பயன்படுத்தினார். ஆரம்பத்தில் அது ஓவியக் கலைக்குப் பயன்படுத்தப் பட்டாலும் பின்னர் இலக்கியத்திலும் வேரூன்றியது. இலக்கியத்தில் ஒரு தனித்துவமான இயக்கமாக மாய யதார்த்தம் உருவாக, அர்ஜென்டினா எழுத்தாளர் ஜோர்ஜ் லூயிஸ் போர்கஸ் முக்கிய பங்கு வகித்தார். 1935 ஆம் ஆண்டில் அவர் எழுதிய கதைகள் இந்தப் போக்குக்கு அடித்தளமாக அமைந்தன.

இன்றைக்கு மாயாஜால யதார்த்தம் ஒரு சர்வதேச இலக்கியப் போக்காகக் கருதப்படுகிறது. உலகின் பல மொழிகளிலும், பல பண்பாடுகளிலும் இந்த எழுத்து முறை காணப்படுகிறது. யதார்த்தமான வாழ்க்கைச் சூழல்களைக் கற்பனை, புராணம், நாட்டுப்புற நம்பிக்கைகள் ஆகியவற்றுடன் இணைக்கும் ஒரு வழியாக மாய யதார்த்தம் செயல்படுகிறது. கேட் அட்கின்சன், இட்டலோ கால்வினோ, ஏஞ்சலா கார்ட்டர், நீல் கெய்மன், குன்டர் கிராஸ், ஹருகி முருகாமி, டோனி மோரிசன், சல்மான் ருஷ்டி போன்ற உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளில் மாய யதார்த்தக் கூறுகள் பரவலாகக் காணப்படுகின்றன.

ஒரு படைப்பு மாயாஜால யதார்த்தத்தின் மரபுக்குள் வர வேண்டுமானால் சில முக்கிய குணாதிசயங்கள் அதில் அதிகமாக இருக்க வேண்டும். முதலில், நிகழ்வுகள் மற்றும் சூழ்நிலைகள் ஒரு தனித்த தர்க்கத்துடன் அமைந்திருக்க வேண்டும். இரண்டாவது, கட்டுக்கதைகள், புராணங்கள், நாட்டுப்புற நம்பிக்கைகள் கதையின் ஒரு பகுதியாக இணைந்திருக்க வேண்டும். மூன்றாவது, வரலாற்றுச் சூழலும் சமூகப் பிரச்சினைகளும் கதையின் அடித்தளமாக இருக்க வேண்டும். நான்காவது, நேரம் நேர்கோட்டில் செல்லாமல் சிதைந்து, முன்–பின் கலந்த நிலையில் வெளிப்படலாம். ஐந்தாவது, கதை நடைபெறும் இடங்கள் உண்மையான உலகைச் சார்ந்தவையாக இருக்க வேண்டும். ஆறாவது, பொருள்களின் உண்மை நிலை, அதாவது மனித அனுபவத்தின் ஆழமான உண்மை, மாயத்தின் வழியாக வெளிப்பட வேண்டும். 

‘மாய யதார்த்தம்’ என்பது உண்மை, கற்பனை ஆகிய இரண்டையும் பிரிக்காமல், இரண்டையும் ஒன்றாக இணைத்து மனித வாழ்க்கையின் ஆழமான உண்மைகளை வெளிக்கொணரும் சக்திவாய்ந்த இலக்கிய வடிவமாக விளங்குகிறது.

சரஸ்வதி நதி என்ற பெயர் இந்திய பண்பாட்டிலும் புராணங்களிலும் மிகவும் பரிச்சயமானது. ஆனால், கங்கை, யமுனை, காவிரி போன்ற ஆறுகளைப் போல இன்று எந்த இடத்திலும் கண்களால் காணக்கூடிய ஒரு நதியாக சரஸ்வதி இல்லை. இருந்தாலும், சரஸ்வதி நதி இருந்ததாகவும், அது இன்றும் மறைமுகமாக பாய்கிறது என்றும் பலரும் ஆழமாக நம்புகின்றனர். இந்த நம்பிக்கை மதம், புராணம், வரலாறு, மக்களது வாய்மொழிக் கதைகள் ஆகிய அனைத்துடனும் பின்னிப் பிணைந்துள்ளது.

புராணங்களின் படி, சரஸ்வதி நதி பிரம்மாவின் மகளாகக் கருதப்படுகிறார். அவர் அறிவின், கலைகளின் தேவியாகவும் மதிக்கப்படுகிறார். அலகாபாத் (இன்றைய பிரயாக்ராஜ்) அருகிலுள்ள கௌஷாம்பி பேரரசர் புருரவா மீது சரஸ்வதி காதல் கொண்டதாக புராணக் கதைகள் கூறுகின்றன. இந்தக் காதலை அறிந்த பிரம்மா கோபம் கொண்டு, சரஸ்வதி நதி பூமியிலிருந்து மறைந்து போக வேண்டும் என்று சாபம் விட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே சரஸ்வதி நதி காணாமல் போனதாக நம்பப்படுகிறது.

மேலும் சில கதைகளின்படி, சரஸ்வதி நதி பத்ரிநாத் பகுதிகளில் இருந்து தோன்றியதாகக் கூறப்படுகிறது. அந்த நதி ஓடும்போது எழுந்த சத்தம் ஒரு முனிவரின் தவத்தைக் கலைத்ததாகவும், அதனால் கோபமடைந்த முனிவர் அந்த நதி அழிந்து போகச் சாபம் விட்டதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு, சரஸ்வதி நதி மறைந்ததற்கான பல்வேறு புராணக் கதைகள் மக்களிடையே வழக்கில் உள்ளன.

பண்டைய வேதங்களிலும் புராணங்களிலும், பிரயாக்ராஜில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி மூன்றும் சங்கமிக்கும் இடம் “திரிவேணி சங்கமம்” என அழைக்கப் படுகிறது. இதில் கங்கை மற்றும் யமுனை தெளிவாகக் காணப் படுகின்றன. ஆனால், சரஸ்வதி நதி கண்ணுக்குத் தெரியாது. அது பூமிக்கடியில் அல்லது மறைமுகமாகப் பாய்கிறது என்று நம்பப்படுகிறது. இதனால்தான் அந்த சங்கமம் “திரிவேணி” எனப்படுகிறது. சிலர், சரஸ்வதி நதி யமுனையுடன் முன்பே கலந்துவிட்டு, இரண்டு நதிகளின் சங்கமமாகத் “திவிவேணி’ என்ற பெயரில் இருந்ததாகவும் கூறுகின்றனர்.

அனாமிகா ராய் போன்ற வரலாற்று ஆய்வாளர்கள் கூறுவதாவது, சரஸ்வதி நதி என்பது மக்களின் நம்பிக்கைகளிலும் நினைவுகளிலும் உயிருடன் வாழும் ஒரு நதி. உள்ளூர் மக்கள் சொல்லும் கதைகள், திருவிழாக்கள், வழிபாடுகள் மூலமாக அந்த நதி இன்றும் மக்களின் மனங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இது இயற்கை நதியாக மட்டுமல்ல, ஒரு பண்பாட்டு அடையாளமாகவும் விளங்குகிறது.

தொல்லியல் ஆய்வுகளும் இந்த நம்பிக்கைக்கு ஓரளவு ஆதரவு அளிக்கின்றன. ஹரியாணா மாநிலத்தின் காகர் பகுதியில், ஒருகாலத்தில் சரஸ்வதி நதி யமுனையைச் சந்தித்ததாகச் சான்றுகள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அங்கிருந்து, பிரயாக்ராஜ் வரை யமுனையுடன் சேர்ந்து பாய்ந்து, பின்னர் கங்கை நதியுடன் சங்கமித்து திரிவேணியாக உருவானதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். குருக்ஷேத்திர காலத்தில், ஹரியாணாவில் சரஸ்வதி நதி கடைசியாகப் பாய்ந்ததற்கான சான்றுகளும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இவ்வாறு, சரஸ்வதி நதி இன்று கண்களால் காண முடியாவிட்டாலும் புராணம், வரலாறு, தொல்லியல் மற்றும் மக்களின் ஆழ்ந்த நம்பிக்கை ஆகியவற்றின் மூலம் இந்திய பண்பாட்டில் மறையாத நதியாகத் தொடர்ந்து வாழ்ந்து வருகிறது.

சரஸ்வதி நதி குறித்து நீண்ட காலமாக புராணம், நம்பிக்கை, வரலாறு ஆகியவற்றின் அடிப்படையில் பேசப்பட்டு வந்த நிலையில், அதனை அறிவியல் முறையில் ஆய்வு செய்ய வேண்டும் என்ற முயற்சி 2002 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ஜூன் 15, 2002 அன்று அப்போதைய மத்திய கலாசாரத்துறை அமைச்சர் ஜக்மோகன், சரஸ்வதி நதி தொடர்பாக தொல்லியல் மற்றும் அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இது சரஸ்வதி நதி குறித்த ஆய்வில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

இந்த ஆய்வுக்காக நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில் இஸ்ரோவைச் சேர்ந்த விஞ்ஞானி பல்தேவ் சஹாய், தொல்லியல் நிபுணர் எஸ். கல்யாண் ராமன், பனிப்பாறை மற்றும் புவியியல் ஆய்வாளர் ஒய்.கே. புரி, நீரியல் ஆலோசகர் மாதவ் சிட்டாலே ஆகியோர் இடம்பெற்றனர். இவர்கள் அனைவரும் தங்கள் துறை சார்ந்த அறிவைப் பயன்படுத்திச் சரஸ்வதி நதியின் தடயங்களைக் கண்டறிய முயன்றனர்.

இந்த நிபுணர்கள் குழு ராஜஸ்தானின் பல பகுதிகளுக்கும், அதனைச் சுற்றியுள்ள எல்லை மாநிலங்களுக்கும் பயணம் செய்தது. அங்கு நில அமைப்பு, மணல் பரப்புகள், பழைய ஆற்றுப் படுகைகள், நிலத்தடிநீர் ஓட்டம் போன்ற பல அம்சங்களை ஆய்வு செய்தனர். இந்தப் பயணங்களின் போது சேகரிக்கப்பட்ட தகவல்கள், தொல்லியல் சான்றுகள், நிலவியல் அடையாளங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நீண்டகால ஆய்வுகளின் முடிவாக, நவம்பர் 28, 2015 அன்று இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் சரஸ்வதி நதி குறித்த முக்கிய ஆய்வறிக்கையை வெளியிட்டனர். அந்த அறிக்கையின் பெயர் “Saraswati River: An Integrated Study Based on Remote Sensing and GIS Techniques with Actual Ground Information” என்பதாகும். இந்த ஆய்வறிக்கை, மூத்த விஞ்ஞானிகளான டாக்டர் ஜி.ஆர். ஷர்மா, டாக்டர் பி.சி. பத்ரா, டாக்டர் ஏ.கே. குப்தா மற்றும் டாக்டர் ஜி. ஸ்ரீநிவாஸ் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ்த் தயாரிக்கப்பட்டது.

இந்த ஆய்வு, ஜோத்பூரில் உள்ள இஸ்ரோவின் பிராந்திய தொலை உணர்வு மையத்தால் மேற்கொள்ளப்பட்டது. செயற்கைக்கோள் படங்கள் (Remote Sensing), ஜி.ஐ.எஸ். தொழில்நுட்பம் மற்றும் தரையிலிருந்து பெறப்பட்ட உண்மை தகவல்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து இந்த அறிக்கை உருவாக்கப்பட்டது. அதில், இந்தியாவின் வடமேற்கு பகுதியில் ஒரு காலத்தில் பல பெரிய நதிகள் பாய்ந்ததாக தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேதங்களும் புராணங்களும் கூறுவது போல, சிந்து நதியைப் போன்று சரஸ்வதி நதியும் கிறிஸ்துவுக்குச் சுமார் 6,000 ஆண்டுகளுக்கு முன்பாக, அதாவது இன்றிலிருந்து சுமார் 8,000 ஆண்டுகளுக்கு முன்பு பாய்ந்ததாக இந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது. அந்த நதி இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், ஹரியாணா மற்றும் ராஜஸ்தான் வழியாக பாய்ந்து, இறுதியில் குஜராத்தின் கட்ச் பகுதியில் அரபிக்கடலில் கலந்ததாக அறிக்கை கூறுகிறது.

ஆனால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே காலநிலை மாற்றம், மழைப்பொழிவு குறைவு மற்றும் பூமியின் மேற்பரப்பு தட்டுகள் நகர்ந்தது போன்ற காரணங்களால் சரஸ்வதி நதி மெதுவாக வறண்டுவிட்டதாகவும் அந்த ஆய்வறிக்கை விளக்குகிறது. இவ்வாறு, புராணங்களில் சொல்லப்பட்ட சரஸ்வதி நதிக்கு அறிவியல் ஆதாரங்களைத் தேடும் முக்கிய முயற்சியாக இந்த ஆய்வு கருதப்படுகிறது.

இந்திய வரலாறு, இலக்கியம் மற்றும் புராணங்களில் சரஸ்வதி நதி ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. ஆனால், அதன் இருப்பு குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனைப் புரிந்துகொள்ள பழமையான இலக்கியங்களையும் வரலாற்று குறிப்புகளையும் கவனிப்பது அவசியமாகிறது. அதில் குறிப்பிடத்தக்கவர் சமஸ்கிருத இலக்கியத்தின் தலைசிறந்த கவிஞரான காளிதாசர்.

கவிஞர் காளிதாசர் கி.மு. 4–5 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்ததாக வரலாற்றாளர்கள் கருதுகின்றனர். அவர் எழுதிய ‘ரகுவம்சம்’ (ரகுவன்ஷ்) என்ற மகாகாவியத்தில் கங்கை மற்றும் யமுனை நதிகளைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அந்தக் காலகட்டத்தில் இந்த இரண்டு நதிகளும் அரசியல், பண்பாட்டு மற்றும் மத வாழ்க்கையில் முக்கிய பங்காற்றியதை இதன் மூலம் அறிய முடிகிறது. ஆனால், அதே நூலில் சரஸ்வதி நதியின் பெயர் எங்கும் இடம்பெறவில்லை. இது பலருக்கும் ஒரு வினாவாகவே உள்ளது.

அலகாபாத் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான அனாமிகா ராய், இதற்கான விளக்கத்தை முன்வைக்கிறார். அவரது கருத்துப்படி, காளிதாசர் வாழ்ந்த காலத்தில் சரஸ்வதி நதி குறித்து பெரிதளவில் பேசப்படவில்லை அல்லது அது மக்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கியத்துவம் பெறவில்லை. அதனால்தான் காளிதாசர் அந்த நதியின் பெயரைக் குறிப்பிடாமல் விட்டிருக்கலாம் என அவர் கூறுகிறார். அதாவது, அந்தக் காலகட்டத்திலேயே சரஸ்வதி நதி முக்கியமான ஓடும் நதியாக இல்லாமல், மறைந்து கொண்டிருந்திருக்கலாம் என்பதற்கான சான்றாக இதனைக் கருதலாம்.

அனாமிகா ராய் கூறுகையில், சரஸ்வதி நதி கும்ப மேளா போன்ற பெரும் மத நிகழ்வுகளின் காரணமாக பிற்காலத்தில் அதிகம் பிரபலமானது எனத் தெரிவிக்கிறார். கங்கை, யமுனை மற்றும் மறைமுகமாக பாயும் சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடமாக திரிவேணி சங்கமம் கருதப்படுவதால், கும்ப மேளா காலங்களில் சரஸ்வதி நதி பற்றிய நம்பிக்கையும் பேசுபொருளும் அதிகரித்தது. ஆனால், வரலாற்று ஆதாரங்களை கவனமாக ஆராய்ந்தால், ஒருகாலத்தில் சரஸ்வதி நதி இருந்ததற்கும், பின்னர் அது இயற்கை காரணங்களால் மறைந்ததற்கும் சான்றுகள் உள்ளன என்று அவர் வலியுறுத்துகிறார்.

சரஸ்வதி நதி குறித்துப் பல்வேறு அறிஞர்கள் வெவ்வேறு கருத்துகளை முன்வைக்கின்றனர். வரலாற்று அறிஞரான கே. சாட்டோபாத்யாய் போன்றோர், சிந்து நதியே சரஸ்வதி நதி என அடையாளப்படுத்த முயல்கிறார்கள். அவர்களுடைய கருத்துப்படி, வேதங்களில் கூறப்படும் சரஸ்வதி நதி, பின்னர் சிந்து நதியாக அறியப்பட்டிருக்கலாம். ஆனால், இறையியல் மற்றும் தர்ம சாஸ்திரங்களை ஆய்வு செய்த பி.வி. கேன் போன்ற அறிஞர்கள் இந்தக் கருத்தை ஏற்கவில்லை. அவர்கள், சரஸ்வதி நதி ஒரு தனித்த நதியாக இருந்ததாகவும், அதனை சிந்து நதியுடன் ஒன்றாக்க முடியாது என்றும் வாதிடுகின்றனர்.

மற்ற சில அறிஞர்கள், மகாபாரதக் காலமான குருக்ஷேத்திரப் போருக்குப் பிறகு, சரஸ்வதி நதி பல கிளைநதிகளாகப் பிரிந்து பாய்ந்ததாகக் கூறுகின்றனர். இதன் காரணமாக அந்த நதி தனித்த ஒரு பெரிய நதியாக இல்லாமல், சிறு நீரோடைகளாக மாறி, காலப்போக்கில் மறைந்திருக்கலாம் என அவர்கள் கருதுகின்றனர்.

இவ்வாறு, காளிதாசரின் இலக்கியக் குறிப்புகள், வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துகள் மற்றும் புராண நம்பிக்கைகள் ஆகியவற்றை ஒன்றாகப் பார்க்கும்போது, சரஸ்வதி நதி ஒருகாலத்தில் இருந்தது, ஆனால், கால மாற்றங்களால் அது மறைந்தது என்ற முடிவிற்கு வரலாம். இன்று அது கண்களுக்கு தெரியாத நதியாக இருந்தாலும், இந்திய வரலாற்று நினைவுகளிலும் பண்பாட்டிலும் அது இன்னும் உயிருடன் வாழ்கிறது.

ராஜஸ்தானில் சமீப காலமாக நடைபெற்று வரும் அகழாய்வு பணிகள், இந்தியாவின் பண்டைய வரலாறை மீண்டும் புதிய கோணத்தில் புரிந்து கொள்ள வழிவகுத்துள்ளன. குறிப்பாக, 4,500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஒரு நாகரிகத்தின் முக்கிய அடையாளங்களை தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளமை மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த கண்டுபிடிப்புகள், ஒருகாலத்தில் வடமேற்கு இந்தியாவில் செழித்து வளர்ந்த மனித குடியேற்றங்கள் மற்றும் நதிப் பண்பாட்டை மீண்டும் நினைவுபடுத்துகின்றன.

ராஜஸ்தானின் டீக் மாவட்டத்தில் அமைந்துள்ள பஹாஜ் என்ற சிறிய கிராமத்தில், கடந்த ஜனவரி மாதம் முதல் தொடர்ந்து அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. முதலில் ஒரு சாதாரண ஆய்வாகத் தொடங்கிய இந்தப் பணிகள், நாளடைவில் முக்கியமான வரலாற்று ஆதாரங்களை வெளிக்கொணர்ந்துள்ளன. இந்த அகழாய்வில், சுமார் 75 அடி ஆழத்தில் ஒரு புராதன நதிப்பாதை கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இது இயல்பான ஒரு நீர்ப்பாதையாக இல்லாமல், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பெரும் நீரோட்டத்துடன் பாய்ந்த ஓர் ஆற்றின் தடயமாக இருப்பதாகத் தொல்லியல் துறையினர் கருதுகின்றனர்.

இந்த நதிப்பாதையை, ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் புகழ்பெற்ற சரஸ்வதி நதியுடன் தொல்லியல் ஆய்வாளர்கள் தொடர்புபடுத்துகின்றனர். ரிக் வேதத்தில் சரஸ்வதி நதி மிகச் சக்திவாய்ந்ததும், உயிரோட்டமுள்ளதுமான நதியாக வர்ணிக்கப்படுகிறது. அந்த வகையில், பஹாஜ் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட இந்த நதிப்பாதை, ஒருகாலத்தில் சரஸ்வதி நதி அல்லது அதன் கிளைநதியாக இருந்திருக்கலாம் என்ற நம்பிக்கையை வலுப்படுத்துகிறது.

இந்த பண்டைய நதி அமைப்பு, ஆரம்பகால மனித குடியேற்றங்களை ஆதரித்திருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நீர் வளம் உள்ள பகுதிகளில் தான் மனிதர்கள் நிரந்தரமாக குடியேறி, விவசாயம், வாணிபம் மற்றும் கலாசாரம் வளர்ந்தது என்பது வரலாற்று உண்மை. அதனால், பஹாஜ் கிராமம் ஒருகாலத்தில் சரஸ்வதி நதிப்படுகை கலாசாரத்தின் ஒரு பகுதியாக இருந்து,  முக்கிய குடியிருப்பாக விளங்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இந்த அகழ்வாராய்ச்சியில் இதுவரை 800-க்கும் மேற்பட்ட பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் மண் பாண்டங்கள், பிராமி எழுத்துக்களைக் கொண்ட பழமையான முத்திரைகள், தாமிர நாணயங்கள், யாகம் செய்ய பயன்படுத்தப்பட்ட குண்டங்கள், மௌரியர் காலத்தைச் சேர்ந்த சிற்பங்கள், சிவன் மற்றும் பார்வதி சிலைகள், மேலும் எலும்புகளால் செய்யப்பட்ட கருவிகள் போன்றவை அடங்கும். இவை அனைத்தும் அந்தப் பகுதியில் பல காலகட்டங்களில் மனித வாழ்க்கை தொடர்ந்து இருந்ததைக் காட்டுகின்றன.

இந்த அகழ்வாராய்ச்சி, ஹரப்பா நாகரிகத்திற்குப் பிந்தைய காலம் முதல் மகாபாரத காலம், மௌரியர் காலம், குஷானர் காலம் மற்றும் குப்தர் காலம் வரை ஐந்து வெவ்வேறு காலகட்டங்களின் ஆதாரங்களை வெளிப்படுத்தியுள்ளது. இதன் மூலம், பஹாஜ் பகுதி ஒரு காலகட்டத்தில் மட்டும் அல்லாமல், பல ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து மனித செயல்பாடுகளின் மையமாக இருந்தது என்பது தெளிவாகிறது.

சமீபத்திய இந்தக் கண்டுபிடிப்புகள், பஹாஜ் பகுதி மத, கலாசார மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தின் முக்கிய மையமாக இருந்ததை எடுத்துக்காட்டுகின்றன. இதன் மூலம், சரஸ்வதி நதி, அதன் நாகரிகம் மற்றும் இந்தியாவின் பண்டைய வரலாறு குறித்த புரிதல் மேலும் ஆழமடைகிறது.

நதி மறைந்தாலும் நதித்தடம் மறைவதில்லை. காலத்தின் பெருவடுவென அது காலந்தாண்டியும் கலையாக் கனவென நிலைத்து நிற்கும். அதுபோலத்தான் வேதங்களைப் பொதுமையாக்கக் கோரும் இந்தக் கோரிக்கையின், போராட்டத்தின் வரலாற்றுத் தடமும். தொன்றுதொட்டு நடைபெற்றுவரும் இந்தக் கோரிக்கை, இப்போராட்டம் அதிதொழில்நுட்ப யுகத்திலும் தொடரத்தான் செய்கிறது. ஆனால், அதற்குரிய வெற்றி மட்டும் இந்தச் சரஸ்வதி (சர்சுதி) நதியைப் போலவே, காணா நதியாகவே, கையகப்படாமல் கண்ணகப்படாமல் தள்ளி தள்ளிச் சென்று மாயங்காட்டுகிறது.  

காலம் என்பது தனி மனிதர்களை மட்டுமல்ல, நாகரிகங்களையே கட்டி வைக்கும் வலிமை உடையது. அந்தக் காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் சாதாரண மனிதர்கள் அல்லர்; அவர்கள் சிந்தனையிலும் செயலிலும், மனித குலத்தின் எதிர்காலத்தைத் தீர்மானித்தவர்கள். அதனால் அவர்களை “அதிமானுடர்கள்” என்று சொல்லலாம்.

இந்தக் கதை இரண்டு முக்கியமான மனிதர்களை மையமாகக் கொண்டு நகர்கிறது. அவர்கள் தனிப்பட்ட மனிதர்களாக இருந்தாலும், அவர்களின் வாழ்க்கை அந்தக் காலத்தின் பிரதிபலிப்பாக இருக்கிறது. அவர்களுடைய வாழ்க்கைச் சம்பவங்களின் மூலம், அந்தக் காலத்துச் சமூக அமைப்பு, சிந்தனை, மதநம்பிக்கைகள், மூடநம்பிக்கைகள், தன்முனைப்பு ஆகிய அனைத்தும் வெளிப்படுகின்றன.

இந்த நாவல் தனிப்பட்ட மனிதர்களின் கதையை மட்டும் சொல்லவில்லை. அவர்கள் வாழ்ந்த காலத்தின் கதையையும் சொல்லுகிறது. அந்தக் காலம் எழுதப்பட்ட வரலாறு இல்லாத காலம். கற்களில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் இல்லை. எழுதப்பட்ட சுவடிகள் மிகக் குறைவு. ஆனால் அந்தக் காலத்தில் மனிதன் வாழ்ந்தான், சிந்தித்தான், பயந்தான், நம்பினான், போராடினான்.

இந்தக் காலத்தை மீட்டெடுக்க ஆசிரியர் புனைவின் துணையை நாடுகிறார். ஆனால் அந்தப் புனைவு முழுவதும் ஆதாரங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. வேதங்களில் உள்ள குறிப்புகள், நவீன ஆய்வாளர்களின் கருத்துகள், இயற்கை மாற்றங்கள் ஆகியவற்றை இணைத்து, அந்தக் காலத்தை நம் கண்முன்னே கொண்டு வருகிறார்.

இந்த நாவலின் முக்கியமான மையம் சர்சுதி (பிற்காலத்தில் சரஸ்வதி) என்ற நதி. ஒரு காலத்தில் மிகப் பெரிய நாகரிகத்தைத் தாங்கி நின்ற இந்த நதி, காலப்போக்கில் முழுமையாக மறைந்து போய்விட்டது. இன்று அந்த நதி இல்லை. ஆனால், வேதங்களில் அதன் புகழ் நிறைந்த குறிப்புகள் இருக்கின்றன.

இந்த நாவல், “அந்த நதி எப்படி மறைந்தது?” என்ற வினாவை எழுப்புகிறது. அது வெறும் இயற்கை பேரழிவா? அல்லது மனிதர்களின் செயல்பாடுகளும் அதற்குக் காரணமா? அந்த நதி இல்லாமல் போனதற்கு இருந்திருக்கக் கூடிய நியாயமான காரணங்களைத் தேடிச் செல்லும் பயணமே இந்தக் கதை.

நதி என்பது வெறும் நீர்ப்பாய்ச்சல் அன்று. அது ஒரு நாகரிகத்தின் உயிர். அந்த நதி பாய்ந்த காலத்தில் அதன் கரைகளில் மக்கள் வாழ்ந்தனர், விவசாயம் செய்தனர், வேத மந்திரங்களை உருவாக்கினர். அந்த நதி மறைந்தபோது, அந்த நாகரிகமும் சிதைந்தது.

ரிக் வேத காலம் இந்திய வரலாற்றில் மிகவும் பழமையானதும் முக்கியமானதுமான காலகட்டமாகும். இந்தக் காலத்தில் ஆரியர்கள் பெரும்பாலும் சிந்து நதிப் பகுதியிலேயே வாழ்ந்தனர். ரிக் வேதத்தில் “சப்த சிந்து” எனப்படும் சொல்லால் ஏழு நதிகள் பாயும் ஒரு பகுதி குறிப்பிடப்படுகிறது. இதில் பஞ்சாப் பகுதியில் பாயும் ஜீலம், சீனாப், ராவி, பியாஸ், சட்லஜ் என்ற ஐந்து நதிகளோடு சிந்து மற்றும் சரஸ்வதி ஆகிய இரண்டு நதிகளும் சேர்ந்து ஏழு நதிகளாகக் கருதப்படுகின்றன. ரிக் வேதப் பாடல்கள் மூலம் அந்தக் கால மக்களின் அரசியல் அமைப்பு, சமூக வாழ்க்கை, பண்பாடு மற்றும் நம்பிக்கைகள் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது.

ரிக் வேத கால அரசியல் அமைப்பு குலம் அல்லது குடும்பத்தை அடிப்படையாகக் கொண்டது. பல குடும்பங்கள் இணைந்து ஒரு கிராமமாக உருவானது. அந்த கிராமத்தின் தலைவரை “கிராமணி” என்று அழைத்தனர். பல கிராமங்கள் சேர்ந்த அமைப்புக்கு “விசு” என பெயர், அதன் தலைவர் “விஷயபதி” ஆவார். இதைவிட பெரிய அரசியல் அமைப்பாக “ஜன” இருந்தது. பரதர்கள், மத்ச்யர்கள், யதுக்கள், புருக்கள் போன்ற பல அரச குலங்கள் அந்தக் காலத்தில் இருந்தன. அரசின் தலைவன் “ராஜன்” என அழைக்கப்பட்டார். முடியாட்சி முறையே வழக்கிலிருந்தது; பரம்பரை வாரிசு முறை பின்பற்றப்பட்டது. அரசனுக்கு உதவியாக புரோகிதர் மற்றும் சேனானி என்ற படைத்தளபதி இருந்தனர். மேலும், “சபா” மற்றும் “சமிதி” என்ற இரண்டு அவைகள் செயல்பட்டன. சபா என்பது ஊர்ப்பெரியோர் கொண்ட அவையாகவும் சமிதி பொதுமக்களின் பிரதிநிதிகள் கலந்த அவையாகவும் இருந்தது.

ரிக் வேத கால சமூகம் தந்தை வழி அமைப்பை அடிப்படையாகக் கொண்டது. சமூகத்தின் அடிப்படை அலகு “கிரஹம்” அல்லது குடும்பம். குடும்பத் தலைவர் “கிரஹபதி” ஆவார். பொதுவாக ஒருதார மணம் வழக்கிலிருந்தாலும், அரசர்கள் மற்றும் உயர் குடியினரிடையே பலதார மணமும் காணப்பட்டது. இல்லத்தை நிர்வகிக்கும் மனைவி முக்கிய சடங்குகளில் பங்கெடுத்துக் கொண்டார். பெண்கள் ஆண்களுக்கு இணையாக ஆன்மீகம் மற்றும் அறிவுத் துறைகளில் வளர வாய்ப்பு பெற்றிருந்தனர். அபலா, விஸ்வவாரா, கோசா, லோபமுத்ரா போன்ற பெண் கவிஞர்கள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள். பெண்கள் பொது அவைகளிலும் கலந்துகொண்டனர். சிறார் மணமும் ‘சதி’ என்ற வழக்கமும் ரிக் வேத காலத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண், பெண் இருவரும் பருத்தி மற்றும் கம்பளியால் செய்யப்பட்ட ஆடைகளை அணிந்தனர். பலவகையான ஆபரணங்களும் அணியப்பட்டன. கோதுமை, பார்லி, பால், தயிர், நெய், காய்கறிகள், கனிகள் ஆகியவை முக்கிய உணவாக இருந்தன. பசு புனிதமாகக் கருதப்பட்டதால் அதன் இறைச்சி உண்ண தடை இருந்தது. தேரோட்டம், குதிரையோட்டம், சதுரங்கம், இசை, நடனம் போன்றவை மக்களின் பொழுதுபோக்காக இருந்தன. சமூகப் பிரிவுகள் பிந்தைய வேத காலத்தைப் போல கடுமையாக இல்லை.

பிந்தைய வேத காலத்தில் ஆரியர்கள் கிழக்கு நோக்கி இடம்பெயர்ந்து கங்கை சமவெளியில் தங்கள் குடியேற்றத்தை விரிவுபடுத்தினர். இதை சதபத பிராமணம் குறிப்பிடுகிறது. இக்காலத்தில் குரு, பாஞ்சாலம் போன்ற அரசுகள் எழுச்சி பெற்றன. பின்னர் கோசலம், காசி, விதேகம் போன்ற அரசுகள் முக்கியத்துவம் பெற்றன. மகதம், அங்கம், வங்கம் போன்ற அரசுகளும் தோன்றின. இந்தக் காலத்தில் பல “ஜன”ங்கள் ஒன்றிணைந்து “ஜனபதங்கள்” உருவானது இந்திய அரசியல் வளர்ச்சியின் முக்கியக் கட்டமாக விளங்குகிறது.

ஆரியர்களின் நான்கு வேதங்களில் நான்காவதாகக் குறிப்பிடப்படுவது அதர்வ வேதம். ரிக், யஜுர், சாமம் ஆகிய மூன்று வேதங்களும் பெரும்பாலும் கடவுள்களைப் போற்றும் துதிப் பாடல்களால் ஆனவை. அவை யாகங்கள், ஹோமங்கள், தேவ வழிபாடுகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டவை.

ஆனால், அதர்வ வேதம் இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. அது மனிதனின் வாழ்க்கைச் சிக்கல்களைப் பற்றிப் பேசுகிறது. நோய், பயம், பசி, வறுமை, சமூக அநீதி, மன அழுத்தம் போன்ற மனித வாழ்வின் உண்மையான பிரச்சனைகளுக்கான தீர்வுகளைச் சொல்கிறது.

இதனால்தான் அதர்வ வேதம் “பைசாச வேதம்” என்று ஒதுக்கப்பட்டது. பிசாசுகளைப் பற்றிப் பேசுகிறது என்பதற்காக அல்ல; மனிதர்களின் உள்ளிருக்கும் பயங்களையும் பேதங்களையும் வெளிக்கொண்டு வந்து அவற்றை விரட்டும் வழிகளைச் சொல்வதால்தான்.

அதர்வ வேதம் கடவுள்களைவிட மனிதனை மையமாகக் கொண்டது. மனிதன் எப்படி நல்ல வாழ்க்கை வாழ வேண்டும், சமூகத்தில் சமநிலை எப்படி ஏற்பட வேண்டும், ஒருவருக்கொருவர் எப்படி உதவ வேண்டும் என்பதையே அது பேசுகிறது.

கடவுள்களை நோக்கிப் பேசாமல், மனிதனை நோக்கிப் பேசியதாலேயே அந்த வேதம் காலப்போக்கில் மறைக்கப்பட்டிருக்கலாம் என்று ஆசிரியர் கருதுகிறார். அதிகாரம் கொண்டவர்கள், சமூகவகுப்பு அடிப்படையில் ஆதிக்கம் செலுத்த விரும்பியவர்கள், மனித சமத்துவத்தைப் பேசும் இந்த வேதத்தை ஏற்கத் தயங்கியிருக்கலாம்.

அதர்வ வேதத்தை இயற்றியதாகக் கருதப்படும் அதர்வன் என்ற ரிஷி பற்றிய தகவல்கள் மிகவும் குறைவு. மற்ற ரிஷிகள் போல அவருக்கு வாழ்க்கை வரலாறு இல்லை. புராணங்களில் இடமில்லை. இதிகாசங்களில் கதாபாத்திரமாக வரவில்லை.

அதனால் ஆசிரியர், அதர்வ வேதத்தின் உள்ளடக்கம், அதன் தொனி, அதன் மனிதநேயக் கருத்துகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அதர்வன் என்ற கதாபாத்திரத்தை உருவாக்குகிறார். இது வரலாற்று உண்மை அல்ல; ஆனால், வரலாற்று சாத்தியக்கூறு கொண்ட புனைவு.

ரிக்வேதத்தில் கவசன் என்ற ரிஷியின் பாடல் மட்டும் உள்ளது. அவர் சூத்திர குலத்தில் பிறந்தவர். ஆயிரக்கணக்கான பாடல்களைக் கொண்ட வேதத்தில், பிராமணரல்லாத ஒரேயொரு ரிஷி என்ற பெருமை அவருக்கு உண்டு.

அந்நாளைய சமூக அமைப்பில் இது பெரிய மாற்றம். பிறப்பின் அடிப்படையில் மனிதனை மதிக்கும் காலத்தில், திறமைக்கும் சிந்தனைக்கும் இடம் கொடுத்த ஒரு நிகழ்வு. கவசனை ரிஷியாக ஏற்றுக்கொள்ளும் முன் நடந்த சம்பவங்களே இந்த நாவலின் நாயகனுக்கான அடித்தளமாக அமைகின்றன.

சர்சுதி நதி பலமுறை தனது பாதையை மாற்றியதாகவும் இறுதியில் முழுமையாக மறைந்ததாகவும் நவீன ஆய்வுகள் சொல்கின்றன. இந்த ஆய்வுகளோடு ஒத்துப் போகும் வகையில், அந்த நிகழ்வுகளுக்குப் பின்னால் மனிதர்களின் வாழ்க்கை எப்படிப் பாதிக்கப்பட்டது என்பதைக் காட்டும் கதாபாத்திரமாகக் குத்சன் உருவாக்கப் பட்டுள்ளார்.

குத்சன் ஒரு வீரன். ஆனால் அவர் வாள் ஏந்தி போராடும் வீரன் மட்டுமல்ல. அவர் சிந்திக்கும் வீரன். சமூக மாற்றத்தை நோக்கி நகரும் வீரன். நதியின் அழிவும் மனித வாழ்வின் மாற்றமும் சமூக சிந்தனைகளின் மாறுபாடும் அவருடைய வாழ்க்கையில் பிரதிபலிக்கின்றன.

இந்த நாவலின் மிகப் பெரிய சிறப்பு, “வரலாறு இல்லாத காலத்தை” முழுமையாகக் கற்பனையின் மூலம் உருவாக்கியிருப்பதே!. ஆனால், அது வெறும் கற்பனை அல்ல; அது ஆய்வு, வேத ஆதாரங்கள், இயற்கை மாற்றங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப் பட்டுள்ளது.

புனைவு என்பதற்கு எல்லைகள் இல்லை. அந்த எல்லைகளற்ற சாத்தியங்களைப் பயன்படுத்தி, ஒரு நதிக்கரை நாகரிகத்தை நம் கண்முன்னே உயிரோடு நிறுத்துகிறார் ஆசிரியர்.

அதர்வ வேதம் தோன்றிய காலத்தில், சரஸ்வதி நதி இல்லாமல் போகும் தருணம் இந்தக் கதையின் முக்கியமான திருப்புமுனை. அந்த நதி இல்லாமல் போனதற்கு இயற்கை மாற்றங்கள், நில அதிர்வுகள், காலநிலை மாற்றங்கள் போன்றவை காரணமாக இருக்கலாம்.

ஆனால் அந்த இயற்கை மாற்றங்கள் மனித வாழ்க்கையை எப்படி மாற்றின? மனிதர்கள் எப்படி தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர்? அவர்கள் எப்படி இடம்பெயர்ந்தனர்? அந்த இடம்பெயர்வே பிற்கால இந்திய நாகரிகத்தின் அடித்தளமாக அமைந்ததா போன்ற ஆழமான வினாக்களையும் இந்த நாவல் எழுப்புகிறது.

இந்த நாவல் ஒரு நதி பற்றிய கதை மட்டும் அல்ல. இது மனித குலத்தின் பயணம் பற்றிய கதை. ஒரு வேதத்தின் தோற்றம் பற்றிய கதை. சமூக பேதங்களை உடைக்கும் சிந்தனையின் கதை. காலத்தின் பெரும் மாற்றங்களில் மனிதன் எப்படி தன்னை மாற்றிக்கொண்டான் என்பதைக் காட்டும் கதை.

எழுத்தாளர் பா. ராகவன், அதர்வ வேதத்தை மையமாகக் கொண்டு, சரஸ்வதி நதியை அடித்தளமாக வைத்து, வரலாறும் புனைவும் ஒன்றோறொன்று கலந்த ஓர் உலகத்தை உருவாக்குகிறார். அந்த உலகம் நம்மைச் சிந்திக்க வைக்கிறது. மனிதநேயத்தின் முக்கியத்துவத்தை உணர வைக்கிறது. ‘எல்லாமும் எல்லோருக்கும் பொது’, ‘எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்’ என்பன என்றைக்குமே ஏட்டளவில் மட்டுந்தான் இருக்குமோ? இந்தச் ‘சலம்’ வாசிப்புச் சுவை தீராத, திகட்டாத ‘சலம்’.

(சலம் – நாவல், பா. ராகவன், எழுத்து பிரசுரம், ஸீரோ டிகிரி பப்ளிஷிங், சென்னை. பக்கங்கள் – 1000, விலை ரூபாய் – 1000.)

– – –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *