சாக்கூத்து

1 

‘புழுதிப்பட்டி’க்குள் இன்றுவரை கைப்பேசி நுழையவில்லை. அங்கு சுழலும் புழுதிக் காற்று வேறு ஊர்களுக்கு நகர்வதில்லை. அந்தக் குக்கிராமத்தில் யார் கால்வைத்தாலும் அவர்களைப் பொன்னாடை போர்த்தி வரவேற்பதுபோலப் புழுதியைப் போர்த்திவிடுகிறது காற்று. 

புழுதிப்பட்டியில் தேர்வு மையம் இல்லாததால் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வினை அருகில் உள்ள ஊரில் சென்று எழுதி வந்தான். இறுதித் தேர்வினை எழுதிய  அன்றே, சென்னையில் உள்ள தன் சித்தி வீட்டுக்குப் புறப்பட்டுவிட்டான்.

இந்தச் சித்தி அவன் அம்மாவுடன் பிறந்த தங்கையல்ல. கொஞ்சம் தூரத்துச் சொந்தம்தான். வெயிலடிச்சான் பட்டி. சித்திக்கு மாப்பிள்ளை பார்த்தது அறிவழகனின் அப்பா என்பதால், இரண்டு குடும்பத்தினருக்கும் நல்ல உறவு வலுப்பட்டிருந்தது.

 சித்திக்காகத் தன் அம்மா செய்து கொடுத்திருந்த சில பலகாரங்களையும் ஒரு வாரம் தங்குவதற்குரிய துணிகளையும் பழைய பையில் இட்டு, அதைத் தன் இடது தோள்பட்டையில் மாட்டிக்கொண்டான். சட்டைப் பையில் இரண்டு ஐந்நூறு ரூபாய் தாள்களும் சில சில்லறை நோட்டுகளும் கொஞ்சம் சில்லறைக் காசுகளும் இருந்தன. 

புழுதிப்பட்டியிலிருந்து மதுரைக்குப் பேருந்தில் வந்து சேர்ந்தான் அறிவழகன். தொடர்வண்டி நிலையத்தில் சென்னைக்குச் செல்ல பயணச்சீட்டை வாங்கிக்கொண்டு, நடைமேடையில் காத்துக்கொண்டிருந்தான். இது அவனது வாழ்வில் மூன்றாவது தொடர்வண்டிப் பயணம்.  புழுதிப்பட்டிதான் அவனுக்குத் தாய்மண். இந்த மதுரை அவனைப் பொருத்தவரை வெளிநாடுதான். சென்னையோ அவனுக்கு வேறொரு கிரகம்தான். 

தன் ஊரைத் தவிர அவன் பிற ஊர்களில் புழுதிக்காற்றைப் பார்த்ததே இல்லை. புழுதியற்ற காற்று அவனுக்குப் பிடிப்பதேயில்லை. மதுரையில் சுழலும் புகைகலந்த காற்று அவனின் சுவாசத்தைத் தடுப்பதாகவே உணர்ந்தான். ஆனால், சென்னையிலோ அவனுக்கு இரைச்சலோடு கலந்த புழுதிக்காற்றுதான் கிடைக்கும். ஆனாலும் அது அவனுக்குப் பிடித்தமானதாகவேதான் இருந்திருக்கிறது. சென்னை அவனுக்கு வேற்றுக்கிரகம் அல்லவா!

அவன் சித்தி திருமணமாகி சென்னை தாம்பரத்திற்குக் குடியேறியபோது, ஒருமுறை அங்கு சென்று வந்தான். சித்திக்குக் குழந்தை பிறந்தபோது மீண்டும் ஒருமுறை அங்கு சென்று திரும்பினான். இது மூன்றாவது முறை. இப்போதுதான் அறிவழகன் தனியாகச் செல்கிறான்.

எண்ணெய் படாத செம்பட்டை நிறத் தலைமுடிகள். இன்னும் மீசை முளைக்காத முகம். ஒல்லியாய் உயர்ந்து வளர்ந்த உடல். தன் உடலைவிடப் பெரிய முழுக்கைச் சட்டை. அதை முழங்கை வரை சுருட்டிவிட்டிருந்தான். யாரோ பயன்படுத்திவிட்டுத் தானமாகக் கொடுத்த பேண்ட். அதன் கால்பகுதிகள் தன் கால்களின் அளவைவிட நீண்டு, மண்ணில் படுகிறது என்பதற்காக, இரண்டு அங்குல அளவுக்கு மடித்துவிட்டிருந்தான். கால்களில் நீலமும் வெள்ளையும் கலந்த ஸ்லிப்பர் செருப்பு. அவன் பாதங்கள் அழுத்தி அழுத்தி அதில் ஆங்காங்கே பள்ளம் விழுந்திருந்தது. கறைபடிந்த பற்கள். கழுத்தில் ஒரு தாயத்து. வலது கையில் இரும்புக் காப்பு. உடலின் நிறம் கறுப்பு. ஆனால், அவன் ஊரின் புழுதி படிந்து படிந்து அவனின் நிறமே புழுதியின் நிறமாகியிருந்தது.

பயணப் பையைச் சுமந்த படியே நடைமேடையில் நின்றுகொண்டிருந்தான் அறிவழகன். அவன் ஏற வேண்டிய வண்டி வந்தது. முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் ஏறி, இடம்பிடித்தான். உட்கார்ந்தபடியே தூங்கத் தொடங்கினான். இரவு நகர்ந்து விடியல் வந்தது. தாம்பரம் தொடர்வண்டி நிலையத்தில் இறங்கினான். 

விடியலில் பறவைகளின் பலவித ஒலிகளைக் கேட்டு எழுந்து பழகிய அறிவழகனுக்கு, போக்குவரத்து நெரிசல்களால் எழுந்த அந்த ஒலிகள் எரிச்சலைத்தான் ஊட்டின. ‘சரி, ஒருவாரம் தானே! சமாளிப்போம்’ என்று அசட்டுத் துணிச்சலில் நினைத்துக் கொண்டான்.

அவன் தெளிவான திட்டத்தோடுதான் வந்திருந்தான். முதல்நாள் ஓய்வு. மறுநாள் கடற்கரை. இரண்டாம் நாள் வள்ளுவர்கோட்டம், மூன்றாம் நாள் அருங்காட்சியகம், நான்காம் நாள் மீண்டும் கடற்கரை, ஐந்தாம் நாள் விவேகானந்தர் இல்லம், ஆறாம் நாள் தி.நகரில் சுற்றித் திரிந்து மலிவான பொருட்கள் சிலவற்றை வாங்குதல், ஏழாம் நாள் மீண்டும் கடற்கரை. அன்றைய இரவே புழுதிப்பட்டிக்குப் புறப்பட்டுவிட வேண்டும். இதுதான் இவன் திட்டம். இவன் சுற்றிப் பார்க்க நினைத்த அனைத்து இடங்களுமே செலவில்லாதவைதான்.   

ஒவ்வொரு ஆண்டும் சென்னையின் முகம் மாறிக்கொண்டே இருப்பதாக உணர்ந்தான் அறிவழகன். ஒவ்வொரு முறையும் அவன் சென்னையில் கால்வைக்கும் போதெல்லாம் அது வேறொரு ஊராகத்தான் தெரிகிறது. 

‘தன்னுடைய புழுதிப்பட்டி மட்டும் எந்தவிதமான மாற்றத்தையும் அடையவில்லையே!’ என்று தன்னுள் ஏங்கினான். அவனின் தாத்தா பார்த்த அதே புழுதிப்பட்டிதான், இவன் இந்தமுறையும் தாம்பரத்திலிருந்து திரும்பும்போதும் இருக்கப் போகிறது. ஆட்கள் மாறிக்கொண்டே இருந்தாலும் சில ஊர்கள் மாறுவதேயில்லை. புழுதிப்பட்டியும் அவைபோலத்தான்.

சித்தி அதே வீட்டில்தான் குடியிருந்தார். ஆனால், சித்தியின் வீட்டுக்குச் செல்லும் வழிகள்தான் மாறியிருந்தன. பலரிடம் வழிகேட்டு, அவர்கள் பல மொழிகளோடு தமிழையும் சேர்த்துப் பேசும் ஒருவிதமான புது மொழியைப் புரிந்துகொண்டு, தட்டுத்தடுமாறி ஒருவழியாகச் சித்தியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தான் அறிவழகன். 

சித்தப்பா வாசலில் அமர்ந்தபடி கொட்டாவி விட்டுக்கொண்டிருந்தார். இவனைப் பார்த்ததும் அவருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது, தன் கடையைப் பார்த்துக் கொள்ள நம்பகமான ஆள் கிடைத்துவிட்டதாக. ‘இவனை எப்படியாவது இங்கேயே இரண்டு மாதங்கள் தங்க வைத்துவிட்டால், தனக்குச் சற்று ஓய்வு கிடைக்கும்’ என்று எதிர்பார்த்தார். அவனை மகிழ்ச்சியோடு வரவேற்றார்.

சித்தி சமையல்கட்டில் எதையோ உருட்டிக் கொண்டிருந்தார். அவர்  சற்றுப் பெருத்திருந்தார். குழந்தை தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தது. அவரிடம் தன் அம்மா கொடுத்தனுப்பிய பலகாரங்களைக் கொடுத்தான். ‘கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேன் சித்தி’ என்று கூறிவிட்டு, அந்தச் சிறிய வீட்டின் ஒரு பக்கச் சுவரில் ஒட்டியபடிக் கால்களை நீட்டிப் படுத்தான் அறிவழகன். 

அவன் எழும்போது மதியம் ஒரு மணி. குளித்தான். சித்தி அவனுக்குச் சாம்பார் சாதம் செய்திருந்தார். அதிலேயே சில காய்களைப் போட்டிருந்ததால், அவர் தனியாகக் காய் ஏதும் வைக்கவில்லை. நன்றாக ஊறிய நாற்றங்காய் ஊறுகாய் இருந்தது. மோர் இருந்தது. ‘இவன் நன்றாகச் சாப்பிடுவான்’ என்று சித்திக்கு நன்றாகவே தெரியும். அதனால் அதிகமாகவே சோறு வடித்திருந்தார்.

‘உண்டதும், மீண்டும் தூங்கலாம்’ என்றுதான் நினைத்திருந்தான் அறிவழகன். அவன் சாப்பிட்டு முடித்ததும் சித்தி ஒரு தூக்குவாளியில் சோற்றையும் குழம்பையும் ஊற்றினார்.

 “தம்பி! சித்தப்பாவுக்குச் சோறுகொடுத்துட்டு வர்றீயா?”. 

“சரி” என்று கூறிவிட்டு, “சித்தப்பாவோட இரும்புக்கடை எங்கிருக்கு?”. 

“பக்கந்தான். நெட்டுக்க நடுந்துகிட்டே இருந்தேன்னா, போலீஸ் பீட் வரும். வலதுபக்கம் திரும்பி நெட்டுக்க நடந்தேன்னா, பெரிய டிரான்ஸ் பார்மர் வரும். உடனே, இடதுபக்கம் திரும்பி, அடுத்த வலது பக்கத்துல மூணாவது கடை. அவரு வெளியதான் உட்கார்ந்திருப்பார்”. 

தூக்குவாளியைத் தூக்கிக்கொண்டு சித்தி கூறிய வழிகளின் படி நடக்கத்தொடங்கினான். சித்தியின் திருமணத்தின்போது இவன் அப்பா, அம்மாவோடு இங்கு வந்திருந்தான். உறவுக்காரர்கள் அனைவரும் திருமண மண்டபத்தில் தங்கியிருந்தனர். சித்தப்பா இரும்புக்கடை வைத்திருப்பதாகப் பேசிக் கொண்டார்கள். மற்றபடி சித்தப்பாவைப் பற்றி அவனுக்கு ஏதும் தெரியாது.

அடுத்த முறை சித்தியின் குழந்தையைப் பார்க்க வந்தபோது, ‘சித்தப்பாவின் இரும்புக் கடைக்குச் செல்லலாம்’ என்று நினைத்தான். ஆனால், அப்போது இரண்டு நாட்கள் மட்டுமே சென்னையில் இருந்ததால், கடைக்குச் செல்லும் வாய்ப்பு அவனுக்குக் கிடைக்கவில்லை. 

இதோ இப்போது நல்ல வாய்ப்பு. அவன் சரியாக போலீஸ் பீட் வரை வந்துவிட்டான். சாலையைக் கடக்க கால்மணிநேரத்துக்கு மேலாகியது. அடுத்து அந்த டிரான்ஸ்பார்மர் வரை சென்றுவிட்டான். 

வழக்கமாகச் சித்தப்பா கடையை அடைத்துவிட்டுதான் மதியம் சாப்பிடுவதற்கு வீட்டுக்கு வருவார். இவன் வந்திருப்பதால், இவனைக் கடைக்கு வரவைக்க இதுஒரு மறைமுகத் திட்டம், ‘தனக்குச் சாப்பாட்டைக் கொண்டுவரச் செய்து, இவனை அப்படியே கடையில் நிறுத்திக் கொள்ளலாம்’ என்று. 

‘இவன் கடைக்குச் சாப்பாட்டைக் கொண்டுவந்தால், கடையை அடைக்க வேண்டியதில்லை. மதிய வெய்யிலில் நடந்து சென்று, சாப்பிட்டுவிட்டு மீண்டும் திரும்பி வெய்யிலில் வர வேண்டியது இல்லை. இவன் கொண்டுவரும் சாப்பாட்டைக் கடையிலேயே உட்கார்ந்து சாப்பிட்டு, கடையிலேயே ஓரமாகக் கால் நீட்டி குட்டித் தூக்கம் போடலாம். தூங்கி எழும்வரை இவனே கடையைப் பார்த்துக் கொள்வான். கடையில் அப்படியொன்றும் வியாபாரம் அள்ளிக் கொட்டவில்லை. மதிய நேரம் யாரும் கடைக்கு வரமாட்டார்கள்’ என்பதுதான் சித்தப்பாவின் எண்ணம்.

அறிவழகன் வருவதாகக் கடந்த வாரம் கடிதம் வந்தபோதே, சித்தப்பா தன் மனைவியிடம் கறாராகக் கூறி விட்டார். “ஒரு வாரந்தானானாலும் யாருக்கும் ஓசீயில சோறு போட முடியாது. அவனைக் கடைக்கு அனுப்பி வைக்கணும்” என்று கூறியிருந்தார்.

சித்தி கூறியபடி நடந்து நடந்து இடதுபுறமும் வலதுபுறமும் திரும்பி அந்த மூன்றாவது கடையைத் தேடினான். முதல் கடை தையல்துணிக்கடை. இரண்டாவது கடை தேங்காய் மொத்த வியாபாரக் கடை. மூன்றாவது கடை பழைய இரும்புக்கடை. நான்காவது கடை ஒரு பலசரக்குக் கடை. இவன் நான்காவது கடையின் முன் நின்றான். அதற்கு அடுத்து எந்தக் கடையும் இல்லை. குடியிருப்புப் பகுதி தொடங்கிவிட்டது. மீண்டும் அந்த மூன்றாவது கடைக்கு முன் வந்து நின்றான். 

‘பாதை தவறிவிட்டதோ! இங்கு இரும்புக்கடையே இல்லையே!’ என்று திகைத்து நின்றான் அறிவழகன். அந்தப் பழைய இரும்புக்கடையின் முன் இருந்த மிகப் பெரிய சாக்கினுள் ஒருவர் தன் தலையை நுழைத்து அதில் எதையோ தேடிக் கொண்டிருந்தார்.  

‘இவர் சாக்குக்குள் இருந்து வெளியே வந்ததும் இவரிடமே விசாரிப்போம்’ என்று காத்திருந்தான் அறிவழகன். அவர் தன் தலையை வெளியே எடுத்தார். அவர்தான் இவனின் சித்தப்பா. பழைய லுங்கி, கிழிந்த முண்டா பனியன், உடல் முழுக்க அழுக்கு. தலையில் சாக்குத் தூசி. அறிவழகன் அதிர்ந்துவிட்டான். அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.

சாப்பிட்டவுடன் இந்த வெய்யிலில் நடந்து வந்ததால், அறிவழகனுக்கு மிகவும் வியர்த்திருந்தது. இந்த அதிர்ச்சி வேறு அவனைத் தாக்கித் தள்ளியது. அவன் நிலைகுழைந்துபோனான்.

“சித்தி சோறு குடுத்துவிட்டாளா? நான் வேண்டாம்ணுதான் சொன்னேன். அவதான் கேட்கலை. நீ எதுக்கு இந்த வெய்யில்ல அலையணும்?” என்று கேட்டுக்கொண்டே, “தூக்கு வாளியை ஓரமா வையி. நான் கையைக் கழுவிக்கிட்டு வர்றேன்” என்றார் சித்தப்பா. 

இவனுக்குத் தலையே சுற்றியது. குப்பைகள் நிறைந்த அந்தக் கடையின் முன்வாசலைக் கடந்து, தாண்டி, நெளிந்து, கடைக்குள் சென்று ஓரமாக அந்தத் தூக்கு வாளியை வைத்தான். சித்தப்பா தன் கைகளைக் கழுவி வந்தார். 

தரையில் பழைய செய்தித்தாளை விரித்து, அதில் தூக்குவாளியை வைத்தார் சித்தப்பா. சாப்பிடத் தொடங்கினார். அவரிடம் ஏதும் கேட்காமல், எதுவும் பேசாமல் அவரையும் இந்தக் கடையையும் பார்த்துக் கொண்டே இருந்தான். 

‘இவர் சாப்பிட்டு முடித்ததும் தூக்குவாளியை எடுத்துக்கிட்டு, வீட்டுக்கு ஓடீரனும். இனி இந்தக் கடைப் பக்கமே வரக்கூடாது. இரும்புக்கடையாம், இரும்புக்கடை’ என்று தன் மனத்துக்குள் பொங்கினான் அறிவழகன். 

சித்தப்பா சாப்பிட்டு முடித்தார். தூக்குவாளியை எடுத்துச் சென்று, குழாயில் கழுவினார். கடைக்கு அருகில் வெய்யில் படும் இடத்தில் அதைக் கவிழ்த்து வைத்தார். அந்தத் தாளை மடித்து பிற தாள்களோடு சேர்த்து வைத்தார். 

“அறிவு! நம்ம வியாபாரம் ரொம்ப நல்ல வியாபாரம். பிறருக்கு வேண்டாததெல்லாம் நமக்கு வேண்டியவைதான். எல்லாமே காசுதான். இங்க இருக்குற ஒவ்வொரு இரும்பும் துரும்பும் துண்டுத்தாளும் காசுதான்” என்றார்.

‘இதை எதுக்கு நம்மகிட்ட சொல்றார்?’ என்று நினைத்தான் அறிவழகன். ‘அந்தத் தூக்குவாளியை என்னோட கையில கொடுத்திருந்தா, இந்த நேரத்துக்குள்ள நான் அந்த முச்சந்தியைத் தாண்டியிருப்பேனே’ என்று நினைத்தான். 

சித்தப்பா கடையின் ஒரு மூலையில் சிறிதளவு இடத்தை ஒதுக்கினார். மூன்று செய்தித்தாள்களை எடுத்து, அந்த இடத்தில் விரித்தார். 

“சரி, இவரே ராத்திரி வீட்டுக்கு வரும்போது இந்தத் தூக்குவாளியைக் கொண்டுவரட்டும். இவரிட்ட சொல்லிட்டு கிளம்பலாம்’ என நினைத்தான் அறிவழகன். 

“அதனால, அறிவு! இங்க இருக்குற பொருளைக் குப்பையினு நினைக்கக் கூடாது. எல்லாமே நமக்குக் காசு” என்றார்.

இவன் பதில் ஏதும் கூறாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். அவர் அந்தத் தாள்களின் மீது உட்கார்ந்துகொண்டு, “அறிவு! நான் கொஞ்சநேரம் கண்ணை மூடிக்கிறேன். கடையப் பார்த்துக்கோ” என்று கூறிவிட்டு, அவனுடைய பதிலை எதிர்பார்க்காமலேயே கால் நீட்டிப் படுத்துக்கொண்டார் சித்தப்பா.  

அறிவழகனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. என்ன செய்வதென்றும் புரியவில்லை. கடையை மீண்டும் தன் கண்களால் சுற்றிப் பார்த்தான். பெரிய குப்பைக் குவியலுக்கு மத்தியில் தான் இருப்பதைப் போல உணர்ந்தான். அவனுக்கு அருவருப்பாக இருந்தது. ‘இந்தக் குப்பைகளுக்கு நான் காவலா?’ என்று நினைத்தான். 

‘வெய்யிலில் காயும் அந்தத் தூக்குவாளியை எடுத்துத் தூங்கிக் கொண்டிருக்கும் சித்தப்பாவின் தலையில் அடித்துவிடலாமா’ என்று அவனுக்குத் தோன்றியது. ‘இவரைப்போய் இரும்புக்கடை முதலாளியின்னு நினைச்சேனே! அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்?’ என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டான். 

உடனே அவனுக்குச் சித்தியின் நினைவு வந்தது. ‘கல்யாணத்துக்குப் பிறகு சித்தியும் இப்படித்தானே இது இரும்புக்கடை இல்லையினு தெரிஞ்சு கொதிச்சுப் போயிருப்பாங்க?. எல்லாத்துக்கும் காரணம் நம்ம அப்பாதானே? அவருதான் இவரைப் பற்றிச் சரியா விசாரிக்காம சித்திக்குக் கல்யாணம் பண்ணி வச்சாரு? அவரைத்தான் முதல்ல இந்தத் தூக்குவாளியால அடிக்கணும்’ என்று நினைத்தான்.

எழுந்து நின்றான். சாலையில் போக்குவரத்துக் குறையத் தொடங்கியது. அங்கிருந்த குப்பைப் பொருட்கள் ஒவ்வொன்றாகப் பார்க்கத் தொடங்கினான். இவர் விழிக்கும்வரை அவனுக்குப் பொழுதுபோக வேண்டுமே! என்ன செய்வது? அதனால்தான் அந்தக் கடையில் உள்ள பொருட்களைப் பார்வையிட்டான். 

எல்லாப் பொருளிலும் அழுக்கு அடையாகப் படிந்திருந்தது. கடையில் உட்காரக் கூட நல்ல நாற்காலி இல்லை. இவன் இவ்வளவு நேரம் ஓர் ஆங்கில நாளிதழ் கட்டின் மீதுதான் அமர்ந்திருந்தான். சில பொருட்களைத் தொட்டுப் பார்த்தான். சிலவற்றை வளைத்துப் பார்த்தான். குறிப்பாகச் சிறுவர்கள் விளையாடும் பொம்மைகளை இயக்கிப் பார்த்தான். இயங்கவில்லை. நல்ல பொருட்களை யாராவது எடைக்குப் போடுவார்களா? 

ஏதும் நல்ல நிலையில் இல்லை. இறுதியாகத் தன் கைவிரல்களைப் பார்த்தான். அழுக்கு அப்பியிருந்தது. வேகமாகக் குழாயின் அருகில் சென்று தன் கைகளைக் கழுவினான். மீண்டும் கடைக்கு வந்தான். கடைக்குள் இருக்கும் புத்தகங்களைப் பார்வையிட்டான். 

பல புத்தகங்கள் அடுக்கிக் கட்டப்பட்டு இருந்தன. மிகப் பல புத்தகங்கள் அடுக்கப்படாமல் குவிந்திருந்தன. சித்தப்பாவைப் பார்த்தான். அவர் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார். மணியைப் பார்த்தான். அவர் தூங்கி இன்னும் அரைமணிநேரம் கூட முடியவில்லை. அவனுக்குப் பொழுது போகவில்லை. 

சில புத்தகங்களைப் புரட்டினான். அவை அனைத்தும் ஆங்கிலப் புத்தகங்கள். அவற்றில் படம் பார்த்தான். சில தமிழ்ப் புத்தகங்களைப் புரட்டி அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில பத்திகளை வாசித்தான். எதுவும் பிடிக்கவில்லை. 

‘என்ன செய்யலாம்?’ என்று நினைத்தான். அவனுக்குத் தூக்கம் வந்தது. ‘நாமும் இங்கே கொஞ்சம் இடத்தை ஒதுக்கி, தாள்களை விரித்துப் படுத்துக் கொள்வோமா?’ என்று நினைத்தான். ‘வேண்டாம்!. இது சித்தப்பாவின் சொத்து. நாம் தூங்கும் நேரத்தில் யாராவது வந்து, எதையாவது எடுத்துக்கிட்டுப் போயிட்டா, பாவம் இவருக்கு நஷ்டமாகிவிடும். நம்மை நம்பி கடையைப் பார்த்துக்கச் சொல்லிவிட்டார். நம்பிக்கைக்குத் துரோகம் செய்யக் கூடாது’ என்று நினைத்துத் தூக்கத்தை விலக்கினான். 

எழுந்து, குழாய்க்கு அருகில் சென்றான். முகத்தைக் கழுவினான். கடைக்கு வந்தான். ‘அடடா, முகத்தைத் துடைக்க துண்டு இல்லையே!’ என்று நினைத்தான். ‘கொஞ்ச நேரம் ரோட்டுப் பக்கத்துல இருக்குற வெய்யில்ல நிற்போம்’ என்று நினைத்தான். வெய்யிலில் நின்று தன் முகத்தை உலர்த்திக் கொண்டான். மீண்டும் வந்து கடையில் அமர்ந்தான். 

ஒரு மர அலமாரியில் நிறைய நோட்டுகளும் புத்தகங்களும் பேரேடுகளும் அடுக்கப்பட்டிருந்தன. அவற்றைப் பார்வையிட்டான். கீழ் அடுக்கில் ஒரு பழைய நாட்குறிப்பு இருந்தது. அதன் அட்டை பூ வேலைப்பாட்டுடன், அழகிய வண்ணத்தில், மினுமினுப்புடன் இருப்பதைப் பார்த்தான். அது அவனை ஈர்த்தது. எடுத்தான்.  

முதல் பக்கத்தைத் திறந்தான். தமிழில் அழகிய கையெழுத்தில் ‘சுவாதினி’ என்று எழுதியிருந்தது. ‘அட இப்படியெல்லாம் கூடப் பெண்களுக்குப் பெயர் வைப்பார்களா?’ என்று தன்னுள் கேட்டுக்கொண்டான். கிராமத்துப் பெண்களின் பெயர்களை மட்டுமே அறிந்திருந்த அவனுக்கு இந்தப் பெயர் புதுமையாகத் தெரிந்ததில் வியப்பில்லைதான்.

முதல் மூன்று பக்கங்களைப் புரட்டினான். கையெழுத்து அழகு குறையாமல் சீராக இருந்தது. மீண்டும் முதல் பக்கத்தைப் புரட்டினான். முன்பக்க அட்டையின் உட்புறத்தில் ஆங்கிலத்தில் “Life is not without a relationship”  என்று எழுதப்பட்டிருந்தது. அடுத்தடுத்த பக்கங்களைப் புரட்டிப் படிக்கத் தொடங்கினான். உறவுகளின் வலிமையைப் பற்றி அந்த நாட்குறிப்பில் யாரோ எழுதியிருந்தார்கள். அவன் அதனை ஏறத்தாழ படித்தே முடித்துவிட்டான். அப்போது, சித்தப்பா உருண்டு புரண்டு எழுந்தார். அவன் அந்த நாட்குறிப்பினை எடுத்த இடத்திலேயே வைத்தான். சித்தப்பா குழாயடிக்குச் சென்று முகத்தைக் கழுவிவந்தார். 

“அந்தத் தூக்குவாளியை எடு அறிவு”.

அவன் எழுந்து சென்று அதைத் தொட்டான். அது வெய்யிலில் நன்றாகச் சூடேறியிருந்தது. 

“சித்தப்பா! அது கொதிக்குது”. 

“அது கொஞ்சம் காய்ஞ்ச உடனேயே அறிவோட எடுத்துருக்கணும்”. 

‘அவர் இப்ப நம் பெயரைச் சொன்னாரா? இல்லையினா நமக்கு அறிவில்லையினு சொல்லவர்றாரா?’ என்று சிந்தித்தான்.

அவரே தொடர்ந்து பேசினானர்: “அறிவு பெயர்ல மட்டும் இருந்தா போதாது. செயல்ல வேணும்” என்றார்.

அவரின் சொற்களைக் கேட்டதும் அவனுக்குத் தன்னை யாரோ பிடரியில் அடித்ததாகவே உணர்ந்தான். அவனுக்குக் கோபம் தலைக்கேறியது. அந்தத் தூக்குவாளியை எடுத்தான். அது அவன் கைகளைச் சூடேற்றியது. இவர் கூறிய சொற்களைவிட அது ஒன்றும் அவனுக்குப் பெரிய வலியைத் தந்துவிடவில்லை. 

அதை மூடி ஓரமாக வைத்தான். அதற்குள் சித்தப்பா, ஓர் அட்டையை எடுத்து, அவனிடம் கொடுத்து, “இரண்டு டீ வாங்கிட்டுவா. அதோ அந்த சுபம் டீக்கடையில” என்றார்.

அவன் கைகள் நடுங்கின. பொங்கிவந்த அழுகையை அடக்கிக்கொண்டு, அந்த அட்டையை வாங்கினான். கடையைவிட்டு வெளியே வந்தான். அந்தக் கடை இரண்டு திருப்பங்களைத் தாண்டி இருந்தது. கடையில் கூட்டம் மிகுந்திருந்தது. நான்கு பேர் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். கள்ளாப் பெட்டியின் அருகில் ஒருவர் நின்றிருந்தார். ‘அவர் இந்தக் கடையின் முதலாளியாகக் கூட இருக்கலாம்’ என்று நினைத்துக் கொண்டான்.

அவரிடம் அந்த அட்டையைக் காட்டினான். அவர் அதில் எதையோ குறித்துக்கொண்டு, அவர் வைத்திருந்த ஒரு நோட்டிலும் எதையோ எழுதினார். இரண்டு டோக்கன்களைக் கொடுத்தார். அவன் அதை வாங்கியபோது அவர் கேட்டார், “நீ அந்தப் பழைய இரும்புக்கடையில வேலைக்குச் சேர்ந்திருக்கியா?” என்று. அவன் என்ன சொல்வதென்று தெரியாமல், “ஆமாம்” என்பது போலத் தலையை ஆட்டினான்.

வரிசையில் நின்று, டோக்கன்களைக் கொடுத்து, இரண்டு டீகளை வாங்கினான். கைக்கு ஒன்றாக அவற்றைப் பிடித்துக்கொண்டு, அவை அலுங்கித் தளும்பிவிடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மெல்ல மெல்ல நடந்துவந்தான். அவன் கடைக்கு அருகில் வரும்போது, சித்தப்பா கடையின் வாசலில் இருந்த அந்தப் பெரிய சாக்குப் பைக்குள் தன் தலையை நுழைத்து எதையோ தேடிக் கொண்டிருந்தார். இவன் “சித்தப்பா?” என்று அழைத்தான். அவர் நிமிர்ந்து அவனைப் பார்த்தார். இரண்டு டீக்கள் அவன் கைக்கு ஒன்றாக இருப்பதைப் பார்த்தார். அவர் முகத்தைச் சுளித்துக்கொண்டு, 

“ஏய்! உனக்கு உண்மையிலேயே அறிவு இருக்கா, இல்லையா?”.

அவன் அவரையே அமைதியாக முறைத்தபடி பார்த்துக்கொண்டிருந்தான். 

“என்ன முழிக்குற?”.

“புரியலைங்க சித்தப்பா”.

“ஒரு டோக்கனைக் குடுத்து ஒரு டீயை வாங்கி நீ குடிச்சிட்டு, அதுக்கு அப்புறமா இன்னொரு டோக்கனுக்கும் டீயை வாங்கிக்கிட்டு வரலாம்ல. இப்படி ரெண்டையுமா தூக்கிக்கிட்டு வருவ? ரெண்டையும் தூக்கிக்கிட்டு மெதுவா வந்திருப்ப. இப்ப ரெண்டும் ஆறிப் போயிருக்கும்”.

“படிச்சிருக்க. ஆனா, உனக்கு அறிவு வேலைசெய்யலையே”.

டீயை வாங்கி ஒருவாய் குடித்தார். உடனே, “பார்த்தியா, சூடு ஆறிப் போயிடுச்சு. சரி இனிமேலாவது அறிவோட வேலையைச் செய்யி”.

அவன் அப்படியே நின்றுகொண்டிருந்தான். அவனுக்கு அவமானமாக இருந்தது. ‘நாம் போகும்போதே இதைச் சித்தப்பா சொல்லிருக்கலாமே?’ என்று நினைத்தான். ‘சரி, நாம பன்னிரண்டாவது வரை படிச்சிருக்குறதாலத்தான் சித்தப்பா இந்த விவரத்தை நமக்குச் சொல்லலை போல’ என்று நினைத்துக் கொண்டான்.

அப்போது சைக்கிளில் தெருத்தெருவாகச் சென்று பழைய பொருட்களை வாங்கிவரும் வியாபாரி கடையின் வாசலுக்கு வந்து தன் சைக்கிளை நிறுத்தினார். அவரின் சைக்கிளின் எல்லாப் பக்கத்திலும் மூட்டை முடிச்சுகள் தொங்கின. அவர் தன் சைக்கிளின் முன்புறம் ஒரு பெரிய மூட்டையை வைத்து அதைத் தன் தலையைத் தாழ்த்தி, நாடியால் அழுத்திப் பிடித்திருந்தார். அவர் தொடர்ந்து நிற்க முடியாமல் தடுமாறப் பார்த்தார். சித்தப்பா ஓடிச்சென்று அவரைப் பிடித்தார். 

“அறிவு! இங்க வா. இந்த மூட்டையை இறக்கு”. 

அவன் மெதுவாகச் சென்றான். 

“சீக்கிரம் வா. எல்லா மூட்டையையும் இறக்கு”. 

அவன் வேறுவழியில்லாமல் ஒவ்வொன்றாக இறக்கினான். அவற்றோடு சேர்த்து சூடு, சொரணை, வெட்கம், மானம், திமிர், கர்வம் இன்னும் என்னெல்லாம் இவைபோன்று தன்னிடம் இருந்ததோ, அவற்றையெல்லாம் ஒவ்வொன்றாக இறக்கி வைத்தான் அறிவழகன்.

– – –

2

சித்தப்பா கணக்கெழுதும் சீட்டையும் பேனாவையும் அறிவழகனிடம் கொடுத்து, “நான் சொல்லச் சொல்ல சிட்டை எழுது” என்றார். அவன் அதை வேண்டா வெறுப்பாக வாங்கிக்கொண்டான். 

“மேல பிள்ளையார் சுழி போடு”.

“சரி”.

“திருமலைப்பாண்டியன் சைக்கிள் அப்படிப் போட்டுக்கோ”.

“சரி”.

“எப்பவுமே சிட்டை எழுதும்போது ரெண்டு எழுதணும். ஒன்னு நமக்கு, இன்னொன்னு அவங்களுக்கு”.

“சரி” என்று கூறிவிட்டு, இரண்டுதாள்களிலும் எழுதத் தொடங்கினான் அறிவழகன்.

சைக்கிளில் இருந்து இறக்கி வைக்கப்பட்ட ஒவ்வொரு மூட்டையையும் பிரித்து, அதில் உள்ள பொருட்களைச் சரிபார்த்தார். அதற்குள் திருமலைப்பாண்டியன், குழாய்க்கு அருகில் சென்று முகத்தைக் கழுவிவந்தார். 

இருவரும் சேர்ந்து நிலைத் தராசில் பொருட்களை மாற்றி மாற்றி ஏற்றினர். ஒவ்வொரு பொருளையும் எடை போடும் முன்னும் எடை போட்ட பின்னரும் சித்தப்பா அறிவழகனிடம் கூறினார்.

“கழிசல் – எட்டுக்கிலோ”.

“ம்”.

“இரும்பு – பத்தரை கிலோ”.

“ம்”.

“பிளாஸ்டிக் – மூணு கிலோ”.

“ம்”.

“வெங்கல விளக்கு (நல்ல உருப்படி) – எட்டரை கிலோ”. 

“ம்”.

“காப்பர் – ஒன்றரை கிலோ”. 

“ம்”.

“தமிழ்ப் பேப்பர் – பதினெட்டு கிலோ”.

“ம்”.

“இங்கிலீஸ் பேப்பர் – பதினாறு கிலோ”.

“ம்”.

“நோட்டு – பன்னிரண்டு கிலோ”.

“ம்”.

“பால்கவர் – நாலு கிலோ”.

“ம்”.

“கெட்டி அட்டை – எட்டரை கிலோ”.

“ம்”.

“மிக்ஸி நல்ல உருப்படி – 150 ரூபாய் போட்டுக்கோ”.

“ம்”.

“அண்ணே! என்ன 150ன்னு சொல்றீங்க. கொஞ்சம் பாத்துப்போடுங்க” என்றார் திருமலைப்பாண்டியன்.

“சரி, மிக்ஸி 175ன்னு போட்டுக்கோ” என்றார் சித்தப்பா. 

“ம். மாத்திட்டேன்” என்றான் அறிவழகன்.

சித்தப்பா அந்தச் சிட்டையை வாங்கி, ஒவ்வொன்றுக்கும் விலையைக் குறிப்பிட்டு, மீண்டும் அவனிடம் கொடுத்து, “இப்ப, இதுகளைப் பெருக்கிப் போடு. இந்தா, மிஷினை வச்சுக்கோ” என்று கூறி, அவனிடம் கால்குலேட்டரை எடுத்து நீட்டினார். 

“அது வேண்டாம் சித்தப்பா. இது சிம்பிள் மேத்தமேடிக்ஸ்தான். எங்க கணக்கு டீச்சர் மனக்கணக்கு போட நல்லா சொல்லித் தந்துருக்காங்க” என்றான். 

“ஓ! சரி நீ பெருக்கிப் போட்டதுக்கு அப்புறமா நான் மிஷின்ல போட்டுப் பார்ப்பேன். தப்பா இருந்துச்சு, ஒன் மண்டையிலயே போடுவேன்” என்றார் தன் முகத்தைச் சுளித்துக்கொண்டு. 

அவன் குனிந்ததலை நிமிராமல் சில வினாடிகளிலேயே கணக்கினைப் போட்டு முடித்தான். அதைப் பார்த்து அடுத்த துண்டுச் சீட்டிலும் எழுதினான். 

“முடிச்சிட்டேன் சித்தப்பா” என்று கூறி அவரிடம் அவற்றை நீட்டினான்.

அவர் அதை வாங்கி, கால்குலேட்டரை வைத்துக்கொண்டு சரிபார்த்தார். மிகச் சரியாக இருந்தது. அவனிடம் ஏதும் கூறாமல், உள்ளே சென்று தன்னுடைய பேண்ட் பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்து வந்து, திருமலைப்பாண்டியனிடம் கொடுத்தார். அந்தத் துண்டுச் சீட்டையும் கொடுத்தார். 

அவர் வாங்கிக்கொண்டு தன் சைக்கிளில் ஏறினார். உடனே, சித்தப்பா அறிவழகனைப் பார்த்து, “அந்த இன்னொரு சிட்டையை அந்த கிளிப்ல மாட்டி வை” என்றார். 

அவன் அந்தத் துண்டுச் சீட்டை ஒரு பெரிய கிளிப்பில் வைத்துவிட்டு எழப் பார்த்தான்.

“எங்க எந்திரிக்குற? உட்காரு. இனிமே எட்டு மணிவரையும் ஆளுக வந்துக்கிட்டே இருப்பாங்க. இப்ப வந்தார்ல இவரு பேரு திருமலைப்பாண்டி. சைக்கிள்ல வியாபாரம் பார்க்குறார். ஆளை நினைவுல வச்சுக்கோ” என்றார் சித்தப்பா.

அடுத்து ஒரு டிரைசைக்கிள் வந்து அவரின் கடைமுன் நின்றது. அவரைப் பார்த்ததும், “வாங்க” என்றார் சித்தப்பா. 

அறிவழகனைப் பார்த்து, “இவரு பேரு முத்துராசு. டிரைசைக்கிள்ல வியாபாரம்” என்றார். 

உடனே, அறிவழகன் இரண்டு துண்டுச் சீட்டுகளை எடுத்து அவற்றின் தலைப்பில் பிள்ளையார் சுழியை இட்டு, முத்துராசு – டிரைசைக்கிள் என்று எழுதினான். 

அவன் சிட்டையை எழுதி, அவரிடம் நீட்டினான். அவர் ஒவ்வொன்றுக்கும் உரிய தொகை எழுதி மீண்டும் அவனிடம் கொடுத்தார்.  அவன் பெருக்கிப் போட்டுக் கணக்குப் பார்த்துவிட்டு, அடுத்த துண்டுச் சீட்டிலும் அதைப் பார்த்து எழுதிக் கொண்டு, ஒரு சீட்டை மட்டும் சித்தப்பாவிடம் நீட்டினான். அப்போது அவன் ஒன்றைக் கவனித்தான். திருமலைப் பாண்டியனின் சீட்டில் இரும்பு கிலோ 18 ரூபாய் என்று சித்தப்பா குறிப்பிட்டிருந்தார். ஆனால், முத்துராசுக்குரிய சீட்டில் இரும்பு 22 ரூபாய் என்று எழுதியிருந்தார். 

சித்தப்பா, கால்குலேட்டரை வைத்துக்கொண்டு சரிபார்த்தார். கணக்குக் கச்சிதமாக இருந்தது. உள்ளே சென்று பணத்தை எடுத்துவந்து முத்துராசிடம் கொடுத்தார் சித்தப்பா. 

அவரிடம் அதுபற்றிக் கேட்டான். உடனே, அவர் சொன்னார், “டேய்! இதெல்லாம் வியாபார நெளிவு சுழிவுகள். இந்த முத்துராசு முன்னாடி வேற கடையிலதான் சரக்கை இறக்கிக்கிட்டு இருந்தான். அவனை நம்ம கடையில சரக்கை இறக்க வைக்கணும்னா அவனுக்குக் கொஞ்சம் கூடுதலாத்தான் நாம காசு கொடுக்கணும். இவன் கொண்டு வர்ற பொருள்ல எது எடை கூடுதலா இருக்கோ அந்தப் பொருளுக்குக் கூடுதலாப் பணம் கொடுத்தாத்தான் அவன் நம்மள விட்டுட்டுப் போகமாட்டான்” என்றார் சித்தப்பா சிரித்துக்கொண்டே. 

“அப்ப வழக்கமா நம்ம கடையிலேயே சரக்கு இறக்குறவங்களுக்கு?” என்று கேட்ட அறிவழகனிடம், “அது அவுங்க தலையெழுத்து” என்று கூறிவிட்டு பலமாகச் சிரித்தார் சித்தப்பா.

அடுத்து சைக்கிளில் வந்த சிவதாசனுக்கும் அறிவழகன் கணக்குப் பார்த்துச் சீட்டை நீட்டியபோது, சித்தப்பா கால்குலேட்டரையும் எடுக்கவில்லை, கணக்கையும் சரிபார்க்கவில்லை. சீட்டையும் பணத்தையும் சிவதாசனுக்குக் கொடுத்தனுப்பினார். அறிவழகன் அதைக் கவனித்தான்.

செவத்தபாண்டி – சைக்கிள்

பாலுச்சாமி – டிரைசைக்கிள்

பொன்னம்பலம் – சைக்கிள்

பால்ராஜ் – டிரைசைக்கிள்

முகம்மது அனீஸ் – மீன்பாடி வண்டி

அஸ்ரப் ஹமீது – சைக்கிள்

இவர்கள் எல்லோரும் சென்ற பின்னர், சித்தப்பா அந்தச் சுபம் டீக்கடை அட்டையை எடுத்து, அவனிடம் கொடுத்து, “டீ வாங்கிட்டு வா. வடை இருந்தாலும் வாங்கிட்டு வா” என்றார்.

 அறிவழகன் எழுந்து புறப்பட்டான். அவனுக்கும் அலுப்பாகத்தான் இருந்தது. சுபம் டீக்கடையில் உளுந்து வடையும் முட்டை போண்டாவும் இருந்தது. முதலாளியிடம் அட்டையைக் கொடுத்துவிட்டு, “உளுந்த வடை, முட்டை போண்டா, இரண்டு டீ” என்று கூறினான். அவர் அவற்றுக்கு ஏற்ப டோக்கன்களைக் கொடுத்தார்.

முதலில் முட்டை போண்டாவை வாங்கி உண்டான். பின்னர் டீ வாங்கிக் குடித்தான். இறுதியாகச் சித்தப்பாவுக்கு டீயையும் உளுந்து வடையையும் வாங்கிக்கொண்டு திரும்பி வந்தான்.

இதுவரை வந்திறங்கிய அனைத்துச் சரக்குகளையும் தனித்தனியே சாக்குகளில் அடைத்துக்கொண்டிருந்தார் சித்தப்பா. இவன் வந்ததும் அவற்றை அப்படியே வைத்துவிட்டு, முகத்தையும் கையையும் கழுவிவிட்டு வந்தார். 

“அறிவு! இந்த மூட்டைகளை இழுத்து ஓரமா வைச்சுடு. ஒன்பது மணிபோல, மினி லாரி வரும். கடைக்குள்ள இருக்குற சரக்குகளை எல்லாத்தையும் எடுத்துக்கிட்டுப் போவாங்க. அப்ப இதுக இடைஞ்சலா இருக்கும்” என்றார் சித்தப்பா. இவன் கொண்டுவந்தவற்றை உண்டார்.

அறிவழகன் அவற்றைத் தன் முழுபலத்தையும் செலுத்தி, இழுத்து ஓரமாக வைத்தான். தன் கைகளைப் பார்த்தான். சிவந்திருந்தது. செய்தித்தாள் கட்டின் மீது வந்தமர்ந்தான்.

 அந்த அலமாரியின் மீது தான் காலையில் பார்த்துவிட்டு வைத்த நாட்குறிப்பினை எடுத்தான். புரட்டினான். படிக்கத் தொடங்கினான். 

“நீ புக்கெல்லாம் படிப்பீயா?”. 

“படிப்பேன், பொழுது போகலையினா”.

“அப்ப உனக்கு இந்தக் கடையில நல்லா பொழுதுபோகும். இங்க நிறைய புத்தகம் இருக்கு. நான் எதையும் படிச்சதில்ல. ஆனா, நீ படிக்க இங்க நிறைய இருக்கு. உனக்குத்தான் பொழுதுபோகாதோன்னு நினைச்சேன். நல்லவேளை, உனக்குப் படிக்கப் பிடிச்சிருக்கு”.

‘இவர் எதை மனத்தில் வைத்துக்கொண்டு, இப்படிப் பேசுகிறார்?’ என்று நினைத்தான் அறிவழகன். ‘ஒருவேளை தினமும் என்னைக் கடைக்கு வரச்செய்யத் திட்டம்போடுறாரோ?’ என்று சிந்தித்தான்.

ஒரு மினி லாரி வந்தது. “அறிவு! இந்த லாரிதான். இன்னைக்குச் சீக்கிரமா வந்துடுச்சு. வழக்கமா ஒன்பது மணிக்குத்தான் வரும். ரெண்டு நாளைக்கு ஒரு தடவைதான் இந்த லாரி வரும். இது வரதுக்குள்ள நாம சரக்குகளைப் பிரிச்சு, தனித்தனியாகக் கட்டிவச்சிறணும்” என்று கூறிக்கொண்டே எழுந்தார் சித்தப்பா.

‘என்ன இவர்? என்னை இந்தக் கடையில் முழுநேர வேலைக்கு வச்சிக்கிட்டாரோ? நான் சென்னையைச் சுத்திப் பார்க்கத்தானே வந்தேன்!’ என்று தனக்குள் நினைத்துக் கொண்டான். ‘வீட்டுக்குப் போனதும் சித்தியிடம் சொல்லிவிட வேண்டும், ‘இதெல்லாம் நமக்கு ஒத்துவராதுன்னு’ என்று திட்டமிட்டான் அறிவழகன். 

தன் கையில் இருந்த அந்த நாட்குறிப்பினை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு எழுந்தான். லாரியிலிருந்து இறங்கிய நபர்கள், தாங்கள் கொண்டு வந்த பெரிய தராசினைக் கீழே இறக்கினர். பின்னர், நேராகக் கடைக்குள் வந்து சரக்குகளை எடுத்துச் சென்று அவர்கள் கொண்டுவந்த பெரிய தராசில் எடை போட்டனர். 

ஒருவர் வேகமாகச் சீட்டை எழுதி, அதில் உள்ள தொகைகளைத் தன்னுடைய கைப்பேசியில் பதிவிட்டுக் கணக்குப் பார்த்தார். சித்தப்பாவிடம் கொடுத்தார். தன் கைப்பையில் இருந்து பணத்தை எடுத்து, எண்ணத் தொடங்கினார். 

சித்தப்பா சீட்டைப் பார்த்துவிட்டு, அறிவழகனிடம் அதைக் கொடுத்து, “அந்த கிளிப்பில் மாட்டிவை” என்றார். அவன் அதை மேலோட்டமாகப் பார்த்தான். கூட்டுத்தொகையில் தவறு இருந்தது. 

“சித்தப்பா!” என்று அழைத்தான். 

“என்ன?”.

“பத்து ரூபாய் குறையுது”.

அவர் அதை வாங்கி கால்குலேட்டரில் பதிவிட்டுக் கூட்டிப் பார்த்தார். பத்து ரூபாய் குறைந்தது. உடனே, பணத்தை எண்ணிக் கொண்டிருந்தவர் அந்தச் சீட்டை வாங்கி, மீண்டும் தன்னுடைய கைப்பேசியில் பதிவிட்டுச் சரிபார்த்தார். பத்து ரூபாய் குறைந்தது.

“சாரி” என்று கூறிவிட்டு, பணத்தை எண்ணிக்கொடுத்தார். மினிலாரியில் ஏறிச் சென்றனர்.

சித்தப்பாவும் அறிவழகனும் சேர்ந்து கடைக்கு வெளியில் இருந்த அனைத்து மூட்டைகளையும் எடுத்து, கடைக்குள் வைத்தனர். சித்தப்பா உடைகளை மாற்றிக் கொண்டார். அப்போது அறிவழகன் அந்த நாட்குறிப்பினை எடுத்தான். அவன் எடுப்பதைச் சித்தப்பா பார்த்தார். 

“அதைப் படிக்கணுமா?”. 

“ஆமாம்”. 

“அதை வீட்டுக்குக் கொண்டுவரப் போறீயா?”. 

“ஆமாம்”.

“அது இங்கேயே இருக்கட்டும். காலையில வந்து படிச்சுக்கோ”.

‘என்னது, காலையிலயும் நான் வரணுமா? இதைப் படிக்கவா? இல்லை, இங்க வேலை பார்க்கவா?’ என்று தனக்குள் நினைத்துக் கொண்டான் அறிவழகன். 

அவரிடம் ஏதும் சொல்லாமல், அந்த நாட்குறிப்பினை எடுத்த இடத்திலேயே வைத்தான்.

சித்தப்பா கடையை அடைத்தார். அவனை அழைத்துக்கொண்டு சில திருப்பங்களைக் கடந்து நடந்தார். சாலையோர புரோட்டாக் கடைக்கு அவனை அழைத்துச் சென்றார். இங்குதான் அவர் வழக்கமாக இரவு உணவினைச் சாப்பிடுவார்.

“உனக்கு என்ன வேணுமோ வாங்கிச் சாப்பிடு”.

அவன் மூணு புரோட்டா வாங்கினான். சித்தப்பா நான்கு இட்லிகளை வாங்கினார். 

அவன் அதை உண்டு முடிக்கும்போது, “வேற எதாவது வாங்கி, நல்லா வயித்துக்குச் சாப்பிடு” என்றார் சித்தப்பா.

மீண்டும் இரண்டு புரோட்டாக்களை வாங்கினான் அறிவழகன். சித்தப்பா ஒரு தோசை வாங்கினார். சாப்பிட்டு முடித்ததும் வீட்டை நோக்கி நடந்தனர்.

“உன்னோட சித்தி, காலையில ஆக்கின சோத்தைத்தான் மதியமும் ராத்தியும் சாப்பிடுவா. காலையிலை மட்டுந்தான் சமைப்பா. நீ வந்திருக்குறதாலத்தான் இப்ப மதியமும் ஆக்கிருக்கா. இனி, நீ இங்க இருக்குற வரையும் மதியமும் ஆக்குவா. நீ வந்ததால எனக்கு மதியானமும் சூடாச் சாப்பாடு கிடைக்குது” என்றார் சித்தப்பா மெல்லச் சிரித்தபடி. 

“சித்தப்பா! நான் நாளைக்கு ஊரைச் சுத்திப் பார்க்கலாம்ணு இருக்கேன்”.

சித்தப்பா சற்றுச் சிந்தித்தார். ‘இவன் நழுவுறானே!’ என்று நினைத்துக்கொண்டு, “அப்படியா? சுத்திப் பார்க்கலாமே. நானே உன்னைக் கூட்டிக்கிட்டுப்போயி ஊரைச் சுத்திக்காட்டுறேன்”. 

அவன் ‘இவர்ட்ட என்னத்தைச் சொல்ல?’ என்று நினைத்துக்கொண்டு “சரி” என்றான்.

வீட்டுக்கு வந்ததும் சித்தி அவனிடம் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. சித்தப்பா, ஒரு பாயையும் தலையணையையும் எடுத்து வெளியே வைத்தார். வீட்டுக்கு வெளியே இருந்த சிமிண்ட் தரைத்தளத்தில் அவனைப் படுத்துக்கொள்ளுமாறு கூறினார் சித்தப்பா. அந்தத் தரைத்தளத்திற்கும் சாலைக்கும் இடையே அரைஅடி இடைவெளி மட்டுமே இருந்தது. சித்தி வீட்டுக்கதவை அடைத்தார்.

‘எல்லாம் என் தலையெழுத்து!’ என்று நினைத்துக்கொண்டு, அறிவழகன் அந்தப் பாயை விரித்துப் படுத்தான். வானத்தில் மேகம் இல்லை. தூரத்தில் பிறைநிலா தெரிந்தது. 

‘நீ புழுதிப்பட்டியில் பார்த்த அதே நிலாதான் இது’ என்று அவனின் பொதுஅறிவு, அவன் மனத்துக்கு அறிவியல் பாடத்தை நடத்தியது. ஆனாலும், அவன் மனம், ‘இது அந்த நிலா இல்லை. அந்த நிலா மகிழ்ச்சியாக இருக்கும். இது சோகமாக இருக்கிறதே!’ என்றது. 

“பேசாம தூங்கித்தொலைங்க” என்று அவற்றைத் திட்டினான் அறிவழகன். உடனே, அவை தம் வாயை மூடிக்கொண்டன. அறிவழகன் தூங்கத் தொடங்கினான். பிறைநிலா அவனையே பார்த்துக் கொண்டிருந்தது.

– –

3

அதிகாலையில் தன் முகத்தில் தண்ணீர்த் துளிகள் விழுவதை உணர்ந்ததால் பதறி எழுந்தான் அறிவழகன். ‘மழைவந்துவிட்டது’ என்றுதான் நினைத்தான். எழுந்து பார்த்தான். வாசல் தெளிக்கப்பட்டிருந்தது. 

‘ஒருவேளை சித்தி வாசல் தெளிக்கும்போது நம் மீதும் நீர்த்துளிகள் விழுந்திருக்கலாம்’ என்று நினைத்தான். ‘சித்தி நம்மை எழுப்புவதற்காகத்தான் முகத்தில் தண்ணீரைத் தெளித்தாரோ?’ என்றும் சிந்தித்தான். எழுந்து அமர்ந்தான். முகம் கழுவினான். சித்தி பால்அட்டையையும் வயர்க்கூடையையும் கொடுத்தார். 

“அதோ அந்த முக்குல பால் டிப்போ இருக்கு”. 

இவன் ஏதும் கூறாமல் அந்த முக்கை நோக்கி நடக்கத் தொடங்கினான். தலைவலித்தது. புழுதிப்பட்டியில் சேவல் கூவியதும் எழுந்து பழகியவன்தான் என்றாலும் புழுதிப்பட்டியில் இரவு முழுவதும் அமைதியாகவேதான் இருக்கும். நிம்மதியாகத் தூங்கலாம். இங்கு இரவும் பகலும் ஓய்வில்லாத இரைச்சல். 

பால் டிப்போவில் ஆண்கள் வரிசை, பெண்கள் வரிசை என இரண்டு வரிசைகளும் நீண்டிருந்தன. இவன் பாலை வாங்கும்போது சூரியன் வெளியே வரத் தொடங்கியிருந்தது. 

சித்தியிடம் கொடுத்தான். அதை அவர் வாங்கும்போதே, “இந்தப் பாத்திரங்களை எடுத்து குழாயடியில் வை” என்று நேற்றுச் சமைத்த பாத்திரங்களின் பக்கம் கைக்காட்டினார். அவன் அவற்றையெல்லாம் அள்ளி வெளியே வைத்தான். 

“பக்கெட்ல தண்ணீயைப் பிடிச்சு இந்தத் துணிகளை எடுத்து அதுல முக்கிவை” என்று பிள்ளைக்குப் பயன்படுத்திய துணிகளின் பக்கம் கைகாட்டினார் சித்தி. அவ்வாறே செய்தான். ஒரு டம்ளர் காபி கொடுத்தார் சித்தி.

அதை அவன் வாங்கியபோது அவனின் மனம், ‘வேலைக்குக் கூலி’ என்றது வருத்தத்துடன். உடனே அவனின் பொது அறிவு, ‘இல்லை. அப்படிச் சொல்லக் கூடாது, இது நம்ம சித்தி வீடு. சொந்த வீட்டுவேலைக்கு யாராவது கூலி வாங்குவாங்களா? இந்தக் காபி சித்தியின் அன்புப் பரிசு’ என்றது அன்பாக. 

அடுத்த விநாடியே இவன், “சுடுகாப்பிய உங்க ரெண்டுபேரு முகத்திலையும் வீசீடுவேன்” என்றான் சினத்துடன். அவை அமைதியாயின.

அவன் காப்பியைக் குடித்துவிட்டு, குளிக்கச் சென்றான். அவன் வரும்போதுதான் சித்தப்பா விழித்து, அமர்ந்தார். அப்படியே காபியை வாங்கிக் குடித்தார். 

இவனைப் பார்த்ததும், “அறிவு! கடைச்சாவியை எடுத்துக்கிட்டுப் போயி கடையைத் திற. வாசலை லேசா பெறுக்கிட்டு, நேத்து உள்ள எடுத்துவச்ச மூட்டைகளை எடுத்து வெளியே வை. நான் பின்னாடியே வர்றேன்” என்றார் சித்தப்பா. 

‘இன்னும் கொஞ்ச நேரம் நாம் இங்கிருந்தால் சித்தி, துணிதுவைக்கச் சொல்லலாம், பாத்திரங்களைக் கழுவச் சொல்லலாம்’ என்று நினைத்தான். கடையின் சாவியை எடுத்துக்கொண்டு, திரும்பிப் பார்க்காமல் வேக வேகமாக நடந்தான். 

கடைக்கு வந்து, சித்தப்பா கூறியபடி செய்துமுடித்தான். சித்தப்பா வரவில்லை. தலையைச் சொறிந்துகொண்டு, என்ன செய்வதென்றே தெரியாமல் அமர்ந்திருந்தான். அந்த வரிசையில் இருந்த நான்கு கடைகளில் இந்தக் கடை மட்டுமே திறந்திருந்தது. அதுவும் ஞாயிற்றுக்கிழமை. 

சித்தப்பா வந்தார்.  

“அறிவு! அட்டையை எடுத்துட்டுப் போயி டீ வாங்கிட்டுவா”. 

‘என்னடா, இன்னும் நாம காலையில சாப்பிடலையே. இப்பப் போயி டீ வாங்கிட்டு வரச் சொல்றாரே?’ என்று நினைத்துக்கொண்டே, அந்த அட்டையை எடுத்தான் அறிவழகன். 

அப்போது சித்தப்பா அவராகவே கூறினார், “அறிவு! இன்னைக்கு ஞாயித்துக்கிழமயில்ல, அதான் கறி வாங்கி உன்னோட சித்திக்கிட்ட கொடுத்துட்டு வந்தேன். வழக்கமா நாங்க ஞாயித்துக்கிழமை கறி எடுக்குறதால காலையில சமைக்குறதில்லை” என்றார். 

இவன் ஏதும் கூறாமல் சுபம் கடையை நோக்கி நடந்தான். ‘பரவாயில்லை, இன்னைக்குக் கறிச்சோறு கிடைக்குதுல்ல’ என்று நினைத்துக் கொண்டான் அறிவழகன். அவனுக்கு வேண்டியதை வாங்கி உண்டான். சித்தப்பாவுக்கு டீயை வாங்கிக்கொண்டு வந்தான். 

அவர் அதைப் பருகி முடித்ததும், “அறிவு! இங்க வா” என்று அவனை அழைத்தார். 

அவன் அருகில் வந்ததும், “இப்படி உக்காரு” என்றார் சித்தப்பா. 

“என்ன சித்தப்பா?”.

“பேப்பர்கள்ல தமிழ் பேப்பர், இங்கிலீஸ் பேப்பர்ணு இருக்கு. ரெண்டுக்கும் இருக்குற விலைவித்தியாசம் ரொம்ப அதிகம். பேப்பர்களைச் சரியா பிரிச்சு, ஒழுங்கா மடிச்சு, நேர்த்தியா அடுக்கி, பத்துப் பத்து கிலோவா எடைபோட்டு, இறுக்கிக் கட்டிவச்சாத்தான் நமக்கு லாபம். இப்ப உனக்கு அதை எப்படிச் செய்யுறதுணு சொல்லிக் காட்டுறேன்”.

பத்துப் பேப்பர்களை மடித்துக் காட்டினார். அவனையும் மடிக்க வைத்தார். சில திருத்தங்களைக் கூறினார். அவன் நன்றாக மடிக்கப் பழகியதும், “அறிவு! அந்த சாக்குல இருக்குற பேப்பர்களை எடுத்துப் பிரிச்சு, மடி” என்று கூறினார். 

அவன் எழுந்து அந்தச் சாக்கின் அருகில் சென்றான். அதைத் திறந்தான். அவனுக்குத் தலை சுற்றியது. நாளிதழ்கள் அனைத்தும் கலைந்துகிடந்தன. ‘இதெல்லாம் நான் எப்போ மடிச்சு முடிக்க?’ என்று தனக்குள் கேட்டுக்கொண்டான்.

சித்தப்பா மின்விசிறியின் மோட்டாரைப் பிரித்து அதன் உள்ளே இருந்த காப்பர் கம்பிகளை வெட்டி எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது மணி மதியம் ஒன்று. 

“அறிவு! மூட்டைகளை எடுத்து கடைக்குள்ள வை” என்றார். அவ்வாறே செய்தான். சித்தப்பா கடையை மூடத் தொடங்கினார். 

“ஏன் சித்தப்பா, இப்பவே?”.

“இன்னைக்கு ஞாயித்துக்கிழமையில்ல, கடை அரைநேரந்தான். உனக்கு இன்னைக்கு ஊரைச் சுத்திக்காட்டணும்ல!”.  

‘இன்று அரைநாள் மட்டும்தான் கடை என்பதால்தான், சித்தப்பா கூறினார் போல, ‘நானே உன்னைக் கூட்டிக்கிட்டுப் போயி ஊரைச் சுற்றிக் காட்டுகிறேன்’ என்று’ என நினைத்தான் அறிவழகன்.

இருவரும் வீட்டுக்குச் சென்றனர். சூடாகக் கறிசோறு. முதல்வாயை எடுத்துவைக்கும் போதே அறிவழகனுக்குத் தெரிந்துவிட்டது, ‘இது ஆட்டுக்கறியும் இல்லை, கோழிக்கறியும் இல்லை’ என்று. 

சாப்பிட்டு முடித்ததும், சித்தப்பா தன் மனைவியிடம் கூறினார், “இன்னைக்கு அறிவழகனைக் கூட்டிக்கிட்டுப் போயி அவனுக்கு ஊரைச்சுத்திக் காட்டுவோம்” என்றார்.

“எங்க?”.

“பீச்சுக்கு”.

“சரி”.

குழந்தை கயல்விழி தொட்டிலில் விழித்தபடி படுத்துக் கிடந்தது. அதை எடுத்து, அறிவழகன் கையில் கொடுத்தார் சித்தி. அது புழுபோல நெளிந்தது. 

“தம்பி! இது அழுதா தொட்டிலில போட்டு ரெண்டு ஆட்டு ஆட்டு” என்றார் சித்தி.

சித்தியும் சித்தப்பாவும் ஆளுக்கொரு மூலையில் கால்நீட்டிப் படுத்துக் கொண்டனர். இவன் அந்தக் கயல்விழியை மடியில் வைத்துக்கொண்டு சும்மா உட்கார்ந்திருந்தான். மாலை நான்கு மணிக்கு இருவரும் எழுந்தனர். அது வரை கயல்விழி அழவேயில்லை. 

– – –

4

நால்வரும் வேகமாகப் புறப்பட்டனர். சித்தி கயல்விழியைத் தோளில் போட்டுக்கொண்டார். தாம்பரம் மின்சார ரயில் நிலையத்துக்கு வந்தனர். மெரினா கடற்கரை ரயில் நிறுத்தத்துக்கு மூன்று பயணச் சீட்டுகளை வாங்கினார் சித்தப்பா.

பீச்சிக்கு வந்தனர். அங்கே திருவிழாக்கூட்டம் போல மக்கள் மிகுந்து இருப்பதைப் பார்த்ததும் அறிவழகனுக்கு மகிழ்ச்சி பொங்கியது. தரையெல்லாம் வெள்ளை மணல். மணல் மீது மக்கள் கூட்டம். எதிர்புறம் நீலக் கடல். மேகமே இல்லாத தெளிந்த வானம். அவற்றையே இமைகள் மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தான் அறிவழகன். 

சித்தப்பா, ஆள்நடமாட்டம் குறைந்த ஓர் இடத்தைத் தேடிப் பிடித்தார். அதன் அருகில் பழைய படகு ஒன்று தரைதட்டி நின்றிருந்தது. இனி, அதனால கடலுக்குள் இறங்க முடியாது. அதன் அருகில் தான் கொண்டு வந்த துணியை விரித்தார் சித்தப்பா. 

அதில் அறிவழகனை அமரச்செய்தார். அவன் ‘என்ன?’ என்று புரியாமல் அமர்ந்துவிட்டான். அவனுக்கு முன்னால் கடல் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. அதன் அலைகள் அவனுக்கு ஏறத்தாழ 30 அடி தூரம்வரை வந்து வந்து திரும்பிச் சென்றன. கயல்விழியை அறிவழகனிடம் கொடுத்தார் சித்தி. அவர்கள் கொண்டுவந்திருந்த வயர்க்கூடையையும் அவனருகில் வைத்தனர். 

“தம்பி! அவ அழுதா அந்தப் பால்பாட்டிலைக் குடு” என்று கூறிவிட்டு, கடலை நோக்கி நடக்கத் தொடங்கினார் சித்தி. சித்தியின் பின்னாலே சித்தப்பாவும் சென்றார். 

அறிவழகனிடம் நன்றாக ஒட்டிக்கொண்டது கயல்விழி. கடற்காற்று அவனை வந்து தழுவியது. அலைகளின் ஓசை அவனை வந்து முட்டிச் சென்றது. குறுமணல்கள் காற்றில் உருண்டுவந்து அவன் கால்களில் ஏறி அமர்ந்தன. மக்கள் கூட்டம் கூட்டமாக மணற்பரப்பில் நடந்துகொண்டும் ஓடிக்கொண்டும் விளையாடிக் கொண்டும் இருந்தனர்.  

சிறிது நேரத்தில் சித்தப்பாவும் சித்தியும் வந்தனர். “தம்பி! அழுதாளா?” என்று கேட்டார் சித்தி.

‘இல்லை’ என்பதுபோலத் தலையை ஆட்டினான் அறிவழகன். 

சித்தப்பா ஒரு பட்டாணிப் பொட்டலத்தை அவனிடம் நீட்டினார். “தம்பி! அதைக் குழந்தை சாப்பிட்டுடாம பார்த்துக்கோ” என்றார் சித்தி.

‘சரி’ என்பதுபோலத் தலையை ஆட்டினான் அறிவழகன். அதைத் தன் பேண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டான்.

மீண்டும் அவர்கள் சென்றுவிட்டனர். கடல் இவனைப் பார்த்துக் கொண்டிருந்தது. இவனும் கடலைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு வலது பக்கத்தில் வெகுதொலைவில், துப்பாக்கியால் பலூன்களைச் சுடும் போட்டி நடந்து கொண்டிருந்தது. அதற்கு அருகில் திருவிழாவின் போது போடப்படும் கடைகள் போல வரிசையாகக் கடைகள் போடப்பட்டிருந்தன. அவற்றைச் சுற்றி மக்கள் நின்று வாங்கிக் கொண்டிருந்தனர். இவன் பாக்கெட்டில் பணம் இருந்தது. கயல்வழி அதை அழுத்தியபடி இவன் தோள்மீது படுத்திருந்தாள். 

சித்தியும் சித்தப்பாவும் வந்தனர். அவர்கள் கையில் ஒரு பலூனும், கிலுக்கும் இருந்தது. அவர்கள் அவற்றை அறிவழகனிடம் கொடுத்துவிட்டுச் சென்றனர். அவன் கயல்விழியைத் தன் மடியில் கிடத்திக்கொண்டு, அதனிடம் பலூனை நீட்டினான். 

அது பலூனைப் பார்த்ததும் அஞ்சி, அழத் தொடங்கியது. உடனே, அதன் அழுகையை நிறுத்துவதற்காகக் கிலுக்கினை ஆட்டினான் அறிவழகன். அலைகளின் ஓசையில் அதன் சப்தம் கேட்கவில்லை. கயல்விழி தன் அழுகையை நிறுத்திவிட்டு, அந்தக் கிலுக்கினைப் பிடித்துத் தன் வாயால் கவ்விக்கொண்டது. இவன் பலூனைப் பிடித்தபடி, கடலைப் பார்த்துக் கொண்டிருந்தான்.  

ஒருமணிநேரம் கழித்து, சித்தப்பாவும் சித்தியும் வந்தனர். அவர்களின் உடைகள் நனைந்திருந்தன. அப்போது இருளத் தொடங்கிவிட்டது. சித்தி கயல்விழியைத் தூக்கிக்கொண்டார். அவன் எழுந்தான். சித்தப்பா அந்தத் துணியை எடுத்து மடித்தார். அவன் கடலை நோக்கி நடக்கத் தொடங்கினான். 

“வாங்க போகலாம்” என்று சப்தமாகக் கூறியபடியே சித்தப்பா நடந்தார். அறிவழகன் திரும்பிப் பார்த்தான். சித்தி கயல்விழியைத் தோளில் போட்டுக்கொண்டு சித்தப்பாவின் பின்னாடியே நடந்தார். 

அறிவழகன் தன்னருகில் இருந்த அந்தப் பழைய படகினைப் பார்த்தான். ‘அது இனி, கடலுக்குள் இறங்காது’ என்று நினைத்துக் கொண்டான். சித்தப்பா தாம்பரம் ரயில் நிலையத்துக்கு மூன்று பயணச் சீட்டுகளை வாங்கினார். அவர்கள் வீடு வந்து சேர்ந்தனர். 

மீண்டும் கறிச் சாப்பாட்டை உண்டுவிட்டு, வீட்டுக்கு வெளியே பாயை விரித்துப்படுத்த அறிவழகனுக்குள் கடல் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. அவனின் பொது அறிவும் மனமும் அவனையே பார்த்துக்கொண்டிருந்தன.

– – –

5

அதிகாலையில் சித்தி கதவைத் திறக்கும்போது அறிவழகன் தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்திருந்தான். சித்தி வாசலைக் கூட்டிக் கொண்டிருக்கும்போது, இவன் பால் டிப்போவின் அட்டையையும் வயர்க் கூடையையும் எடுத்துக்கொண்டு தெருவில் இறங்கினான்.

பாலைச் சித்தியிடம் கொடுத்துவிட்டு, கழுவ வேண்டிய பாத்திரங்களை அள்ளி வெளியே வைத்தான். கயல்விழியின் துணிகளைத் தண்ணீரில் அமிழ்த்தினான். சித்தி கொடுத்த காப்பியைக் குடித்தான். குளித்தான். அப்போதுதான் சித்தப்பா எழுந்தார். சித்தி இன்னமும் சமையலைத் தொடங்கவில்லை. 

“நான் கடைக்குப் போகட்டுமா?” என்று சித்தப்பாவிடம் கேட்டான் அறிவழகன். 

“சரி” என்றார். 

கடைச்சாவியை எடுத்துக்கொண்டு கடைக்கு வந்தான். வாசலைப் பெருக்கினான். மூட்டைகளை எடுத்து வெளியே வைத்தான்.  மடிக்க வேண்டிய தாள்களை எடுத்துத் தன் முன் வைத்துக் கொண்டான். சித்தப்பா ஒன்பது மணிக்கு மேல்தான் வருவார். ஒன்பதரை மணிக்குச் சித்தப்பா வந்தார்.

 “அறிவு! இந்தா, சாப்பிட்ட பிறகு வேலையைப் பாரு” என்று கூறிக்கொண்டே, அவன் முன்பாகத் தூக்குவாளியை வைத்தார் சித்தப்பா. அறிவழகன், சித்தப்பாவைப் போலவே கைகளைக் கழுவி வந்தான், ஒரு தாளை விரித்தான், தூக்குவாளியை அதன் மீது வைத்து, உண்ணத் தொடங்கினான். சாப்பிட்டு முடித்ததும் தூக்கு வாளியைக் கழுவி, காயவைத்தான். இன்று வெய்யில் சற்றுத் தணிவாகத்தான் இருந்தது.

அப்போது இரண்டு பெண்மணிகள் வந்தனர். அவர்களிடம் இரண்டு கட்டைப்பைகள் நிறைய பழைய பொருட்கள் நிறைந்திருந்தன. அவற்றைச் சித்தப்பா தரம் பிரித்தார். இவன் உடனே சீட்டு எழுத எழுந்தான். சித்தப்பா ‘வேண்டாம்’ என்பது போலக் கையைக் காட்டினார். அவர்களுக்கு இவர் சற்று அதிகமாகவே பணம் கொடுத்தார். 

அந்தப் பெண்கள் சென்ற பின்னர், “அறிவு! எல்லாருக்கும் சிட்டை எழுதக் கூடாது. இவுங்களுக்கு நான் அதிகமாதான் காசு கொடுக்கிறேன். இதைச் சிட்டையில காசை எழுதிக்கொடுத்தா, இவுங்க வீட்டுக்கு வந்து பழைய பொருட்களை எடுக்குற வியாபாரிககிட்ட இந்தச் சிட்டையைக் காட்டி, இதேபோல கூடுதலா காசுவேணும்னு அடம்பிடிப்பாங்க. அப்புறம் அந்த வியாபாரிகள் நம்ம கிட்ட வந்து கூடுதலா காசுகேட்டு சண்டைக்கு நிப்பாங்க. இவுங்கள்லாம் அக்கம் பக்கத்துத் தெருக்காரங்கதான். இங்க இருக்குறவுங்களுக்குப் பலபேருக்கு இது சொந்த வீடு இல்லை. ஆறு மாசத்துக்கு ஒரு தடவை இவுங்க வீட்டைக்காலி பண்ணிக்கிட்டே இருப்பாங்க. இவுங்க மாசத்துக்கு ஒருதடவை பழைய பொருட்களை வெளியேத்துறதே அதிகம். இவுங்க வீட்டைக் காலிபண்றதுக்குள்ள நாலுதடவைதான் நம்மகிட்ட பழையதைப் போடுவாங்க. அப்படி நாலுதடவையும் நாம நிறையக் காசுகொடுத்து, இவங்ககிட்ட நல்லபேரு சம்பாதிச்சுக்கிட்டா, இவுங்க வீட்டைக் காலி பண்ணும்போது நேர நம்மகிட்டதான் வருவாங்க. அந்த நேரம் போயி இவுங்க வீட்டுல இருக்குற பழையதையும் கொஞ்சம் உருப்படியா இருக்குறதையும் அவுங்ககிட்ட கேட்டு, வாரிக்கிட்டு வந்து, கொஞ்சமாகக் காசுகொடுத்தாக்கூட, உடனே வாங்கிக்கிட்டுப் போயிடுவாங்க. இதெல்லாம் சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடிக்குற பக்குவம்” என்றார் சித்தப்பா.

அறிவழகன் தன் மனதிற்குள் நினைத்துக்கொண்டான், ‘இப்படித்தானே, எங்க அப்பாவை ஏமாற்றி, எங்க சித்தியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?’ என்று.

அப்போது, டிரைசைக்கிளில் ஒரு பெரிய பொருளைத் துணியால் மூடிக் கொண்டுவந்தார் சண்முகையா. வாசலில் தன் வண்டியை நிறுத்திவிட்டு, “முதலாளி!” என்று சித்தப்பாவை அழைத்தார். சித்தப்பா கடையைவிட்டு இறங்கிச் சென்று, ‘அதில் என்ன இருக்கிறது?’ என்று பார்த்தார். 

அவரிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தார். பின்னர், தன் கையை அசைத்து அறிவழகனை அழைத்தார். அவன் சென்றான். மூவரும் சேர்ந்து அதை இறக்கினர். கடையின் உட்புறத்தில் அதைக் கொண்டுவந்து வைத்தனர். அதே துணியால் அதை மூடினார் சித்தப்பா. 

“சண்முகையா! இந்த வேலையெல்லாம் நான் செய்யறதில்லை. உனக்காகத்தான். புரியுதா? அவுங்க கேட்குற விலைக்குக் கொடுத்துடுவேன். ஒரு தடவைப்  பொருளைக் கொடுத்துட்டா திரும்ப அவங்க கிட்ட இருந்து வாங்க முடியாது. அவுங்க எவ்வளவு கொடுக்குறாங்களோ அதுல பத்து சதவீதம் எனக்கு கமிஷன். அவ்வளவுதான். சரியா?” என்று கேட்டார் சித்தப்பா. 

“சரிங்க முதலாளி”. 

“சாய்ந்தரம் வாங்க”   . 

அவர் தன்னுடைய டிரைசைக்கிளில் ஏறிப் புறப்பட்டதும், சித்தப்பா வேகமாக அருகில் இருந்த தையல் கடைக்கு ஓடினார். அங்கிருந்த ஒரு ரூபாய் போனில் காசுபோட்டுப் பேசினார்.

அடுத்த அரைமணிநேரத்தில், ஒரு மினி லாரி வந்தது. ஒருவர் இறங்கி வந்தார். கடைக்குள் வந்து, அந்தப் பொருளின் மீதிருந்த துணியை விலக்கிப் பார்த்தார். அப்போதுதான் அந்தப் பொருளை அறிவழகனும் சரியாகப் பார்த்தான். அது ஜெனரேட்டர். புதியதும் இல்ல, பழையதும் இல்லை. 

அவரும் சித்தப்பாவும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். இறுதியாக அவர் சித்தப்பாவிடம் எட்டாயிரம் ரூபாயைக் கொடுத்தார். லாரியிலிருந்து இரண்டுபேர் இறங்கி வந்தனர். அவர்களோடு சேர்ந்து இவர்களும் அந்த ஜெனரேட்டரை மினி லாரியில் ஏற்றினர். 

அறிவழகன் தூக்குவாளியை எடுத்து உள்ளே வைத்தான். பின்னர் இருவரும் சேர்ந்து செய்தித்தாள்களை மடிக்கத் தொடங்கினர். 

“அறிவு! அடுத்து என்ன பண்றதா உத்தேசம்?”.

“காலேஜ்ல சேரணும்”.

“காலேஜ்லையா? அதுக்கு ரொம்ப மார்க்கு எடுக்கணுமே!”.

“மார்க் கம்மியாயிட்டா பாலிடெக்னிக்ல் சேர்வேன்”.

“ரொம்பக் கம்மியாயிட்டா?”.

அவன் அமைதியாக இருந்தான். அவன் அமைதியைக் கலைக்கும் வகையில் தன் வினாவினை விரிவாக்கிக் கேட்டார் சித்தப்பா.

“ரொம்பக் கம்மியினா, ஒருவேளை நீ ஃபெயிலாப் போயிட்டா என்ன பண்ணுவ?”. 

“தெரியலை”.

“ஃபெயிலானா திரும்பப் படிச்சு பாஸாகணும். குறைவா மார்க் வாங்கிட்டா அதுக்கு ஏத்த ஒரு தொழிற்படிப்பைப் படிக்கணும். ஆனால், காலையிலையும் சாய்ந்தரமும் ஏதாவது வேலை பார்த்துச் சம்பாதிக்கணும். ரொம்ப மார்க் வாங்கிட்டா நல்ல படிப்பைப் படிக்கணும். அந்தப் படிப்புக்கு ஏத்த ஒரு வேலையைக் காலையிலாவது சாய்ந்தரமாவது செஞ்சு சம்பாதிக்கணும்”. 

‘இவர் என்ன சொல்ல வர்றாரு?. நமக்கு நல்லதுக்குத்தான் சொல்றாரா? இல்லை இதுல ஏதாவது உள்குத்து இருக்கா?’ என்று சிந்தித்தான் அறிவழகன். 

மதியம் பன்னிரண்டைத் தாண்டியதும் சித்தப்பா, “அறிவு! நீ போய் சாப்பிட்டுட்டு எனக்குத் தூக்குவாளியில வாங்கிட்டு வா” என்றார். 

இவன் தூக்குவாளியைத் தூக்கிக்கொண்டு தெருவில் நடந்தான். வெய்யில் கூடிக்கொண்டே இருந்தது. சாப்பிட்டு முடித்து, தூக்குவாளியில் சோற்றைக் கொண்டுவந்து சித்தப்பாவிடம் கொடுத்தான். அவர் சாப்பிட்டுவிட்டு,  வழக்கம்போலத் தூங்கத் தொடங்கினார்.

  ஒருமணி நேரத்திற்குப் பின்னர் சித்தப்பா கண்விழித்து, எழுந்தமர்ந்தார். சித்தப்பா முகத்தைக் கழுவிவிட்டு வந்தார். இவன் பேப்பரை மடித்துக் கொண்டிருந்தான்.

“அறிவு! நீ மேற்படிப்பு ஏதும் படிக்குறதா இருந்தா இங்கையே படியேன்”.

அவன் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தான். 

“இந்த ஊர்ல இல்லாத காலேஜா? தாம்பரம் கிறிஸ்டியன் காலேஜ் இருக்கு. நம்ம வீட்டுக்குப் பக்கம்தான்”. 

“ரிசல்ட்டு வந்துடட்டும் சித்தப்பா. அப்புறமா முடிவு பண்ணிக்குறேன்”.

“எப்ப ரிசல்ட்டு வரும்?”.

“மே மாசம் மூணாம் வாரம்”.

“அடேங்கப்பா, இன்னும் ஒன்ரை மாசம் இருக்கே! சரி, நான் இன்னைக்கு உங்க அப்பாவுக்கு ஒரு லெட்டர் போட்டுடுறேன். நான் சொன்னா அவர் மாட்டேன்னு சொல்லவே மாட்டாரு. நான் அவருக்குச் சகலை. அதுமட்டுமில்லை, அவருதான் தகப்பன் ஸ்தானத்துல இருந்து என்னோட கல்யாணத்தை நடத்தி வச்சாரு. இல்லையினா இந்த அனாதைப் பயலுக்கு யாரு பொண்ணு குடுப்பா?”.

அவன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“உங்கப்பா நல்ல மனுஷன். அவர் நல்லா இருக்கணும். அவரு பிள்ளைக்கு நான் உதவாமல் யாரு உதவுவா? நீ ரிசல்ட்டு வர்ற வரையும் இங்கேயே இரு. இது இனிமே உன்னோட கடைமாதிரி நினைச்சுக்கோ. நீ பார்த்துக்கோ. நீ நல்ல மார்க்கு வாங்கிட்டேன்னா தாம்பரம் கிறிஸ்டியன் காலேஜ்ல உன்னைச் சேர்த்துவிடுறேன்”.

அவன் இவரை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். 

“என்ன அப்படிப் பார்க்குற? இவனால எப்படி காலேஜ்ல சேர்க்க முடியும்ணா? இதோ இன்னைக்குக் கிடைச்சதே ரூபாய். அந்த ஜெனரேட்டர் வித்த காசு. அதை அப்படியே வச்சிருக்கேன். அது உன்னாட காலேஜ்க்கு ஃபீஸ் கட்டத்தான். சரியா?”.

இவனுக்கு அவரிடம் என்ன பதில் சொல்வதென்றே புரியவில்லை. ‘ஒரு வாரம் இங்க தங்கவே நமக்கு நாக்குத் தள்ளுது. இதுல மே மாசம் முடியுற வரையுமா?’ என்று நினைத்தான் அறிவழகன். 

– – –

6

சரக்குகளை இறக்க ஆட்கள் வரத்தொடங்கினர். இவன் துண்டுச் சீட்டை எடுத்து எழுதத் தொடங்கினான். நேற்றை விட இன்று சரக்கு இறக்கம் மிகுதி. 12 சீட்டுக்களை எழுதினான். கடைசியாகத்தான் சண்முகையா வந்தார். 

“முதலாளி! என்னாச்சு?”.

“வாப்பா! என்னைச் சிக்கல்ல மாட்டிவிடச் தெரிஞ்ச”.

“என்ன முதலாளி?”.

“அதுல சீரியல் நம்பர் தெளிவா இருக்காம். உள்ளூர்க்காரன் யார் வாங்கி கடைக்கு வச்சாலும் கண்டுபிடிச்சுடுவாங்களாம். அதை மறைச்சு வைக்க முடியாதுள்ல. புகையைக் கக்கும், சத்தம் போடும். கடைக்கு வாசல்லதான் வைச்சு அதை ஓட்டணும். அதுல சீரியல் நம்பர் தெளிவா இருக்குறதால, சுலபத்துல கண்டுபிடிச்சுடுவாங்களாம். அதனால அதை உள்ளூர்ல விக்கமுடியாதுண்டாங்க”.

“என்ன முதலாளி, இப்படிச் சொல்லீட்டீங்க?”.

“இப்படித்தான் நானுங்கேட்டேன். பொருள் கையில் இருக்கக் கூடாதேன்ற பயத்துல, ‘ஏதாவது பார்த்துச் செய்யுங்கன்னு சொன்னேன். அப்படின்னா இதை வெளிமாநிலத்துலதான் விற்கணும். ரொம்ப செலவாகும். ஏத்துறகூலி, இறக்குற கூலியே ரொம்ப ஆகும். அப்படி இப்படின்னானுங்க”.

“அப்புறம் என்னாச்சு?”.

“1500 தர்ரேன்னாங்க”.

“என்ன முதலாளி? ஆயிரத்தைந்நூறா”.

“நானும் இப்படித்தான் அதிர்ச்சியாயிட்டேன். அப்புறமா பேசிப் பேசி அவுங்களை 2000 வரை ஏறிவர வச்சேன்”.

கடைக்குள் சென்று, 1800 ரூபாயைக் கொண்டுவந்து சண்முகையா கையில் கொடுத்துவிட்டு, “நாம பேசிக்கிட்டபடி 10 சதவிதம், அதான் 200 ரூபாய் கமிஷன் எடுத்துக்கிட்டேன்”.

“சரிங்க, முதலாளி. நான் வர்ரேன்”. 

இன்று மினி லாரி மிகவும் தாமதமாகத்தான் வந்தது. அவர்கள் பொருட்களை எடைபோட்டு எடுத்துக்கொண்டு, கணக்குப் பார்த்தனர். பணத்தைக் கொடுப்பதற்கு முன்பாக இரண்டுமுறை தன் கைப்பேசியில் கணக்குப் பார்த்தார் அவர். 

பின்னர் பணத்தைக் கொடுக்கும்போது சித்தப்பாவிடம், “நான் சரியா இருக்கணும்ல. எல்லாரும் கணக்குப்புள்ளை வச்சிருப்பாங்க. நீதான் கணக்குல ஒரு புலியையே வச்சிருக்கீயே” என்று கூறிக்கொண்டே அவர் அறிவழகனைப் பார்த்தார். அறிவழகன் சிரித்துக்கொண்டான். 

சித்தப்பா அந்தச் சீட்டினை அறிவழகனிடம் கொடுத்தார். அவன் மனக்கணக்குப் போட்டுச் சரிபார்த்தான். சித்தப்பாவிடம் தலையை மட்டும் ‘சரிதான்’ என்பது போல அசைத்தான். வண்டி புறப்பட்டவுடன் இவர்கள் கடையை அடைக்க முயன்றனர். மூட்டைகளைத் தூக்கும்போது அவனின் வலது கையில் இருந்த இரும்புக் காப்பு உறுத்தியது. 

உடனே, அறிவழகன் தனக்குள்ளும் ஒரு விஷ்வா ஒளிந்திருப்பதை உணரத் தொடங்கினான். தன் இரும்புக்காப்பினைக் கழற்றி, கடையில் இருந்த பழைய இரும்புப் பொருட்களின் மீது விட்டெறிந்தான். 

ரோட்டுக்கடையில் ஐந்து புரோட்டாக்களை வாங்கி உண்டான். 

“வேற ஏதாவது வேணுமா, அறிவு?”. 

“ஆம்லேட் வேணும், சித்தப்பா”.

அதையும் வாங்கிக் கொடுத்தார். 

வீட்டுக்குத் திரும்பும் வழியில், “சித்தப்பா! எனக்கு நல்ல சட்டையில்ல, நல்ல பேண்ட் இல்ல. போட்டுக்க நல்ல செருப்பு இல்ல. பவுடர், சீப்பு, எண்ணெய் இல்ல. நாளைக்கு நான் கடைக்குப் போயி அதெல்லாம் வாங்கிக்கலாம்னு இருக்கேன்” என்றான் அறிவழகன். 

“அப்படியா? சரி” என்று கூறிவிட்டு, தன்னுடைய பாக்கெட்டிலிருந்து இரண்டு ஐந்நூறு ரூபாய்த்தாள்களை எடுத்து அவனிடம் நீட்டினார் சித்தப்பா. 

“தி.நகருக்குப் போ. எல்லாமே மலிவா, தரமா கிடைக்கும்”. 

“தேங்க்ஸ் சித்தப்பா”.

 

– – –

7

அறிவழகன் வழக்கம்போலக் கடையைத் திறந்தான். சித்தப்பா தூக்குவாளியில் கொண்டுவந்த காலை உணவினை உண்ட பின்னர், தி.நகருக்குப் புறப்பட்டான். பலபொருட்களை வாங்கிவந்து, வீட்டில் வைத்தான். 

மதிய உணவினை உண்டான். வேறொரு தூக்குவாளியில் சித்தப்பாவுக்கு உணவு கொண்டுவந்தான். அவன் தலைமுடிகள் மிதக்கும் அளவுக்கு எண்ணெய் தேய்த்திருந்தான். செலவுபோக மீதமிருந்த நூறு ரூபாயை அவரிடம் கொடுத்தான்.

சித்தப்பா சாப்பிடத் தொடங்கினார். அறிவழகன் அவரிடம், “சித்தப்பா! ஒங்க கிட்ட ஒன்னு கேட்கலாமா?” என்று கேட்டான்.

“கேளு”.

“நீங்க இனியும் இப்படியே இதேமாதிரித்தான் கடையிலேயே காலத்தை ஓட்டப் போறீங்களா?”.

அவர் நிமிர்ந்து பார்த்தார். மீண்டும் குனிந்து சாப்பிட்டுக் கொண்டே, “வேற என்ன பண்ணச் சொல்ற? பொம்பளைப்பிள்ளை இருக்கு. சோத்துக்குச் சம்பாதிக்கணும். பிள்ளைக்கு ஏதாவது நகை, பணம் சேக்கணும்ல!” என்றார்.

“நீங்க ஏன் அந்த மினி லாரிக்காரர் மாதிரி மொத்த வியாபாரம் பண்ணக்கூடாது?”.

“அதுக்கு லாரி வேணும்?”.

“அவுங்க எங்க சரக்கப் போடுறாங்கணு உங்களுக்குத் தெரியுமா?”.

“தெரியும். நுங்கம்பாக்கத்துல இருக்குற ‘பிரசன்னா அண்டு கோ’ பழையபொருள் வியாபாரக் கடை. நான் ஒருதடவை அங்க போயிருக்கேன். ரொம்ப பெரிய குடௌன். பெரிய கடை. கடைக்குள்ளேயே லாரியை ஏத்தி எடைபோடுவாங்க”. 

“சித்தப்பா! நாம எதுக்குச் சொந்த லாரி வாங்கணும்? வாடகைக்கு எடுத்துக்கிட்டாப் போச்சு”.

“அது மட்டுமில்லை, அவரு ஒரு நாளைக்கு என்னை மாதிரி பத்துக் கடைகள்ல இருந்து சரக்கு ஏத்திக்கிறார். ஒரு நாளைக்கு அஞ்சு முழு லோடுக்குக் குறையாம. எனக்கு, என்ன மாதிரி இருக்குற ஆளுகள மூணுபேருக்கு மேலத் தெரியாதே. அதுக்கெல்லாம் ஆள்பழக்கம் வேணும்”.

“நாம ஏன் உங்கள மாதிரி ஆட்களைத் தேடிப் போகணும்?”.

“பின்ன யாருக்கிட்ட போயி பழசுகளை அள்றது?”.

“பெரிய பெரிய கம்பெனிகள்ல பழசுகளை என்னப் பண்றதுன்னு தெரியாம சும்மா போட்டு வச்சிருப்பாங்க. சில கம்பெனிகள்ல பழசுகளையும் புதுசுகளையும் ஒன்னுமண்ணா கலந்து போட்டுருப்பாங்க. ஏன்னா, அவங்க கிட்ட வேலை செய்யுறவுங்கள்லாம் டிப் டாப்பா இருப்பாங்க. அதுமட்டுமில்ல, பழசுகளை ஒதுக்க நேரமும் அவுங்ககிட்ட இருக்காது”.

“இப்ப என்ன சொல்ல வர்ற?”.

“நாம ஒவ்வொரு கம்பெனியாப் போயி, முதலாளிககிட்டப் பேசி, பழசுகளை அள்ளுவோம்”.

“இதெல்லாம் நடக்குற காரியமா?”.

“இதுக்கு முன்னாடி நீங்க இப்படிப் போயி யாரிட்டையாவது கேட்டுறீங்கீங்களா?”.

“இல்லை”.

“அப்புறம் எப்படி, நடக்குற காரியமாணு கேட்குறீங்க?”.

அவர் அமைதியாகச் சாப்பிட்டுக்கொண்டே இருந்தார்.

“நமக்கு இங்க மதியானத்துக்கு மேலதானே வேலையிருக்கு? காலையில ஒரு ரவுண்டு போயி கேட்போமே”. 

அவர் ஏதும் பேசவில்லை. சாப்பிட்டுக்கொண்டே இருந்தார். அப்போது பக்கத்துக் கடை தேங்காய்க்கடைக்காரர் வந்தார். 

“அண்ணே! வணக்கம்” என்றார் தேங்காய்க்கடைக்காரர். 

“வாங்க!” என்றார் சித்தப்பா சாப்பிட்டுக்கொண்டே.

“நாங்க நாளைக்குக் கடைய காலி பண்றோம்”.

“என்ன திடீருன்னு?”.

“மகனுக்கு முடியலை. நான் அவனோட பிஸினசைப் பார்க்கணும். அதான் திடீருண்ணு காலிபண்ண வேண்டியதாச்சு. உங்க கிட்ட சொல்லிடலாம்னு நினைச்சேன்”.

“சரிங்க. மகனைப் பார்த்துக்குங்க”.

அவர் புறப்பட்டதும், “சித்தப்பா! ஒரு நல்ல யோசனை வந்திருக்கு எனக்கு” என்றான் அறிவழகன்.

“என்ன?”.

“நாம ஏன் இந்தப் பக்கத்துக் கடையையும் வாடகைக்கு எடுக்கக் கூடாது?”.

“எதுக்கு?”.

“அந்தக் கடையையும் பிடிச்சு வச்சுட்டோம்ணா, நாம சரக்குகளை அதுலையும் ஏத்திக்கலாம். ஐஞ்சு நாள்ல நம்ம கிட்டையும் ஒரு முழு லோடு சரக்கு  சேர்ந்துடும். அப்புறம் நாமளே வாடகைக்கு லாரி பிடிச்சு, சரக்க மொத்த விலைக்கடைக்குப் போடலாம்” என்றான் அறிவழகன்.

சித்தப்பா சாப்பிட்டு முடித்து எழுந்தார். கைகழுவச் செல்லும் முன் அவனைப் பார்த்து, “இது சரிவருமா, அறிவு?” என்று கேட்டார். 

“முயற்சி பண்ணுவோம் சித்தப்பா” என்றான் அறிவழகன் நம்பிக்கையோடு.

சித்தப்பா தூக்குவாளியை வெய்யிலில் வைத்துவிட்டு, “அந்த மினி லாரிக்காரர் கிட்ட என்ன சொல்ல?” என்று கேட்டார். 

“இனிமே உங்க கிட்ட நாங்க சரக்குப்போட விரும்பலையின்னு சொல்லுங்க”.

“இப்படி முறிச்சுப் பேசிட்டா நல்லா இருக்குமா? நாளப்பின்ன அவங்க நமக்கு இடைஞ்சல் பண்ண நினைச்சிட்டா, என்ன பண்றது?”.

“அவுங்களால நமக்கு என்ன இடைஞ்சல் கொடுக்க முடியும்?”.

“அவுங்களால எதுவும் செய்ய முடியும் அறிவு. நாளைக்கே விடியக்காலையில் நம்ம கடை முன்னாடி ஒரு திருட்டுப் பொருளை இறக்கிவைச்சுட்டு, நம்ம மேல போலீஸ்ல கேஸ் குடுப்பாங்க”.

“அதுக்காக அவுங்களுக்குப் பயந்துக்கிட்டு நாம வளராம இருக்க முடியுமா?”.

“வளரனும் அறிவு. ஆனால், யாரையும் பகைச்சுக்காம வளரனும்”.

“நாம கடையைப் பிடிக்குறது அவங்களுக்குத் தெரியக் கூடாது. நாம அவங்க கிட்டையும் சரக்கைக் கொடுக்கனும். ஆனால், வாரம் வாரம் மட்டும் கொடுக்கனும். நாம சரக்கைப் பதுக்கனும். அவுங்க கேட்டா, சரக்கே சேரலையினு பொய் சொல்லனும். அப்புறம் அப்படியே படிப்படியா அவங்க கிட்ட சரக்குக் கொடுக்குறதை நிறுத்திக்கனும்”.

“சரிங்க சித்தப்பா. நீங்க உடனே இந்தக் கடையோட ஓனர்கிட்ட பேசி கடையை வாடகைக்கு எடுங்க”. 

அவர் தையற்கடைக்குச் சென்று ஒரு ரூபாய் தொலைபேசியில் கடையின் சொந்தக்காரரிடம் பேசினார். அவர் கேட்ட வைப்புத்தொகையும் வாடகையும் இப்போது இவர் தன் கடைக்குக் கொடுப்பதைவிடச் சற்றுக் கூடுதலாகத்தான். இருந்தாலும் ஒப்புக்கொண்டார் சித்தப்பா. 

“நாளைக்கழிச்சு பணத்தைக் கொடுத்துவிட்டு, சாவியை வாங்கிக்கோங்க”.

“சரி”.

கடைக்கு வந்தவுடன், “அறிவு! துணிஞ்சு கடையைப் பிடிச்சாச்சு. அடுத்து?”. 

“ராத்திரி பகலா உழைப்போம் சித்தப்பா. விலை அதிகமாகக் கிடைக்கக்கூடிய பொருட்களை மட்டும் அந்தக் கடையில பதுக்குவோம்”.

“சரி”.

அவன் செய்தித்தாள்களை மடிக்கத் தொடங்கினான். சித்தப்பா இன்று மதியம் தூங்கவில்லை. அவரும் அவனுடன் சேர்ந்து செய்தித்தாள்களை மடிக்கத் தொடங்கினார்.

“சித்தப்பா!”.

“என்ன?”.

“நாளைக்கு நாம சில கம்பெனிகளுக்குப் போய் பழசு எடுக்கப் பார்ப்போமா?”.

“எனக்கென்னவோ நம்பிக்கையில்ல. சரி, போய்ப் பார்ப்போம்.”

“காலையில பத்து மணியில இருந்து பன்னிரண்டு மணிக்குள்ள எத்தனை கம்பெனிக்குப் போக முடியுமோ போய் பார்ப்போம் சித்தப்பா. ஒரு கம்பெனியில நமக்குப் பழசு கிடைச்சாலும், நிச்சயமா நமக்கு அரை லோடு அளவுக்குத் தேறும்”. 

“சரி, போவோம்”. 

இன்றும் அவனுக்குப் புரோட்டாவும் ஆம்லெட்டும் சாப்பிடக் கிடைத்தன. இரவில் பாயை விரித்துப் படுத்துத் தூங்கத் தொடங்கினான் அறிவழகன். 

– – –

8

அறிவழகன் தான் நேற்று வாங்கிவந்த பொருட்களால் தன்னை அலங்கரித்துக் கொண்டு, காலை எட்டு மணிக்கே தயாராகிவிட்டான். அவன் ஆளே மாறியிருந்தான். தலைமுடி கறுத்திருந்தது. சித்தப்பாவையும் நல்ல பேண்ட், சட்டையை அணியுமாறு கூறினான். எட்டரை மணிக்கே இருவரும் உண்டுவிட்டுப் புறப்பட்டனர். கடைச்சாவியை எடுக்கவில்லை. கூலிங் கிளாஸ், தொப்பி, உடலை இறுக்கிய சட்டை, காலில் தோல் செருப்பு என அறிவழகன் உண்மையிலேயே அழகனாக மாறியிருந்தான்.

இருவரும் நேராகத் தாம்பரத்திற்குப் புறநகர் பகுதியில் இருக்கும் சில பெரிய நிறுவனங்களுக்குச் சென்றனர். அங்கெல்லாம் அறிவழகன்தான் பேசினான். காரணம், ‘பேசவேண்டிய சூழல் ஏற்பட்டால் துணிந்து பேச வேண்டும்’ என்பதை அவனின் தமிழாசிரியர் பத்தாம் வகுப்பில் அவனுக்குக் கற்றுக்கொடுத்துள்ளார். அதைத்தான் இங்குப் பயன்படுத்தினான் அறிவழகன்.

அங்கு இருந்த வாயில் காவலர்களிடம் பின்வருமாறு விசாரித்தான் அறிவழகன்: 

“உங்க கம்பெனியில வேஸ்டு பொருட்கள் இருக்கா?”

“உங்க கம்பெனி முதலாளி எப்ப வருவார்?”

“உங்க கம்பெனிக்கு மேனேஜர் யார்?” 

“உங்க கம்பெனிக்கு வேற எங்கையாவது பிராஞ்சு இருக்கா?”

இவற்றைத் தவிர வேறு எதையும் அவன் கேட்கவில்லை. வேறு எவற்றையும் கேட்க நினைத்த தன் சித்தப்பாவையும் அவன் பேசவிடவில்லை. பத்து மணிக்குள் சில கம்பெனிகளுக்குச் சென்று இதுபோன்ற தகவல்களைத் திரட்டினான். 

சித்தப்பா அவனுடன் துணைக்கு மட்டும் நின்றிருந்தார். ‘ஒரு சின்னப் பயலோடு நாம் சும்மா எடுபிடிபோல இருக்கிறோமே?’ என்று அவர் நினைத்தார். ‘சரி, இவன் என்னதான் பண்றாணு பார்ப்போமே!’ என்று பற்களைக் கடித்துக் கொண்டு நின்றார். 

‘ஏன் இவற்றை மட்டும் இவன் கேட்கிறான்?. எந்த கம்பெனிக்குள்ளும் இவன் ஏன் செல்லவில்லை? கம்பெனியில் வேலை பார்ப்பவர்கள் பத்து மணிக்கு மேல்தானே வருவார்கள்? இவன் ஏன் இவ்வளவு சீக்கிரமே இப்படி நம்மை இழுத்துக் கொண்டு செல்கிறான்?’ என்றெல்லாம் சித்தப்பா சிந்தித்தார்.

பத்து மணிக்குமேல் மீண்டும் முதலில் சென்று விசாரித்த நிறுவனத்திற்கு வந்தனர். இவர்களை அந்தக் காவலர் காலையிலேயே நேரில் பார்த்துவிட்டதால், இவர்களிடம் பெரிதாக எதையும் விசாரிக்காமல் இவர்களை உள்ளே நுழைய விட்டார். 

அப்போது அறிவழகன், “சித்தப்பா! எல்லா இடத்துலையும் நாம  முதல்ல வாட்ச்மேனைத்தான் பழகிவச்சுக்கணும். அவங்க நமக்குச் சாதகமா இல்லையினா எந்த கம்பெனிக்குள்ளும் நுழையவே முடியாது” என்றான்.

அவர்கள் சென்ற நிறுவனத்தின் முதலாளி அறைக்குள் ஓய்வாகத்தான் இருந்தார். முன் அலுவலகத்தில் இருந்தவர் இவர்களை முதலாளியைப் பார்க்க அனுமதித்தார். 

ஆனால், அறிவழகன், “நாங்கள் முதல்ல மேனேஜரைத்தான் பார்க்கணும்” என்று கறாராகக் கூறினான். 

இவன் இப்படிக் கூறியது சித்தப்பாவுக்குப் பிடிக்கவில்லை. முன் அலுவலகத்தில் அதற்கு ஏற்பாடு செய்தார். இவர்கள் சென்று மேலாளரைப் பார்த்தனர். 

அவரிடம் பேசும்போது, அவர் “எல்லாக் குப்பையும் குடெளவுனுக்குப் பக்கத்துல இருக்குற ரூம்லதான் இருக்கு. சரி, நான் ஓனர்கிட்ட கேட்டுப் பார்க்குறேன்” என்றார். 

இவர்களை அங்கேயே உட்கார வைத்துவிட்டுத் தான் மட்டும் முதலாளியைப் பார்க்கச் சென்றார்.

உடனே, சித்தப்பா மெதுவாக, “அறிவு! பார்த்தியா? இந்தாளா முடிவு எடுக்குறான்?. இவன் முதலாளியைக் கேட்டுட்டுத்தான் நமக்குச் சொல்லுவான். இதுக்கு நாம முதல்லயே முதலாளியைப் பார்த்துருக்கலாம்” என்றார்.

“இல்ல சித்தப்பா! நாம எப்பவும் முதல்ல முதலாளியைப் பார்க்கக் கூடாது. அதுவும் அவரோட வேலையாட்கள் இல்லாம தனியாப் போயி அவரைப் பார்க்கவே கூடாது. முதலாளி சரின்னு சொன்னாலும் நாம பழச அள்ளும்போது நம்மகூட அவர் இருக்கப்போறதில்லையே. மேனேஜர் மாதிரி இருக்குறவுங்க தான் நம்ம கூடவே இருப்பாங்க. நாம எடைபோடும்போதும் கொஞ்சம் நல்லா இருக்குற பொருட்களை எடுக்கும்போதும் அவுங்க நமக்குத் தடையா இருக்க மாட்டாங்க”.

“அதெப்படி? இவுங்க முதலாளிக்குச் சாதகமாகத்தானே எல்லாத்தையும் செய்வாங்க” என்றார் சித்தப்பா. 

“அவுங்க தங்களை வேலைக்காரங்களா நினைச்சாத்தான் அப்படிச் செய்வாங்க. அவுங்களை நாம முதலாளியாவே நினைக்க வைக்கணும்”.

“அது எப்படி?”.

“நாம முதல்ல அவங்க வழியாகத்தானே முதலாளியப் பார்த்தோம். அதனால இவங்க நம்மளைப் பற்றி, ‘நாமதானே இவங்களை முதலாளிக்கிட்டக் கூட்டிக்கிட்டுப் போனோம்’, ‘இவங்க நமக்குக் கீழேதான்’, ‘இப்போதைக்கு நாம்தான் இவங்களுக்கு முதலாளி’ இப்படியெல்லாம் நினைச்சுக்கிட்டு கர்வத்துல இருப்பாங்க. இவங்க இப்படி கர்வத்தோட இருக்குறது நமக்கு நல்லதுதான். நமக்கு யார் முதலாளியா இருந்தா என்ன, சித்தப்பா? நமக்குக் காரியம் ஆனா போதும்”. 

அந்த மேலாளர் திரும்பி வந்தார். “ஓனர் ஓகேன்னு சொல்லிட்டார். வாங்க போய்ப் பார்ப்போம்” என்று இவர்களை அழைத்தார். அவருடன் இருவரும் சென்றனர். 

அந்த அறையில் இருந்த அனைத்துப் பொருட்களும் கழிக்கப்பட்ட பொருட்களாகவே இருந்தன. சித்தப்பா ஏறத்தாழ இங்கிருந்த அனைத்துப் பழைய பொருட்களையும் புரட்டிப் பார்த்துவிட்டார். 

அறிவழகனைப் பார்த்துத் தன் உதட்டைப் பிதுக்கிக் காட்டினார் சித்தப்பா. அறிவழகன் ‘அவர் என்ன சொல்ல வருகிறார்’ என்பதைப் புரிந்து கொண்டான். 

அவன் அந்த மேலாளரிடம், “சார் உங்க கம்பெனிக்கு வேற எங்காவது கிளைகள் இருக்கா?” என்று கேட்டான்.

“இருக்கே! நுங்கம்பாக்கத்துல”.

“அதுக்கும் இவர்தான் முதலாளியா?”.

“ஆமாம்”.

“சார்! அங்கையும் பழசு இருக்குதா? ஏன்னா, ஒரேதா இரண்டு இடத்துலையும் பழசை அள்ளிறலாம்”.

“சரி, சார்கிட்ட கேட்குறேன்”.

மூவரும் அங்கிருந்து நடந்து வந்தனர். மேலாளர் இவர்களை முதலாளியிடம் அழைத்துச் சென்றார். முதலாளியிடம் அறிவழகன் பேசினான்: 

“சார் வணக்கம். நாங்க இந்தத் தொழில்ல எட்டு வருஷமா இருக்கோம். உங்க கிட்ட இருக்குற பழசுகளை நாங்க விரும்பி எடுத்துக்குறோம். அதுக்கு நீங்க அனுமதி கொடுத்ததுக்க நன்றி. உங்களோட எல்லாக் கிளைகள்லையும் இருக்குற பழசுகளையும் எங்களுக்கே கொடுத்தா நல்லா இருக்கும்”.

‘பரவாயில்லையே! இவன் அழகாப் பொய் சொல்றான். கோர்வையா பேசுறான்’ என்று அறிவழகனைப் பார்த்து வியந்தார் சித்தப்பா.

முதலாளி, “எனக்கு ஒரு பிராஞ்சுதான் இருக்குது. நுங்கம்பாக்கத்துல. நான் அங்க இருக்குற மேனேஜர் மோகன் கிட்ட போன் பண்ணி கேட்குறேன். அங்கையும் பழசு இருந்தா நீங்களே எடுத்துக்குங்க” என்றார்.

“நன்றி சார். நாங்க அங்கையும் போயி என்ன மாதிரியான பொருட்கள் இருக்குன்னு நாங்க பார்த்துக்கலாமா சார்?”. 

“ஓகே. நீங்க போயி பாருங்க. நான் மோகன்ட சொல்லீர்றேன். உங்க பேரு?”.

“அறிவழகன்”.

அந்த நிறுவனத்திலிருந்து இவர்கள் வெளியே வரும்போது, சித்தப்பா கேட்டார், “சரி! இப்ப நாம நுங்கம்பாக்கம் போவோமா?” என்று.

“இல்லைங்க சித்தப்பா. நாம இப்ப வேற கம்பனிக்குப் போவோம். நுங்கம்பாக்கத்துக்குக் கடைசியில போவோம். ஏன்னா இப்போதைக்கு அந்த கம்பெனியில நம்மலைத் தவிர வேற யாருக்கும் அந்தப் பழசுகளைத் தரமாட்டாங்க”. 

இப்படியே அடுத்தடுத்த நிறுவனங்களுக்கு ஏறி இறங்கினர். அடுத்த மூன்று  நிறுவனங்கள் இவர்களை விரட்டியடித்தன. இவர்கள் நான்காவதாகச் சென்ற நிறுவனத்தில் இவர்கள் எதிர்பார்த்தது கிடைத்தது. 

அந்த நிறுவனத்தைக் கடந்த மாதம்தான் முழுவதும் குளிரூட்டியிருந்தனர். அதற்கு முன்பு அங்குப் பயன்படுத்தப்பட்ட அனைத்து மின்விசிறிகளையும் அவர்கள் கழற்றி, ஓர் அறையில் குவித்திருந்தனர். அவற்றோடு பழைய கணிப்பொறிகளும் இருந்தன. ‘அவை அரை லோடு அளவுக்கு வரும்’ என்று நினைத்தார் சித்தப்பா. நாளைக்கு வந்து இவற்றை ஏற்றிச் செல்வதாகக் கூறிவிட்டு வந்தனர். 

மணி பன்னிரண்டை நெருங்கியதால், அவர்கள் நுங்கம்பாக்கம் சென்றனர். அங்கிருந்த கிளை நிறுவனத்தின் மேலாளர் மோகனைச் சந்தித்தனர். இவர்களின் வருகையைப் பற்றி அவரிடம் அவரின் முதலாளி கூறியிருந்தார். அதனால் அவர் இவர்களை அழைத்துச் சென்று பழசுகளைக் காட்டினர். அவர் காட்டிய இடத்தில் நிறைய அட்டைப் பெட்டிகள் இருந்தன. அவற்றில் ஒவ்வொன்றிலும் விதவிதமான பழசுகள் இருந்தன. ‘எப்படியும் இவை கால் லோடு அளவுக்கு வரும்’ என்று சித்தப்பா நினைத்தார்.

 நாளைக்குக் காலையில் வந்து எடுத்துக்கொள்வதாகக் கூறிவிட்டு வெளியே வந்தனர். 

“சித்தப்பா! அந்த மொத்த வியாபாரக் கடை இங்கதானே இருக்கு? அந்த பிரசன்னா அண்டு கோ?”

“ஆமாம்”

“அங்கப் போவோம்”. 

“நாம இன்னும் சரக்கே எடுக்கலை. இப்ப எதுக்கு அங்க?”.

“சித்தப்பா! உங்களுக்கு அவரை நேரடியா இன்னும் பழக்கம் இல்லையில?”.

“ஆமாம்”.

“அதனாலத்தான் சொல்றேன். நாம இப்ப போயி அவர்கிட்ட நம்ம முகத்தைக் காட்டிப் பழகிக்கிட்டா, நாளைக்குச் சரக்கைக் கொண்டுபோகும் போது வசதியா இருக்கும்”.

இருவரும் பிரசன்னா அண்டு கோவுக்குச் சென்றனர். சில லாரிகளில் இருந்து சரக்குகளை இறக்கிக் கொண்டிருந்தனர். அவற்றைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார் பிரசன்னா. 

வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை, நெற்றியில் குங்குமப்பொட்டு. வயது நாற்பதுக்குள் இருக்கும். வலது கையில் தங்கக் காப்பு. முகத்தில் சிரிப்போடு கூடிய கடுமை தெரிந்தது. அவருக்கு அருகில் இரண்டு பேர் கையில் ஏதோ தாளை வைத்துக்கொண்டு நின்றிருந்தனர். ‘அவர்கள் இவரின் பணியாளர்கள் போல’ என்று அறிவழகன் நினைத்துக் கொண்டான். 

‘எல்லா இடத்திலும் பேசக் கூடாது. சில நேரங்களில் ஒதுங்கி இருப்பதும் கூட நம்மைப் பிற்காலத்தில் உயர்த்திக் கொள்ள உதவும்’ என்பதை அவனின் தமிழாசிரியர் அவனுக்குக் கற்றுக்கொடுத்துள்ளார். அதைத்தான் இங்குப் பயன்படுத்த நினைத்தான் அறிவழகன்.

“சித்தப்பா! நீங்க இவர்கிட்ட என்னை அறிமுகப்படுத்திப் பேசுங்க”.

“டேய்! நானே அவருக்கு இன்னும் அறிமுகமாகலை. இந்த லட்சணத்துல நான் எப்படி உன்னை இவர்கிட்ட அறிமுகப்படுத்திப் பேசுறது?”

“பரவாயில்லை சித்தப்பா, உங்களைப் பத்திக் கொஞ்சமாப் பேசிட்டு, ‘இந்தத் தொழில்ல இவனை இறக்கலாம்னு நினைக்குறேன். மொத்தமா எடுத்துச் செய்யப்போறோம். நீங்கதான் எங்களுக்குக் கைக்கொடுத்து, எங்களைத் தூக்கிவிடனும்’. அப்படி இப்படிப் பேசுங்க சித்தப்பா”.

“என்னமோ போடா” என்று கூறிக்கொண்டே, நம்பிக்கையற்றவராகப் பிரசன்னாவின் முன்சென்று நின்றார் சித்தப்பா. அவருக்குச் சற்று அருகில் தன் இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டு, பணிவாக நின்றான் அறிவழகன்.    

பிரசன்னாவிடம் தயங்கித் தயங்கிப் பேசத் தொடங்கினார் சித்தப்பா. 

“சார்! எம் பேரு காத்தமுத்து. இங்க நாலு வருஷமா தாம்பரத்துல பழைய இரும்பு வியாபாரம் பார்க்குறேன். இவன் என்னோட சகலை மவன். பன்னிரண்டாவது முடிச்சுட்டு என்னோட சேர்ந்து தொழில் செய்ய வந்திருக்கான். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து தொழிலைப் பெரிசாப் பண்ணி மொத்தமா சரக்க உங்ககிட்டயே நேரடியாகவே குடுக்கலாம்னு நினைக்குறோம்”.

“நல்லது. சரி, நீங்க வழக்கமா யாருக்கிட்ட சரக்கு ஏத்திவிடுறீங்க? தாம்பரத்துல செந்தில், காதர் ரெண்டு பேர்ல யார்க்ட்ட நீங்க சரக்கு கொடுக்குறீங்க?”.

“செந்தில் சார்கிட்டத்தானுங்க”.

“ஏன், அவரு இப்ப சரியா உங்க கிட்ட நடந்துக்கில்லையா?”

‘இதுக்கு என்ன பதில் சொல்லலாம்’ என்று சித்தப்பா சிந்திக்கும் போதே, சடாரென அறிவழகன் பதில் கூறினான், “சார், அவரோட எடை சரியா இல்லை” என்று.

“சரி, இனிமே காதர்கிட்ட கொடுங்க”.

‘இனி, இதற்கு என்ன பதில் சொல்லலாம்’ என்று அறிவழகன் சிந்திக்கும்போதே, சித்தப்பா தயங்கித் தயங்கிப் பதில் கூறினார்: 

“சார், அவுங்க ரெண்டு பேருமே இந்த ஊர்க்காரங்க. நாங்க ரெண்டுபேரும் மதுரைக்குப் பக்கத்துல. நீங்க தெற்கத்திக்காரருனு கேள்விப்பட்டேன்…” என்று அவர் கூறிவிட்டு அடுத்துப் பேசத் தயங்கினார்.

உடனே பிரசன்னா, “என்ன ஊர்ப்பற்றா?” என்று கேட்டார்.

அதற்கு அறிவழகன் “ஆமாங்க சார்” என்றான்.

“சரி, சரக்கைக் கொடுங்க” என்றார் பிரசன்னா. இருவரும் அவரை வணங்கிவிட்டு, வெளியே வந்தனர்.

“அறிவு! அடுத்து ஒரு பெரிய சிக்கல் இருக்கு?”.

“என்ன சித்தப்பா?”.

“பணத்தேவை”.

அறிவழகன் சிந்தித்தான். சித்தப்பாவே தொடர்ந்து பேசினார்: 

“அறிவு! கம்பெனிகள்ல பழச எடுத்தா உடனே பணம் கொடுக்கணும். இல்லையினா சரக்கைக் கொண்டு போக விடமாட்டாங்க. வாடகை லாரிக்கு அட்வான்ஸ் கொடுக்கணும். வாடகைக்கு எடுக்கப் போற புதுக்கடைக்கு அட்வான்ஸ் கொடுக்கணும்”.  

“ஏற்பாடு பண்ணீறலாம் சித்தப்பா”.

“எப்படி?”.

“நகையை அடமானம் வச்சு”.

“யாரோட நகையை?” 

“சித்தி நகையை?”.

“இரண்டு பேரையும் அவ செருப்பால அடிப்பா”. 

“தொழிலுக்கு இது முதல்போடுற மாதிரித்தானே சித்தப்பா!. இதுக்குக் கூடக் குடுக்க மாட்டாங்களா?”.

“குடுத்தா ஒருதடவை. எனக்குச் சரக்கெடுக்கப் பணம் தேவைப்பட்டது. அப்ப அவளோட கொலுசைக் கேட்டேன். முடியாதுன்டா. கெஞ்சிக்கேட்டு வாங்கினேன். அது அவளுக்குக் கல்யாணத்துக்காக அவளோட அப்பா வாங்கித் தந்தது. மனசே இல்லாம கழற்றிக்கொடுத்தா. அடகு வச்சேன். அந்தப் பணத்துல நான் வாங்குன சரக்கு இரும்பா இல்லாம வெறும் தகரமாப் போயிடுச்சு. முழு நஷ்டம். ஆனால், அந்தக் கொலுசை என்னால மீட்க முடியலை. அது கடன்ல மூழ்கிடுச்சு. ஒரு வருஷமா என்னைத் திட்டித் தீர்த்துட்டா”.

“சரிங்க சித்தப்பா. இந்த முறை நீங்க கேட்க வேண்டாம். நான் கேட்டுப் பார்க்குறேன்”.

“கேளு. ஆனா, நான் இல்லாத போது கேளு. அவ அடிச்சானா அதை நீயே வாங்கிக்கோ”.

“சரிங்க சித்தப்பா”.

“அறிவு! லாரியைப் பிடிக்கனுமே!”.

“வாங்க விசாரிப்போம்”.

தாம்பரத்துக்கு வந்தனர். ஏறத்தாழ மூன்றுக்கும் மேற்பட்ட லாரி வாடகைக் கடைகளில் விசாரித்தனர். ‘அவர்கள் கேட்ட தொகைக்கு லாரியை வாடகைக்கு எடுத்து, சரக்கைக் கொண்டுசென்று நுங்கம்பாக்கத்தில் சேர்த்தால், ‘லாபம்’ என ஒரு பைசாவும் மிஞ்சாது’ என்பது இருவருக்குமே தெளிவாகத் தெரிந்துவிட்டது. 

‘லாரியில்லாமல் அல்லது சிறிய லாரியாவது இல்லாமல் சரக்கை எடுக்கவே முடியாது’ என்ற நிலையில் அவர்கள் சிக்கிக்கொண்டனர். இருவரும் சிந்தித்தனர். மணி மதியம் ஒன்றைத் தாண்டிவிட்டது. 

“அறிவு! வா. வீட்டுக்குப் போயி சாப்பிட்டுக்கிட்டே யோசிப்போம்”.

வீட்டுக்குச் சென்றனர். சித்தி இருவருக்கும் சாப்பாடு பரிமாறினார். “ஏங்க, கடைச் சாவியை எடுக்காம போயிட்டீங்க? கடைக்குப் போகலையா?” என்று தன் கணவரிடம் கேட்டார் சித்தி.

அவர் சாப்பிட்டுக்கொண்டே ஏதோ பொய்கூற வாயைத் திறந்தார், உடனே அறிவழகன், “நல்ல விஷயம் சித்தி. நீங்க கேள்விப்பட்டீங்கன்னா ரொம்ப சந்தோஷப் படுவீங்க” என்றான்.

சித்தப்பா அவனையே பார்த்தார். ‘எதைச் சொல்லப் போறான்? எப்படிச் சொல்லப் போறான்?’ என்ற திகைப்பில் இருந்தார் அவர். 

“சொல்லு தம்பி!”. 

“சித்தி! நான் உங்க பேர்ல ஒரு மொத்த வியாபாரக் கடையைத் தொடங்கலாம்னு இருக்கேன் சித்தி”.

“எம் பேர்லையா?”.

“ஆமாம் சித்தி, ‘கமலாஸ்ரீ பழைய பொருள் மொத்த வியாபாரம்’. பேரு எப்படி இருக்குச் சித்தி?”. 

“அருமைடா”.

‘அடுத்து இவன் அவளோட நகையைக் கேப்பான். அதுக்குள்ள நாம சாப்பிட்டுவிட்டு எடத்தைக் காலி செய்யணும்’ என்று நினைத்தார் சித்தப்பா.

அறிவழகன் சித்தியின் நகையைக் கேட்கவில்லை. ஆனால், சித்தியின் கொலுசைப் பற்றிக் கேட்டான். 

“சித்தி! நீங்க ஏன் கொலுசு போடுறதே இல்லை?”.

சித்தியின் முகத்தில் சினம் பொங்கியது. அதை அடக்கிக்கொண்டு,  “போட்டிருந்தேன்டா தம்பி. ஒரு கொரங்கு அதைத் தூக்கிட்டுப் போயிடுச்சு” என்றார் சித்தி, தன் கணவரைப் பார்த்துக்கொண்டே. 

சித்தப்பா குனிந்த தலையை நிமிர்த்தாமல் சாப்பிட்டுக்கொண்டே இருந்தார். சித்தி தொடர்ந்து பேசினார்:

“தம்பி! அது எங்க அப்பா என்னோட கல்யாணத்துக்காக வாங்கித் தந்த புதுக் கொலுசு. எங்க அக்காவுக்கு அவளோட கல்யாணத்தப்போ என்னோட அப்பா ஒத்தச்சலங்கை வச்ச கொலுசை வாங்கிக் கொடுத்தார். நான் என்னோட கல்யாணத்துக்கு மூணு சலங்கை வச்ச கொலுசுதான் வேணும்னு அடம்பிடிச்சு வாங்கினேன். நான் அங்க நடந்து வந்தா சத்தம் இங்கே கேட்கும்” என்று தன் கைகளால் தூரத்தைக் காற்றில் அளந்து காட்டினார் சித்தி.

தொடர்ந்து சித்தியால் பேச முடியவில்லை. சித்திக்கு அழுகை முட்டியது. சித்தியின் கண்களில் கண்ணீர்த்துளிகள் திரண்டு நின்றன. 

“சித்தி! கவலையே படாதீங்க. என்னோட கடையில் கிடைக்குற முதல் லாபத்துல உங்களுக்கு நான் கொலுசு வாங்கித் தாரேன்”.

சித்தி தன் கண்களைத் துடைத்துக் கொண்டார். 

“சித்தி! நான் சும்மா சொல்லலை. சத்தியமாத்தான் சொல்றேன். இந்தச் சோத்து மேல ஆணை”.

சித்தி அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். 

“சித்தி! மூணு சலங்கை என்ன மூணு சலங்கை, நான் உங்களுக்குப் பதினொரு சலங்கை வச்ச கொலுசு வாங்கித் தாரேன். நீங்க பால் டிப்போவிலேர்ந்து நடந்து வந்தா, வீட்டுல இருக்குற சித்தப்பாவுக்குச் சத்தம் கேட்கும்”.

சித்தப்பா நிமிர்ந்து அவனைப் பார்த்தார். மீண்டும் தலையைக் குனிந்து கொண்டார்.

 உடனே, அறிவழகன், “சித்தப்பா! பதினொரு சலங்கை வச்ச கொலுசு எவ்வளவு வரும்?” என்று கேட்டான்.

சித்தப்பா தலையைக் குனிந்து சாப்பிட்டுக் கொண்டே “ஆயிரம் ரூபாய் ஆகும்” என்றார் மெதுவாக.

“என்னோட சித்திக்காக நான் ஆயிரம் ரூபாயைக் கூடச் செலவு செய்ய மாட்டேனா?” என்று சித்தியைப் பார்த்துக் கேட்டான் அறிவழகன். சித்தி சிரித்தார். 

“சித்தி! நான் உங்களைக் கடைக்குக் கூட்டிட்டுப் போயி வாங்கித் தாரேன்”.

“நெசமாவா?”.

“ஆமாம் சித்தி”.

‘அடுத்து இவன் நகையைக் கேட்கப் போறான். அதுக்குள்ள நாம எழுந்திடனும்’ என்று நினைத்துக்கொண்டு, வேகமாக உணவை அள்ளி வாயில் வைத்தார் சித்தப்பா. அறிவழகன் சித்தியின் நகையைப் பற்றிப் பேசவேயில்லை.

இருவரும் சாப்பிட்டு முடித்ததும் சித்தி சாப்பிடத் தொடங்கினார். கடைச்சாவியை எடுத்துக்கொண்டு புறப்படும்போது, தொட்டிலில் இருக்கும் கயல்விழியைப் பார்த்தான் அறிவழகன். 

“சித்தி! என்னோட ரெண்டாவது லாபத்துல கயல்விழிக்கு வெள்ளியில இடுப்புக்கொடி வாங்கித் தாரேன். சித்தப்பா! பாப்பாவுக்கு இடுப்புக்கொடி வாங்கணும்னா எவ்வளவு பணம் தேவை?”. 

அவர் பதிலேதும் கூறாமல் தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினார். கடையைத் திறந்தனர். ஒருவருக்கொருவர் பேசாமல் அமைதியாக இருந்தனர். இருவருக்குள்ளும் ‘லாரிக்கு என்ன செய்வது?’ என்ற சிந்தனைதான் ஓடிக் கொண்டிருந்தது. ‘லாரி கிடைத்தால்தான் அடுத்து பணத்தைப் பற்றிச் சிந்திக்க முடியும்’ என்று இருவருமே நினைத்தனர். 

“சித்தப்பா! தாம்பரம் பாலத்துக்கு அடியில ஒரு பழைய லாரி இருக்கே, அது யாரோடது?”. 

“தெரியலை”.

“சித்தப்பா! அந்த லாரியை வாடகைக்குக் கேளுங்களேன். நிச்சயமா வாடகை மலிவாத்தான் இருக்கும்”.

“சரி, நான் போயி விசாரிக்குறேன்”.

சித்தப்பா கடையைவிட்டு இறங்கிச் சென்றார். அறிவழகன் செய்தித்தாளை எடுத்து மடிக்கத் தொடங்கினான். சித்தப்பா திரும்பி வந்தார். அறிவழகன் அவரின் முகத்தைப் பார்த்தான். அவரின் முகத்தில் சோக ரேகைதான் படர்ந்திருந்தது.   

சித்தப்பா தன் தலையைச் சொறிந்துகொண்டே கூறினார், “அறிவு! போய் விசாரிச்சேன். அந்த லாரி ரொம்ப நாளாவே ரிப்பேராக் கிடக்காம். அது ரொம்பப் பழைய வண்டியாம். ஆனால், ஓடுமாம். அது எப்ப நிற்குமுன்னு தெரியாதாம். அந்த லாரிக்கு ஆர்சி, இன்சூரென்ஸ் ஏதும் இல்லையாம். நாமளே டீசல் போட்டு, ஒரு டிரைவரை வச்சுக்கிட்டு ஓட்டிக்காளாமாம். ஒரு நாளைக்கு ஐந்நூறு ரூபாய் வாடகையாம். பிடிமானத்துக்கு ரேஷன் கார்டையும் ஆயிரம் ரூபாய் அட்வான்சும் கொடுத்துட்டு வண்டி எடுத்துட்டுப் போகச் சொன்னார்” என்றார்.

“சித்தப்பா! நாம போயிட்டு வர்றதுக்கு ஒரு பத்து லிட்டர் டீசல் செலவாகுமா?”. 

“ஆகும்”. 

“சித்தப்பா! நமக்கு இந்த வண்டிய விட்டா வேற வண்டி ஏதும் கிடைக்காது. நாம ஒரு தடவை இந்த வண்டியை எடுத்துக்கிட்டுப் போய்தான் பார்ப்போமே!”.

“சரி, நான் டிரைவருக்கு ஆள்பிடிக்குறேன்”.

“சரிங்க சித்தப்பா. எது எப்படியோ, நாம நாளைக்குக் காலையில ஒன்பது மணிக்கு அந்த லாரியை ஓட்ட ஆரம்பிச்சுடணும்”. 

“அதெல்லாம் சரிதான். பணம்?”.

“நான் இன்னைக்குச் சீக்கிரமாவே வீட்டுக்குப் போயி சித்திகிட்ட பேசி நகையை வாங்கப் பார்க்குறேன்”. 

சரக்குகளைக் கொடுப்பதற்காக ஆட்கள் வரத் தொடங்கினர். இன்று மாலை வரை வந்த அனைத்துச் சரக்குகளையும் மூட்டையில் கட்டி கடைக்குள் ஏற்றினான் அறிவழகன். செய்தித்தாள்களை மட்டும் தனியாக வைத்தான். ஒழுங்குபட அடுக்கினால் மட்டுமே செய்தித்தாள்களை வெளியேற்ற முடியும் என்பதால், அவற்றை ஒரு மூலையில் குவித்து வைத்தான். 

மணி இரவு ஏழை நெருங்கத் தொடங்கியது.

“சித்தப்பா! நாம கடையைப் பூட்டிட்டுப் போயிடுவோம். ஒருவேளை மினி லாரி இன்னைக்கு வரலாம்”.

சித்தப்பாவுக்கும் இது சரியாகத்தான் பட்டது. கடையைப் பூட்டினர். சித்தப்பா டிரைவரைத் தேடிச் சென்றார். இவன் சித்தியைப் பார்க்கச் சென்றான்.

சித்தப்பா ஓட்டுநரைத் தேடிச் செல்லும் வழியில்தான் அவருக்கு ஒன்று நினைவுக்கு வந்தது. அவர் அறிவழகனின் அப்பாவுக்குக் கடிதம் எழுத மறந்துவிட்டார். ஒரு பொதுத்தொலைப் பேசிக்குச் சென்று எஸ்.டி.டி. அழைப்பில் புழுதிப்பட்டி மணியக்காரருக்கு அழைப்பு விடுத்தார். 

வழக்கமாக இவர் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அவரை அழைத்துப் பேசுவது உண்டு. அறிவழகன் இங்கேயே மே மாதத்தின் இறுதிவரையில் தங்க உள்ள செய்தியை அவரிடம் கூறிவிட்டால் காலையில் அவர் அறிவழகனின் அப்பாவிடம் கூறிவிடுவார். அதற்காகத்தான் சித்தப்பா மணியக்காரருக்கு அழைப்பு விடுத்தார். தகவலைக் கூறினார். அதன் பின்னர் ஓட்டுநரைத் தேடிச் சென்றார்.    

– – –

9

சித்தி கயல்விழியை வைத்துக்கொண்டு கொஞ்சிக் கொண்டிருந்தார். இவன் சோகமான முகத்தை வைத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான். சித்தியின் எதிரே உட்கார்ந்து கொண்டான். சித்தி அவனின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். அவனிடம் பரிவான குரலில் பேசினார். 

“என்ன தம்பி?”.

“ஒன்னுமில்ல சித்தி” என்று கூறிவிட்டுத் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டான்.

“என்ன தம்பி! காலையில அவ்வளவு சந்தோஷமா போனே?”. 

“சித்தி! சொந்தமா தொழில் ஆரம்பிக்கலாம்ணு நினைச்சேன். ஆட்களையும் பிடிச்சுட்டேன். கடையையும் பிடிச்சுட்டேன். நாளைக்குப் போயி சரக்க ஏத்தணும். ஆனால், அதுக்கு முன் பணம் இல்லை. சரக்கை இறக்கியாச்சுன்னா உடனே காசு கிடைச்சுடும். கைமாத்தா இருபதாயிரம் வேணும். சித்தப்பாக்கிட்ட கேட்டேன். ‘முடியவே முடியாது. தரவே மாட்டேன்’னுட்டார்”.

“அப்படியா சொன்னார்?”.

“ஆமாம் சித்தி. எனக்கு இந்த ஊர்ல யாரைத் தெரியும், அவரைவிட்டா?”.

“ஏன் நான் இருக்கேன்ல?. நான் என்னோட நகையைத் தர்ரேன். அதை வச்சு கைமாத்தா பணத்தை யார் கிட்டையாவது வாங்கு. சரக்கை இறக்கி உனக்குப் பணம் வந்ததும் என் நகைய மீட்டுக்குடு”.

“சித்தி! உண்மையாவா சொல்றீங்க?”.

“இப்பவே தர்ரேன்” என்று கூறிவிட்டு எழுந்தார் சித்தி.

சித்தி தன்னுடைய நகையை பரணிலிருந்து எடுத்து இவனிடம் கொடுக்கும்போது, சித்தப்பா வீட்டுக்குள் நுழைந்தார்.

“ஏங்க, பையன் முதல்முதலா தொழில் ஆரம்பிக்கப் போறான். நாமதானே அவனுக்குக் கைகொடுத்துத் தூக்கிவிடனும். அதை விட்டுட்டு முடியாதுன்னு சொன்னீங்களாமே?”. 

சித்தப்பா அறிவழகனைப் பார்த்தார். தன் மனைவியைப் பார்த்தார். ஏதும் சொல்லாமல் தரையில் அமர்ந்தார். 

“அறிவு! டிரைவருக்கு ஏற்பாடு பண்ணீட்டேன். 300 ரூபாய்க் கேட்டிருக்கார்”.

“சித்தி! நாளைக்குக் காலையில முதல் வியாபாரம். காலையில லாரி வச்சு நம்ம கடையில இருந்துதான் சரக்கெடுக்குறோம். நீங்க தான் சாமிகும்பிட்டு சரக்க தூக்கிக் கொடுக்கனும்”.

“நல்லா செய்றேன் தம்பி. நீ நல்லா வருவ”.

“சித்தப்பா! நகையை சித்தி குடுத்துட்டாங்க. இதை நல்ல இடத்துல கொடுத்து, கைமாத்தா பணம் வாங்கணும். நீங்க எங்கூட வர்றீங்களா?”.

“சரி, வா போவோம்” என்று கூறி எழுந்தார் சித்தப்பா.

இருவரும் தெருவில் இறங்கி, பால் டிப்போவைக் கடந்த பின்னர் சித்தப்பா சிரித்துக்கொண்டே, “எப்படியோ அறிவு, சித்திக்கிட்ட இருந்து நகையை வாங்கிச் சாதிச்சுட்ட” என்று  கூறிப் பாராட்டினார்.

“ஆமாம் சித்தப்பா. சித்தி தருவாங்களோ, மாட்டாங்களோன்னு நினைச்சேன். நல்லவேளை சித்தி கொடுத்துட்டாங்க”.

நகைஅடகுக் கடையில் ஒருநாளைக்கு இருநூறு ரூபாய் வட்டி என்ற பேச்சில், நகையைக் கொடுத்து 20 ஆயிரத்தை வாங்கினர். 

“அறிவு! நாளைக்குக் காலையில பத்து லிட்டர் மண்ணெண்ணெய் கேன்ல டீசல் வாங்கிட்டுப் போகணும்”. 

“சித்தப்பா! நாம முதல்ல நம்ம கடையில இருக்குற சரக்குகளை ஏத்திக்குவோம். கடைத் தராசையும் எடுத்துக்குவோம். நேரா தாம்பரத்துல இருக்குற இரண்டு கம்பெனிகளிலும் சரக்கை அள்ளிக்கிட்டு, நுங்கம்பாக்கம் பிராஞ்சில இருக்குற சரக்கையும் அள்ளிக்கிட்டு பிரசன்னா சார் கடைக்குப் போவோம்”.

“சரிதான். ஆனால், தாம்பரத்துல இருக்குற இன்னொரு கம்பெனியில எடுக்கப்போற சரக்குகள்ல 22 ஃபேன்கள் இருக்கு. அதை அப்படியே பிரசன்னா கடையில கொடுத்தா நமக்கு லாபம் இருக்காது. அதுகளைப் பிரிச்சு காப்பர் காயில்களை எடுத்துத் தனியா எடைக்குப் போட்டாத்தான் லாபம்”.

“அப்படினா, நாம ஃபேனை உடைக்குறதுக்குரிய பொருட்களையும் வண்டியில ஏத்திக்குவோம். தாம்பரத்துல இருந்து நுங்கம்பாக்கம் போறதுக்குள்ள லாரியில வைச்சே ஃபேன்களை ஒடைச்சு, காப்பர் காயில்களைத் தனியாச் சாக்குல அள்ளி தனியா வச்சுடுவோம். மற்றதை மட்டும் பிரசன்னா கடையில குடுப்போம். காப்பர் காயில்களை மட்டும் நம்ம கடைக்குக் கொண்டு வந்துடுவோம். காப்பர் நிறைய சேர்ந்ததுக்குப் பின்னாடி, அதுகளை மொத்தமா பிரசன்னா கடையில் கொடுப்போம்”.

“சரி, அப்படியே செய்யலாம்”. 

வீட்டுக்குச் செல்லும்போது, இருவரும் புரோட்டா சாப்பிட்டனர்.

“சித்தப்பா! சித்திக்கும் புரோட்டா வாங்கிட்டுப் போவமா?”.

“நீயே வாங்கிக்குடு”.

சித்திக்காக மூணு புரோட்டாவும் ஆம்லெட்டும் பார்சல் வாங்கினான் அறிவழகன். சித்தியிடம் அதைக் கொடுத்ததும், சித்தி பூரித்துப்போனார். 

அறிவழகன் பாயை விரித்துப் படுத்தான். அவனுக்குத் தூக்கம் வரவில்லை. ‘நாளைக்கு அந்த லாரி ‘சதி’ செய்துவிட்டால் எல்லாம் வீணாகிவிடுமே!’ என்று நினைத்தான். அவனுக்குத் தூக்கமே வரவில்லை. 

      

– – –

10

அதிகாலையில் மூவரும் எழுந்து குளித்துவிட்டு, கயல்விழியைத் தூக்கிக்கொண்டு அருகில் இருந்த பிள்ளையார் கோவிலுக்குச் சென்றனர். வரும்போது பால் வாங்கிவந்தனர். இன்று சித்தி கேசரி செய்தார். அறிவழகன் பத்து லிட்டர் டீசல் வாங்கிவந்தான். சித்தப்பா டீசலையும் ஆயிரம் ரூபாய் பணத்தையும் ரேஷன் கார்டையும் எடுத்துக்கொண்டு லாரிக்காரரைப் பார்க்கச் சென்றார்.

லாரியின் சாவியை வாங்கிக்கொண்டார். பாலத்தின் அடியில் சென்று லாரியைத் தொட்டுப் பார்த்தார் சித்தப்பா. அப்போது நேற்று இவர் பேசியபடி ஓட்டுநர் வந்து சேர்ந்தார். அவரிடம் டீசலைக் கொடுத்தார். ஏறத்தாழ ஒரு மணிநேரப் போராட்டத்திற்குப் பின்னர் லாரி உயிர்ப்பெற்றது. வண்டியை பெட்ரோல் பங்க்குக்குக் கொண்டு சென்று சக்கரங்களில் காற்றை நிறைத்தனர்.

அறிவழகனும் சித்தியும் கயல்விழியும் கடைக்குச் சென்று கடையைச் சுத்தம்செய்து, கோலமிட்டு, அழகுபடுத்தியிருந்தனர். லாரியைக் கடைக்குக் கொண்டுவந்தார் சித்தப்பா. 

சித்திக்கு முகமெல்லாம் பல்லாகத்தான் இருந்தது. ‘தம்பி! லாரியில சரக்கெடுக்குறான்!’ என்று நினைத்து நினைத்துப் பெருமிதம் கொண்டார். 

“சித்தி! நீங்கதான் சித்தி, முதல் சரக்கை லாரியில ஏத்திவிடனும்”.

சித்தி எல்லாவகையான சரக்கிலும் சிறிது சிறிது எடுத்துச் சிறிய சாக்குப்பையில் இட்டு, அறிவழகனிடம் கொடுத்தார். அதை அவன் சித்தப்பாவிடம் கொடுத்தான். அவர் அதை லாரியில் ஏற்றினார். அடுத்தடுத்த பெரிய மூட்டைகளை அறிவழகனும் சித்தப்பாவும் இணைந்து தூக்கி லாரியில் ஏற்றினர். தராசையும் ஏற்றிக்கொண்டனர். அந்த மின்விசிறிகளை உடைப்பதற்காகச் சுத்தியலையும் பெரிய ஸ்க்ரூடைவர்களையும் எடுத்துக்கொண்டனர்.

ஓட்டுநர், “அண்ணே! அந்த டீசல் கேனைக் கழுவிட்டு அது நிறைய தண்ணீர் பிடிச்சுக்குங்க. வண்டியில ரேடியேட்டர் சரியா வேலை செய்யலை. ஒழுகவும் செய்யுது. அதனால வண்டி சூடாகி எப்பனாலும் நிக்கும். தண்ணிய ஊத்தி ஊத்தித்தான் சரிக்கட்டணும்” என்றார். 

சித்தி குழாயடிக்குச் சென்று அந்த டீசல் கேனில் தண்ணீரைப் பிடித்து வந்தார். அதையும் லாரியில் வைத்துக்கொண்டனர்.  

லாரி புறப்படும் முன்னர், சித்தி அந்த லாரிக்கு ஆலத்தி எடுத்தார். அறிவழகனுக்கும் தன் கணவருக்கும் அந்த லாரிக்கும் பொட்டு வைத்துவிட்டார். பின்னர் கடையைப் பூட்டினர். சித்தப்பாவும் சித்தியும் கயல்விழியும் லாரிக்குள் ஏறிக் கொண்டனர். அறிவழகன் லாரிக்குப் பின்னால் ஏறிக் கொண்டான். லாரி புறப்பட்டது.

வண்டி பால் டிப்போவின் அருகில் செல்லும்போது சித்தியையும் கயல்விழியையும் இறக்கிவிட்டனர். அதன் பின்னர் லாரி அந்த நிறுவனத்தை நோக்கிச் சென்றது. வாயில் காவலரிடம் கூறியதும் அவர் லாரி நுழைவதற்கு அனுமதித்தார். 

பத்து மணிக்கு மேனேஜர் வந்தார். அவர்தான் முன்னின்று அனைத்துப் பழைய பொருட்களையும் ஏற்றும் வரை கூடவே இருந்தார். முதலாளி நிறுவனத்திற்கு வந்திருந்தார். ஆனால், அவர் சரக்கு ஏற்றும் இடத்துக்கு வரவில்லை. 

அறிவழகன் பொருட்களை எடுத்து எடையேற்றினான். சித்தப்பா அவற்றை எடை பார்த்து, லாரியில் ஏற்றினார். கணக்குப் பார்த்து பணத்தைக் கொடுத்த பின்னர் அவர்களிடமிருந்து விடைபெற்றனர். 

அடுத்த நிறுவனத்திற்குச் சென்றனர். அங்கும் இதேபோல்தான். மின்விசிறிகளை மட்டும் இறுதியாக ஏற்றிக்கொண்டனர். அங்கிருந்து வண்டி புறப்படும் முன்னர் சித்தப்பாவும் அறிவழகனும் லாரியின் பின்பகுதியில் ஏறிக்கொண்டனர். 

“அறிவு! நுங்கம்பாக்கம் போறதுக்குள்ள காப்பர் காயில்களைக் கழற்றிடணும்”.

“சரிங்க சித்தப்பா”.

சித்தப்பா சொல்லித்தர, அதன்படியே மின்விசிறிகளிலிருந்து எளிதாக அவற்றைப் பிரித்தெடுத்தான் அறிவழகன்.

புறப்பட்ட பத்தாவது நிமிடம் வண்டி நின்றுவிட்டது. ஓட்டுநர் லாரியின் முன் பகுதியைத் திறந்துவைத்தார். ரேடியேட்டரில் தண்ணீரை ஊற்றினார். அரைமணிநேரம் லாரி அங்கேயே நின்றது. அதற்குள் அறிவழகனும் சித்தப்பாவும் அந்த மின்விசிறிகளிலிருந்து காப்பர் காயில்களைக் கழற்றிவிட்டனர். காயில்களைத் தனியாக அட்டைப் பெட்டியில் அடைத்து லாரிக்கு முன்பகுதியில் வைத்துக் கொண்டனர். 

மீண்டும் லாரி உயிர்ப்பெற்றது நுங்கம்பாக்கம் சென்றனர். அங்கிருந்த நிறுவனத்தின் மேலாளர் மோகன், இவர்களுக்குப் பலவகையில் உதவிபுரிந்தார். நேற்று இவர்கள் பார்த்துத் திரும்பியிருந்த பொருட்களைவிட இன்று கூடுதலாகப் பொருட்கள் இருந்தன.

மேலாளர் மோகன், “நேத்து நீங்க வந்து பார்த்துட்டுப் போன பின்னாடி, நான் என்னோட ஸ்டாப்ஃஸ்கிட்ட சொன்னேன், ‘உங்க டேபிள், ரேக்குகள், பீரோக்கள்ல இருக்குற தேவையில்லாத எல்லாத்தையும் குடெளன்ல போட்டுடுங்க. ஆஃபீஸச் சுத்தம் செய்ய இதுதான் நல்ல வாய்ப்பு’ அப்படிணு. உடனே எல்லோரும் சுறுசுறுப்பா வேலைபார்த்து, தேவையில்லாதவற்றைக் கொண்டு வந்து போட்டுட்டாங்க. நேத்து எங்க ஆஃபீஸ்ல ‘போகி’ கொண்டாடிட்டோம்” என்றார். 

எல்லாவற்றையும் எடைபோட்டு, கணக்கெழுதிப் பணத்தை ஒப்படைத்தார் சித்தப்பா. லாரியைப் பிரசன்னாவின் கடைக்குக் கொண்டுவந்தனர். அங்கு இவர்களுக்கு முன்பே இரண்டு லாரிகள் நிறைய இரும்புச் சரக்குகள் எடையேற்றுவதற்காகத் தயார்நிலையில் இருந்தன. இவர்கள் வரிசையில் நின்றனர். 

சித்தப்பா, தன்னுடைய கடையில் இருந்த சரக்குகளின் மதிப்பு, இப்போது மூன்று இடங்களில் கொடுத்த பணம் ஆகியவற்றை ஒன்றாக்கிக் கூட்டினார். அவற்றோடு டிரைவர் ஊதியம், டீசல், லாரி வாடகை ஆகியவற்றையும் கூட்டினர். மொத்தத் தொகையை அதை அறிவழகனிடம் காட்டினார்.

“அறிவு! இதுல இருந்து மூவாயிரமாவது நமக்குக் கூடுதலாக் கிடைக்கணும்”.

“சித்தப்பா! கண்டிப்பா கிடைக்கும். அதுமட்டுமில்ல, காப்பர் காயில்கள் நம்மகிட்ட தனியா இருக்கே. அதுவும் நமக்குத் தனியாக லாபம்தானே?!”. 

அவர்கள் அந்த காயில்கள் வைத்த பெட்டியையும் தராசையும்  லாரியிலிருந்து இறக்கித் தனியாக வைத்துக்கொண்டனர்.

இவர்களின் லாரியில் இருந்த இரும்புகளையும் அட்டைகளையும் தனியாக எடைபோட்டனர். பின்னர் கழிவுச் சரக்குகளோடு சேர்த்து லாரியும் எடைபோடப்பட்டது. பின்னர் தகரப்பொருட்களை இறக்கிவிட்டு, லாரியைத் தனியாக எடைபோட்டனர். எல்லாவற்றையும் பிரசன்னாவின் ஆட்கள் தனித்தனியாக எழுதி, பிரசன்னாவிடம் கொடுத்தனர். 

பிரசன்னா அவற்றுக்கு விலையிட்டார். 

அப்போது அறிவழகன், “சார்! உங்களைத் தொந்தரவு பண்றதுக்கு மன்னிக்கணும். இது எனக்கு முதல் வியாபாரம். ஏதாவது பார்த்துச் செய்யுங்கள்” என்றான்.

அவர் சிரித்துக்கொண்டே “சரி” என்றார். 

அவர் விலையைக் குறித்துவிட்டுத் தாளை அறிவழகனிடம் காட்டினார். அதில் சித்தப்பா காட்டிய விலையை விட எட்டாயிரம் ரூபாய் கூடுதலாக இருந்தது. அறிவழகனுக்குத் தலைகால் புரியவில்லை. “ரொம்ப நன்றி சார்” என்றான். பிரசன்னா சிரித்துக்கொண்டார்.

சித்தப்பாவுக்குக் கால்கள் தரையில் பதியவேயில்லை. ஆனாலும், ‘நாலு வருஷமா அந்த மினி லாரிக்காரன் தன்னை எவ்வளவு ஏமாற்றியிருக்கிறான்’ என்று நினைத்து வருந்தினார் சித்தப்பா. 

பணத்தைச் சித்தப்பா வாங்கிக்கொண்டார். அறிவழகன், பிரசன்னாவிடம், “சார், இந்த லாரியை நீங்க எடைக்கு எடுத்துக்குவீங்களா?” என்று கேட்டான்.

உடனே, சித்தப்பா, “டேய், அறிவு! இது அடுத்தவங்க லாரிடா. நீ பாட்டுக்கு எடைக்குப் போட்டுடாதே!” என்று மெதுவாகக் கூறினார்.

“இப்ப இதைச் தெரிஞ்சு வச்சுக்கிட்டா பின்னால யூஸாகும்” என்றான் அறிவழகன். 

பிரசன்னா லாரியை அணுவணுவாகப் பார்வையிட்டார். லாரியின் முன்பக்கத்தைத் திறக்கச் சொல்லி இன்ஜினைப் பார்த்தார். இது மிகப் பழைய லாரி. அதனால இதோட என்ஜின் மிக உறுதியா இருக்கும். பிரசன்னா வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு லாரிக்குக் கீழ் குனிந்து பார்த்தார். அப்படியே பின் சக்கரம் வரை குனிந்து பார்த்துக் கொண்டே வந்தார். 

அறிவழகனிடம் தான் கொடுத்திருந்த அந்தத் துண்டுச் சீட்டை வாங்கி அதில் லாரியைத் தனியாக எடைபோட்ட குறிப்பினைப் பார்த்தார். அதன் எடையைத் தன் கைப்பேசியில் பதிவிட்டுக் கணக்குப் பார்த்து, சிறிய தாளில் தான் இதை வாங்கிக் கொள்ளும் அதிகபட்சத் தொகையைக் குறித்து, அதன் அடியில் தன்னுடைய கையொப்பத்தையும் நாளையும் எழுதினார். அதை அறிவழகனிடம் கொடுத்தார்.

“தேங்க்ஸ் சார்” என்றான் அறிவழகன். அதைச் சித்தப்பாவிடம் கொடுத்தான். சித்தப்பா அதைப் பார்த்தார். அதில் பெரிய விலை குறிக்கப்பட்டிருந்தது. 

மெல்லிய குரலில் அறிவழகன், “சித்தப்பா! இதை பத்திரமா வச்சுக்குங்க. நமக்கு உதவும்” என்றான்.

இருவரும் அந்த காயில் பெட்டியையும் தராசையும் லாரியில் ஏற்றிக்கொண்டு, தாம்பரம் வரை வந்தனர். அந்தப் பாலத்தின் அடியை நெருங்கும்போது டீசல் முற்றிலும் தீர்த்துவிட்டது. வண்டியும் உறுமி உறுமி மெல்ல உருண்டது. லாரி சாலைக்கும் அந்தப் பாலத்தின் அடிக்கும் குறுக்காக நின்றுவிட்டது. 

இருவரும் இறங்கினர். பொதுமக்கள் சிலரின் உதவியுடன் அந்த லாரியைத் தள்ளி உருட்டி, பாலத்தின் அடிக்குக் கொண்டு வந்தனர். ஓட்டுநருக்குப் பணத்தைக் கொடுத்து லாரியின் சாவியை வாங்கிக் கொண்டனர். காயில் பெட்டியையும் தராசயும் இறக்கினர். அறிவழகன் தராசையும் சித்தப்பா காயில் பெட்டியையும் தம் தலையில் சுமந்துகொண்டனர். 

இருவரும் லாரிக்குச் சொந்தக்காரரைப் பார்த்தனர். அவரிடம் லாரியின் சாவியைக் கொடுத்துவிட்டு, ரேஷன் கார்டையும் வாடகைப் பணம்போக மீதிப்  பணம் ஐந்நூறையும் வாங்கிக் கொண்டனர். 

அப்போது அறிவழகன் லாரியின் சொந்தக்காரரிடம், “அண்ணே! எப்படி இந்த லாரியை வச்சு மேய்க்குறீங்க. உங்களுக்கு இதனால நெஞ்சுவலியே வந்துருமே?!” என்று கேட்டான்.

“ஆம்மாம்பா”.

“இதை எடைக்குப் போட்டுட்டு நல்ல புது லாரிய வாங்குங்க”.

“இதையா? எவ்வளவுக்கு போகும்?”.

உடனே, சித்தப்பா, “இதுல இன்ஜின்தான் இரும்பு. மற்றதெல்லாம் துருப்பிடிச்சுப் போச்சு. மரமும் ஒன்னும் உருப்படியா இல்ல. சக்கரங்களும் தேஞ்சுப் போச்சு” என்றார்.

“அதெல்லாம் எனக்கும் தெரியும். எவ்வளவுக்குப் போகும்?”.

உடனே, சித்தப்பா தன் தலையைச் சொறிந்துகொண்டே, “என்ன கிடைக்கும்? ரொம்ப விலைக்கெல்லாம் போகாது. வண்டியை உடைச்சுத்தான் விற்கணும்” என்று கூறிக்கொண்டே, பிரசன்னா இந்த லாரிக்குக் குறிப்பிட்டிருந்த விலையை நினைவுக்குக் கொண்டுவந்து, அதில் மூன்றில் ஒரு பங்கு விலையை மட்டும் அவரிடம் கூறினார்.

“என்னங்க? இவ்வளவு கம்மியாவா போகும்?”.

உடனே, அறிவழகன், “ஆமாங்க. லாரிக்கு இன்சூரன்ஸ், ‘ஆர்சி’ எதும் இல்லையில. வண்டியைத் தள்ளித் தள்ளிதானே ஓட்ட வேண்டியிருக்கு. இது முழுப்பொருள் இல்லையே. உடைச்சுப் பிரிச்சுத்தான் விற்கணும். நாங்க உங்களுக்குக் கொடுக்குற விலையியைவிட, கால்பங்கு விலை இதை உடைக்குறதுக்குக் கொடுக்கணும்” என்றான்.

“சரி, நான் யோசிச்சுச் சொல்றேன்”.

இருவரும் வீட்டுக்குத் திரும்பினர். வரும் வழியில், “சித்தப்பா! எனக்கு ஆயிரம் ரூபாய் வேணும்” என்று கேட்டான் அறிவழகன். 

‘ஏன், எதற்கு?’ எனக் கேட்காமல், உடனே எடுத்துக் கொடுத்தார் சித்தப்பா. நேராக அடகுக் கடைக்குச் சென்றனர். பணத்தைக் கொடுத்து, நகையை மீட்டனர். 

வீட்டுக்கு வந்ததும் சித்தியின் கையில் நகையை ஒப்படைத்தான் அறிவழகன். சித்திக்கு மகிழ்ச்சி.

“சித்தி! இது என்னோட முதல் வருமானத்துல கிடைச்சது. இந்தாங்க ஆயிரம் ரூபாய். நீங்க விருப்பப்பட்ட மாதிரியே கொலுசு வாங்கிக்குங்க” என்றான். மகிழ்ச்சியில் சித்திக்குக் கண்ணீரே வந்துவிட்டது. 

சித்தி சூடாகச் சாதம் தயாரித்திருந்தார். சாப்பிட்டு முடித்ததும். 

“சித்தப்பா! நீங்க சித்தியையும் கயல்வழியையும் கூட்டிக்கிட்டு தி.நகர் போங்க. சித்திக்குப் பிடிச்ச மாதிரி கொலுசு வாங்கிக்கொடுங்க. நான் கடையைத் திறக்குறேன். சரக்கு வந்தா நானே இறக்குறேன்”. 

சித்தப்பா சரக்கு இறக்குவதற்காக இரண்டாயிரம் ரூபாயைச் சில்லறையாகக் கொடுத்தார். 

“சித்தப்பா! இன்னைக்கு அந்தக் கடையின் ஓனர் வருவார். அவருக்கு அட்வான்ஸ் கொடுக்கணும்” என்று நினைவுபடுத்தினான் அறிவழகன்.

“சரி, நான் ஆறுமணிக்குள்ள கடைக்கு வந்துடுவேன். இன்னைக்கே அந்தக் கடையைப் பிடிச்சுடலாம்”. 

இந்த வாரத்தில் இன்றுதான் தன் சித்தப்பாவின் முகத்தில் புதுப் பொலிவினைப் பார்க்கிறான் அறிவழகன்.

– – –

11

இரவு ஏழு மணிக்குள் புதிய கடைக்கு வைப்புத் தொகையைக் கொடுத்துச் சாவியை வாங்கினார் சித்தப்பா. தையற்கடைக்காரரிடம் நயந்து பேசி, ஒரு ரூபாய் தொலைபேசியின் எண்ணினைத் தங்களின் கடைக்கு ‘PP’ எண்ணாக வைத்துக்கொள்ள அனுமதி கேட்டுப் பெற்றார். 

புதிய கடையைத் திறந்து சுத்தம் செய்தான் அறிவழகன். ‘இரண்டு கடைக்கும் சேர்த்துக் கிடுகு போட்டுவிட்டால், வெய்யிலிலிருந்து தப்பித்துவிடலாம்’ என்று நினைத்தான்.

சித்தப்பா, ‘கமலாஸ்ரீ பழைய பொருள் மொத்த வியாபாரம்’ என்ற பெயரில் இரவோடு இரவாக பெயர்ப் பலகையை எழுதி அதை அதிகாலையில் கடையின் மேற்பகுதியில் நிறுத்த ஏற்பாடு செய்தார். அப்படியே 500 விசிட்டிங்கார்டுகளை அச்சடிக்கவும் முயற்சி எடுத்தார். இதெல்லாம் சித்தப்பா செய்துகொண்டிருப்பது அறிவழகனுக்குத் தெரியாது.

ஒன்பது மணிக்கு மேல் கடையை அடைத்தனர். அந்த காயில் பெட்டியை மட்டும் காலையில் எடுப்பதற்கு வசதியாக முன்புறம் வைத்துக் கொண்டான் அறிவழகன். 

இன்று இருவருமே புதிய தெம்புடன் வழக்கமாக உணவு உண்ணும் கடைக்குச் சென்று உண்டனர். இன்றும் சித்திக்குப் புரோட்டாவும் ஆம்லெட்டும் வாங்கினான் அறிவழகன். அவனை மட்டும் முதலில் வீட்டுக்குச் செல்லும்படி அனுப்பிவிட்டு, சித்தப்பா நாளைய பூஜைக்குரிய பொருட்களையும் கடைக்கு மாலையையும் வாங்கச் சென்றார்.

 வீட்டுக்கு வந்ததும் சித்தியின் காலைத்தான் முதலில் பார்த்தான் அறிவழகன். அவரின் கால்களில் கொலுசுகள் இல்லை. 

“என்ன சித்தி?”.

“நாளைக்கு வெள்ளிக் கிழமை. நாளைக்குப் போட்டுக்குறேன்”. 

“சித்தி, நாளைக்குக் கடைக்குப் பூஜை.  காலையிலேயே வந்து நீங்கதான் சாமிகும்பிட்டு முதல் சரக்கை கடைக்குள்ள ஏத்தனும்”. 

சித்தப்பா கைநிறைய பொருட்களை வாங்கிவந்தார். பெரிய மாலையையும் தன் தோளில் சுமந்து வந்தார். எல்லாவற்றையும் வீட்டுக்குள் அடுக்கி வைத்தார். 

தன் மனைவியிடம், “இன்னைக்கு மாதிரியே நாளைக்கும் போயி புதுக்கடையை அழகுபடுத்து” என்றார் சித்தப்பா. 

பாயை விரித்துப் படுத்தான் அறிவழகன். தான் எதையோ பெரிதாகச் சாதித்துவிட்டதாக உணர்ந்தான். அவனுக்குத் தூக்கமே வரவில்லை. மகிழ்ச்சியோ, துக்கமோ மிகுந்துவிட்டால் மனிதர்களுக்குத் தூக்கம் வர மறுக்கிறது. 

அதிகாலையிலேயே சித்தி எழுந்துவிட்டார். அவரே சென்று பால் வாங்கிவந்தார். குளித்து முடித்தார். தன்னிடம் இருக்கும் சேலைகளுள் புதிதாக இருக்கும் ஒன்றை எடுத்து உடுத்தினார். நேற்று வாங்கி வந்த புதிய கொலுசினை சாமிப் படங்களுக்கு முன் வைத்தார். சாமி கும்பிட்டார். 

கொலுசினை எடுத்து அணிந்தார். வீட்டுக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்தார். அவரின் கணவரை எழுப்பும் அளவுக்கு அந்தக் கொலுசொலிக்கு வலிமை இல்லை. கயல்விழி எழுந்தாள். அவளுக்கு அந்தக் கொலுசொலி பிடித்திருந்தது. 

சித்தி பாலை அடுப்பில் வைத்தார். வெளியே வந்தார். விடிந்துவிட்டது. ஆனாலும் அறிவழகன் உறங்கிக்கொண்டுதான் இருந்தான். அவனருகில் வந்த சித்தி, தன்னிரு பாதங்களையும் தரையில் ஓங்கி ஊன்றி நின்றார். வழக்கமாகத் தண்ணீரைத் தெளித்து அவனை எழுப்பும் சித்தி, இன்று ஒலியைத் தெளித்து எழுப்பினார். 

அறிவழகன் எழும்போதே, “சித்தி! கொலுசு சூப்பர். நல்ல சத்தம் கேட்குது” என்றான். சித்திக்கு மகிழ்ச்சி. இவன் பாயைச் சுருட்டி எழுந்து வருவதற்குள், காபியை அவனின் கைகளில் நீட்டினார். அப்போதுதான் சித்தப்பாவும் எழுந்தார். அவருக்கும் காபியைக் கொடுத்தார் சித்தி. 

கொலுசு சப்தத்தை உன்னிப்பாகச்  செவிமடுத்தார் சித்தப்பா. ஆனால், அவர் ஏதும் கூறவில்லை. வேண்டுமென்றே சித்தி சித்தப்பாவின் அருகில் சென்று ஏதாவது பொருளை எடுக்கும்போதெல்லாம் தன் காலை நிலத்தில் அதிர ஊன்றினார். ஆனாலும் சித்தப்பா கொலுசு பற்றிய தன்னுடைய ஒரு கருத்தையும் சித்தியிடம் கூறவேயில்லை. 

அறிவழகன் குளித்துமுடித்து வந்தான். “அறிவு! நீ சித்தியைக் கூட்டிக்கிட்டுப்போயி இரண்டு கடைகளையும் சுத்தப் படுத்துங்க. நான் பின்னாலேயே வாரேன்” என்று கூறிவிட்டுக் குளிக்கச் சென்றார் சித்தப்பா. அறிவழகனும் சித்தியும் கயல்விழியும் கடைகளின் சாவிகளை எடுத்துக் கொண்டு சென்றனர்.

அவர்கள் கடையை நெருங்கும்போது பெயிண்ட்டரும் அவரின் உதவியாளரும் சேர்ந்து புதிய பெயர்ப்பலகையினைப் புதிய கடையின் மீது ஏற்றிக் கொண்டிருந்தனர். 

அருள்மிகு காத்தமுத்து துணை

கமலாஸ்ரீ 

பழைய பொருள் மொத்த வியாபாரம்

உரிமையாளர் – அறிவழகன்,

34, படேல் ரோடு, தாம்பரம், சென்னை,

போன் (PP) : 044 – 641523.

அறிவழகனும் சித்தியும் அந்தப் பெயர்ப் பலகையினைப் படித்துப் பார்த்துப் பரவசப்பட்டனர். இரண்டு கடைகளையும் திறந்து, சுத்தப் படுத்தினர். அப்போது சித்தப்பா குளித்துவிட்டு பூஜைப் பொருட்களையும் மாலையையும் கொண்டு வந்தார். 

சிறப்பாகப் பூஜையை முடித்தனர். “சித்தி, நீங்கதான் முதல் சரக்கைக் கடையில் ஏத்திக் கொடுக்கணும்” என்று கூறிக்கொண்டே, அந்த காயில் பெட்டியை எடுத்து சித்தியின் கையில் கொடுத்தான் அறிவழகன். சித்தி அந்தப் பெட்டியைப் புதிய கடைக்குள் வைத்தார்.

“அறிவு! இப்பத்தான் கடையைத் திறந்திருக்கோம். உடனே பூட்ட வேண்டாம். நீ கடையைப் பார்த்துக்கோ, நான் போயி சாப்பிட்டுட்டு உனக்குக் கொண்டுவர்றேன்”. 

“சரிங்க சித்தப்பா!”. 

சித்தியும் சித்தப்பாவும் கயல்விழியும் சென்றபின்னர் அறிவழகன் அந்த இரண்டு கடைகளுக்கும் நடுவில் இரண்டு செய்தித்தாள் கட்டுகளை ஒன்றின் மீது ஒன்றாக வைத்து, அவற்றின் மீது அமர்ந்தான்.

தான் ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்துவிட்டது போல உணர்ந்தான். ‘அடுத்து என்ன செய்யலாம்?’ என்று சிந்தித்தான். ‘சித்தப்பா வந்தவுடன் சாப்பிட்டுவிட்டு, தாம்பரத்தைச் சுற்றியுள்ள அத்தனை கம்பெனிகளுக்கும் சென்று பழைய பொருட்களை எடுக்க முயற்சி செய்ய வேண்டும். எப்படியாவது அந்தப் பழைய லாரியை எடைக்குப் போட்டுவிட வேண்டும். நாம் இங்கு இருக்கும் வரையில் சித்தப்பாவுக்கு நிறைய பணம் கிடைக்க வழிசெய்துவிட வேண்டும்’ என்றெல்லாம் நினைத்துக் கொண்டான் அறிவழகன்.

சித்தப்பா உணவுத் தூக்குவாளியோடு கடைக்கு வந்தார். அறிவழகன் சாப்பிட்டுவிட்டு, சித்தப்பாவிடம் சொல்லிக்கொண்டு, சில நிறுவனங்களைத் தேடிச் சென்றான்.

அறிவழகன் எதிர்பார்த்தபடி அவ்வளவு எளிதில் எந்த நிறுவனமும் இவர்களிடம் தம்முடைய பழைய பொருட்களைக் கொடுக்க விரும்பவில்லை. ஏறத்தாழ பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் ஏறி, இறங்கினான்.

சித்தப்பா, அட்டைப் பெட்டிக்குள் இருந்த காப்பர் காயில்களை எடுத்து, முறையாக வெட்டி, அவற்றை ஒழுங்குபடுத்தினார். அவற்றை உரச்சாக்கில் இட்டு, கட்டி புதிய கடையின் மூலையில் வைத்தார். செய்தித்தாள்களை மடித்து, ஐந்து கட்டுகளாகக் கட்டி, புதிய கடைக்குள் வைத்தார். புதிய கடையின் ஒவ்வொரு அங்குலத்தையும் முறையாகப் பயன்படுத்தினார். அந்தக் கடையைத் தான் ஒரு நல்ல குடௌவுனாகவே பயன்படுத்த நினைத்தார்.

மதியம் நேராகச் சித்தியின் வீட்டுக்குச் சென்றான் அறிவழகன். சாப்பிட்டுவிட்டு, வேறொரு தூக்குவாளியில் சித்தப்பாவுக்குச் சாப்பாட்டைக் கொண்டுவந்தான். 

சித்தப்பாவிடம், “இன்னைக்கு ஏதும் கிடைக்கலை” என்றான்.

“அறிவு! பொறுமையாத் தேடிக்கிட்டே இரு. கிடைக்கும். எனக்கெல்லாம் சில நேரம் ஒருவாரங்கூட ஒரு பொருளும் வராம இருந்திருக்கு”. 

அறிவழகன் அமைதியாக இருந்தான்.

“நமக்கு வரவேண்டியது நம்மைத் தேடி வரும். அதுக்காக நாம தூங்கிடக் கூடாது. முயற்சி பண்ணிக்கிட்டே இருக்கணும்”. 

அறிவழகன் ஏதும் பேசவில்லை.

அவர் பழைய கடையில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினார். இவன் செய்தித்தாள்களை மடிக்கத் தொடங்கினான். அப்போது அந்த லாரிக்காரர் வந்தார். 

“வாங்க சார்!” என்று கூறிக்கொண்டே சித்தப்பா எழுந்தார்.

“நீங்க சொன்னதை யோசிச்சுப் பார்த்தேன். அந்த லாரிய வச்சு இனி என்னால ஒன்னும் பண்ண முடியாது. நீங்க சொன்னமாதிரியே அதை எடைக்குப் போடலாம்ணு இருக்கேன். நீங்க விலைய மட்டும் கொஞ்சம் பார்த்துச் சொன்னீங்கனா நல்லா இருக்கும்”.

“சரிங்க சார், நான் சொன்ன விலையில கூடுதலா ஒரு ரெண்டாயிரம் தாரேன்”.

“இல்ல இல்லை. நீங்க சொன்ன விலையில கூடுதலா ஐந்தாயிரம் தாங்க”.

சித்தப்பா சிந்தித்தார். உடனே, அறிவழகன், “சரிங்க சார் நான் சித்தப்பாக்கிட்ட சொல்லி குடுக்கச் சொல்றேன். ஆனா, பணத்தைத் தரதுக்கு எங்களுக்குப் பத்து நாள் அவகாசம் வேணும்” என்றான்.

சித்தப்பாவுக்குப் புரியவில்லை. ‘இவன் என்ன சொல்றான்? எதுக்குப் பத்துநாள் கேட்குறான். பிரசன்னா சார்கிட்ட லாரியைத் தள்ளிவிட்டா, உடனே பணம் கிடைக்குமே! இவன் எதுக்குப் பணத்தைக் கூடுதலாத் தரதா சொன்னான்’ என்றெல்லாம் சித்தப்பா சிந்தித்தார்.

அவர் புறப்பட்டார். சித்தப்பா, அறிவழகனைப் பார்த்து, “எதுக்கு ரேட்டைக் கூட்டின?” என்று கேட்டார். 

“சித்தப்பா! நாம பிரசன்னா சாருகிட்ட லாரியை அப்படியே கொடுக்க வேண்டாம் சித்தப்பா. லாரியைப் பிரிச்சுக் கொடுப்போம். அதுக்குத்தான் பத்துநாள் அவகாசம் கேட்டேன்”.

“பிரசன்னா சாருகிட்ட கொடுத்தா உடனே பணம் கிடைக்கும்ல?”.

“லாரியை நாமே பிரிச்சு விற்றால் இன்னும் முப்பதாயிரத்துக்கு மேல கூடுதலாகக் கிடைக்கும் சித்தப்பா”. 

“லாரியைப் பிரிக்குறது அவ்வளவு சாதாரண விஷயமா?”.

“லாரியைச் செய்யறதுதான் சித்தப்பா கஷ்டம். பிரிக்குறது ஈஸி. இந்த லாரியை மட்டும் இல்லை. எந்தப் பொருளையுமே செய்யறதுதான் கஷ்டம் சித்தப்பா. அதுக்கு ரொம்ப நாளாகும். எந்தப் பொருளையுமே உடைக்குறது ஈஸிதான் சித்தப்பா. அதுக்கு சில பொழுதுகளே போதும். உங்களுக்குத் தெரியாதது ஒன்னுமில்லை”.

“ஆள் வச்சு லாரியை உடைச்சா கூலி அதிகமாயிடும். நாம ரெண்டுபேரும் சேர்ந்து உடைச்சா பத்துநாள்ல வேலையை முடிச்சுட முடியுமா?”.

“முடியும் சித்தப்பா. ராத்திரி எவ்வளவு நேரம் உடைக்க முடியுமோ அவ்வளவு நேரம் உடைப்போம்”. 

“அறிவு! உடைக்குறது மட்டுமில்ல, உடைச்ச பகுதிகளை எப்படி நுங்கம்பாக்கம் வரையும் கொண்டு போறது? அல்லது லாரியை நுங்கம்பாக்கத்துக்குக் கொண்டு போயி, பிரசன்னா சார் கடைக்குப் பக்கத்துல வச்சு உடைக்க முடியுமா?”. 

“நாம இப்பயே போயி அந்த லாரியை எடுப்போம். பிரசன்னா சார்கிட்ட கொடுப்போம். பணத்தை வாங்குவோம். ஆனால், அந்தப் பணத்தைப் பத்துநாள்ல எப்படி நமக்குப் பயன்படுத்தலாம்ணு யோசிப்போம்” என்றார் சித்தப்பா. 

இதுவும் சரியாகத் தான் அறிவழகனுக்குப் பட்டது. “சரிங்க சித்தப்பா” என்றான்.

இருவரும் கடையை அடைத்துவிட்டு, இரண்டு தூக்குவாளிகளையும் எடுத்துக்கொண்டு, வீட்டுக்குச் சென்றனர். ரேஷன் கார்டை எடுத்துக்கொண்டு, அந்தப் பழைய லாரியின் சொந்தக்காரரைச் சந்திக்கச் சென்றனர். அவரிடம் பேசி, ரேஷன் கார்டைக் கொடுத்தனர். அவர் சாவியைக் கொடுத்தார். ஓட்டுநரைத் தேடி சித்தப்பா சென்றார். முன்பே லாரிக்குள் வைத்துச் சென்ற அந்த டீசல்கேனை எடுத்துக் கொண்டு ஐந்து லிட்டர்கள் டீசல் வாங்கச் சென்றான் அறிவழகன். ஓட்டுநர் வந்தார்.

அடுத்த அரைமணிநேரத்தில் லாரியை இயக்கினர். நுங்கம்பாக்கம் சென்றனர். அங்குப் பிரசன்னாவின் கடை பூட்டியிருந்தது. அக்கம் பக்கத்தில் விசாரித்தனர். காலையிலிருந்தே கடை திறக்கப்படவில்லை என்றுதான் கூறினார்கள். 

சித்தப்பா, அந்தக் கடையின் மீது எழுதப்பட்டிருந்த பிரசன்னாவின் கைப்பேசி எண்ணைக் குறித்துக்கொண்டு, ஒரு ரூபாய் தொலைபேசியில் இருந்து அவருக்கு அழைப்பு விடுத்தார். அவர் அந்த அழைப்பினை ஏற்கவில்லை. 

‘அடுத்து என்ன செய்யலாம்?’ என்று சிந்தித்தனர். இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. லாரியைப் பிரசன்னாவின் கடைக்குச் சற்று அருகே சாலையின் ஓரத்தில் நிறுத்தினர். சாவியை எடுத்துக் கொண்டு திரும்பினர். ஓட்டுநருக்குப் பணம் கொடுத்தார் சித்தப்பா. கடைக்கு வந்தனர். வழக்கம்போல வேலைகளைச் செய்தனர். 

ஒரு மணிநேரத்திற்குப் பின்னர் தையற்கடையின்  வாசலில் இருந்த ஒரு ரூபாய் தொலைபேசியின் வழியாகப் பிரசன்னாவுக்கு அழைப்பு விடுத்தார் சித்தப்பா. அவர் அந்த அழைப்பினை ஏற்கவில்லை. திரும்பி வந்தார்.

“அறிவு! லாரியை அங்கேயே போட்டுட்டு வந்துட்டோம். ராத்திரி லாரிக்குப் பாதுகாப்பு இல்லை. யாராவது அதை ‘டோப்’ பண்ணிக்கிட்டுப் போயிடுவாங்க. அது காணாம போச்சுன்னா, போலீஸ்ல கம்ப்ளைண்டு கொடுக்க முடியாது. அதுக்கு ஆர்சியும் இல்லை, இன்சூரென்சும் இல்லை. இந்த லாரி இப்ப யார் பேர்ல இருக்குன்னு கூடத் தெரியாது. இப்போதைக்கு அது அனாமத்துப் பொருள்தான். லாரி காணாம போச்சுன்னா, நாம லாரிக்காரருக்கு என்ன பதில் சொல்றது?. அதனால, நீ இன்னைக்கு அந்த லாரியிலேயே படுத்துக்கோ”. 

“சரிங்க சித்தப்பா”. 

இன்று இரவும் அறிவழகன் தன் சித்திக்குப் புரோட்டாவும் ஆம்லெட்டும் வாங்கிச் சென்றான். 

வீட்டிலிருந்து ஒரு போர்வையை எடுத்துக்கொண்டு, நுங்கம்பாக்கம் சென்றான். 

லாரியின் பின்பகுதியில் ஏறிப் படுத்துக்கொண்டான். லாரியை ஒட்டியபடி தெருவிளக்கு ஒளிர்ந்துகொண்டிருந்தது. 

லாரியில் படுத்துக் கொண்டான். ‘நாளைக்குக் காலையில் பிரசன்னா சார் கடையைத் திறக்க வேண்டும்’ என்று கடவுளை வேண்டிக்கொண்டான்.

– – –

12

அறிவழகன் வீட்டுக்கு வந்தான். சித்தி பாலைக் காய்ச்சிக் கொண்டிருந்தார். சித்தப்பா தூங்கிக் கொண்டிருந்தார். 

“அறிவு! இன்னைக்கு உன்னைக் கூட்டிக்கிட்டு காலேஜைப் பார்க்கப் போகனும்னு சித்தப்பா சொன்னாரு. நீ குளிச்சுட்டு ரெடியாகு”. 

“சரிங்க சித்தி” என்று கூறிவிட்டு மகிழ்ச்சியோடு தயாரானான் அறிவழகன். இருவரும் சாப்பிட்டனர். ஒன்பது மணிக்கு மேல் நல்ல உடைகளை அணிந்துகொண்டு, தாம்பரம் கல்லூரிக்குச் சென்றனர். இது பருவத் தேர்வுக்காலம். சிலருக்குக் காலையிலும் சிலருக்கு மதியமும் தேர்வுகள் நடைபெற்று வந்தனர். 

சித்தப்பா, “அறிவு! இதுதான் இந்தப் பகுதியில பழைய காலேஜாம். பணமும் குறைவுன்னுதான் சொன்னாங்க. ஆனால், மார்க்கு அதிகமா எடுத்திருக்கனுமாம். இவங்ககிட்ட நேர்ல விசாரிக்கலாம்ணு நினைச்சேன். அதான் உன்னையும் கூட்டிக்கிட்டுப்போய்ப் பார்க்கலாம்னு முடிவு பண்ணுனேன். நமக்கும் கடையில மதியத்துக்கு மேலதானே வேலையிருக்கு” என்றார். 

“சித்தப்பா! இந்த காலேஜ் ரொம்பப் பெரிசா இருக்கே” என்று கூறிக்கொண்டே, அதன் வளாகத்தையும் கட்டட அமைப்பினையும் பார்த்து வியந்தான். உடனே, அவனுக்கு அந்த நாட்குறிப்பில் இடம்பெற்றிருந்த கல்லூரி வளாகம்தான் நினைவுக்கு வந்தது. ‘ஒருவேளை அந்தக் கல்லூரி இந்தக் கல்லூரியாகத்தான் இருக்குமோ?’ என்றும் நினைத்தான் அறிவழகன்.

சித்தப்பா அங்குப் படித்துக்கொண்டிருந்த இளைஞரிடம் விசாரிக்க நினைத்து, “இங்க பெரிய ஆஃபீஸர் யாரு?” என்று கேட்டார்.

அந்த இளைஞன், ‘ஆஃபீஸரா? இவரு ஆஃபீஸ் சூப்பிரண்டைக் கேட்கிறாரோ?’ என்று நினைத்து, “நேராப் போங்க. அங்க ஆஃபீஸ் ரூம்ல ‘சூப்பிரண்டு யாரு?’ன்னு கேளுங்க” என்று கூறிவிட்டு நடந்தான்.

இருவரும் கல்லூரி அலுவலகத்துக்குள் சென்றனர். அங்கிருந்த அலுவல் பெண்மணியிடம், “நாங்க சூப்பிரண்டைப் பார்க்கனும்” என்றார் சித்தப்பா. 

“யாராவது ஒருத்தர் மட்டும் போங்க” என்று கூறிக்கொண்டே, சூப்பிரண்டு அமர்ந்திருக்கும் அறையை நோக்கித் தன் கையைக் காட்டினார் அந்தப் பெண்மணி.

“சித்தப்பா! நீங்களே போங்க. முதல்ல உங்களை அறிமுகப்படுத்திக்கிட்டு, அதுக்கு அப்புறமா என்னை இந்த காலேஜ்ல சேர்க்கனும்னு சொல்லுங்க”.

சித்தப்பா தயங்கியபடியே அந்த அறைக்குள் நுழைந்தார். அங்கே வயதானவர் லெக்ஜரைப் பரபரப்புடன் புரட்டிக் கொண்டிருந்தார். 

அவரை, “சார்!” என்று அழைத்தார் சித்தப்பா.

அவர் நிமிர்ந்து, ‘என்ன?’ என்பதுபோலப் பார்த்தார்.

“என்பேரு காத்தமுத்து, பழையபொருள் மொத்த வியாபாரம்” என்று அவர் கூறியவுடன், சூப்பிரண்டு, “ஓ! டெண்டர் குடுக்கணுமா?” என்று கேட்டார். 

சித்தப்பாவுக்குப் புரியவில்லை. “ஆமாம், இல்லை” என இரண்டையுமே கூறினார் சித்தப்பா.

“சரி, சரி, பிஆர்ஓ கிட்ட டெண்டர் ஃபார்மை வாங்கி, உடனே ஃபில்லப் பண்ணிக் குடுங்க. இன்னைக்குக் காலையில பத்து மணியோட நேரம் முடிஞ்சுடும்”.

வெளியே வந்து,  அந்த அறைக்கு எதிரே அமர்ந்திருந்த ஒருவரிடம்,  “சார்! இங்க பிஆர்ஓ யாரு?” என்று கேட்டார் சித்தப்பா.

“நான்தான் பிஆர்ஓ”.

“சார்! சூப்பிரண்டு சார் சொன்னாரு. உங்ககிட்ட டெண்டர் ஃபார்மை வாங்கிக்கச் சொல்லி”. 

“இன்னும் கால்மணிநேரந்தான் இருக்கு. சீக்கிரம்” என்று கூறிக்கொண்டே ஒரு படிவத்தை எடுத்து அவரிடம் நீட்டினார் பிஆர்ஓ. 

சித்தப்பா வேகமாக வெளியே வந்தார். அறிவழகனிடம் அதைக் கொடுத்து, “அறிவு! இந்த பாரத்தைக் கால்மணிநேரத்துல நிரப்பி கொடுக்கணுமாம். இது என்னனு பாரு” என்றார் சித்தப்பா.

அறிவழகன் அந்தப் படிவத்தைப் பார்த்தான். அவனறிந்த ஆங்கிலமே அதை வாசித்துப் புரிந்துகொள்ள போதுமானதாக இருந்தது. வெளியே மரத்தடியில் சில இளைஞர்கள் கூட்டமாக அமர்ந்து படித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு மதியத் தேர்வு. அவர்களில் ஒருவரிடம் பேனா வாங்கினான் அறிவழகன். 

அந்தப் படிவத்தில் சித்தப்பாவின் பெயர், முகவரி போன்றவற்றை நிரப்பிக்கொண்டே சித்தப்பாவிடம் கூறினான், “சித்தப்பா! நமக்கு அதிர்ஷ்டம் அடிச்சுருக்கு” என்று. 

“என்ன சொல்ற, அறிவு?”.

அந்தப் பாரத்தை முழுவதுமாக நிரப்பினான். ஒரே ஒரு கட்டத்தை மட்டும் நிரப்பாமல் சித்தப்பாவிடம் கொடுத்து, கையொப்பம் பெற்றான். சித்தப்பா கையெழுத்துப் போட்டார்.

“என்ன அறிவு? என்ன சொல்ற?” என்று மீண்டும் கேட்டார் சித்தப்பா. 

“சித்தப்பா! இது கலேஜ்ல சேர்றதுக்கான பாரம் இல்லை. இந்த காலேஜ்ல இருக்குற பழைய பரீட்சை பேப்பர்களை விற்குறதுக்குரிய டெண்டர் பாரம். நம்மளை மாதிரி நிறைய பேரு இந்த மாதிரியான பாரத்தை நிரப்பிக் கொடுத்துருப்பாங்க. யாரு அதிக விலைக்கு பேப்பரை எடுத்துக்குறேன்னு இதுல குறிச்சுக் குடுக்குறாங்களோ அவங்களுக்குத்தான் பழைய பரீச்சை பேப்பர்களை விலைக்குக் கொடுப்பாங்க” என்றான் அறிவழகன்.

சித்தப்பா சிந்தித்தார். “அறிவு! அந்த சூப்பிரண்டு நான் சொன்னதைத் தப்பாப் புரிஞ்சுக்கிட்டு நமக்கு நல்லது பண்ணிருக்காரு”.

“சித்தப்பா! சொல்லுங்க, நாம இங்க இருக்குற பழைய பரீச்சைப் பேப்பர்களை கிலோ எவ்வளவுக்கு எடுக்கலாம்?”.

“சில்லறை வியாபாரம்னா கிலோ எட்டு ரூபாய்க்கு எடுக்கலாம். இது மொத்த வியாபாரம். கிலோ பத்து ரூபாய்க்கு எடுக்கலாம்”.

“சித்தப்பா! இன்னும் கொஞ்சம் கூடுதலா எடுத்துக்குறதா இதுல எழுதுனாத்தான் நமக்கு இந்த டெண்டர் கிடைக்கும்”.

“சரி, ஒரு பதினொரு ரூபாயாப் போடு”.

“சித்தப்பா! நல்லா யோசிச்சுக்குங்க. லாரி நிறைய கிடைக்கும். வேற யாராவது பதினொரு ரூபாய் எழுதி டெண்டர் குடுத்திருந்தா?”.

“சரிடா, பதினொன்னு ஐம்பதுன்னு போடு”.

“சித்தப்பா! அது என்ன ஐம்பது காசு. முழுத்தொகையா பன்னிரண்டுனு போட்டுடவா?”. 

“சரி, போடு போடு”.  

நிரப்பாமல் விட்டு வைத்த அந்தக் கட்டத்தில் 12 என எழுதினான் அறிவழகன். பாரத்தைச் சித்தப்பாவிடம் கொடுத்தான். சித்தப்பா அதைக் கொண்டு சென்று பிஆர்ஓவிடம் நீட்டினார். பிஆர்ஓ ஒரு பெட்டியைக் காட்டி அதில் இந்தப் படிவத்தை இடச் சொன்னார். சித்தப்பா அதனுள் அந்தப் படிவத்தை இட்டார். 

பிஆர்ஓ, “மதியம் மூணு மணிக்கு இங்க வந்துடுங்க. டெண்டர் முடிவைச் சொல்லுவாங்க” என்றார். “சரிங்க சார்’’ என்று கூறிவிட்டு வெளியே வந்தார் சித்தப்பா.

“அறிவு! மதியம் மூணு மணிக்கு வரச் சொல்லிருக்காங்க”.

“வருவோம் சித்தப்பா. நாமதான் விலையைக் கூடுதலாப் போட்டுருக்கம்ல. நமக்குத்தான் இந்த டெண்டர் கிடைக்கும்” என்று உறுதியாகக் கூறினான் அறிவழகன்.         

“அறிவு! உன்னோட படிப்புச் சம்பந்தமா விசாரிக்கவே இல்லையே!”.

“சரி விடுங்க சித்தப்பா. அதான் மதியானம் வருவோம்ல. அப்ப விசாரிப்போம்”. 

“அறிவு! மதியானம் கடையைத் திறக்க வேண்டாமா?”. 

“சித்தப்பா! ஒரு நாளைக்குக் கொஞ்சம் லேட்டாத் திறப்போமே! இந்த டெண்டர் கிடைச்சுட்டா நம்ம வாழ்க்கையே வித்தியாசமாகிடும்”. 

“டேய்! பிரசன்னா சாருக்கு போன் போட்டுப் பார்க்ணும்டா”.

“சித்தப்பா! அப்படியே பணத்துக்கும் ஏற்பாடு பண்ணணும்”.

“என்ன பணம்?”.

“அந்த டெண்டர் பாரத்துல கடைசியில ஒரு குறிப்பு இருந்துச்சு. டெண்டர் நமக்கு உறுதியாயிட்டா, 50 ஆயிரம் முன்பணம் செலுத்தனும்னு”.

“அம்பதாயிரமா!?”.

“ஆமாம் சித்தப்பா. முன்பணமே ஐம்பதாயிரம்ணா மொத்த சரக்கு இரண்டு மூணு லாரிவரும்ணு நினைக்குறேன். இப்ப நாம சித்தியோட நகையை அடமானமா வச்சு பணத்தைப் புரட்டுவோம். முதல் லோடை பிரசன்னா சார்கிட்ட கொடுத்ததும் பணம் வந்துடும்ல. அந்தப் பணத்தை வச்சு அடுத்தடுத்த லோடுகளை எடுத்துக்கிடலாம்”.

“அறிவு! இன்னைக்கு நமக்கு டெண்டர் கிடைச்சாலும் நாளைக்கு பிரசன்னா சார் கடையைத் திறந்தாத்தான் நாம சரக்கை எடுக்கணும்”.

“சரிங்க சித்தப்பா. முதல்ல நாம இப்ப பிரசன்னா சாருக்கு போனை பண்ணுவோம். அவர் எப்ப கடையைத் திறக்குறார்னு கேட்போம். அவர் கடையைத் திறந்தாலும் நாம லாரியை கொஞ்சம் லேட்டாத்தான் சித்தப்பா எடைக்குப் போடணும். ஏன்னா நமக்கு இந்த டெண்டர் கிடைச்சுட்டதுனா, அந்த லாரியை வச்சுத்தான் நாம சரக்கை ஏத்தணும்”.

“ஆமாம்! லாரி வாடகை குடுத்து இந்த காலேஜ்ல இருந்து சரக்கெடுத்தா நஷ்டமாகிடும்”.

பொதுத் தொலைபேசியில் ஒரு ரூபாய் நாணயத்தை இட்டு, பிரசன்னாவுக்கு அழைப்பு விடுத்தார் சித்தப்பா. பிரசன்னா அழைப்பினை ஏற்றார்.

“யாரு?” என்று கேட்டார் பிரசன்னா.

“சார்! நான் காத்தமுத்து பேசுறேன். தாம்பரம் பழைய வியாபாரம் காத்தமுத்து” என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார் சித்தப்பா.

“சொல்லுங்க?”.

“சார், கடையை எப்பத் திறப்பீங்க?”.

“நாளைக்குத் திறந்துடுவேன். என்னோட சொந்தக்காரருக்கு ஆக்ஸிடென்ட். அவரைப் பார்க்க மதுரைக்கு வரவேண்டியதாயிடுச்சு. காலையில ஊருக்கு வந்துடுவேன்”.

“சரிங்க சார்” என்று கூறிவிட்டு, மகிழ்ச்சியோடு போனை வைத்தார் சித்தப்பா. 

– – –

13 

அறிவழகனும் சித்தப்பாவும் வீட்டுக்குச் சென்று சாப்பிட்டனர். இன்று நடந்தவற்றைச் சித்தியிடம் வரிசையாகக் கூறினான். 

“சித்தி! திரும்பவும் என்னோட தொழிலுக்கு நீங்கதான் முதல்கொடுத்து உதவணும்”.

“நகைவேணுமா?”. 

“ஆமாம் சித்தி. ஆனால், அதை அடகு வச்சா எனக்குத் தேவையான பணம் கிடைக்காது. அதனால, அதை விற்கணும். நான் உங்களுக்குப் புது நகையை ஒரு வாரத்துல வாங்கித் தந்துடுவேன்”. 

சித்தி தயங்கினார். இது அவரின் அப்பா வாங்கிக் கொடுத்த திருமண நகை. இதை விற்க அவருக்கு மனம் இல்லை. அவர் சித்தப்பாவைப் பார்த்தார்.

“அதான் அவன் ஒரு வாரத்துல வேற வாங்கித்தாரேன்றான்ல. அப்புறம் என்ன யோசிக்குற?”.

சித்தி தன்னுடைய நகையை எடுத்து அறிவழகனிடம் கொடுத்தார். அவனும் சித்தப்பாவும் தெருவில் இறங்கி நடந்தனர். 

“அறிவு! இன்னைக்கு ராத்திரியும் நீ லாரியில படுத்துக்கோ. காலையில நான் டிரைவரை அனுப்புறேன். நீ அவரோட சேர்ந்து நம்ம கடைக்கு வண்டியைக் கொண்டுவந்துடு”. 

நகை அடகுக் கடையில் சித்தியின் நகையைக் கொடுத்தான் அறிவழகன். அதை எடைபார்த்த கடைக்காரர், “அடமானமா? இல்ல விற்கணுமா?”. 

“அடமானம்மா எவ்வளவு கிடைக்கும்?”.

“30 ஆயிரம்”.

“சரி! வித்துடுறேன்”.

நகையைத் தனக்கு விற்றுவிட்டதாக எழுதி வாங்கிக்கொண்டு, 55 ஆயிரத்தைக் கொடுத்தார் அந்தக் கடைக்காரர். அதைச் சித்தப்பா வாங்கிக் கொண்டார்.

சித்தப்பாவும் அறிவழகனும் கல்லூரியை நோக்கிப் பேருந்தில் சென்றனர். இவர்கள் இறங்கினர். நடந்து சென்றனர். வழியில் டீக்கடை இருந்தது. அங்கு நின்று இருவரும் டீயைப் பருகினர். அப்போதும் நினைத்துக்கொண்டான் அறிவழகன், ‘இங்குதான் அவர்கள் இருவரும் வழக்கமாகச் சந்தித்துக் கொள்வார்கள் போலும்’ என்று.

கல்லூரிக்குள் நுழைந்தனர். அங்கிருந்த அலுவலகத்தின் முன்பு பத்துக்கும் மேற்பட்டவர்கள் நின்றிருந்தனர். அவர்களோடு சேர்ந்து இவர்களும் நின்றனர். அந்தக் கூட்டத்தில் செந்திலும் காதரும் இருந்தனர். முதலில் அவர்களைச் சித்தப்பாதான் பார்த்தார். அவர்கள் இருவரும் இவர்களைப் பார்க்கவில்லை. 

உடனே அறிவழகனிடம் மெதுவாகக் கூறினார், “அறிவு! நம்மகிட்ட சரக்கெடுக்குற செந்தில் வந்திருக்காரு” என்றார்.

“அதனால என்ன சித்தப்பா? இந்தக் கூட்டத்துல பிரசன்னா சார் வந்திருந்தாத்தான் நமக்குச் சிக்கல்”.

“அதுவுஞ் சரிதான்”.

பிஆர்ஓவும் சூப்பிரண்டும் வந்தனர். சிறிது நேரத்தில் கல்லூரியின் டீன் வந்தார். அந்த டெண்டர் பெட்டியைக் கொண்டுவந்து அவர் முன்புறம் வைத்தனர். 

அந்தப் பெட்டியின் மீது இருந்த ‘ஸீல்’ உடைக்கப்பட்டது. உதவியாளர்கள் அதனுள் இருந்த அனைத்துப் படிவங்களையும் வெளியே எடுத்து, அடுக்கினர். பிஆர்ஓ அவற்றை வாங்கி அவற்றில் குறிப்பிட்டிருந்த தொகைகளின் அப்படையில் அவற்றை அடுக்கி சூப்பிரண்டிடம் கொடுத்தார். அவர் அதைச் சரிபார்த்துவிட்டு, அதை அப்படியே டீனிடம் கொடுத்தார்.

 டீன் அதைச் சரிபார்த்துவிட்டு, தன் தொண்டையைச் செறுமிக்கொண்டு, “எல்லோருக்கும் வணக்கம். கடந்த மூணு வருஷமா பழைய பரீட்சைப் பேப்பர்களை நாங்க விற்கலை. இந்த வருஷம்தான் விற்குறோம். அதுவும் கடந்த வருஷ பேப்பர்களைத் தவிர, அதுக்கு முந்தைய வருஷப் பேப்பர்களை மட்டுந்தான் விற்குறோம். அதுவே ஒரு ரூம் நிறைய இருக்கு. இந்த டெண்டர்ல கிலோ பன்னிரண்டு ரூபாய்க்கு ஒருத்தர் எடுத்துக்குறதா சொல்லிருக்காரு” என்றார்.

உடனே, கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அறிவழகனும் சித்தப்பாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

காதர் சினத்துடன் டீனைப் பார்த்து, “சார், 12 ரூபாயா? அது எப்படிக் கட்டுப்படியாகும்?” என்று கேட்டார் காதர். 

உடனே, டீன், “அது உங்களுக்குத் தேவையில்லாதது. கட்டுப்படியாகும்றதாலத்தான் அவரு 12 ரூபாய்க்கு எடுத்துக்குறதா டெண்டர் போட்டுருக்காரு” என்று கூறினார்.

அந்தத் தாளை மட்டும் சூப்பிரண்டிடம் கொடுத்தார் டீன். சூப்பிரண்டு அதைப் பார்த்து அதில் இருந்த பெயரை வாசித்தார். 

“திரு. காத்த முத்து. இங்க யாரு காத்தமுத்து?” என்று கேட்டார். அறிவழகனும் சித்தப்பாவும் அந்தக் கூட்டத்தை விலக்கிக் கொண்டு முன்சென்றனர். 

இவர்கள் இருவரையும் பார்த்ததும் செந்திலுக்கும் காதருக்கும் எரிச்சல் ஏற்பட்டது. சூப்பிரண்டு அவர்களிடம் கையொப்பம் வாங்கிக்கொண்டு, ஒப்பந்த ஏற்புச் சான்றிதழைக் கொடுத்தார். 

பிஆர்ஓ, சித்தப்பாவிடம், “சார்! கவுண்டர்ல சலான் எழுதிப் பணத்தைக் கட்டுங்க” என்றார்.

கூட்டம் கலைந்தது. செந்திலும் காதரும் மட்டும் நின்றிருந்தனர். செந்தில் சினத்துடன், சித்தப்பாவைப் பார்த்து, “எங்க வயித்துல அடிச்சிட்டீல்ல! நீ எப்படிச் சரக்க விற்குறேன்னு பார்க்குறேன்” என்றார்.

உடனே, காதர் செந்திலிடம் “இவனுக கிட்ட இந்தச் சரக்க யாரு வாங்குறானு பார்த்துடுவோம். இந்தப் பட்டணத்துக்குள்ள யாரிட்டையும் நீ சரக்கை விற்க முடியாது” என்று கூறிவிட்டு, சித்தப்பாவைப் பார்த்து, “நீ முடிஞ்சா விற்றுப்பாரு” என்று சவால் விட்டார். 

சித்தப்பாவும் அறிவழகனும் அதிர்ச்சியுடன் நின்றனர். அவர்கள் திகைத்து நிற்பதைப் பயன்படுத்திக்கொண்டு, செந்தில், “இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை. நாங்க தப்பா ரேட்டை எழுதிட்டோம். மன்னிச்சுடுங்க. நாங்க எங்களோட டெண்டரை வாபஸ் வாங்கிக்கிறோம்ணு எழுதிக்குடுத்துட்டுத் திரும்பிப் பார்க்காம ஓடிடுங்க” என்றார்.

ஆனால் இவர்கள் இருவரும் ஏதும் பேசாமல் சலானை நிரப்பிப் பணத்தைக் கட்டுவதற்கான ஏற்பாட்டில் இறங்கினர். பணம் கட்டிய சலானைக் கொண்டு சென்று பிஆர்ஓவிடம் கொடுத்தனர். 

அவர், “நாளைக்குக் காலையில வந்து சரக்க ஏத்திக்குங்க. நீங்க எடுக்குற சரக்கு நாற்பதாயிரத்தைத் தாண்டிடுச்சுன்னா, மேற்கொண்டு ஐம்பதாயிரத்தைக் கட்டிட்டுத்தான் திரும்பவும் சரக்கை எடுக்கனும். கடைசிச் சரக்கு கொஞ்சமா இருந்தா, அதுக்குரிய தொகையை மட்டும் கொடுத்துட்டுச் சரக்கை எடுக்கலாம்” என்றார்.

“சரிங்க சார். நன்றிங்க சார்” என்று கூறிவிட்டு, இருவரும் கல்லூரிக்கு வெளியே வந்தனர். அந்த டீக்கடையில் செந்திலும் காதரும் நின்று கொண்டிருந்தனர். 

அவர்கள் இவர்களைப் பார்த்ததும், கேலியாகச் சரித்தனர். 

“என்ன காத்தமுத்து, 12ரூபாய்க்குச் சரக்கை எடுத்து, பிரசன்னாக்கிட்ட 13 ரூபாய்க்கு விற்கப் போறீயா? தாம்பரத்துல இருந்து நுங்கம்பாக்கம் போயிட்டு வந்தா லாரி வாடகை என்னாகும்னு தெரியுமா?” என்று சப்தமாகக் கேட்டார் காதர்.

உடனே, “அறிவு! பார்த்தியா? நம்மளைப் பார்த்து கிண்டல் பண்றானுங்க” என்று வருத்தத்துடன் கூறினார் சித்தப்பா.

“இல்லைங்க சித்தப்பா. இவனுங்க நமக்கு ஒரு தகவல் கொடுத்துருங்காங்க”.

“தகவலா? என்ன சொல்ற?”.

“பிரசன்னா சார் இந்தச் சரக்கை 13 ரூபாய்க்குத் தான் எடுப்பார்ன்ற தகவலைச் சொல்லிருக்காங்க”.

“அதனால என்ன?”.

“சித்தப்பா! நாம பிரசன்னா சாரைவிடக் கூடுதலா இந்தச் சரக்கை யார் எடுப்பாங்கனு பார்த்து, விசாரிச்சு அவங்ககிட்டதான் சரக்கை கொடுக்கனும்”.

“அறிவு! செங்கல்பட்டுல ஒரு பாய் இருக்காருனு கேள்விப்பட்டிருக்கேன். ஆனால், சரக்கைச் செங்கல்பட்டுவரை கொண்டுபோனா டீசல் செலவு கூடுமே”.

“சித்தப்பா! சிவகாசியில பட்டாசுகளைத் தயாரிக்க இந்த மாதிரியான தாள்களை வாங்குவாங்களே!”.

“அறிவு! இங்க இருக்குற செங்கல்பட்டுக்கே டீசல் செலவு நமக்குத் தாங்காது. நீ என்னடான்னா… சிவகாசிக்குச் சரக்கைக் கொண்டுபோகச் சொல்ற?”.

“சித்தப்பா! சரக்கை கூட்ஸ் ரயில்ல ஏத்திவிட்டு, சாத்தூர்ல இறக்கி, வண்டியில சிவகாசிக்குக் கொண்டுபோகலாம்”.

“அப்படியினா, நாம முதல்ல சிவகாசிக்குப் போயி யாருக்கிட்ட சரக்கைக் கொடுக்கலாம்னு விசாரிக்கனும். அப்புறமா, ரயில்ல ஏத்துறதுக்கு எவ்வளவுன்னு விசாரிக்கனும். எல்லாத்தையும் கூட்டிப் பார்த்துதான் ஒரு முடிவுக்கு வரணும்”.

“சித்தப்பா! பிரசன்னா சார் யாருக்கிட்ட சரக்கைக் கொடுப்பார்? அவருக்கிட்ட நாமளும் இந்தச் சரக்கைத் தள்ளிவிட்டா நிச்சயமா பிரசன்னா சாரைவிட ரெண்டு ரூபாயாவது நமக்குக் கூடுதலாக் கிடைக்குமே”.

சித்தப்பா தலையைச் சொறிந்தார். அறிவழகனின் மனம் படபடத்தது. 

“சித்தப்பா! எதாவது முயற்சிப் பண்ணுங்களேன்” என்றான் அறிவழகன் கெஞ்சிய தொனியில்.

“சரி! நான் நம்மூரு மணியக்காரர்க்கிட்ட கேட்டு சிவகாசியில விசாரிக்கச் சொல்றேன்”.

‘இது நமக்கு லாபமாக அமையுமா? நஷ்டமாகிவிடுமா? இல்லை லாபமும் இல்லாமல் நஷ்டமும் இல்லாமல் வெட்டி வேலையாகிவிடுமா?’ என்று சிந்தித்தான் அறிவழகன். 

அறிவழகனும் சித்தப்பாவும் கடைக்கு வந்தனர். மணியக்காரரிடம் பேசுவதா வேண்டாமா என்ற மனப்போராட்டத்தில் இருந்தார் சித்தப்பா. அவர் நண்பர்தான். இருந்தாலும், ‘இதுபோன்ற உதவிகளைச் செய்வாரா?’ என்பதில் அவருக்கு ஐயம் இருந்தது. 

சரக்கு இறக்க ஆட்கள் வந்துகொண்டே இருந்தனர். இரவு ஏழரை மணிவரை இன்று சரக்கு வந்துகொண்டிருந்தது. புதிதாக இரண்டு பேர்களும் சரக்கைக் கொண்டு வந்து கொடுத்தனர். அவற்றையெல்லாம் வகைப்படுத்திப் பிரித்துவைக்க இன்று மணி இரவு பத்தைத் தாண்டிவிட்டது. அதன் பின்னர் சாப்பிடச் சென்றனர். 

இன்று இவன் சித்திக்கு ஏதும் வாங்கவில்லை. இவர்கள் வீட்டுக்குச் சென்றபோது சித்தி பாதித் தூக்கத்தில் இருந்தார். சித்தப்பா இவனிடம் டீசல் வாங்கப் பணம் கொடுத்தார். இவன் போர்வையையும் அந்த நாட்குறிப்பினையும் எடுத்துக்கொண்டு, இரவுப் பேருந்தினைப் பிடித்து நுங்கம்பாக்கம் சென்றான். 

‘நாளைய விடியல் எப்படி இருக்கும்?’ என்று நினைக்கும்போதே பயங்கரமாக இருந்தது அறிவழகனுக்கு. ‘சரக்குக் கிடைத்துவிட்டது. ஆனால், விற்பனை? சித்தியின் நகையை விற்றாயிற்று. பணத்தை காலேஜில் கட்டியாயிற்று. சரக்கை எடுக்க லாரி இருக்கிறது. ஆனால், யாரிடம் கொடுக்க? பிரசன்னா சாரிடம் கொடுத்தால் ஒரு கிலோவுக்கு ஒரு ரூபாய்தானே லாபம் கிடைக்கும். ஆயிரம் கிலோ சரக்கை விற்றாலும் வெறும் ஆயிரம் ரூபாய்தானே கிடைக்கும்?’ என்று அவன் நினைத்துக் கொண்டிருக்கும்போதே அவனுக்குள் ஒரு பொறி தட்டியது. 

‘பிரசன்னா பதின்மூன்று ரூபாய்தான் தருவார் என்று இவர்கள்தானே கூறினர். ஆனால், பிரசன்னா சார் கூறவில்லையே’ என்று நினைத்தான். உடனே, அவனுக்குள் நம்பிக்கை துளிர்த்தது. 

‘முதல் லோடினைப் பிரசன்னா சாருக்கிட்டவே இறக்குவோம். அவர் மலிவாக எடுத்தால் அடுத்த லோடுகளை நம்ம கடையிலேயே இறக்கிக்குவோம். அதுக்கு அப்புறம் அதை என்ன செய்யலாம்ணு யோசிப்போம்’ என்று நினைத்தான் அறிவழகன். அவன் மனத்தினுள் தெளிவு பிறந்தது. 

– – –

14

பொழுது நன்றாக விடிந்த போது ஓட்டுநர் வந்தார். அப்போதும் அறிவழகன் தூங்கிக்கொண்டுதான் இருந்தான். அவனை எழுப்பினார். இருவரும் சேர்ந்து டீயைப் பருகினர். பின்னர் டீசல் வாங்கிவந்தனர். லாரியைப் போராடி இயக்கினர்.

காலை எட்டு மணிக்கு லாரியைக் கடையின் முன்னால் கொண்டுவந்த நிறுத்தினர். 

“அண்ணே! காலையில பத்து மணிக்கு வாங்க. நாம போவோம்” என்று கூறிவிட்டு, அவரிடமிருந்து லாரியின் சாவியை வாங்கிக்கொண்டான் அறிவழகன். அறிவழகன் வீட்டுக்குச் சென்றபோது, சித்தப்பா சாப்பிடத் தொடங்கியிருந்தார். இவனும் சேர்ந்து சாப்பிட்டான். 

“அறிவு! என்னானாலும் பரவாயில்லை. நாம பிரசன்னாக்கிட்டையே கொடுப்போம். அப்படியே அந்த லாரியையும் அவர்கிட்ட தள்ளி விட்டுடுவோம்”.

“நானும் அதைத்தான் சித்தப்பா நினைச்சேன்”.

லாரியோடு கல்லூரிக்குச் சென்றனர்.  இவர்களை பிஆர்ஓ அழைத்துக் கொண்டு குடௌவுனுக்குச் சென்றார். அது பெரிய அறை. காற்றுப்புகாத அறை. அது நிறைய தேர்வுத்தாள்கள் அடுக்கப்பட்டிருந்தன. அதைப் பார்த்தவுடனேயே சித்தப்பாவுக்குத் தெரிந்துவிட்டது, ‘இது ஐந்து லோடுகள் வரும்’ என்று. 

உடனே அவரின் மனம் கணக்கிடத் தொடங்கியது, “எப்படியும் ஐந்து டன் இருக்கும். கிலோவுக்கு ஒரு ரூபாய் லாபம் கிடைத்தாலும், ஐந்தாயிரம் கிடைக்கும். டீசல், டிரைவர் கூலி போக மூவாயிரத்து ஐந்நூறு கிடைத்துவிடும்’ என்று.  

அறிவழகன் ஒவ்வொரு கட்டாக எடையில் வைக்க, ஓட்டுநர் எடையைப் பார்த்து எழுதினார். சித்தப்பா அவற்றை லாரியில் ஏற்றினார். இரண்டு மணிநேரங்கள் ஆகின. லாரி புறப்பட்டது. நுங்கம்பாக்கம் செல்வதற்குள் லாரி  இரண்டு முறை நின்று, தண்ணீரைப் பருகியது. 

பிரசன்னாவிடம் கொண்டு சென்றனர். அவர் அதை வழக்கம்போல லாரியோடு எடைபோட்டு, துண்டுச் சீட்டில் கணக்கை எழுதத் தொடங்கினார். இன்று அவருக்கு உதவிசெய்ய அவரின் உதவியாளர்கள் யாரும் இல்லை.

“சார், எங்க யாரையுமே காணும்?” என்று கேட்டான் அறிவழகன்.

“எல்லாரும் திருவிழாவுக்குப் போயிருக்காங்க. நாளைக்குத்தான் வருவாங்க” 

“சார், உங்க சொந்தக்காரரு இப்ப எப்படி இருக்குறாரு?” என்ற கேட்டார் சித்தப்பா.

“இப்ப பரவாயில்லை. உயிருக்கு ஆபத்தில்லை”.

பிரசன்னா, தன் கைப்பேசியில் எடைக்குரிய தொகையைப் பதிவிட்டுக் கொண்டிருந்தார். அறிவழகனுக்கும் சித்தப்பாவுக்கும் இதயம் படபடக்கத் தொடங்கியது. 

‘ஒருவேளை பிரசன்னா சார் 12 ரூபாய்க்கே இந்தச் சரக்கை எடுத்தால், டீசல் செலவுக்கும் டிரைவர் கூலிக்கும் என்ன செய்வது?’ என்று சிந்தித்தான் அறிவழகன். 

சித்தப்பா சிந்தித்தார், ‘ஒருவேளை இவர் 13 ரூபாய்க்கு மட்டும்தான் சரக்கை எடுத்தால், கடைசி லோடை மட்டும் கடையிலேயே இறக்கிக்கணும். அதை வேற யாரிட்டையாவது தள்ளிவிடப் பார்க்கணும்’ என்று.

பிரசன்னா கணக்கை எழுதிமுடித்து, சீட்டைச் சித்தப்பாவிடம் தந்தார். உடனே, சித்தப்பா, ‘கிலோவுக்கு எவ்வளவு எழுதியிருக்கு?’ என்ற சிந்தனையில், அதைத்தான் அந்தச் சீட்டில் தேடினார். அதைத்தான் முதலில் பார்த்தார். அதைப் பார்த்தவுடன் மனம் மகிழ்ந்து, பிரசன்னாவைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டு, “நன்றி சார்” என்றார் சித்தப்பா.

அவரிடமிருந்து அந்தச் சீட்டை அறிவழகன் வாங்கிப் பார்த்தான். அறிவழகனின் முகத்தில் புன்னகை பூத்தது. கிலோவுக்குப் பதினைந்து ரூபாய்!  

சித்தப்பாவும் அறிவழகனும் சேர்ந்து சரக்குகளை ஏற்றியபடியே இருந்தனர். ‘மாலை ஐந்து மணிக்குக் கல்லூரி அடைத்துவிடுவார்களே!’ என்ற நினைப்பில், வேக வேகமாகச் செயல்பட்டனர். மாலை நான்கரை மணிக்குக் கடைசி லோடை ஏற்றிக்கொண்டு கணக்கை முடித்தனர். நுங்கம்பாக்கத்தை நோக்கி லாரி நகரத்தொடங்கிய போதுதான் சித்தப்பாவுக்கு நினைப்பே வந்தது, ‘இவனை காலேஜ்ல சேர்ப்பதற்கு விசாரிக்கவே இல்லையே!’ என்று.  

– – –

15

ஒருவழியாகச் சரக்கினை பிரசன்னாவிடம் ஒப்படைத்தனர். அப்படியே லாரியையும் பிரசன்னாவிடம் கொடுத்தனர். ‘லாரிக்குரிய தொகை பெரிய தொகை என்பதால், அதை நாளைக்குத்தான் தன்னால் ஏற்பாடு செய்து தரமுடியும்’ என்று கூறிவிட்டார் பிரசன்னா. அதனால், இறுதி லோடு தேர்வுத் தாள்களுக்குரிய தொகையை மட்டும் வாங்கிக் கொண்டனர்.

வரும் வழியில் ஓட்டுநருக்குக் கூலியைக் கொடுத்தனர். அவரை அனுப்பினர். மீதிப் பணத்தைச் சித்தப்பா தன் சட்டைக்குள் வைத்துக்கொண்டார். இருவரும் பேருந்தில் வீடு நோக்கி வந்தனர். இறங்கி நடந்தனர்.

“சித்தப்பா! சித்திக்கு எப்ப புதுநகை வாங்கப் போகலாம்?”.

சித்தப்பா சற்றுச் சிந்தித்தார். 

“அறிவு! இப்ப இருக்குற காச வைச்சு ஏதாவது அடுத்து பெரிய லோடு சரக்கு எடுக்கணும். கொஞ்சம் காச சேர்த்துக்கிட்டு, அவளுக்குப் பெரிய நகையா செய்யனும்”.

இப்படிச் சித்தப்பா கூறியது அறிவழகனுக்குப் பிடிக்கவில்லை. அடுத்த விநாடியே, ‘சித்திக்கு என்ன பதில் கூறுவது?’ என்று நினைத்தான் அறிவழகன். அவனுக்கு  நெஞ்சு பதறத் தொடங்கியது. 

‘ஏற்கனவே சித்தி கூறியிருக்கிறார், ‘கொலுசை ஒரு குரங்கு தூக்கிட்டுப் போயிடுச்சுன்னு’. இப்ப நாமே சித்தியிடம் தங்க நகையை வாங்கி, அதே குரங்கிடம் கொடுத்துவிட்டோமே’ என்று நினைத்து வருந்தினான்.

ஒருவேளை அடுத்து ஏதாவது சரக்கை எடுத்து அது கைநஷ்டமாகிவிட்டால் என்ன செய்வது. சித்திக்கு எப்படிப் புதிய நகையை வாங்கித் தருவது?’ என்று நினைத்தான். ‘பணம் அதிகமாக வந்துசேர்ந்து விட்டால் மனிதர்களின் மனம் மாறிவிடுமோ?’ என்று சிந்தித்தான். ‘சித்தப்பாவிடமிருந்து எப்படி இந்தப் பணத்தைக் கைப்பற்றுவது?’ என்றும் நினைத்தான் அறிவழகன். 

வீட்டுக்கு வந்ததும் சித்தி கேட்டார், “தம்பி! என்னாச்சு? காயா, பழமா?” என்று.

அது இவனின் காதுகளுக்கு, “நகையா? பணமா?” என்று விழுந்தது. 

“என்ன சித்தி கேட்டீங்க?”.

“இல்ல தம்பி! போன காரியம் என்னாச்சு?” 

அறிவழகன் சித்தப்பாவைப் பார்த்தான்.

உடனே, சித்தப்பா, “எல்லாம் நல்ல படியா முடிஞ்சுடுச்சு. ஆனால், பணம் கைக்குவர பத்து நாளாகும்” என்றார்.

உடனே அறிவழகனுக்கு வியர்த்துவிட்டது. சித்தியே தொடர்ந்து பேசினார்.

“ஆனால், பணம் நமக்கு வந்துடும்ல. அந்த நம்பிக்கை உங்களுக்கு இருக்குதானே?”.

இருவரும் தலையை மட்டும் ஆட்டினர். மணி ஏழுதான் ஆனது. இது சித்தி உணவருந்தும் நேரம். ஆனால், சித்தி இருவருக்கும் சாப்பாடு எடுத்துவைத்தார். வீட்டில் இருந்த உணவினை மூவரும் பகிர்ந்து உண்டனர்.  

எட்டு மணிக்கே பாயைவிரித்துப் படுத்துக்கொண்டான் அறிவழகன். இன்று முழுவதும் செய்த உடல் உழைப்பு அவனுக்கு அசதியைத் தந்தது. அதைவிட சித்தியின் நகைதான் அவன் மனத்தை அழுத்திக் கொண்டிருந்தது. இன்று அவனுக்குத் தூக்கம் வருமா என்று அவனுக்கே தெரியவில்லை. இன்னும் தெரு அடங்கவில்லை.

சித்தப்பா வெளியில் சென்றார். ‘இவர் எதுக்கு இப்போது வெளியே போகிறார்?’ என்று நினைத்தான் அறிவழகன். சித்தப்பா நேராக லாரியின் சொந்தக்காரரைச் சந்தித்தார். 

“சார்! லாரியைக் கொடுத்துட்டேன். இன்னும் நாலு நாளுல எனக்குப் பணம் வந்துடும். உடனே உங்ககிட்ட வந்து பணத்தைக் கொடுத்துடுறேன்”.

“பரவாயில்லையே! பத்துநாள் ஆகும்னு சொன்னீங்க?”.

“உங்க நல்ல மனசுக்கு லாரி சீக்கிரமே விலைபோயிடுச்சுங்க” 

அவர் சிரித்துக்கொண்டே, “சரிங்க. பணம் வந்ததும். குடுங்க” என்றார்.

சித்தப்பா நேராக அவருடைய பழைய கடையின் உரிமையாளரின் வீட்டுக்கும் இப்போது அறிவழகனுக்காகப் புதிதாகப் பிடித்திருந்த புதுக்கடையின் உரிமையாளரின் வீட்டுக்கும் சென்று வந்தார்.

சித்தப்பா வீட்டுக்குள் நுழையும்போது மணி இரவு பத்து. அறிவழகனுக்குத் தூக்கம் வரவேயில்லை. புரண்டு புரண்டு படுத்தான். சித்தப்பாவிடமிருந்து எப்படிப் பணத்தை வாங்குவதென்றே அவனுக்குப் பிடிபடவில்லை. எழுந்து அமர்ந்தான். ‘சித்தியின் நகைக்கு என்ன வழி செய்யுறது?’ என்று சிந்தித்துக்கொண்டே படுத்தான். 

சித்தி வாசற்கதவைத் திறக்கும் போதே அறிவழகன் விழித்து, அமர்ந்திருந்தான். 

“என்ன தம்பி, சீக்கிரமே முழிச்சுட்டியா?”. 

“ஆமாம் சித்தி. ஆனால், எனக்குத் தூக்கமே வரலை. அதுதான் உண்மை. உங்களுக்குப் புது நகையை வாங்கிக் கொடுத்த பின்னாடிதான் எனக்குத் தூக்கம் வரும்”.

“அடுத்த வாரம் பணம் வந்ததும் நீ நகை வாங்கிக் கொடுக்கப் போற. இதுக்கெதுக்கு இப்படித் தூங்காம கிடக்குற?”.

“கொடுத்த வாக்கைக் காப்பத்தணும்ல சித்தி”. 

“நீ காப்பாத்துவடா தம்பி”.

“ஒவ்வொருத்தரும் கொடுத்த வாக்கைக் காப்பாத்துனாத்தான் சித்தி நான் என்னோட வாக்கைக் காப்பாத்த முடியும்”. 

வீட்டுக்குள் சென்றான். சித்தப்பா நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார். பால் அட்டையை எடுத்துச் சென்றான். மெதுவாகத் திரும்பி வந்தான். சித்தி பாலைக் காய்ச்சிக் கொடுத்தார். அவன் காப்பியைக் குடித்தவுடனேயே, இரண்டு கடைகளின் சாவிகளையும் எடுத்துக்கொண்டு, கடைக்குச் சென்றான். 

கடையில் இருந்த பொருட்களை ஒதுங்க வைத்தான். செய்தித்தாள்களை மடிக்கத் தொடங்கினான். சித்தப்பா ஒன்பது மணிக்குமேல்தான் கடைக்கு வந்தார். அவனுக்குத் தூக்குவாளியில் சாப்பாடு கொண்டுவந்து கொடுத்தார். அவன் சாப்பிட்டான். 

சித்தப்பா வெளியில் சென்றுவிட்டார். இவன் தொடர்ந்து செய்தித்தாள்களை மடித்து, கட்டுகளாகக் கட்டிப் புதிய கடையில் ஏற்றினான். அவனுக்கு அலுப்பாக இருந்தது. இரவில் சரியாகத் தூங்காததால், அவனுக்குக் கண்கள் இருளத் தொடங்கியது. இமைகள் துடித்தன. 

எழுந்து சென்று குழாயில் தண்ணீரைப் பிடித்து முகத்தைக் கழுவினான். இரண்டு, மூன்று முறைகள் கழுவினான். புதிய கடையில் அமர்ந்தான். செய்தித்தாள்களை மடிக்கத் தொடங்கினான். சித்தப்பா திரும்பி வந்தார். அவர் எல்லாப் பொருட்களையும் எடுத்து மூட்டையில் கட்டினார். 

சித்தப்பா மீண்டும் வெளியே சென்றார். நேராகத் தன் வீட்டின் உரிமையாளரைப் பார்த்துப் பேசினார். பின்னர் வீட்டுக்கு வந்தார். தன் மனைவியிடம், “நீ மண்ணெண்ணெய் கேனை எடுத்துக்கிட்டுப் போயி, நான் சொல்ற ஆள்கிட்ட நான் சொல்ற விதமாகச் சொல்லு” என்று கூறினார். 

“எதுக்குப் பொய்? இன்னைக்கு ரேஷன் கடையில மண்ணெண்ணெய் ஊத்தலையே!” என்றார் சித்தி. 

“நம்ம ரேஷன்கார்டு அவருக்கிட்ட பிடிமானமா இருக்கு. அதை மீட்கணும். அதுக்கு இதுதான் வழி. சொன்னதைச் செய்” என்றார் சித்தப்பா.

“பாப்பாவைப் பார்த்துக்குங்க” என்று கூறிவிட்டு மண்ணெண்ணெய் கேனை எடுத்துக்கொண்டு லாரியின் சொந்தக்காரரின் வீட்டுக்குச் சென்றார் சித்தி. 

அவரிடம் தன் கணவர் சொல்லிய விதத்தில் பேசினார். அவரும் இரக்கப்பட்டு ரேஷன் கார்டை எடுத்துக் கொடுத்தார். 

“இங்க பாருங்க மண்ணெண்ணெய் வாங்குனதும் இதை எங்கிட்ட கொடுத்துடணும்”.  

“சரிங்க” என்று கூறிவிட்டு வீட்டுக்கு வந்தார் சித்தி. அதைத் தன் கணவரிடம் கொடுத்தார். அதைப் பார்த்ததும் சித்தப்பாவின் முகத்தில் மகிழ்ச்சி மலர்ந்தது. சாப்பிட்டார். 

அவர் புறப்படும் போது சித்தி கேட்டார், “ஏங்க, அறிவுக்குச் சாப்பாடு?” என்று. 

“நான் அவனைச் சாப்புடுறதுக்கு வீட்டுக்கு அனுப்புறேன். இப்ப நான் வேற இடத்துக்குப் போயிட்டு கடைக்குப் போகணும்”.

ஒருரூபாய் தொலைபேசியின் வழியாக மினிலாரி செந்திலுக்கு அழைப்பு விடுத்தார் சித்தப்பா. கடைக்கு வந்தார். 

“அறிவு! நீ போய் சாப்பிடு”.. 

“நீங்க சித்தப்பா?”. 

“நான் வீட்டுக்குப் போயிட்டுதான் வந்தேன். அப்படியே சாப்பிட்டுட்டு வந்துட்டேன். நீ போயி சாப்பிடு”.  

அறிவு சென்ற சிறிது நேரத்துக்குப் பின்னர், செந்தில் தன் மினிலாரியோடு வந்தார். 

“எதுக்கு என்னை இப்பக் கூப்பிட்டீங்க? நீங்கதான் பெரிய டெண்டர்காரராயிட்டீங்களே!”.

“நீங்க சொன்னமாதிரியே அது ரொம்ப நஷ்டமாயிடுச்சுங்க” என்றார் சித்தப்பா.

“நான்தான் சொன்னேன்ல. நீங்க கேட்கலை”.

இரண்டு கடைகளிலும் இருந்த அனைத்துச் சரக்குகளையும் செந்திலுக்கு ஏற்றி விட்டார் சித்தப்பா. தாராசையும் சேர்த்து ஏற்றி விட்டார். 

“என்ன, தொழிலை விடப் போறீங்களோ?”. 

“ஆமாம்”.

செந்தில் வழக்கமாக இவரிடம் சரக்கு எடுக்கும் விலையைவிட, மிகவும் குறைவான விலைக்குத்தான் இன்று சரக்கு எடுத்தார். அவருக்குத் தெரிந்துவிட்டது, ‘இப்போது நாம் எவ்வளவு குறைவாகப் பணம்கொடுத்தாலும் இவர் வாங்கிக் கொள்ளும் நிலையில்தான் இருக்கிறார்’ என்பது. 

செந்தில் சென்ற பின்னர், சித்தப்பா கடையைப் பூட்டினார். வீட்டுக்குச் சென்றார். அப்போதான் அறிவு சாப்பிட்டு முடித்திருந்தான்.

சித்தியிடம் சித்தப்பா படபடவெனப் பேசினார். 

“மணியக்காரருக்கு யதார்த்தமா நான் போன் போட்டேன். அவரு ஒரு செய்தியைச் சொன்னார். உன்னோட அம்மாவுக்கு முடியலையாம். நமக்கு இன்னைக்குத்தான் தந்தி அடிச்சாங்களாம். நல்லவேளையா நான் போன் போட்டதால நமக்குச் செய்தி சீக்கிரமாவே தெரிஞ்சுடுச்சு” என்றார்.

சித்தி பதறினார். அறிவழகனுக்கும் பதற்றமாகத்தான் இருந்தது. ஆனாலும் அவன் ஒரு கேள்வி கேட்டான். 

“ஏன் சித்தப்பா நம்ம கடைக்குப் பக்கத்துல இருக்குற ஒருரூபாய் போன் நம்பரைச் சித்தியோட அம்மாவுக்கு முன்னாடியே நீங்க தரலையா?”.

“இல்லை”.

“இப்ப நீ மட்டும் புறப்படு. எனக்கு இங்க கொஞ்சம் அவசர  வேலையிருக்கு. நான்  ரெண்டுநாள் கழிச்சு வாறேன். சாய்ந்தரம் ரயில்ல உன்னை ஏத்திவிடுறேன். தனியாப் போயிடுவேல்ல?”.

“அவங்க ஏன் சித்தப்பா தனியாப் போகணும்? நானும் அவங்களோட கூடப் போறேன்”.

உடனே சித்தப்பாவின் மனத்தில் ஒரு மின்னல் தோன்றி மினுக்கி அவரை மகிழச் செய்தது. 

“சரி, நீங்க ரெண்டு பேரும் போறதா இருந்தா பஸ்லயே போங்க”. 

சித்தி புறப்படத் தொடங்கினார். அறிவழகனும் தன்னுடைய பயணப் பையை எடுத்துக்கொண்டான். சித்தப்பா ஆயிரம் ரூபாயை அறிவழகனிடம் கொடுத்தார். 

கயல்விழியைத் தூக்கிக்கொண்டு சித்தியும் சித்தப்பாவும் அறிவழகனும் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியேறினர். வழக்கமாகச் செல்லும் பாதையை விட்டு விலகி, வேறு பாதையில் அவர்களை அழைத்துக்கொண்டு, பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தார் சித்தப்பா.  

– – –

16

சித்தியும் அறிவழகனும் கயல்விழியும் பேருந்தில் ஏறி, மதுரையை நோக்கிச் செல்லத் தொடங்கினர். சித்தி அழுதுகொண்டே இருந்தார். அதனால் அறிவழகன் கயல்விழியைத் தன் மடியில் வைத்துக்கொண்டான். சித்திக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்று அவனுக்குத் தெரியவில்லை. சித்திக்கு அம்மா மட்டுந்தான். மற்றவர்கள் எல்லாம் தூரத்துச் சொந்தம்தான். அறிவழகனின் அம்மா மட்டுந்தான் சித்திக்கு கொஞ்சம் ஆறுதலாக இருப்பார். 

பகல்நேரப் பேருந்துப் பயணம் மிகவும் அலுப்பூட்டுவதுதான். எத்தனை நேரம் வேடிக்கையைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் கண்கள் ஒருவிதமான தூக்கத்திலேயே மிதந்தபடி இருக்கும். அறிவழகனும் அத்தகைய மிதப்பிலேதான் இருந்தான். அவனுக்குத் தூக்கம் வந்தது. பேருந்து ஓர் உணவகத்தில் நின்றது. இவன் சித்திக்கு வடையும் டீயும் வாங்கிக் கொடுத்தான். இவன் ஏதும் சாப்பிடவில்லை. அந்த உணவகத்திலிருந்த சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தான். மணி ஐந்து. ‘சித்தப்பா லாரிக்குரிய பணத்தை வாங்கியிருப்பாரா? பிரசன்னா சார் நல்லவர். பணத்துக்கு இழுத்தடிக்க மாட்டார்’ என்று நினைத்தான். மீண்டும் பேருந்து புறப்பட்டது. இரவு பதினொன்றரை மணிக்கு மேல்தான் வண்டி மதுரைக்கு வந்தது. இடையில் இரண்டு முறை பேருந்து நின்றது. அப்போது ஒரு முறை டீயும் மறுமுறை இட்லிகளையும் சித்திக்கு வாங்கிக் கொடுத்தான் அறிவழகன். மதுரையிலிருந்து சாத்தூருக்குப் பேருந்தில் சென்றனர். ஒருமணிக்குச் சாத்தூரில் இறங்கினர். 

“சித்தி! இப்ப ரொம்ப நேரமாயிடுச்சு. நாம புழுதிப்பட்டிக்குப் போவோம். நீங்க எங்க வீட்டுல இருங்க. விடியக்காலையில் முதல் பஸ்ல நான் உங்களைக் கூட்டிக்கிட்டுப்போயி உங்க கிராமத்துல விட்டுடுறேன்”.

“சரி”. 

அங்கிருந்து புழுதிப்பட்டி வரை செல்ல இரவுப் பேருந்துகள் ஏதும் இல்லை. அதனால் ஆட்டோவை வாடகைக்குப் பேசினான். அவர் கேட்ட வாடகை மிக அதிகம். அதனால், அறிவழகன் மாட்டுவண்டிக்காரரிடம் கேட்டு, புழுதிப்பட்டி வரை செல்ல விலை பேசினான். அவர் கேட்ட தொகை அந்த ஆட்டோவைவிடப் பாதிதான் இருந்தது. அதில் ஏறிப் புழுதிப்பட்டிக்குச் சென்றனர். புழுதிப்பட்டிக்குள் மாட்டுவண்டி நுழையும்போது மணி இரவு மூன்று.

மரத்தடியில் படுத்திருந்த கிழவர் மாட்டு வண்டியின் மணிச்சப்தம் கேட்டு எழுந்தார்.

“ஏய்! யாரு வண்டி?” என்று குரல் கொடுத்தார் கிழவர்.

தன் வண்டியை மெல்ல நிறுத்தியபடி, “மாயாண்டிங்க. சாத்தூர் பக்கம்” என்றார் வண்டிக்காரர். 

“யாரு வண்டியில?”. 

“ஐயா! நான் அறிவழகனுங்க”.

“அட அறிவா! அப்பா எப்படி இருக்காரு? உயிருக்கு ஒன்னும் பாதகமில்லையில?” என்று கேட்டார் கிழவர். 

திடுக்கிட்டுப்போனான் அறிவழகன். 

“ஐயா என்ன சொல்றீங்க? நான் இப்பத்தானே ஊருக்குள்ள வர்றேன். நீங்க சொல்லறது எனக்குப் புரியலையே!” என்று பதறியபடியே கேட்டான் அறிவழகன்.

“அட, உனக்குச் சேதி தெரியாதா?” என்று கேட்டுக்கொண்டே, இன்னைக்குக் காலையில உங்கப்பனை மாடு முட்டிடுச்சுல்ல. சிவகாசி ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போனாங்க” என்றார் கிழவர்.

சித்தி அழத் தொடங்கினார். அறிவழகனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. 

“ஐயா! நான் உடனே போறேனுங்க” என்று கூறிவிட்டு வண்டியைத் தன் வீட்டுக்குச் செல்லும்படிக் கூறினான். 

அவன் வீடு பூட்டிக்கிடந்தது. வண்டிக்காரருக்குப் பணத்தைக் கொடுத்தான். வீட்டின் ஓட்டுக்கூரையின் உட்பக்கத்தில் இருந்த வீட்டுச்சாவியை எடுத்து வீட்டைத் திறந்தான். அவனின் அம்மாவும் அப்பாவும் மாறி மாறி வயல்வேலைக்குச் சென்று வருவதால், வீட்டின் ஒரு சாவி எப்போதும் ஓட்டுக்கூரையின் இடுக்கில் இருக்கும். 

“சித்தி, நீங்க கொஞ்ச நேரம் படுத்திருங்க. விடிஞ்சதும் வீட்டைப் பூட்டி சாவியை ஓட்டுக்கூரையில வச்சுட்டு, உங்க கிராமத்துக்குப் போங்க. நான் ஓடிப்போயி அப்பாவைப் பார்த்துட்டு வர்றேன்” என்றான் அறிவழகன்.

“அறிவு! நானும் வர்றேன். நானும் அவரைப் பார்க்கணும்ல. அக்கா அங்க தனியால இருக்கும்!”.

“உங்க அம்மாவும் அங்கத் தனியாத்தான் இருங்காங்க சித்தி. நீங்க போயி உங்க அம்மாவைப் பாருங்க. நான் என் அப்பாவைப் பார்க்குறேன்”.

சித்தியின் கையில் கொஞ்சம் பணத்தைக கொடுத்தான். தன் வீட்டில் இருந்தும் கொஞ்சம் பணத்தை எடுத்துக் கொண்டான். கயல்விழிக்குத் தொட்டில் கட்டி, அதில் அவளைத் தூங்கச் செய்தான். தன் அப்பாவின் சைக்கிளை எடுத்துக்கொண்டு, அந்த இரவில் குறுக்குப் பாதைகளின் வழியாகச் சிவகாசி வரை சைக்கிளை மிதிக்கத் தொடங்கினான்.  அவன் மனம் திடமாகத்தான் இருந்தது. ஆனாலும் அவன் கண்களில் கண்ணீர்த்துளிகள் கசிந்துகொண்டே இருந்தன. அவை தன் பார்வையை மறைத்து, மங்கச் செய்யும் போதெல்லாம் கைகளால் துடைத்துக் கொண்டான் அறிவழகன். மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க சைக்கிளை மிதித்துக்கொண்டே இருந்தான். சிவகாசி மருத்துவமனைக்குச் சென்றபோது பொழுது விடிந்திருந்தது.

– – –

17

சித்தி கயல்விழியைத் தோளில் போட்டுக்கொண்டு, தன் ஊருக்குப் புறப்பட்டார். ஆறு மணிக்குத் தன்னுடைய கிராமத்துக்குள் நுழைந்தார். வீட்டின் வாசலில் கோலம் இல்லை. கதவைத் தட்டினார். மெதுவாக நடந்து வந்து கதவைத் திறந்தார் சித்தியின் அம்மா. 

தன்  மகளைப் பார்த்ததும் அவருக்குத் திகைப்பாக இருந்தது.

“எங்க மாப்பிள்ளை?”. 

“அவருக்கு அவசரமான வேலையிருக்கு. ரெண்டுநாள் கழிச்சு வருவாரு”.

“தனியாவா வந்தே?”.

“இல்லை. நான் அறிவழகனோட வந்தேன்”.

“அவன் எங்க?”.

“அவங்க அப்பாவ மாடு முட்டிடுச்சாம். சிவகாசி ஆஸ்பத்திரியில வச்சுருக்காங்க. அவன் அங்க போயிருக்கான்”.

“ஐயோ! அவரையா மாடு முட்டிடுச்சு? வா, நாம போயி பார்ப்போம்”.

“அம்மா உங்களுக்கே முடியலையில. நீங்க வீட்டுல இருங்க”.

“அது மூணுநாளாக் காய்ச்சல் இருக்கத்தான் செய்யுது. அதைவிட இதுதான் முக்கியம். வா போவோம்”.

“சரி, மதியானத்துக்கு மேலப் போவோம்”.

தன் வீட்டில் தொட்டில் கட்டி, அதில் கயல்விழியைப் படுக்க வைத்தார் சித்தி.

அறிவழகன் மருத்துவமனைக்குச் சென்றான். அவனைப் பார்த்ததும் அம்மா அழுது தீர்த்தார். அறிவழகனின் அப்பாவுக்கு வயிற்றில் தையல் போட்டிருந்தனர். அவருக்கு மயக்கம் தெளியவில்லை.

 தெருவில் சும்மா சுற்றித் திரிந்த மாட்டை விரட்டியிருக்கிறார். அது தன் கொம்பை இவரை நோக்கிச் சிலுப்பியிருக்கிறது. ஒரு கொம்பு மட்டும் இவரின் வலது புற வயிற்றின் ஓரத்தில் நான்கு அங்குலம் அளவுக்கு நுழைந்து விட்டது. 

உயிருக்கு ஆபத்தில்லை. ஆனால், முன்புபோல குனிந்து நிமிர்ந்து வேலைசெய்ய முடியாது. ஒரு வருஷத்துக்கு வீட்டில்தான் முடங்கி இருக்க வேண்டும். 

அம்மா அழுதுகொண்டே இருந்தார். அவர் நேற்று காலையில் தன் வீட்டில் டீ குடித்ததோடுசரி, வேறு எதையுமே சாப்பிடவில்லை. இடையில் இரண்டு முறை தண்ணீர் மட்டும் குடித்திருந்தார். அம்மாவை அழைத்துச் சென்று அவருக்கு வடையும் டீயும் வாங்கிக் கொடுத்தான் அறிவழகன். அம்மா அறிவழகனின் வலது தோளைப் பற்றிப் பிடித்த படியே வடையை உண்டார்.  

சித்தியும் அவரின் அம்மாவும் சிவகாசிக்கு வந்து அறிவழகனின் தந்தையைப் பார்த்தனர். அவர் அப்போதுதான் மயக்கம் தெளிந்திருந்தார். அறிவழகன் சித்தியின் அம்மாவிடம் நலம் விசாரித்தான். 

“அது காய்ச்சல்தான்பா. ஒரு வாரத்துல சரியாயிடும்”. 

மாலையில் மருத்துவர் வந்து அறிவழகனின் அப்பாவின் உடல்நிலையைப் பரிசோதித்தார். “இன்னும் மூணுநாளுல வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிடலாம். அப்புறம் ரெண்டு வாரம் கழிச்சு வந்து தையல் பிரிச்சிடலாம்” என்றார். மூணுநாளும் அறிவழகன்தான் மருத்துவமனையில் இருந்தான். ஆனாலும் அவனின் அப்பாவுக்கு உடல் இன்னமும் நலம்பெறவில்லை. 

கூடுதலாக மூன்று நாட்கள் மருத்துவமனையில்தான் இருந்தார். அறிவழகன் வீட்டுக்கும் சிவகாசிக்கும் அலைந்து கொண்டிருந்தான். சித்தப்பா ஊருக்கு வரவில்லை. தையற்கடையின் அருகில் இருக்கும் ஒரு ரூபாய் தொலைபேசிக்குப் பலமுறைகள் அழைப்புவிடுத்தான் அறிவழகன். யாரும் அந்த அழைப்பினை ஏற்கவில்லை. 

அறிவழகனின் வீட்டில் இருந்த சேமிப்பு குறையத் தொடங்கியது. ‘சித்தப்பாவைப் பார்த்துச் செலவுக்குப் பணம் வாங்கி வரலாமா?’ என்று நினைத்தான். ‘அப்படி ஊருக்குப் போக வேண்டும் என்றாலும் இப்போது கையில் பணம் இல்லையே’ என்று சிந்தித்தான்.  சித்தப்பாவுக்கு இரண்டு கடிதங்களை எழுதினான். ஒரு கடிதத்தை வீட்டு முகவரிக்கும் மற்றொரு கடிதத்தைக் கடை முகவரிக்கும் அனுப்பினான். அவரிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை.

ஒருவழியாக அப்பாவை வீட்டுக்கு அழைத்துவந்தான். அவர் படுத்த படுக்கையாகத்தான் இருந்தார். அவர் எழுந்து நடமாட இன்னும் ஒருமாதம்கூட ஆகலாம். சித்தப்பாவுக்கு அவன் அனுப்பிய இரண்டு கடிதங்களும் அவனுக்கே திரும்பி வந்தன. சித்தப்பா ஊருக்கு வரவேயில்லை. 

சித்தி தன் கிராமத்துக்கும் புழுதிப்பட்டிக்கும் ஒருநாள் விட்டு ஒருநாள் வந்து சென்றுகொண்டிருந்தார். அவருக்குத் தன் கணவர் ‘ஏன் இன்னமும் ஊருக்கு வரவில்லை?’ என்பது குறித்து, குழப்பமும் அச்சமும் மிகுந்திருந்தது. அறிவழகனிடம் அவர் வாய்விட்டே கேட்டுவிட்டார். 

“அறிவு! சித்தப்பா பற்றி ஏதாச்சும் தெரிஞ்சதா. அவரு கொஞ்சம் கோக்குமாக்கான ஆளுடா. நீ யாரிட்டையாச்சும் விசாரிடா” என்றார் சித்தி அழுது கொண்டே.

அறிவழகனுக்கு சித்தப்பாவின் மீது மிகுதியான ஐயம் வந்துவிட்டது. நேராக மணியக்காரரின் வீட்டுக்குச் சென்றான் அறிவழகன்.

அவர் இவனைப் பார்த்ததும், “அப்பா எப்படி இருக்காரு?” என்று விசாரித்தார் அவர். 

“இப்பக் கொஞ்சம் பரவால்லைங்கையா”.

“அன்னிக்கு மாடு முட்டுணப்ப அந்த மரத்தடிக் கிழவர்தான் நடக்கமாட்டாம நடந்துவந்து எங்கிட்ட சொன்னாரு. நானு ஒரு நாலுபேரைக் கூட்டிக்கிட்டு அந்தக் கிழவரோட ஓடினேன். உங்கப்பா மண்ணுல சுருண்டுகிடந்தாரு. ரத்தம் கொட்டிக்கிடந்துச்சு. தூக்கும்போதே மயங்கித்தான் இருந்தாரு. முதல்ல உசிரு இருக்காணுதான் பார்த்தோம். நல்லவேளை உள்மூச்சு ஓடிக்கிட்டு இருந்தது. அவரு வயித்துல ஒரு துண்டைக்கட்டித் திண்ணையில படுக்க வச்சோம். அன்னிக்குணு பார்த்து எந்த மாட்டுவண்டியும் கிடைக்கலை. துண்டையும் மீறிக்கிட்டு ரத்தம் வர ஆரம்பிச்சுச்சு. இன்னும் கொஞ்சம் துணியால அவரோட வயித்தைக் கட்டினோம். ஒரு கயத்துக் கட்டிலைக் குப்புறப் போட்டு, அதுல உங்கப்பாவைப் படுக்க வச்சு, கூடக் கொஞ்சம் ஆளுகளையும் கூட்டிக்கிட்டு, தூக்கிக்கிட்டு ஓடுனோம். ஏதாவது வண்டி கிடைக்குதான்னு பார்த்தோம். உங்கம்மாவும் எங்களோட ஓடி வந்தா. பாவம் அவளுக்குக் கண்ணைக் கட்டிடுச்சு. அவளுக்குத் தொணைக்கு இரண்டு பொம்பளையாளையும் கூட்டிக்கிட்டு ஓடுனோம். மூணு கிலோமீட்டர் தாண்டுன பிறகுதான் எதிர்த்தாப்புல மாட்டுவண்டி கிடைச்சுச்சு. அது சிவகாசி வண்டி. காய்கறி மூட்டைகளை ஏத்திக்கிட்டு வந்துச்சு. எங்களைப் பார்த்ததும், மூட்டைகளை செம்மண் ரோட்லேயே இறக்கிட்டு, வண்டியத் திருப்புனான் அந்த மகராசன். நான் அந்த மூட்டைகளுக்குக் காவலா ஒருத்தரை மட்டும் நிறுத்திட்டு, அதுல உங்க அப்பாவையும் அம்மாவையும் ஏத்திக்கிட்டு, வண்டியை வேகமா சிவகாசி ஆஸ்பத்திரிக்கு ஓட்டச் சொன்னோம். நாங்க வண்டி பின்னாலேயே ஓட்டமும் நடையுமா போனோம். நாங்களும் வண்டியில ஏறிக்கிட்டா, வண்டி வேகமாகப் போகாதுல்ல. வண்டி வேகமாகப் போனது நல்லவேளையாப் போச்சு. டாக்டர் சொன்னார், எங்கிட்ட சொன்னார், “இன்னும் அரைமணிநேரம் பிந்தியிருந்தா எல்லாம் முடிஞ்சுருக்கும்”.

அறிவழகனுக்குக் கண்களில் கண்ணீர்த் துளிகள் துளிர்த்தன. அவன் அவரைக் கையெடுத்துக் கும்பிட்டான்.

“ஆனாலும் சும்மா சொல்லப்பிடாதுப்பா. டாக்டர்மாருக நல்லாத்தான் வைத்தியம் பார்க்குறாங்க. ஆனால், ரத்தம் ரொம்பப் போயிட்டதால, உங்கப்பனால கண்ணைத் திறக்க முடியலை. அப்புறம் துணைக்கு ரெண்டுபேரை மட்டும் நிறுத்திட்டு நான் வீட்டுக்கு வந்தேன்”.

“ரொம்ப நன்றிங்கையா. நீங்க கடவுள் மாதிரி இருந்து, என்னோட அப்பாவைக் காப்பாத்திருக்கீங்க” என்றான் அறிவழகன் மனம் நெகிழ்ந்து. 

“பரவாயில்லைப்பா. இதெல்லாம் மனுசனுக்கு மனுசன் உதவுறதுதானே! இப்ப என்ன, எதும் பணத்தேவையா? என்ன வேணும்?”.  

“இல்லைங்கையா. ஐயா! என்னோட சித்தப்பா காத்தமுத்து ஊர்ல இருந்து உங்களுக்கு போன் பண்ணுனாரா ஐயா?”.

“இல்லையே!”.

“இதுக்கு முன்னாடி உங்க கிட்ட போன்ல பேசும்போது ஏதாவது தகவல் சொன்னாராங்கையா?’.

“இல்லையே!”.

“ஐயா! கடைசியாக அவர் எப்போ உங்களுக்கு போன்ல பேசினாருங்க?”. 

“அதுவா, நீ ஊருக்குப் போயி ஒரு வாரத்துக்குள்ள இருக்கும். நீ அங்கையே ரெண்டு மாசம் தங்கப் போறதா சொன்னார். அந்தத் தகவலை நான் உங்கப்பாக்கிட்ட சொல்லிட்டேனே!”.

 அறிவழகனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால், அதை அவரிடம் காட்டிக் கொள்ளவில்லை.

“சரிங்கையா. நல்லதுங்க. நான் வரேணுங்க” என்று கூறிவிட்டு மெல்ல நடந்து வீட்டுக்கு வந்தான் அறிவழகன்.  

‘ஏதோ தப்பு நடந்துவிட்டது’ என்று மட்டும் அறிவழகனுக்குப் புரிந்துவிட்டது. ஆனால், அதை அவன் யாரிடமும் சொல்லவில்லை. 

‘ஒன்று பிரசன்னா சார் ஏமாற்றியிருக்க வேண்டும். அல்லது சித்தப்பா நம் அனைவரையும் ஏமாற்றி இருக்க வேண்டும். அல்லது அவருக்கு ஏதாவது சிக்கல் ஏற்பட்டிருக்கலாம். விபத்தோ, வேறு ஏதோ’ என்று நினைத்தான் அறிவழகன்.

வீட்டுக்கு வந்தான். அம்மாவின் வெள்ளிப் பொருளை விற்றுப் பணம் புரட்டினான் அறிவழகன். ‘சித்தியையும் ஊருக்கு அழைத்துச் செல்வதா, வேண்டாமா?’ என்று குழப்பத்தில் இருந்தான். ‘தான் மட்டும் நேரில் சென்று, நிலைமையை அறிந்து வரலாம்’ என்ற முடிவுக்கு வந்தான். 

இரண்டு துணிகளை மட்டும் எடுத்துக்கொண்டு, புழுதிப்பட்டியிலிருந்து புறப்பட்டான் அறிவழகன். ‘ ‘பணம் கண்களை மறைக்கும்’ என்று சொல்வார்களே! பணம் மனைவியையும் பிள்ளையையும்கூட மறைத்து விடுமா என்ன?’ என்று தனக்குள் கேட்டுக்கொண்டான். மதுரை வரை பேருந்தில் சென்றான். சென்னை ரயிலுக்காகக் காத்திருந்தான் அறிவழகன்.

ஒரு மாதத்திற்குள் தனக்குள் ஏற்பட்ட மாற்றங்களைப் பற்றிச் சிந்தித்தான் அறிவழகன். ‘புழுதிப்பட்டியில் தானும் ஒரு புழுதியாகப் பறந்து, திரிந்த அந்த அறிவற்ற அறிவழகனைப் பட்டணம் எப்படி மாற்றிவிட்டது!’ என்று நினைத்து வியந்தான். 

தனக்குள் பேசத் தொடங்கினான் அறிவழகன்:

‘சுற்றுலாச் சென்ற எனக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சிகளைக் கொடுத்து, வீட்டு வேலைகளில்  மூழ்கடித்து, வித்தியாசமான தொழிலில் இறக்கிவிட்டு, சிக்கல்களைச் சந்திக்க வைத்து, அவற்றிலிருந்து மீண்டெழக் கற்றுக்கொடுத்து, வாழ்க்கையைப் புரிய வைத்துள்ளது. துக்கம், மகிழ்ச்சி, ஏமாற்றம், எதிர்பார்ப்பு, ஏக்கம், நஷ்டம், லாபம், பணம், நகை, மனிதர்களின் குணம் என எத்தனை எத்தனை நிகழ்வுகள் இந்த ஒரு மாதகாலத்தில்!. இதுதான் பக்குவமா? எல்லாவிதமான அனுபவங்களையும் தானே பட்டு அறிவதுதான் பக்குவம் என்றால், படிப்புதான் எதற்கு? நான் ஏதும் அறியாதவனாக, மனித உறவுகளைப் புரிந்துகொள்ள முடியாதவனாக, வெள்ளந்தியாக, அதிகம் சிந்திக்கத் தெரியாதவனாக இருந்தேன். குறிப்பாக நிம்மதியாக இருந்தேன். இந்தப் புழுதிப்பட்டி என்னைப் பொத்திப் பொத்தி வளர்த்து வந்தது. ஆனால், பட்டணம் என்னை ஒரு மாதத்தில் இப்படிப் புரட்டிப் போட்டுவிட்டது. இப்போது எனக்குப் பலவிஷயங்கள் தெரிகின்றன. மனித உறவுகளைப் புரிந்துகொள்ள முடிகிறது. நான் இப்போது சூது, வாது நிறைந்தவனாக இருக்கிறேன். அதிகமாகச் சிந்திக்கிறேன். ஆனால், நான் இப்போது துளியும் நிம்மதியாக இல்லை. இது பருவத்தின் வளர்ச்சியா? இல்லை பட்டணம் தந்த பரிசா? நான் என்னைத் தொலைத்தவனாக இருக்கிறேன். புழுதிப்பட்டியில் மகிழ்ச்சியாகச் சுற்றித் திரிந்த அறிவழகன் எங்கே? இப்போது ஆளுக்கு ஏற்ப, நேரத்துக்கு ஏற்ப பட்டணத்தில் பொய்யும் புரட்டும் பேசித் திரியும் அறிவழகனாக மாறிவிட்டேனே! சித்தப்பாவை மட்டும் இன்னும் என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. அவர் நல்லவரா? கெட்டவரா? பணம் இருக்கும்போது ஒரு மாதிரியாகவும் பணம் இல்லாத போது வேறு மாதிரியாகவும் மனிதர்களால் மட்டுமே நடந்துகொள்ள முடியும்போல! சித்தப்பா ஏமாற்றுக்காரரா? அன்பு நிறைந்தவரா? பணம்தான் அவரை இப்படிப் பாடாய்ப் படுத்துகிறதா? சித்தப்பாவைப் போலச் சித்தி இல்லையே! சித்திகூட என்னை முதலில் ஏற்றுக்கொள்ளவில்லையே. என்னால் அவரின் குடும்பத்துக்கு நல்லது ஏற்படத் தொடங்கியதும் அவர் என் மீது பாசத்தைப் பொழியத் தொடங்கினார். அப்படியானால் சித்தியும் சரியில்லைதானே? சித்தப்பா எப்படி என்னை உரிமையாளராக்கிப் புதிய கடையைத் தொடங்க நினைத்தார்?. என்னால் அவருக்கு ‘அதிக லாபம் கிடைக்கும்’ என்ற நம்பிக்கையிலா? எனக்கு இருக்கும் சிறிய அறிவை அவர் தனக்காகப் பயன்படுத்திக் கொள்ளப் பார்த்தாரா? அதற்காகத்தான் அவர் என்னை அங்கிருக்கும் காலேஜில் சேர்க்க நினைத்தாரா? சித்தப்பா தன் மனைவியின் நகையை விற்றுவிட்டார். காலேஜ் டெண்டரால் கிடைத்த லாபப் பணமும் அவரிடம்தான் உள்ளது. நிச்சயமாகப் பிரசன்னா சாரிடமிருந்து லாரிக்குரிய முழுத் தொகையையும் வாங்கியிருப்பார். இவ்வளவு பணத்தையும் இப்போது சித்தப்பா தன் கைகளில் வைத்திருக்கிறாரா? பிரசன்னா சாரிடம் அவர் வாங்கிய தொகையில் மூன்றில் ஒரு பங்குதானே அந்த லாரியின் சொந்தக்காரருக்குத் தர வேண்டும். அதுவும் பத்து நாட்கள் கழித்துத்தானே தர வேண்டும். சித்தப்பா அவரிடம் கொடுத்திருப்பாரா? அவரிடமிருந்து தன்னுடைய ரேஷன் கார்டை வாங்கியிருப்பாரா? நான் சித்தப்பாவுக்கு எழுதிய இரண்டு கடிதங்களும் ஏன் திரும்பி வந்தன?. தையற்கடையின் வாசலில் உள்ள போனுக்கு நான் போன் போட்டு போட்டு அலுத்துவிட்டேனே. ஏன் யாருமே அந்த போனை எடுக்கவில்லை? இப்போது கடைகள் இருக்கின்றனவா? சித்தப்பா அந்த வீட்டில்தான் குடியிருக்கிறாரா? ‘தான் மணியக்காரரிடம் போன் பேசியதாகவும் அவர் ‘சித்தியின் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை’ என்று கூறியதாகவும் எங்களிடம் ஏன் பொய்க்கூற வேண்டும்?. எல்லோருமே எல்லோரிடமும் ஏதாவது ஓர் எதிர்பார்ப்போடுதான் உறவினைப் பலப்படுத்திக் கொள்வார்களோ? அந்த எதிர்பார்ப்பு குறையும்போது அந்த உறவினை உதறிவிடுவார்களோ? அப்படித்தான் இப்போது அவரால் நானும் சித்தியும் கயல்விழியும் உதறப்பட்டுள்ளோமா?’.

ரயில் வந்தது.

– – –

18

ரயிலில் ஏறினான் அறிவழகன். அவனிடம் மூன்று திட்டங்கள் கைவசமிருந்தன. சித்தப்பா பணத்தோடு தலைமறைவாக ஆகியிருந்தால், அவரைத் தேடி அலையக் கூடாது. சித்தப்பா பணத்தை இழந்து தவித்துக் கொண்டிருந்தால் அவருக்கு மீண்டும் தோள் கொடுக்க வேண்டும். சித்தப்பா பண மயக்கத்தில் இருந்தால், அதிலிருந்து அவரைத் தெளிய வைத்து, அவரிடம் இருக்கும் பணத்தைக் கொண்டு, அங்கு எடுக்கும் சரக்குகளைச் சிவகாசி வரை கொண்டுவந்து நல்ல லாபத்துக்கு விற்க வேண்டும். வண்டி புறப்படத் தொடங்கியது.

இரவுக் குகைக்குள் ரயில் அலறியபடியே புகுந்தது. அறிவழகனின் மனம் புதிய ஒளியைத் தேடியது. அது கிழக்கில் இருந்துதான் வரவேண்டும் என்பதில்லையே! அறிவழகன் தூங்கி, விழித்தான். வண்டி விழுப்புரத்துக்கு வந்து நின்றது. ரயில் விழுப்புரத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் அறிவழகன் மீண்டும் தூங்கத் தொடங்கினான்.

ரயில் தாம்பரத்தை நெருங்கும்போது பொழுது விடியத் தொடங்கி இருந்தது. அறிவழகன் இறங்குவதற்குத் தயாரானான். வண்டி நிற்கும் முன் அவசரப்பட்டு இறங்கியதால், தடுமாறி விழத் தெரிந்தான். ‘எதுக்கு இவ்வளவு அவசரம்?’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். 

ரயில் நிலையத்தைவிட்டு வெளியே வந்தான். பால் டிப்போ வழியாகச் சித்தப்பாவின் வீட்டுக்கு நடந்தான். ‘பால் டிப்போவின் முன்னே நின்ற மக்கள் வரிசையில் தன் சித்தப்பா நிற்கிறாரா?’ என்று பார்த்தான். அவர் இல்லை.

அவரின் வீடு நோக்கி நடந்தான். அந்தத் தெருவில் பல வீடுகளில் வாசலைத் தெளித்திருந்தனர். சித்தப்பாவின் வீடு மட்டும் வாசல்தெளிக்காமல் இருந்தது. வீட்டின் முன் இருந்த கொடியில் புதிய துண்டு காய்ந்து கொண்டிருந்தது. அது இவர்களின் வீட்டில் இருந்த துண்டாக இவனுக்குத் தெரியவில்லை. 

வீட்டின் முற்றத்தில் வழக்கமாக இவன் இரவுகளில் படுத்திருந்த பகுதியில் ஒரு பிளாஸ்டிக் வாளி இருந்தது. அதுவும் இவர்களின் வீட்டில் இருந்ததாக இவனுக்கு நினைவில் இல்லை. 

இவனுக்கு ஐயம் கூடிக்கொண்டே வந்தது. இருந்தாலும் அதைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்காகக் கதவை வேகமாகத் தட்டினான். 

“சித்தப்பா! சித்தப்பா!” என்று கத்தினான் அறிவழகன்.

கதவு மெதுவாகத் திறக்கப்பட்டது. ஒரு முதியவர் வெளியே எட்டிப் பார்த்து “யாரு?” என்று கேட்டார்.

“நீங்க புதுசா இங்க குடிவந்திருக்கீங்களா?”.

“ஆமாம்”.

“நீங்க குடிவந்து எவ்வளவு நாளாச்சு?”.

“ஒரு வாரம்”.

“சரி. வரேன்” என்று கூறிவிட்டுத் திரும்பினான் அறிவழகன்.

“நீங்க யாருன்னு சொல்லலையே”.

அவருக்கு அறிவழகன் பதிலேதும் சொல்லாமல் தெருவில் இறங்கி, வேக வேகமாக நடக்கத் தொடங்கினான். பால் டிப்போ வரை சென்றான். இடது புறம் திரும்பி மின்சார ரயில்நிலையத்துக்குச் சென்றான். கடற்கரை நிறுத்தத்திற்குப்  பயணச்சீட்டை வாங்கினான். 

சில நிமிடங்களில் ரயில் வந்தது. ஏறி அமர்ந்தான். மனம் பொங்கிப் பொங்கி அழுதுகொண்டிருந்தது. ஆனால், அவன் கண்களில் துளி கண்ணீரும் வரவில்லை. அடுத்த அரைமணிநேரத்தில் கடற்கரை மணற்பரப்பில் நடக்கத் தொடங்கினான். 

எல்லாவற்றையும் இழந்து நிற்பவரிடம் மனம் மட்டும் துக்கத்தால் நிறைந்திருக்கும். அறிவழகனின் மனம் மட்டும் அல்ல உடல் முழுக்கவே துக்கத்தால்தான் நிறைந்திருந்தது. எதைப் பற்றியும் அவனால் நினைக்க முடியவில்லை. கயல்விழியின் முகம் மட்டும் அவன் கண்களுக்குள் வந்து வந்து சென்றது.  

காலுக்குக் கீழ் வெண்மணல். கண்களுக்கு எதிரே நீலக்கடல். அவனால் நடக்க முடியவில்லை. அப்படியே உட்கார்ந்துகொண்டான். தலையைக் கவிழ்த்துக் கொண்டான். வெகுநேரம் அப்படியே இருந்தான். கழுத்து வலிக்கத் தொடங்கியதும் நிமிர்ந்தான். அவனுக்கு முன்னும் பின்னும் பலர் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தனர். சில குழந்தைகள் கடலில் விளையாடிக் கொண்டிருந்தனர். எழுந்தான்.

நேராக அந்தப் பழைய படகுக்கு அருகில் சென்றான். அது சற்றும் இடம்மாறாமல் அப்படியே இருந்தது. அதன் அருகில் அமர்ந்துகொண்டான்.  சித்தப்பாவைப் பற்றி நினைக்கவே மனம் பதறியது. ‘இந்தப் பட்டணத்தில் அவர் எந்த மூலையில் இருக்கிறாரோ? நான் சித்திக்கு என்ன பதில் சொல்லப் போகிறேன்?’ என்று நினைத்தான். அவனுக்கு அழுகை வந்தது. 

‘நுங்கம்பாக்கத்துக்குப் போயி பிரசன்னா சாரையும் பார்த்துவிட்டால் நம் சந்தேகம் இன்னும் தெளிவாகிவிடும்’ என்று நினைத்தான் அறிவழகன். வெய்யில் மிகுதியாகிக்கொண்டு வந்தது. ‘பத்து மணிக்கு இங்கிருந்து புறப்படலாம்’ என்று தனக்குள் நினைத்துக் கொண்டான். 

கடல் தன் அலையை நீட்டி நீட்டித் தன்னைக் கேலிசெய்வதாக உணர்ந்தான். ஓடிச் சென்று இந்தக் கடலினை உதைக்க வேண்டும்போல இருந்தது அறிவழகனுக்கு. அவன் முன்பு கடலை நேசித்தான். முன்பு அதில் இறங்கி விளையாட நினைத்தான். அதெல்லாம் ஒரு காலம். இனிமையான கனாக்காலம். இப்போது அவனுக்குக் கடல் பிடிக்கவில்லை. கடலுக்குத் தன் முதுகைக் காட்டிக்கொண்டு திரும்பி அமர்ந்தான். கடல் தன் குளுமையை அவன் முதுகில் அறைந்துகொண்டிருந்தது.

அவன் தன்னுடைய சிந்தனை செயலிழந்து விட்டதாகவே நினைத்தான். அவனால் எதையும் சிந்திக்க முடியவில்லை. பசியெடுத்தது. எழுந்து சென்றான். சாலையோரத்தில் விற்ற சில பண்டங்களை வாங்கி உண்டான். நேராக மின்சார ரயில் நிலையத்துக்கு வந்தான். நுங்கம்பாக்கம் நிறுத்தத்துக்கு ஒரு பயணச்சீட்டை வாங்கினான்.

சில நிமிடங்களில் ரயில் வந்தது. ஏறி அமர்ந்தான். நுங்கம்பாக்கத்தில் இறங்கினான். பிரசன்னாவின் கடைக்கு வந்தான். அது பூட்டியிருந்தது. இவன் முன்பு அந்த லாரியை நிறத்தியிருந்த இடத்தின் அருகில் வந்து அப்படியே அமர்ந்துகொண்டான். போக்குவரத்து நெரிசல் மிகுதியாகியது. தூசி சுழன்று காற்று கருக்கத் தொடங்கியது. பத்தரை மணிக்கு மேல் பிரசன்னா தன்னுடைய புல்லெட் வண்டியில் வந்தார். அவர் கடையைத் திறந்து உள்ளே சென்றதும். மெதுவாக எழுந்து கடைக்குள் சென்றான் அறிவழகன். 

“சார்! வணக்கம்”.

“நீங்க?”.

“நான் தாம்பரம் காத்தமுத்து… அவரோட வருவேன்ல. அறிவழகன்”.

“ஆங்! அந்த லாரியைக் கொண்டு வந்தீங்களே!”.

“ஆம்மாங்க சார்”.

“என்ன விஷயம்?”.

“சார், என்னோட சித்தப்பா அந்த லாரிக்குப் பணத்தை வாங்கிட்டுப் போயிட்டாரா?”.

“ஆங். வாங்கிட்டாரு. நான் சொன்ன விலையைவிடக் கூடுதலாப் பத்தாயிரத்தைச் சண்டைபோட்டு வாங்கிட்டுப் போயிட்டாரு”.

“சரிங்க சார். நான் வர்ரேன்”.

‘சித்தப்பா மாபெரும் திட்டத்தோடுதான் ஊரைவிட்டுச் சென்றுள்ளார்’ என்பதை உறுதிப்படுத்திக் கொண்டான் அறிவழகன். ‘கை நிறையப் பணம் வந்ததும் மனம் நிறைய திமிர் வந்துவிடுகிறதோ?’ என்று  தனக்குள் கேட்டுக் கொண்டான். ‘இப்படித் தனக்குள் கேட்டுக்கொள்வதால் என்ன பயன்?’ என்று அடுத்த விநாடியே நினைத்துக் கொண்டான். 

‘அடுத்து என்ன செய்யலாம்?’ என்று நினைத்தான். ரயில் நிலையத்தை நோக்கி நடந்தான். ரயிலேறி, தாம்பரத்துக்கு வந்து இறங்கினான். ‘அடுத்து என்ன?, அடுத்து என்ன?’ என்று அவன் மனம் அவனைக் கேட்டுக் கொண்டே இருந்தது. 

‘அடுத்து என்ன, புழுதிப்பட்டிதான். ஆனால், அதற்குப் பன்னிரண்டு மணிவரை காத்திருக்க வேண்டும். காத்திரு. ஒரு முறை, ஒரேயொருமுறை கடைவரை போயிட்டு வருவோமா?. வேண்டாம். ஏன்?. சித்தப்பா நிச்சயமா அந்த லாரிக்காரரிடம் பணத்தைக் குடுத்திருக்க மாட்டார். இப்போ நான் அந்த லாரிக்காரர் கண்ணுல பட்டா அவ்வளவுதான். ஏதுக்கு நீ ரோட்டு வழியாப் போற? குறுக்குப்பாதை வழியாக் கடைக்குப் போ. வேறு வழியின்றி எழுந்தான். குறுக்குப்பாதை வழியாக நடந்தான். 

‘இறுதியாக இந்தப் பட்டணத்தைவிட்டுப் புறப்படும் முன் கடையையும் பார்த்துவிட்டுச் செல்வோமே’ என்று தன் உள்ளத்தில் இறுதித் துளியாக ஒட்டியிருந்த அந்த ஆசையை நிறைவேற்றுவதற்காகக் கடையை நோக்கிச் சென்றான்.

வழக்கமாக அவனும் சித்தப்பாவும் இரவில் சாப்பிடும் சாலையோரக் கடையைப் பார்த்தான். அது இரவுக்கடை என்பதால் பகலில் அதைத் தார்ப்பாய் போட்டு மூடியிருந்தனர். சித்திக்குப் புரோட்டாவும் ஆம்லெட்டும் வாங்கிச் சென்றதை நினைத்துக் கொண்டான். அவனுக்கு நெஞ்சை அடைத்தது. கயல்விழியின் முகம் அவனின் கண்களுக்கு வந்து சென்றது.

சுபம் டீக்கடையைக் கடந்து சென்றான். அடுத்த சில நிமிடங்களில், தன்னை யாரோ சட்டையைப் பிடித்துப் பின்னால் இழுப்பதாக உணர்ந்தான். தடுமாறியபடியே திரும்பிப் பார்த்தான். சுபம் டீக்கடையின் முதலாளி. அவர் இவனைப் பிடித்து இழுத்த சில விநாடிகளிலேயே, டீக்கடையில் வேலை பார்த்த சிலரும் தெருவில் இறங்கிவந்து இவனை அடிக்கத் தொடங்கினர். 

தெருவில் போவோர் வருவோர் சில விநாடிகள் நின்று இவன் அடி வாங்குவதைப் பார்த்தனர். அதன் பின்னர் அவரவர் தத்தமது வேலையைப் பார்க்க நினைத்து நடக்கத் தொடங்கினர். 

 அவனைத் தம் பலம் கொண்ட மட்டும் அடித்து முடித்த பின்னர், அவனை இழுத்துச் சென்று, டீக்கடைக்குள் தரையில் தள்ளினர். அறிவழகனின் முகம் வீங்கிவிட்டது. சட்டை கிழிந்துவிட்டது. டீக்கடையில் வேலை பார்த்தவர்கள் இவன் கொண்டுவந்த பயணப் பையைப் பரிசோதித்தனர். அவனுக்கு அவமானமும் அழுகையும் சேர்ந்து அவன் தலையைச் சுழலச் செய்தன.

டீக்கடை முதலாளி, இவனை வேக வேகமாக உதைத்துக்கொண்டே கேட்டார், “டீயும் வடையும் போண்டாவும் வாங்கித் தின்னத் தெரிஞ்சுச்சுல்ல, காசுகொடுக்கத் தெரியாதா? ரெண்டுமாசப் பாக்கி நிக்குது. நீங்க பாட்டுக்குக் கடையக் காலி பண்ணிட்டு ஓடிடுவீங்க. நீங்க எப்ப வருவீங்கணு நாங்க ரோட்டை வேடிக்கை பார்த்துக்கிட்டு நிற்கணுமா?” என்று. முதலாளிக்கு மூச்சு முட்டியது. அதனால் உதைப்பதை நிறுத்தினார். 

அறிவழகனுக்கு அழுகையே வந்துவிட்டது. சித்தப்பாவை நினைத்தான். அவன் உடல் முழுவதும் எரிச்சல் ஏற்பட்டது. ‘தான் இப்போது என்ன கூறினாலும் இவர்கள் நம்மை நம்பப் போவதில்லை’ என்பதை உணர்ந்தான் அறிவழகன்.

அவனின் பயணப் பையிலிருந்து, ஐந்நூறு ரூபாய்த் தாளைக் கண்டுபிடித்து, அதை முதலாளியிடம் கொடுத்தார் ஒரு பணியாளர். மற்றொருவர் அறிவழகனின் சட்டை, பேண்ட் பைகளைச் சோதனையிட்டார். 120 ரூபாய் இருந்தது. அதையும் எடுத்து முதலாளிடம் கொடுத்தார். 

முதலாளி அறிவழகனைப் பார்த்து, “நாயே! இன்னும் பத்து ரூபாய்க் குறையுது” என்றார். அறிவழகன் மெல்ல எழுந்தான். “அப்டியே ஓடீடு நாயே!” என்றார் முதலாளி. 

அறிவழகன் தன் பயணப் பையை எடுத்துக்கொண்டு ரயில் நிலையத்தை நோக்கி நடந்தான். தன் வாழ்வில் முதல் முறையாகப் பயணச் சீட்டு இல்லாமலேயே இங்கிருந்து புழுதிப்பட்டிவரை பயணம் செய்ய நினைத்தான் அறிவழகன்.  

தன் மனைவியையும் குழந்தையையும் அறிவழகனையும் பேருந்தில் ஏற்றிவிட்ட அன்றே சித்தப்பா தன் வீட்டைக் காலிசெய்துவிட்டு, அங்கிருந்து சிறிய வேனில் அத்தனை பொருட்களையும் அடைத்துக்கொண்டு சென்ட்ரல் ரயில்நிலையத்திற்கு வந்தார். பொருட்களைத் தெருவில் இறக்கினார். 

ஒரு மணிநேரத்திற்குப் பின்னர் வேறொரு வண்டியைப் பிடித்து, சென்னையின் எல்லையைக் கடந்தார். அடுத்த இரண்டு மணிநேரங்களுக்குப் பின்னர் பிறிதொரு வண்டியைப் பிடித்து, விஜயவாடாவுக்குச் சென்றார்.  அங்கு ஒரு வீட்டை மலிவான வாடகைக்கு எடுத்துத் தங்கினார். முதல்நாள் தான் கொண்டுவந்த அத்தனை பணத்தையும் தன்னருகிலேயே வைத்துக்கொண்டு, தூங்காமல் இருந்தார். 

மறுநாள் பகலில் பாயை விரித்து, அதில் தான் கொண்டுவந்த மொத்தப் பணத்தையும் பரப்பி, அதன் மீது ஒரு வேட்டியை விரித்து, அதன் மீது படுத்தார். அவை பிறரின் பணம். ஏமாற்றி ஏமாற்றிச் சேமித்த பணம். அடாவடியாகச் சண்டையிட்டுப் பறித்து வந்த பணம். நம்பிக்கைத் துரோகம் செய்து கொண்டுவந்த பணம். ஆனாலும் அவருக்கு அன்றைய தினம் நன்றாகத்தான் தூக்கம் வந்தது.  ஒரு வாரத்திற்குப் பின்னர் மணியக்காரருக்கு போன் செய்தார். அறிவழகனும் தன் குடும்பமும் இரண்டு  மாதங்கள் புழுதிப்பட்டியில் தங்கப் போவதாகப் பொய்க்கூறினார். அதன் பின்னர் சித்தப்பா யாருக்கும் போன் செய்யவில்லை, கடிதம் எழுதவில்லை. அன்றோடு அவர் எல்லா உறவையும் அறுத்துக்கொண்டார். 

– – –

 

இப்போதெல்லாம் சித்தி தன் அம்மாவிடம் கயல்விழியை ஒப்படைத்துவிட்டு அதே கிராமத்தில் வயல்வேலைக்குச் செல்லத் தொடங்கிவிட்டார். தன் கணவர் ஓடிப்போன விஷயம் கிராமம் முழுக்கத் தெரிந்துவிட்டது. அவமானம்தான். என்ன செய்ய முடியும்? 

அறிவழகனும் அவனின் அம்மாவும் புழுதிப்பட்டியிலேயே வயல் வேலைக்குச் செல்லத் தொடங்கியிருந்தனர். அறிவழகனின் அப்பா படுத்த படுக்கையாகத்தான் இருந்தார்.

சித்தப்பா தன் வீட்டுக்கு அருகில் இருந்த கடையில் வழக்கமாகச் சாப்பிடத் தொடங்கினார். வீட்டை விட்டு வெளியே செல்லவே இல்லை. பணம் பரப்பப் பட்ட பாயில் படுக்க, தூங்க என அவரின் பொழுது இனிதே கழிந்தது.சித்தப்பா உண்பதும் உறங்குவதுமாகத் தன் காலத்தைக் கழிக்கத் தொடங்கினார். அவரின் பணப்பாயின் உயரம் சற்றுத் தணியத் தணிய அவருக்குத் தூக்கம் குறையத் தொடங்கியது. 

‘இருக்கும் பணத்தைக் கொண்டு, ஏதாவது தொழில் தொடங்கலாம்’ என்று பலமுறை நினைத்தார். ஆனால், அவர் உடல் அதற்கு ஒத்துழைக்கவில்லை. ‘இப்படியே பணம் இருக்கும்வரை உண்டு, செரித்துப் போவோம்’ என்று உறுதியாகக் கூறிவிட்டது அவரின் மனம்.  

– – –

அறிவழகன் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுவிட்டான். மேற்கொண்டு படிக்க நினைக்காமல் தொடர்ந்து வயல்வேலைக்குச் சென்றான். அவன் அப்பாவுக்கு உடல்நிலை சிறிது சிறிதாகத் தேறிவந்தது. 

கயல்விழி வளர்ந்துகொண்டிருந்தாள். சித்தியின் அம்மா இறந்த பின்னர், சித்தி அறிவழகனின் வீட்டுக்கே வந்துவிட்டார். அறிவழகனின் அப்பா நடமாடத் தொடங்கியிருந்தார். 

அறிவழகனின் மனத்தில் படிந்திருந்த நகரச் சாயம் நீங்கிவிட்டது. அவன் உடல் முழுதும் மீண்டும் பழையபடி, புழுதி படியத் தொடங்கிவிட்டது. மிகுதியான உடல் உழைப்பு, குறைவான வருமானம், நிம்மதியான வாழ்வு என அவனை மீண்டும் தன் உள்ளங்கையில் தாங்கிக்கொண்டது ‘புழுதிப்பட்டி’.

 

– – – 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *