1

எதிரெதிர்த் திசைகள்

நெடுஞ்சாலையை உருக்கிக் கொண்டிருந்தது வெயில். அதனை ஒட்டிய செம்மண் நடைபாதையில் நடந்து நடந்து வியர்த்து, கிறுகிறுத்து தள்ளாடியபடியே நிலைகுழைந்து ஒவ்வொரு அடியாக மெல்ல மெல்ல எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்  அஜீஸ்.

உடனடியாக அவன் எங்காவது அமர்ந்துவிட வேண்டும்; இல்லையேல் அவன் விழுந்து விடக்கூடும் என்ற நிலையில்தான் தடுமாறி தடுமாறி அருகிலிருந்த பழைய மைல்கல்லின் மீது அமர்ந்தான். அது வெய்யில்பட்டு தகித்துக் கொண்டிருந்தது. அது கருங்கல்லைக் கொண்டு செய்யப்பட்ட மைல்கல். அதில் இரண்டு பக்கங்களிலும் ஊர்ப்பெயரும் கிலோமீட்டரும் குடைந்து எழுதப்பட்டிருந்தன.

கால்களைப் பரப்பி தலையைத் தொங்கப் போட்டபடி சோர்ந்து அமர்ந்திருந்தான் நெடுநேரம். எண்ணெய் தேய்க்கப்படாத தலையிலிருந்து வியர்வை வழிந்து கன்னங்களில் இறங்கி, தாடை வழியாகச் சொட்டத் தொடங்கியது.

‘இனிமேல் வீட்டுக்குத் திரும்புவதேயில்லை’ என்றும் ‘அப்படித் திரும்பிச் சென்றால் கைநிறைய பணம் சம்பாதித்த பின்னர்தான் செல்ல வேண்டும்’ என்றும் உறுதியெடுத்த பின்னர்தான் இன்று அதிகாலையில் மசூதியில் பாங்கு ஓதும்போது யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறினான் அஜீஸ்.

அப்போதிலிருந்து இப்போதுவரை அவன் எங்கும் நிற்கவுமில்லை, உட்காரவுமில்லை. தொடர்ந்து நடந்து கொண்டேயிருந்தான். அவன் நடக்க நடக்க அவனுக்குள் சிந்தனை ஓடிக்கொண்டே இருந்தது. தன் வீட்டாரை நினைக்க நினைக்க அவனுள் துக்கம் பொங்கியது. ‘எல்லா முடிவுகளையும் தனக்கு விருப்பமில்லாமலேயே தன் வாழ்நாள் முழுக்க எடுக்க நேர்ந்து விடுமோ?’ என்ற அச்சமே அவனை இன்று வீட்டைவிட்டு வெளியேறச் செய்துள்ளது.

அவனின் வாப்பா தன் சிறுவயதிலேயே வெளிநாடு சென்று சம்பாதிக்க வேண்டும்  என்ற கனவில் இருந்தார். பெரியவனானதும் அவர் வெளிநாட்டுக்குச் சென்றுவிட வேண்டுமென ஒற்றைக்காலில் நின்றார். அவரின் உறவினருள் பலரும் பல்வேறு வெளிநாடுகளில் பணிபுரிவதால் இவர் வெளிநாட்டுக்குச் செல்வதில் எந்தச் சிக்கலும் இருக்காதுதான். ஆனால், அவரின் வாப்பா மறுத்து விட்டார். தன்னுடைய ஒற்றை ஆண்பிள்ளையைத் தூரதேசத்துக்கு அனுப்ப அவர் விரும்பவில்லை. அதை நேரடியாகக் கூறாமல் ஏதேதோ காரணங்களைக் கூறி இறுதியாக, “எனக்குப் பின் நீதான் இந்த ‘பெயிண்ட்’ கடையை நடத்த வேண்டும்” என்று வலியுறுத்திக் கூறி,  அவரின் வெளிநாட்டு வண்ணக் கனவுகளைச் சிதறடித்தார்.

‘தன்னால் செல்ல முடியாத வெளிநாட்டுக்குத் தனக்குப் பிறக்கும் பிள்ளைகளை அனுப்ப வேண்டும்’ என்று அன்றே முடிவெடுத்துவிட்டார் அஜீஸின் வாப்பா. ஆனால், இரண்டு பெண்பிள்ளைகளுக்குப் பின்னர்  அஜீஸ் பிறந்ததால், ‘அவனையே வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டும்’ என்று உறுதி கொண்டார். 

அஜீஸ்க்குப் பதினைந்து வயது நிறைவடைந்தபோது தன்னுடைய உள்ளார்ந்த ஆசையை அவனிடம் வெளிப்படுத்தினார் வாப்பா. அவரின் கனவுக்கு எதிரான கனவினை ஐந்தாண்டுகளாகச் சுமந்துகொண்டிருந்த  அஜீஸ்க்குத் தன் வாப்பாவின் கோரிக்கையை ஏற்பதில் பெருந்தயக்கம் இருந்தது. அவருக்குப் பிடி கொடுக்காமலேயே மூன்றாண்டுகளைக் கடத்திவிட்டான். ஆனால், நேற்று அவ்வாறு முடியவில்லை. அதனால்தான் இன்று வீட்டை விட்டு வெளியேறி விட்டான்.

‘இனி, என்ன செய்ய?’ எனத் திகைத்துப் போனான்.  நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து மிகுந்திருந்தது. வாகன இரைச்சல்கள் அவனுக்கு எரிச்சலை ஏற்படுத்தின. கையில் பணம் இல்லை. மாற்றிக் கொள்ள உடைகள் இல்லை. ‘எங்குத் தங்குவது?’ என்ற திட்டமும் அவனுக்கு இல்லை. பசிக்கத் தொடங்கியது. நா வறண்டு விட்டது. ‘குடிக்கத் தண்ணீர்க் கிடைத்தால் நல்லது’ என நினைத்துச் சுற்றும் முற்றும் பார்த்தான். கரிய நெடுஞ்சாலையில் சற்றுத் தொலைவில் கானல் நீர் மட்டுமே தேங்கிக் கிடந்தது.

குனிந்து மைல்கல்லைப் பார்த்தான். தேனி 26 என்று எழுதப்பட்டிருந்தது. மெல்ல எழுந்து மைல்கல்லின் மறுபுறத்தைப் பார்த்தான். அதில் அவனுடைய ஊர்ப்பெயரும் 18 என்ற எண்ணும் இருந்தன. தன் ஊரை விட்டுப் பதினெட்டு கிலோ மீட்டர்கள் தான் நடந்தே கடந்து விட்டதை உணர்ந்ததும் அவனுக்கு அவன் மீது நம்பிக்கை துளிர்த்தது. ‘இன்னும் இரண்டு கிலோ மீட்டர்கள் நடந்து செல்வோம்’ என்றும் ‘எதிர்ப்படும் சிற்றூரில் ஏதாவது வேலையைத் தேடிக் கொள்வோம்’ என்றும் நினைத்தான் அஜீஸ்.

அவன் எழுந்தபோது அவனுக்கு எதிர்த்திசையிலிருந்து வித்தியாசமான குல்லா அணிந்த முதியவர் வந்து கொண்டிருந்தார். பச்சை நிறவுடை. தலை வெளுத்து, தாடி வெளுத்து, முகம் சுருங்கி நடை, தள்ளாடிவிட்ட அந்தப் பெரியவர் மீது ஏதோ இனம் புரியாத ஓர் ஈர்ப்பு அவனுக்கு ஏற்பட்டது. 

முதியவரின் இடது தோள்பட்டையில் பச்சை நிற ஜோல்னாப் பை பருத்துத் தொங்கியது. முழுக்கைச் சட்டை அவரின் கைவிரல்களையும் தாண்டி வழிந்து தொங்கியது. பச்சை நிற வேட்டியில் புழுதி அப்பியிருந்தது. பார்ப்பதற்கு அவர் ஓர் இஸ்லாமிய பக்ரி போல இருந்தார்.

தலை தாழ்த்தி நடந்து வந்த அவர் இவனை நெருங்கியதும் நிமிர்ந்து பார்த்து, புன்னகையை வரவழைத்துக் கொண்டு அன்புடன் தன் வலது கையை உயர்த்தி வாழ்த்துவதுபோல சைகை காட்டினார். இந்த உலகமே தன்னைக் கைவிட்டு விட்டதாக நினைத்துக் கொண்டு துக்கப்பட்ட  அஜீஸ்க்கு அந்தப் பெரியவரின் வாழ்த்து ஒரு பெரும் அரவணைப்புபோலவே இருந்தது. அவனையே அறியாமல் அவன் அந்த முதியவரின் கால்களில் விழுந்து வணங்கினான். அவர் அவனின் தோள்பட்டைகளைப் பற்றிப் பிடித்துத் தூக்க முயன்றார். ஆனால், முடியவில்லை.  அஜீஸ் மயங்கிச் சுருண்டு கிடந்தான். முதியவர் பதறினார்.

வேகமாகத் தன் ஜோல்னாப் பையைத் திறந்து அதிலிருந்த நீர்க் குடுவையை எடுத்தார் முதியவர். அதனைத் திறந்து அவன் முகத்தில் நீரைத் தெளித்தார். சில விநாடிகளில் கண்திறந்தான் அஜீஸ். அவனுக்குக் குடிக்க நீரைக் கொடுத்தார். அவன் மிகவும் வேகமாக அந்தக் குடுவையிலிருந்த நீரை முழுவதுமாகக் குடித்து முடித்து, மூச்சினை உள்ளிழுத்து வெளியேவிட்டான். அவனை எழச் செய்து, அந்த மைல் கல்லின் மீது அமர வைத்தார்.

வெறுங்குடுவையைத் தன் பையினுள் இட்டுக் கொண்டு, “உன் பெயர் என்ன?” என்று கேட்டார். 

அவன் தயங்கி, மெல்லிய குரலில், “அஜீஸ்” என்றான்.

“எங்க போயிட்டு இருக்க?”

“தெரியாது”

“எங்க இருந்து வர்ற?”

“வீட்டை விட்டு வெளியேறி”

“அடுத்து என்ன செய்யப் போற?”

“தெரியலை”

“எதுக்காக வீட்ட விட்டு வந்த?”

“வெளிநாட்டுப் போக விருப்பமில்லை. உள்ளூரிலேயே வேலை பார்த்து சம்பாதிச்சு வாழப் போறேன்”

“இதுதான் உன்னோட விருப்பமா?”

“ஆமாம்”

“வெளிநாடு போனா குடும்பத்தப் பிரிஞ்சு இருப்போமேன்ற கவலையா?”

“ஆமாம்”

“இப்ப வீட்டை விட்டு வெளியே வந்துட்டியே இப்பவும் உன் குடும்பத்தை விட்டு பிரிந்து தானே இருக்க?”

“ஆமாம்”

“இதுக்கு நீ வெளிநாட்டுக்கே போய் இருக்கலாமே!”

“வெளிநாட்டுக்குப் போனா நினைச்ச நேரம் நான் என் குடும்பத்தைப் பார்க்க முடியாது. நிறைய சம்பாதிக்கலாம் ஆனால் நிம்மதி இருக்காது.”

“நீ எங்க போய் நிறைய சம்பாதித்தாலும் நிம்மதி இருக்காதுதான். பணம் சேர சேர நிம்மதி விலகும்”

“நான் உள்ளூர்லயே இருக்கத்தான் விரும்புறேன். அது என் வீட்டாருக்குப் பிடிக்கலை”

“உன்னை உன் வீட்டாருக்குப் பிடிக்குமா?”

“தெரியலை”

“சரி, கொஞ்ச நாள் தனியா இரு. அவங்களா உன்னைத் தேடி வரட்டும்”

“சரி” 

“நீ என்ன படிச்சிருக்க?”

“பன்னிரண்டாவது”

“மேல படிக்கலையா?”

“படிக்க எனக்கும் விருப்பமில்லை. என்னைப் படிக்க வைக்க என்னோட வாப்பாவுக்கும் விருப்பமில்லை. அவர் என்னை வெளிநாட்டுக்கு அனுப்புறதுலதான் தீவிரமா இருக்காரு. அதான் வெளியேறி வந்துட்டேன்”

“பரவாயில்லை வருத்தப்படாத. உலகம் ரொம்ப பெருசு. அதுல வாழ எல்லாம் உயிருக்கும் வாய்ப்பு இருக்கு. ஆனா வசதியா வாழ சில உயிருக்குத் தான் கொடுப்பினை இருக்கு”

“நானும் வசதியா வாழ்ந்து காட்டுவேன்”

“இதுதான் உன்னோட லட்சியமா?”

“ஆமாம்”

“தம்பி! இந்த வயசுல நீயா உனக்காக உருவாக்கிக்குற எந்த ஒரு லட்சியமும் அஞ்சு வருஷத்துக்குள்ள அடைய முடியறதாத்தான் இருக்கும். அதை உன்னால அடையவும் முடியும். நீ அதை அடைஞ்ச பின்னாடி அது உனக்கு அலுத்துப் போகும். அழுதுட்டா அவன் ஞானி ஆகிடுவான். அழுக்காம இருந்தா அவன் அதிலேயே கிடந்து சாணியாகிவிடுவான். இவ்வளவுதான் மனுஷ வாழ்க்கை”

“புரியுது ஐயா”

“சரி, இனிமே நாம அஞ்சு வருஷம் கழிச்சு பார்ப்போம். அப்ப நான் உன்கிட்ட, “உனக்கு அலுத்துப் போச்சா?”ன்னு கேட்பேன். நீ சொல்ற பதில்லதான் எனக்குத் தெரியும், “நான் இப்போ உனக்குச் சொன்னது புரிஞ்சுச்சா, இல்ல புரியலையான்னு”

 அஜீஸ்க்குக்  குழப்பமாக இருந்தது. தான் எடுத்த இந்த முடிவு சரிதானா? என்று மீண்டும் சிந்திக்கத் தொடங்கினான். ஆனாலும் தான் எடுத்துவிட்ட இந்த முடிவிலிருந்து பின்வாங்க அவனின் ஆழ்மனம் மறுத்துவிட்டது. அவன் தன் சிந்தனையின் ஓட்டத்தைத் திசை திருப்புவதற்காக அந்த முதியவரின் வித்தியாசமான குல்லாவைப் பார்த்தான்.

 “ஐயா! இது என்ன புது விதமா இருக்கு?”

 “ஓ! இதுவா? இது வழக்கமா ஸூஃபிகள் அணியுற குல்லா.  

 என்னோட ஆன்மிக குரு ஒரு ஸூஃபி ஞானி”

 “அப்படின்னா?”

 “மெய்ஞானி”

 “புரியலையே?”

“இந்த உலகத்தைப் புரிஞ்சுகிட்டு அதில் இருந்து விலகி, இறைவனைத் தெரிஞ்சுக்கிட்டு அவரை மட்டும் நினைச்சு நினைச்சு இந்த உலகத்தை ரசிச்சுக் கொண்டாடுறவங்க”

“ஓ! மகிழ்ச்சியான துறவிகளா?

“துறவே மகிழ்ச்சிக்காகத் தானே?”

இருவரும் சிரித்தனர். முதியவர் தன் மெய்ஞான மார்க்கத்தையும் அஜீஸ் தன் உலகியல் மார்க்கத்தையும் தேடி எதிரெதிர்த் திசைகளில் மெல்ல மெல்ல நடக்கத் தொடங்கினர். வெயில் உச்சத்தில் இருந்தது.

– – –

2

வேறொரு உலகம்

நெடுஞ்சாலை பிரிவின் இடப்புறத்தில் இருந்த ‘முருகன் புரோட்டா கடை’ அந்தப் பகுதியில் மிகவும் பிரபலமாக இருந்தது. சுற்றி இருந்த மூன்று கிராம மக்களும் வாரத்தில் ஒரு நாளாவது அந்தக் கடையில் சாப்பிடுவது என்பது வழக்கமாக இருந்தது. அதனால் அந்தக் கடையில் ஏழு நாட்களும் மூன்றுவேளை உணவும் தவறாமல் தயாராகிக் கொண்டிருந்தது. 14 பேர் அந்தக் கடையில் சுழற்சி முறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். எல்லோரும் வெளியூர்க் காரர்கள்தான் என்பதால், கடைக்குப் பின்பகுதியில் இருந்த கீற்றுக் கொட்டகையில்தான் அவர்கள் தங்கி இருந்தனர்.

விலை மலிவு, சுவை மிகுதி என்பதால் நெடுஞ்சாலையைக் கடக்கும் வாகன ஓட்டுநர்களும் நெடுவழிப் பயணிகளும் அந்தக் கடைக்கு வருவது வாடிக்கையாக இருந்தது. கடையின் முதலாளி முருக பக்தர். தன் தந்தையால் தொடங்கப்பட்ட இந்தச் சிறிய உணவகத்தைத் தன் அசாதாரண அசுர உழைப்பால் இன்று புகழ்பெற்ற பெரிய கடையாக மாற்றிவிட்டார் தன்ராஜ். அவரின் இரண்டு மகன்களும் சென்னையில் உணவக மேலாண்மைக் கல்வியைத்தான் படிக்கின்றனர். அவர்களின் படிப்பு முடிந்ததும் சென்னையிலேயே தன் கடைக்குக் கிளைக் கடைகளைத் தொடங்கும் திட்டத்தில்தான் இருக்கிறார் முருக பக்தர் தன்ராஜ்.

தன்ராஜ் கள்ளாவில் அமர்ந்தபடி பணத்தை எண்ணிக் கொண்டிருக்கும் போது வாடிய முகத்துடன், தளர்ந்த உடலுடன் அவரிடம் வேலை கேட்டு வந்து நின்றான்  அஜீஸ். பணத்தை எண்ணியபடியே நிமிர்ந்து பார்த்த முதலாளி, அவனின் முகத்தில் வழிந்து ஓடிய சவக்களையைப் பார்த்ததும் அவன் வாய் திறந்து பேசுவதற்கு முன்பாகவே, “சாப்டியா?” என்று கேட்டார். அவன் ‘இல்லை’ என்பது போல தலையை இடவலமாக அசைத்தான்.

உடனே முதலாளி சமையல் கூடத்தை நோக்கித் தன் தலையைத் திருப்பி, “ராஜூ! இங்கே வா?” என்று அழைத்தார். ராஜூக்கு 48 வயது. அவர் அங்கிருந்து ஓட்டமும் நடையுமாக விரைந்து பறந்து வந்தார். அவரிடம் இவனைச் சுட்டிக்காட்டி, “காலை சாப்பாட்டு எதெல்லாம் மிச்சம் இருக்கோ அதெல்லாம் ஒரு தட்டுல போட்டு, தண்ணியும் கொண்டுவந்து இவன்கிட்ட கொடு” என்றார்.

“சரிங்க முதலாளி” என்று கூறிவிட்டு, ராஜூ வந்தது போலவே சென்றார்.

முதலாளி தனக்கு எதிரே இருந்த உணவு மேஜையை அவனுக்குக் காட்டி அமருமாறு சைகை காட்டினார். அவன் அமர்ந்தான். முதலாளி தொடர்ந்து பணத்தை எண்ணினார். சிறிது நேரத்தில் பெரிய செம்பில் தண்ணீரை நிறைத்துக் கொண்டு, பெரிய தாம்பாளம் நிறைய உணவினைத் தூக்கிக்கொண்டும் விரைந்து வந்த ராஜூ, அவற்றை மெதுவாக  அஜீஸின் முன்பாக வைத்தார். 

அஜீஸ் முதலில் சிறிது நீரைப் பருகினான். பின்னர் கைகளைக் கழுவ மறந்து, உண்ணத் தொடங்கினான். அந்தத் தாம்பாளத்தில் மூன்று உளுந்த வடைகள், இரண்டு பூரிகள், இருவர் உண்ணும் அளவுக்கு வெண்பொங்கல், இரண்டு தோசைகள் ஆகியன இருந்தன. தோசைகளுள் ஒன்று கிழிந்து இருந்தது. மற்றொன்று பாதி கருகி இருந்தது. ராஜூ சாம்பார், தேங்காய் சட்னி, காரச் சட்னி ஆகியவற்றைத் தாம்பாளத்தின் விளிம்புகளில் பெரிதும் சிறிதுமான கிண்ணங்களில் வைத்திருந்தார். அடுத்த பத்து நிமிடங்களில் அனைத்தையும் உண்டு முடித்து விட்டு எழுந்து கைகளைக் கழுவ சென்றான்  அஜீஸ்.

அவன் திரும்ப வந்தபோது முதலாளி பணத்தை எண்ணி முடித்திருந்தார். அவன் மீண்டும் தண்ணீரைக் குடித்துவிட்டு வாயைத் துடைத்துக் கொண்டான். அவன் முதலாளியின் முன் வந்து நின்றான்.

“உன்னோட பேரு?”

“அஜீஸ்”

“உள்ளூரா?”

“இல்லை”

“என்ன படிச்சிருக்க?”

“பன்னிரண்டாவது”

“உனக்கு என்ன வேணும்?”

“ஏதாவது ஒரு வேலை”

“இதுக்கு முன்னாடி என்ன வேலை செஞ்சிட்டு இருந்த?”

“எதுவும் செய்யல” 

“உனக்கு என்ன வேலை தெரியும்?”

“எதுவும் தெரியாது. ஆனால், சொல்லிக் கொடுத்தா கத்துக்குவேன்”

“சரி, ஒருவாரம் இங்கேயே தங்கி வேலை பாரு. அப்பறமா வாரச்சம்பளம் என்னன்னு பேசிக்குவோம்”

“சரிங்க. என்ன வேலை?”

“பாத்திரம் கழுவனும். ஒவ்வொரு வாரமும் வேலை மாறிக்கிட்டே இருக்கும். நீ நல்லா வேலை பார்த்தேனா கணக்கு எழுதக்கூட உன்னை உட்கார வைப்பேன். ஆனா நீ இங்க என்ன வேலைபார்த்தாலும் சரி கள்ளாப் பக்கம் மட்டும் வரவே கூடாது. புரியுதா?”

“சரிங்க”

முதலாளி சமையல் கூடத்தைப் பார்த்து உரத்த குரலில், “திலீபா! திலீபா!  இங்க ஓடி வா” என்று அழைத்தார்.

பின்கட்டில் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்த திலீபன் தன் கையில் இருந்த கரிப்பிடித்த பாத்திரத்தை அப்படியே வைத்துவிட்டு, கைகளைக் கழுவிக் கொண்டு ஓடி வந்தார். அவருக்கு வயது 63.

தன்னருகில் திலீபன் வந்தவுடன் அவரிடம்  அஜீஸைப் பற்றிச் சுருக்கமாக அறிமுகப்படுத்திவிட்டு, இவனுக்குப் பாத்திரம் தேய்க்க கத்துக் கொடு” என்றார்.

  அஜீஸ் திலீபனோடு செல்ல முற்பட்டபோது முதலாளி, அவனிடம் “முதல்ல நீ சாப்பிட்ட பாத்திரங்களைக் கழுவு” என்றார்.

உடனே, அஜீஸ் தான் சாப்பிட்ட தாம்பாளத்தையும் நீரைப் பருகிய செம்பையும் எடுத்துக்கொண்டு திலீபனைப் பின்தொடர்ந்தான். அப்போது சமையற் கூடத்தில் இருந்து ஒவ்வொருவராக வெளிப்பட்டனர். ஒவ்வொருவரின் கைகளிலும் ஒவ்வொரு உணவுப் பாத்திரம் இருந்தது. அவற்றில் உணவு சுட சுட இருந்தது. அவற்றின் மனம் உணவகத்தை நிறைக்கத் தொடங்கியது.

ஒருவர் ஈரத்துணியைக் கொண்டுவந்து மேசைகளையும் நாற்காலிகளையும் துடைக்கத் தொடங்கினார். மதிய உணவினைக் கட்டுச்சோறாக வாங்குவோருக்கு உடனடியாக வழங்குவதற்காகச் சிறிய நெகிழிப்பைகளில் குழம்பு, தயிர்வெங்காயம் முதலியவற்றை இருவர் கட்டத் தொடங்கினர். சிறிது நேரத்தில் சமையற்கூடத்தில் பணியாற்றியவர்கள் பலரும் உணவு பரிமாறும் இடத்துக்கு வந்தனர். ஆளுக்குக்கொரு வேலையில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர்.

வெளியிலிருந்து ஒருவராக, இருவராக, சிறு குழுவாக உணவு உண்ணவும் உணவினை வாங்கிச் செல்லவும் வரத் தொடங்கினர். ஆட்கள் வர அவர்களைத் தலையசைத்து, புன்சிரிப்புடன் வரவேற்றார் முதலாளி. பணியாளர்கள் தனித்தனிப் பம்பரமாகவும் இணைப் பம்பரங்களாகவும் இணைந்தும் பிரிந்தும் சுழன்று சுழன்று பணிபுரியத் தொடங்கினர். அவ்வப்போது முதலாளியிடமிருந்து கட்டளைகள் பறந்து வந்தன. அவை நிறைவேற்றுவதில் தாமதமாகும்போது முதலாளியின் உதடுகளில் இருந்து மரியாதைக் குறைவான சொற்கள் வெளிப்பட்டுத் தெரிந்தன.

சமையற்பாத்திரங்களை எப்படிக் கழுவுவது என்பது பற்றி  அஜீஸ்க்குத் திலீபன் மிகவும் பொறுமையாகக் கற்றுக் கொடுத்தார். தன் முன்பாகப் பெரிதும் சிறிதுமாக இருந்த பாத்திரங்களைப் பார்த்து அஞ்சியபடிதான்  அஜீஸ் தன் கையில் இருந்த பாத்திரத்தைத் தேய்த்துக் கழுவிக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் பயன்படுத்தப்பட்ட சாப்பாடுத் தட்டுகளும் தண்ணீர் குவளைகளும் வந்து குவியத் தொடங்கின. திலீபனும்  அஜீஸ்ம் எவ்வளவு முயன்றும் அவற்றை முழுவதுமாகக் கழுவிக் கவிழ்த்த முடியவில்லை. அவை வந்து குவிந்தபடியே இருந்தன.

முரளியும் ஐசக்கும் மாறி மாறி வந்து கழுவப்பட்ட சாப்பாட்டுத் தட்டுகளையும் குழம்புக்குக் கிண்ணங்களையும் தண்ணீர்க் குவளைகளையும் எடுத்துச் சென்ற படியே இருந்தனர். ஒரு கட்டத்தில் கழுவிய பாத்திரங்களும் கழுவாத பாத்திரங்களும் சம உயரத்தில் அவர்கள் இருவருக்கும் இருபுறங்களிலும் குவிந்து விட்டன.  அஜீஸின் உள்ளங்கைகள் சிவந்துவிட்டன. அவனின் இரண்டு கைகளும் சோர்ந்து நடுங்கத் தொடங்கின. அவன் திலீபனைப் பார்த்தான். 

அந்தப் பார்வையிலேயே அவன் என்ன நினைக்கிறான் என்பதைப் புரிந்துகொண்ட திலீபன், “எல்லாம் ஒரு வாரத்தில் சரியாகிடும். நல்லாவேலை பார்த்தேனா அடுத்த வாரம் வேற வேலைக்கு உன்னை அனுப்புவாங்க. இல்லையினா இதே வேலையைத்தான் வாரந்தோறும் நீ செய்ய வேண்டியிருக்கும்” என்றார். அதற்கு எந்தப் பதிலையும் சொல்ல விரும்பாத  அஜீஸ் திலீபனைப் பார்த்து மெல்ல சிரித்து விட்டு, அடுத்த பாத்திரத்தை எடுத்துத் தேய்க்கத் தொடங்கினான்.

மெல்ல மெல்ல உணவுப் பாத்திரங்கள் வந்து விழுவது குறையத் தொடங்கியது. கழுவிய பாத்திரங்களை எடுத்துச் செல்வதும் மட்டுப்பட்டது. அப்போது திலீபன், “போதும் மீதமுள்ளதை நான் கழுவுறேன். நீ போய் கழுவிய பாத்திரங்களைக் கொண்டு போயி உள்ளே அடுக்கு” என்றார். அடுத்த நொடியே தாம் விடுதலை பெற்றதைப் போல உணர்ந்தான்  அஜீஸ். எழுந்து நிமிர்ந்து நின்றான். அவனின் குறுக்கெலும்புகள் மடங்கி நிமிர்வதைப் போல இருந்தது. கால்கள் நடுங்கின. மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்து நடந்தான்.

அதிகாலை முதல் 20 கிலோமீட்டர் நடந்த கால்கள் அவை. இப்போது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஈரத்தில் நனைந்து ஊறிப் போயிருந்தன. அவன் தன் வாழ்நாளில் மிகுதியாகக் களைப்படைந்த நாள் இதுதான். ஆனால், இந்தப் பொழுது இத்துடன் முடியவில்லையே. அவன் எல்லாப் பாத்திரங்களையும் அடுக்கி முடித்த தருணத்தில் முதலாளியின் அழைப்புக் குரல் அவனுக்குக் கேட்டது. 

அவன் எல்லோரையும் போல ஓடிச் சென்று முதலாளியின் முன்பாக நிற்கத்தான் நினைத்தான். ஆனால், அவனால் ஓட முடியவில்லை. நடக்கக்கூட முடியவில்லைதான். கெந்தி கெந்தி நடந்து சென்று முதலாளியின் முன்பாகச் சென்று நின்றான். பணியாளர்கள் சிலர் உணவு மேஜைகளின் மீது நாற்காலிகளைக் கவிழ்த்தி அடுக்கிக் கொண்டிருந்தனர். சிலர் இடத்தை ஈரத்துணையால் துடைத்துக் கொண்டிருந்தனர். முதலாளி பணத்தை எண்ணிக்கொண்டு தலையை நிமிர்த்தாமல்  அஜீஸிடம் பேசினார் :

“வேலை கஷ்டமா இருக்கா?”

  “கொஞ்சம் கஷ்டமாத்தாங்க இருக்கு.”

“போகப் போகச் சரியாயிடும். இது என்னோட அப்பாவோட கடை. என்னைய இந்தக் கடைக்கு வேலை பார்ப்பதற்காக அப்பா வரச் சொன்னார். ஆனால், இந்தக் கடையில என்னை வேலை செய்ய விடாமல் என்னைய பக்கத்து கிராமத்தில் இருந்த அவரோட நண்பரின் கடைக்குத்தான் வேலைக்கு அனுப்பினார். அங்க நான் ஆறு மாசம் வேலை பழகுனேன். எனக்கு அங்க தரப்பட்ட முதல் வேலையே பாத்திரம் கழுவுறதுதான். ஏன்னா அப்பத்தான் நாம பின்னால சமையல் மாஸ்டரா அடுப்புல நிக்கும் போது அடிபிடிக்காமல் கரிபிடிக்காமல் சமைக்கனும்ற அறிவு வரும். ஒரு வேலைன்றதே எப்பவுமே இன்னொரு வேலைக்கான அறிவுரைதான். அதைப் புரிஞ்சுக்கிட்டவுங்கதான் எல்லா வேலைகளையும் முகம்கோணாம செய்வாங்க. புரியுதா?”

“புரியுதுங்க”

 “சரி, நீ முதல்நாளே ரொம்ப வேலை பார்க்க வேண்டாம். போய் பின்னால இருக்குற கீத்துக்கொட்டகையில படுத்துக்கோ. நாளைக்குக் காலையில குளிச்சு முடிச்சு 6 மணிக்கெல்லாம் என் முன்னாடி வந்து நில்லு”

“சரிங்க”

இதுவரையிலும் தலையை நிமிர்த்தாமலையே பணத்தை மட்டும் எண்ணிக் கொண்டிருந்த முதலாளி நிமிர்ந்து  அஜீஸைப் பார்த்தார்.

“உனக்கு பிடிச்சிருந்தா இங்கேயே தொடர்ந்து நீ வேலை பார்க்கலாம். இல்லைன்னா ஒரு வார்த்தை சொல்லிட்டு நீ போயிடலாம். உன்னை இங்கே யாரும் பிடிச்சு வச்சுக்க போறதில்ல”

“சரிங்க”

தரையைத் துடைத்துக் கொண்டிருந்த மாரிமுத்துவை முதலாளி உரத்த குரல் எழுப்பி அழைத்தார். மாரிமுத்து எழுந்து வந்து பணிந்து நின்றான். அவனுக்கு வயது 20 இருக்கும். 

“மாரி! இவனை நம்ம கீத்துக் கொட்டகாயில தங்க வை. புது ஆளு. கொஞ்சம் பார்த்து அனுசரிச்சு எல்லாத்தையும் சொல்லிக் கொடு. அப்படியே நம்ம கடையோட ரூல்ஸ்களையும் சொல்லிக்கொடுத்துடுடா.”

“சரிங்க”

மாரிமுத்து  அஜீஸை அழைத்துக்கொண்டு கீற்றுக் கொட்டகைக்குச் சென்றான். அப்போது வெயில் தணிந்திருந்தது.

– – –

3

நம்பிக்கைத்துளிர்

ஒரு வாரத்துக்குள்  அஜீஸ்க்கு எல்லாம் பழகிவிட்டன. எதுவும் அவனுக்குத் துயரமாகத் தெரியவில்லை. வீட்டு நினைவு வந்தாலும் தன்னுடைய லட்சியத்தை நினைத்துக்கொண்டு அந்த நினைவுகளை ஒதுக்கித் தள்ளினான். இந்த வாரம் அவனுக்கு மேஜைகளைத் துடைத்து, எச்சில் தட்டுகளை எடுக்கும் வேலை கொடுக்கப்பட்டது. அவன் அதனை மகிழ்வுடன் செய்யத் தொடங்கினான். ‘எப்படியாவது உள்ளூரிலேயே சம்பாதித்து வசதியாக வாழ்ந்து காட்ட வேண்டும்’ என்ற எண்ணம் மட்டும் அவனுக்குள் நீரு பூத்த நெருப்பாக உள்ளமுங்கி இருந்தது.

வாரத்தில் அரை நாள் விடுமுறை என்பது முருகன் புரோட்டா கடை பணியாளர்களுக்குச் சுழற்சி முறையில் வழங்கப்பட்டு வந்த ஒரு கொண்டாட்டமான வாய்ப்பு. அதன்படி இன்று 12 மணி முதல்  அஜீஸ்க்கு விடுமுறை. ‘இந்த விடுமுறையை எப்படிக் கழிக்கலாம்?’ என அவன் நேற்றிலிருந்து திட்டமிட்டுக்கொண்டுதான் இருந்தான்.

சுழற்சி முறையில் இன்று மதியம் இவனுக்கும் தினகர், பெரியசாமி, ஷம்சுதீன் ஆகிய மூவருக்குமே விடுமுறைதான். தினகரனும் பெரியசாமியும் இவனைத் திரைப்படத்திற்கு அழைத்தனர். இவன் மறுத்துவிட்டான். ஷம்சுதீன் இவனைக் கடைவீதிக்கு அழைத்தான். இவன் சம்மதித்தான். அதற்கு காரணம் இருந்தது. ‘பல்வேறு கடைகளைப் பார்த்தால்தான் தானும் ஏதாவது ஒரு கடையை நடத்த முடியும்’ என்று நம்பினான். ‘மக்கள் எதனை விரும்புகின்றனர்?, எந்தப் பொருள் தொடர்ந்து கேட்டு கேட்டு வாங்கப்படுகிறது? எந்தப் பொருள் மிகுதியான லாபத்துக்கு விற்கப்படுகிறது? போன்ற தகவல்களை நேரில் பார்த்தால்தான் தெரிந்து கொள்ள முடியும்’ என்றும் ‘வியாபாரத்தில் உள்ள சில நெளிவு சுழிவு நுணுக்கங்களைப் புரிந்துகொண்டால்தான் எந்தத் தொழிலையும் நஷ்டம் இன்றிச் செய்ய முடியும்’ என்றும் நினைத்தான்.

இன்றைய பகல் உணவு வழங்கல் காலை 11 மணியையும் தாண்டி நீடித்தது. எச்சில் தட்டுகளை எடுத்து முடியவில்லை. மேஜைகளைத் துடைத்து துடைத்து அவனின் வலது கரம் தொய்வடைந்துவிட்டது. ‘இன்னும் ஒரு மணி நேரம் தானே!’ எனத் தனக்குள்ளேயே கூறிக்கொண்டு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தான்  அஜீஸ்.

கடைக்கடிகாரத்தின் முள் பன்னிரண்டைத் தொட்டதும் தினகரன், பெரியசாமி மற்றும் ஷம்சுதீன் ஆகியோர் கீற்றுக் கொட்டகைக்குச் சென்று துணிகளை மாற்றிக் கொண்டனர். அவர்களோடு இவனும் சேர்ந்து கொண்டு உடைமாற்றிக் கொண்டான். ‘முருகன் பரோட்டா கடை’ என்று பெயர் பொறித்த சீருடையை மட்டுமே இவன் இத்தனை நாள் அணிந்திருந்தான். இன்று மீண்டும் அவன் வீட்டைவிட்டு வெளியேறிய போது அணிந்திருந்த அதே உடையை அணைந்தான். அப்போது வீட்டின் நினைவு ஒரு தீற்றலாக அவன் உள்ளத்தில் மின்னி மறைந்தது.

நால்வரும் முதலாளியின் முன்வந்து நின்றனர். இவனைத் தவிர மற்ற மூவருக்கும் வாரச் சம்பளத்தை வணங்கினர். இவனைப் பார்த்து, “உனக்கு இன்னும் நான் சம்பளம் முடிவு பண்ணல. இப்போதைக்குச் செலவுக்கு இதை வச்சுக்கோ” என்று கூறி நூறு ரூபாய்த் தாளை நீட்டினார். அதை மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்ட  அஜீஸ் முதலாளிக்கு நன்றிக் கூறினான். அவர் அதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அவர் சில்லறைகளை எண்ணத் தொடங்கினார்.

நால்வரும் கடையை விட்டு வெளியே வந்தனர். தினகரன் பெரியசாமியும் இடதுபுறம் திரும்பிச் செல்ல,  அஜீஸ்ம் ஷம்சுதீனும் வலதுபுறம் திரும்பி கடைத் தெருவுக்குச் சென்றனர். அவர்கள் ஏறத்தாழ இரண்டு மணிநேரம் நடந்திருந்தனர். ஷம்சுதீன் தனக்குத் தேவையான பொருட்களைத் தேடி தேடி வாங்கிச் சேகரித்தான்.

 அஜீஸ் ஏதும் வாங்கவில்லை. சோப்பு, சீப்பு, எண்ணெய், துண்டு, பவுடர் என எல்லாப் பொருட்களையும் முதலாளியே தம் பணியாளர்களுக்காக மொத்த விலைக்கடையில் தம் சொந்தச் செலவில் மாதந்தோறும் வாங்கி, காப்பறையில் வைத்து விடுவார். யாருக்கு எது தேவையோ அதனைக் கணக்குப்பிள்ளை வேலாயுதத்திடம் கேட்டால் அவர் உடனே அதனை எடுத்துக் கொடுத்துவிட்டு, பேரேட்டில் குறித்துக் கொள்வார்.

ஷம்சுதீன் கடைத் தெருவில் பொருள்களைத் தேடிக் கொண்டிருந்தபோது  அஜீஸ் கடைத்தெருவில் எந்தப் பொருள் எந்தக் கடையில் மிகுதியாக உள்ளது. எது இல்லை என்பதனைக்  கவனித்தபடியே வந்தான்.

அவன் கண்களுக்குப் பட்டவை எல்லாம் எதையாவது வறுத்து பொரித்து விற்கும் தள்ளுவண்டி கடைகள்தாம். அவற்றில் விற்கப்படுபவை பெரும்பாலும் அசைவ உணவுகளாகவே இருந்தன. நடந்த நடந்து அலுத்த பின்னர் ஷம்சுதீன் தள்ளுவண்டிக் கடையின் முன்பாக நின்றான். அந்தக் கடையில் கூட்டம் மிகுந்திருந்தது. கோழிக்கறியைப் பொரித்து விற்றுக் கொண்டிருந்தார் முகைதீன்பாய். அந்தத் தள்ளுவண்டியின் முகப்பில் ‘அல் முகைதீன் சிக்கன் பாய்ண்ட்’ என்று எழுதி அதன் இருபக்கங்களிலும் ‘ஹலால்’ முத்திரை அச்சிடப்பட்டிருந்தது. 

பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத்தான் சாப்பிடுவார்கள். விற்பார்கள். இஸ்லாமிய சட்டத்திட்டத்தின்படி ஹலால் உணவை மட்டுமே அவர்கள் சாப்பிட வேண்டும். ஹலால் என்பது உணவுக்காகக் கொல்லப்படும் விலங்குகளின் கொல்லும் முறையைக் குறிக்கும். ஹலால் முறையில் விலங்குகளைக் கொல்லுவது என்பது அவற்றின் கழுத்துப் பகுதியானது முழுமையான அறுபடாமல், வலியை உணரச் செய்யும் மூளைக்குச் செல்லும் நரம்பு வரை அறுப்பதாகும். இந்த முறையில் வெட்டும் முன்பு, ‘பிஸ்மில்லாஹி வல்லாஹு (அல்லாஹும்ம மின்க-வலக) அல்லாஹும்ம தகபல் மின்னி’ என்று கூறிவிட்டுத்தான் வெட்ட வேண்டும். ஹலால் முறையில் அறுக்கும்போது, கால்நடைகளில் உடலில் உள்ள அனைத்து ரத்தமும் வெளியேறிவிடும். இதனால் இரத்தத்தின் மூலம் நோய்க்கிருமிகள் பரவுவது தடுக்கப்படும். அறுக்கும் போது கால்நடைகள் வலியை உணராதவாறு அல்லது குறைவான வலியை உணருமாறு கூர்மையான கத்தியைக் கொண்டு மிகவும் வேகமாக அறுக்க வேண்டும். கால்நடைகளின் மூச்சுக்குழாயும் இரத்தக்குழாயும் ஒரே நேரத்தில் அறுக்கப்பட்டு உயிரிழக்கச் செய்ய வேண்டும். கால்நடைகளின் நரம்பு மண்டலம் வெட்டப்படாமல்,  தண்டுவடம் துண்டிக்கப்படால் இருக்கவேண்டும். தண்டுவடம் துண்டிக்கப்பட்டால், இதயத்திற்குச் செல்லும் இரத்த நாளங்கள் பாதிப்பிற்குள்ளாகி இதயத்தின் செயல்பாடு நின்றுவிடும் நிலை ஏற்படும். இப்படி இதயம் நின்றுபோனால், இதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைப்பட்டு அங்கேயே தங்கிவிடக்கூடும். பொதுவாக உடலில் கிருமிகள் உருவாதற்குக் காரணம் இரத்தம்தான். ஆனால், ஹலால் முறையில் இரத்தம் முழுவதும் வெளியேற்றப்படுவதால், கால்நடைகளின் மூலம் எவ்வித கிருமிகளும் நம் உடலினுள் நுழையாது. அது மட்டுமல்ல இரத்தம் இறைச்சியில் கலந்துவிடாததால் இறைச்சி நீண்ட நேரம் கெட்டுப்போகாமல் இருக்கும்.  ஹலால் முறையில் வெட்டும் போதும் கால்நடைகள் துடிப்பதற்குக் காரணம், வலி அல்ல. உடலில் இருந்து அனைத்து இரத்தமும் வெளியேற்றப்படுவதால், தசைகள் சுருங்கும் போது, கால்நடைகள் துடிப்பது போன்றும், துள்ளுவது போன்றும் நமக்கும் தெரிகிறது. உயிரினைக் கொல்வது கொடுமைதான் என்றாலும் அதனை வலியில்லாமல் கொல்வது என்பது ஒரு வகையில் அதற்கு வழங்கப்படும் மிக எளிய கருணைதான். வாடிக்கையாளர்களை ஏமாற்ற நினைக்கும் விற்பனையாளர்கள் விற்பனைப் பொருளின் விலையைக் குறைத்துவிட்டு அதன் சுவையையும் குறைத்துவிடுவதைப்போலத்தான். பிறரை உறிஞ்சியே வாழ நினைப்பவர்கள் அவர்களுக்குச் சிறிய நன்மையைப் புரிந்துவிட்டு அவர்களிடமிருந்து பெரிய அளவில் லாபத்தைப் பெறுவதைப் போலத்தான். வாழ்வில் எல்லோரும் ஏதேனும் ஒருவகையில் யாருக்கேனும் எதன் வழியிலாவது ஹலாலைச் செய்துகொண்டுதான் இருக்கிறோம்.  

இருவரும் ஆளுக்கு ஒரு தட்டு நிறைய பொரித்த கோழிகளை வாங்கி உண்டனர். அது சுவையாக இல்லை. விலை அதிகம். கொடுத்த பணம் வீண்தான்.

இருவரும் மீண்டும் கடைத்தெரு வழியாக நடக்கத் தொடங்கினர்.  அஜீஸின் மனத்திற்குள் அந்தக் கோழிக்கடையைப் பற்றிய சிந்தனையே ஓடியது – 

‘இந்தச் சுவையற்ற கோழி வறுவலுக்கு இவ்வளவு விலை என்றால், அந்தக் கடைக்காரர் பெறும் லாபம் எவ்வளவு என்று அவன் மனம் கணக்கிடத் தொடங்கியது. நடைபாதைக் கடை என்பதால் அவருக்குக் கடை வாடகைச் செலவு இல்லை. இரவில் வெளிச்சத்துக்கு பேட்டரி, எல்இடி பல்புகள் மட்டுமே என்பதால் கடைக்கு உரிய மின்சாரக் கட்டணம் தேவையில்லை. உதவியாளர்கள் யாரும் இல்லை. அதனால் பணியாளர் சம்பளம் இல்லை. வீட்டு கேஸ் சிலிண்டர்தான். அதனால் கூடுதல் எரிபொருள் செலவு இல்லை. ஒரு தள்ளு வண்டி, பெரிய அடுப்பு பெரிய வடைச்சட்டி, தண்ணீர்க் குடம். அவ்வளவுதான் பொருட்கள். இதற்கு மட்டுமே முதல்போடவேண்டும். பின்னர் ஒவ்வொரு நாளும் கோழி வாங்க, எண்ணெய் மசாலாப் பொருட்கள், பெரிய வெங்காயம், எலுமிச்சை எனச் சிறிதளவு பணம் செலவு செய்ய வேண்டும். சிறிய முதலீடு. அரைநாள் உழைப்பு. வியாபாரத் தெளிவு. இவை மூன்றும் இருந்தால் பெரிய லாபம்தரும் நல்ல தொழில் இது.’

ஷம்சுதீன் கடைகளை வேடிக்கை பார்த்தபடியே வந்தான்.  அஜீஸின் சிந்தனை முழுக்க அந்தக் கோழிக்கடையைச் சுற்றியே இருந்தது. 

“நண்பா! அந்தக் கோழிவறுவல் கடைக்காரன் ஒரு நாளைக்கு எத்தனை கிலோ கோழிக்கறி வாங்குவான்?”

“தெரியலையே!”

“ஒரு அஞ்சு கிலோ வாங்குவானா?”

“இருக்கலாம். லீவு நாட்கள்ல கூடுதலாகவும் வாங்குவான்.

“அன்னைக்கு நல்லா ஓடும் இல்ல?”

“ஆமாம்.”

“அப்ப, சராசரியா ஒரு நாளைக்கு எட்டு கிலோ வாங்குவானா?”

“வாங்குவான்.”

“இப்போ கிலோ என்ன விலை?”

“அவன் நாம வாங்குற விலைக்கா வாங்குவான்? அவன் ரெகுலரா வாங்குறதுனால ரொம்ப குறைஞ்ச விலைக்குத்தான் வாங்குவான்”

“அது எப்படி ரொம்ப குறைஞ்ச விலைக்குக் கிடைக்கும்?”

“சீக்குக் கோழி, சுமாரான கோழிகளைக் குறைந்த விலைக்குத் தள்ளிவிடுவாங்க.”

“ஒரு கிலோ கறி 100 ரூபாய்க்கு வாங்குவாங்களா?” 

“இவங்க கறியா வாங்க மாட்டாங்க. உயிர்க் கோழியாத்தான் வாங்குவாங்க. கிலோ 70 ரூபாய்க்கு வாங்குவாங்கன்னு நினைக்குறேன். ஆனா, 10 கிலோ வாங்கினால்தான் ஆறு கிலோ கறியாவது தேறும்”

“சரி ஒரு நாளைக்கு 700 ரூபாய்க்குக் கோழி, கேஸ், மசாலா, எண்ணெய், வெங்காயம், எலுமிச்சை, பேப்பர் தட்டு இப்படி மொத்தச் செலவு 1000 ரூபாய் வச்சுக்கலாமா?”

“தாராளமா வச்சுக்கலாம்”

“அவன் 100 கிராம் வறுத்த கறியை 30 ரூபாய்க்கு விக்குறான். அதுவும் பாதி வெந்த கறியத்தான் எடை போடுகிறான். அதுல 50 கிராம் தான் வறுவலா நமக்குக் கிடைக்குது. அதனால அவன் 100 கிராம் வறுவலை 60 ரூபாய்க்கு விற்பதாகத்தான் நாமக்குக் கணக்கு வருது.

“ஆமாம்”

“அப்ப கிலோ 600 ரூபாய் ஒரு நாளைக்கு ஆறு கிலோ 3,600 கிடைக்கும். இதுல செலவு ஆயிரத்தைக் கழிச்சா 2,600. அவனோட அரை நாள் உழைப்பும் இருக்கு. அவனோட உழைப்புக் கூலி 300 ரூபாய் கழித்தாலும்கூட அவனுக்கு 2,300 ரூபாய் லாபம். மாசத்துல 30 நாளும் கடை நடத்துனா லாபம் ஏறத்தாழ எழுபதாயிரம் வருமானம் வரும்.” 

“ஆமாம் டா. சும்மா கணக்குப் போட்டுப் பார்த்தாலே தலை சுத்துது. ஒரு மாதம். தொடர்ந்து அரை நாள் வேலை, அரை நாள் லீவு. வருமானமோ முக்கால் லட்சம்! அடேயப்பா!”

     அஜீஸ் கடைகளை வேடிக்கை பார்க்கத் தொடங்கினான். ஷம்சுதீனின் சிந்தனை முழுக்க அந்தக் கோழிக்கடைக்காரன் மாதந்தோறும் ஈட்டும் முக்கால் லட்ச ரூபாயைப் பற்றித்தான் இருந்தது.

     அவர்கள் இருவரும் கீற்றுக்கொட்டகைக்குள் நுழைந்தபோது, அங்குத் தினகரனும் பெரியசாமியும் உட்கார்ந்து இருந்தனர். ஷம்சுதீன் தான் வாங்கி வந்த பொருட்களைத் தரையில் அடுக்கிக் கொண்டே அவர்களிடம் பேச்சுக்கொடுத்தான். 

“அதுக்குள்ளயா சினிமா முடிஞ்சிடுச்சு?”

“டிக்கெட் கிடைக்கலை” என்றான் தினகர்.

உடனே பெரியசாமி, “நான் வேற படத்துக்குப் போகலாம்னு சொன்னேன். அவன் வேண்டாம்ட்டான்”.

“அப்ப சும்மாதான் இங்கேயே உட்கார்ந்துக்கிட்டு இருக்கீங்களா?” என்று கேட்டான்  அஜீஸ்.

“உங்களுக்கு லீவு வீணா போச்சா?” என்று கேட்டாக் ஷம்சுதீன்.

அவர்கள் அமைதியாக இருந்தனர்.

“இதுக்கு நீங்க வேலைக்கே போயிருக்கலாம். கூடுதலாய் ஐம்பது ரூபாய் கிடைத்திருக்கும்” என்றான் ஷம்சுதீன்.

“எப்படி?” என்று வியப்புடன் கேட்டான்  அஜீஸ்.

“நமக்குத் தர வார லீவுலயும் நாம வேலை பார்த்தா, நம்ம முதலாளி அந்த அரை நாள் சம்பளத்தோட கூடுதலாய் 50 ரூபாய் தருவார்” என்றான் ஷம்சுதீன்.

நால்வரும் சும்மா கால்நீட்டிப் படுத்துக் கொண்டனர்.  அஜீஸ் பேச்சுக் கொடுத்தான்.

“நண்பா! அந்தக் கோழிவறுவல் கடையைப் பற்றி நீ என்ன நினைக்கிற?”

“முக்கா லட்சம் கிடைக்கும்தான். ஆனால், நல்லா ஓடுனாதான் லாபம்.  இல்லைன்னா முதலுக்கே மோசமாகிடும்”

“சுவையாக் கொடுத்த நல்லா ஓடும் நண்பா!”

“சுவையாக் கொடுத்த செலவு கூடிடும். மாதம் 50 ஆயிரம்தான்  கிடைக்கும்”

“பரவாயில்லையேப்பா! மாசம் 50 ஆயிரம்றது எவ்வளவு பெரிய  லாபம்?”

“லாபந்தான். ஆனா, தெருவுல நின்னுல விக்கனும்”

“அதனால என்ன? இப்ப நாம கடைக்கு உள்ள விக்கிறோம். அதுவும் சம்பளத்துக்கு. அது சுயதொழிலாச்சே!”  

“சுய தொழிலுன்றதுக்காக…”

“முதலாளிபா!. கடைக்குள்ள இருந்தாலும் தெருவிலே இருந்தாலும் சுய தொழில் செஞ்சாலே நாம முதலாளிதாம்பா”

“இதெல்லாம் நமக்குச் சரிபடாது”

“நமக்குன்னு சொல்லாதே! வேண்ணா உனக்குன்னு சொல்லிக்கோ.”

அதன் பின்னர் இருவரும் மௌனமானார்கள். நால்வரும் சென்று சமையற்கூடத்தில் உண்டனர். பின்னர் தூங்கச் சென்றனர்.  அஜீஸ் மட்டும் தூங்கவில்லை. அவன் அடுத்த வார விடுமுறையில் கோழிக் கடைக்குத் தேவையான பொருட்களை எங்கெல்லாம் சென்று வாங்கினால் மலிவாகக் கிடைக்கும் என்று சிந்திக்கத் தொடங்கினான்.

ஷம்சுதீனின் குறட்டைச் சத்தம் அவனுடைய சிந்தனைப் போக்கினைச் சிதைத்தது. எழுந்தான். இருளில் கால் போன போக்கில் நடக்கத் தொடங்கினான். கடைக்குள் கூட்டம் குறையவில்லை. தார்ச்சாலைக்கு வந்தான். நடந்து நடந்து நெடுஞ்சாலைக்கு வந்தான். நடந்து கொண்டே இருந்தான். சற்று தொலைவில் அவன் கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறி நடந்து களைத்து அமர்ந்திருந்த மைல்கல் இரவில் மங்கலாகத் தெரிந்தது. அதை நோக்கிச் சென்றான். அதன் மீது அமர்ந்தான்.

‘இந்த ஒரு வாரத்திற்குள் எத்தனை அனுபவங்களை பெற்று விட்டோம்!’ என்று தனக்குள் நினைத்துக் கொண்டான். ‘இனி, ஒவ்வொரு வாரமும் இங்கே வந்து அதன் மீது அமர்ந்து கொள்ளவேண்டும்’ என்று நினைத்தான். அந்த மைல்கல்லின் குளிர் அவன் உடைகளில் ஊடுருவியது.

தனக்குத் தண்ணீர்க் கொடுத்து காப்பாற்றி, அறிவுரைகளைக் கூறிச் சென்ற அந்த மெய்ஞானியை நினைத்துக் கொண்டான். நெடுஞ்சாலை வாகனங்களில் முகப்பு விளக்குகள் இவன் மீது வெளிச்சக் கோடுகளை வரைந்து இவனை மின்னச்செய்தன. இரைச்சல் மிகுதியாக இருந்தது. கார்பன் புகையும் டீசல் நெடியும் இரவுப் பொழுதின் தனிமையும் அவனை அந்த இடத்தை விட்டு எழச் செய்தன. அவன் எழுந்த  தருணத்தில் அவனுக்குள் ஒரு சிந்தனை மின்னலாகத் தோன்றியது : 

‘நம்ம முதலாளி எந்தக் கடையில் மொத்தமாக மசாலா, எண்ணெய், வெங்காயம், எலுமிச்சை, பேப்பர் தட்டு போன்றவற்றை வாங்குகிறாரோ அந்தக் கடையிலே நாமும் வாங்கினால் விலை மலிவாக இருக்குமே! மூலப்பொருட்களை மலிவாக வாங்கிவிட்டால், லாபம் பெரிதாகக் கிடைக்குமே!’ 

உடனே, அவன் புரோட்டாக் கடையை நோக்கி வேக வேகமாக நடக்கத் தொடங்கினான். இவ்வளவு நேரம் மேகத்தால் மறைக்கப்பட்டிருந்த மூன்றாம் பிறை நிலவு வானில் தெரியத் தொடங்கியது. 

– – –

4

 படிக்கற்கள்

ஒவ்வொரு நாளும் விரைவாகவே விடிந்து விரைவாகவே இருண்டு கொண்டிருந்தது.  அஜீஸின் நம்பிக்கை மிகவும் மெதுவாக  ஆனால், வளர்ந்து கொண்டே இருந்தது. அது தன் முடிவற்ற வளர்ச்சிப் பயணத்தில் மிகவும் சீராகவே சென்று கொண்டிருந்தது.

மதுரை கீழமாசி வீதி இந்தியன் பலசரக்குக் கடையின் டெம்போ வேன் முருகன் புரோட்டாக் கடையின் பின்புறம் வந்து நின்றது. அப்போது  அஜீஸ் மேசைகளைத் துடைத்துக் கொண்டிருந்தான். கணக்குப்பிள்ளை காப்பறையின் சாவிக்கொத்தை எடுத்துக்கொண்டு அந்த வேனை நோக்கி வேகமாக நடந்தார். 

வேனில் இருந்து ஒருவர் இறங்கினார். அவர் கணக்குப்பிள்ளையிடம் ரசீது தாள்களை நீட்டினார். அவர் அதை வாங்கி, சரிபார்த்து விட்டு பொருட்களை இறக்குமாறு சைகை காட்டினார். வேகமாகக் கடைக்குள் வந்து உரத்த குரலில், “ அஜீஸை அழைத்தார். பின்னர் வேகமாக நடந்து சென்று காப்பறையைத் திறந்தார்.  அஜீஸ் அவரை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

“அஜீஸ்! அவுங்க இறக்குற எல்லாச் சரக்கையும் இங்க கொண்டு வந்து இந்த ரூமுக்கு முன்னாடி வை”

“சரிங்க”

“அப்புறம் நான் ரசீதைப் பார்த்து படிக்க படிக்க பொருட்களைச் சரியா எடுத்து ரூமுக்குள்ள கொண்டு போயி அடுக்கனும்”

  “சரிங்க”

 அஜீஸ் வேகமாக நடந்து வேனின் பின்புறப் பகுதிக்குச் சென்றான். அதற்குள் வேனின் ஓட்டுநரும் இந்தியன் பலசரக்குக் கடையின் முதன்மை வேலைக்காரரும் முருகன் புரோட்டாக் கடைக்குரிய  பொருள்களை மட்டும் கீழே இறக்கியிருந்தனர்.

 அஜீஸ் தன் கைகளுக்கு ஒன்றாக ஒவ்வொரு நடைக்கும் இரண்டு பொருட்கள் வீதம் கொண்டு சென்று, காப்பறையின் வாசலுக்கு முன்பாக வைத்தான். இறுதி நடையில் அவன் அந்த இருவரின் பெயர்களையும் கேட்டு மனத்தின் பதித்துக் கொண்டான். அப்படியே அந்த வேனின் பக்கவாட்டுப் பகுதியில் எழுதப்பட்டிருந்த கடையில் முகவரியையும் நினைவில் நிறுத்திக் கொண்டான்.

கணக்குப்பிள்ளை ரஷீதுகளைப் பார்த்து படிக்க படிக்க  அஜீஸ் அந்தப் பெயருக்குரிய பொருட்களைத் தேடி எடுத்து காப்பறைக்குள் கொண்டு சென்று அடுக்கினான். எண்ணெய் டின்னின் பக்கவாட்டில் பதியப்பட்டிருந்த எம்.ஆர்.பி. தொகையைப் பார்த்தான்.

கணக்குப்பிள்ளை காப்பறையைப் பூட்டிவிட்டு தன்னுடைய இருக்கையை நோக்கி வேகமாக நடந்தார். அவரின் கையில் இருந்த ரசீதுகளுள் ஒன்று நழுவி விழுந்து காற்றில் படபடத்து தரையில் புரண்டு விலகிச் சென்றது. உடனே கணக்குப்பிள்ளை இவனைப் பார்த்து ‘அதை எடு’ என்பது போல சைகை காட்டினார். அவன் வேகமாகச் சென்று அதனை மெதுவாக எடுத்தான். அதே வேகத்துடன் அவனின் கண்கள் அதில் எண்ணெய் டின்னின் விலைமதிப்பினைத் தேடின. அதில் முப்பது டின்களுக்கும் சேர்த்து தொகை எழுதப்பட்டிருந்தது. அந்தத் தொகையை முப்பதால் வகுத்தபடியே ரசீதைக் கணக்குப்பிள்ளையிடம் கொடுத்தான்.

காப்பறையில் எண்ணெய் டின்னின் பக்கவாட்டில் பார்த்த தொகைக்கும் இப்போது வகுத்து அறிந்து கொண்ட தொகைக்கும் ஏறத்தாழ 45 விழுக்காடு வேறுபாடு இருந்தது. அவன் அதிர்ச்சி அடைந்தான். ‘இவ்வளவு மலிவாகவா பொருட்கள் கிடைக்கின்றன? அப்படி என்றால், மலிவான பொருட்களைக் கொண்டும் சுவையாகச் சமைத்தால் பெரிய லாபமும் நல்ல பெயரும் கிடைக்கும்தானே! இதைத்தானே நம் முதலாளியும் செய்கிறார். அப்படியானால் நம் முதலாளிக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?’ என்று அவனின் மூளை கணக்கிடத் தொடங்கியது. பாதிக்குப் பாதி லாபம். ‘சரி, எல்லாத் தொழிலுமே இப்படித்தானா?’ என்று சிந்தித்தான்  அஜீஸ்.

மேசைகளைத் துடைத்தே இந்த வாரமும் கிழிந்தது. இந்த வாரத்தின் விடுமுறையின் போது முதலாளி  அஜீஸ்க்கு வாரச் சம்பளமாக ரூபாய் 3000 கொடுத்தார். அதனை மகிழ்ச்சியோடு வாங்கிக் வாங்கிக்கொண்டு கடைத் தெருவுக்குச் சென்றான். அவன் விழிகள் அந்தக் கோழிவறுவல் கடையைத்தான் தேடின. அந்தத் தள்ளுவண்டி கடை அங்கு இல்லை. அருகில் இருந்த கடைக்காரரிடம் விசாரித்தான். ‘இரண்டு நாட்களாக முகைதீன் வியாபாரத்திற்கு வரவில்லை’ என்ற தகவல் கிடைத்தது. முகைதீனின் முகவரியைக் கேட்டறிந்தான்.

வழக்கம்போல ஷம்சுதீன் தனக்குத் தேவையான, தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருந்தான்.  அஜீஸ் முகைதீனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தான். அவன் ஷம்சுதீனிடம் கூறிவிட்டு, அந்த முகவரியைக் கொண்டு முகைதீனைத் தேடிச் சென்றான். அந்த முகவரியில் குடிசை மாற்று வாரியப் பகுதி இருந்தது. மக்கள் நெரிசல் மிகுதி. ஒரு பழைய ஓட்டு வீட்டின் முன்பாக அந்தத் தள்ளுவண்டி நின்றது. அதையே அடையாளமாகக் கொண்டு அந்த வீட்டின் கதவைத் தட்டினான். சற்று நேரம் கழித்து முகைதீனே வந்து கதவைத் திறந்தான்.

“யாரு?”

“நான் லா”

“என்ன வேணும்?”

“நான் உங்க கடையிலே கோழி வறுவல் வாங்கிச் சாப்பிட்டிருக்கிறேன்”

“இன்னைக்குக் கடை லீவு”

“அதான் உங்களைப் பார்க்க வந்தேன்”

“கோழி இல்லையே”

“இல்ல, ஏன் ரெண்டு நாளாக் கடை திறக்கலை”

“சரியான ஓட்டம் இல்ல. லீவு நாள்கள்தான் நல்லா ஓடுது”.

“அப்ப மத்த நாள்ல என்ன பண்ணுவீங்க?”

“சும்மா இருப்பேன். இதோ இப்படித் தூங்கிக் கிடந்துகிட்டு”

“அப்போ உங்க தள்ளுவண்டியும் சும்மா தானே இருக்கும்?”

“ஆமாம்”

“அப்படின்னா நீங்க உங்களோட தள்ளுவண்டிய தரீங்களா? லீவு நாள்ல வேண்டாம். மற்ற நாள்கள் மட்டும்”

“சரி. ஆனா நீங்க யாருன்னு எனக்குத் தெரியாது. உங்களுக்கு எப்படி நான் என்னோட வண்டியைத் தர்ரது?”

“நான் முருகன் புரோட்டா கடையில்தான் வேலை பார்க்கிறேன். ஒரு நாலு நாளைக்கு வாடகைக்குக் கொடுத்தீங்கன்னா, நான் கடை போட்டு எப்படி வியாபாரம் ஆகுதுன்னு பார்த்துக் கொள்வேன்”

“சரி. தள்ளுவண்டிய எடுத்துக்கோங்க. ஒருநாளைக்கு 300 ரூபாய் கொடுத்துடுங்க”

“எனக்குத் தள்ளுவண்டியோட பொருட்களும் வேணும். அடுப்பு, வடைச்சட்டி, லைட்டு, பேட்டரி, டிஜிட்டல் தராசு, சிலிண்டர், வெட்டுக்கத்தி, தண்ணீர்க் குடம் எல்லாமே ஒருசெட்டா வேணும்” 

“அப்படின்னா ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் கொடுங்க”

“ஆயிரமா கொஞ்சம் குறைச்சுக்கோங்க”

“சரி. 100 ரூபாய் விட்டுக் கொடுக்கிறேன்”

“எண்ணுறாய் போட்டுக்கோங்க. நான் முதல் முதலில் தொழில் பண்றதால”

“சரி”

“எனக்குச் செவ்வாய்க் கிழமையிலிருந்து வெள்ளிக்கிழமை வரை நாலு நாளைக்கு வாடகைக்குக் கொடுங்க”

“சரி. அடுத்த வாரத்தில் இருந்து வண்டியை எடுத்துக்கோங்க. காலையில பத்து மணியிலிருந்து ராத்திரி பத்து மணி வரைக்கும் வாடகை கணக்கு” 

“சரிங்க.”

அங்கிருந்து நேராகப் பேருந்து நிலையத்திற்குச் சென்றான். பேருந்தில் ஏறி மதுரைக்குச் சென்று கீழமாசி வீதியில் இருந்த இந்தியன் பலசரக்குக் கடையில் சென்றான். கடையில் கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. முதலாளி இல்லை. விசாரித்தான். ‘அவர் டீ சாப்பிடுவதற்காக ஆனந்த பவனுக்குச் சென்றுள்ளார்’ என்பதை அங்கிருந்த கணக்குப்பிள்ளையின் வழியாக அறிந்துகொண்டான். 

அவன் கண்கள் அந்தக் கடைக்குள் இருவரையும் தேடின. வேன் ஓட்டுநர் கடைக்குள் இருக்க வாய்ப்பில்லைதான். ஆனால், அன்று வேனில் வந்திருந்த ராஜப்பன் இந்தக் கடைக்குள் இருக்க வாய்ப்பு இருக்கிறதே’ என்று நினைத்தான். அவரையும் பார்க்க முடியவில்லை. உடனே வேகமாக நடந்து ஆனந்த பவனுக்குச் சென்றான். 

அங்கு நான்கு பேர் அமர்ந்து தேநீரைப் பருகிக் கொண்டிருந்தனர். அவர்களுக்குச் சற்றுத் தள்ளி ஒருவர் தனியாக அமர்ந்து காப்பியைச் சுவைத்துக் கொண்டிருந்தார். மெதுவாகச் சென்று அவரிடம் தன்னை அறிமுகம் செய்துகொண்டான். தன் லட்சியத்தைக் கூறினான். அவர் கறாரான குரலில் பேசத் தொடங்கினார் :

“நீ சொந்தமாத் தொழில் பண்ண போறேன்றது நல்ல விஷயம்தான். அதுக்காக நான் முருகன் கடைக்குத் தர அதே விலைக்குத் தர முடியுமா? அவர் என்கிட்ட மாசம் ரெண்டு தடவை ரெண்டு ரெண்டு லட்ச ரூபாய்க்கு வரவுசெலவு வச்சுக்குறார். உனக்கு மாசம் 5000 ரூபாய்க்குத்தான் தேவைப்படும். 4 லட்சம் எங்க, இருக்கு 5000 எங்க இருக்கு?”

“சார்! நீங்க பார்த்து மனசு வைச்சீங்கனா”

“ஒன்னும் பண்ணலாம். உங்க முதலாளி வாங்குன பொருட்களுக்குப் பணத்தை இரண்டு மாசம் கழிச்சுத்தான் தராரு. நீ ரொக்கப் பணம் கொடுத்து வாங்கிக்கோ. அப்படி இருந்தாலும் நான் உனக்கு 30% தான் தள்ளுபடி தருவேன்”

“சரிங்க சார்”

“நீ என்னோட கணக்குப் பிள்ளையைப் போய் பார். அவர் கிட்ட நான் நீ எப்ப வந்தாலும் 30% கழிவு கொடுக்கச் சொல்றேன். நீ போகும்போது என்னோட கடைப்பையன் ராஜப்பன் கிட்டயும் நீ உன்னை அறிமுகப்படுத்திக்கோ”

“சரிங்க சார்”

லாஹ் இந்தியன் பலசரக்குக் கடைக்குச் சென்றான். கடைக்கு மிக அருகில் ராஜப்பன் நின்று கொண்டிருந்தான். அவரிடமும் கணக்குப் பிள்ளையிடமும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். ராஜப்பன் தன் புருவத்தை உயர்த்தி ஒருவித வியப்புடன்  அஜீஸைப் பார்த்தான். முதலாளி தன்னிடம் கூறியதைச் சொன்னான். 

உடனே கணக்குப்பிள்ளை, “சரி. நான் ஓனர்கிட்டே கேட்டுக்கிறேன்” என்றார். 

 அஜீஸ் ராஜப்பனிடம் காலையில் கடையை எப்பத் திறப்பீங்க?” என்று கேட்டான்.

அதற்கு ராஜப்பன் கடையை அடைக்கம் நேரத்தையும் சேர்த்து, “ 8 டூ 8” என்றான். 

அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு பேருந்து நிலையத்திற்குச் சென்றான். பின்னர் பேருந்தில் ஏறி முருகன் புரோட்டா கடையின் வாசலில் இறங்கினான். யாரிடமும் எதுவும் கூறாமல் நேராகக் கீற்றுக் கொட்டகைக்குள் நுழைந்து, படுத்துக்கொண்டான். 

சிறிது நேரத்தில் தினகரனும் பெரியசாமியும் வந்தனர். அவர்கள் இந்த வாரம் திரைப்படத்தைப் பார்த்து விட்டனர். இன்னும் சிறிது நேரம் கடந்த பின்னர் ஷம்சுதீன் வந்தான். அவன் இரண்டு கைகளிலும் பெரிய இரண்டு பைகள் நிறைய பொருட்கள் இருந்தன. அவன்  அஜீஸைப் பார்த்து மகிழ்வுடன், “என்ன ஆச்சு, கண்டுபிடிச்சியா? என்று கேட்டான்.

அதற்கு  அஜீஸ், “நான் எதையும் தொலைக்கலை” என்றான்.

சம்சுதீனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் குழப்பத்துடன் தூங்கினான்.  அஜீஸ் தெளிவுடன் தூங்கினான். வானில் வெளிச்சம் இருந்தது. இன்னும் சில தினங்களில் பௌர்ணமி வரவுள்ளது.

அதிர்ஷ்டவசமாக இந்தவாரம்  அஜீஸ்க்கு ஆட்டுக்கறி, கோழிக் கறிகளைச் சுத்தம் செய்து வெட்டும் பணி ஒதுக்கப்பட்டது. காலையில் 6:00 மணிக்கு இளமாறன் கறிக்கடையிலிருந்து ஆட்டுக்கறியும் கோழிக்கறியும் பெரிய பிளாஸ்டிக் வாளிகளில் வந்து இறங்கின. இன்று இளமாறன் மகன்தான் கறிகளைக் கொண்டுவந்து இறக்கினார். அவரிடம் பேச்சு கொடுத்தான்  அஹ்த்.

“அண்ணே! உங்க கறிக்கடை எங்கே இருக்குங்க?”

“பஸ் ஸ்டாண்டுக்குப் பின்னாடி”

“உயிர்க்கோழி கிலோ எவ்வளவு?”

“100 ரூபாய்”

“மொத்தமா வாங்குனா?”

“எத்தனை கிலோ?”

“பத்து கிலோ”

“900 ரூபாய்”

“நான் கேட்டுக்குறேன் தப்பா நினைச்சுக்காதீங்கண்ணே, கொஞ்சம் சுமாரான கோழின்னா எவ்வளவு வரும்?”

“700 ரூபாய்”

“ரெகுலரா சரக்கு எடுக்கிறதா இருந்தா, எவ்வளவு தருவீங்க?”

“வாங்க பார்த்து அனுசரிக்கலாம்”

சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, ‘அருகே கடையாட்கள் யாரும் இல்லை’ என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட  அஜீஸ் மெல்லிய குரலில் அவரிடம் தயங்கி தயங்கிப் பேசத் தொடங்கினான் :

“நான் தள்ளுவண்டிய வாடகைக்கு எடுத்து கோழிவறுவல்கடை போடலாம்னு இருக்குறேன். அதான் கேட்குறேன். கொஞ்சம் மலிவா நீங்க கொடுத்தீங்கன்னா, எனக்கு வசதியா இருக்கும்”

“சரி, வாங்க பார்த்துக்கலாம்”

“ஒரு 600 ரூபாய்க்குக் கிடைக்குங்களா?”

“சரி, வாங்க தரேன்”

மாலையில்  அஜீஸ் தன்னுடைய வேலைகளை முடித்துவிட்டு கள்ளாவை நோக்கிச் சென்றான். முதலாளி பணத்தை எண்ணிக் கொண்டிருந்தார்.

 “முதலாளி!”

 “என்ன?”

 “எனக்கு ஒரு அஞ்சு நாள் லீவு வேணும்”

 “எதுக்கு லீவு?”

 “வீட்டுக்கு போயிட்டு வரணும்”

 “வீடு வேண்டாமுனுதானே இங்க வந்த?”

 “ஒரு தடவ பார்த்துட்டு வரலாம்னு நினைக்கிறேன்”

 “பார்த்துட்டா, திரும்ப இங்கே வர மனசு இருக்காது இல்ல?”

 “வருவேங்க”

 “வந்தா சரிதான். ஏன்னா நீ நல்ல வேலை பார்க்கிற. அதான். சரி,  

 போயிட்டு வா. என்னைக்குப் போற?”

 “நாளை மறுநாள்”

 “சரி, செலவுக்குத் தனியா காசு தரேன்”

 “நல்லதுங்க”

இரவு உணவுக்குத் தேவையான கறிகளை மதியமே சுத்தம் செய்ய தொடங்கி விட்டான்  அஜீஸ். அவனுடன் பெரியசாமியும் இணைந்து கொண்டான். கறியை அலசி வெட்டத் தொடங்கினர்.

நாளைக்கு ஒரு நாள்தான் உள்ளதால், ‘எப்படியெல்லாம் பொருட்களை வாங்கி, எந்த இடத்தில் கடை போட்டு வியாபாரம் செய்ய வேண்டும்’ என்று திட்டமிட்டு திட்டமிட்டு மனதுக்குள்ளையே ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தான்.

அன்று இரவில் தன் திட்டத்தைத் தெளிவாக்கிக் கொண்டான். செவ்வாய்க்கிழமை காலையில் பேருந்து நிலையத்திலிருந்து மதுரைக்குச் சென்று, மொத்த விலைக்கடைகளில் மசாலாப் பொருட்கள், பெரிய வெங்காயம் போன்றவற்றை வாங்கிக்கொண்டு எட்டு மணிக்கு இந்தியன் பலசரக்குக் கடையில் ஒரு டின் எண்ணெய்யை மட்டும் வாங்க வேண்டும். பின்னர் நேராகப் பேருந்து ஏறி முகைதீன் வீட்டுக்குச் சென்று தள்ளுவண்டியை வாடகைக்கு வாங்கிக்கொண்டு இளமாறனின் கறிக்கடைக்குச் செல்ல வேண்டும். அங்குக் கோழிகளை வாங்கித் தள்ளு வண்டியில் வைத்தே சுத்தம் செய்து, பக்குவப்படுத்தி பொரிப்பதற்குத் தயார்ப்படுத்திய பின்னர் ஏதாவது ஒரு ‘டாஸ்மாக்’ கடைக்கு அருகில் சென்று மிகவும் மலிவான விலைக்குக் கோழி வறுவலை விற்க வேண்டும். மதியம் ஒரு மணிக்குமேல் மீண்டும் இளமாறன் கறிக்கடைக்குச் சென்று கோழிகளை வாங்கிப் பக்குவப்படுத்தி, வறுப்பதற்கு ஏற்ப தயார் செய்த பின்னர் கடைத்தெருவுக்குத் தள்ளுவண்டியைக் கொண்டு சென்று வழக்கமாக முகைதீன் கடை போடும் இடத்திலேயே தள்ளுவண்டியை நிறுத்தி, விற்க வேண்டும். இரவு 9:30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு பத்து மணிக்குள் தள்ளுவண்டியை முகைதீனிடம் ஒப்படைக்க வேண்டும். இதுதான் திட்டம். 

‘இந்தத் திட்டத்தில் ஏதேனும் நடைமுறை சிக்கல் இருக்குமா?’ என்று சிந்திக்கத் தொடங்கினான்  அஜீஸ். இதில் சிக்கல் ஏதும் இருப்பதாக அவனுக்குத் தெரியவில்லை. ‘அப்படி ஏதும் எதிர்ப்பட்டால் அவற்றைச் சூழ்நிலைக்கு ஏற்ப எதிர்கொள்ள வேண்டும்’ என்று உறுதி கொண்டான்.

இரவில் கீற்றுக்கொட்டகையில் படுப்பதற்கு முன்பாகத் தன்னுடைய சட்டை, பேன்ட்டைத் துவைத்து, காய வைத்தான். இனி தொடர்ந்து நான்கு நாட்களுக்கு இதே உடைதான் அவனுக்கு. கையில் உள்ள பணத்தை எண்ணினான். ‘நாளை இரவே முதலாளியிடம் பேசி வாரச் சம்பளத்தை வாங்கிவிட வேண்டும். அதிகாலையில் எழுந்து யாரிடம் சொல்லிக் கொள்ளாமல் செல்ல வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டான்.

‘ஊருக்குப் போகிறேன்’ என்று சொல்லிவிட்டுத் தெருவில் கோழி வறுவலைத்தாம் விற்கும் செய்தியை யாராவது முதலாளியிடம் கூறிவிட்டால் என்ன செய்வது?’ என்று சிந்தித்தான். ‘ஒன்றுமே செய்ய முடியாது’ எல்லாம் ‘இன்ஷா அல்லாஹ்’ பார்த்துக் கொள்வார்’ என்று அவன் மனம் கூறியது. உடனே அவனுக்கு ‘அல்லாஹ்’வைப் பற்றிய நினைவு வந்தது. 

அவன் தொழுகைக்குச் சென்று ஏறத்தாழ மூன்றாண்டுகள் கடந்து விட்டன. வீட்டில் தொழுவதையும் அல்லாஹ்யை நினைப்பதைக்கூட அவன் மறந்து இரண்டு ஆண்டுகள் ஓடி விட்டன. அவன் வீட்டை விட்டு வெளியேறிய போதுகூட அவன் அல்லாஹ்யை நினைக்கவில்லை. அந்த ஸூஃபி ஞானியாரைச் சந்தித்த போதும்கூட. ஆனால், இப்போது அல்லாஹ்யை நினைத்து விட்டான். ஆகப்பெரிய இடர் வரும்போது அல்லாஹ்யை நினைக்காமல் இருக்க முடியுமா, என்ன? நான் அல்லாஹ்யை மறந்தாலும் தனக்குள் அல்லாஹ்யை இருந்து கொண்டேதான் உள்ளார்’ என்பதைப் புரிந்து கொண்டான். மேகங்கள் இல்லாத வானில் அல்லாஹ்இன் கருணை முழுநிலா போல ஒளிர்ந்து கொண்டிருந்தது.

– – –

5

விடியலின் பாதை

நாளைக்கு பௌர்ணமி. இன்று இரவே  அஜீஸ் தன் முதலாளியிடம் சென்று தன்னுடைய நான்கு நாள் விடுமுறையை நினைவூட்டினான். அவர் உடனே வாரச் சம்பளத்தைக் கொடுத்தார். 

“வீட்டுக்கு ஏதாவது வாங்கிட்டு போ” என்று கூறித் தனியாக ஆயிரம் ரூபாய் கொடுத்தார். அதனை மகிழ்வோடு வாங்கிக் கொண்டு  அஜீஸ் கள்ளாவின் இடப்புறம் சென்று, குனிந்து அவரின் கால்களைத் தொட்டான். முதலாளி பதறி எழுந்து, “நல்லா இருப்பா! நல்லா இருப்பா!” என்று பதற்றத்துடன் கூறியபடியே வாழ்த்திவிட்டு, மெதுவாக அமர்ந்து கொண்டார். 

மிகுந்த மகிழ்ச்சியுடன் தூங்கச் சென்றான். நெடுநேரம் தூக்கம் வரவேயில்லை. துன்பத்திலும் இன்பத்திலும் தூக்கம் தூரமாகிவிடுகிறது. தன்னிரு சகோதரிகளைப் பற்றி நினைத்தான். அடுத்துத் தன் தாயைப் பற்றி நினைத்ததுமே தன் வாப்பாவையும் நினைத்துக் கொண்டான். அவர்கள் தன்னைத் தேடி அலைந்து, அழுதிருப்பார்கள் என்று நினைத்ததும் அவனுக்கு அழுகையை வருவதுபோல இருந்தது. ஆனால், அழவில்லை.

நெஞ்சு முழுக்க வருத்தம் இருக்கிறது. விழிகளில் கண்ணீர் துளிர்க்கிறது. ஆனால், அது வழியவில்லை. அவன் அழவில்லை. அழமாட்டான். 

திடீரென்று அந்த ஸூஃபி ஞானியாரின் நினைவு வந்தது. அவரை நான் அந்த வித்தியாசமான குல்லாவைப் பற்றி நினைத்தான். நாளைக்கு அதைப் போன்ற குல்லாவை வாங்கலாமா? யாரை அனுப்பி அதனை வாங்கி வரச் செய்யலாம்? என்று சிந்தித்தான். உடனே அவனுக்குத் தொழுகை பற்றிய நினைவு வந்தது. ‘இனித் தொடர்ந்து தொழ வேண்டும். ஐந்துமுறையும் தொழ வேண்டும்’  என்று நினைத்துக் கொண்டான். 

‘நாளைக்கு ராஜூ ஐயாவுக்கு விடுமுறைதானே? அவரிடம் கூறி வாங்கி வருமாறு கூறலாமா?’ என்று நினைத்தான். ‘அவர் வாங்கி வந்து வைக்கட்டும். நாம் நான்கு நாட்களுக்குப் பின்னர் வந்து அதனை அவரிடம் வாங்கிக் கொள்ளலாம்’ என்று நினைத்தான். அதிகாலையில் எழ வேண்டும். தொழ வேண்டும். நாளொன்றுக்கு ஐந்து முறை தொழுதே தீர வேண்டும்’ என்று தீர்மானித்துக் கொண்டு தூங்கினான். 

அவன் கனவில் வாப்பா வந்தார். மிரட்டினார். அடித்தார். வீட்டுக்கு வரச் சொல்லி அவனது வலது கையைப் பற்றி இழுத்தார். அவன் விழித்துக் கொண்டான். விடியத் தொடங்கியது. துள்ளி எழுந்தான். நெடுநாட்களுக்குப் பின்னர் தலையில் கைக்குட்டையைக் குல்லாபோல கட்டிக்கொண்டு, முதல்வேளை தொழுகையை மேற்கொண்டான். அவன் புறப்பட்ட போது அவனின் வலதுதோளை ஷம்சுதீன் தொட்டான். மெல்லிய குரலில் அவனிடம் பேசத் தொடங்கினான்  அஜீஸ் :

“நான் போயிட்டு வரேன்”

“எங்க?”

“வீட்டுக்கு”

“வீட்டுக்கா?”

“ஆமா. என் வீட்டுக்கு?”

“அது நீ முதலாளிக்கிட்ட சொன்னது. என்கிட்ட உண்மையைச் சொல்லு”

“கோழிக்கடை போட போறேன்”

“ஓ! முக்கா லட்சம் சம்பாதிக்க போற”

“இருக்கலாம்”

“எல்லாருக்கும் எல்லாமே கைக்கூடி வராது”

“முயற்சி பண்ணி பாக்குறேன்”

“பணத்துக்கு என்ன பண்ணுவ?”

“ஓரளவுக்கு இருக்கு”

“நஷ்டம் ஆயிடுச்சுன்னா, என்ன பண்ணுவ?”

“ஏத்துக்குவேன்”

“சரி. இந்த மனப்பக்குவம் இருந்ததுனாலே போதும், எந்த பிசினஸையும் ஈஸியா செய்யலாம். எதுலயும் துணிச்சலா இறங்கலாம்”

“நன்றிப்பா”

“சரி. ஆமாம், நீ எங்க தங்குவ,  தூங்குவ?”

இந்தக் கேள்வி  அஜீஸை அதிரச் செய்தது. இது பற்றி அவன் சிந்திக்கவே இல்லை. இரவைப் பற்றி அவன் நினைக்கவே இல்லை. அவன் வாழ்வில் இரவு என்பதே இல்லை. இனி, ஒளி மட்டும்தான் எல்லாமும் என்று நினைத்து விட்டான். லட்சிய வேட்கை அவனை அந்த அளவுக்கு மயக்கியிருந்தது.

“இரவுதானே, ஷம்சுதீன்? தூங்குறதுக்குத்தானே? பஸ் ஸ்டாண்டில் படுத்துக்குவேன். குளிக்குறதுக்கும் அங்கேயே வசதி இருக்கே!” என்றான் மிகுந்த நம்பிக்கையுடன்.

அப்போது ராஜு அய்யா குளித்துவிட்டு வந்தார். அவரிடம் அஜீஸ் பேசினான். கொஞ்சம் பணம் கொடுத்தான். அவருக்குப் புரியும் வகையில் அந்தக் குல்லாவைப் பற்றி விளக்கினான். ‘தாம் அதனைத் தேடிப் பிடித்து வாங்கி வந்து வைப்பதாகவும் நீ வீட்டுக்குச் சென்று திரும்பி வந்ததும் தன்னிடம் இருந்து அதனை வாங்கிக் கொள்ளலாம்’ என்றும் ராஜு அய்யா அவனுக்கு உறுதி அளித்தார்.

அங்கிருந்த மற்ற பணியாளர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு சாலையில் இறங்கி வேக வேகமாக நடக்கத் தொடங்கினான்  அஜீஸ். அவன் நடையைவிட அவரின் சிந்தனை மிகுந்த வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அவன் மனம் அவனுக்கு முன்னதாகவே பேருந்தில் ஏறி சென்று கொண்டிருந்தது. அவன் திட்டமிட்ட படியே செயல்பட்டுக் கொண்டிருந்தான். எல்லாமே அவன் திட்டமிட்டபடியே நடைபெற்றன. ‘டாஸ்மாக்’ கடைக்கு மிக அருகில் தள்ளுவண்டியை நிறுத்திவிட்டு அல்லாஹ்வை நினைத்து அடுப்பைப் பற்ற வைத்தான். வடைச்சட்டியில் எண்ணெய்யை ஊற்றினான். 

தெருமுனையில் சிலர் பொது அடிகுழாயில் தண்ணீரைப் பிடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான். உடனே குடத்தில் தண்ணீரைப் பிடிக்க நினைத்தான். ‘கடையை விட்டுச் செல்வதா?’ எனத் தயங்கி, பின்னர் ‘விரைவாக வந்துவிடலாம்’ என்று தன்னைத்தானே சமாதானம் செய்துகொண்டு குடத்தைத் தூக்கிக்கொண்டு ஓட்டமும் நடையுமாகச் சென்றான்.

ஒரு ஜெராக்ஸ் கடையைக் கடக்கும் போது அவன் மனக்கண்ணில் மின்னலென ஒரு சிந்தனை தீற்றல்போலத் தோன்றியது. ‘கோழி வறுவலை எவ்வளவு விலைக்கு விற்கப் போகிறோம் என்பதை அச்சிட்டுத் தள்ளுவண்டியில் தொங்கவிடலாம்’ என்று நினைத்தான். 

குடத்துடன் ஜெராக்ஸ் கிடைக்குள் நுழைந்தான். ‘கோழி வறுவல் 100 கிராம் 20 ரூபாய்’ என்று தட்டச்சுச் செய்து அதனைப் பெரிதாக்கி, ஐந்து பிரிண்ட் போடுமாறு கூறினான். கடைக்காரர் கால்மணி நேரமாகும் என்று கூறியதால் அதனை பிரிண்ட் எடுத்து வைக்குமாறு சொல்லிவிட்டு தண்ணீர் எடுக்கச் சென்றான்.

இருவர் நீரைப் பிடித்த பின்னர் தன் குடத்தை வைத்தான். அப்போது அவனின் இடது தோளைத் தன்னோடு மிகவும் பழகிய ஒரு கை தொடுவதாக உணர்ந்து, சட்டெனத் திரும்பினான். உடனே அவனின் முகத்திலும் நெஞ்சிலும் முகிலும் அடிகள் வலுவாக விழத்தொடங்கின. 

அவனின் வாப்பாவுக்குத் தடித்த கைகள். மிகவும் வலுவான கைகள். நெஞ்சு பருத்து, தோள்கள் புடைத்திருக்கும். நல்ல உயரம். நல்ல நிறம். முன் வழுக்கைத் தலையை எப்போதும் வெள்ளைக் குல்லாவால் மறைத்திருப்பார். ஐந்து வேளைத் தொழுகையைக் கடைப்பிடிப்பதால் அவரின் மேல் நெற்றியில் ஒரு ரூபாய் நாணயத்தின் அளவுக்குத் தோல் கருத்து, தடித்திருந்தது.

எப்போதும் கட்டம் போட்ட கைலியை வயிறுவரை ஏற்றிக் கட்டியிருப்பார். வெள்ளை நிற ஜிப்பா அவரின் உடலைத் தாண்டி நீண்டிருக்கும். வலது மணிக்கட்டில் வெள்ளிக்காப்பு. அது எப்போதும் முன்கையில் சாய்ந்தபடி கிடக்கும். அவருக்குச் சினம் வந்துவிட்டால் அதனைக் கையில் மேல்நோக்கி ஏற்றி இறுக்கிக்கொள்வார். வந்த சினத்தை அடக்க முடியவில்லை என்றால் அடுத்து அடிதான். இடிபோல விழும். அப்போது அந்தக் காப்பு வழுகி வழுகி முன்கையை நோக்கி வந்துவிழும். அதனை மீண்டும் மீண்டும் ஏற்றி இறுக்கிக்கொண்டு அடித்தபடியே இருப்பார். அது மீண்டும் மீண்டும் விழுந்தபடியே இருக்கும். சண்டையிடும் இருவருக்கு இடையில் மூன்றாமவர் உள்நுழைந்து தடுப்பதைப் போன்று ஒருவகையில் அது அவரின் சினத்தைக் குறைக்கவே முயன்று கொண்டிருக்கும். நரைக்கத் தொடங்கிய தாடி, மீசை. முகத்தில் சிறிது பெரியம்மைத் தழும்புகள். புதிதாகப் பார்ப்பவர்கள் அவரை முரடர் என்றுதான். நினைப்பார்கள். பழகியவர்கள் அவர் கறாரான பேர்வழி என்பதனை உணர்ந்திருப்பார்கள்.

அடித்து முடித்த பின்னர்தான் வாப்பா அவனைத் திட்டவே தொடங்கினார். தமிழகத்தில் வழக்கில் உள்ள அத்தனை வசைச்சொற்களும் அவரின் வாயிலிருந்து அறாமல் இணைத்துப் பின்னப்பட்ட சங்கிலிபோல அது வந்துகொண்டே இருந்தன.  அங்கிருந்தவர்கள் வேடிக்கை பார்த்தனர்.  அஜீஸ் தரையில் சரிந்து கிடந்தான்.

“நீ ஓடிப்போன நாளில் இருந்தே உன்னைத் தேடிக்கிட்டுத்தான் இருக்கேன். இளமாறன் கறிக்கடையிலே உன்னைப் பார்த்ததா எனக்குத் தகவல் வந்ததிலிருந்து உன்னைத் தேடி நாயா அலைஞ்சுகிட்டே இருந்தேன். உன்னைக் கண்டுபிடிச்சுக் கூட்டிட்டு போறதுக்கு இல்லை; உன்னை அடிச்சு புதைக்கிறதுக்காகத்தான். நீ ஓடிப் போகும்போது வீட்டில் இருந்து பணமும் பொருளும் எடுத்துட்டுப் போகல. துணிகூட எடுத்துட்டு போகல. அதனாலத்தான் நான் இப்போ உன்ன உயிரோடு விடுறேன். பாத்திமா, ரஹிமா நிக்காஹ்க்குன்னு நான் சேர்த்து வைச்சிருக்குற நகைகள்ள நீ கைவைச்சிருந்தேன்னா நான் இப்ப உன்னை உயிரோட எரிச்சிருப்பேன். நாயே! எதுக்குடா ஓடிப்போன? நான் உன்கிட்ட காசு பணம் கேட்டேனா? வெளிநாட்டுக்குப் போயி சம்பாதிச்சா நாலு காசு கிடைக்கும். நாலுபேரு முன்னாடி மதிப்பா இருக்கலாம்.  பணத்தையும் மதிப்பையும் சேர்த்துக்கிட்டு நீ நல்லா பிழைக்கலாமேன்னுதானே உன்னை வெளிநாட்டுக்குப் போகச்சொன்னேன். நீ சம்பாதிக்கிறத வச்சா நான் என் மகள்களுக்கு நிக்காஹ் செய்யப் போறேன்? நான் என்ன வக்கில்லாதவனா? சொல்லுடா நாயே? நான் என்ன வக்கில்லாதவனா?” என்று திட்டிக்கொண்டே தன் மகனின் முகத்தில் உதைத்தார் ‘ஹூசைன் பாய்’ என்று எல்லோராலும் அழைக்கப்படும் இப்ராஹிம் ஹூசைன் ஷேக்.

  அஜீஸ் மெல்ல எழுந்து தன் முகத்தில் வழிந்த ரத்தத்தையும் உடையில் ஏற்பட்ட கறைகளையும் கழுவினான். பணிவான குரலில் மிகுந்த மரியாதையோடு, “வாப்பா நான் உள்ளூரிலேயே உழைச்சு நிறைய சம்பாதிப்பேன். வெளிநாட்டுக்குப் போக மாட்டேன்” என்றான்.

ஹூசைன் பாய், தன் பற்களைக் கடித்துக் கொண்டே, “இதைத்தாண்டா நாயே மூணு வருஷமா சொல்லிக்கிட்டு இருக்குற. வேற ஏதாவது சொல்லு” என்றார்.

அருகில் இருந்தோருக்கு இவர்களின் கதை புரிந்து விட்டது. அவர்கள் இவர்கள் இருவரையும் எதிரெதிர்த்திசையில் விலகச் செய்தனர்.   அஜீஸ் தன் குடத்தை நிறைத்துத் தூக்கிக்கொண்டு ஜெராக்ஸ் கடையை நோக்கி மெல்ல மெல்ல நடந்தான். ஹூசைன் பாய் குழாய்க்குப் பக்கத்திலேயே நின்றுகொண்டு தன் மகனின் முதுகையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு முதன்முறையாக மூச்சு வாங்கியது. தனக்கு வயதாகத் தொடங்கிவிட்டதை உணர்ந்தார். 

கோழிவறுவலின் விற்பனை விலை குறிப்பிட்ட பிரிண்ட் அவுட் தாள்கள் தயார்நிலையில் இருந்தன. அவற்றைப் பெற்றுக் கொண்டு பணத்தைக் கொடுத்துவிட்டு  அஜீஸ் தள்ளுவண்டிக்கு அருகில் வந்தபோது எண்ணெய் கொதித்துக் கொண்டிருந்தது.

அல்லாஹ்யை மனத்திற்குள் வணங்கி, கோழிக்கறிகளை வடைச்சட்டியில் இட்டான். அவை நுரை தள்ளிப் பொரியத் தொடங்கின. பிரிண்ட் அவுட் தாள்களைத் தள்ளுவண்டி மூன்று பக்கங்களிலும் ஒட்டி வைத்தான். அப்போது ஹூசைன் பாய் அங்கு வந்து நின்று அவனைப் பார்த்து முறைத்தார். அவன் வேலைகளைச் செய்து கொண்டே தன் வாப்பாவிடம் பேசத் தொடங்கினான் :

“வாப்பா! நல்லா லாபம் கிடைக்கும்னு தெரிஞ்சுதான் இந்தத் தொழில்ல இறங்கிருக்கேன். இந்தத் தொழிலுக்காக நான் கடன் ஏதும் வாங்கலை. வாரச் சம்பளத்திலே இருந்துதான் முதல் போட்டுருக்கேன். தோக்க மாட்டேன். எப்படியும் ஜெயிச்சிருவேன். எனக்கு நம்பிக்கை இருக்கு. சம்பாதிச்சு பணக்காரனாகிடுவேன். அதுக்கு அப்புறம்தான் வீட்டுக்கு வருவேன். இப்போதைக்கு என்னை வீட்டுக்கு வரச் சொல்லிடாதீங்க”.

“அப்படின்னா, உன்னைப் பார்த்ததே நான் யார்கிட்டயும் சொல்லக்கூடாதா?”

“ஆமாம். ஒரு வருஷத்துக்குள்ள நான் பணக்காரனாகிடுவேன்.”

“சரி, நீயா வீட்டுக்கு வர்ற வரையும் நானா யார்க்கிட்டயும் சொல்ல மாட்டேன். தொலைஞ்சவன் தொலைஞ்சவனாவே இரு. நானும் உன்னைத் தேடுறமாதிரியே காட்டிக்குறேன். நீயா உனக்கு எப்பத் தோணுதோ அப்ப வா. நாளைக்கு வந்தாலும் சரி, இல்லாட்டி நாலுவருஷம் கழிச்சு வந்தாலும் சரிதான்.” 

கோழிக்கறி நன்றாகப் பொரிந்து விட்டது. அதனை எடுத்து குவித்து வைத்தான். தீயை மட்டுப்படுத்தினான். பேப்பர் தட்டில் பத்துத் துண்டுகளை வைத்து, சிறிது பெரிய வெங்காயத்தை நறுக்கி அருகில் வைத்தான். எலுமிச்சைப் பழத்தை நறுக்கி, கால் பங்கினை அவற்றோடு சேர்த்து வைத்தான். அந்தத் தட்டைத் தன்னிருகையிலிலும் ஏந்திப் பிடித்துக் கொண்டு, வானைநோக்கி உயர்த்திக் காட்டி அல்லாஹ்வை வணங்கினான். பின்னர் அதைத் தன் வாப்பாவிடம் நீட்டினான். இதை அவர் எதிர்பார்க்கவில்லை. மறுப்புக் கூறாமல் அதனை வாங்கினார். அல்லாஹ்வை நினைத்துக்கொண்டு அதில் இருந்து ஒரு துண்டுக் கறியை எடுத்து வாயில் இட்டுக் கொண்டார். அவனிடம் ஏதும் கூறாமல் தட்டை ஏந்தியபடியே நடக்க முயன்றார். உடனே, வேகமாகத் திரும்பி தன் மகனைப் பார்த்து, “என்னோட அம்மா சமைக்கிற மாதிரியே, அதே சுவையோட இருக்கு” என்று கூறிவிட்டு, வீடுநோக்கி வேகமாக நடக்கத் தொடங்கினார்.

அந்தப் பக்கம் வந்தவர்கள் கோழிவறுவலின் விலையைப் பார்த்துவிட்டு, ஒரு கணம் வியந்தனர். மறுகணமே ஆளுக்கு 100 கிராம், 200 கிராம் என வாங்கத் தொடங்கினர். ‘டாஸ்மாக்’ சென்று வந்தவர்களும் செல்ல உள்ளவர்களும் மிகுதியான அளவில் வாங்கினர்.

அடுத்த இரண்டு மணி நேரத்தில் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. இவ்வளவு விரைவில் இவை வியாபாரமாகிவிடும் என  அஜீஸ் எதிர்பார்க்கவில்லை. இவற்றின் சுவையைவிட, இவை மலிவு என்பதே இவை இவ்வளவு விரைவில் விற்கக் காரணம். இவை மட்டுமல்ல, மற்றொரு காரணமும் இருந்தது. அது தள்ளுவண்டி நிறுத்தப்பட்டிருந்த இடம்.

குறைந்த விலைக்கு மிகுதியாக விற்பது என்பது வணிக உத்திகளில் ஒன்று. இதில் சாதகமான விஷயங்களுக்கு இணையான அளவுக்குப் பாதகமான விஷயங்களும் இருக்கின்றன. அடக்க விலை ஏறினாலும் விற்பனை விலையை உயர்த்த முடியாது. ஆனால், அப்போது சுவையில் சற்று சமரசம் செய்து கொள்ளலாம்.

 அஜீஸ் வண்டியைத் தள்ளிக்கொண்டே இளமாறன் கறிக்கடைக்குச் சென்றான். இருபது கிலோ உயிர்க்கோழிகளை வாங்கினான். மாலையில் அவன் கடைத் தெருவில் கடை போட்ட போது கூட்டம் அலைமோதியது. இரவு 8 மணிக்குள் எல்லாம் விற்று விட்டன. காலையில் தான் வண்டியில் ஒட்டியிருந்த பிரிண்ட் அவுட் தாள்களைக் கிழித்தான். தள்ளுவண்டியைத் தள்ளிக் கொண்டு முகைதீனின் வீட்டை நோக்கிச் சென்றான். வாடகையைக் கொடுத்துவிட்டு, வண்டியையும் பொருட்களையும் ஒப்படைத்தான். பேருந்து நிலையத்துக்குச் சென்று ஓய்வெடுத்தான்.

வெள்ளிக்கிழமை வரை இரவு வரை இதுபோலவே வியாபாரம் நன்றாகவே இருந்தது. அவன் எதிர்பார்த்ததைவிட மூன்று மடங்கு லாபத்தைப் பார்த்து விட்டான். இன்று மட்டுமே 40 கிலோ உயிர்க்கோழி வாங்கிப் பொரித்து விற்றிருந்தான். நாளை முதல் இரண்டு நாட்கள் முகைதீன்தான் கடை போடுவான். இவன் முருகன் புரோட்டா கடைக்குச் செல்ல வேண்டும்.

‘திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை முதலாளியிடம் எப்படி விடுமுறை கேட்பது? தருவாரா? அதைவிட முக்கியமானது முகைதீன் வாடகைக்கு வண்டியைத் தருவானா? அவன் தர மாட்டான். விலையைக் குறைத்து நான்கு நாட்கள் வியாபாரம் செய்த விஷயம் அவனுக்கு நாளைக்குத் தான் அவனுடைய வாடிக்கையாளர்கள் வழியாகத் தெரியக்கூடும். என்ன செய்வது? புரோட்டா கடையிலிருந்து விலகிவிடலாம். புதிதாக வண்டி, பொருட்களை வாங்கிவிடலாம். எங்குத் தங்குவது? வண்டிக்குப் பாதுகாப்பு? விடியலில் முதலாளியிடம் பேச வேண்டும்’ என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டே புரோட்டா கடையின் கீற்றுக்கொட்டகைக்குள் நுழைந்தான். 

இந்த நான்கு நாட்களிலும் தான் ஒருவேளை மட்டுமே தொழுகையை மேற்கொண்டது அவனுக்கு இப்போதுதான் நினைவுக்கு வந்தது. அது பற்றி நினைத்ததும் அவனுக்கு வெட்கமாகத்தான் இருந்தது. ‘நாளை முதல் நிச்சயமாக ஐந்து வேளைகளும் தொழ வேண்டும்’ என்று உறுதி கொண்டான். 

– – –

6

கதவுகள் திறக்கும்

இரவில் ராஜு அய்யா குல்லாவைக் கொண்டு வந்து  அஜீஸிடம் கொடுத்தார். அவன் அதை இன்றைய தொழுகை முதல் பயன்படுத்தத் தொடங்கினான். காலை உணவுக்குப் பின்னர் அவன் ஷம்சுதீனோடு பேசினான். அவன் கூறியது போலவே முதலாளிடம் நயமாகப் பேசினான். 

“ஓ! சுயதொழிலா? கடைபோடப் போற. நல்லது. இனி, நீ ஒரு முதலாளி. நல்லாயிரு.”

“நன்றி முதலாளி!”

“எங்கிட்ட வேலை பார்த்தவங்கல்ல எங்கிட்ட சொல்லாம ஓடிப் போனவுங்கதான் அதிகம். நீ சொல்லிட்டுப் போற. அதுவே எனக்குத் திருப்திதான். நீ சொந்தக்கடை போடப் போற. அதுவும் எனக்குப் போட்டியா இல்லாம. அதனாலையும் எனக்கு மகிழ்ச்சிதான். நேரம் கிடைக்கும்போது அடிக்கடி இந்தப் பக்கம் வந்துட்டுப் போ”

“சரிங்க முதலாளி”

 அஜீஸ் மற்றவர்களோடு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தான். அப்போது பெரியசாமி, “தள்ளுவண்டி, சமையல் பாத்திரங்கள் எல்லாம் புதுசா வாங்கிடாதே! ரொம்ப செலவாயிடும். புதுப்பொருளப் பாதுகாக்குறது கஷ்டம். எல்லாத்தையுமே ஞாயிற்றுக்கிழமை பழைய பொருள் சந்தையில வாங்கிடலாம். பண மிச்சம். ஒருவேளை அவை தொலைஞ்சாலும் பெரிய அளவுல நஷ்டம் ஏற்படாது” என்று ஆலோசனை வழங்கினார்.

சனிக்கிழமை முழுக்க அலைந்து திரிந்து மிகக் குறைந்த வாடகையில் ஒரு வீட்டைப் பிடித்தான் அஜீஸ். மூன்றாவது மாடி என்பதால் அதற்கு மேல் உள்ள மொட்டை மாடியையும் அவனே பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு இருந்தது. வீட்டிற்குப் பின்புறத்தில் இருந்த வெற்றுமனையின் முட்புதங்களை ஒட்டியவாறு தள்ளுவண்டியை நிறுத்திக் கொள்ளலாம். ஒரு வாரத்தில் அட்வான்ஸ் பணம் தருவதாகவும் இப்போதே குடிவருவதாகவும் வீட்டின் உரிமையாளரிடம் கூறி, அனுமதி பெற்றான்.

ஞாயிற்றுக்கிழமை சந்தையில் மிக மலிவான விலைக்குத் தள்ளுவண்டியையும் சமையல் பாத்திரங்களையும் வாங்கினான். காஸ் சிலிண்டர் மட்டும்தான் இனித் தேவை.  அது இல்லாமல் மற்ற எது இருந்தும் பயன் இல்லைதான். மதிய நேரத்தில் வண்டியைக் கொண்டு வந்து வெற்றுமனையில் நிறுத்தினான். பாத்திரங்களை மூன்றாம் மாடிக்கு ஏற்றி, தன் வீட்டில் இறக்கி வைத்தான். ‘கேஸ் சிலிண்டருக்கு என்ன செய்யலாம்?’ என்று சிந்தித்துக் கொண்டிருந்தான்.

அப்போது கொலுசொலி கேட்டது. தன் வீட்டுக்கு அருகே மொட்டை மாடிக்குச் செல்லும் படிக்கட்டுகளில் யாரோ ஒரு பெண்மணி தன் கொலுசின் அத்தனை சலங்கைகளும் அதிர்ந்து குலுங்கும் விதமாக தாவித்தாவி ஏறிச் செல்வதை ஓசையின் வழியாகவே உணர்ந்தான். எழுந்து வேகமாக வீட்டைவிட்டு வெளியே வந்தான். மாடிப்படிகளைப் பார்த்தபடியே நின்றான். சில வினாடிகளில் காய்ந்த துணிகளை அள்ளிக்கொண்டு துள்ளித்துள்ளி இறங்கி வந்தாள் மதுமிதா. அவளின் கொலுசுகள் அவளைப் போலவே அதிர்ந்து ஒலித்தன. மிகுந்த தயக்கத்தோடு, ஆனால் வேறு வழியின்றி அவளிடம் பேசினான்  அஜீஸ்.

 “ஒரு நிமிஷம் நில்லுங்களேன்”

 “என்ன?”

 “உங்க கிட்ட உதவி கேட்கணும்”

 “என்ன?”

 “உங்க வீட்ல கேஸ் சிலிண்டர் இருக்கா?”

 “இருக்கு”

 “ரெண்டு சிலிண்டர் இருக்கா?”

 “இருக்கே”

 “அதுல ஒன்ன மட்டும் எனக்கு வாடகைக்குத் தருவீங்களா?”

 “அம்மாகிட்ட கேளுங்க”

 “அம்மா வீட்டுல இருக்காங்களா?”

 “இருக்காங்க”

 “சரிங்க”

அவளின் பின்னாலேயே அவனும் படிகளில் இறங்கிச் சென்று அவள் வீட்டுவாசலில் நின்றான். அவள் உள்ளே சென்ற சில நிமிடங்களில் வீட்டுக்குள் சிறிது சலசலப்பு கேட்டது. அவளும் அவளின் அம்மாவும் வந்தனர். அவள் தன் அம்மாவுக்குப் பின்புறம் பாதிஅளவு மறைந்தவாறு நின்று கொண்டாள்.

 “நீங்க யாரு?”

 “நான் மேல் மாடிக்குப் புதுசா குடி வந்திருக்கேன்”

 “ஓ!” 

 “கோழிவறுவல் கடை வச்சிருக்கேன். எனக்கு காஸ் சிலிண்டர் தேவைப்படுது”

 “அதுக்கு?”

 “நீங்க எனக்கு வாடகைக்குக் கொடுத்தீங்கனா எனக்கு ரொம்ப வசதியா இருக்கும்”

 “அது வீட்டு கேஸ். நீங்க கமர்சியல் யூஸ்க்காகக் கேட்கறீங்களே? யாராவது கண்டுபிடிச்சிட்டா?”

 “சிக்கல் வராமல் நான் பார்த்துக்கிறேன்”

 “எத்தனை நாளைக்கு வேணும்?”

 “எல்லா நாளும்”

 “கடை போடும்போதுதானே அதைப் பற்ற வைப்பீங்க? மற்ற நேரம்  அது எங்க வீட்டிலேயே இருக்கலாம்ல?”

 “இருக்கலாம். எனக்குக் காலையில பத்து மணியிலிருந்து ராத்திரி பத்து மணி வரை தேவை”

 “அதுக்கு அப்புறமா நாங்க சமைக்கப் போறோம்? அது உங்க கிட்டயே இருக்கட்டும்”.

 “சரிங்க”

 “சரி, வாடகை எவ்வளவு கொடுப்பீங்க?”

 “நீங்களே சொல்லுங்களேன்”

 “சரி, கேஸ் விலையைவிட இரண்டு மடங்கு கூடுதலாத் தாங்க”

 “இது ரொம்ப அதிகம். எனக்குக் கட்டுப்படி ஆகாதே!”

 “சரி, போனா போவது. ஒன்றரை மடங்கு தாங்க”

 “இன்னும் கொஞ்சம் குறைச்சுக்கலாமே”

 “இதுக்கு மேல குறைக்க முடியாது”

 “சரிங்க, நான் ஒத்துக்குறேன்”

 “பணத்தை முதலில் கொடுத்துடனும். நேத்துதான் சிலிண்டர் வந்தது. சீல் உடைக்காமல் புதுசா, முழுசாக இருக்கு. எடுத்துக்கோங்க. கேஸ் தீர்வதற்கு முன்னாடியே சொல்லிருங்க. அப்பத்தான் நான் பதிவு பண்ணி, உடனே புது சிலிண்டரை வரவைக்க முடியும்”

 “சரிங்க”

 அஜீஸ் பணத்தை எடுப்பதற்காக மாடிக்குச் சென்றான். கீழே காஸ் சிலிண்டரை உருட்டப்படும் சத்தம் கேட்டது. அவன் பணத்தை எடுத்துக்கொண்டு கீழே வந்தபோது, மதுமிதா தன் வீட்டுவாசலில் புதிய காஸ் சிலிண்டருடன் நின்று கொண்டிருந்தாள். மதுமிதாவின் அம்மா அவனிடமிருந்து பணத்தை வாங்கிக் கொண்டார்.

“தம்பி! உங்ககிட்ட நான் சிலிண்டர் கொடுத்துப் பணத்தை வாங்கினதை யார் கிட்டயும் சொல்லிடாதீங்க! முக்கியமா மதுமிதா அப்பாவுக்குத் தெரியவே கூடாது. இந்த வருமானம் எனக்கு மட்டும்தான். இப்படிச் சேத்தாதான் நான் எம் மகளுக்கு நல்ல துணிமணிகளை வாங்கித் தர முடியும். அதுக்காகத்தான் இதெல்லாம்.” 

“சரிங்க”

ஒரு விநாடியில் சிலிண்டரை வலதுகையால் தூக்கி இடதுதோளில் ஏற்றுக் கொண்டான்  அஜீஸ். அவனின் தோள் வலிமையைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த மதுமிதாவைப் பார்த்த அவளின் தாய் எரிச்சலோடு, “வாடி உள்ள” என்று சினந்து கூறிவிட்டு, கதவை வேகமாக அடைத்தார்.

அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து குல்லாவை அணிந்து தொழுதுவிட்டு இளமாறன் கறிக்கடைக்குச் சென்றான்  அஜீஸ். கறிக்கடையில் முதலாளி இருந்தார். அவரிடம் தான் சொந்தக்கடை போடவுள்ள செய்தியை விரிவாகக் கூறினான். அவர் அவனைப் பாராட்டினார். தினமும் 50 கிலோ உயிர்க்கோழி தனக்குத் தேவை என்று கேட்டுக்கொண்டான். அவர் 100 கிலோவாக வாங்கினால் விலையில் கூடுதல் தள்ளுபடி தருவதாகவும் வீட்டுக்கே வண்டியை அனுப்பி சரக்கே இறக்குவதாகவும் கூறினார். “ஒருநாள் விட்டு ஒருநாள் 100 கிலோ வாங்குறேன், இப்பவே சரக்கைக் கொண்டு வந்து வீட்டில் இருக்குங்களேன்” என்று கேட்டுக்கொண்டு பணத்தைக் கொடுத்தான்.

அடுத்த அரை மணி நேரத்தில் கோழி வண்டியிலேயே தன் வீட்டிற்கு வந்து இறங்கினான். அவன் கோழிகளைத் தூக்கிக்கொண்டு மாடிப்படிகளில் ஏறும்போது மதுமிதா தன் வீட்டில் இருந்து கல்லூரிக்குச் செல்வதற்காக மாடிப்படிகளில் இறங்கி வந்தாள். அவனைக் கூர்ந்து பார்த்தாள். அவள் முகமே வெட்கத்தில் சிரித்தது. அவள் கொலுசு அணிந்திருக்கவில்லை. அதற்குப் பதிலாக அவளின் இமைகளே படபடத்து மனவொலிகளை அவனை நோக்கி எழுப்பின. அதனை அவன் செவிகள் உற்றுக்கேட்டன. ஆனால், அவன் மறுமொழி உரைக்கவில்லை. 

தன் வீட்டு கதவுகளை உட்புறமாக அடைத்துவிட்டு கோழிகளின் கட்டுகளை அவிழ்த்து விட்டான். அவை எங்கும் பறந்தோட எண்ணமின்றி மெல்ல மெல்லக் கத்திக்கொண்டே நடந்தன. இவன் கோழிகளைத் தூக்கிக்கொண்டு படியேறிவதை அப்போதே பார்த்து விட்டார் வீட்டின் உரிமையாளர். ‘அவன் என்னதான் செய்கிறான்?’ என்பதைப் பொறுத்திருந்து பார்க்க நினைத்தார். இப்போது அவர் மெதுவாகப் படிகளில் ஏறி, அவன் வீட்டுக்குச் சென்று, கதவைத் தட்டினார். வீட்டுக்குள் கோழி சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. 

 அஜீஸ் கதவைத் திறந்ததும் கோழிகளின் பெருஞ்சப்தத்தோடு, துர்நாற்றமும் வீசத் தொடங்கியது. வீட்டின் உரிமையாளர் தன் முகத்தைக் கடுமையாக்கிக் கொண்டு, ஏளனமான தொனியில் பேசத் தொடங்கினார்.

“என்ன இதெல்லாம்?”

“வியாபாரத்துக்குக் கோழிகள்”

“நடுவீட்டுக்குள்ளேயா கோழி வளர்க்கிறது?”

“இல்ல, ரெண்டு நாட்களுக்கு ஒருமுறைதானுங்க”

“இது என்ன குடித்தனம் இருக்குற வீடா, இல்ல கோழி வளர்க்குற குடிலா?”

“குடியிருக்குற வீடுதானுங்க. என்னோட சேர்ந்து இதுகளும் இருந்துட்டுப் போகட்டுமே!”

“இதெல்லாம் சரிபடாது. நான் இதை வீடா வச்சிருக்கேன். கோழிக்கூடா இல்ல”

“யாருக்கும் தொந்தரவு இல்லாமல் நான் பார்த்துக்கிறேன்”

“இதெல்லாம் வெறும் பேச்சு. சரிப்படாது. வீட்டுக்குள்ள கோழி வளர்க்கக் கூடாது”

“கொஞ்சம் தயவு பண்ணுங்க. உங்க வீட்ல எல்லா ஞாயிற்றுக்கிழமையும் கோழிக் குழம்புதான். அதுக்கு நான் பொறுப்பு.

“அப்படின்னா சரி. வாரம் தவறாம கொடுத்திடனும். சரியா?”

“சரிங்க”

அவர் சென்றதும் கோழிகளை ஹலால் முறையில் கொன்று 10 கிலோ கறிகளைப் பக்குவப்படுத்தினான்  அஜீஸ். 

இன்றைய பகல் வியாபாரம் ‘டாஸ்மாக்’ முன்பு மட்டும் 20 கிலோ. மாலையில் பேருந்து ஏறி இந்தியன் பலசருக்குக் கடையில் எண்ணெய் டின்கள் ஐந்தினையும் ஒரு சிப்பம் மசாலாப் பொருட்களையும் மலிவு விலையில் வாங்கி, மாலை முதல் இரவு 11 மணி வரை மீண்டும் ‘டாஸ்மாக்’ முன்பாகவே கடை போட்டான். மீண்டும் 20 கிலோ விற்றது. இன்று வழக்கத்தைவிட மிகப் பெரிய லாபம். 

வீட்டுக்கு வந்தான். அவன் கால்கள் மரத்துப் போய்விட்டன. கால் வலி தாங்க முடியவில்லை. குளித்துவிட்டு வீட்டைப் பூட்டினான். மொட்டை மாடிக்குச் சென்று படுத்துக்கொண்டான். நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்தன. விழிகளை மூடிக்கொண்டான். அவன் கனவில் மதுமிதா மின்னிக் கொண்டிருந்தாள். கனவு கரைந்தபோது விடிந்துவிட்டது. 

குளித்துவிட்டு தொழுகையில் அமர்ந்தபோது, தான் நேற்று ஒருமுறை மட்டுமே தொழுதிருந்தமை அவன் நினைவுக்கு வந்தது. ‘இன்றிலிருந்து ஐந்துவேளைகள் தொழுவேன்’ என்று மீண்டும் உறுதிகொண்டான் அஜீஸ். 

– –

7

பறக்கும் நாட்கள்

ஒரு மாதம் கடந்து விட்டது. இந்த மாதத்தின் நாட்கள் ஓடியதே தெரியவில்லை  அஜீஸ்க்கு. அவன் பறந்து கொண்டு அல்லவா இருந்தான்! காலையில் ஐந்து மணிக்கு எழுவது முதல் இரவு 11 மணி வரை அவன் உழைத்துக் கொண்டே இருந்தான். அந்த வித்தியாசமான குல்லாவைத் தொழுகையின்போது மட்டுமே பயன்படுத்தினான். இப்போதெல்லாம் அவன் நாள்தோறும் ஐந்து வேளைகள் தொழுவதை வழக்கமாக்கிக் கொண்டான். 

மதுமிதா அவனுடன் நன்றாகப் பழகத் தொடங்கி இருந்தான். அவள் வீட்டுக்கும் இவன் வாரந்தோறும் இலவசமாகக் கோழிகளைக் கொடுக்கத் தொடங்கினான். கோழிகளின் இறகுகளைப் பறிப்பதற்கு மெஷின் வாங்கி விட்டான். இளமாறன் கறிக்கடையில் இருந்து நாள்தோறும் கோழி வண்டி இவன் வீட்டு வாசலுக்கே வரத்தொடங்கியிருந்தன. அந்த அளவுக்கு நல்ல வியாபாரம்.

இன்று காலையில் வந்த வண்டி அளவில் பெரியதாக இருந்தது. வண்டியில் ஓட்டுநர் மட்டும்தான் இருந்தார். அவரேதான் 100 கிலோ கோழிகளை இறக்கினார். அவரிடம்  அஜீஸ் விசாரித்தான்.

 “நீங்க யாரு?”

 “சொர்ணா சிக்கன் பண்ணையில் வேலை பார்க்கிறேன். நந்தகோபால்”

 “அது எங்க இருக்கு?”

 “நாமக்கல்.”

உடனே  அஜீஸின் ஏழாமறிவு விழித்துக் கொண்டது. அவரிடம் பேசி கோழிப் பண்ணையின் முகவரியையும் அதன் முதலாளியின் அலைபேசி எண்ணையும் வாங்கிக்கொண்டான். வண்டி சென்ற பின்னர் அந்த எண்ணுக்குத் தொடர்பு கொண்டு தனக்கு வாரம் ஆயிரம் கிலோ கோழி வேண்டும் என்றும் அதனைத் தனக்குத் தனி வண்டியில் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டான்.

தொடர்ந்து கால்மணிநேரம் பேரம் பேசி தன்னால் முடிந்த அளவுக்கு விலையைக் குறைக்கப் போராடினான். இறுதியில் நாமக்கல்லிலிருந்து இளமாறன் கறிக்கடை வழியாகத் தான் வாங்குவதைவிட கிலோவுக்கு 15 ரூபாய் தள்ளுபடியில் தனக்குக் கிடைக்கச் செய்துவிட்டான். அடுத்த வாரம் சரக்கு வந்து இறங்கிவிடும். வாரம் தோறும் வரும். ‘அவற்றை எங்கே? எப்படிப் பாதுகாப்பாக வைப்பது?’ என்று சிந்திக்கத் தொடங்கினான்.

வீட்டின் உரிமையாளரைச் சந்தித்து, தனக்கு மொட்டை மாடியில் பெரிய குடில் அமைத்துத் தருமாறும் அதற்குத் தனியாக வாடகையைக்  கொடுத்துவிடுவதாகவும் பேசினான். அவர் சில வினாடிகள் சிந்தித்துவிட்டு, மொட்டை மாடியை வாடகைக்குத் தருகிறேன். ஆனால், குடில் அமைக்கிற செலவு உன்னுடையது என்று கறாராகக் கூறிவிட்டார். 

  குடிலை அமைப்பது செலவுதான். ஆனால், அதைப் பிரித்தால் பெரும் நஷ்டம்தான். அதனால்தான் அவர் அப்படிக் கூறினார். செலவும் நஷ்டமும் அவனோடு போகட்டும் என்ற வணிக எண்ணம். 

  அவன் இந்த மாடிக்குடியிருப்பிலேயே தங்கிவிட நினைத்திருந்தான். அதனால், அவன் ஒருபோதும் தான் அமைத்த குடிலைப் பிரிக்க போவதில்லை. அவனுக்குச் செலவுதான். ஆனால், நஷ்டம் ஏற்படப்போவதில்லை. அதனால் ஒப்புக்கொண்டான்.

நான்கு நாட்களுக்குள் குடிலை அமைத்து முடித்தான். அதுவே மொட்டைமாடியின் முக்கால் பகுதியை அடைத்துக் கொண்டது.  அஜீஸ் வெள்ளிக்கிழமை சொர்ணா சிக்கன் பண்ணைக்கு அலைபேசி வழியாகத் தொடர்பு கொண்டான். பண்ணையின் கணக்குப்பிள்ளைதான் பேசினார். அவரிடம் தனக்குரிய சரக்கை உறுதிப்படுத்தினான். அதற்கு ஒப்புக்கொண்ட அவர், “சரிங்க சார். எந்த பேரில் ரசீது வேண்டும்?” என்று கேட்டதால், சற்றுத் தடுமாறிப் போனான்  அஜீஸ். அல்லாஹ்யை நினைத்துக்கொண்டு, ‘அல் அஜீஸ் சிக்கன் பாயிண்ட்’ என்று கூறினான். சரக்கை இறக்கும்போது ரசீதைப் பெற்றுக் கொண்டு பணத்தை ஓட்டுநரிடம் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார் கணக்குப்பிள்ளை.

  அஜீஸ் இளமாறன் கறிக்கடைக்குச் சென்றான். முதலாளியைப் பார்த்துத் தான் வேறு வேலை செய்யப் போவதாகவும் இனிமேல் தனக்குக் கோழிகளை அனுப்ப வேண்டாம் என்றும் சொல்லிவிட்டு வந்தான். வரும் வழியில் எதிர்பாராத விதமாக முகைதீனை நேர்கொள்ள நேர்ந்துவிட்டது. சில விநாடிகள் பதறிப்போனான்  அஜீஸ். ‘அவரிடம் என்ன பேசுவது?’ என்று தயங்கி நின்ற  அஜீஸிடம் முகைதீன் இயல்பாகப் பேசத் தொடங்கினார்.

“என்னப்பா, ரொம்ப நாளா உன்னை பார்க்கவே முடியல. தொழிலை மாத்திட்டியா?”

“ஆமாம்”

“நானும் தொழிலை மாத்திட்டேன். தள்ளுவண்டியை வாடகைக்கு மட்டும்தான் விடுகிறேன். பஞ்சாலைக்கு போறேன். ஒரு பக்கம் பஞ்சாலைச் சம்பளமும் வருது; மறுபக்கம் தள்ளுவண்டிக்கு வாடகையும் கிடைக்குது. 

“சந்தோஷம்”

“உங்கிட்ட தள்ளுவண்டிய வாடகைக்கு விட்ட பிறகு நான் தொழிலுக்கே போகல. ரெண்டு நாள் தள்ளுவண்டி சும்மாதான் இருந்தது. உன்னை மாதிரி ஒருத்தர் வந்து கேட்டார். வாடகைக்கு விட்டு விட்டேன்.” இப்போதுதான்  அஜீஸின் மனம் நிம்மதியை அடைந்தது. ‘தான் தொழில் தொடங்குவதற்காக மற்றவரின் தொழிலை முடக்கி விட்டோமோ?’ என்ற நெருடல் இன்றோடு அவனுக்கு நீங்கியது.

பகல் முழுக்க கோழிகளைப் பராமரிக்கும்  பொறுப்பை மதுமிதாவின் அம்மாவிடம் ஒப்படைத்துவிட்டான் அஜீஸ். அதற்குத் தனியாகப் பணமும் தந்தான். இந்த விஷயமும் மதுமிதாவின் அப்பாவுக்குத் தெரியாது

ஆறு மாதங்கள் ஓடி விட்டன. இந்தியன் பலசருக்குக் கடையிலிருந்து வாரந்தோறும் வண்டி வந்து இவன் வீட்டில் சரக்குகளை இறக்கிச் செல்கிறது. அவற்றைத் தன் வீட்டின் ஹாலில் அடுக்கி வைத்திருந்தான். இவன் எல்லோரிடமும் பணத்தைக் கொடுத்து விட்டு சரக்கு வாங்குவதால் இவன் மீது அனைவருக்கும் தனி மரியாதை இருந்தது. ‘அஜீஸ் பாய்க்கு வாக்குச் சுத்தம்; தொழில் சுத்தம்’ என்று தன்னைப் பற்றிய நல்ல பிம்பத்தை உருவாக்கி விட்டான்  அஜீஸ்.

வழக்கம்போல இன்றும் கடையில் நல்ல கூட்டம். கூட்டத்தில் ஒருவர் தன் முரட்டுக் கையை நீட்டி  அஜீஸிடம் ஒரு பத்திரிகையைக் கொடுத்தார். கவனமின்றித் தன்னிச்சையாக அதை வாங்கிக் கள்ளாவின் அருகில் வைத்துவிட்டு, வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். அதனைக் கொடுத்தவர் சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்தார். பின்னர் மெல்ல விலகிச் சென்றுவிட்டார்.

இரவில் கள்ளாவிலிருந்து பணத்தை எடுத்து அடுக்கும்போதுதான் அந்தப் பத்திரிகையைப் பார்த்தான்  அஜீஸ். தன் மூத்த அக்கா பாத்திமாவுக்கு நிக்காஹ் என்பதை அறிந்தவுடன் அதிர்ந்து விட்டான். ‘வாப்பா வந்திருந்தாரா? நான் அவரை கவனிக்கவே இல்லையே!’ என்று நினைத்து வருந்தினான். பத்திரிக்கையை முழுவதுமாகப் படித்தான். அடுத்த மாதம் நிக்காஹ். பத்திரிகையில் எங்கேயுமே அவனுடைய பெயர் இல்லை. இல்லவே இல்லை.

8

துயருற்ற பொழுதுகள்

இரண்டு நாட்களாக  அஜீஸ் கடை போடவில்லை. வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தான். கோழிகளைப் பார்க்கக்கூட அவன் மொட்டை மாடிக்குச் செல்லவில்லை. மதுமிதாவின் அம்மா மட்டுமே நாள்தோறும் மூன்றுமுறை மொட்டைமாடிக்குச் சென்று கோழிகளைப் பராமரித்து வந்தார்.  மதுமிதாவுக்குப் பருவத்தேர்வு நடப்பதால் அவளும் இந்த வாரம் முழுவதும் வீட்டுக்குள்ளேயேதான் இருந்தாள். அவளும் இவனைச் சந்திக்கவில்லை. 

இவன் வீட்டை விட்டே வெளியே வராததால், ‘இவனுக்கு உடல் நலம் இல்லையோ?’ என்று நினைத்தார் மதுமிதாவின் அம்மா. இவனுக்குத் தன் அலைபேசியிலிருந்து சிலமுறைகள் அழைத்தார். அவனிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. 

மதுமிதாவின் அம்மா மாடிப்படிகளில் ஏறி இவனின் வீட்டுவாசலுக்கு வந்து கதவைத் தட்டினார். சிறிது நேரத்திற்குப் பின்னால்  அஜீஸ் கதவைத் திறந்தான். அவன் முகத்தில் சவக்களை அப்பியிருந்தது. 

அவனைப் பார்த்ததுமே புரிந்து விட்டது, ‘இவனுக்கு உடல் நன்றாகத்தான் இருக்கிறது; மனம்தான் கொஞ்சம் குழம்பிப் போய்விட்டது’ என்று. 

 “உனக்கு என்ன பிரச்சனை?”

 “ஒன்னும் இல்லை”

 “ஒன்னும் இல்லாமத்தான் இப்படி மனசு ஒடிஞ்சு இருக்கியா?”

 “பத்திரிகை கொடுத்திருக்காரு.”

 “யாரு, என்ன பத்திரிக்கை?”

 “என் மூத்த அக்காவுக்கு நிக்காஹ்”

 “சந்தோஷமான செய்தி தானே?”

 “பத்திரிகையில் என் பேரு இல்லை”

 “ஓ! இதுதான் பிரச்சனையா?”

 “என்ன மறந்துட்டாங்க”

 “உன்னை மறக்கல. ஒதுக்கிட்டாங்க. யாராவது சொந்த வீட்டார் 

 கிட்டயே பத்திரிக்கை தருவாங்களா?”

“உண்மைதான். என்னைய ஒதுக்கிட்டாங்க”

“அவங்க உன்ன ஒதுக்கல. நீ தான் ஒதுங்கி வந்துட்ட. இப்பவும் ஒன்னும் கெட்டுப் போயிடல. நீ நெனச்சா போய் சேர்ந்துக்கலாம். இல்லையினா நீ உன்னோட வேலையைப் பார்க்கலாம். இந்த ரெண்டுல ஒரு முடிவை நீ எடு. அதை விட்டுட்டு இப்படி வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடந்தேனா நீ வாழ்க்கையில் தோற்றுப் போயிடுவ”

“சரிங்க. நான் என்னையே தேத்திக்கிடுறேன்”

 அஜீஸ் குளித்து முடித்தான். கடைக்குச் சென்று சாப்பிட்டான். மீண்டும் வீட்டுக்கு வந்தான். மொட்டை மாடிக்குச் சென்று கோழிகளைப் பார்த்துவிட்டு வந்தான். குல்லாவை அணிந்து கொண்டான். அரைமணிநேரம் குர்ஆனை வாசித்தான். ‘சிறிது தூரம் தெருவில் நடந்து விட்டு வரலாமே!’ என்று நினைத்தான். 

குல்லாவை அணிந்து கொண்டான். அலைபேசி, வீட்டுச் சாவியைத் தவிர அவன் வேறு எதையும் எடுத்துக்கொள்ளவில்லை. நடக்க தொடங்கினான். நடந்து கொண்டே இருந்தான். நெடுஞ்சாலை வந்து விட்டது. அதில் நடக்கத் தொடங்கினான். கால்கள் வலிக்க தொடங்கின. ‘எங்காவது உட்காரலாமா?’ என நினைத்தான். சற்று தொலைவில் மைல்கல் தெரிந்தது. சென்று அதன் மீது அமர்ந்தான்.

அவனுக்குப் பழையவை அனைத்தும் நினைவுக்கு வந்தன. அவன் தன் வீட்டை விட்டு வெளியேறி நடக்கத் தொடங்கிய முதலில் அமர்ந்த இடம் இதே மைல்கல்தான். இங்குத் தான் அந்த ஸூஃபி ஞானியைச் சந்தித்தான். இன்று அவரைப் போலவே குல்லாவை அணிந்திருக்கிறான். முன்பு அவர் இவனிடம் கேட்ட கேள்வி மட்டும் இப்பவும் அங்கேயே காற்றில் கலந்து சுற்றிக் கொண்டிருந்தது. 

அவன் தன்னைத்தானே ‘அலுத்துப் போச்சா?’ என்று கேட்டுக் கொண்டான். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த ஸூஃபி ஞானியார் தன்னிடம் கேட்க விரும்பிய கேள்வியை, இந்த எட்டு மாதங்களுக்குள்ளாகவே அவன் தன்னிடமே கேட்டுக் கொள்ளும்படிச் சூழ்நிலை வாய்த்துவிட்டது.

 இப்போது அவனுக்குப் பணம் பெரிதாகவே தெரியவில்லை. வங்கிக் கணக்கில் அவன் விரும்பியதைவிட இரண்டு மடங்கு இருக்கிறது. இங்கிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் ஒரு வீடும் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் மற்றொரு வீடும் தனக்கு இருப்பதை அவன் விரும்பவில்லை. இரண்டு வீடுகளும் அவனின் மனக்கண்களின் முன்பாக விரிந்து விரிந்து மிகப் பெரியதாகிப் பூதாகரமாகக் காட்சியளித்தன. ஒரு கட்டத்தில் ஒன்றையொன்று முட்டிக்கொண்டு, மோதிச் சரிந்து, முயங்கிப் பெருத்து, ஒன்றுடன் ஒன்று இணைந்து, கலந்து, மருவி இறுதியில் ஒற்றைப் பெருவீடாக மாறின.

எழுந்தான். தன் குல்லாவைக் கழற்றி அந்த மைல்கல்லின் மீது வைத்தான். அந்த ஸூஃபி ஞானியாரே அந்த மைல்கல் வடிவில் அங்கு அமர்ந்திருப்பதாக உணர்ந்தான். ‘இங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரம் நடக்கலாமா அல்லது 18 கிலோமீட்டர் தூரம் நடக்கலாமா?’ என்று நினைத்தான். அவனுக்கென்னவோ இரண்டு கிலோமீட்டரைவிட 18 கிலோமீட்டர் மிக அருகில் இருப்பதாகவே தோன்றியது. அதை நோக்கி நடக்கத் தொடங்கினான் அஜீஸ். 

– – –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *