- காலாதீதத்தில் ஒலிக்கும் குரல்
உன்னை முன்வைத்து மீண்டும் உன்மத்தம். காலத்தில் நீ கரைந்தாலும் என் மனக்குகையின் செதுப்புகளில் உன் தத்ரூபம். நிசிகளின் கனவுகள் உன் அருகாமை. வாழ்ந்து தீர்க்கும் வாய்ப்புகள் அங்கே காத்திருக்கின்றன. என் தன்னிலை அழிந்து நான் வான்நோக்கித் திறந்து கிடக்கும் தருணங்கள் அவை. அக்கணங்களில் நிகழ்ந்து கொண்டிருப்பவனற்றின் சூத்ரதாரி யார்? உன்னையும் என்னையும் ஒன்றுசேர்த்து, தீராத களி நடனங்களை நிகழ்த்துவது எவரின் விழைவு?
ஒவ்வொரு யாமமும் தனித்தனியான பாவனைகளில். ஒன்றில் நீ என் அன்னை. மற்றொன்றில் நீயே என் நெஞ்சு பிளந்து ஊன் உண்ணத்துடிக்கும் யட்சி. சிசுவின் நிணம் வழியும் உதடுகள் கொண்டிருக்கும் இசைக்கியாக வேறொரு நாளில். தீராத உன் ரூபங்களின் வழியே என்னை மீண்டும் மீண்டும் திறந்து கொண்டிருக்கிறேன். ஒற்றைத் திறப்பின் ஊடாக மிகுந்த பிரக்ஞையோடு வந்து செல்லும் என் கட்டுகள் காணாமல் ஆகின்றன. உன் உருவம் ஒரு வாய்ப்பு. உன் சந்நிதியில் முன் பிறவிகளில் நான் சேமித்தவை அனைத்தும் தொலைந்து போகின்றன. நானறியாத நான்களை நீ கண்டுபிடித்து தருகிறாய். அவற்றின் ஊடாக நானறியாத நீயும் அறியக் கிடைக்கிறாய். என்னைச் சஞ்சலப்படுத்தி வருகிறாய்.
நீயும் நானும் நிகழ்த்தும் நீர்விளையாட்டில் நாம் இணையும் கணங்கள் உள்ளன. என் ஒரு பாதியாக நீயும். உன்னின் சமபாதியாக நானும். அக்கணங்களில் யாவும் மறைந்து போகின்றன. உணர்வுகள் அற்று ஒரு சொல் இன்றி ஏகாந்தம் அருகமர்கிறது. ஆதித் தாயின் கருவறைச் சுவரில் ஒட்டி நிலைப்படுத்திக்கொள்ளும் உயிரணுவின் ஆசுவாசம். அலைகள் ஓய்வதில்லை. நீர்க்கரங்களின் விசைகள் அற்றுப்போவதில்லை. உயிரணு தன்னை தற்காத்துக்கொள்கிறது. தசைத்திரட்சியில் தோன்றும் சுனைகள் அமுதுாட்டுகின்றன.
உன் இரட்டையர்களை நேற்று கண்டேன். நீ தானோ என ஒரு கணம் திடுக்குற்றேன். உனக்கும் எனக்கும் மட்டுமே தீராத பிணக்குகள். நீ நீங்கிய பின்னும் அவற்றோடு மல்லுக்கட்டும் சபிக்கப்பட்ட வாழ்வு என்னுடையது. உன் ஆவலாதிகளின் கார்வை அற்று என் இரவுகள் விடிவதில்லை. இருளுக்குள் இருளாக நீ விட்டுச்சென்ற பெருமூச்சுகள். தாபங்களின் நீள் நாக்குகள் வாள்களாக மாறி, நெஞ்சில் குத்துகின்றன. கூர்மையின் விளிம்புகள் இரவிலும் மினுமினுக்கின்றன. அஞ்சி அஞ்சி விடியலை வரவேற்கிறேன். என் இரவுகள் அனைத்தும் சாவின் நிறப்பிரிகை. இரண்டாம் யாமத்தில் நான் துயிலும் சிறிது நேரத்திலும் கனவுகள் வழியாக உள்ளே நுழைந்து விடுகிறாய். பரமபதம் ஆடுகிறாய். ஏணிப்படிகளின் முடிவில் விடம் உறைந்த நுனிநாக்குப் பிளவு. ஏறியும் இறங்கியும் வாழ்ந்து தீர்வதில்லை.
பித்தேறி நான் வெறித்த இரட்டையர்கள் உன் மூன்றாம் தலைமுறை. உன் முகம் மீண்டும் ஒருமுறை. உன்னைவிட இளமையாக, உன்னைவிட அதி நுட்பமாக. களங்கமின்மையின் பேரெழில் உன்னிடம் நான் கண்டது. புத்திக் கூர்மையும் கன்னிமையும் சேர்ந்த பேரழகின் உன்னதம் உன் வழிவந்த இரட்டையர்களிடம். ஒருத்தி அச்சு அசலாக உன்னைக் கொண்டிருந்தாள். உன்னைப்போலவே அவளின் ருசிகள் உருவாகியிருந்தன. உன் ரசனையும் உன் விருப்பங்களும் அவளுடையவை. அவளை அறிவது உன்னை அனுபவம் கொண்ட எனக்கு தேய்வழக்கு. தேஜா உ. உன்னை நிரந்தரமாக இழந்துவிட்டவில்லை. இப்போது என் முன்முடிவுகளை மறுபரிசீலனை செய்கிறேன். யாரும் யாரையும் விட்டுப் பிரிய முடியாது. பலகோடி மனங்களாக இங்கே மோதித்தவித்து சுற்றித்திரிபவை அனைத்தும் ஒரு பெரு மனத்தின் சிதைவுகள்தானா? காலத்தின் துமிகளா நாம்? கடல் நீர்ப்பெருக்கை உள்ளங்கைகளுக்குள் ஏந்தியிருக்கும் யத்தனங்கள்தானா? நீ நான் என்று இரட்டை நிலைப்பாடுகள் அளிக்கும் எல்லைகளே அனைத்தின் இன்னல்களா?
முக்காலமும் நீ என்பது உன் அங்கங்கள். உன்னை அறிந்ததே உன் எழில்களின் சாயைகளில்தான். உள்ளே உன் நினைவுகள் என்பவை உன்னை அனுபவம் கொண்டபோது பொறிகளில் படிந்தவை. என் இச்சைகளின் விளைநிலம் நீ. தாபங்கள் தணிக்கும் பெருங்கருணை உன் உடலின் ஊற்றுகள். அருந்தி திக்குமுக்காடி முடிவற்ற உன் பெருக்கின் முன் நான் சிறுத்துப்போனதும் உண்டு. தொடுவானம் போன்றது உன் ஆகிருதி. அடைந்து வென்றெடுக்க விரும்பிய என் திட்டமிடல்களை நானே கைவிடுகிறேன். வெட்கி ஒளித்து வைத்துக்கொள்கிறேன். சதா சிகரம் நீ. உன்னை அடைந்து உச்சியில் உடல் நடுங்கி காலடியில் விரிந்து கிடக்கும் நிலக்காட்சிகளைக் கண்டு, பொங்கும் சொற்களின் ஊன் இருப்பாக வேண்டுமானால் நான் வாழ்ந்து தீர்க்கலாம். உன்னை அடைந்தேன் என்று இறுமாப்புக்கொள்ள வாய்ப்பே இல்லை. மனமே சொற்களாக இருக்கிறது. மனமற்ற பெருவெளி நீ. உன் முன் என் சொற்கள் அர்த்தமிழக்கின்றன. அனைத்தின் அர்த்த நாசினியே.
காலாதீதச் சுமையாக உன் நினைவுகள். நேற்று உன்னை அறிந்தேன். நேற்றின் கடும்கனம் கொண்டிருக்கின்றன மூளைநரம்புகள். ஒற்றைப் புள்ளியில் புதைந்திருப்பினும் உன் ஊற்றுமுகம் நேற்றும் இன்றும் நாளையுமாக இருக்கிறது. என் விளிம்புகள் முடிவிலியாக உள்ளன. உன்னை வரையறை செய்து கரைப்படுத்த எண்ணிய என் முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன. ஆதியில் என்றோ ஒரு கணத்தில் சமன் குலைந்தது என்றது முன்னோர் வாக்கு. சமன்குலைவின் பின்விளைவே இங்கிருப்பவை எல்லாம். நீ என நீண்ட நிரையும் நான் என்கிற ஒற்றைச் சிதிலங்களும் அவையே. மேலும் நீளும் அறிய முடியாமையின் அச்சப்புள்ளிகள். சமன் என்பதும் சமன் குலைவு என்பதும் நம் தேடலின் அர்த்தப்பாடுகள்தானோ? நீ சமன்குலைவின் உப விளைவா? உன்னில் மோதித் திசைகளெங்கும் பரந்து விரியும் என் தவிப்பே பிறவிகள் தோறும் நான் துாக்கிச் சுமக்கும் காலச்சுமைகளா?
என்னை நேர்கொள்வதற்கஞ்சியே நீண்ட கால பாதசாரியாக நான் வாழ்கிறேனா? என்னை அஞ்சியே உன்னிடம் தீராத உரையாடலை முன்னெடுக்கிறேனா? தீராத வெறுமையைத் தொலைக்கும் முயற்சிதானா என் சாகசங்கள்? உன் மீதான பித்தும் பிரியமும் என்னை ஒளித்து வைத்துக்கொள்ளும் பாவனைகள்தானா? என்னை ஏன் அஞ்சுகிறேன்?
காலடி நிலமாக சொற்கள் இருக்கின்றன. சொற்களின் ஆதாரமாக காலத்தின் அலையடிப்புகள் உறைந்திருக்கின்றன. சொற்களின் மேல் படிந்து நிரந்தரமாக ரீங்கரிப்பவை நினைவுகளின் களிம்பு படிந்தவை. நினைவுகள் அற்றும் நான் இருக்கும் சாத்தியங்கள் உண்டு என்பதை உணர்த்திய ஒரு அற்புதம் உன் முன்னிலை.
நான் ஆகிய பெருநோயின் ஔடதம் நீ.