
1955-க்குப் பின் பல இலக்கியக் கருத்தரங்குகளில் கலந்து கொள்ளுவது என்று தீர்மானித்துப் போக ஆரம்பித்த பிறகு தமிழ் இலக்கியம் பற்றிய அசந்தர்ப்பமான கேள்விகளைச் சமாளிக்க வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது.
அந்தக் கேள்விகளில் முக்கியமானதொன்று ராஜாஜியைப் பற்றியது. ராஜாஜியின் சிறுகதைச் சாதனை என்ன, மற்ற இலக்கியச் சாதனை என்ன என்று பலர் நேரிடையாகவும், குறிப்பாகவும் கேட்பார்கள்.
என் சிறுகதைச் சாதனையாளர்களின் பட்டியலில் ராஜாஜிக்கு இடம் கிடையாது. எனக்குத் தெரிந்த அளவில் பாரதம், ராமாயணம், உபநிஷத், ராமகிருஷ்ணர் நூல்கள் என்று பல புராதன, நவீன நூல்களை ஓரளவுக்குக் காலத்துக்கு ஏற்றபடி திறம்படச் சொல்லியிருக்கிறார் -அவை பல்லாயிரம் பிரதிகள் விற்றிருக்கின்றன என்பதற்கு மேல் அவரைப் பற்றி எனக்கு ஒன்றும் அபிப்பிராயம் கிடையாது.
ஒரு சமயம் நட்வார்சிங் என்பவர் தொகுத்தளித்த இந்தியச் சிறுகதை நூலில் ராஜாஜியின் கதை இடம் பெற்றிருப்பது பற்றி ஸிம்லா இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் அட்வான்ஸ்ட் ஸ்டடிஸ் நடத்திய ஒரு இலக்கியக் கருத்தரங்கில், ராஜாஜியின் சிறுகதைகள் பற்றிஎ ன்னை இரண்டு மூன்று பேர், இலக்கியாசிரியர்கள் கேள்வி கட்டார்கள்.
நேரடியாகப் பதில் சொல்வதற்குப் பதில் ஒரு நடந்த சம்பவம் மூலம் என் பதிலைச் சொல்லலாம் என்று தோன்றியது – சொன்னேன். நான் சொன்ன சம்பவம் 1943, 44 வாக்கில் நடைபெற்றது. இன்னும் பலருக்கும் நினைவிருக்கலாம்.
புதுமைப்பித்தன் என்று தமிழ்ச் சிறுகதை உலகில் மிகவும் தரமான இலக்கியாசிரியராகவும் மேதையுமாக நான் மதிக்கிற ஒருவர், கலைமகளில் என்று நினைக்கிறேன், “சாப விமோசனம்” என்று ஒரு சிறுகதை எழுதி வெளியிட்டார். அதில் ஒரு சித்தாந்த ரீதியாக ராமாயண அமைதியைக் குலைத்துவிடாமல், ராமன் என்கிற ஓர் இந்தியனுக்கு அகலிகையைப் பற்றி ஒரு நோக்கும், தன் மனைவி பற்றி ஒரு நோக்கும் இருந்ததை கலாபூர்வமாகக் கண்டித்துக் கதையை எழுதியிருந்தார்.”ராமனா அப்படிச்செய்தான்?” என்று கேட்டுவிட்டு அகலிகை மீண்டும் கல்லானதாயும், கோதமன் மீண்டும் தவம் செய்ய இமயமலை நோக்கி நடந்தான் என்றும் முடிகிறது கதை. தமிழுக்கு சிறுகதை தோன்றிய நாள் முதல் இன்று வரை தோன்றியுள்ள கதைகளில் மிகவும் சிறப்பானதொன்று என்று இப்பவும் நான் எண்ணுகிறேன். நான் பதிப்பித்த தமிழ்ச்சிறுகதைத் தொகுப்பில் இதை நானே மொழி பெயர்த்துச் சேர்த்திருக்கிறேன்.
கதை வெளிவந்த மாசத்துக்கு அடுத்த மாசமே ராஜாஜி கலைமகளில் ஒரு கட்டுரை எழுதி, வால்மீகி மகரிஷி என்றும், அவர் எழுதிய காவியத்தில் கை வைக்க புதுமைப்பித்தன் போன்ற நபர்களுக்கெல்லாம் இடம் கிடையாது என்றும், ராமன் லட்சிய புருஷன்தான் என்றும் ஒரு கட்டுரை எழுதினார். எத்தனையோ கெட்டிக்காரரும், அறிவுபூர்வமான சிந்தனைகளைத் தொடக் கூடிய சக்தி வாய்ந்த ராஜாஜி எழுதியவற்றில் இதை மிகவும் அசட்டுத் தனமானதாக நான் கருதினேன் என்றும் கருத்தரங்குக்கு வந்திருந்தவர்களிடம் நான் கூறினேன். அதற்குப் பிறகு, நவீன இலக்கியத்தின் நாடியை அறிந்த அந்தக் கூட்டத்தில் பலருக்கு, ராஜாஜியின் இலக்கிய சேவை பற்றிய சந்தேகம் அப்போதைக்கு எழவில்லை.
இதையொட்டி ராஜாஜி பற்றி. இன்னொரு விஷயமும் சொல்லலாம் என்று தோன்றுகிறது.
சாதாரணமாக எல்லோருமே பாரதியாரும் மகாத்மா காந்தியடிகளும் சந்தித்த சந்தர்ப்பம் பற்றிக் கேள்விப்பட்டிருப்பார்கள். காந்தி தங்கி இருந்த வீட்டில் மகாத்மா காந்தியைப் பாரதி சந்தித்து படபடவென்று அன்ற மாலை தான் பேசவிருந்த கூட்டத்துக்குத் தலைமை தாங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும், காந்தி தன் காரியதரிசியைக் கலந்து விட்டு அன்று வேறு வேலை இருக்கிறதென்று சொன்னதாகவும், அதற்கு “அது உமது துரதிர்ஷ்டம்” என்று சொல்லி விட்டுப் போய்விட்டதாகவும் சொல்லுவார்கள். இது வரையில் தெரிகிறது. அதற்குப் பிறகு, அது யார் என்று காந்தி விசாரித்ததாகவும், யார் என்று தெரிந்து கொண்டவுடன் காந்தி, “இந்த மாதிரி ஆத்மாக்கள் போஷிக்கப்பட வேண்டும்” என்று சொன்னதாக வும் நமக்குத் தெரிகிறது.
பாரதியாரைப் பற்றி என்ன ராஜாஜி சொல்லியிருந்தால் இந்த காந்தியின் பதில் பொருத்தமாக இருக்கும் என்பது பற்றி யூகிக்கலாமே தவிர தகவல் எதுவும் இல்லை. சற்று அலட்சியமாக ஏதோ ராஜாஜி கூறியிருந்தால் தான் இந்தப் பதில் வந்திருக்கும் என்று என்னால் யூகிக்க முடிகிறது. அப்படி என்ன சொன்னார் என்பதை ராஜாஜியின் நூலிலோ அல்லது செல்லம்மாள் பாரதியின் நூலிலோ காண இயலவில்லை என்பது என் நினைப்பு. ராஜாஜியையே ஒரு தரம் கேட்டுப் பார்த்து ஏமாந்து விட்டேன். அந்தக் கேள்விக்கு அவர் பதில் தரவில்லை. என்ன சொன்னோம் என்று அவருக்கு நினைப்பிருந்ததில்லை என்பதே என் நினைப்பு.
ராஜாஜியைப் பற்றி நினைவு வருகிறபோது அவரை நான் முதல் முதலில் சந்தித்த நினைப்பும் வருகிறது. 1941 என்று நினைவு. அப்போது மகாத்மா காந்தி சென்னை வர இருந்தார் – ஹிந்தி பிரச்சார சபை கான்வகேஷனுக்காக. ராஜாஜி அவருடைய வேலைத் திட்டங்களைக் கவனிப்பதில் ஈடுபட்டிருந்தார். நான் அப்போது நடத்திக் கொண்டிருந்த இலக்கிய நண்பர்கள் கூட்டமொன்று தி.நகரில் துமிலனின் மாலதி ஆபீஸ் கட்டிடத்தில் நடைபெற இருந்தது. என் சக இலக்கியாசிரியர்களுக்கு ராஜாஜியைக் கூப்பிட வேண்டும் என்று ஆசை. ஒவ்வொருவராக நான் போகமாட்டேன், நீ போ என்று தப்பித்துக் கொண்டு விட்டார்கள். அவர்களுக்கு ராஜாஜியிடம் அன்பும் அதே சமயம் பயமும் இருந்தது தெரிந்தது. நானே அவரை முன்னர் சந்தித்ததில்லை என்றாலும் போய்க் கூப்பிடுகிறேன் என்று ஏற்றுக்கொண்டேன்.
ராஜாஜி வீட்டில் வாசலில் காவலிருந்தவரிடம் ஏதோ சொல்லித் தப்பித்துக்கொண்டு உள்ளே போய்விட்டேன். முன் அறையில் அல்லது கூடத்தில் ராஜாஜியுடன் உட்கார்ந்திருந்தவர்- ஹிண்டு கே.ஸ்ரீனிவாஸன் என்று பின்னர் விசாரித்து அறிந்துகொண்டேன் – என்னைப் பார்த்ததும் அதட்டலாக “யார் அது? ஐ அம் வெரி பிசி ” என்று சொன்னார். நான் முதலில் என்னை அறிமுகம் செய்து கொள்வதற்காக “ஐ அம் கே. என். சுப்ரமணியம்” என்றேன். உடனே ராஜாஜி அவருக்கே உரிய எகத்தாளமான கிண்டல் தொனிக்கும் குரலில் “தி ஃபேமஸ் ரைட்டர்” என்றார். நானும் சற்றும் விட்டுக் கொடுக்காமல் “நாட் சோ ஃபேமஸ் அஸ் சம் பீப்பிள் அன்ஜஸ்ட்லி ஆர்!” என்று பதில் சொன்னேன்.
என் பதிலைக் கேட்டு கே. ஸ்ரீனிவாஸன் சிரித்து விட்டார். சந்தர்ப்பம் சற்று இளகிய மாதிரி தோன்றியது .”என்ன வேணும். என்று கடுமையைக் குரலில் வரவழைத்துக் கொண்டு கேட்டார் ராஜாஜி, நான் வேகமாகப் பாதித் தமிழிலும் பாதி ஆங்கிலத்திலுமாக விஷயத்தைச் சொன்னேன்.
”மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் என்பவரைச் சந்திப்பதற்காக இலக்கிய நண்பர்கள் கூட்டம் ஒன்று இந்த நேரத்தில் இந்த இடத்தில் இந்தத் தேதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. வேலை உங்களுக்கு அதிகம் என்று தெரியும். இருந்தாலும் அழைத்து விட்டுப் போக வந்தேன் அவ்வளவுதான்” என்று சொல்லி விட்டு பதிலுக்காகக் காத்திராமல் திரும்பி விட்டேன்.
மாஸ்தி கூட்டத்துக்கு ராஜாஜி மற்ற எல்லா அலுவல்களையும் மாற்றி அல்லது ஒதுக்கிவிட்டு வந்தார் என்றுதான் ஞாபகம் எனக்கு.
இன்னொரு சமயம்- இது 1956, 57 ஆம் ஆண்டில் என்று எண்ணுகிறேன். சென்னைக்கு வந்த உலகப் புகழ் பெற்ற எஸ். ஸால்வடார் டி. மடாரியாகா என்கிற ஒரு இலக்கிய நண்பரை முன்னேற்பாட்டின்படி ராஜாஜியைப் பார்க்க அழைத்துச் சென்றேன். பேச்சு சற்றேறக் குறைய இரண்டரை மணி நேரம் சுவாரசியமாக நடந்தது. பேசாமல் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு ஏதோ ஒரு நல்ல இலக்கியத் தரமான நுாலைப் படிப்பது போல இருந்தது. இருவரும் மகோந்தமான அறிவாளிகள். இருவரும் பூரணமான அரசியல் அனுபவம் பெற்றவர்கள். ஆங்கிலம் எழுதுவதில் வல்லவர்கள். ஒரு மாரல் டிஸிப்ளின் உள்ளவர்கள். பேச்சு சுவாரசியமாக அமைவது பற்றிக் கேட்பானேன்.
கிளம்பும் போது மடாரியாகா ராஜாஜியுடம் “நான் தங்களிடம் பேசிக்கொண்டிருந்த பல விஷயங்களையும் பற்றி ‘தி ஃபால் ஆப் தி பார்த்தினன்’ என்று ஒரு நூல் எழுதியிருக்கிறேன். அதை சுப்ரமணியத் திடம் கொடுத்திருக்கிறேன். ஒரு பிரதிதான் கொண்டு வந்தேன். பார்த்து ஏதாவது எழுதினால் உபயோகமாக இருக்கும்” என்றார்.
உடனே நான் “புஸ்தகத்தை அடுத்த வாரம் கொண்டு வந்து தருகிறேன் ” என்று சொன்னேன்.
ராஜாஜி தமிழில் என்னிடம் “இப்போது எங்கே நேரம் கிடைக்கிறது புஸ்தகங்கள் படிக்க. கொண்டு வந்து தராவிட்டாலும் பாதகமில்லை” என்றார்.
இதை நான் ராஜாஜியிடன் எதிர்பார்க்கவில்லை. எனக்குச் சுருக்கென்றது. “எனக்கொரு சந்தேகம். நானும் புஸ்தகங்கள் எழுத முயலுகிறேன். நீங்களும் புஸ்தகங்கள் எழுதினீர்கள். யாராவது படிக்கமாட்டார்களா என்று தானே?” என்று கேட்டேன் தமிழில்.
கூட இருந்த யாரோ – அது சதாசிவம் இல்லை என்று எண்ணுகிறேன் – நான் பேசியதை அதிகப் பிரசங்கமாக எண்ணியிருக்க வேண்டும். அவர் கோபமாக ஏதோ சொல்ல ஆரம்பித்ததும் ராஜாஜி அவரைக் கம்பீரமாகக் கையமர்த்திவிட்டு “நான் அப்படிச் சொன்னது தப்புதான் சுப்ரமணியம்! கொண்டு வந்து கொடு. படித்துப் பார்க்கிறேன் என்று சொல்லியிருந்தால் சரியாக இருக்கும் “என்று வாசல்வரை வந்து மடாரியாகாவுக்கு விடை கொடுத்தனுப்பினார்.
இலக்கியத்தில் தரத்தை எட்டுவதற்கு ஏதோ ஒரு சக்தி வேண்டியதாக இருக்கிறது. அதே போல் சந்தர்ப்பங்களில் பெரிய மனிதனாக இருப்பதற்கும் ஒரு சக்தி வேண்டியதாக இருக்கிறது. ராஜாஜிக்குப் பல சந்தர்ப்பங்களில் பெரிய மனிதனாக இருப்பதற்கு வேண்டிய சக்தி இருந்தது என்பதுதான் விஷயம். இலக்கியத்தரத்துக்கு வேறு ஆட்களைத் தேடிக்கொள்ளலாம்.
நன்றி – க.நா.சுப்ரமண்யம்


