புதுமைப்பித்தன் என்று ஒரு மேதை

ராஜாஜி பற்றிக் கேட்பது போலவே சில கருத்தரங்கங்களில் புதுமைப்பித்தன் என்கிற பெயரைக் கேள்விப்பட்டிருந்து சிலர் விசாரிப்பது உண்டு. புதுமைப்பித்தன் பற்றி, அவர் சின்ன வயதில் காலமான ஒரு மேதை என்று குறிப்பிட்டு, நேரடியாகவே அவர் சிறுகதை, புதுக்கவிதை சாதனைகளைப் போதுமான அளவு சொல்வேன்.

மேதை என்கிற சொல்லுக்கு ஓர் இலக்கணமாக இருந்தவர் சொ.விருத்தாசலம். புதுமைப்பித்தன் என்கிற புனைபெயர் அவருக்கு மிகவும் பொருத்தமான பெயர். நல்ல இலக்கியம் அமைக்க ஒரு புதுமை ஆர்வமும், அத்துடன் சற்றே பித்தமும் சேர்ந்திருக்க வேண்டும். இரண்டும் அவரிடம் இருந்தன.

அவர் கதைகள் நன்றாக இருக்கின்றன என்று அவரிடம் சொல்லி விட்டால் “அப்படித்தானிருக்கும்! நீர் யார் அதைச் சொல்ல!” என்று சொன்னவனைக் கடிந்து கொள்வார். யாராவது புதுசாக எழுத விரும்பி அவரிடம் வந்து  சொன்னால் “எழுதாதே தம்பி!எழுதாதே! எழுதி உருப்பட முடியாது. நான் உருப்படவில்லை பார்!  நீயும் எழுதினால் உருப்படமாட்டாய் போ!’  என்று அதையரிப்படுத்தி அனுப்பி விடுவார். போனாவாரம் ஒருவருடன் நண்பராக இருந்தாரே என்று இந்த வாரமும் அதே நபருடன் நண்பராக இருப்பார் என்று எண்ணினால் ஏமாந்து விடுவோம். நட்பிலே நெருங்கவும் விடமாட்டார். நட்பை முறித்துக்கொண்டு போகவும் விடமாட்டார். நமக்கு  வேண்டியவர் என்று எண்ணினோமானால், சமயம் பார்த்துக் காலைவாரி விட்டுவிடுவார்.

புஸ்தகங்களைப் படித்தால் அதில் முதலில் கொஞ்சம், கடைசியில் கொஞ்சம், நடுவில் கொஞ்சம் என்று படித்துவிட்டு ஊன்றிக் கவனித்து மற்றவர்கள் கிரஹிப்பதை விட அதிகமாகக் கிரஹித்துக்கொண்டு விடுவார். மிஸ்டர் வெஸ்டன்ஸ் குட் வை என்கிற டி.எப்.பௌவிஸ் எழுதிய நாவலை அவர் ஒரு தமிழ் உருவமாக, புது நவபுராணக் கதையாக “கடவுளும் கந்தசாமி பிள்ளையும்” என்கிற சொந்த இலக்கியமாக மாற்றியிருக்கிற லாவகமே அவர் மேதைமைக்கு ஒரு சான்று. சொ.வி.யின் சிறப்பான கலையம்சங்கள் நிறைந்த கதை அது.

ஒரு மொழி நுாலைத் தழுவித் தமிழில் எழுதுவதற்கு அவர் எதிரி. ஆனால் அவரே சில சமயங்களில், அவசியப் பொருளாதாரத் தேவையை முன்னிட்டு முதல் நுால் பெயர் தெரிவிக்காமல் தழுவி எழுதியிருக்கிறார். வசைபாடுவதில் மன்னன். குறிப்பிட்ட ஒரு சிலரைத்தான் வசைபாடுவார் என்பதில்லை. நண்பர்களையும் விட்டு வைக்கமாட்டார். அதனால் நட்பையும் இழந்து விடமாட்டார். ஒரு கதையையும் எழுதிய பிறகு திருப்பிக்கூடப் பார்க்க மாட்டார். திருத்தி சரி பார்ப்பது என்பது கிடையவே கிடையாது. அச்சு யந்திர அவசரத்துக்கு ஈடுகொடுக்க எழுதப்பட்டவைதான் எல்லாம்.

“சில்பியின் நரகம்” என்கிற அவர் கதை மணிக்கொடியில் வெளிவந்த சில மாதங்களில் நான் அவருக்கு அறிமுகமானேன். ஒரு பத்து வருஷங்கள் அவருடைய அமைதி தராத நட்பு எனக்குக் கிடைத்தது, தமிழில் எழுத ஆரம்பித்திருந்த நான் தொடர்ந்து எழுதுவது என்கிற விஷயம் அவர் பாதிப்பினால்தான் ஏற்பட்டது என்று சொல்லவேண்டும்.

நாவல் எழுதுவது பற்றி ஒரு தடவை (1938-ல்) பேசிக்கொண்டிருந்தபோது நான் ஒரு மாசத்தில் நாவல் எழுதிக் காட்டுவதாக சவால் விட்டுவிட்டு சேலத்தில் போய் உட்கார்ந்து கொண்டு என் “சர்மாவின் உயிலை” எழுதினேன். என் முதல்கதைத் தொகுப்பான “அழகி” வெளிவந்ததும் “குருவினிடமிருந்து சிஷ்யனுக்கா, சிஷ்யனிடமிருந்து குருவுக்காக”? என்று  கேட்டுக் கையெழுத்திட்டு அவரிடம் ஒரு பிரதியைக் கொடுத்தேன். அந்தப்பக்கத்தைக் கிழித்தெறிந்துவிட்டு புத்தகத்தை வைத்துக்கொண்டார்.

“சூறாவளி” என்று என் முதற் பத்திரிகைக்குப் பெயர் வைத்தது அவர்தான். மணிக்கொடி நின்றுபோன பிறகு அவருக்கு எழுத ஒரு பத்திரிகை வேண்டும் என்கிற காரணத்துக்காகவே பத்திரிகை உலகுக்குப் புதியவனான நான் ஆரம்பித்த பத்திரிகை அது. தினமணியில் முழுநேர எழுத்தாளராக அவர் 35, 40 சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தார். சூறாவளியில் அந்நியச் செய்திகள் வாரா வாரம் எழுத அவருக்கு நான் 50 ரூபாய் மாதத்துக்குத் தந்தேன். ஆனால் ஆறே மாதங்கள்தான் தரமுடிந்தது.

தஞ்சாவூரில் நான் அய்யன்குளத்துக்கு எதிர்வீட்டில் மேல வீதியில் குடியிருந்தபோது, திருநெல்வேலி போத்திக்கடை அல்வா என்று சொல்லி அரை வீசை அல்வா வாங்கி வந்திருந்தார். நான் அவருக்கு அம்பி அய்யர் கடை அல்வா வாங்கித் தந்தேன். பருப்பும் சோறும்தான் தனக்கு அவசியம் என்று உரிமையுடன் கேட்டு வாங்கிச் சாப்பிட்டார்.

அவர் மிகச் சுத்த சைவம். ஓர் இரவு அகாலத்தில் வேறு ஒரு ஹோட்டலும் திறந்தில்லாததால் நண்பர் ஸ்ரீனிவாஸராகவனும்,  அவரும், நானும் ஓர் அசைவ ஹோட்டலுக்குள் போனோம். சொ.வி.யும் எதுவும் சாப்பிடவில்லை. என்னையும் சாப்பிட விடவில்லை.ஸ்ரீனிவாஸராகவன் மட்டும் ஏதோ சாப்பிட்டார் என்று நினைவு.

பின்னர் நான் “சந்திரோதயம்” நடத்தும்போது அவரிடம் அவர் ஒவ்வொரு இதழிலும் எழுதி வரவேண்டும் என்று  வேண்டிக்கொண்டேன். ஆழமாக அஸ்திவாரம் போட்டு “கபாடபுரம்” என்கிற கதையை எழுத ஆரம்பித்தார். இரண்டு இதழ்கள் வந்தன. மூன்றாவது இதழுக்குப் போய் கேட்டபோது “நீயே முடித்துவிடேன் ராசா” என்றார். மிகவும் தாஜா பண்ணிச் சுருக்கமாக அதன் முடிவுப் பகுதியை வாங்கி வரவேண்டியதாக இருந்தது. “கபாடபுரம்”தான் அவர் எழுதிய கடைசிக் கதை என்று நினைவு. அதற்குப் பிறகு இரண்டு மூன்று ஆண்டுகளை அவர் சினிமா நோக்கிலே கழித்து விட்டார். அந்தக் காலகட்டத்த்தில் நான் சிதம்பரம் போய்விட்டேன். அவர் புனா, பின்னர் நோய் வாய்ப்பட்ட பிறகு திருவனந்தபுரம் என்று போய்விட்டார்.

“கலாமோஹினி” என்கிற பத்திரிகை அவருடைய போட்டோவை அட்டைப் படமாகப் போடக் கேட்டபோது அவர் தனது மார்புக்கூடு எக்ஸ்ரே போட்டாவை அனுப்பட்டுமா என்று எழுதிக் கேட்டதாக நினைவிருக்கிறது. கலாமோஹினியில்தான் கவிஞர் வே.கந்தாசாமிப்பிள்ளையாகப் புதுமைப்பித்தன் தன் புதுக்கவிதை (கருத்தில் புதுமை உருவத்தில் சித்தர் மரபு) முயற்சிகளைச் செய்ய ஆரம்பித்தார். முருகனை உன் துருப்பிடித்த வேலைத் துார எறி என்றும், மளிகைக் கடைக்காரரை உன் பெட்டியடி சுவர்க்கத்தில் போய்ச் சேர்ந்துவிடு என்றும், கார்மென் மிராண்டாக் கல்ச்சரக்கிசைந்து வாழும் சென்னை காலேஜ் கன்னிப்பெண்களைப் பற்றியும், செல்லும் வழி இருட்டு என்றும் பாடினார். பச்சையான செக்ஸ் நாவல்கள் (போர்னோகிராபி) படிப்பதில் அவருக்குத் தனியான ஈடுபாடுண்டு. ஆனால் “கட்டிலைவிட்டு இறங்காத கதை” என்று அவர் எழுதிய கதை மூட்டைப் பூச்சிகளைப் பற்றித்தான்.

கடைசியாக ஒரு நினைவு. திருவனந்தபுரத்தில் இருந்து நண்பர் ரகுநாதன் சொ.வி.யின் கடைசி நாட்களில் அவருடன் கூட இருந்து உதவியவர். அவர்தான் “மருந்துச் செலவுக்குக் கூட சிரமப் படுகிறது. பண உதவி தேவை” என்று எனக்கு ஒரு கார்டு எழுதி, அதை அடித்து விட்டு “இன்று புதுமைப்பித்தன் காலமானர் “ என்று 1948-ல் எனக்கு எழுதினார்.

நன்றி – க.நா.சுப்ரமண்யம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *