ஹைபிரிட்

1

பாலன் சுற்றிலும் திரும்பிப்பார்த்தான். இவனைவிட கொஞ்சம் வளர்ந்திருந்த ஹைபிரிட் தென்னைகளில் கரும்பச்சை ஏறிக்கிடந்த பசையான கீற்றுகளின் சலசலப்பு கீச்சின் குரலோசைபோல் மாலை வெயிலின் சாய்வில் செவியில் அறைந்துகொண்டிருந்தது. முன்னும் பின்னுமாக நோட்டம்விட்டு கிணற்று மோட்டார் வழியாக தண்ணீர் வந்துவிழும் தொட்டியிலிருந்து வெளியேறும் அதிகப்படியான உபரி நீர் வீணாகக் கூடாது என்பதற்காக தண்ணீர் செல்லும் வரப்பின்  அருகே கைப்பிடி மண்வெட்டியால் பிளக்கப்பட்ட நிலத்தில் சரியாக வாழை மரங்களுக்கு நீர்ப்பாய்ச்ச வழி செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினான். பாய்ச்சலுக்கு கீறப்பட்ட பாதையில் குப்பையும் சில்லுகளும் கிடந்ததை கவனித்தவன் பின்புறமாக திரும்பி நின்றுகொண்டு வலதுகாலின் கணுக்காலில்  மறையும் வரை தோண்டப்பட்ட அச்சிறிய நீளமான குழிப்பிளவுகளில் பாதத்தை பதிய வைத்து திரும்பிப் பார்க்காமல் பின்பக்கமாக தண்ணீருடன் இழுத்தபடியே வந்ததில் குளிர்ந்த நீர் சதையில் குளிர்ச்சியை இறக்கியதும் காலையிலிருந்து விலகாமல் கிடந்த பதற்றம் மெல்லக் குறைந்தில் ஆசுவாசமாக இருந்தது.

நீரின் வேகம் குறைந்த இடத்தில் மண்வெட்டியைக்கொண்டு ஊறிக்கிடந்த மண்ணைக் கொத்தியதும் அது இலகுவாக இரும்பை அணைத்து வெளியே வந்தது. மீண்டும் வேகமாக விசைகொண்டு காலை இழுத்தபோது சவ்வுப் பகுதியில் மண்ணில் புதைந்து கிடந்த கண்ணாடி வளைவி குத்தியதில் கொஞ்சம்  சேர்ந்திருந்த குப்பைகளை மண்வெட்டியைக் கொண்டே அள்ளி தூர எரிந்தபடி மீண்டும் திரும்பி காலை மாற்றி தரை மண்ணைத் தேய்த்தபடியே ஆனால் பழைய வேகத்தைக் குறைத்து நிதானமாக வந்தபோது தூரத்தில் சின்னு பதறியபடியே வருவதைக் கவனித்து அவன் குரலுக்காக முன்னே நகரமால் அங்கேயே நின்றான்.

சின்னுவின் நடை மெல்ல வேகமெடுப்பதும் அவன் எதையோ கூற வாயைத் திறப்பதையும் கண்ட பாலன் அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதை ஓரளவு ஊகித்துமிருந்தான். எந்த வேலைக்கும் பறக்காத அவனுடைய கால்களில் வேகம் அதிகமாகி வரப்புகளைத் தாண்டிக்குதித்து அருகே வந்ததும் முழங்காலில் கையூன்றியபடியே விசயத்தைச் சொன்னதும் அவன் தலைக்குப் பின்னாலிருந்த தென்னை மரத் தொடர்களில் அசைகிற ஓலைகள் காற்றின் வேகத்தில் மேற்கொண்டு சத்தத்தை எழுப்பியது முழுக்கடல் நடுவே அலைகளின் கொந்தளிப்பான ஓசைகளில் வெளிப்படும் ஆக்ரோசத்தைப்போல காதை நிறைத்தன.

“……………”

“நீ.. பாத்தியா?”

“ஆமாங், ரெண்டு கையுங் காலயும்  வெரசா தூக்கி அடிச்சாப்ள. எப்பியும் போல தண்ணிக்குத்தான் கூப்டராப்ளன்னு அசால்டா இருந்தனுங்க, மாடு கண்டுக வெள்ளயன் சித்தப்பா தோட்டத்துக்குல பூந்துருச்சுனு போயிப் பார்த்து திரும்பறதுக்குள்ளார….”

“மயிருல போகுது, அங்கியேதாண்டா நிக்கச் சொன்னேன். அதுகுள்ளார மேயக்கெளம்பிட்டியாக்கும்..”

“அட நெசமாலுங்….பாலு கறக்கர நேரத்துல எங்கையாச்சும் போயிருமென்னு நோட்டம்போட்டு திரும்பறதுக்குள்ளார…கெரத்தை விடுங்க, அவரு துடிச்சுட்டு கெடக்கராப்ள”

 “வாரப்பதான்டா கம்பிளி போட்டு போத்திவிட்டு வந்தேன். மாத்திரை சாப்ட்டு படுக்கையில கிடந்த மனுச எப்டீரா ஆட்னாரு,  கட்டித்தின்னி  உம்மட புளுத்த நாயத்தை வேற எங்கியாங் கொண்டு போ”

“இல்லீங் மாப்ள.. பாக்கச்சொல்ல அடிச்சாருங்க, ஆங்…ஆங்ன்னு சத்தம் வேற போடப்போயித்தான் நான் பார்த்தனுங்க. பக்கத்தால போயி மாமா என்ன வேணுங்கனு கேட்டதுக்கும் கண்ணு செவந்து வாய்ல எச்சிலு ஒளுகவும்தான் இங்க ஓடியாந்த. கன்னிமாரு சத்தியமுங்க”

அந்த வார்த்தைகளிலிருந்த சில சொற்களைத் தவிர மற்றதை அவனால் உள்வாங்கிக்கொள்ள முடியாமல் முதலில் கூறியதையே மனதில் மீள ஓட்டிப்பார்த்துக் கொண்டதும் பாலனுக்கு உடல் வியர்த்தது. முன் எப்போதும் இவனிடம் கூடிவராத ஓர் அச்சம் மெல்ல சூழத் துவங்கியதை அதிர்ச்சியுடன் எதிர்கொண்டான். இதற்குப் பின் நடக்கும் நாடகங்களை நினைத்துப் பார்த்தபோது உடல்முழுக்க வெப்பம் ஏறுவதை காது மடல்களில் பரவிய சூட்டில் உணர்ந்ததை வெளிக்காட்டாமல் என்ன செய்வதன்று எந்தப் பிடிப்பும் இல்லாததுபோல் கீழே மண்ணைப் பார்த்தபடியே நின்றிருந்தவன் தோட்டத்தில் போடப்பட்டிருந்த மரத்தால் ஆன பழைய கயிர் கட்டிலில் வைத்திருந்த செல்போனையும், சிகரெட் பெட்டியையும் எடுத்து வரச் சொல்லி மண்வெட்டியை மோட்டார் அறைக்குள் வைத்து பூட்டி சாவியை  அணிந்திருந்த ஜட்டிப் பாக்கெட்டில் வைத்தான். ஹான்ஸ் பொட்டலத்தை எடுத்து கொஞ்சம்போல் எடுத்துக் கசக்கி அடி உதட்டில் வைத்ததும் நெடி மண்டைக்கு ஏற எச்சிலைத் துப்பினான்.

சின்னு “துடிச்சதும் தூக்கி உக்கார வைக்க பாத்தனுங்க.. முதுகு நிக்கல..அதான் இங்க ஓடியாந்த.. வெரசா மாப்ள, மாதேசனை வண்டி கூட்டியாரச் சொல்லியிருக்கேனுங்க,  நம்மளது சர்வீஸ்ல கெடக்குது” என்றான்.

அவன் சொல்லியதை எதையும் கேட்காதவன் மாதிரி எதிரே வீட்டிற்குச் செல்லும் பாதையின்  இரண்டு எதிரெதிர் பக்கங்களிலும் நீண்டுகிடந்த ஹைபிரிட் தென்னைகளின் தொடர்ச்சியைப் பார்த்தபடியே  ஒருமுறை எச்சிலைத் துப்பியபடி நடக்கத் தொடங்கினான்.

சின்னு முகத்தில் அடித்திருந்த பதற்றத்தின் தடங்கள் பாலனிடம் நகக்கீரல் அளவிற்குக் கூட இல்லை. அவன் நடையில் பொறுமையும் விதி முடிந்ததை உணர்ந்த நிதானமும் வெளிப்பட்டது. வீட்டைத் தாண்டியே தோட்டம் பரந்துகிடந்ததால் அங்கிருந்து கொஞ்ச தூரம் முகப்பை அடைய சின்னு இடையில் வாலைச் சொருகி ஓடும் நாயைப்போல மேடுகளைக் கடந்தான்.

அவன் மறைவதைப் பார்த்துக் கொண்டிருந்தவன்  இனி எவ்வளவு வேகமாக ஓடினாலும் அவரைக் காப்பாற்றுவது சிரமம் என காய்கள் பிடித்திருந்த தென்னையின் பட்டையின் ஊறிச்சென்ற எறும்பைக் குத்தினான். மீண்டும் எச்சிலை தூரத்துப்பிவிட்டு  சிலவற்றை நினைத்துக்கொண்டான்.

அப்பா தடுமாறி எழ முயற்சி செய்யும் நேரத்தில் உதவச் செல்லும்போது தடைபடுகிற வேலையையும் ஒவ்வொரு நாள் காலையிலும் மலம் கழிக்க அவரைத் தூக்கி அதற்கான இருக்கையில் அமரவைக்கும்போதெல்லாம்  இந்தச் சம்பவம் மட்டும் நடந்திருக்கவே கூடாது என மருகிக்கொள்வான்.

கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது நரம்பு துடிக்க அவனை வந்தடைந்த செய்தி இன்றுவரை முடிவில்லாமால்  சென்றுகொண்டிருக்கிறது. இதுக்கொரு  தீர்வே இல்லை என்பதை உணர்ந்த கணத்திலிருந்து அப்பா அவனுக்கு வேண்டாத எடையாக அறையில் கிடப்பதை நினைத்து மனதிற்குள்ளும் எதிர்படும் வேற்றாளிடமும் சொல்லி கசப்பை பகிர்ந்தான். அவர் நன்றாக இருந்த காலத்திலேயே முதல் தாரத்தின் பிள்ளைகள் அனைத்து சொத்துக்களையும் பிடிங்கிக்கொண்டுதான் பாலனிடம் விட்டார்கள். அவன் அம்மா சிவகாமியிடம் அப்படி என்ன ‘பவுசு’ இருக்கிறது என கோயில் விழாவில் முதல் தாரம் கேட்டதுகூட அவளுக்கு வருத்தத்தைத் தரவில்லை. சொந்தப் பிள்ளையின் முகச்சாடையை கேலி பண்ணியதும், உள்பாவடையில் இன்னும் எத்தனை பேரின் தாழிகளை முடிச்சுட்டுக் கொள்வாள் என்கிற வார்த்தைகளைக் கேட்க மனதில் தெம்பு இல்லை. அடுத்தடுத்து இறங்குகிற நஞ்சின் துளிகளைப்போல வார்த்தைகள் பலம் பெற்று பிற பெண்களின் வாயிலிருந்து தீவிரத்துடன் பயமில்லாமல் வந்தது நீண்ட நாள் நீடிக்கவில்லை. பாலன் பள்ளிப்படிப்பை முடிப்பதற்குள் சிவகாமியை பூமிக்குள் இறக்கியிருந்தார்கள். எந்த ஓர் பிடிப்பும் அற்று வளர்ந்தவனின் நினைவுகளில் அப்பா இல்லாமல், வன்முறைகளும் தனிமையுமே நிறைந்திருந்தது.

 எண்ணி எண்ணி வேதனையின் காயங்களுக்கு மருத்தடிக்க முடியாத இந்த துயரம் நிகழ்ந்து இதோடு பத்தாண்டுகள் கழிந்துவிட்டன. ஒரு கையும் காலும் இழுத்தபடி வரப்பிலிருந்து அவர் கீழே விழுந்து அரை மணி நேரம் கழித்து  சாணி பொறுக்கும் பெண்கள் ‘ஏங்கோவ்’ என பலமுறை சொல்லி எழுப்ப முயன்றார்கள். கண்கள் சொருகி நிற்க வலது கையும் காலும் கடைசி உயிர்  பேட்டரியில் இயங்கும் நொடி முள்ளின் வேகத்திற்குக் கூட நகராமல் அசைந்ததும் முனியக்காதான் ‘யாத்தீ, முண்டைகளா  வாதம்டி இது, ஆளுங்கள கூப்பிட்டு வாங்கடி’ எனக் கத்தினாள்.

தூக்கிச் சென்று அருகே இருந்த காங்கயம் அரசு மருத்துவமனையில் கிடத்தினார்கள்.  “என்ன ஏதுன்னு தெரியலீங்களே, பையனுக்கு கூப்ட்டு யாராவது சொல்லீருங்” என குரல்கள் அடுக்கடுக்காய் சொந்தங்களின் காதுகளில் விழுந்துகொண்டே கிடந்தது. மருத்துவரைச் சுற்றிக்கொண்டு என்ன ஏது என விசாரிக்கவும் , புலம்புவதுமாக இருந்தனர். “பெரிய டாக்டர் வராரு” என ஒரு கூட்டம் மற்றவர்களை ஒதுக்கிவிட்டது.

கையைக் காலைத் தொடுவதும் தட்டுவதுமாக இருந்த மருத்துவர் பேனா ஒன்றை எடுத்து ரீபிளை அடைக்கும் பகுதியை பேச்சற்றுக்கிடந்த சாமிநாதனின் வலது காலின் அடிப்பாதத்தில் வைத்து தேய்த்தார்.  மெல்ல அசைந்துகொடுத்ததே தவிர கூச்சத்தில் வரும் துடிப்பு தெரியவில்லை. வலது கையைத் தூக்கி இரண்டு முறை கீழே விட்டுப்பார்த்தார். குளிர்ந்து கனமேறிக் கிடந்தது.

 “திருப்பூருக்கு இல்லாட்டி கோயம்புத்தூருக்கு எடுத்துட்டுப் போங்க, பக்கவாதம் தான். இங்க வச்சுப் பார்த்தா சரியாகது” என்றபடி சந்தேகத்தை உறுதிப்படுத்த இளம் மருத்துவரிடம் நரம்பு மண்டலத்தை பரிசோதிக்க ஸ்கேன் எடுக்குமாறு சொல்லிச்சென்றார்.

பாலனுக்கு இந்தச் செய்தி கொஞ்சம் தாமதமாக சென்றது. அவன் கோயம்புத்தூரில் இரண்டாமாண்டு இறுதித் தேர்விற்காக நண்பர்களுடன் தங்கிப்படிப்பதாகக் கூறிச் சென்றவனை அன்றிரவுதான் வேறு சொந்தக்காரரின் மகனின் எண்ணைக் கண்டுபிடித்து அவனைவிட்டு நடந்ததைச் சொல்ல முடிந்தது. அவன் பதறியடித்துக்கொண்டு அவரைத் தேடி வந்தபோது சாமிநாதனின் முகம் கருத்துக்கிடக்க செவிலியர் அவரின் ஆணுறுப்பில் சிறுநீர் கழிக்க மெல்ல ரப்பர் டியூப்பை பொருத்திக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் முகத்தைத் திருப்பினான்.  ‘அப்பா’ என துடிக்கப் போகிறான் என நினைத்திருந்தவர்களுக்கு பாலனின் அமைதியான முகம் அதிர்ச்சியை அளித்தது. “என்ன ஆச்சு?” சாதாரணமாகக் கேட்டான்.  “ஸ்ட்ரோக்” என நர்ஸிடமிருந்து பதில் வருவதற்கும் அவன் சித்தப்பா  “சரியாயிரும் தம்பி, அண்ணனை காப்பாத்தி உட்ரலாம், பயப்படாத” என்றார். மருத்துவமனையில் அவன் நின்றுகொண்டிருந்த கோலத்தைக் கண்ட சிலர் பரிதாபத்துடன் கண்களைத் தாழ்த்தினர். சுற்றிப் பார்த்தபோது அந்த வார்டில் இருந்தவர்கள் அனைவரும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதை அறிந்தான். கை,கால் எல்லாம் மரத்துக்கிடக்கும் மனித மரச்சாமன்கள். தயங்கியபடி சாமிநாதனின் கைகளைப் பற்றி அமர்ந்து பேசத்துவங்கினான். எந்த சலனமும் இல்லாமல் கிடந்தவரை ஒரு வாரம் கழித்து திருப்பூர் அரசு மருத்துவமனையிலிருந்து பிரபல தனியார் மருத்துவனைக்கு மாற்றியபோது தெளிவாக  “அடுத்த ஆறு மாசம்ங்க என்ன திரும்புதோ அதுதான் இனி கடைசிவரை, கையைக் கால அப்பப்ப ஆட்டச் சொல்லிட்டே இருங்க, கண்டதையும் திங்கக் கொடுக்காம சுகர் ஏறாமையும் பாக்கோனுங்” என உள்ளதைச் சொல்லிவிட்டார்கள்.

“எங்க தூக்கிட்டுப் போனாலும் இந்த நோய்க்கு ஒரே மருத்துவம்தான். சும்மா படுக்கைல கிடக்கவறவருக்கு பிசியோதெரபின்னு தினமும் கையக் கால ஆட்டவச்சு காசு புடுங்குவானுங்க, வீட்டுக்கு தூக்கிட்டு போங்க தனியா பிசியோ வச்சு பாக்கறதுதான் நல்லது. இல்லைனா இருக்கக் காசை எல்லா வக்காளோலிக புடுங்கிட்டுதான் விடுவானுங்க” மருத்துவ துறையில் இருக்கும் உறவினர் சொல்லிப் பார்த்தார். காதில் வாங்காமல் சித்தப்பாவின் பேச்சுகளுக்கு அடங்கியிருந்த பாலன் மேலும் ஒரு மாதம் மருத்துவமனையிலேயே வைத்துப் பார்க்க ஒப்புக்கொண்டான். ஒருகட்டத்தில் யாராவது படுக்கையிலிருந்து அவரைத் தூக்கினால் மீண்டும் சாயமால் அமர்ந்துகொள்ளுமளவிற்கு முன்னேற்றம் தட்டுப்பட்டதும் அங்கிருந்து மாற்றி வீட்டிற்கே அழைத்து வந்தனர்.

இவனே முழுக்க கவனித்துக்கொள்ள வேண்டிய நிலை. பல்கலையின் துணையின்றி இயங்கிக்கொண்டிருந்த அக்கல்லூரியிலும் ஒரு தொகையைத் தந்து வருகைப் பதிவை சமாளிக்க வழிசெய்து கொள்ள சித்தப்பா உதவினார். கிடைத்த இரண்டுமாத விடுப்பில் முதல் சில நாள்கள் கழிவுகளை வெளியேற்றவும் மருந்துகளை வேளைக்கு சரியாக புகட்டி விடுவதும் கை, கால்களை மெல்ல ஆட்டவும், நடைபயில்வதை கவனமாக செய்துவந்தனுக்கு நாளடையில் அப்பா தொந்தரவாகிப் போனதை நினைத்தபோது உள்ளுக்குள் புழுங்கத் தொடங்கியது.

அவர் இல்லாமல் இருந்தால் பல துன்பத்திலிருந்தும் தனக்கும் கிடைக்கும் விடுதலையை  நினைத்தாலும் ஒருகணத்தில்  அவர் இல்லாமல் போய்விட்டால் உருவாகும் வெறுமையையும் அவனை  அழுத்தியது. உணவை மிக்சியில் அறைத்து ஊட்டிவிட்டபின் வாசலில் இருக்கும் செவ்வெளனி ஹைபிரிட் தென்னைக்கு அடியே உட்கார்ந்து கண்ணீர் விடும்போது மீண்டும் அந்த ஆற்றாமை உள்ளிருந்து எழுந்துகொண்டு வரும்.

அப்பாவின் கண்கள் மட்டுமே இனி நடமாடுமென தெரிந்த நாளிலிருந்து நிம்மதியாகச் சென்ற பொழுதுகள் மெல்லத் தடம் புரள்வதை உணர்ந்த பாலன் கொஞ்சமாகப் பழகியிருந்த குடியை வாரத்திற்கு இரண்டு முறை என மாற்றி புலம்பித் திரிந்துகொண்டிருந்தான். சில மாதங்களிலேயே அவரை கவனித்துக் கொள்ள தூரத்துச் சொந்தக்காரனான சின்னுவை அவன் சித்தப்பா அழைத்து வந்திருந்தார். தோட்டத்தைப் பராமரிப்பதுடன் சாமிநாதனையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என  மாதச் சம்பளம் பேசப்பட்டிருந்தது. அவன் வந்த பின்பே பாலன் கல்லூரிப் படிப்பை முடித்தான்.  எங்கும் வேலைக்குச் செல்லாமல் தோட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாலும் அவனுக்கு புதிதாக வேறு இடத்திலிருந்து இவன் எதிர்பார்த்திருந்த வேலைக்கான அழைப்பு வந்திருந்தது. அப்பாவின் உடலே தன் கனவுகளுக்கு எதிராய் நிற்பதையும் இவரை வேறொரு கண்காணிப்பில் விட்டுச் செல்வதும் சரியாகாது என்பதால் வந்த வாய்ப்பை தட்டிவிட்டபடியே இருந்தான்.

சாமிநாதன் வெளியே வட்டிக்கு விட்டிருந்த பணத்தை அவன் சித்தப்பாவின் தோரணை உதவியோடு தினம் ஒரு குவாட்டர் முதலீட்டில் வசூலித்துக் கொண்டு மேற்படி மருத்துவத்தைக் கவனித்துக்கொண்டார்கள்.

 தூக்கிக்கொண்டு வந்து இத்தனை ஆண்டுகளில் அவராகவே தடுமாறி தட்டுப்படும்  பிடிப்புகளின் உதவியால் மெல்ல எழுந்து நிற்பது என சின்னச் சின்ன முன்னேற்றங்கள் இருந்தது. இன்றோடு அதே அறையில் கிடக்கிறார். எப்போதாவது காற்று வாங்க தோட்டத்தில் இருக்க வைத்தனர். அதுவும் ஒருமுறை கண்ணீர் விட்டபடி அமர்ந்திருந்தவரை நெருங்கியபோது பாலன் என்ன ஏதென உடலைத் தூக்கிப்பார்த்ததில்  அணிந்திருந்த டிரவுசரில் மலம் கழித்ததை நினைத்து முகம் சுளித்ததும் சாமிநாதன் மகனின் முகத்தைச் சந்திக்க முடியாமல் கண்ணீர் சிந்தியபடியே இருந்தார்.

”இன்னொரு கையை ஆட்டுனா வந்துருப்பனல்லோ, அசிங்கமா இல்லீயா உனக்கு? எல்லாம் என் கருமாந்திர நேரம் ச்சை” ஒரு நாயை இழுப்பதுபோல நாற்காலியிலிருந்து இறக்கி வேர் தெரிய கிடந்த மொட்டை தென்னைக்கு அடியில் வைத்து வாளியில் தண்ணீரை நிரப்பி உடல்முழுக்க ஊற்றிவிட்டு பவுடரை முதுகில் தெளித்துவிட்டு படுக்கவைத்தான். கோமதி சித்தி வந்தததும் நடந்ததைச் சொல்லி  ‘சாகாம சாகடிக்கறாப்புள கருமம்’ என அவரைப்பார்த்துக் கத்திக் கொண்டிருந்தவனை எத்தனை முறை இவனைச் சமாளிப்பது என்ற பாவனையில் அவள் அமைதிப்படுத்தினாள்.

வீட்டு வாசலை அடைந்தபோது அப்பாவின் அறையிலிருந்து சின்னுவின் குரல் கேட்டபடியே இருந்தது. செருப்பைக் ஓரமாகக் கழட்டிவைத்தபடி கால்களைக் கழுவிக்கொண்டு உள்ளே படுக்கையை நோக்கிச் சென்று ‘அப்பா..ப்பா..போவ்’  காதுக்கு அருகே கத்தினான். உடலில் எந்த அசைவு இல்லையென சின்னுவிடம் சொன்னான். அவன் ஜன்னல் கதவுகளைத் திறந்துவிட்டு முகத்தில் வேகமாக காற்று படும்படி மேஜை மின்விசிறியின் வேகத்தைக் கூட்டி வைத்தான்.   “மாமா கேக்குதுங்களா? ஒன்னுமில்லீங்க கண்ணத்தொறங்க” புலம்பியவனைப் பார்த்து “டேய் சித்தப்பா, பங்காளிகளை வெரசாக் கூட்டியா” எனச் சொன்னதும் இத்தனை ஆண்டுகள் படுக்கையில் புழுபோல் நெளிந்து கொண்டிருந்தவர் இனி இருக்க மாட்டார் என்பது மனதை இலகச் செய்தது.

உடலை நீவினான். எப்போதும் அவரை விட்டு நீங்காத வெண்புள்ளிகளைப்போல இரண்டு கணுக்கால்களிலும் மூத்திர உப்புகள் படிந்திருந்தன. அரைகுறையாக குறுக்கே கிடந்த கனமில்லாத  போர்வையை விலக்கி மடித்து ஓரமாக வைத்தான். இருமலுக்காக குடிக்க வைத்திருந்த டானிக் பாட்டிலை அவர் தானாகவே எடுத்துக் குடிந்ததில் நிலையில்லாமல் அது கீழே விழுந்திருந்தது. யாருமில்லை என்பதை உறுதிபடுத்திக்கொண்டு கவனமாக, ஒரு துணியால் மூடியைத் திருகி இன்னொரு அறையில் பாட்டிலைக் கொண்டு வைத்தான். அப்பாவின் கைலி வேட்டியின் முனையிலேயே வாயின் ஓரம் கசிந்திருந்த எச்சிலை துடைத்துவிட்டான்.

சாமிநாதன் முகம் இறுகிக்கிடந்தது. எதிரே நின்று பார்க்க கைகளும் கால்களும் கோணலாக இவனைப் பார்த்து சிரிப்பதைப் போல இருந்தது.

அறையிலிருந்து வெளியேறி வீட்டின் முகப்பில் நின்று வானம் மெல்லச் சிவந்து வந்ததைப் பார்த்தான். தூரத்தில் கீறல்போல வானவில் வளைந்து ஒடிந்துகிடந்தது. வெளியே கிடந்த அப்பாவின் சக்கர நாற்காலிக்கு எதிரிலிருந்த தென்னை மரத்தின் வேரின் அடிப்பாகத்தில் உட்கார்ந்தபடி போனை எடுத்து வந்திருந்த இரண்டு தவறிய அழைப்புகளை அழைக்கலாமா வேண்டாமா என்கிற குழப்பத்திற்குப் பின்  இன்ஸ்டாகிராமில் ஆடிப் பதிவேற்றிய அவன் விடியோக்களுக்கு வந்த பின்னூட்டங்களை படிக்கத் துவங்கினான்.

                                                                                  2

                           ஷோ பீஸ்டர்ஸ் – ஜானி வாக்கர் பிளாக் லேபிள்

தரையில் சிதறிக்கிடந்த வெவ்வேறு வகையான மதுத்துளிகளில் வண்ண விளக்குகளின் எதிரொளிப்புகள் முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது. வரிகளில்லாத ஹம்மிங் நிறைந்த இசையின் ஒலியில் பரவியிருந்த கூடத்தில் முன்மாலையில் சரியாக அடுக்கப்பட்டிருந்த இருக்கைகள் அங்குமிங்கும் வந்தவர்களின் வசதிக்கேற்ப போடப்பட்டதில்  ஒழுங்கில்லாமல் எந்தக் கோணத்தில் பார்த்தாலும் அலங்கோலமாக சிதறிக்கிடந்தன.

சில இருக்கை சோபாக்களில் பழங்களும், வெள்ளரித் துண்டுகளும் ஈரத்தில் ஒட்டியிருந்த பொரியைப்போல அமிழ்ந்து கிடந்தன. கடைசியாக வழங்கப்பட்ட இறுதி மதுவிற்கான சுற்றுக்கு முன்பாகவே நண்பர்கள் காரில் ஈசிஆருக்குச் செல்வதாக சொன்னபோது குழறிக்கொண்டிருந்த ஷிவ் முற்றிலும் தளர்ந்து இருக்கையின் ஓரத்தில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான். எண்ணங்கள் துளித்துளியாக சொட்டியபடி நினைவைப் படுத்தியெடுத்தது. ஒவ்வொரு இரவிலும் சொல்லிக்கொள்ளும்  ‘இனி குடிக்கவே கூடாது’  மந்திரத்தை மீண்டும் உள்ளுக்குள் முனகினான். நீண்ட மூச்சுகளை ஒன்றன்பின் ஒன்றாக வெளியேற்றியபோது மார்புக்கூட்டை ஊசி இறக்கியதுபோல வலி உயிரை பிசைந்த ஏப்பத்தில் புகையின் மணம் இருந்தது. அதீதமாக குடிக்கிற இரவில் குறைந்தது ஐம்பது சிகரெட்களை மூன்று மணி நேரத்திற்குள் இழுத்திருப்பனுக்கு இந்த வலி  விதவிதமான சோர்வைக் கிளப்பிவிட்டது.

சுற்றிலும் கசிந்துகொண்டிருந்த  இசையில் மேலும் மூழ்கிச் சென்றாலும் முழுக்க தனித்திருந்ததால் அந்தபோதையிலும் நிதானம் வர வேண்டும்  என்பதற்காக ஷிவ் மெல்ல இருக்கையிலிருந்து தலையை விசைகொண்டு இழுத்து முன்னுக்கு வர வைத்து  பல முறை உலுக்கி எழுவதும் அமர்வதுமாக உடலை கடின முயற்சியில் உசுப்பச் செய்து மங்கிய மூளையை இயல்புக்குத் திருப்பினால்போதுமென நினைவுகளை பற்றவைக்க முயற்சித்தான். மாலை எப்போது வந்தோம்? உள்ளே வந்தபோது எங்கெல்லாம் அமர்ந்தோம்.. பியர் சொல்லிவிட்டு இருக்கையின் சுகத்தை உணர்ந்தபடி பாரில் ஒருபுறத்தில் வைக்கப்பட்டிருந்த சோனி பெரிய டிவி திரையில் என்ன ஓடிக்கொண்டிருந்தது… கேட்கக் கேட்க வந்துகொண்டிருந்த மதுவை கொடுத்தவர்களின் முகங்கள் நினைவிற்கு தட்டுப்படுவதும் பின் விலகுவதுமாக இருந்தது. யார் யாரைச் சந்தித்தோம் என மனதிற்குள் மெதுவாக ஓட்டிப்பார்த்தான்  கருப்பு ஆடையில் பாறைபோலிருந்த பவுன்சர்கள்..கட்டுமஸ்தான ஆண்கள்..மிக முக்கிய சினிமா பிரபலங்கள், படத் தயாரிப்பாளர்கள், மாடல் அழகிகளைத் தேடிவந்த தயாரிப்பாளர் என்கிற பேரில் அலையும் லவாடாக்கள். வாயைத் திறந்து முணுமுணுத்தான்.

இருகைகளும் விசையுடன் தலையை அழுத்திக்கொண்டிக்க இரவை நேரம் மூழ்கடிப்பதைப்போல  மாறிமாறி குடிக்கப்பட்ட பலவகை மதுக்களின் ரசாயனம் அவன் மண்டையைக் குடைந்தது. கழிப்பறை நோக்கி நடக்க ஷோபாவை பிடித்து எழுந்தபோது வலது காலின் ஷூ கழட்டப்பட்டுக் கிடந்ததை எடுத்து அணியாமல் அப்படியே நடக்கத் துவங்கினான். அத்தனை போதை நிலையிலும் அவளைப் பற்றி தொடர்பில்லாத சில நினைவுகளை முன்னுக்குப் பின்னாக வந்து முட்டிக்கொண்டிருந்ததை உணர்ந்ததும் அழ வேண்டும் போலிருந்தவன் திடீரென கண்களைத் தொட்டு குறையாகத் திரண்டிருந்த கண்ணீர் துளிகளுடன் இமையைச் சேர்த்து தேய்த்துவிட்டான். கைகள் தளர்ந்திருந்தது. இங்கிருந்து இன்று நகரவே முடியாதவனுக்கு உருவங்கள் அசைவது கண்களுக்கு அருகே மின்விசிறி தகடுகள் அசைவது மாதிரியிருந்தது.

தம்ளரை தரையில் சுற்றிவிட்டால் அடையும் உருவத்தைபோல சின்ன தள்ளாட்டத்துடன் நடந்து சென்றபோது தடுமாறி அருகே வைக்கப்பட்டிருந்த பூச்செடி தொட்டியில் விழுந்தான். நிதானிப்பதற்குள் நெற்றியில் சிறிய உள்காயம்.  படுத்த நிலையிலேயே தலை தூக்கிவனுக்கு பார் பாய்ஸ்  நோக்கி வருவது தெரிந்ததும் “ஐயம் ஸ்டேடி” என்றபடி மீண்டும் வழுக்கி எழுவதற்குள் அவர்களாக தூக்கி இருக்கையில் அமர வைத்தனர். விடிய விடிய இயங்கிக்கொண்டிருந்த அந்த பாரில் எதைத் தொலைத்தாலும் சரியாக அடுத்தநாள் ஒப்படைக்கும் அளவிற்கு அவர்களிடையே  நேர்த்தியான அணுகுமுறை இருந்தது.  அரசியல் வட்டாரங்கள வரும் இடமென்பதால் ‘நள்ளிரவில் ஆட்டம் போட்ட அழகிகள்: அதிரடி சோதனை’ என்கிற செய்திகளுக்கெல்லாம் இடம் இல்லாமல் தங்களுக்கென ரகசியங்களை வெளியே விடாமல் தொழிலை நடத்திக்கொண்டிருந்தனர்.

இருக்கையில் சாய்ந்து  பெருமூச்சு விட்டபடி அருகிலிருந்து பயன்படுத்தப்பட்ட டிஸுவை எடுத்து கண்களில் ஒற்றி எடுத்ததும் எரிச்சலைத் தந்தது.  கண்களை மூடியவனுக்கு  ரோஷினியை பார்த்து எதைப் பேசினோம், அவள் இதற்கு ஒப்புக்கொண்டால் என்ன செய்வது என்பதைப் பற்றிய சிந்தனைகள்  தொடர்ச்சியில்லாமல் முரணாக அலைந்தது. அவளுக்கு இவனைவிட அவள் செய்யும் தொழில் முக்கியம். ஏழு ஆண்டுகளாக இதற்காகவே காத்திருப்பவளுக்கு பட வாய்ப்பு வந்ததை ஷிவ் அறிந்தபோது உற்சாகத்தில் இருவரும் இரவு முழுக்க குடித்தும் தூக்கம் வராத அடுத்தநாள் காலையில் இவளுக்கு உணவை ஊட்டிவிட்டும், ஆசையாக பேசியபோதும் அவனுக்குள் வந்த ஒருவித குற்ற உணர்ச்சியை உணர்ந்தான்.

அந்தரங்கமாக அதை அவள் உணர்ந்தாலும் அவனிடம் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. பெண்ணின் வருமானத்தில் வாழ்வது எல்லா ஆண்களுக்கும் எங்கோ ஓர் செல்லில் உறுத்தும் என்பதை உறுதியாக நம்பினாள். அதுவும் ஷிவ் விசயத்தில் இந்தமாத வீட்டு வாடகையை தான் கொடுப்பதாகச் சொன்னால்கூட அவன் அதற்கு ஒப்புக்கொள்ளமாட்டான். இவனுடன் சேர்ந்து இரண்டு வருடங்களைக் கடந்திருந்தாலும் அவனுக்கு பணத்தைப் பற்றிய எந்த கவலையும் இல்லை என்பதை அறிந்துவைத்திருந்தவளுக்கு சமயங்களில் அதிகமாக தேவைப்படும் செலவுகளுக்கு அவனிடம் சென்று நிற்கவும் முடியாத சூழலில் சில விளம்பரப்படங்களில் பத்தில் ஓராளாக நின்றுவிட்டு வருவாள். அந்த வருமானம் புதிய ஆடை வாங்குவதற்க்குக் கூட போதாதபோதுதான் ஷிவ்வை நம்ப வேண்டியிருந்தது. அவனும் இரண்டு விளம்பரங்களில் தலையைக் காட்டியிருந்தாலும் எதவும் சரியாகப் போனதில்லை. இருந்தாலும் இவனுக்கு எதோ ஒருவகையில் பணம் வந்துகொண்டிருந்தது.

படத்திற்கான வாய்ப்பு வந்த நாளில் அவள் ஒரு காப்பியைக் கேட்டதும் இவனாகவே எழுந்து சென்று பால்விடாத காப்பியை மக்கில் பாதியளவு ஊற்றிக்கொண்டு மெத்தையின் விளிம்பில் அமர்ந்தான். அவள் மெல்ல அதைக் குடிக்கும்போதே “ஷிவ் வாய்ப்பு வரும்போது ஒரு ஃபேவரும் கூடவே வருது. உனக்கு சான்ஸ் கொடுத்தா எனக்கு என்ன கிடைக்குங்கற கேள்வியை அஞ்சு வருசமா கேட்டுட்டு இருக்கேன். என்னை மாதிரியான ஆளுங்ககிட்ட கேக்கறது இன்னும் சலிப்பா இருக்கு. அப்படி அந்த ஓட்டைல என்னதாண்டா இருக்கு“ என்றாள். அவன் ஆடையில்லாத அவளின் பின்பக்கத்தை தொட்டான். என்ன ஆச்சு என்கிற கேள்விகளுக்கு பதில் தெரிந்திருந்தாலும் ஒவ்வொரு முறையும் அதற்கான காரணங்கள் இவனுக்கு அதிர்ச்சியளித்துக் கொண்டே இருந்தன.

படத்தில் நாயகியாக நடிப்பது மாடலிங் துறையில் இருப்பவர்களின் கனவு. அதற்காக இத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பது ரோஷினியின் கணக்கிற்கு அதிகமானது. ஆரம்பத்தில் அது குறித்தத் தயக்கங்கள் இருந்தாலும் இவளை காதலிப்பதாகவும் வீட்டிற்கு வந்து பெண் கேட்பதாக பலர் வந்து நின்றதும் உறுதியாக இந்தத் துறையில் இருக்க வேண்டும் என்கிற முடிவை எடுத்தாள்.

“சரியான ஆட்களைக் கண்டுபிடித்தால்போதும் நாம் நினைத்த இடத்திற்குச் சென்று விடலாம்” இந்த வார்த்தைகளை நம்பியே பெங்களூருவிலிருந்து சென்னைக்கு வந்தவள் சில மாதங்களிலேயே அந்த சரியான ஆட்களை மாடலிங் துறையில் இருக்கும் பெண் கண்டே பிடிக்க முடியாது என்பதை உணர்ந்தாள். கல்லூரி காலத்திலேயே அவளின் நடவடிக்கைகள் முழுக்க மாறிக்கொண்டிருந்ததால் இயல்பாகவே பெற்றோர்களின் கவனிப்பிலிருந்து மெல்ல அறுபட்டு விழும் பட்டத்தைப்போல மெதுவான விலக்கத்தை உணர்ந்தாலும் ஒருகட்டத்தில் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டபோது மொத்தமாக வீட்டைவிட்டு வெளியேறினாள்.

 மேல்நிலை நடுத்தரக் குடும்பத்திலிருந்தவளுக்கு பெரிய தொகை ஒன்றையும் வங்கிக்கணக்கிற்கு மாற்றிக்கொடுத்து  “உன் விருப்பப்படி வாழ்றதுக்கும் நாங்க அவமானப்படக்கூடாதுங்கறதுக்கும் நீ எடுத்த முடிவு சரிதான்….தோணுச்சுனா சந்திப்போம்”  ஆங்கிலத்தில் தன் குடும்பத்தினரின் இறுதி வார்த்தைகளைப் பெற்றபடி அங்கிருந்து கிளம்பிவள் நகரின் மையப்பகுதியில் தங்கி தனக்கான வாய்ப்புகளைத் தேடினாள்.

 வேலைக்குச் செல்லவும் அவளின் தன்மான மனம் இடம் கொடுத்திருக்கவில்லை. வீட்டைவிட்டு வெளியேறிய சில மாதங்களிலேயே விடுதிலிருந்து மேஜெடிக் நகரில் தனியாக அவளின் முன்னாள் நண்பனுடன் தங்க ஆரம்பித்தாள். பிற்பாடு, தினம் குடித்துவிட்டு உடல்களை கூறாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது சலிப்பை ஏற்படுத்தியதால் பெங்களூருவிலிருந்து மும்பை செல்ல திட்டமிட்டவளுக்கு அதற்கான தேவை இருக்கவில்லை. உடலின் அழகுசார்ந்த பிரச்னைகளுக்காக தீர்வு கிடைந்திருந்தது. அதை தனக்குச் சாதகமாக பயன்படுத்த முயற்சி செய்தவளுக்கு தன் ஆறு அடிக்கு குறைவில்லாத  தேகத்தில் சிலைக்குச் செய்ததுபோன்ற கூறான கசங்காமல் இருக்கும் மார்புகளும், பின்பக்கமும் அவளைச் சுற்றிய ஆயிரம் கண்களின் இருப்பும் காரணமாக அமைந்திருந்தன. அவள் அதை ரசித்துக்கொண்டிருந்தாலும் தூசி இருப்பதாக தொடும் கைகளில் உக்கிரமடைந்திருந்த வெப்பத்தை உணர்ந்திருந்தாள். குறைவான வருமானத்தைக் காட்டிலும் ஒவ்வொரு நாளும் சந்திக்கிற முகங்களில் வெளிப்பட்ட கனவுகளில் அடுத்தது என்ன என்கிற ஆவலே அவளை இந்தத் துறைக்கு வரவழைத்திருந்தது. மாடலிங்கில்  முக்கிய ஆட்களை அறிமுகம் செய்துகொண்டு அடுத்தடுத்து விளம்பரங்கள் சினிமா என முன்னேறிச் சென்றுவிடுவதே இலக்கு என்கிறதை உறுதியாக எடுத்துக்கொண்டாள்.

 ஒருகட்டத்தில் பெங்களூருவின் அணைப்பும், அதன் வெளிச்சங்களும் மாடலிங்கில் இருப்பவர்களின் நேரத்தை முற்றாக அழித்துவிட்டு வேறு ஆளைத் தேடிச்சென்று விடுகிறதை உணர்ந்தபோது அங்கிருந்து கிளம்பி சென்னைக்கு வந்தாள். தட்டுத்தடுமாறி பழைய தொடர்புகளைப் பிடித்து அவர்கள் மூலமாகவே  சினிமாவிற்கு முயற்சிக்கும்போது  இவளின் திறமையைக் குறித்து யாருக்கும் கவலையில்லை என்பதையும் நேரடியாக  கேட்கப்படும்  ‘அட்ஜஸ்மென்ட்’கள் ஒவ்வொரு நாளும் இந்நகரத்தை விட்டு வெளியேறிவிடலாமென்பதை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தன.

அப்படியான முடிவுகளை முழு உறுதியில் எடுக்கும் போதெல்லாம் அதை தடுப்பதற்காகவே புதிதாக எதாவது வாய்ப்பு வரும் விசித்திரத்தையும் கவனித்தாள். அதிகமும் விளம்பரப் படங்கள் என்பதால் விதவிதமான உடைகளில் நிற்க வைத்து அழகை சோதனை செய்வதில் கிடைத்த மிதப்பு வேறெதிலும் இல்லை என ஷிவ்விடம் சொன்னபோது அவனும் அதை ஆமோதித்திருக்கிறான். இங்கு பணத்தைவிட புகழ் தருகிற இடம் மிக்கபெரியது என்ற எண்ணம் இருவருக்குள்ளும் நிறைந்திருந்தது. அதற்கான அனுபவங்கள் இருவரைச் சுற்றியிருந்தாலும் ஒருமுறை இன்ஸ்டாகிராமில் ரோஷினியைப் பின்தொடரும் அழகான யுவதி ஒருவள் நெருங்கி தன்னை அறிமுகப்படுத்தியதுடன் “ஆர் யூ மாடல் ரோஷினி”? எனக் கேட்டதும் இவள் தலையாட்டி புன்னகையை வெளிப்படுத்தினாள். எதிர்பாராத நேரத்தில் “மேம் ஒன் செல்ஃபி” என அவள் துள்ளலுடன் இவளை மேலும் நெருங்கியபோது அவளுக்குள் பொங்கிய புகழலை அன்றிரவின் தூக்கத்தை மூழ்கடித்தது.

அந்த போதைப்பொருள் கிடைத்தால் இங்கு அவமானப்படுத்தப்பட வேண்டிய ஆட்களின் முகங்களை நினைத்துக்கொள்வாள். தான் நடிக்கப்போகும் படங்களைக் குறித்த கற்பனையில் மிதந்திருந்தவளுக்கு இவன் பெரிய நம்பிக்கைகளைக் கொடுக்க தவறியதாக அவள் நினைக்கும்போதெல்லாம் வாய்ப்புகள் வருகிறதா என கேட்டு வைப்பது அந்தநேரத்தில் சிறிய விடுதலை உணர்ச்சியை அளித்தது.

தொடர்ந்து ஆண்டு கணக்கில் எங்கு சென்றாலும் இவனையும் உடன் அழைத்துச் செல்வதில் பிற ஆண்களின் கவனமும், நெருக்கமும் இவளை வந்தடையாமல் தவிர்ப்பதால் நடிப்பிற்கான வாய்ப்புகள் பறிபோவதற்குக் காரணமாக அமைந்திருந்தன. இவளுடன் தொடர்பிலிருந்த சில பிம்பிள்ஸ் நிறைந்த ரஸ்க் மூஞ்சிகள் கூட   “அன்னைக்கு கோயில் வாசல்ல மனச மட்டுமில்ல இந்த உடம்பையும் உனக்கு கொடுக்க முடிவு செஞ்சுட்டேன்” என திரைப்படங்களில் காதல் வசனம் பேசிவிட்டனர். ஹீரோவுக்கு தங்கையாகவும், அண்ணியாகவும் கூட வந்தவரை லாபக்கணக்கில் மாடல்கள் தலைகளைக் காட்டிவிட்டனர்.

இவளும் அப்படி இரண்டு படங்களில் துணைக் கதாப்பாத்திரத்திலும் ஒன்றில் காவலதிகாரியாகவும் நடித்தாள். அதுவும் நிதிப்பிரச்னையில் இன்றுவரை வெளியாகவில்லை. ஆனால், கேட்ட பணத்தை சரியாக கொடுத்த பின்பும் வேறு எதையும் எதிர்பார்த்து இவளிடம்  நெருங்காத நல்ல தயாரிப்பாளர்கள்.

ஷிவ்விடம் முதல்முறையாக  அணுகிப் பேசும்போது சிகரெட் பற்றவைத்த இடைவெளியில் அவன் உடற்கட்டும் உதட்டை அழுத்தி பதிந்தால் சிவக்கும் கன்னங்களையும் இவளால் எப்போதும் மறக்கமுடியா சித்திரமாக இருந்தது. நேர்த்தியாக அணியப்பட்ட பட்டையான வளைவு கொண்ட ஜிகினா டீசர்டும் அதன்மேல் நீலநிற பனியன் ஜர்கினும் அவனை அத்தனை இளம் ஆண்களுக்கு மத்தியிலும் தனியாகப் பிரித்துக்காட்டியது.

அவனாகவே வயதைச் சொன்னபோதுதான் தன்னைவிட இரண்டு வயது இளையவன் என்கிறதை அறிந்துகொண்டாள். பேச்சின் குறுக்கே இவனுடைய அழகு காரணமாகவே பிரபல தனியார் தொலைக்காட்சி சேனலில் நடத்தும் போட்டியில் பங்கேற்க அழைப்பு வந்ததையும் அப்படியான அறிய வாய்ப்புகள் எல்லாருக்கும் வருவதில்லையென சொல்லிப் புரிய வைத்தாலும் அனுபவம் இல்லாமல் முகத்தைக் கேமராவில் அத்தனை மணிநேரம் காட்டி நடிப்பதில் தனக்கிருந்த  பதற்றம் குறித்தும் அவளிடம் கூறினான்.

பின்னாட்களில் அவளுக்கு அவன் மேல் சில நம்பிக்கைகள் இருந்ததும் பழக்கப் பழக அதன் தீவிரங்கள் குறைவதுமாக இருந்ததற்குக் காரணம் இவளை விட இரண்டு வயது சிறியவனாக இருந்தாலும் இவனிடம் சினிமா குறித்த பதற்றமும் அது உருவாக்கி தருகிற கொண்டாட்டத்தின் இன்னொரு வாசலை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற புதிய பறவைகளுக்கான முகப்பொலிவும் இல்லாததை நினைத்து முதலில் ஆச்சரியப்பட்டாலும் பின்னாட்களில் அவன் மீதான பார்வைகள் மாறியதும் அதன் காரணமாகாத்தான்.

தரை அசைவது போலிருந்தது.  அரை பின்புறத்திற்கு கீழறங்கிய ஜீன்ஸை மேல் இழுப்பதற்காக நின்றவனின் கால்கள்  அலைந்தன. திரும்பி இருக்கையை கவனித்தபோது வெகு தூரத்தில் கைவிடப்பட்ட மதுபோத்தலின் திருகியை கவிழ்த்துப்போட்டது போலிருந்தது.

தடுமாறியதில் பாதி அரித்தும் செரிக்காமலிருந்த பழத்துண்டின் சிறு பகுதி தொண்டையின் எரிச்சலில் நாக்கில் வந்தமர்ந்தது. ஓரமாக துப்பியபடியே முன்னேறினான். பின்னாலிருந்து சிவந்த செவிமடல்களில்     “ஆஃப்டர் ஆபிஸ்” இசை மெல்ல ஒலித்துக்கொடுக்க அந்த இடம் இவனோடு சேர்ந்து கட்டுப்பாடில்லாமல் அசைவதாகத் தோன்றியது.

இதோடு இத்துறைக்கு இனி வர வேண்டாம் என நினைத்தாலும் இவனின் பழக்கங்களும், சினிமாவிற்கான தொடர்புகளும் புதிய எல்லையை அடைந்திருந்தது. அத்துறை சார்ந்த  கற்பனைகளும் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் சிந்திப்பதைத் தவிர வேறொன்றும் நினைவிற்கு தட்டுபடாத தூரத்தில் நின்று கொண்டன.

இங்கு அவன் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவிற்கான ஆள்களும்  வந்துகொண்டே இருந்தனர்.

“ரைஸ் யுவர் கிளாஸ்” பாடலின் துண்டாக்கப்பட்ட இசைக்கோர்வைகளைக் கேட்டபடியே பால்கனி வழியாக விடியக்காத்திருக்க கடைசித் துளி இரவின் சாயமற்ற கோலத்தைப் பார்த்ததும் வெளிச்சம் வர சில மணி நேரங்களே இருப்பதை  புரிந்துகொண்டான்.

மாடியின் தடுப்புச்சுவருக்கு அருகில் கிடத்தியிருந்த மற்றொரு குஷன் சோபாவில் சம்பந்தமில்லாமல் அமர்ந்து எழுந்தான். உடல் ரப்பர் பென்சிலைப்போல ஆட்டம் காண பக்கத்து மேஜைகளைப் பிடித்துக்கொண்டு கழிவறை நோக்கி நடந்தபடி இடது கை மணிக்கட்டில் சதையோடு ஒட்டியிருந்த ஸ்மார்ட்வாட்ச்சை தட்டிவிட்டான்.  மணி  அதிகாலை மூன்றை நெருங்கியிருந்தது.

யாரோ எடுத்துவைத்திருந்த வாந்தியின் ஓரத்தில் கால்வைத்தான். சாக்ஸ் மட்டும் அணிந்திருந்த காலுக்கு கெட்டித்தயிரில் விரல்விடுவதுபோல் இருந்தது. மெல்ல கழிப்பறையின் முகப்பிலிருந்த கண்ணாடியில் முகத்தைப் தடவிப்பார்த்தான். தூக்கிய நிலையில் நெருப்பு வைத்து அலங்கரிக்கப்பட்ட கேசத்தை முன் நெற்றியிலிருந்து பிடரி வரை இழுத்தவிட்டு இறுதியில் சொரிந்துவிட்டான். கழிப்பறை கதவைத் திறந்து மூடப்பட்டிருந்த பிளாஸ்டிக் மறைப்பானைத் தூக்கி அமர்ந்தபோது உருவான வெக்கையில் வெளிப்பட்ட வியர்வையில் உடலில் மதுவைத் தவிர வேறெதும் இல்லை. முகத்தைச் சுளித்துபடி நினைவுகளை கோர்வையாக்கி மீண்டும் ஒருமுறை ஓட்டிப்பார்த்தான்.

 மூளை அசைய மறுக்கவே  ‘ஃப்க்’ என முனகி தண்ணீரை செலுத்திவிட்டு கழுவ மறந்து எழுந்தவன் மீண்டும் எதோ நினைப்பில் அதே இடத்தில் அமர்ந்தான். செல்போனை எடுத்து ஜிம்மி, பிந்துவின் எண்ணை அழைத்து அப்படியே அணைத்து வைத்ததும் தூக்கி எங்காவது எரிந்துவிட்டு ஊருக்குச் சென்று நிம்மதியாக பிழைக்கலாம் என்ற சிந்தனை ஊர்ந்தபோது தன்னை அறிமுகப்படுத்தி மாடலாக மேடைகளில் ஏற்றிவிட்ட ஜிம்மியின் முகம் நினைவிற்கு வந்தது. அவன் படுக்காத சில மாடல்களில் தானும் ஒருத்தன் என்றாலும் அப்படியான குணத்தைக் கொண்டவனை நெருங்கிச் செல்வதில் பெரிய தயக்கமிருந்தது.  எப்போதும்போல சில நொடிகளில் மீண்டும் ஜிம்மியின் நன்கு மழிக்கப்பட்ட தாடியும் மீசையும் இரண்டு பக்கமும் துளி அளவேயான முடியுடன் நடுவில் தூக்கிவாரி சீவப்பட்ட தலையுடன் இவன் தொடைகளை தடவும் அவனுடைய பிம்பமே திரும்பத் திரும்ப அடங்கா வனத்தீயின் புகையைப்போல  இந்த அறையில் வேறுவேறு உருவங்களில்  இவனை  தொடர்ந்து வருவதாகக் கற்பனை செய்துகொண்டான்.

அலுத்துப்போன அந்த இச்சைகளை சிலுப்பிவிட யாராவது நெருங்குவதற்கு முன்பே ஆடைகளைக் கலைந்து தொட வரும் விரல்களில் ஆணுறையை மாட்டிவிட வேண்டும் என்பதை நினைத்துச் சிரித்தபோது தூக்கக் கலக்கத்தில் காய்ந்த உதடுகள் மெல்ல கிழிந்ததில் வலி பொறுக்காமல் நாவை கீழுதட்டில் அமர்த்தி எச்சிலை ஊறச் செய்து எரிச்சலைக் குறைத்ததும் ரோஷினுடனான முதல் சந்திப்பும் அந்த இரவில் அடைந்த பரபரப்பும் தொடர்பில்லாமல் கடந்து சென்றது.

                                                         3

ஜிம்மியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள இவனுக்கும் அழைப்பு வந்தது. செல்லலாமா வேண்டாமா என்கிற கேள்விகள் எப்போதும் இருந்ததில்லை. உடனே மாலை கிளம்புவதற்கு உண்டான நல்ல ஆடையைத் தேர்வு செய்து எடுத்து அதை மட்டும் துவைத்து காயப்போட்டான். தி.நகரின் பிரபல மதுபான கூடத்தில் விழா திட்டமிடப்பட்டிருந்தது. மாடலிங்கில் இருக்கும் நண்பர்கள் விழாவை ஒருங்கிணைந்திருப்பதால் இன்னொரு முறை மீண்டும் வாய்ப்பு கிடைப்பதற்கான கூடுகையாகவும் இருக்கும் என்கிற எண்ணமே அவனுள் நிறைந்திருந்தது. விழாவில் கலந்துகொள்ள வருபவர்களின்  குறிப்புகளில் அவனால் ஊகிக்க முடிந்திருந்த ஆட்களுடன் சில காஸ்டிங் பயிற்றுநர்களின் வருகையும்  குறுஞ்செய்தியில் ஆச்சரிய ஸ்மைலிகளுடன் இடம்பெற்றிருந்ததில் தெரிந்த முகங்கள் உள்ளதா என பார்த்தான். அதில் பலருடன் இணக்கமான நட்பிருந்ததற்கு ஜிம்மியின் தொடர்பே காரணம்.

 அதிகமாக குடிக்கக் கூடாதில் தொடங்கி தாமாக யாரையும் தொந்தரவு செய்து பெயரைக் கெடுத்துக்கொள்ளக் கூடாது வரை சில நிபந்தனைகளை எடுத்துக்கொண்டான். முக்கியமாக கடந்த முறை ஜிம்மியுடனான சண்டையில் அவனுடைய வெறுப்பைப் பெற்றதால் மேற்கொண்டு அந்தபின் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவும், மேடையேறவும் எந்த வாய்ப்புகளும் வராதது ஷிவிற்கு மிகுந்த ஏமாற்றத்தை தந்திருந்தது. நண்பர்கள் சமரசம் செய்யக்கூட முயற்சி செய்யாததை இவன் புரிந்துகொண்டு மீண்டும் மன்னிப்புக் கேட்டு நிற்க வேண்டுமா என்கிறதை நினைத்தாலும் வேறு யாரும் வாய்ப்புகள் தராததும் இவனைக் கண்டதும் முகத்தை இறுக்கமாக மாற்றுவதையும் கவனித்த பின்  சொற்களைப் பொறுக்க முடியாமல் மௌனமாக எழுந்து சென்றிருக்கிறான். அறைக்கு வந்து விடியவிடியக் குடித்து அழுது புலம்பியவன் இனி யாரையும் பகைத்துக்கொள்ள கூடாது என்பதிலிருந்து நழுவிவிடக்கூடாது என தனக்கே உறுதியளித்துக்கொண்டான்.

ஜிம்மியின் அலுவலகம் தூக்கிவீசியதுபோல் மற்ற சின்ன மாடல்களும் இவனது நட்பை மெல்ல குறைத்துக்கொண்டது ஒருவகையில் அவர்களின் தொழிலைக் காப்பாற்றிக்கொள்ளத்தான் என்பதை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு இந்தத் துறை இவனைப் பழக்கியிருந்தது. குடியில் மாடலிங்கில் புகழில் இருப்பவர்களின் தனிப்பட்ட அந்தரங்கத்தை மேஜைக்கு ஏற்றிவிடும்போது எழுகிற ஆரவாரமான கீழ்மைகளில் இருவருக்கும் பொதுவான நண்பர்களே ஜிம்மி செய்தது தவறுதான் என்பதை ஒப்புக்கொண்டது அந்தநேர மனத்தொந்தரவுகளிருந்து மீட்கச் செய்திருந்தாலும் இனி ஒருபோதும் இருவருக்குள்ளும் சந்திப்பு நிகழாமல் போய் விடுமோ என பயந்துகொண்டிருந்தவனுக்கு இதொரு வாய்ப்பாக சிக்கியிருந்தது.

செல்ல வேண்டிய நேரத்திற்கு முன்பாகவே முகத்தைக் காட்டி நின்றால் சரியாக இருக்காது. அதற்காகவே இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பார் அமைந்திருந்த பகுதியில் காத்திருந்தவன் வாசலில் நின்றபோது பாரின் வெளித்தோற்றம் நினைவுகளில் பதியாத வேறு விதமான விளக்கொளிகளை தரையில் படர விட்டபட்டு மிளிரச் செய்ததை விசித்திரமாகப் பார்த்தான். உள்ளே செல்லலாமா என்கிற எண்ணம் மீண்டும் ஒருமுறை வந்ததைப் பொருட்படுத்தாமல் நுழைவுப்பகுதியிலிருந்த லிஃப்டில் ஏறி மூன்றாம் தளத்தில் அமைக்கப்பட்டிருந்த விஐபிகளுக்காக ஒதுக்கப்பட்ட கூடத்திற்குச் சென்றதும்  விலாசமான நீண்ட அறையில் புதுமையாக ஒரே லயிப்பில் காதுகளைத் தொந்தரவு செய்யாமல் கசிந்த இசை பதற்றத்தைத் தணித்தது.

தூரத்தில் மதுகோப்பைகள் அடுக்கப்பட்டிருந்த மேஜை பக்கத்தில் சுழலும் சாய்வற்ற நாற்காலியில் அரை வட்டமாக சுற்றிக்கொண்டிருந்த ஜிம்மியின் முதுகுப்புறத்தைக் கவனித்தா. அருகே, இருந்த இன்னொரு மாடல் ‘ஷிவ்’ எனக் குரல் எடுத்ததும் ஜிம்மி இவனைப் பார்த்து உணர்ச்சிகளற்ற முகக்கோணல்களை வெளிப்படுத்தினாலும் ‘கம் டா’ என்கிற  குரலில் பழைய கோபம் தணிந்திருப்பதை இவனால் புரிந்துகொள்ள முடிந்தது. “சாரி கோச். திஸ் ஃபார் யூ” என்றபடி ஸ்மார்ட்வாட்ச் ஒன்றை பரிசளித்து தன் வாழ்த்துக்களைப் பரிமாறியதும் ஜிம்மி இருக்கையிலிருந்து எழுந்து ஷிவ் கன்னத்தில் அழுத்தி முத்தம் வைத்து “தாக்ஸ் டியர்” என்றான்.

நலம் விசாரித்துவிட்டு அருகே இருந்த பிரபல காஷ்டியூம் டிசைனரிடம் அறிமுகப்படுத்தியது புதிராக இருந்தாலும் அந்த நேரத்தில் ஆசுவாசமாக உணர்ந்தான். மேலே என்ன பேசுவது எதைச் சொல்வது அன்று நடந்த அசிங்கமான செயலுக்கு கழுத்தைப் பிடித்து ஜிம்மி அவனை அறையிலிருந்து வெளியேற்றி உடனிருந்த இன்னொருவனையும் கையில் வசப்பட்ட ஏசி ரிமோர்ட்டை விட்டெறிந்தது இவனுக்கு பல நாள்கள் உள்ளே அரித்துக்கொண்டிருந்தது.

திருச்சியிலிருந்து வந்த கல்லூரி மாணவனிடம் வலுக்கட்டாயமாக பேசி இந்திய அழகனாக மாற்றுகிறேன் என ஜிம்மி சொன்னபோதே அருகிலிருந்த இவனுக்கு உள்ளுக்குள் எதோ திரண்டு வந்தாலும் கட்டழகான அவன் உடலை ரசிக்காமல் இருக்கவே முடியாது. அவனை அங்கிருந்து செல்லும்படி இவனால் வாயெடுத்து சொல்லவும் முடியாத நிலையில் ஜிம்மி அந்த பையனின் இடுப்பிற்குக் கிழே கை வைத்திருந்ததை அதிர்ச்சியுடன் எதிர்கொண்டான். ஷிவ்விற்கு இருந்த பதற்றத்தின் வீச்சுகூட அந்த அழகான தேகத்துடன் நின்றிருந்தவனின் முகத்தில் தெரியாதது வியப்பை தந்தது. வாய்ப்பு தருகிறேன் பெரிய புகழில் உன்னை திளைக்க வைக்கிறேன் என்கிற வார்த்தைகளுக்கு மயங்காத வெகுசிலரும் ஒருகட்டத்தில் அதற்கு ஒப்புக்கொடுக்க முன்வருவதை இவன் அனுபவத்தில் கண்டிருக்கிறான். அந்த வீச்சு வலையில் இவன் சிக்கிய தருணங்கள் இருந்தாலும் கொஞ்ச நாட்களிலேயே இந்த சூது புரிந்துகொண்டு உடலை மட்டுமே பயன்படுத்தும் மாதிரியான மாடல் பயிற்றுநர்களிடமிருந்து விலக்கத்தை உருவாக்கினான்.

அன்றைய மாலையிலேயே கஞ்சாவின் நெடியில் கிடந்த ஜிம்மிக்கு அப்பையனின் வருகையில் ஆழத்தில் கிடந்த மிருகத்தைக் கிளப்பிவிட்டது. அடுத்தநாள் மாலையில் நடக்கவிருந்த பிரபல செல்போன் நிறுவனத்தின் புதிய போன் அறிமுக நிகழ்ச்சியில் மாடலிங் வேலைக்காக போனை காட்சிப்படுத்த அழைக்கப்பட்டவர்களுக்கு எப்படி பொருளை ஏந்தி நடந்துவர வேண்டும் என்பதை ஷிவ் சொல்லிக்கொடுத்தபோது அந்த பையனை மேல்மாடி அறைக்கு அழைத்துச் சென்ற ஜிம்மியைத் தொடர்புகொள்ள மறுநாள் வரை காத்திருந்தான். எதிர்பாராத நேரத்தில் அன்று நடக்க இருந்த ரேம்ப்வாக்கில் கலந்துகொள்ள அந்த பையனுடன் ஜிம்மி தன் காரில் வந்திறங்கினான்.

 கடந்த மாலையில் இருந்த உருவத்திற்கும் இப்போதைய தோற்றத்திற்கும் அப்பையனிடம் ஆடை, ஷு, மேக்கப் என வேறொரு ஆளாக மாறியிருந்தான். அந்த அட்டகாசமான முகச்சாயங்களை போட்டுவிட ஜிம்மியைவிட நேர்த்தியான ஆள் வேறில்லை. அப்பையனைக் கண்டபோது இவன் மனதில் ஆயுஷ்மான் குரானாவின் சித்திரம் மட்டுமே எழுந்தது. அருகே வந்த பையன் “சித்திக்” என  இவனிடம் அறிமுகம் செய்துகொண்டான். அதுவரை எந்த பிரச்னையும் வரவில்லை. பின்னொரு நாளில் ஆடைகளுக்கான போட்டோஷுட் மாடலாக நடிக்க  வந்தவனின் முகம் வெளிறிக் கிடந்ததைக் கண்ட ஷிவ் அருகே சென்று என்னவென விசாரித்தான். அப்பையனின் சாந்தமான முகவெட்டு நெருக்கத்தைக் கொடுத்தது. சித்திக் நடந்ததைச் சொன்னதும் இவனால் நம்ப முடியவில்லை. அழுதுகொண்டே வேதனையான அந்த இரவில் நடந்ததை ஒன்றுவிடாமல் ச்சொன்னஹ்ச்கண்களைக் கசக்கினான். சொன்னதுடன்    “நான் வேணும்னே பண்ல புரோ.  சின்ன வயசுலேயே என்னைய நிறைய டேஸ்ட் பண்ணிட்டானுங்க இப்ப இது அடிக்ட் ஆயிருச்சு. அதனாலதான், இந்தாளுகூட இருந்தன். ஆனா இதை விடீயோ எடுத்து மிரட்டுவான்னு எதிர்பார்க்கல்ல” என்றவனிடன் எந்த ஆறுதலையும் இவனால் சொல்ல முடியவில்லை. ஷிவ் இந்தக் கதைகளையெல்லாம் கேட்டு சலித்துப் போயிருந்தான். நிதானமற்ற உடல் ஓய்வைத் தேடிச் செல்வதுபோல் கால்கள் அவனுக்கு போதையில் மரத்துக்கிடந்தது.  இவனுக்கு முன்னாடி எத்தனை பேரை ஜிம்மி கதறவைத்திருப்பான்? நினைக்க நினைக்க சித்திக்கின் வார்த்தைகள் பெருங்கோபத்தை உண்டாக்கியது. இந்த வட்டத்திற்குள் வந்தவர்களுக்கு இதுமாதிரியாக அத்துமீறல்கள் வெகு சாதாரணம் என்பதை நன்கு அறிந்துவைத்திருந்தவனிடமே சொல்லி அழுதவனைப் பார்த்து மெல்லச் சிரித்தாலும்  உள்ளே எரிந்துகொண்டிருக்கும் பழைய காயத்திற்கு இந்த விசயத்தில் அவரசப்படக்கூடாது என தெரிந்தும் அடுத்த மாலையில் ஜிம்மியைச் சந்திக்கச் சென்றான்.

 எடுத்ததும் எந்த வார்த்தையை விட்டுவிடக்கூடாது என்பதில் ஒரு தெளிவு இருவருவரிடமும் இருந்தது. இரண்டு நிமிட பேச்சில் விழுந்த இடைவெளியில் சித்திக் வீடியோவை அழிக்கச் சொன்னதும் ஜிம்மி இருவரையும் மாறிமாறித் தாக்கினான். வெளியே சொன்னதும் இல்லாமல் இன்னொருவனைக் துணைக்கு கூட்டிவந்து கேட்டது அவனுக்கு மேலும் ஆத்திரத்தை வரவழைத்திருந்ததில் ஆங்கிலமும் தமிழுமாக மோசமான வார்த்தைகள் இருவரையும் துளைத்துக்கொண்டிருந்தது. ஒருகட்டத்தில் இனி இந்தப்பக்கமே வரக்கூடாது என்றபடி வெளியே தள்ளி போனை எடுத்து யாருக்கோ அழைத்த உருவம்தான் ஷிவ்வின் கண்களில் இறுதியாக படிந்திருந்த ஜிம்மியின் முகம்.

எல்லாம் நடத்த முடிந்தபிறகு ஷிவ்வை யாரும் அடுத்த வேலைகளுக்கு அழைக்காததில் ஆரம்பத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்றிருந்தவனுக்கு ஒருகட்டத்தில் ஜிம்மியைப் பகைத்துக்கொண்டால் இத்துறையில் தாக்குப்பிடிப்பது சிரமம் என்பது புரிய ஆரம்பித்தது.

நடந்த சம்பவங்களை மறந்து நீண்ட நாள்களுக்குப் பிறகு மனதில் எதையும் வைத்துக்கொள்ளாமல் ஜிம்மி இவனை அணுகியவிதமும் பழைய ஆத்திரங்களிலிருந்து விடுவித்தது. இந்த பிறந்தநாள் இரவை பெருங்கூட்டத்துடன் கழிக்க நேரிடும் என்றிருந்தவனுக்கு இருபது பேருக்கு மேல் இல்லாதது ஏமாற்றத்தை அளித்தபோது சிகரெட் அடிக்க இன்னொரு மேஜையிலிருந்து லைட்டரின்  பிடியை அழுத்திக்கொண்டிருந்தபோதுதான் ரோஷினியைப் பார்த்தான். அரை மார்பை மறைக்கும் படியாக கைகள் இல்லாத வெண்ணிற மேலாடையையும் தொடையளவான புள்ளிகள் நிறைந்த துளையுள்ள ஸ்கட்டையும் அணிந்திருந்தவளின் முகம் பார்த்த கணத்திலேயே சின்ன அதிர்ச்சியை அளித்தது. அதைவிட அவள் இன்னொருத்தியின் வாயில் புகையை விட்டது இவனுக்கு சிரிப்பை வரவழைத்தது.

அவளே பின்னிரவில் இவனிடம் வந்து பேச்சுகொடுப்பாள் என்பதை ஷிவ் எதிர்பார்த்திருக்கவில்லை. “யூ ஹாவ் சிகரெட்ஸ்?”  தள்ளாட்டத்துடன் இவன் செவிகளில் சொற்கள் இறங்கியதும் எடுத்துக் கொடுத்து பேச்சைத் துவங்கி வைத்தான். அவள் பயன்படுத்தும் மதுவைத் தவிர்த்து வேறு எதையும் இதுவரை முயன்றுகூட பார்த்ததில்லை என்பது இவனுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இவனிடமிருந்த மதுவின் பெயரைக் கேட்டு தெரிந்து இதனுடன் வேறு எதையாவது கலந்து  குடித்தால் சீக்கிரமாக பாட்டரி வீக் ஆகும் என்றவளின் முகத்தில் வெளியான வெடிச் சிரிப்புள்  இவனுக்கு ஆழத்தில் சீண்டியிருந்தாலும் தமிழ் முகம் பேசக்கூடிய வார்த்தைகளை உடையாமல் வெளிப்படுத்தியதை ரசித்தான்.

தோற்றம் குறித்த கேலியால் சினிமாவில் முயற்சி செய்துகொண்டிருப்பவர்களுக்கு ஒரு கட்டத்தில் அவமானத்திற்காக வெளிப்படும் முகப்பாவம் இயல்பாகவே இவனிடம் வெளிப்பட்டதும் பேச்சை மாற்றினாள். மெல்லிய வாசனைகளால் பரவியிருந்த அறையில் வீசிய காற்றால் மேலும் மணம் நெடியாக மூக்குகளைத் துளைத்தது. பால்கனிக்கு பக்கத்தில் இவனை  அழைத்துச் சென்று லைட்டரின் விசையை இரண்டுமுறை அழுத்தியதும் பற்றிக்கொண்ட தீயின் முனையில் சிகரெட்டை மீண்டும் பற்றவைத்து ஆழமாக இழுத்து வெளியே விட்டப்படி இவனிடம் நீட்டினாள். உரிமைகள் தொடங்க ஆரம்பித்த கணம் என்பதால் மறுக்காமல் வாங்கி நுனியில் படிந்திருந்த சாம்பலை கட்டைவிரல் பக்கத்தில் தட்டிவிட்டி இரண்டு முறை புகைத்தபின் அவளிடம் தந்தான்.

பேச்சுகள் நீடித்தது. எல்லாவற்றையும்விட மாடலிங் துறையில் இருந்தால் சினிமாவில் அதிகபட்சம்  நாலு படங்களில் தலையைக் காட்டலாம். ஹீரோயின் ஆக வேண்டும் என்றால் தலைக்குப் பதிலாக வேறு ஒன்றைக் காட்ட வேண்டும் என்பதை இத்துறைக்கு வந்த சில வாரங்களிலேயே புரிந்துகொண்டதாகவும் எல்லாருக்கும் இப்படித்தான் நடக்கும் என்பதைவிட பெரும்பான்மைக்கு இதுதான் நிலையென ஷிவ்விடம் சொன்னபோது அவன் இவளின் நம்பிக்கை உடைக்க விரும்பாதவனாக நெடிய மூச்சுடன் தனியா முயற்சி செய்தா என்ன? என்றான்.

“இந்த பீல்டுக்கு வந்து கிட்டத்தட்ட அஞ்சு வருசம் ஆச்சு, கொஞ்ச நாள் தனியாதான் வாய்ப்பு தேடி அலைஞ்சேன், உண்மையைச் சொன்னா பத்துக்கு எட்டு பேர் போன் நம்பர் கேக்கற மாதிரி பாடியை கேக்கறான்…” என்றவள் எஸ்ஸி லைட்ஸ் சிகரெட்டைப் பற்றவைத்தபடி “இங்க இருக்கறதுல ஒரு பெனிஃபிட் இருக்கு ஷிவ். தினமும் இந்தமாதிரி ஹைகிளாஸ் பாருக்கு வர்றவன் எல்லாம் பெரிய ஆளுங்க, முக்கியமான இயக்குநர்கள்கூட அடிக்கடி இங்க பாத்துருக்கேன். சில நல்ல ஆர்ட் உள்ள ஆளுங்களும் வருவாங்க. அவங்க மூஞ்சில பட்டடு  சின்ன கவனம் கிடைச்சாக்கூடபோதும். எல்லா வாய்ப்புக்கான முயற்சி மட்டும்தான்னு சொல்ல மாட்டேன். இந்த சூழல் தேவை. இப்படியான எலைட் வாழ்க்கையை நாம் சம்பாதிச்சு வாழ முடியாது” என்றாள். சிகரெட் விரல்கள் ஆஸ்டிரேவை தேடியபோது ஷிவ் பக்கத்து மேஜையிலிருந்ததை எடுத்து அவள் அருகே வைத்தான்.

அவனுக்கு ஒரு பெண்ணிடம் இருக்கும் நளினம் இவளிடமும் இல்லாததும் பேச்சில் ஒவ்வொரு வார்த்தைகளும் நுங்கின் உள்சதையின் மென்மையைக் கொண்டிருப்பதையும் எண்ணி வியந்தான். சில இடங்களில் அவளால் சரியாக தமிழை உச்சரிக்க முடியாதபோதே இவன் அவளுடைய பூர்விகத் தகவலைக் கேட்டான்.

பார் முழுக்க வண்ண விளக்கொளிகள் நெளிந்தபடி இருந்தது. தூரத்து மூளையில் இசைக்கோப்புகளை ‘டிஜே’ ஒலிக்கச் செய்தது அந்த சூழலுக்கு ஒன்றச் செய்வதாக இருந்தாலும் ரோஷினியின் மகிழ்ச்சி மனதிலிருந்து வழுக்கிச் சென்றது. திடீரென இவர்கள் அமர்ந்திருந்த மாடிக்கு பௌன்சர்களுடன் இளம் நடிகர் வருவதைக் கவனித்தான் ஷிவ். இவர்களைக் கடக்கும்போது ரோஷினியைப் பார்த்துக் கையை அசைத்து அவன் இருக்கைக்குச் சென்று அமர்ந்தான்.

“யு நௌ ஹிம்?” அந்த வார்த்தைகளில் ஷிவ்விடம் ஓர் ஆச்சரியம் ஒளிந்திருந்ததை கண்டவள்  “இதுவும் ஒரு பழைய மாடல்தான், நல்ல ஃபிசிக் இவனுக்கு. ஜிம்மியோட ஆள்தான். ரெண்டு ஜட்டி விளம்பரத்துல அப்றம் ஜிம் ப்ரோடக்ட்ஸ் ஆட்ல மூஞ்சியைக் காட்டினான். அப்படி இப்டின்னு எதோ பண்ணி ஹீரோவோட தம்பியா மூணு படம். இப்ப மார்க்கெட் உள்ள ஹீரோ” என்றாள்.

அவனுடைய மிடுக்கான உடல்மொழியின் எடையிலும் முகவெட்டிலும் தன்னைப் பொருத்திக்கொண்ட ஷிவ் தான் அடையப்போகும் புகழ் குறித்த கற்பனைகளில் இருந்ததைக் கண்ட ரோஷினி “இங்கபாரு, நீ இந்த உலகத்துக்கு புதுசுன்னு தெரியும். முடிஞ்சவரை சில விசயங்களுக்கு வளைஞ்சு கொடு. ஆனா, கேவலமா எறங்கிப் போயிராத…” என்றவள் கொஞ்சம் அமைதியானாள். இருவருக்குள்ளும் உருவான  இடைவெளியை உடைத்து சினிமாவிற்கு வருவதற்கு முன் சந்தித்த நெருக்கடியிலிருந்து மீண்டு தற்போது நொந்துகொண்டிருப்பது வரை தயங்காமல் கூறினாள். முழுபோதையில் உளறுகிறவளின் சொற்களில் இருந்த இழுவைத் தனத்தை ஷிவ் ரசித்தான். அணிந்திருந்த இரண்டு பனியன்களை தாண்டியும் குளிர் உள்ளே பரவியதால் அங்கிருந்து அவளின் கையைப் பிடித்து சோபா இருக்கையில் அமரவைத்ததும் இவனுக்காக ஸ்பெஷல் காக்டெயில் சொல்லி தன் கணக்கில் குறித்துக்கொள்ளச் சொன்னாள்.

அந்த வாரத்தின் இறுதிநாளில் இதே பாரில் இருவரும் சந்திப்பதாக முடிவு செய்து கொண்டு ரோஷினி கிளம்பியதும் இவனுக்கு தொற்றிய பதற்றம் விசித்திரமாக இருந்தது. தங்கியிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் சினிமாவில் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் என்றதும் தானாகவே இன்ஸ்டாகிராமில் ஆடிப்பாடிய விடியோவைக் காட்டிய இவளைவிட எத்தனையோ பேரழகிகளை சந்தித்திருந்தாலும் இவளின் அருகாமையில் ஒன்றை இழந்ததை அந்தபோதையிலும் உணரமுடிந்தது. லாவகமாக காக்டெயில் மதுவை இவளின் சுவைக்கு ஏற்ப கலக்கச் சொன்னபோதும் குடிக்க அத்தனை வகை மதுவும் நிறைந்திருந்த இடத்தில் நிதானமாக பின்க் ஓட்காவைக் குடித்துக் கொண்டிருந்ததையையும் தொந்தரவு செய்யும்  வார்த்தைகளை வீசாமல் அருகிலிருந்து ரசித்தான். கைகளைத் தூக்கி கீழிறக்கிய ஒவ்வொரு முறையும் அவளின் அக்குள் பகுதிகளில் மடிந்திருந்த சாக்லேட் நிற சதை மடிப்பைப் பார்ப்பதை அவனால் கண்டுபிடித்துவிடுவாளோ என்கிற பயம் உறுத்தினாலும்  கண்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

அவளின் உடையாத தெளிவான ஆங்கிலப் பேச்சில் இவனுக்கு புரிகிற சொற்கள் அடங்கியிருந்ததில் கூடிவந்த நெருக்கத்தில் நீண்ட உரையாடல் நிகழாதது வருத்ததைத் உருவாக்கியிருந்தது. ஜிம்மி தூரத்தில் சில ஆண் மாடல்களுடன் அமர்ந்து பேசிய வார்த்தைகளை கேட்க நினைத்தவனுக்கு அதைமீறி அவளுடைய முகமே மீண்டும் உள்ளே தீயைக் கிளப்பியதும் அழைப்பு எண்ணையாவது வாங்கியிருக்கலாம் என்கிறதை யோசித்தவன் பேச்சின் இடையே  வெளிப்பட்ட அவளுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பெயரை நினைவில் வைத்திருந்தான். செல்போனை உயிர்பித்ததும் ரோஷ்னி ஆண்ட்ருஸ் என்ற ஐடியின் பெயரை மூன்று முறைக்கு மேல் சரியான ஆங்கில வார்த்தைகளில் தேடினான். டாட்டூவால் முதுகுப்புறத்தில் வரையப்பட்ட பாம்பின் உருவத்துவடன் ஒருபக்க முகத்தைக் காட்டிய முகப்புப்படத்தைக் கண்டு பரபரப்புடன் சொடுக்கி அவளின் உலகத்திற்குள் நுழைந்தான். மிகநேர்த்தியாக பராமரிக்கப்பட்டிருந்த அப்பக்கத்தில் ஐநூறுக்கும் மேற்பட்ட பதிவுகளில் உடலின் அங்கங்களை எடுப்பாகக் காட்டுகிற இறுக்கமான உடைகளில் மார்புகளும் கேள்விக்குறியைப் போன்ற  பின்புறமும் அதன் கச்சிதத்தின் தன்மையை முழுமையாக அடைந்திருந்தது.

 பெரும்பாலும் விதவிதமான ஆடைகளில் மாடலிங் நிகழ்ச்சிக்காக எடுக்கப்பட்டவைகளும் அதற்கென ஒய்யாரமாக அவள் மேடையில் இடுப்பில் கை வைத்து நின்றிருக்கும் பாவனைகளும், அதற்குப் பின் நண்பர்களுடன் இருந்த இரவுக் கொண்டாட்டங்களின் படங்களுமாக நிறைந்து கிடந்தன.

முழுபோதையில் ஊறிக்கிடந்த ரத்தம் படிந்த கண்களாக சிலவற்றை ஆசைக்கு ‘எடிட்’ செய்தும் பதிவு செய்திருந்ததைப் பார்த்தவனுக்கு பிந்து குழுவில் உள்ளவர்களிடம் அதிக தொடர்புகளை வைத்திருந்தது தெரிந்தது. ஜிம்மியுடன் இவள் இருந்த படத்திற்குக் கீழே ‘வித் மாஸ்டர்’ எனக் குறிப்பிட்டு இரண்டு நீல நிற லவ் சிம்பல்கள் இடம்பெற்றிருந்தது. தொடர்ந்து மேலிருந்து கீழே படங்களைப் உற்றுநோக்கியபோது  இவனுக்கு அறிமுகமாகியிருந்தவர்கள் சிலருடன் அவள் நின்றிருந்ததைப் பார்த்ததும் இத்தனை நாள் இவளைக் சந்திக்காமல் இருந்தது ஆச்சரியத்தை அளித்தது.

அவளை பல புகைப்படக்காரர்கள் படம் பிடித்ததை  குறிப்புகளில் புரிந்துகொண்டான். வெள்ளை வேஷ்டி சட்டையை உற்பத்தி செய்யும் பிரபல நிறுவனம் ஒன்றிற்கு ஆணாகவும் பெண்ணாவும் இவளே போஸ்கொடுத்த புகைப்படத்தைப் பார்த்தான். முறுக்கிவிட்ட மீசை முகத்திலிருந்த குழந்தைத் தனத்தை  ரசித்தபோது  குறியில் மெல்ல வேகமேறியது.

                                                                         4

வீட்டின் மேற்பக்கம் முழுவதுமாக பழைய ஓடுகளால் வேயப்பட்டிருந்தது. சில பகுதிகளில் கறுத்தும் இன்னும் சிலவை பச்சையம் ஏறியும் கிடந்தன. ஆனாலும், உறுதியாக இத்தனை ஆண்டுகள் தாக்குப்பிடித்திருந்ததால் இதுவரை மாற்றுவதற்கு உண்டான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தோட்டத்தையும் இந்த பழைய வீட்டையும் சேர்த்து விலை பேச வேண்டுமென்றால் கொஞ்சம் எடுப்பான தோற்றத்திற்கு அவற்றை கொண்டுவர வேண்டும் என்கிற எண்ணமிருந்தாலும் அதற்கான அவகாசத்தை உருவாக்கித்தர காலத்திற்கு நேரமில்லை. எல்லாமே வேகமாக நடந்து முடிந்தன.

 மாலை சாயத்தொடங்கியதும் தகவல் வீட்டைவிட்டு வெளியேறியதிலிருந்து கூட்டம் கூட்டமாக ஒப்பாரிக்குரல்கள் தோட்டத்தை நோக்கி  வந்துகொண்டிருந்தன.

பின்பக்கத்தில் நெருக்கமான தென்னை மரங்களின் வளர்ச்சியில் முன்பகுதியில் வீட்டிற்குள் எப்போதும் பரவியிருந்த இதத்தில் தரை முழுக்க உஷ்ணமில்லாமல் தணிந்திருதிருந்ததில்  பூசப்பட்ட தரையில் எப்போதும் குளிர்ச்சி இருந்தது. ஆள்கள் கூடக்கூட உள்ளிருந்த உடலை வெளியே எடுத்து பழைய இரும்புக்கட்டில் வேட்டியை விரித்து பன்னீரைத் தெளித்துவிட்டு உடலைக் கிடத்தினர். மாலைகளாக விழுந்து அவரை மூடாமல் இருக்கவும் பன்னீரைத் தெளித்து விடவும் சின்னு அருகே நின்று கொண்டான்.

மூத்த தாரத்தின் பிள்ளைகளுக்கு பாலன்தான் அழைத்து தகவல் சொல்ல வேண்டுமென்பதை நெருங்கிய சொந்தங்கள் சொன்னபோதும் அவனுக்கு அதில் துளியும் விருப்பம் கூடிவராத உறுதியைக் கண்டவர்கள் வேறொரு ஆளையாவது அனுப்பிவிடக் கேட்டதும் அதற்கும் அவன் தயங்கி நின்றான்.

“அப்டி விட்ர முடியுமா கண்ணு? ஒனக்கு இருக்கற உரிமையக்காட்டியும் அவனுக்குதான் அதிகமா கெடக்குது.. நாளப்பின்ன மனசங்கட்டம் வந்தா என்ன பண்றது? பளச யோசிக்காம ஒரு பேச்சுக்கு கூப்டு சாமி ..வந்தா வாரனுங்க இல்லியா கடமைக்குச் சொல்லியாச்சுன்னு  பேச்சு இருக்கும்…. இன்னி ங்கொப்பன யாரும் பாக்க முடியாது..அவனா வந்தா நல்லா இருக்குமா தங்கம்” இவன் காதுகளில் இதே சொற்கள் வேறுவேறு வகையில் விழுந்தது. ஆனாலும் இவனிடமிருந்த கோபங்களும் தயக்கங்களும் அவற்றை காதில் வாங்கவே வெறுப்பை காட்டின. சின்னுவைவிட்டே விசயத்தைச் சொல்ல சொன்னான்.

அழைப்பை எடுத்த எடுப்பிலேயே  “அவரா போனாரா இல்ல தாட்டிவிட்டிங்களாடா”? என்பதே பூபதியின் முதல் வார்த்தைகளாக இருந்தது.  பதிலைக்கூட கேட்காமல் அவன் இணைப்பைத் துண்டித்தான்.  “என்னங்க மாப்ள எதோ நம்ம கொன்னுபோட்ட மாதிரி சூர நாயம் பேசறாரு மச்சான்” அங்கலாய்த்தபடி செல்போனை பாலனிடம் கொடுத்துவிட்டு ஆக வேண்டிய வேலைகளைப் பார்க்க சின்னு கிளம்பினான்.

நெருக்கமான உறவுக்காரர்கள் முதலில் கடமைக்கு மாலையைப் செலுத்திவிட்டு வெளியே நின்றிருந்தனர். ஆண்டுக்கணக்கில் பராமரித்து பார்க்கப்பட்டவரின் முகம் அசையாது மௌனியாக இருந்ததைக் கண்ட தூரத்து பெரியப்பா முறையிலிருந்தவர்  இத்தனை நீண்ட போராட்டம் பாலனுக்கு எத்தனை பாரமாக இருந்திருக்கும் என அவன் காது எட்டும்படி சொன்னார். காரியங்களுக்கான ஏற்பாடுகளில் சின்னு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தான். அனைத்து வேலைகளுக்கும் வெளியே இருந்து கூலிக்கு ஆட்களையும் அழைத்து வந்திருந்ததால் சில பணிகள் வேகமாக நடைபெற்றன. இறுதியாக, வீட்டின் முன் மண்டிக்கிடந்த செடியும், கொடியுமான புற்களைக் கொத்தி எடுத்து சாமியானா போட நிலத்தை சமமாகப் பரப்ப சரிசெய்யத் துவங்கினர்.

 “இத்தன நாளு கெடந்ததே பெரிய சாபந்தாங்க… கொழந்தை கணக்கா பொறந்தா கொழந்தை மாதிரியே சாகணுங்க. அதான் வாழ்ந்ததுக்கு அடையாளங்… இல்லைன்னா என்ன சொல்லுவான்? என்ன இருந்தாலும் அல்பாயுசு, காசு இருந்தும் அளுது உருமிச் செத்தான்.. அதுசரி, ஊரு சூத்த மூடமுடிங்களா?”

சலித்துப் போயிருந்த மனதிற்கு புதிதாக விடுதலைக்கான கனம் கூடியிருந்தாலும் இனி அடுத்தடுத்து தான் செய்யப்போகும் திட்டங்கள் குறித்த எண்ணமே பாலனிடம் நிறைந்திருந்தது. இன்னும் சில மணி நேரங்களை எப்படியாவது கடந்து வர வேண்டும் என்கிற பதற்றம் நிறைந்திருந்தாலும் அதன்பின் அமையப்போகும் தனக்கான இசைவான காலத்தை நோக்கியிருந்தான். இந்தச் சம்பவங்களை ஒரு துர்கனவின் கருப்புவெள்ளை நினைவுகளைப் போல களைந்துவிட்டு இங்கிருந்து முற்றிலுமாக தடையமில்லாமல் நகரவேண்டும் என்பதே அவனுக்குள் ஓடிக்கொண்டிருந்தது.  கிடைக்கப்போகும் முழுச் சுதந்திரத்தின் ஒவ்வொரு நாளையும் வீட்டைப் பற்றிய நினைவுகளன்றி நகர்த்திச் செல்லலாம் என நினைத்துக் கொண்டான்.

இனி முகாந்தரங்களற்ற வேசங்களை நாடிச் செல்வதற்கான அவசியங்கள் குறையும். எந்த பணமும் வெளியே நின்றிருக்கவில்லை. கணக்கெடுக்கப்பட்ட தொகைக்கு சற்று குறையாக பணத்தை இழக்க வேண்டியிருந்தது. பக்கத்தில் வேலை செய்யும் தோட்டக்காரர்களுக்குக் கொடுத்ததுபோக சித்தப்பாவிற்கும் சில ஆயிரங்களைக் கடனாகக் கொடுத்தான். அதைத் தவிர்த்து வட்டிக்கு விட்டிருந்த பதினைந்து லட்சங்களை கடந்த மூன்று மாதங்களாக இவனாகக் கவனித்து வட்டிவிகித்ததைக் குறைத்து அவற்றை மீட்டிருந்தான்.

வரவே வராத பட்டியலுக்குச் சென்ற லட்சத்திற்கு நெருங்கிய தொகை சும்மா கொடுத்து வாங்கிய கணக்கில் இருந்தன. பெரும்பாலும் பனியன் கம்பெனி முதலாளிகளுக்கு மட்டுமே வட்டிக்கு விட்டிருந்ததாலும் தீபாவளியில் துணிகளின் ஏற்றுமதி முடிந்ததாலும் இவனால் பணத்தை திரும்பப் பெற முடிந்திருந்திருந்தது. மொத்தத் தொகையையும் தன் வங்கிக் கணக்கிற்கு மாற்றி வைத்துக்கொண்டான். செலவுகளுக்காக ஐம்பதாயிரம் வரை எடுத்து பீரோவில் வைத்ததோடு இனி சல்லிக்காசு  இல்லை என்பதையும் உறுதிப்படுத்தியவனுக்கு சாமிநாதனின் உடலை அடக்கம் செய்தபின் மீதக் காரியங்களைப் பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணமே எஞ்சியிருந்தது.

இருக்கும் கடைசி ஆளும் அவர்தான். படித்து முடித்திருந்த காலத்தில் எங்கும் நகர முடியாமல் எத்தனை நாள்களை கணக்கில்லாமல் இழந்திருப்போம்? ஒரு வாதம் பல உடல்களின் கைகளை கால்களை முடக்கிவைத்திருந்தது. இந்த வீட்டிருந்து கிளம்பிச் சென்றால் இனி வரவே கூடாது என்கிற முடிவு பல மாதங்களாக அவனுள் நிறைந்திருந்தற்கானக் காரணங்களும் இருந்தன. யாரிடமும் வெளியேறுவது பற்றிய எந்த தகவலையும் சொல்லியிருக்கவில்லை. ஆனால், தன்னை தொடர்ந்து வந்துவிடக்கூடாது என்பதற்காக புதிதாக தொழில் தொடங்க இருப்பதை சின்னுவிடமும் சித்தப்பாவிடமும் சொல்லி வைத்திருந்தான்.

எந்த மாதிரியான தொழில்? எத்தனை லட்சம் முதலீடு? என்கிற கேள்விகள் எதுவும் இவனை நோக்கி வராததை நினைத்தபோது அவனுக்கு எதோபோலத்தான் இருந்தது. “எந்தத் தொளில வேணா செய்டா மகனே ஆனா பனியங் கம்பெனி மட்டும் வேண்டாம். நேரஞ் செரியில்லைன்னு வையி நாலு தலமொற கோடீசுவரனை கூட முண்டையாக்கி சீரளிய விட்ரும்.. நீயுங் உங்கம்மாளும் இந்த ஊட்டுக்கு வரதுக்கு முன்னாலேயே நானுங் கொப்பன் காலுல விழுந்து காச வாங்கி ஜட்டி  கம்பெனி ஆரம்பிச்சேன். புதுத்துணிக்கு சாயம் போடராப்ள நல்லாதான் போச்சு. காசு இந்தா இந்தான்னு வந்துகிட்டே இருந்துச்சு. லாபத்துல பழைய நூலு, கோணு அட்டை, தைக்கற துணியெல்லாம் வாங்கி வேஸ்ட் குடோனு போட்டேன். சனியன் புடிச்சது. எந்த தாய்ளியோ நெருப்பை வச்சுவிட்டுடான். அன்னையோட எல்லாம் நாசமா போச்சு… சூத்தை மூடிகிட்டு இருந்திருந்தா அப்பன் பெரிய கோடீஸ்வரன். ம்ம்ம்.. குண்டில வாலு முளைக்கணும்னு இருந்தா விடுமா?  கெரகம் இது சினிமாவவிட பரபரப்பான யாவாரம்” என்றபோது இவன் எந்த எதிர் பதிலையும் சொல்லவில்லை.

மனதின் எடையிழப்பு கூடி மூச்சு மெல்ல சீரடைவதை உணர்ந்தான்.  கடைசிவரை இரண்டாம் தாரம் என சொல்லியே முடித்துக்கட்டிய அவன் அம்மாவின் முகம் நினைவிற்கு வந்தது. இங்கிருந்து கிளம்பிச் சென்றால் நீடிக்கும் நினைவுகளில் அதுமட்டும்தான் இறுதிவரை உடனிருக்கும்.

சிவகாமியை சாமிநாதன் அழைத்துவரும்போது அவளுக்கு முன்பே ஒரு திருமணம் முடிந்திருந்தது. குடித்து குடல் வெந்து  தோட்டத்தில் சுற்றி விழந்த தோட்டக்கார கணவனின் ஒருவருட நினைவுநாள் கடந்ததும் மீண்டும் வரன் பார்க்க ஆரம்பித்திருந்ததும் சொத்தைக் காட்டி இரண்டாம் தாரமாக கட்டிக்கொண்டபோது சாமிக்கு நாற்பது வயதை நெருங்கிக்கொண்டிருந்தது.  முதல்தாரத்தின் வீட்டிற்கு அருகேயே குடிவைத்ததால் இருவருக்குள்ளும் ஓயாமல் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டிருந்த பிரச்னைகளை ஒடித்துவிட பத்து கிலோமீட்டர் தாண்டி பழைய பண்ணை வீட்டிற்கு கூட்டிவந்தபோது  பாலன் கைசூப்புவதை நிறுத்தியிருந்த வயதிற்கு வந்துவிட்டிருந்தான். இந்த வீடே, குடும்பத்தை நினைக்கும்போது அதிகம் பதிவாகியிருந்த நினைவாக இன்றும் தொடர்கிறது.

அவனும் அம்மாவும் வந்த ஆரம்ப நாள்களில் இடைவிட்டு பின்னரவில் ஓட்டின் மீது கற்களை வீசிவிட்டு ‘ஓய்’ எனக் கத்தியபடி எவனாவது ஓடிச் செல்லும்போதெல்லாம் மகனை இறுக்கமாக அணைத்துக் கண்களை முடிக்கொள்வாள்.

நேரம் கூடக்கூட மனதுடன் உடலும் கனமிழந்து காகித எடைக்கு வருவதை உணர்ந்தான். எந்த மருத்துவரையும் அழைத்துவர வேண்டாமென்று சின்னுக்கு சொல்லியிருந்ததால் அவன் யாரையும் தொடர்பு கொள்ளவோ, வாயில் நுரை ஒதுங்கிக்கொண்டதை சொல்லவோ இல்லை. அருகே இருந்து பார்த்தவன் என்பதால் பாலன் அவரை நடத்துகிற விதத்தை நினைக்குபோது  “இதுக்கு சாகறது எவ்வளவோ மேலு போல” என ஒவ்வொரு முறையும் வார்த்தைகளை அசைபோட்டிருந்தவனிடம் ஒருகட்டத்தில் வேண்டுமென்றே அவருக்கு ரத்த அளவு அதிகரிப்பது தெரிந்தும் அந்த மருந்துகளை பாலன் நிறுத்தச் சொன்னபோது  அவர் இருப்பதைக் காட்டிலும் இறப்பதே நல்லது என பிறரைப்போல முடிவுக்கு வந்திருந்தான். நோயினைப் பெற்றவர்கள் எப்படிக் கிடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என தூக்கி வருபவர்களெல்லாம் எதோ ஒரு கணத்தில் நலிந்தவரின் மரணத்தை எதிர்நோக்கத் துவங்கும்போது உருவாகிற குற்ற உணர்ச்சியை எந்த உறுத்தலும் இல்லாமல் எதிர் கொள்கிறார்கள்.

 பார்த்துப் பார்த்து சலிக்கும் நிலையில்  வடிவம் கூடி வருகிறது. இருப்பதை நினைத்து ஏங்கிக்கொண்ட மனமும் இல்லாததை ஏற்றுக்கொள்ளும் வெறுமையுமாக அது அவனைத் துளைத்துக் கொண்டிருந்தது. சட்டகம் இல்லாத புகைப்படத்தை காற்றில் விட்டெறிவதைப்போல அவருடனான மனமோதல்களில் சிதைந்துகொண்டிருந்தவனுக்கு இப்படி முடிந்தது சரியாகவேபட்டது.

 ”ஒழுங்கா படிபோயி, இப்படியெல்லாம் நிஞாய மயிரு பேசிப் பளகாத” என்பதே சாமிநாதன் பாலனிடன் அதிகம் பேசிய வார்த்தைகளாக இருந்தது. திமிருடன் எந்த சொற்களை வீசினாலும் காளைக்கு கட்டவைத்திருந்த கயிற்றைக் கொண்டு வெளுக்க ஓங்கும் கைகளைக் காட்டிலும் கண்களில் தெரிக்கும் உக்கிரத்தை நேருக்கு நேராக சந்திக்க முடிந்ததேயில்லை.

 மினி டெம்போ வண்டியில் நாற்காலியும் சாமியானாவும் வந்திறங்கின. பழைய பாணியிலான ஓட்டு வீடாக இருந்தாலும் உள்ளே பத்திற்கும் மேற்பட்ட அறைகளிலிருந்ததால் தூரத்திலிருந்து வருபவர்களையும் பார்த்துக்கொள்ளலாம் என சின்னுவும் சித்தப்பாவும் பேசிக்கொண்டதை இவன் பொருட்படுத்தாமல் அப்பாவின் அறைக்குள் சென்று சில புகைப்படங்களையும் அதே அறையின் மூளையில் கிடத்தப்பட்டிருந்த சைக்கிளையும் தன் அறைக்குள் எடுத்துச் சென்று உள்ளே வைத்துப்பூட்டி சாவியை பத்திரப்படுத்தியதும் சின்னுவைத் தனியாக அழைத்து காரியத்திற்குத் தேவையான பணத்தை கத்தையாகக் கொடுத்து செலவுகளைக் குறிக்கச் சொன்னான்.

சின்னு கூட்டிவந்திருந்த தூரத்து பங்காளிகளும், மற்ற ஆட்களும்  வேலைகளைக் கவனித்துக் கொண்டே பாலனிடம் குடிக்கு பணம் தேவைப்படுவதை நாசுக்காக காதில் போட்டனர். சாமிநாதனின் மரணம் மாலையில் நிகழ்ந்துவிட்டதால் இனி விடியும்வரை பிணத்தை எடுக்க முடியாது என்கிறதை அவனுக்கு வந்தவர்கள் சொல்லிப்புரிய வைக்க வேண்டிய அவசியமில்லாதவனாக நாளைய ஏற்பாடுகளுக்கான தொடர் அழைப்புகளைச் செய்தபடி இருந்தான். யாரையும் அழைக்காமல் விட்டுவிடக்கூடாது என வந்தவர்களிடம் விசாரித்து முக்கிய உறவினர்களின் எண்களையும் பெற்று அழைத்து விவரத்தைச் சொன்னான்.

நூற்றுக்கும் மேற்பட்ட நாற்காலிகளை சின்னு வளவிலிருந்து கூட்டிவந்த ஆள்களின் உதவியோடு வீட்டின் முகப்பில் பரந்துகிடந்த தோட்டப்பகுதியில் போட்டனர். இருட்டின் தடம் தோட்டத்தை அப்பியிருந்த சமயத்திலும் அங்கு கூட்டமிருந்தது. அனைத்து அறைகளையும் பூட்டி சாவியை எடுத்து வைத்தான். இறந்ததிலிருந்து சில நிமிடங்கள் மட்டுமே அவர் அருகே இருந்தவனுக்கு மேற்கொண்ட அந்த மௌனத்தை தைரியமாக எதிர்கொள்ள முடியவில்லை. அப்பாவின் கறுத்துப்போயிருந்த முகமும்  எடையற்ற தோற்றத்தையும் பார்க்கவே கூடாது என்றால் இந்த இரவைக் கழிப்பதொன்றே வழி என்பதிலும் பாலன் உறுதியைக் காட்டினான்.

வெளியே போட்டப்பட்டிருந்த நாற்காலிகளுக்கு எதிர்புறமாக சில கார்களும், இருசக்கர வாகனங்களும் சிதறப்பட்டதுபோல நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. கேனில் டீயைப் பிடித்து ஒரு நாற்காலியில் அமர்ந்ததும் முதல்வாயை வைப்பதற்குள் வந்த தூரத்து உறவினரைப் பார்த்ததும் பக்கத்து இருக்கையில் டீ கப்பை வைத்துவிட்டு எழுந்து கைகளைக் கொடுத்தான்.

“என்னப்பா ஆச்சு?”

 “நெஞ்சு வலிங்”

 “வயசும் எழுவதை தொட்ருக்குமே, நல்லதுதான். யாரால சீரளிய முடியுஞ் சொல்லு”

அந்த வார்த்தைகள் இவனுக்குள் ஆறுதலை ஏற்படுத்தியது. மீண்டும் அடுத்தடுத்தவர்களுக்கு கைகளை உலவ கொடுத்து அவர்களின் அஞ்சலிகளை ஏற்றுக்கொண்டபடியேயிருந்தான்.

சின்னு அருகே வருவதற்கு முன் மீண்டும் அப்பாவைப் பற்றி சித்திரத்தில் நள்ளிரவில் எப்போதாவது ஓங்கிக் கதவைத் தட்டும் சத்தமும், நிலையில்லாமல் வரும் உடல் பாகங்கள் குறித்த ஆபாச வார்த்தைகளும், குடித்தபின் உருவாகும் உடல்மொழியும், குழைந்த பேச்சும் அம்மா சாகும்வரை அவளை மறக்காமல் துரத்திய ‘தேவ்டியா’ என்கிற வார்த்தையுமே பாலனுக்கு அதிகமும் நினைவுபடுத்தியது. ஒன்றாகச் சேர்ந்து அமர்ந்துபேசிய மொத்த நேரத்தையும் தொகுத்தால்கூட பத்து மணிநேரம் இருக்குமா? ஆவேசமாக மூச்சொலிகள் வெளியேறியது. அதிகமாக  “டேய்” என்கிற வார்த்தைகளே அவரைக் குறித்த பிம்பத்தை யோசிக்கும்போது இவனுள் எழுந்து வந்தன.

அம்மா இறந்தபோது முதல்தாரத்தின் வீட்டிற்குச் செல்வதை குறைத்துக்கொண்டிருந்தார். அங்கே சென்றாலும் வளர்ந்த பிள்ளைகள் கேட்கிற கேள்விகளுக்கு எந்த அப்பனாலும் பதில் சொல்ல முடியாத வெறியைத்தான் அடைந்தார். பிள்ளைகளைச் சந்திப்பதில்   சோர்வு உருவானதை இவனிடம் நடந்துகொண்டபோது உணர்ந்த சில நாள்களில் கோயம்புத்தூரில் இவன் விருப்பப்படியான படிப்பை படிக்க சேர்த்துவிட்டதுடன் கல்லூரி விடுதியிலும் இணைத்துவிட்டார். முதல் சில மாதங்கள் வாரத்திற்கொருமுறை வீட்டிற்கு வந்துகொண்டிருந்தவன் பிற்பாடு படிப்படியாக இரண்டு மாதத்திற்கு ஒருமுறை வந்தான். தேவைக்கு அதிகமான பணத்தையும் அவர் “எதுக்குடா அவ்ளோ பணம்?” எனக் கேட்காமல் வங்கிக்கணக்கில் மாதம் பிறக்குபோது ஒரு தொகையைப் போடுவார். ஒரே வருடத்தில் ஹாஸ்டலில் இருந்து வெளியேறி தனியாக அறையெடுத்துத் தங்கினான். தனிமை ஒரு வதையாக இருந்ததில் சிலருடனே அவனால் சில வார்த்தைகளைப் பேச முடிந்தது.

 சின்னச் சின்ன புலம்பல் சத்தங்கள்  கேட்டதும் மீண்டும் உள்ளே சென்று தன் அறையைத் திறந்து புரோட்டீன் மாவை கொஞ்சமாக எடுத்து வென்னீரில் கலந்து குடித்தான். கூடவே, பாதம், உலர்ந்த திராட்சையையும் அத்தியையும் கொஞ்சமாக எடுத்து மென்று கொண்டான்.

 “எல்லாருக்கு சொல்லியாச்சுங்களா மாப்ள?”

“உள்ளூருக்குள்ள வேண்டப்பட்டவங்களுக்கு சொல்லியாச்சு, தாராபுரத்துக்கும், பழனிக்கும் மட்டும் நீ சொல்லீரு, மத்ததெல்லாம் சித்தப்பா பாத்துக்குவாரு”

சின்னுவால் வாயெடுத்ததைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை “அண்ணங்காரன் குடும்பத்துல இருந்து யாரும் வர்லீங்களே”? என்றான்.

பாலனுக்கு அவனை நினைத்தபோது  கண்கள் குழப்பத்துடன் மெல்ல இருட்டிக்கொண்டு வந்தது. சிவன்மலை அருகே இருந்த அக்குடும்பத்திற்கு இந்நேரம் செய்தி சென்றிருக்கும். ஆனாலும் அங்கிருக்கும் ஒரு தலையைக்கூட இழவுவீட்டில் காணவில்லை. வீட்டை ஒட்டியே இருக்கும் இருபது ஏக்கர் நிலத்தை சாமிநாதன் நரம்புகளுடன் திணறிக்கொண்டிருந்த ஆட்டத்தில் அவை வெல்ல முயன்று வருவதை நிதானித்தபோதே சில ஆண்டுகளுக்கு முன் பாலன் யாருக்கும் தெரியாமல் ஆந்திராவில் மருத்துவம் பார்க்க அழைத்துச் செல்வதாகக் கூறி தனியாக தன் பெயரில் மாற்றி எழுதிக்கொண்டான்.

சித்தப்பாவிடம் கூட இந்த விசயத்தைச் சொல்லததற்குக் காரணம் இந்த இடம் முதல்தாரத்தின் அப்பாவிற்குச் சொந்தமாக இருந்தது. இவர்களை இங்கு குடித்தனம் வைக்கவே மலிவான விலைகொடுத்து சாமிநாதன் வாங்கி தன் பெயரில் மாற்றிக்கொண்டார்.  முதல் தாரத்தின் மூத்த மகனுக்கு சாமியின் பல சொத்துகளும் எழுதிவைக்கப்பட்டாலும் இந்தப் தோட்ட வீட்டின் மீது அவனுடன் சேர்த்து மற்ற பிள்ளைகளும்  ஒரு கண்ணை தூவியிருந்தனர்.

 கீழே விழுந்த உடல் கொடூரமாகக் குன்றி படுக்கைக்குச் சென்றபின் இப்போது நுழைந்தால் மருத்துவச் செலவிற்கு அள்ளி வீச வேண்டுமென்பதை உணர்ந்து மெல்ல அதனை விட்டுப்பிடிப்பதாக அத்தனை பிள்ளைகளும் விலகிக்கொண்டனர்.  என்றாவது ஒருநாள் பாலனை அடித்துத் துரத்தியாவது இந்த நிலத்தைப் பெற்றுவிடுவதில் அவர்கள் உறுதியாக இருந்தனர்.

 இதையெல்லாம் நினைத்தபோது எழுதி வாங்கப்பட்ட விசயம் உள்ளூரில் கசிவதைவிட முதல் தாரத்தின் பிள்ளைகளை அது எட்டிவிட்டால் அதற்குப்பின் இங்கு தாக்குப்பிடிக்க முடியாது என்பதைப் பற்றி அச்சத்திலிருந்தான். இவனுக்காக இங்கு பேசி மற்றவர்களை பகையாளிகளாக மாற்றிக்கொள்ள யாரும் முன்வரமாட்டர்கள். இயல்பாகவே அவனிடமிருந்த ஒரு விலகல் மனம் சொந்தங்களிலிருந்து அழகாக பிரித்தெடுத்து ஊருக்குள்ளே வாழும் தனியனாக மாறியிருந்தான். இப்போதைக்கு பெரிய துணையே சின்னுவும், அம்மா வழி சித்தப்பாவும் மட்டுமே.

 இந்தக் காரியங்களை முடித்துவிட்டு இங்கிருந்து கிளம்பிவிடுவதொன்றே துரத்தும் பயத்திலிருந்து விடுதலையாவதற்கான பாதை. முக்கியமாக பிறர் கணிக்கும்படியாக செயல்பாடுகளும் வார்த்தைகளும் மாறிவிடக்கூடாது என்கிறதிலும் உள்ளுணர்வின் தடம் இருந்தது.

எங்கே செல்வது? என்ன செய்வது? கேள்விகளுக்கு முன்பே விடை தயாரித்து வைத்திருந்தவனுக்கு இப்போது தப்பித்தால் போதும் என உள்ளம் பரபரப்படைந்திருந்தது.

உள்ளே கூடியிருந்த பெண்களின் அழுகுரல்கள் மெல்லக் குறைந்து மீண்டும் அதிகரித்தது. சிலர் ஒப்பாரிகளைப் பாடினர். நாற்காலியில் இருந்து எழுந்தவன் சட்டையைக் கழட்டி வெள்ளை பணியனுடனும் தோட்டத்திற்குள் சென்றான். சின்னும் ஆட்களும் வாங்கிவந்திருந்த மது பாட்டில்களுடன் சுற்றி அமர்ந்திருந்தனர். ஒரு தென்னைக்கு அடியில் சிறுநீர் கழித்துக்கொண்டிருக்கும்போது இவன் எதிர்பார்த்த  எண்ணிலிருந்து அழைப்பு வந்தபோது  அதை எடுக்கவே கூடாது என்கிற முடியில் அழைப்பைத் துண்டித்துவிட்டான்.

இரண்டு முறை அழைத்தபின் சில நிமிடங்கள் இடைவெளியில் மீண்டும் அதே எண்ணிலிருந்து அழைப்பு வாட்ஸ் ஆப் வழியாக வந்தது. எடுத்தான். இருமுனையிலும் யார் பேசவது என்கிற ஆணவமிருந்தது. சிலநொடிகளுக்குப் பின் மறுமுனையில் உடைந்த குரலில் ‘சாரி’ வந்து விழுந்ததும் மீண்டும் இணைப்பைத் துண்டித்துவிட்டு நகர்ந்தவனிடன் சின்னு அறையிலிருந்து எடுத்துவந்திருந்த கண்ணாடி தம்ளரில் மதுவை நிறைத்து சோடாவை ஊற்றினான். கையில் வாங்கியவன்  ஒரே மடக்காக அருந்தியபோது திடீரென்று நினைவு வந்தவனாக ‘அப்பா’ என வாயெடுத்து  உயிர்பிரியும் நாயின் இறுதி ஊளையைப்போன்று குரலை வெளிப்படுத்தி மெல்ல கலங்கினான். பொருட்படுத்தாத பார்வையில் சின்னு எதுவும் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்துகொண்டான்.

மீண்டும் மீண்டும் அழைப்புகள் வீடியோ கால் மூலமாக வரத் தொடங்கியதும் போனை அணைத்து வயிற்றை உள்ளிழுத்து வேட்டியின் இடுக்கில் சொருகியதும் சிகரெட் ஒன்றைப் பற்றவைத்து நிம்மதியான மனநிலையுடன் ஆழமாக உள்ளிழுத்து வெளியேற்றியதில் இரவைக் கிழிப்பது போல புகை சென்றது.

                                                           5

இருவரும் பேசிப்பழகிய பின் ஷிவ் தங்கியிருந்த அறையின் கதவு நடு இரவில் தட்டப்பட்டபோதுதான் அவள் தன்  உடமைகளை எடுத்துக் கொண்டு வந்திருந்ததை இவன் கலங்கிய விழிகளில் கண்டான். இரண்டு நாள்களாக இருவருக்குள்ளும் நடந்துகொண்டிருந்த சண்டையின் வாக்குவாதத்தில் அவள் இவனை முற்றிலும் ஒதுக்கபோவதாகச் சொன்னபோது மறுமுனையில் ஷிவ் அழுதது இவளுக்குள் உள்ளூர புதிய ஏக்கத்தைத் தந்திருந்ததும் பழகி ஒரு மாதத்திற்கும் மேலானதால் வழக்கமாக இரவு பார்ட்டிகளில் உடலறவு குறித்து கேடக்கப்படும்  “ஒன் நைட் ஸ்டாண்ட்” கேள்வியை இவன் நகைச்சுவை மொழியில் நாசுக்காகக்கூட கேட்டிருக்காததும் புதிதாக இருந்தது. ஒருகட்டத்தில் ரோஷினிக்கு இவனுடைய தனிப்பட்ட வாழ்க்கையை அறியவும் அதில் பங்கெடுக்க வேண்டுமென்ற எண்ணமும் குடைந்தபோதுதான் தன் அறையைக் காலி செய்துவிட்டு இங்கு வந்திருப்பதாக அவனுடைய வலதுகையின் மணிகட்டுப் பகுதியில் பிடியைத் தளர்த்தாமல் அனைத்தையும் ஒப்பிப்பதுபோல சொல்லி முடித்தாள். ஒருகணம் திகைத்து நின்றவனுக்கு அவளை அள்ளிக்கொண்டு கிடத்தவேண்டும் என்கிற வெறியைக் காட்டிலும் இவனுக்காக காதலைச் சுமந்து வந்ததே பெரிதாக உணர்ச்சியைக் கிளப்பியிருந்தது.

மீண்டும் மீண்டுமென அவளைத் தவிர்த்து எந்த எண்ணமும் அவனை நெருங்கி வராமல் இருந்தன. பெண்களைக் காட்டிலும் அதிகமும் ஆணின் உடலே இவனுக்கு கிளர்ச்சியைத் தந்திருந்தாலும் ரோஷினியின் வருகைக்குப் பின் அந்த உடல்களைத் தேடி செல்வதையும் தன்னை நாடிவருபவர்களையும் விலக்கியே வைத்திருந்தான். ஒரு அதிகாலையில் இவன் எழுந்தபோது மெத்தையின் ஓரத்தின் அவள் தலையின் கேசம் சிறுமியின் பாவாடையைப் போல ஒர் அரை வளைவை அடைந்திருந்த காட்சியைக் கண்டபோது அவனுக்கு ரோஷினி மீதான காதல் தினம்தினமாக அதிகரித்து வருவது விழியில் படர்ந்த நீரில் ததும்பியதை நினைத்து உருகினான்.

காமத்தை மட்டுமே நாடிச்செல்லும் மனதிற்கு இவளில் உடலைக் கடந்த பின்பும் புதிதாக அவள் மீதிருந்த அன்பின் கனம் கொஞ்சமும் இவனிடமிருந்து விலகாமல் மேலும் வசீகரிப்புடன் எழுந்து வருவதை உணர்ந்தபோது இவளைப் பிரிந்து செல்லவே கூடாது  என்பதில் உறுதியாக இருந்தான். இணைந்தே வாழும் வார்த்தைகளை அவளும் மிகத் தீவிரமாக ஏற்றுக்கொள்ள ஆரம்பித்திருந்தாலும் இந்த உறவின் நீளமும் அது முறியத் தேவையான காரணமும் இவளிடம் நிறையக் கொட்டிக்கிடப்பதையும் தன் அனுபவத்தில் கண்டுவைத்திருந்தான். இருவரும் உணர்ப்பூர்மாக இருக்கக் கூடாது என முடிவெடுத்திருந்தாலும் அடிக்கடி இணைந்தே இரவுக் கொண்டாட்டங்களுக்குச் செல்வது, அருகே ஒருவரை ஒருவர் தனித்து விடமால் அமர்ந்து குடிப்பதுமாக அந்த நாட்களில் இருவரது காதல்களும் ஒன்று மற்றொன்றின் பிடியை விடமால் பார்த்துக்கொண்டது. முக்கியமாக கேளிக்கைகள் உச்சமடைகிற பொழுதுகளில் வந்து செல்கிற சில இயக்குநர்களிடம் பிந்துவின் குழுவைச் சேர்ந்தவள் என அறிமுகம் செய்துகொண்டு இவனுக்காக வாய்ப்பு கேட்க அவர்களிடம் வழிய வேண்டியிருந்ததையெல்லாம் விளையாட்டாக ரோஷினி சொன்னபோதுகூட இவனால் உணர்ச்சிவசப்படமால் இருக்க முடியவில்லை.

இரவுகளில் அத்துமீறல்களை செய்யவே நடத்தப்பட்டும் அந்த கேளிக்கை விடுதிக்குச் சென்றபோது அதிகாலை இரண்டு மணியளவில் “9 செகண்ட்ஸ் வைப்ஸ்” அறிவிக்கப்பட்டது. காக்டெயிலை கலக்கிக்கொண்டிருந்தவனிடம் பேசிக்கொண்டிருந்தவனுக்கு இதயத்துடித்து அதிகரித்தது. இன்னும் சில நொடிகளில் முழுவதுமாக விளக்கொளிகள் ஒன்பது நொடிகளுக்கு நிறுத்தப்பட்டு மீண்டும் போடப்படும். அந்த இடைவெளியில் யார் யாரை வேண்டுமானாலும் முத்தம் கொடுக்கவோ, பாகங்களைத் தடவவோ செய்யலாம். விருப்பமில்லாதவர்கள் டிஜே அருகே போட்டப்பட்டிருக்கும் தடுப்பில் மறைந்துகொள்ளலாம்.

இவன் ரோஷினிக்காக சத்தமெழுப்பினாலும் கேட்காத அளவிற்கு அந்த  நொடிகளுக்காகக் காத்திருப்பவர்களின் ஆரவாரம் அதிரச் செய்துகொண்டிருந்தது. இவனால் அங்கிருந்து நகரவும் முடியாத சூழலில் விளக்குகள் அணைக்கப்பட்டன. யுவதிகள் அலறுவதும், இருட்டில் உடல்கள் வேகமாக நகர்வதுமாக இருந்தது. எதிரில் எந்த முகங்களிலும் யாரையும் அடையாளம் காணமுடியவில்லை. இவனுக்கு ஒரு முத்தம் கிடைத்தது. அந்த உடலைத் தொடுவதற்குள் அவள் பின்பக்கமாக இவனை வளைத்து புணர்வதுபோல உடலை ஆட்டி சிரித்தபோது வண்ண விளக்குகள் முழு இசை ஒலியில் ஜொலிக்கத்தொடங்கியது. மீண்டும் பயங்கரமான துடிப்பின் கொண்டாட்டக் கூச்சல்கள். இவனைவிடாத அந்தக் கைகளைத் திரும்பிப்பார்த்தபோது ரோஷினி தன் செம்பட்டை நிறக் கூந்தலின் முனையை முன்பக்கம்விட்டபடி இவனைப் பார்த்துச் சிரித்தாள். யாரும் இத்தனை அந்தரங்கமாக இவனை நெருங்கியதில்லை என்பதால் அவள் கொடுத்த இன்ப அதிர்ச்சியின் பதற்றத்திலிருந்தாலும் அவளை தழுவி முத்தமிட்டான்.   சிலர் மீண்டும் விளக்குகளை அணைக்கச் சொல்லி   “ரிப்பீட்..ரிப்பீட்” என்றதும் சத்தம் இன்னும் அதிகமானது.

உண்மையில் அவளை எங்கும் இனி அனுப்ப வேண்டாமென முடிவெடுத்தவனுக்கு ரோஷினியின் உறுதியான பிடிவாதம் இவனுக்குள் ஒளிந்திருக்கும் அடக்கத்தை விரும்பும் ஆணால் கொஞ்சமும் ரசிக்க முடிந்ததில்லை. இவளிடம் எத்தனை முறை எடுத்துச் சொல்லியும் கேட்கமாட்டேன் என்றது அவனுக்கு நிலைகுலைவைத் தந்திருந்தாலும் ரோஷினி இனி கண்ட மேடைகளில் அவமானப்படுவாளோ என்கிற துயரமும் மெல்ல சூழத் துவங்கியிருந்தது. நீளமும் சிவப்பும் பச்சையுமாக வண்ண மின்னொளிகள் தரைகளில் ஊர்ந்து மேஜைகளில் ஏறி அறையைத் துடைத்துக்கொண்டிருந்த பொழுதுகளில் இவளுக்கு வரும் வாய்ப்பு குறித்தோ புதிதாக கிடைத்த தொடர்பையோ இவனிடம் பகிராமல் இருந்தாள்.

இறுதியாக அவளுடன் நேற்று முன்தினம்  மாலை பேசியது. அப்போது அறைக்கதவின் தரைமட்ட இடுக்குகளின் வழியாக தொடர்ச்சியாக சில உருவங்கள் கடந்து செல்வதைப் பார்த்தபடி மூன்றாவது முயக்கத்தில் சோர்ந்துகிடந்த ரோஷினியின் முகம் மீண்டும் ஓரு ஆவேசத்தை அளித்தது. அவளின் உடலைப் புரட்டிப் போட்டு மார்புப் பகுதியை மறைத்திருந்த வெண்ணிறப் போர்வையை விலக்கினான். அவள் முனகலுடன் இவனின் கைகளைத் தட்டிவிட்டு தில்லி செல்வதற்கு  ‘ஓகே’ சொன்னால்தான் என்றபடி விலகிப்படுத்துக்கொண்டாள். அவனுக்கு அதில் துளி விருப்பமும் இல்லை. இவள் அடையாளத்தைப் அப்பட்டம் முழுமையாக அழித்துவிடும் என்பதை தொடர்ந்து அவளிடம் சொன்னாலும் ரோஷினிக்கு இதொரு நல்ல வாய்ப்பாகத் தோன்றியது. எல்லாச் செயலையும் செய்யவும் மறக்கவும் தனித்தனியான காலங்கள் உண்டு. ஒன்றை ஒன்று உரசிச்செல்வதாக இருந்தால் வெறுமை உச்சத்தை நோக்கி நகர்ந்துக்கொண்டிருப்பதாக பொருள்.

அவளுக்கும் பின்னால் மாடலிங் துறைக்கு வந்தவர்களெல்லாம் ஏதேதோ வகையில் தங்களுக்கான இடத்தைப் பெற்றிருந்தனர். கார்த்திகா கார்கியாக பெயரை மாற்றிக்கொண்டு இரண்டாம் நாயகியாக நடித்து வருகிறாள். இவள் பார்த்த முகங்களிலேயே மறக்காத முகம் அவளுடையதுதான். தமிழை நன்றாக எழுத உச்சரிக்கக் கற்றுக்கொண்டவள். பிரபல செய்திச் சேனலில் ’ஆன்மீகத்தின் அர்த்தங்கள்’ பெயரில் தொடராக வெளிவந்துகொண்டிருந்த அந்த நிகழ்ச்சியில் வழிபாட்டுத் தலங்களின் வரலாற்றையும் வழிபடுமுறைகளையும் தூய உச்சரிப்பில் வழங்கி வந்தாள். நினைத்துக்கூட பார்க்க முடியாத பெரும் செல்வந்தவரின் வீட்டுக்கு மருமகளாக வாழ்க்கையை சிரத்தையில்லாமல் கழிக்கக்கூடிய அற்புத வாய்ப்பு கிடைத்தும் அதைப் பொருட்படுத்தாமல் இரண்டாயிரம் ரூபாய்க்கு மேடையில் புயலைப்போல ஆடைகளை அசைத்து தேகத்தை நெளித்து வந்து அசரடிப்பாள். எத்தனை பணத்தாலும் அவள் உடலை வீழ்த்த முடியாது என்கிற உண்மையை மாடலிங் குழுவில் இருந்தவர்கள் உணர்ந்தபோதுதான் அடுத்தடுத்ததாக வேலைகள் குறையத் துவங்கின. அப்படியும் அசராமல் கிடைத்த விசிட்டிங் கார்ட் விளம்பரத்தைக்கூட விடாமல் நடித்தாள். தொழிலுக்கு மிக ஒழுக்கமாக இருந்ததால் வருகிற ஒவ்வொரு வாய்ப்பையும் கவனமாகப் பயன்படுத்துபவள் என்கிற பெயர் நீடித்தது. அதைவிட தென்னிந்தியாவில் பிகினி உடையில் போட்டோஷூட் செய்ய ஓப்புக்கொண்ட முதல் மாடல் கார்கிதான் என்பதை அறிந்தபோது ரோஷினி வாயைப் பிளந்தாள். இப்படி அடுக்கிக்கொண்டே போகிற பல முகங்களை  தூரத்திலிருந்து ஆதரித்து ரசித்ததில் தன்னைப்பற்றியான  எண்ணங்கள் துரத்திய நேரத்தில்தான் பிந்து சொன்ன போட்டிக்கு அவளைத் தயாரித்தாள்.

                                                           6

சென்னையிலிருந்து தனித் தனியாக மாடல் கோச்கள் தங்களிடமிருந்தவர்களை தயார் செய்யத் துவங்கிய செய்தியும் ரோஷினிக்கு கிடைத்தது. பிந்துவுடன் இவள் செல்லத் திட்டமிட்டிருந்தாள். தமிழகத்திலிருந்து இந்தப்போட்டி நிபந்தனைக்கு மொத்தம் இருபது பேர் இருந்தனர். அவர்களையெல்லாம் விட ரோஷினி அசலான அழகி. முகத்தில் பூசப்பட்ட அழகுசாதனங்களை வழித்தெடுத்து மேடை ஏற்றினாலும் முதலடியில் வலதுகாலைத் தூக்கிவைத்து இடுப்பில் கைவைத்து சில அடிகளைக் கடந்ததும் அவள் உயரத்திற்காகவே தயாரித்துப் பொருத்தப்பட்டது போன்ற மார்புகளையும் பின்புறத்தையும் நடையிலேயே மெல்ல அசைய வைத்து நடுவர்களைத் திணறடிக்கும் நுட்பம் தெரிந்தவள். கலந்துகொண்டால் நிச்சயமான இடம் தனக்காக காத்திருக்கிறதை நம்பினாள். போட்டிக்காக புதுமாதிரியான நடைகளை பயிற்றுவிப்பதற்காக ‘ரிகர்சல்’ பார்க்க ஜிம்மியை பிந்து அழைத்திருந்தாள். புதிதாக இரண்டு திரைப்படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராகவும் ஒப்பந்தமாகியிருந்ததால் அவனுக்கு தெரிந்த இடங்களிலிருந்து வடிவமைத்துக் கொள்ளலாம் என உதவியாளர்களிடம் கூறியிருந்தாள். அலுவலகத்தில் பரபரப்பாக வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

ஆடைகளை வடிவமைப்பது என்பது வருமானத்திற்கான தொழிலாக இருந்தாலும் மாடலிங் பயிற்சியாளராகவே  பிந்து பிரபலமாகியிருந்தாள். அவளைச்   சுற்றியிருக்கும் மாடலிங் பெண்களில் பத்தில் இருவர் சினிமாவில் பெரிய நடிகையாகி விட்டிருந்தது அவளுக்கு புதிய கௌரவத்தை அளித்திருந்தது. அதிலும் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்த  காதலனால் விரட்டி கர்ப்பமாக்கப்பட்டு பின் அவன் வேறொருவளைத் திருமணம் செய்துகொண்ட திரைப்படத்தில் நடித்த நாயகி பிந்துவின் அந்தரங்கத் தோழியாகவே இருந்தவள். அவளின் அத்தனை பேச்சுக்கும் செய்யச் சொன்னதை கூச்சமே இல்லாமல் செய்ததால் இரண்டு படங்களில் வாய்ப்பு வாங்கிக்கொடுத்தாள். பின் நேரடியாக நாயகியாக நடித்து பிரபலமாகியிருக்கிறாள். அதற்காக, பிந்து அவளை பார்த்து பேசமாட்டாள். இது மாடலிங்கில் இருக்கும் ஒரு விதி. இடம் கிடைக்கும் வரை அடிமட்டங்களின் கண்களில் அந்தப் பதற்றம் இருக்கும். நாலுபேர் சுற்றி செல்ஃபி எடுக்கத் தொடங்கும்போது உள்ளுக்குள் கள்ளம் உருவாகிவிடும் என்பது பிந்துவுக்கு தெரியும். எல்லாவற்றையும் விட அவள் அழைத்தாள் வந்து சந்திக்கும் பெரிய இயக்குநர்களும் இருந்தனர்.

 அதன் காரணமாகவே அவள் செய்யும் கொடூரமான அணுகுமுறைகளைக் கீழே பணிபுரியும் மாடல்கள் சகித்துக்கொண்டனர். வீட்டு வேலைகளிலிருந்து மசாஜ் செய்துவிடுவதுவரை எத்தனை பெரிய அழகியாக இருந்தாலும் குனியச் சொல்லி ’ஏறிப்பார்த்துவிடுவாள்’.

அப்படி ரோஷினி வந்த புதிதில் பிந்துவின் தோழன் இவளது பின்பக்கத்தை அழுத்தியதும் இதெல்லாம் மாடலிங் வட்டாரத்தில் சாதாரணம்தான் எனச் சொன்னபோது அடுத்தநாள் முழுக்க காய்ச்சலில் அறையில் புரண்டபடி இங்கு தாக்குப்பிடிக்கவே முடியாது என நினைத்தாள். அடுத்தடுத்து வேறு முயற்சிகளைச் செய்தாலும் இறுதியில்  பிந்துவைத் தாண்டிய பெரிய ஆள் இல்லை என உணர்ந்ததும் மீண்டும் அவளிடமே இணைந்துகொண்டாள். சம்பளம் என்பதைக் காட்டிலும் தினம் பெரிய ஆட்களின் பார்ட்டிகளில் கலந்துகொள்ள முடிந்ததும் அன்றாடங்கள் நினைத்துப் பார்க்கமுடியாத மனத் திளைப்பில் புரளுவதுமாக இருந்தன.

இடையே புதிய திரைப்படம் ஒன்றில் உச்சநட்சத்திரத்தின் தங்கை தோழியாக நடிக்க ஆட்கள் தேடி வந்திருப்பதை உதவியாளர் மூலம் மற்ற பெண்களுக்குத் தெரிவித்தாள். இன்னும் சில நாள்களில் அப்படத்தின் வேலைகள் தொடங்கப்பட உள்ளதை ரோஷினி அவளுடைய நெருங்கிய தோழிகளின் எண்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவலை பறக்கவிட்டபடி பிந்துவின் அறைக்குள் நுழைந்து கார்பரேட் நிறுவனம் ஒன்று நடத்த இருக்கும் புதிய நிகழ்ச்சியில் பங்குபெறத் தயாராகிக் கொண்டிருக்கும் புது மாடல்களின் உடல் பாகங்கள் கச்சிதமாக இருக்கிறதா என்பதை கண்களை அலையவிட்டபடி சோதித்தாள். பெரும்பாலும் கல்லூரி மாணவிகள். ஆனால், அதற்கான எந்த அடையாளமும் இல்லாத பெர்சியன் குதிரைகளைப்போல பொலிவு கூடியிருந்ததை ரோஷினியால் நம்ப முடியவில்லை. இருபத்தியொன்று வயது பெண்ணே இருந்த மாடல்களில் அதிக வயதுடையவள் என்பது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

வெளியே வந்து சிகரெட்டைப் பற்ற வைத்தாள். இரண்டு முறை மேடை ஏறி, கவனத்தை ஈர்த்தால் அதன்பின் பிந்துவுக்கும் நமக்கும் தொடர்பு குறையும் என்பதை ரோஷினி உணர்ந்துகொண்டவளாக மிகப் பேரழகியாக இருந்த ஒருத்தியிடம் எண்ணைப் பெற்றுக்கொண்டு மாலை அழைப்பதாக அவளை அவசரப்படுத்தி தாட்டிவிட்டாள். இதோடு இப்படி அவள் வேலையைப் பறிக்கக் கூடிய எத்தனை மாடலிங் அழகிகளை பிந்துவின் கண் படாமல் துரத்தியிருப்போம் என நினைத்தபோது அவளுக்கு உண்டான வெறுப்பு முதன்முதலாக பிந்துவைச் சந்தித்தபோது அவள் இவளின் தோற்றத்தைக் குறித்து ஆபாசமாக கிண்டல் அடித்ததைவிட அதிகமாக இருந்தது.

பெரும்பாலும், கல்லூரி மாணவிகளே இத்துறைக்கு தொடர்ந்து வருவதும் புதுப்புது ஆடைகளை அணிந்துகொண்டு உலக அழகியாக தன்னைக் கற்பனை செய்தபடியே உறுப்புகளை அசைத்து நடந்துவருவதைப் பார்க்கும்போது ரோஷினிக்கு பொறாமை ஏறிக்கொண்டு வரும். அவளும் சில மேடைகளில் முழு மேக்கப், இந்தோனேசியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட பிரத்யேக ஆடையை அணிந்தபடி ஏறியிருக்கிறாள். அப்படி முதன்முதலாக, பின்பக்கம் தரையை உரசும் நீண்ட ஆடையின் முன்பக்கம் அவள் அணிந்திருந்த உள்ளாடையை மட்டும் மறைத்து தொடைகளை முழுமையாகக் காட்டியபோது ஒரு கணம் பதற்றத்தில் தடுமாறினாலும், கூச்சத்தைத் தவிர்த்து நூறடி நடந்து சென்றால்தான் இனி அடுத்த வாய்ப்பு கிடைக்கும் என்கிற அவமானத்தால் கால்கள் நகரத் தயங்கினால் இங்கேயே பிந்து அசிங்கமாகப் பேசி விரட்டிவிடுவாள் என அந்த வாய்ப்பைப் பயன்படுத்தினாள். நடந்து சென்றபோது சிலர் இவளின் அந்தரங்க உறுப்பை மறைக்கும் அந்த சின்ன திரைத் துணியை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தது இவளுக்கு முகச்சுளிப்பையும் அருவருப்பையும் ஏற்படுத்தியது.

 உச்சமாக, கோட்சூட் அணிந்திருந்த ஒருவன் அருகே வந்தபோது அவளின் இரண்டு கால்களுக்கு இடையேயான இடைவெளிவில் புகைப்படம் எடுத்ததையும் அதைக்காட்டி உடனிருந்தவனிடம் இவள் முகம் குறித்த சைகைகளையும் செய்தபோது  முழு நிர்வாணத்தால் வரும் அவமானத்தைக் காட்டிலும் கோபம் அதிகமாக இருந்தது. பின்னாட்களில் நிறைய சின்ன சின்ன வாய்ப்புகள் அவளைத் தேடி வந்தன. அதிலும் அவளுக்காகவே  ‘கண்டெண்ட்கள்’ உருவாக்கப்பட்டு அதில் வலம் வர வைத்தனர். சில டாக்குமெண்ட்ரிகளிலும்  முகம் காட்டியிருந்தாள். சினிமாவிற்கு அவள் வந்தது பணம் என்பதைத் தாண்டி புகழ் போதையில் ஊறி மிதக்க வேண்டும் என்பதற்காகத்தான் என பிந்துவிடம் வெளிப்படையாக அவளால் சொல்ல முடியாததற்குக் ஏராளமான காரணங்கள் இருந்தன.

போட்டிக்காக ஜிம்மி ரோஷினியின் கூந்ததலிலிருந்து அணிய வேண்டிய காலணி வரை குறிக்கவும் மெல்ல அவளை நடக்க விட்டு தூரத்தில் அமர்ந்துபார்த்து மீண்டும் விதவிதமாக ரோஷினியை நடக்கச் சொன்னான். பின், அவனாக அவளின் இடுப்பில் கைவைத்து கால்கள் இருக்க வேண்டிய கோணத்தைச் சுட்டிக்காட்டினான். வயது நிபந்தனையும் இல்லை என்கிற விதியில் இப்படியான வாய்ப்பு மீண்டும் கிடைப்பது மிக அரிதானது என்பதை எடுத்துச் சொல்லி பிந்து இவளைத் தொடர்ந்து கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைத்தாள். அவளே வலிய வந்து பேசியதிற்கு ‘பிந்து ஆடிசன்ஸ்’ நிறுவனத்திற்கு விளம்பரத்திற்காக போட்டியில் வென்ற அழகிகளை முன்னிலைப்படுத்தலாம் என்கிற புதிய காரணம் இருந்ததை அறிந்துகொண்டாள். ரோஷினிக்கு எந்த தயக்கமும் இதில் இல்லை. தன் அடையாளம் குறித்தும் தன் உடல் தோற்றத்தைக் குறித்தும் அவள் வெளிப்படையாகவே இருந்திருந்தாலும் ஷிவ் சில மாதமாக இனி அழகிப்போட்டிகளில் பங்கேற்க வேண்டாம் என்றும் நிர்பந்தித்திருந்தான்.

இனி எந்த செலவுகளையும் பகிர்ந்துகொள்ள வேண்டாமென்றும் எல்லாவற்றையும் தானே பார்த்துக்கொள்வதாகச் சொன்னாலும் இவளுக்கு இத்தனை நாள் போராட்டத்திற்கு இவன் வார்த்தைகள் சுற்றி போட்டப்பட்ட கம்பிவேலியாக இருந்தது. இரவில் அதிகமாக பாருக்குச் செல்வதைத் தவிர்க்கலாம் என்றவனைப் பார்த்து சத்தமாகச் சிரித்தாள்.

 “உனக்கு என்ன வேணுமோ, அதை அரேன்ஞ் பன்ணித் தரேன். ஆனா, எங்கேயும் எனக்குத் தெரியாம சுத்தக்கூடாது” என அவன் சொன்ன வார்த்தைகளை சிகரெட் பிடித்தபடி கழிவறையில் அமர்ந்து நினைத்து நினைத்து சிரித்தாளும் நீண்ட மௌனமும் அவளுக்குள் இருந்தது.

கண்டிப்பாக போட்டியில் பங்கேற்றே ஆக வேண்டும். இவனுக்காகவெல்லாம் வாய்ப்புகளைத் தூர வீச முடியாது. அதுவும் ஷிவுக்கு முன்பாக  இவளுடன் இருந்த பெரும் புள்ளியே கட்டுப்பாட்டை விதித்திருக்காததையும் யோசித்தாள். பட்டத்துடன் பரிசுத்தொகையான ஐந்து லட்சமும் இவளுக்கு தற்போது தேவையாக இருந்தது. ஒருவேளை வென்றால் எங்காவது தனியாக பயணித்துவிட்டு வரலாம் என்பதைப் போன்ற சில திட்டங்களை வைத்திருந்தவளுக்கு இவனுடைய கண்டிப்பான அணுகுமுறைகள் சோர்வடைய வைத்தன.

நீண்ட போராட்டத்திற்குப் பின் கிடைத்த வாய்ப்பாக இருந்தாலும் அவளுக்குள்  நம்பிக்கையின்மையால் உருவாகும் பதற்றம் சூழத் தொடங்கியது. நடித்துக்காட்டியே சலித்துப் போயிருந்த உடலும் விவரிக்கப்படுகிற எந்தக் காட்சிகளுக்கும் ஒரே அசைவையே வழங்கி வருவதை ரோஷினி சில நாள்களாக கவனித்தபோது சரீரம் பெரிய வெறுமைக்குச் சென்றுகொண்டிருப்பதாக உணர்ந்தாள். பிந்து பயிற்சி செய்து பழைய நடையை கொண்டு வரலாமென நம்பிக்கை அளித்திருந்தாலும் காதலுக்கு, காமத்திற்கு, அண்ணன் தம்பி பாசத்திற்கு என முகங்கள் ஒரே கோணலையே திரும்பித் திரும்பி வெளிப்படுத்தியது. முன்பு இவளின் நடிப்பைப் பற்றி கருத்தே சொல்லாத ஷிவ்வும் “ஒரே ஆட்டத்தை வேறு வேறு உடைகளில் ஆடும் ஆட்டக்காரி”உடையாத தமிழில் சொன்னபோது ஒருகணம் அவள் திடுக்கிட்டாள். இதோடு எத்தனை பேர்  “நல்ல ரோல் வந்தா சொல்றேன்” என்கிற வார்த்தையை ஒரே மாதிரி சொல்லியிருப்பார்கள்? நினைத்தபோது அவளாகவே தன்னைப் பற்றிய தன்னிரக்கத்தை உருவாக்கி நாட்குறிப்பில் கன்னடத்தில் “எந்தக் காலத்திலும் ஆண்களுக்கு பெண்கள் குறித்து நல்ல சிந்தனையே வராது” என எழுதி அதைச் சுற்றி கட்டம்போட்டு மேலும் பளிச்சென கண்ணில் படும்படியான பக்கமாக மாற்றி வைத்துக்கொண்டாள்.

                                                  ***********

கேளிக்கை விடுதியின் பார் மேலாளரே வீட்டிற்குச் செல்ல ஷிவுக்கு வாகனத்தை ஏற்பாடு செய்துகொடுத்து அதற்கான பணத்தைப் பெற்றுக்கொண்டான். உளறலில் இரண்டு முறை வீதியை சுற்றிவந்து அப்பார்ட்மென்டின் வாசலில் வந்திருந்திறங்கிதும் கதவைப் பிடித்து நின்றபோது அதிகாலையைத் தாண்டியிருந்தது. மாடிப்படிகளில் முகம் வியர்க்க ஏறி தன் அறைக்கதவின் முன் நின்றபோது ரோஷினியின் காலணிகள் இல்லாதது ஏமாற்றத்தைத் தந்தது. உயிரில்லாமல் அணைந்துகிடந்த செல்போனை உயிர்பிக்கவும் இவனுக்கு விருப்பம் இருந்திருக்கவில்லை. அவளிடம் எத்தனை முறை பேசினாலும் அதே பதில் பலதரப்பட்ட உடல்மொழியில் வெளியாவதை கற்பனை செய்ததும் பெரும் தளர்வாக உணர்ந்தான். காலணி அடுக்கத்தில் கிடந்த பழைய ஷுவில் மறைத்திருந்த சாவியை எடுத்து துளையில் பொருத்தித் திருகினான்.

வேறு தொழிலுக்குச் சென்றுவிடுவது பற்றிய சிந்தனைகள் மீண்டும் மெல்ல படறத் துவங்கின. மெத்தையின் குறுக்காக உடலைக் கிடத்தி கைகளை பின்னால் கட்டிக்கொண்டு கண்களை திறந்தபடி ஆழந்திருந்தவனுக்கு நீண்ட நாளாக இருக்கும் படத்தயாரிப்பு ஆசை துளிர்ந்தது. நமக்கு யாரும் எதுவும் செய்யப்போவதில்லை என்பதை இந்தக் குறுகிய ஆண்டுகளில் உணர்ந்திருந்தான். கல்லூரி முடித்து எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்தவனுக்கு அவனுடைய மென்மையான எண்ணை முகம்கொண்ட நேர்த்தியான சரீரமும் இயல்பாக அமைந்திருந்த கட்டழகான தோற்றமும் ‘மாடலிங்’ துறைக்கு வருவதற்கு  போதுமானதாக இருந்தது.

முதலில் மறுத்தாலும், பணத்திற்கான தேவைகள் பெரிதாக இல்லாததால் அதில் கிடைக்கும் வருமானத்தைவிட அதே துறையிலிருந்தால் கண்டிப்பாக சினிமா வாய்ப்பு வருமென்பதை ஜிம்மியுடனிருந்த மாடலிங் கோச் சொன்னபோது ஆர்வமாக இங்கு வந்தான். மாதத்தில் அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே இவனுக்கு வேலை வந்துகொண்டிருந்தது. பெங்களூர், கொல்கத்தா, தில்லி  வரை ஜிம்மி அழைத்துச் சென்று மேடையேற்றியிருக்கிறான். இப்போதுகூட யாரிடமும் அதிகம் பேசாமலிருப்பவனுக்கு ஆரம்ப நாட்களில் இரவுகளில் மட்டுமே விழித்திருக்கும் இந்த ஆந்தைக் கூட்டத்தை பார்ப்பதற்கு ஒருவித அச்சம் எழுந்தது.

பழக்கப் பழக அந்த உலகத்தில் தன்னைக் கிடத்திக்கொண்டவனுக்கு அதிலிருந்து முற்றாக விலகி வேறொன்றைச் செய்யவும் முடியவில்லை. சில நாட்களாக தானாகவே சொந்தமாக படத்தைத் தயாரித்துவிடுவது குறித்து தீவிர பரிசீலனையில் மனம் கூடி வருவதைத் தவிர்த்து பிறிதொன்றை யோசிக்க முடியவில்லை. இரண்டு மாதம் கழித்து வரவிருக்கும் ரோஷினியின் பிறந்தநாளில் இதைப்பற்றி பேசலாம் என்றிருந்தவனுக்கு அவளுடைய செயல்கள் இவனுக்கு ஆத்திரத்தை வரவழைத்திருந்தன.

இப்படியே நாள்களைக் கடந்துகொண்டிருப்பதில் இருவருக்கும் உடன்பாடில்லை. அதை அறிந்திருந்தாலும் அவனுக்கு இந்தப் போட்டி குறித்து உறுத்தல் இருந்துகொண்டே இருந்தது. கால்களைத் திருப்பி சரியான முறையில் படுக்கையில் உடலை நீட்டினான். தலை வலி மெல்ல எழுவதும் அமிழ்வதுமாக இருந்தது. அருகே கிடந்த போனை உயிர்பித்து வாட்ஸ் ஆப்பில் அவள் எதாவது நிலைத்தகவலை பதிந்திருக்கிறாளா? கண்களைத் தேய்த்து மீளமீளப் பார்த்தான். இறுதியாக அதிகாலை அவள் நண்பர்களுடன் ஈசிஆரில் இருப்பதைப் போன்ற படத்தைப் பகிர்ந்து “பேட் வைப்ஸ் வித் குட் ஃபெல்லோஸ்” என்கிற வார்த்தைகளும் அதன் பிறகு சில ஸ்மைலிக்களையும் இணைத்துப் பதிவேற்றியதைப் பார்த்ததும் மூளை கொஞ்சம் விழிப்பு நிலைக்கு வந்தது.

உடனடியாக, அவளை பிளாக் செய்து போனை தூரமாக வீசினான். இவள் என்ன செய்தாலும் அவளிடமிருந்து விலக முடியாத வசீகரத்திற்குக் காரணம் மற்ற பெண்களிடம் இல்லாத புதுமை உன்னிடமிருப்பதுதான் என ரோஷினியிடம் சொன்னபோது அவள் “ஓஹோ” என்பதைத் தாண்டி ஒரு புன்னகையைக்கூட வெளிப்படுத்தவில்லை.

அவளுடைய முதல் காதல் தோல்வியை சொன்னபோது இருவரிடமும் உருவான மௌனத்தை அவளே உடைத்து   “எல்லாமே இருக்க வரைதான் டியர்” என்றதும் இவனுக்கு என்னவோபோல் இருந்தது.

புரண்டு படுத்தான். அன்று ஊரிலிருந்து முழு வேகத்தில் கிளம்பி மாடலாக வந்தவனுக்கு  அதிர்ச்சிகள் காத்திருந்தன. இதுவும் அதிகமாக வருமானம் வரக்கூடிய துறைதான் என்றிருந்தவனுக்கு ஜிம்மி நட்சத்திர விடுதி ஒன்றில் நடைபெற்ற பிரபல நிறுவனங்களின் ஆடை அறிமுக விழாவிற்கான  ‘ரேம்ப்வாக்’-கில் பங்கேற்க அழைத்துச் சென்று சில மணி நேரங்களில் மாடலாக வந்தவர்களுக்கு கூலி கொடுத்து அனுப்பியதும்  ‘இது ஒருநாள் கூத்து’ என்பதை புரிந்துகொண்டான். வாரக்கணக்கிலிருந்து சில நேரம் மாதக்கணக்கு வரை ஒரு மேடையேற்றத்துக்காக காத்திருக்க வேண்டும். தனியாகவோ துணையுடன் இணைந்தும் லட்சங்களைத் தொடும் அந்த ஆடம்பரமான ஆடையை அணிந்து வந்தாலும் ஓரிரவிற்கான சம்பளம் அதிகபட்சம் ஆயிரத்து ஐநூறு ரூபாய்தான். இவன் குடியிருக்கும் வீட்டின் வாடகை எட்டாயிரம். ஸ்பான்சர்கள் கிடைக்காத இரவுகளில் சொந்தக்காசில் குடித்தால் இந்த வருமானத்தில் மூன்று பியருக்கும் ஒருவேளை உணவிற்கும் கூட இந்தப் பணம் தாங்காது.

இரவில் விழித்திருந்து அதைக் கொண்டாடாதவர்கள்  வாழ்வில் பெரிய அனுபவத்தை இழப்பவர்கள் என்கிற எண்ணமும் வேசத்தை அழிக்காத, குணத்தின் நிறங்களை மாற்றத் தேவையில்லாத இந்த சொகுசான இருட்டில் பாயும் வண்ண ஒளிகளில் மனம் போதையில் லயித்துக்கிடக்கும் ருசியைக் கண்டவனுக்கு ’மாடலிங்’ வருமானம் பெரிய நெருக்கடியாக தெரியவில்லை. பணத்தைவிட சகிப்புத்தன்மை உள்ளவர்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடிகிற துறையில் அது அவனுக்கு பெரிய குறையாகவும் உணரமுடிந்ததில்லை.

ஓராண்டுகாலம் மாடலிங் இரவில் கரைந்து போயிருந்தவனுக்கு ஜிம்மி மூலமாகவே சில குறும்படங்களில், படத்தில் துணைக்கதாப்பாத்திரத்தில் நடிக்கவும் வாய்ப்பு வந்தது. முதல் தோற்றமாக முழு திரைப்படத்தில் பங்கேற்க வேண்டாம் என்கிற நண்பர்களின் வார்த்தையைக் கேட்டு இரண்டு குறும்படங்களில் நாயகனாகவே நடிக்க ஒப்புக்கொண்டான். வாரத்தில் வெள்ளி,சனி, ஞாயிறு தினங்களில் கண்டிப்பாக  கேளிக்கை விடுதிகளில் மாடங்கில் நண்பர்களுடனான சந்திப்பு நிகழ்ந்துவிடுமென்பதால் அதற்கடுத்த காலைகளில் நடக்கும் படப்பிடிப்புகளில் எதிலும் இவனால் சரிவர கலந்துகொள்ள முடியாது.

இப்படியான நடவடிக்கைகளால் ஜிம்மி இவனைப் பரிந்துரை செய்வதை ஒருகட்டத்தில் நிறுத்திக்கொண்டான். எந்த தோற்றத்திற்கும் சரிப்பட்டு வருகிற முகமிருந்ததால் சிலர் ஷிவ் இழுப்பிற்கு சென்று குறும்படத்தையும், ஒரு ஆல்பம் பாடலையும் முடித்தனர். எதுவும் இதுவரை எங்கும் வெளியானதில்லை. இவனாகவே நண்பர்கள் மூலம் தயாரிப்பு நிறுவனத்தைத் தேடிச் சென்றாலும் இவனிடம் போட்டோஷுட்களை தவிர சினிமா சார்ந்து தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிற வேறு  எந்த அடையாளப் பணிகளும் இல்லாததை நினைத்து உள்ளுக்குள் நொந்திருக்கிறான்.

அப்படி தானகவே தேடி வந்த நல்ல வாய்ப்பை விட்டுவிட்டு மறுமுறை சென்றபோது  “ஏன்பா அன்னைக்கு கூப்பிடப்ப வரலைன்னு சொல்லிட்டன்னு பசங்க சொன்னாங்க…நான் சம்பாதிச்ச காசுல உன்னைய எதுக்குபா நடிக்க வைக்கனும்? சும்மா மூணு மாசமா ஆபிஸ்க்கு வந்தா டீபாய் வேலதான் போட்டுத் தர முடியும்..இல்ல டீ வாங்கிக் கொடுக்க முடியும். விட்டா என்னைய மேக்கப் போட்டுவிடச் சொல்லீருவீங்க” பிரபல சேனல் ஒன்றில் நாடகங்களை தயாரித்துக்கொடுக்கிற நிறுவனத்தின் முதலாளியிடமிருந்து இனி இங்கு வர முடியாத அளவிற்கான வார்த்தைகள் காதில் இறங்கியிருந்தது.

இன்னொருநாள் இருவரும் சேர்ந்து வாய்ப்பு தேடும் முயற்சியில் இருந்தபோது தயாரிப்பாளர் சொன்ன இடத்திற்கு ரோஷினி ஷிவ் உடன் நின்றுகொண்டிருந்தாள். நேரம் கடந்ததும் ஷிவ் சிகரெட்டைப் பற்றவைத்தான். ரோஷினி முகத்தை சுளித்தபடி ‘உடனே இப்ப கார் வந்தா என்ன பன்னுவ’ என அவனைத் திட்டித்தீர்த்தாள். ‘போட்டோஷூட் தான? அட்வான்ஸ் வாங்கிட்ட மாதிரி சீனப் போடாத’ என்றவனை அவள் இவனை ஒரு கணம் வெறுத்தாலும் தனக்காக வந்து நிற்கிறவனின் அருகாமையை விடவே கூடாது என்பதில் கவனமாக இருந்தாள்.

“என்ன ரோல்?”

 “ஹீரோயின்”

ஷிவ் சாலையில் வேகமாகச் சென்றுகொண்டிருந்தவர்களைப் பார்த்தபடியே சிரிக்கத் துவங்கினான். சில நொடிகள் அவள் அதை ரசித்தாலும் எங்கோ தன் உடலை அவன் பலவீனப்படுத்துகிறான் என்பதை உணர்ந்து முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

உண்மையிலேயே அவளுக்கு ஹீரோயின் ரோல் தான் என்றபோது அவளே சிரித்துக்கொண்டு   “என்னை நேர்ல பாத்திருக்கீங்களா புரோ?” என அழைத்த நபரிடம் தன்னைக் குறித்து கேட்டவளுக்கு “யாஹ்…ஐ நௌ யூ ரோஷ்னி..” வார்த்தைகள்  ஆழத்தில்  மின்சார அதிர்ச்சியைக் கொடுத்தாலும் முப்பதைத் தாண்டிய தேகம் என்பதைவிட தன் தோற்றம் நாயகிக்கானது இல்லையென்பதை இவளே அறிந்தாலும் அழைத்தவரை சந்திக்க முடிவு செய்தாள். தன்னுடைய இத்தனை ஆண்டுகால தொடர் முயற்சியில் நடிப்பதற்காக வந்த அத்தனை அழைப்புகளிலும் தொடர்புடையவர்களை சந்திக்காமல் இருந்ததில்லை.

இவன் பக்கத்தில் இருந்தது சில நொடிகள் பாதுகாப்பாக உணர்ந்தாலும் இவனைக் காரணம் காட்டி எதாவது வாய்ப்புகள் பறிபோகுமா என்ற அச்சத்திலும் இருந்தாள். திரும்பி இப்படியான அழைப்பு அவள் வாழ்வில் சாத்தியம் தானா என் கடந்த ஏழு ஆண்டு முயற்சிகள் மூளையைத் துருத்திக்கொண்டே இருந்தது. இதற்காக , எதைச் செய்யச் சொன்னாலும் தயார் மனநிலைக்கு அவளை இத்துறை கொண்டு வந்திருப்பதை நினைத்து தன்னை நொந்தாள். முயற்சிகள் செய்து மோதிப்பார்த்ததில் நம்பிக்கைகள் சில்லாக சிதறியதுதான் மிச்சமென்பதை மனம் ஓட்டிப்பார்த்துக்கொண்டது. சினிமாவில் தோல்வியை மட்டும் ஒப்புக்கொள்ளவே கூடாதென்பதில் காட்டியிருந்த உறுதியில் அதைவிட விலை மதிப்புமிக்க வாழ்க்கைக்கான தருணங்களை கைவிட்டிருக்கிறாள். கட் சொல்ல முடியாத நீண்ட சிங்கிள் ஷாட்களில் எத்தனை விதமாக நடித்துக்காட்டுவது?

ஷிவ் “இன்னும் எவ்ளோ நேரம்டி? சினிமா சோத்துக்கு சூத்தைக் கொடுக்கற வேலைன்னு அன்னைக்கு ஒரு ரைட்டர் சொன்னார். சரியாத்தான் இருக்கு” என சோர்ந்துகொண்டான்.

“அதைக்கொடுக்காமயும் இங்க ஷைன் ஆகலாம். நீயும் நடிக்கணும்தான இங்க வந்த வந்த? இதுவர எத்தனை பேர்கிட்ட காட்டிருக்க?”

 “அதுக்கு எந்த அவசியமும் எனக்கில்ல.. இங்க மட்டும்தான் அவமானப்படவே வாய்ப்பு தேட வேண்டியாத இருக்கு”

ரோஷினி எதோ சொல்ல வாயெடுத்தாள். கொஞ்சம் படபடப்பாக மனம் அடித்துக்கொண்டதும் தண்ணீரைக் குடித்தாள்.

வண்டி வந்தபோது உடனிருந்த ஷிவ்வை பின்னால் வருகிற வண்டியில் ஏறிக்கொள்ள சொன்னபோது இருவரும் சேர்ந்து தயங்கினர். நின்றிருக்கிற ஆடி காரில் டிரைவருடன் ஒருவர் மட்டுமே இருந்ததில் ஒருவித தயக்கங்கள் உருவானதைக் கண்டவர் கண்ணாடியை மேலும் கீழறக்கி இருவரையும் அருகே அழைத்து  “அங்க வந்தா அட்ஜெஸ்மெண்ட் பண்ணச் சொல்லுவாங்க…உங்களுக்கு ஒகேவா?” என்றதும் ஷிவ் கோவமாக காரைவிட்டு நகர்ந்து நடந்தான். வண்டியிலிருந்தவனைக் கேவலமான பார்வையில் தாக்கிவிட்டு பின்னாடியே ஓடும் வேகத்தில் ஷிவ் என கத்தியபடியே ரோஷினி நடந்தாள்.

டீசர்ட்டை கழற்றினான். ஏர் கூலரின் வேகத்தை அதிகரித்தபடி மெத்தையை இறுக்கி கண்களை மூடினான். அவனை நோக்கி வந்த வாய்ப்புகளை எதற்காக வேண்டாம் என்றோம் என்பதுகூட புரியாமல் இருந்தது. இனி ஜிம்மியிடம் போய் நின்றாலும் கூச்சப்படாமல் படுக்க அழைப்பான். அன்றாடத்தை நகர்த்தத் தவிக்கும் மற்ற மாடல்களிடம் ஆலிவ் எண்ணையைக் கொடுத்து நிர்வாணமான அவனது உடலில் தேய்த்து விடச்சொன்னாலும் மறுப்பு தெரிவிக்காமல் அந்தக் காரியங்களைச் செய்துவிட்டு அடுத்த இரவில்  ஒன்றுமே நடக்காததுபோல் கட்டியணைத்து ஒருவரை ஒருவர் நலம் விசாரிக்கும் காட்சியை நினைக்கும்போதே இவனுக்கு குமட்டிக்கொண்டு வந்தது.

எதோ கையில் கொஞ்சம் காசு இருப்பதால் மானம் போகாமல் இருக்கிறது என்பதை நினைத்துப் பார்க்காமல் தூங்கச்செல்வதில்லை. எத்தனை முகங்கள்?  முழுபோதையில் இடுப்பிற்குக் கீழ் பரவிய எத்தனை கைகளை தடுத்திருப்போம் என்பதைக் கணக்கெடுத்தால் தலை தொங்கிவிடும்.

ஜிம்மியிடமிருக்கும் பல ஆண், பெண் மாடல்களும் இன்று நகரத்தில் காசுக்காக விலை போகும் உயர் ரக அடிமாடுகள். பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கு வாரியிறைக்கிற கூட்டத்தை ஒவ்வொரு இரவிலும் மாடலிங் கோச்களிடம் அருகே அமரும் செல்வத்தில் குளிக்கும் பிள்ளைகள் கேட்கும் ‘புதுசா எவன் வந்தான்’ என்கிற கேள்விகளை சந்தர்ப்பம் அமையும் சூழல்களிலெல்லாம் கேட்டிருக்கிறான்.

இவன் வளர்ந்து வந்த வாழ்க்கைக்கு முற்றிலும் அன்னியமான இந்த உலகம் எப்படி இத்தனை நாள் விரட்டிவிடமால் இங்கேயே சுற்றிவிட்டபடியே இருக்கிறது என்கிற குழப்பங்கள் உண்டாக்குகிற வெறுமைகள் மனதை அழுத்தும் நேரத்தில் கொண்டாட்டங்கள் அவற்றை துரத்திவிடுகிற விசித்திரத்தையும் உணர்ந்திருக்கிறான்.

இவனாகவே கதை எழுதி இயக்க முயற்சி செய்யவும் வேலைகள் நடந்தது. அதற்கும் இரண்டு லட்சம் வரை தேவைப்படும் என்றதும் அத்தனை காசைப்போட்டு சும்மா யூடியூப் காரனுக்கு தூக்கிக்கொடுக்கவும் மனசு வரவில்லை. பேச்சின் இடையே ரோஷினிதான்  “இதுக்கு மேல நீதான் புரொடியூஸ் பண்ணி படத்தை எடுக்கணும். நான் வேணா சம்பளம் வாங்காம நடிச்சுக்கொடுக்கற.. ஆனா அதுக்கும் குறைஞ்சது ஒரு கோடி ஆகுமே” என்றபோதுதான் தயாரிப்பு குறித்து யோசிக்க ஆரம்பித்தான். இப்படித்தான் கதை இருக்க வேண்டும் என்கிற ஒன்லைனை முழுவடிவ திரைக்கதையை எழுத்திதரக் கூடிய ஆளிடமும் பேசி அரை மனதாக  முடிவை எடுத்திருந்தான்.

திரும்ப அவளுடையை முகம் கோர்வையில்லாமல் நினைவுகளில் பதிந்து மறைந்ததில் தலை மீண்டும் கனத்தது. உடலில் ரணக்காயங்கள் ஏற்பட்டதைப்போன்ற வலி தேகம் முழுக்கப் பிண்ணியபோது மெத்தையிலிருந்து உடலை பிய்த்தெடுத்து தரையை நோக்கி உருண்டான். வெதுவெதுப்பாக இருந்தது.

ஓரத்தில் அக்கனவு குறித்த தீவிர எண்ணங்கள் ஒருபுறம் எழுந்து வந்தாலும் உள்ளே பணத்தை முதலீடு செய்யும் போது உருவாகக் கூடியவற்றின் பதற்றமும் நிறைந்திருந்தது.

ரோஷினியை கைவிட்டு தனியாகவும் இருக்க முடியாததால் பல தருணங்களில் அவள் இவன் கண்ணெதிரே எல்லை மீறி நடந்துகொண்டதையும் கண்டிப்பான முறையில் அதட்டியிருந்தது அவளுக்கும் மன ரீதியான விலக்கத்தை அளித்திருக்கும் என்றாலும் தன்னால் அவள் போக்கிற்கு செல்ல முடியாததையும் நினைத்து வருந்தினான்.

மதியத்தை நெருங்கியபோது கண்கள் எரிய எழுந்தான். அப்போதும் ரோஷினி வந்திருக்கவில்லை. ஷவரிலிருந்து வெளியேறிய நீர் வெகுநேரம் தலையில் விழுந்ததை உணர்ந்தவன் விரைவாகக் குளித்து வேறு உடையை மாற்றிக்கொண்டான். மெத்தைக்கு அருகே இருந்த மேஜையில் ரோஷினியின் டைரி கிடந்தது. இறுதிப்பக்கத்தைப் பிரித்து ஒரு தாளைக் கிழித்து இரண்டுமுறை அடித்து சில வார்த்தைகளில் கடிதமாக எழுதி கண்ணில் படும்படியாக அதனடியில் வைத்தான்.

                                                           7

சாமிநாதனின் இறுதி மரியாதைக்கு இத்தனை கூட்டம் வருமென யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. மிஞ்சினால் உள்ளூரிலிருந்து இருநூறு பேர் கலந்துகொள்வார்கள் என்றே பாலன் ஊகித்திருந்தான். ஆனால், விடிந்த காலைக்குள் கிட்டத்தட்ட ஐநூறு கைகளை அவன் கரங்கள் பற்றியிருந்தது அதிர்ச்சியைத் தந்தது. வீட்டின் முகப்பில் நிறுத்த இடமில்லாமல் சிலர் அருகே இருந்த வீதிகளுக்குச் செல்லும் சாலையில் வண்டிகளை நிறுத்துமளவிற்கான கூட்டத்தைப் பார்த்ததும் படுக்கையில் கிடந்தவரின் மரணம் முழு  உருவத்தை அடைந்ததுபோல திகைப்பிலிருந்தான். பார்த்துப் பார்த்து நெருங்கிய சொந்தங்களுக்கே சொல்லியிருந்தாலும் அப்பாவின் முகத்திற்காக சொல்லாமல் கூட சிலர் வந்திருந்தனர். அம்மா வழிலான சொந்தங்களை அவன் சிறுவயது முதலே பார்த்ததில்லை என்பதால் அங்கிருந்து யாரும் வந்திருக்கவில்லை.  பெரும்பாலும் பழக்கத்திற்கே கூட்டம் கூடியிருந்தது. காலை சீக்கிரமாக காரியங்களை முடித்து உடலை அப்புறப்படுத்திவிட்டு பிறகு மற்றவைகளை கவனித்துக்கொள்ளலாம் என தயாராகியிருந்தான். முழு கவனமும் முதல்தாரத்தின் பிள்ளைகள் எந்த சூழலிலும் இவனிடமிருந்து உரிமைகளை வாங்கிவிடக்கூடாது என்பதிலும் தேவையில்லாத பேச்சுகளை பேசினாலும் பொறுமையாகச் சென்றுவிடுகிற முடிவுடன் இருந்தாலும் உள்ளே எழுந்த பயத்தை தணிக்கமுடியவில்லை.

காலையில் மின்மயானத்திற்கு எடுத்துச் சென்று காரியங்களை அங்கே வைத்தே முடித்துவிட்டு எரித்துவிடலாம் என சித்தப்பாவிடம் சொல்லி நேற்றிரவே  முன்பதிவு செய்து வைத்திருந்தான்.

இரண்டு டீ கேன்  வேறுவேறு மூலைகளில் வைக்கப்பட்டது. வயதான பெண்கள் சிலர் இரண்டுமுறை ஊற்றிக் குடித்ததும்  “ராசாபோல இருந்தீயே…பாளையத்து நாட்டாமை…மகாராசாவுக்கே தீர்ப்பெழுதி போட்டானே கட்டித்தின்னி எமன்…” ஒப்பாரிகள் தொடர்ந்தன.

தூரத்தில் ஆட்களுடன் நின்றிருந்த பூபதி வெளியே வைத்திருந்த உடலுக்கு மாலையை செலுத்திவிட்டு பாலனிடம் எதையும் பேசாமல் காத்திருந்தான். இவன் எதிர்பார்த்திருந்த உள்ளூர் பெரியவர்களிடம் தன் ஆளை அனுப்பி வந்ததற்கான விசயத்தைச் சொன்னான். ஒருகணம்  பதறினாலும் சிலருக்கு ஒரு குடும்பம் அழிகிறதை நினைத்து உள்ளுக்குள் மகிழ்ச்சி ஊறியது.

பாலனை அழைத்தனர். சாமியானா பந்தலுக்கு அருகே தனியாக சில நாற்காலிகள் போடப்பட்டு பழைய உருப்படிகள் சுற்றி அமர்ந்தனர்.

அருகிலிருந்த சின்னு   “பொணத்த தூக்கற வேலய பாக்க வேண்டாங்களா? இதுக்கு என்ன அவசரம்? எல்லாம் பாலன் மாப்ளைக்கு தெரியுங்க…” என்றான்.

“அவனுக்கு என்றா தெரியும்?” எனக் கேட்டபோது பாலன் கொஞ்சம் தடுமாற்றத்துடன் யாரையும் எதிர்கொள்ள முடியாமல் திணறினான். பூபதி நெருங்கிவந்து “ங்கோயாலொக்க, பொழைக்கோனுமா இல்லியா? ஒரே ராவடி மயிரு பண்ணிட்டு இருக்க நீ” கோபமாகக் கத்தினான். உள்ளூர இவனுக்கு ஆத்திரம் அதிகரித்தாலும் எழுதிவாங்கிக்கொண்ட விசயம் தெரிந்துவிட்டால் என்ன செய்வது என்கிற அச்சம் முழுமையாக ஆக்கிரமித்திருந்தது. எந்த சொல்லையும் சொல்ல விரும்பாமல் கூட்டத்தைப் பார்த்தான். பூபதி உடலை எடுக்க விடாமல் பிரச்னைக்காகவே வந்து நின்றது சுற்றியிருந்த அனைவருக்கும் விளங்கினாலும் அவனுக்கென கூட்டத்தையும் மதுவால் நிறைத்து அள்ளிக்கொண்டு வந்திருந்தது வெட்டுகுத்து வரைச் செல்லலாமென கூடியிருந்தவர்களுக்கும் பதற்றத்தை அளித்தது.

“இவனால எவ்ளோ மானங்கெட்டு திரியறோம், பரதேசிப் பயல அன்னைக்கு அடிச்சு விரட்டியிருக்கோனுங்” கூட்டத்தைப் பார்த்து கத்தியபடியே இருந்தவனின் ஆத்திரத்தை எந்த வார்த்தைகளும் கட்டிபோடாதென மரியாதைக்காரர்களுக்குத் தெரிந்தது.

“ஏனப்பா, அடங்கா குதுரையாட்டம் துள்ளிகிட்டு கெடந்தா பெரிய மனுசனுங்க பேச்சை போய்ச்சேர்ந்த உங்கப்பனா கேப்பான்? அமைதியா கேளப்பா அண்ணமாரு நோம்பில பன்னி குத்தராப்ல வார்த்தை விளுகதுல்ல”

“என்ன மயிருக்குயா இந்த நாயிக்கு நான் சொத்தைக் கொடுக்கோணும்? எங்கப்பன் இருந்தாரு இந்தக் கருமாந்திரத்தையெல்லாம் பகைச்சுக்காம இருந்துட்டேன். அந்தாளு போகப்போயி இங்க வந்துருக்கேங்.. நியாயம் கெடைக்கும்னு அமைதியா போகவேண்டிதா கெடக்கு இல்லாட்டி இவனும் அவரு கூடையே போவான்”

ஆத்திரம் தாங்காமல் “நீயுங் கூடவே வா, ஜோடியா போலாம். அவருக்குதான நீயும் பொறந்த” என்றான் பாலன்.

பூபதி கையை ஓங்கிக்கொண்டு முன்னேறினான். எல்லை மீறிய மதுவால் கண்கள் சிவந்து இமை சதைச் மடிப்புகள் அவன் தோற்றத்தையே மாற்றியிருந்தது.

“ஊமத் தாயோலி, பச்சோந்திய கையில கொடுத்தா மண்ணுக்குள்ளார போட்டு கலரை மாத்தி விளயாடுற கூதியான்… எனக்கு நீ சமமா?

பஞ்சாயத்து செய்யவே இரண்டு குடும்பத்தையும் அனுசரித்துச் சென்ற சொந்தக்காரரான முன்னாள் ஊராட்சித் தலைவர் “ஊளக்கூதி பேச்சு பேச என்ன மயித்துக்குடா என்னையைக் கூப்டீங்க?” என்றதும் இருவரும் அமைதியானார்கள்.

தூக்கிக் கொண்டுபோய் உடலை எரித்துவிட்டு காரியங்களை முடித்துவிட்டால் இங்கிருந்து கிளம்பிவிடலாம் என்பது மட்டுமே பாலனுக்கு உறுத்திக்கொண்டிருந்தது.

எதிர்பார்க்காத கணத்தில் விடிந்தும் விடியாததுமாக பூபதி வந்து வாசலில்  கூட்டத்தை இறக்கியது கலக்கத்தை உண்டாக்கியது. அவனின் வார்த்தைகளிலிருந்து தற்காத்துக் கொள்ள இவனிடம் இருக்கும் ஆயுதமே பேசாமல் கிடக்கும் சாமிநாதனின் உடல்தான். மேலும் துக்கத்தை இழுத்துக்கொண்டு வந்ததை நினைத்தபோது கண்ணில் நீர் தட்டி நின்றதை துடைக்காமல் இருந்தான்.

 “பஞ்சாயத்துக்கு என்ன மாமா வேல? இது என் தாத்தன் ஊடு. இந்தாளு என்ன சொல்லி எழுதி வாங்குனாருனும் தெர்யல…இதுல செகண்ட் இன்னிங்க்ஸ்க்கு பொறந்தவன் எனக்கு சொந்தம்னா…நாங்கல்லாம் எங்க” என வாய்க்குள் ஆள்காட்டி விரலை விட்டு ஆட்டிக்காட்டினான்.

“இப்பயும் ஒன்னுமில்லீங்க , எங்கப்பன் வட்டிக்கு விட்ட காசையெல்லாம் இவந்தான அனுபவிக்கறான்? போயித் தொலயுது… ஆனா இந்த பண்ணையும் வூடும் சேர்ந்தாப்ள எம் பேருக்கு மாறியாகணும், எந்த நாயிக்கும் உரிமையில்லீங்”

“இப்பிடிச் சொன்னா எப்டிறா? அவனெங்க சாணியல்லவா போவான்? இத்தன வருசமா ஆத்தாளும் புள்ளயும் எங்கடா போனீங்க.. ஒருத்தனும் தலயைக் காட்டமா சாமி போயிச் சேர்ந்ததுக்கு அப்றம் ஆட்டிகிட்டு வந்திருக்கீங்க”

“அவனென்னமோ பண்ணட்டுமப்பா, உங்கென்ன உறுத்துது? பொணத்தைத் தூக்கவிடப்பா… புள்ளைகள ஏண்டா பெத்தம்னு உங்கொப்பன் ஆத்மாவை வேதனை பட வைக்கதா” பெரியவருடமிருந்து வந்த வார்த்தைகள் அவன் ஆவேசத்தைத் தணித்தது.

“தூக்கி வீசிட்டு எல்லா இன்னையோட  போயிருவீங்க….அப்றம் என் எடம் கிடைக்க உங்க வூட்டு திண்ணக்கால புடிக்க முடியுமா? இன்னைக்கே பேசி கணக்கைச் சொல்லீருங்க… வேணும்னா என்ற எடமே இந்தூர்ல ஒன்னு கெடக்குது அரை ஏக்கரா … அத எழுதி வைக்கற. இது நம்ம கைக்கு வரனுங்..”

பாலன் குனிந்திருந்து அவன் பேசுவதையே கேட்டுக்கொண்டிருந்தான். பிணத்தை எடுக்க விடாமல் செய்கிற பிரச்னையை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் கூட பூபதியிடம் பேசியும் பிடிவாதமாக இடத்தை எழுதித் தருவதாகச் சொன்னால் மட்டுமே தூக்கவிடுவேன் என கூறிவிட்டான்.

“நானுந் தரமுடியாதுங்க, இத்தனை வருசமா பார்த்து சீரளிஞ்சதுமில்லாம இவருக்குத்தான  பொறந்தேன்.. என்னைய வெரட்டிவிட்டு இங்க என்ன வெள்ளாம பாக்கப்போறானுங்க…”

“இந்த வாயி மயிரெல்லாம் பேசாதடா,  உங்கம்மா பாலு கறந்து வாங்கன நிலமில்ல..என் தாத்தனோடது இந்தாளு என்ன சொல்லி ஏமாத்தி வாங்கினாரு தெரியல.. இனி இவருக்கும் என் குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு ஆயிருச்சு.. அப்றமெதுக்கு உனக்கு எழுதித்தரணும்?

“இருக்கும்போது எந்த மயிரானும் எட்டிப்பார்க்கலீங்களே. எங்கியும் போக முடியாம இவரைச் சுத்தியே வாழ்க்கை போயிருச்சு, ஒரு வேல வெட்டிக்குக்கூட விட்டுட்டுப்போக மனசு வரல்லன்னு தானுங்க இங்கயே இருந்த”  பாலன் சொன்னதும் கூட்டம் அமைதியானது. யாரிடமும் எந்த சலனமும் இல்லை. பூபதி அருகே இருந்தவனிடம் தண்ணீர் பாட்டிலை வாங்கி வாயைக் கொப்பளித்து சில அடிகள் தள்ளியிருந்த வெளியே துருத்திய தென்னையின் பட்டையில் துப்பினான்.

“எங்கியும் போகலய்யா? ஏனப்பா.. எங்கயோ தொளிலு பண்ணப்போறன்னு வெளியூரு போயிட்டு மாசம் மாசந்தான் வந்துட்டு போன..  நம்ம காதுக்கு எல்லா நூஸும் வந்துச்சு.. இப்ப எங்கப்பன விட்டே நகரலன்னு பொலம்பிட்டு இருக்க” என்றான் பூபதி.

பேச்சுகள் ஓயாமல் இருந்தன. இறுதியாக பஞ்சாயத்துத் தலைவரே “எல்லாக் காரியமும் முடியட்டும்டா பூபு, பாலங்கிட்ட பேசி நல்ல முடிவ வாங்கித் தரேன். இது உன் தாத்தன் நிலம்னு அத்தாட்சிக்கு நானுமிருக்கறன் மறந்தராத” என்றார்.

“யாரு வார்த்தையும் நம்ப முடியாது. ஆனா, மாமா உங்க சொல்லுக்கு பொணத்தைத் தூக்கவிடறணுங்க.. எம்மட நெலம் எனக்கு வந்தாகோணும்”

பாலனிடம் சில வார்த்தைகளைப் பேசினார். அவனும் நல்ல முடிவாகச் சொல்வதாகக் கூறியதும் சொன்ன நேரத்தைத் தாண்டி மின்மயானத்திற்குள் அமரர் ஊர்தி நுழைந்தது. சின்னுவும் சித்தப்பாவும் ஆக வேண்டிய காரியங்களுக்கான ஆட்களுடன் இருந்தனர். உடலில் போடப்பட்டிருந்த  மாலைகளை சாலையில் பிய்த்து எறிந்ததுபோக  நிறைந்திருந்தவைகளை கழட்டி ஓரத்தில் வைத்தனர்.

பாலன் தலையில் குளிர்ந்த நீர் தெளிக்கப்பட்டு பிளேடு மென்மையாக வைக்கப்பட்டது. அடுதடுத்துச் செய்ய வேண்டிய முறைகளை செய்தனர். பூபதி தவிர்த்து முதல்தாரத்தின் மற்ற பிள்ளைகள் சடங்கில் பங்கேற்று மரியாதை செலுத்தியபின் இருக்கையில் வரிசையாக வந்தமர்ந்ததும்  ‘ஜென்மம் நிறைந்தது’ பாடலுடன் சாமியின் உடல் நெருப்பை நோக்கித் தள்ளப்பட்டது.

எல்லாக் காரியங்களையும் முடித்து மொட்டைத் தலையுடன் வீட்டிற்குள் நுழைந்தவனுக்கு சுவற்றின் ஓரமாக அப்பாவின் புகைப்படத்திற்கு அருகே சிறிய பலகையில் வைக்கப்பட்டிருந்த விளக்கு தீபத்தை தொட்டுக் கும்பிட்டு பின்பக்கம் உறவுக்காரர்களுக்கு சாப்பாடு பரிமாறிய இடத்திற்குச் சென்று தானும் உட்கார்ந்து கொண்டான். சிலர் முன் வாசலில் இருந்த சாமியானா பந்தலுக்குக் கீழே வட்டமாக நாற்காலியை அமைத்து அமர்ந்திருந்தனர்.

மாலை ஓய்கிற நேரத்தில் மெல்ல தூரல் விழுந்தது. வீட்டிற்குள் இருக்க விருப்பமில்லாதவனாக தோட்டத்தின் இறுதி மூலைக்கு அருகிலிருந்த கிணற்றுப் பக்கம் சென்று தொட்டியில் நீரைப்பாய்ச்சினான். நேற்று பிளக்கப்பட்ட கணுக்கால் மறைகிற அளவான குழித்தடம் காய்ந்திருந்தது. சிகரெட்டைப் பற்றவைத்து கயிற்றுக்கட்டிலில் அமர்ந்தான்.

அப்பா துடித்து விழுந்தபோது சின்னு கவனிக்காத நேரத்தில் கவனமாக அங்கிருந்து எடுத்து வரப்பட்ட டானிக் பாட்டில் நினைவிற்கு வந்ததும் மோட்டார் அறையின் கதவைத் திறந்து ஓரத்தில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த பாட்டிலை பழைய துணியைக்கொண்டு தூக்கி   தென்னை வேரைச் சுற்றி வெட்டப்பட்டிருந்த குழியை ஒட்டி நிற்க வைத்தான். மடியில் சொருகப்பட்டிருந்த செல்போனிலிருந்து வந்த அழைப்பு வயிறை அதிரச் செய்தபோது போனை எடுத்து பதிலளித்தான்.

“சாரி..எத்தனை டைம்  கால் பண்றது? மூணு மாசமா என்கிட்ட ஒழுங்கா பேசமா இருக்கற அளவுக்கு என்ன தப்பு செஞ்சேன்?” அழுகுரல்கள் நீண்டது.

“ஒரு ஹாப்பி நியூஸை சொல்ல எவ்ளோ நாள் காத்துட்டு இருக்க தெரியுமா?”

இவன் என்ன என்பதற்குள் அவள் மகிழ்ச்சியான குரலில்  “இந்தாண்டிற்கான தென்னிந்திய திருநங்கை அழகிப்பட்டம் எனக்குத் தான் கிடைச்சுருக்கு..யெஸ் மிஸ் டிரான்ஸ் சௌத்” என்றாள்.

“………………”

 “எல்லா ரவுண்டையும் ஈசியா முடிச்சுட்டேன்.. கடைசி நாள் போட்டியில பிந்து கொடுத்த சூப்பர் மாடர்ன் டிரஸ்தான் வின் பண்ண காரணம்னு எல்லாரும் சொன்னாங்க..”

“………………”

 “ஷிவ் ஆர் யூ தேர்”

 “கங்கிராட்ஸ் ரோஷினி… நானும் உங்கிட்ட ஒரு சர்ப்ரைஸ் சொல்லனும்..  சீக்கிரம் வர்ரேன்”என்றான்.

“கண்டிப்பா.. ஹவ் இஸ் யுவர் ஃபாதர் டா.. நல்லா இருக்கார்ல”

சில நொடி மௌனத்திற்குப் பின் மீண்டும் அழைப்பதாக அவளைத் துண்டித்துவிட்டு கட்டிலிலிருந்து எழுந்து கீழே குனிந்து தென்னை மரத்திலிருக்கும் வண்டைக் கொல்ல வைக்கிற மாத்திரை கலந்த டானிக் பாட்டிலை கவனமாக எடுத்தான். உரித்த பச்சை மக்காக்சோளத்தின்  மென் நார்களைப்போல வேர்கள் பரவிக் கிடந்த தென்னையின் அடிப்பாகத்தில் அதை ஊற்றினான்.  ஹைபிரிட் மரத்தின் உச்சியை பார்த்துவிட்டு ஆகாயத்தில் விழிப்பார்வையைப் பரப்பிய சிவபாலனுக்கு வானம் மெல்ல இருண்டு வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *