10.திண்டுவின் பயணங்கள் – 1

“நிலவில் கொஞ்ச காலம், அதாவது நான்கு நாட்கள் ஓய்வு எடுத்துக் கொண்டு என் பயணத்தைத் தொடர்ந்தேன்.  உண்மையில் எனக்குத்தான் அந்த ஓய்வு தேவைப்பட்டதே தவிர என்னுடைய குதிரை களைப்படையவே இல்லை.  எனக்காக அது நான்கு நாட்கள் பொறுத்திருந்தது என்று தான் சொல்லமுடியும்.  மீண்டும் அதில் ஏறி செவ்வாயை நோக்கி புறப்பட்டேன்.  செவ்வாய் பூமியில் இருந்து பார்க்கும் போது சிறிய செந்நிற புள்ளியாகத் தெரிவது.  நிலவில் இருந்து பார்க்கும் போது சற்று பெரிதாக தெரிந்தது.  எவ்வளவு அழகு.  என் குதிரை தன் பெரிய சிறகுகளை அடித்து விண்ணில் பாய்ந்தது.  அது அவ்வளவு மகிழ்ச்சியுடன் இருந்தது.  சில சமயங்களில் சூரியனின் ஒளி பாயும் வெளியிலும் சில சமயம் சூரிய ஒளி கோள்களால் மறைக்கப்படும் போது கடும் இருளிலும் பயணித்தோம்.  அப்போது குதிரை நட்சத்திரங்களின், பிற கோள்களின் ஒளியைக் கொண்டு வழி தவறாமல் பயணித்தது.  சில சமயங்களில் குறுக்கே வரும் சிறிய விண்கற்களை தன் சிறகுகளால் அறைந்து உடைத்து சிதறடித்தது.  பெரிய கற்களை விலகி திறமையுடன் சென்றது.  அது போல ஒரு குதிரையை எங்குமே காணமுடியாது.  அது ஒரு காலம்…..” தாத்தா பெருமூச்சுவிட்டு நிறுத்தினார்.  திண்டுவின் முகத்தைப் பார்த்தார்.

திண்டு தாத்தாவைப் பார்த்தான்.  பின் சொன்னான், ”இக்காலத்தில் தான் குதிரைகளுக்கு சிறகுகளே இல்லையே.  அவற்றைக் கொண்டு விண்ணில் பயணிப்பதெல்லாம் நடக்கவே நடக்கக் கூடியதல்ல….ம்.” அவன் முகத்தில் ஏமாற்றம் தென்பட்டது.

தாத்தா தொடர்ந்தார்.  ”இருந்தாலும் திண்டு உனக்காக ஒரு பறக்கும் குதிரையை நான் தருவேன்”

”அப்படியா? அது எப்படி? பூமியில் பறக்கும் குதிரைகளே இப்போது இல்லை என்றீர்களே?”

”ஆம்.  பூமியில் இல்லை.  ஆனால் அன்று நான் மேற்கொண்ட முதல் பயணத்திற்குப் பிறகு மேலும் சிலமுறை விண் பயணங்களை மேற்கோண்டேன்.  நான்காம் பயணத்தின் போது கூடவே அய்ந்து பறக்கும் குதிரைகளை கொண்டு சென்றேன்.  என் குதிரையுடன் சேர்த்து மொத்தம் ஆறு குதிரைகள்.  அந்த பயணம் யுரேனசை நோக்கி.  வியாழன் கோளின் ஒரு நிலவில் ஓய்வெடுத்தபோது நான்கு குதிரைகளை அங்கேயே விட்டுவிட நேர்ந்தது.  அந்த நிலவு கடும் குளிர் மிக்கது.  என்றாலும் குதிரைகள் அதைத் தாக்குப்பிடித்தன.  அத்துடன் அந்த நிலவு புவியைப் போன்றே காற்று மண்டலம் கொண்டிருந்தது.  ஒருவேளை அவற்றின் சந்ததிகள் இப்போது அங்கு இருக்கக் கூடும்.  நான் மீண்டும் அங்கு சென்று உனக்காக ஒரு இளம் பறக்கும் குதிரையைக் கொண்டு வருவேன்.  நிச்சயம் அங்கு இருக்கும்.  அதை கொண்டு இங்கு நீ வானில் பறக்க முடியும் ஆனால் விண்வெளியில் பறக்க இயலாது.”

”எனக்கு பறக்கும் குதிரையா?  திண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தான்.  ”ஆனால் நான் விண்வெளியில் பறக்க இயலாதா? நீங்கள் பறந்தீர்கள்?……..ஆனால் தாத்தா ஒரு கேள்வி” என்றான் திண்டு.

”கேள்”

”பூமியின் காற்று மண்டலத்திற்கு அப்பால் விண்வெளியில் காற்று இல்லை என்கிறார்கள்.  எனில் பூமியின் காற்று மண்டலத்தைக் கடந்த பிறகு நீங்களும் உங்கள் குதிரையும் எப்படி சுவாசித்தீர்கள்? காற்று இல்லாத இடத்தில் குதிரை எப்படி சிறகடித்துப் பறந்தது?”

”என் செல்ல திண்டு.  நீ நல்ல புத்திசாலி அருமையான கேள்வி.  அதனால்தான் நீ இன்று விண்வெளியில் பறக்க இயலாது என்றேன்.  உன் இக்கேள்வியின் பதிலில் பூமியின் கடந்தகால உயிர்களின் வரலாறு அடங்கி இருக்கிறது.  பறக்கும் குதிரைகள் மறைந்ததன் வரலாறும் இதில் இருக்கிறது.  சொல்கிறேன்.  முதலில் விண்ணில் என் குதிரையால் சிறகடிக்க முடியும்.  இரண்டாவது நானும் என் குதிரையும் சுவாசிப்பதில் எந்த தடையும் இல்லை.  ஏனெனில் அது மிகப் பழங்காலம்.  பூமியில் உயிர்கள் தோன்றி சில ஆயிரம் ஆண்டுகளே ஆகியிருந்தன.  நீயோ அல்லது உன் காலத்தைச் சேர்ந்த வேறு யாருமோ கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவிற்கு அவ்வளவு விதவிதமான உயிரினங்கள் அப்போது இருந்தன.  பறக்கும் குதிரைகள் மட்டுமல்ல.  பறக்கும் யானைகள்.  பறங்கும் திமிங்கலங்கள்.  பறக்கும் டைனோசர்கள்.  இப்படி எத்தனையோ.  அவை அனைத்தும் மிகப் பெரிய உருவமும் எடையும் கொண்டவை.  அன்று மனிதர்கள் கூட, நான் உட்பட, இன்று இருப்பவர்களை விட பெரிய உருவம் கொண்டவர்கள்.  எனில் என் குதிரை எவ்வளவு பெரியது என்பதை ஊகம் செய்துகொள்.  ஆனால் மனிதர்களுக்கு மட்டும் சிறகுகள் இல்லை.  பெரிய உயிர்களைப் போலவே எண்ணற்ற சிறிய உயிர்களும் நுண்ணுயிர்களும் அன்று இருந்தன.

அப்போதெல்லாம் பறக்கும் உயிர்கள் பூமியின் காற்று மண்டலத்தைக் கடந்து விண்வெளியில் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பறக்க முடியும்.  விண்வெளியில் காற்று இல்லை என்பது இப்போது எப்படியோ அப்போதும் அப்படித்தான்.  விண்வெளியில் காற்று இல்லை.  ஆனால் பூமியின் உயிர்கள் விண்ணில் பறக்கும் போது, அவர்கள் எவ்வளவு தொலைவு சென்றாலும் அவற்றிற்காக காற்று மண்டலமும் நீண்டு அவற்றின் கூடவே சென்றது.”

”ஏன் அப்படி?”

”அந்த உயிர்கள் காற்று இல்லாமல் இறந்துவிடக் கூடாதே”

”இப்போது மட்டும் ஏன் அப்படி இல்லை”

”அங்குதான் முக்கியமான சூரிய குடும்ப வரலாறு அடங்கி இருக்கிறது திண்டு.  பூமி அன்னை அன்று இளையவள்  தன் குழந்தைகளான உயிர்களை எண்ணற்று ஈன்று வளர்த்தவள்.  அவற்றின் மீது மிகவும் பாசம் கொண்டிருந்தாள்.  அவர்கள் விண்ணில் எங்கு திரிந்தாலும் தெருவில் திரியும் குழந்தையை விரைந்து சென்று கரம் நீட்டி பற்றும் அம்மாவாக, காற்று மண்டலத்தை கைபோல நீட்டுவாள்.  ஆனால் நீண்டகாலம் அப்படி செய்ய முடியவில்லை.  பூமியின் உயிர்கள் மிகப் பெரியதாக வளர்ந்தவை விண்ணில் கட்டற்று திரிந்தன.  கோள்களில் பாதையில் குறுமறுக்குமாக ஓடி இடையூறு செய்தன.  சூரியன் கோபமடைந்தார்.  அவர் பூமியிடம் சொன்னார்.  ”உன் குழந்தைகளை உன் மடியில் வைத்துக்கொள்.  இப்படி கண்டபடி அலைய விடாதே”

”ஆனாலும் புவி அன்னையால் இந்த பிராணிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை.  சூரியன் கோபம் மிகுந்து கூறிவிட்டார்.  ”காற்று மண்டலம் உன் ஈர்ப்பு விசைக்கு கட்டுப்பட்டதாக இருக்கட்டும்.  உன் உயிர்கள் அதன் எல்லைக்கு உட்பட்டதாக இருக்கட்டும்.  உன் ஈர்ப்பு விசையை நீ விருப்பத்திற்கு ஏற்ப மற்றிக் கொண்டிருந்தால் என் வெப்பத்தைக் கூட்டி உன் உயிர்களை அனைத்தும் பொசுக்கி விடுவேன்” என்று சொல்லிவிட்டார்.

”எனவே.  உயிர்கள் காற்று மண்டலத்தைக் கடந்து செல்ல முடியாமலாகிவிட்டது.  திண்டு உனக்குத் தெரியுமா? அக்காலத்தில் மனிதர்கள் நீருக்குள்ளும் சுவாசிக்க முடியும்.  மனிதர்கள் மட்டுமல்ல.  நில வாழ் பிராணிகள் நீர் வாழ் பிராணிகள் என்ற வேறுபாடெல்லாம் அப்போது கிடையாது.  நீரிலுள்ளவை நிலத்திற்கு வரலாம்.  நிலத்திலுள்ளவை நீருக்கு அடியில் சென்று எவ்வளவு காலம் வேண்டுமானாலும் இருக்கலாம்.  ஆனால் அவற்றையும் கூட புவி அன்னை மாற்றி அமைத்துவிட்டாள்”

”ஏன் அவற்றை புவி அன்னை மாற்ற வேண்டும்?”

”பின் மாற்றாமல் என்ன செய்வாள்? விண் பாதையில் இடையூறு செய்து கொண்டு திரிந்த உயிர்கள் எல்லாவற்றையும் பூமிக்குள்ளேயே இருந்தாக வேண்டும் என்று செய்தாகிவிட்டது.  அது பூமிக்கு இன்னும் கடினமாகி விட்டது.  இப்பிராணிகள் நிலத்திலும் நீரிலும் மிகவும் அட்டகாசம் செய்தன.  கடல் பிராணிகளுக்கும் நிலப் பிராணிகளுக்கும் போர் மூண்டது.  ஒன்றை ஒன்று அடிமை கொள்ள முயன்றன.  ஒன்றை ஒன்று நாசம் செய்து கொண்டன.  பார்த்தாள் புவியன்னை அவற்றின் எல்லைகளை அவளே வகுத்து அவற்றுக்குள் இருங்கள் என்று சொல்லிவிட்டாள்”

”ஓ….இவ்வளவு நடந்திருக்கிறாதா தாத்தா” திண்டு வியந்தான்.

”ஆம் திண்டு.”

”எனில் பறக்கும் குதிரைகள் எப்படி அழிந்தன?”

”பறக்கும் குதிரைகள் மட்டுமல்ல.  டைனோசர்கள்.. முன் சொன்ன பறக்கும் திமிங்கலங்கள், பறக்கும் யானைகள் ….எல்லாம் அழிந்துவிட்டன.  புவியன்னை பேரழகு கொண்டவள்.  சூரியனின் முதல் எச்சரிக்கைக்குப் பிறகு. அவள் உன் காலத்தின் ஒரு அழகிய அரசகுமாரியை ஒத்த தோற்றமுடைய ஒரு பெண்ணாக ஒரு பிரம்மாண்ட மலை தொடரின் ஒரு மலையின் மீது தோன்றினாள்.  அன்றும் பறக்கும் உயிர்கள் விண்ணில் பறந்து கொண்டுதான் இருந்தன.  அந்த மலை உன் இக்காலத்தின் இமயமலையைத் தொடரைவிட பெரியது.  எல்லா உயிர்களையும் அவள் அழைத்தாள்.  அவற்றிற்காக ஒரு நீண்ட பிரசங்கத்தை செய்தாள்.  புவியன்னை தன் மலைப் பிரசங்கத்தில் பல அறிவுரைகளை எல்லா உயிர்களுக்கும் கூறி பின் மிகவும் உருக்கமான வேண்டுகோளையும் விடுத்தாள்.”

”உங்கள் நலனையும் மகிழ்வையும் மட்டுமே நான் எப்போதும் நாடுகிறேன்.  நீங்களோ உங்களுக்கான ஊழை இங்கிருந்து தயாரித்துக் கொள்கிறீர்கள்.  விண்ணிலிருக்கும் பிற கோள்கள் உங்கள் மீது கட்டுப்பாடுகளை செய்வதற்கும் உங்கள் மீது அதிகாரம் செலுத்துவதற்கும் வழிவகை செய்கிறீர்கள்.  நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியுமா? பிற கோள்களின் நடுவே நானும் சூரியனைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறேன்.  சூரியனும் நானும் பிற கோள்களும் இணைந்த சூரிய குடும்பமாக அண்டத்தின் மையத்தை சுற்றி வந்து கொண்டிருக்கிறோம்.  அண்டம் தன்னுள் அடங்கிய அனைத்துடனும் பேரண்டத்தின் மையத்தை சுற்றுகிறது.  பேரண்டமோ யாரை சுற்றுகிறது என்பதை நான் அறியேன்.

”நீங்கள் என் குழந்தைகள்.  என் பேச்சைக் கேளுங்கள்.  உங்களை நான் காப்பேன்.  பிற கோள்கள் எல்லாம் உயிரற்ற கோள்களாக சூரியனைச் சுற்றிவர நான் மட்டும் உங்களை உருவாக்கி உங்கள் மீது கொண்ட பாசத்தால் உங்கள் அனைவரையும் சுமந்து கொண்டு சுற்றிவருகிறேன்.  என் அன்பை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை.  எவ்வளவு அட்டகாசம் செய்கிறீர்கள். வியாழனைப் போலவோ சனியைப் போலவோ அல்லாமல் எனக்கு துணையாக என் தோழி ஒரே ஒரு நிலவு…..ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள்?  ஏய் தண்ட டெனோசார் நீ என்ன செய்தாய்?…நிலவில் தேவையில்லாமல் அவ்வளவு பெரிய பள்ளம் தோண்டினாய்.  அவள் எவ்வளவு வேதனைப்பட்டாள் தெரியுமா?”

”டெனோசர் தான் நிலாவில் பள்ளம் தோண்டியதா தாத்தா? அதனால் தான் அது அழிந்துவிட்டதா? பூமி அன்னை அதை அழித்து விட்டாளா?’ திண்டு கேட்டான்.

”ஆமாம்.  டெனோசர்கள் தான் தோண்டின.  ஆனால் பூமி அன்னை அவற்றை அழிக்கவில்லை.  அவள் எப்படி அழிப்பாள்? பெரும்பாலான டெனோசர்கள் அப்பாவிகள் தான்.  அவற்றின் தலைவனாக இருந்த தண்ட டெனாசர் தான் பிற டெனோசர்களை கெடுத்தது.  தண்ட டெனோசர் தன் ஆணவத்தால் அப்படி செய்தது.  பிற டெனோசர்களை அழைத்து சென்று அப்படி பள்ளம் தோண்டியது.  நிலவினை அதிரச் செய்தது.”

”ஏன் அப்படி செய்தது?”

”அன்று பூமியில் இருந்த பெரிய நரிகளுடனும் ஓநாய்களுடனும் ஏற்பட்ட போட்டிதான் துவக்க காரணம்.  முழுநிலவை நோக்கி ஊளையிட்டுக் கொண்டிருந்த அவற்றிடம் தண்ட டினோசர் சொன்னது.  ”நீங்கள் என்னடா இங்கிருந்து நிலாவை நோக்கி ஊளை இடுகிறீர்கள்.  பார் நாங்கள் நிலவிற்கே சென்று அங்கிருந்து மிகப் பெரிய அளவில் ஊளை இடுவோம்”

”அவ்வாறு அவை நிலாவிற்கு பறந்து சென்று அங்கிருந்து பூமியை நோக்கி ஊளையிடத் தொடங்கின”

”ஆனால் பள்ளம் ஏன் தோண்டின?”

”உனக்குத் தெரியுமல்லவா டினோசர்கள் யானைகளை விட பல மடங்கு பெரியவை.  நரிகளுக்குப் பிறகு அவை யானைகளிடம் வம்பிழுத்தன.  பறக்கும் யானைகளின் சிறகுகளை கடித்து துப்பின.  சிறகிழந்த யானைகளை பள்ளத்தில் தள்ளிவிட்டன.  பிறகு அவற்றுக்கு நிலவில் பள்ளம் தோண்டி அதில் யானைகளைத் தள்ளும் யோசனை தோன்றியது.  யானைகளை நிலவிற்கு கொண்டு சென்றன.  பாவம் யானைகள் சிறகுகளை இழந்து நிலவின் பள்ளத்துக்குள் எறியப்பட்டன.”

”ஏன்தான் அவற்றுக்கு அப்படித் தோன்றியதோ தாத்தா?”

”பூமி அன்னை அவற்றுக்கு அளவுக்கு அதிகமான வலிமையைத் தந்துவிட்டாள்.  வலிமை மிகுந்தவை வலிமை குறைந்தவற்றை ஏறி மிதிப்பதில் அவற்றை மிரட்டுவதில் பயமுறுத்துவிதில் சுகம் காணத் தொடங்கின.”

”ம்…பாவம் யானைகள்”

”ஆம் திண்டு.  புவியன்னையின் பிரசங்கதிற்குப் பின்னால் அவளுடைய பேச்சை யாரும் மதிக்கவில்லை.  எனவே அவள் ”என் காற்று மண்டலத்திற்கு எல்லை வகுத்துவிட்டேன்.  அதை கடந்து சென்றால் மூச்சுத் திணறி இறப்பீர்கள் என்று சொல்லி விட்டாள்.  அதாவது சூரியனின் கட்டளையை நிறை வேற்றிவிட்டாள்.”

”ஆனால்……இப்போது நினைத்தாலும் அழுகை வருகிறது” தாத்தா குரல் உடைந்து தழுதழுத்தார்.

”என்ன ஆனது தாத்தா? ஏன் அழுகிறீர்கள்”

”அப்போது மனிதனான நான் அந்த உயிர் கூட்டதில் ஒருவனாக புவியன்னை நின்று பேசிக் கொண்டிருந்த மலையின் ஒரு பாறை இடுக்கில் இருந்தேன்.  அவள் பேசியவை என் காதில் தெளிவாக விழுந்தது.  அன்று எனக்கு அறிவு கிடையாது.  மனிதர்களுக்கு அப்போது அறிவு உண்டாகியிருக்கவில்லை.  ஆனால் அவள் மீது இனம் புரியாத அன்பு எனக்கு ஏற்பட்டது.  அன்று அவள் பேசியவற்றின் ஒலிகள் என் நினைவில் நின்றது.  பிற்காலத்தில் மனிதர்களுக்கு அறிவு ஏற்பட்ட மொழி தோன்றிய காலத்தில் என்னால் அவள் பேசிய ஒலிகளை என் மொழியில் கொண்டுவர இயன்றது.”

”அந்த இணையற்ற அன்புடைய பூமி அன்னையை தண்ட டெனோசரும் அதனுடைய நண்பர்களான பிற டெனோசர்களும் வேறு பல பிராணிகளும் அவமதித்தன.”

”எங்களுக்கு பயந்துகொண்டு குகைகளில் இருளில் பதுங்கி வாழும் அறிவற்ற மனிதர்களின் இனத்தைச் சேர்ந்த பெண்ணே.  நீ ஏன் மனிதப் பெண்ணாக தோன்றி இந்த மலை மீது நின்று பேசுகிறாய்.  நீ தான் புவியன்னை என்று எங்களை ஏமாற்றப் பார்க்கிறாய்.  ஆற்றல் வாய்ந்த எங்களை உருவாக்கியவளாக நீ ஒருபோதும் இருக்க முடியாது.  உன்னை இப்போது விழுங்கி விடுகிறேன்” என்ற தண்ட டேனோசர் கூறியது.

”ஆ….அது புவியன்னையை விழுங்கி விட்டதா?….ஆனால் தாத்தா எல்லா உயிர்களையும் படைத்த புவியன்னை ஏன் மனிதப் பெண் போலத் தோன்றினாள்” என்று கேட்டான் திண்டு.

தாத்தா சிரித்தார்.  பின் சொன்னார்.  ”டெனோசரால் புவியன்னையை விழுங்க முடியாது.  …..திண்டு நீ அறிவாளி….புவியன்னை ஏன் மனிதப் பெண்ணாகத் தோன்ற வேண்டும்?  நல்ல கேள்வி.  ஏனென்றால் அன்று வரை புவியன்னையால் தோற்றுவிக்கப்பட்டிருந்த உயிர்கள் அனைத்திலுமே மிக வலிமை குறைந்ததும் மென்மையானதுமான படைப்பு மனிதன்தான்.  பிற உயிர்கள் அனைத்துமே பேராற்றல் வாய்ந்தவை.  எனவே அன்னை தன் உயிரினங்கள் அனைத்தின் மீதும் அன்பு மிகுந்து கண்ணீருடன் அவற்றுக்கு அறிவுரை கூற எண்ணியபோது மிகப் பெரியவளும் பேராற்றல் கொண்டவளுமான அவள் மிக இயல்பாகவே மென்மையான மானிடப் பெண்ணாக தாயாகத் தோற்றம் கொண்டாள்.  அது அவள் திட்டமிட்டு செய்ததல்ல”

திண்டுவிற்கு தன் அம்மாவின் முகம் நினைவிற்கு வந்தது.

தாத்தா தொடர்ந்தார்.  ”அந்த நிகழ்விற்கு பின் அன்னை எதுவும் பேசாமல் மறைந்து விட்டாள்.  அதன் பிறகு விண்வெளியில் தாவிய டினோசர்கள் மூச்சுத் திணறி மண்ணில் விழுந்து இறந்தன.  புவி ஈர்ப்பு விசையை அன்னை மாற்றி அமைத்துக் கொண்டதால் காற்று மண்டலம் சுருங்கி விட்டது.  சிறியவையான பறவைகள் மட்டுமே காற்று மண்டலத்திற்குள்ளாக பறக்க முடிந்தன.  பேரெடையும் பெரும் சிறகுகளும் கொண்ட பிராணிகள் தங்கள் எடையைத் தூக்கிக் கொண்டு பறக்க முடியாமல் ஆகிவிட்டன.  பின் சில நூற்றாண்டுகளில் பறக்கப் பயனற்ற அவற்றின் சிறகுகள் மறைந்துவிட்டன்.  திண்டு…..பறப்பதற்கு சிறகுகள் மட்டும் போதாது புவி ஈர்ப்பு விசையும் காற்றின் அழுத்தமும் அதற்கு துணை செய்ய வேண்டும்.  எல்லாவற்றின் துணையில்லாமல் இங்கு எதுவுமே இயங்க முடியாது”

திண்டு மௌனமாக இருந்தான்.

”சரி திண்டு.  நேரமாகிவிட்டது உன் அம்மா தேடுவாள்.  நீ போ.  மீண்டும் நாளை வா” என்றார் தாத்தா.

”சரி தாத்தா” என்றான் திண்டு.  தாத்தா திண்டுவைத் தழுவி பின் அவன் கன்னத்தில் முத்தமிட்டார்.  பின் அவர் மீண்டும் அந்த குகை ஓவியத்திற்குள் புகுந்துவிட்டார்.

பறக்கும் குதிரையின் மீது அமர்த்திருக்கும் தாத்தா.  அந்த குகை ஓவியம் எத்தனையோ லட்சம் ஆண்டுகள் பழைமையானது.

இவ்வளவு காலத்திற்கு பிறகு வந்து என் மீது எவ்வளவு பாசமாக இருக்கிறார் தாத்தா என்று எண்ணினான் திண்டு.

குகையை விட்டு வெளியே வந்து மரக்கிளை ஒன்றைப் பற்றிக் கொண்டு கீழே இறங்கினான் திண்டு.  சட்டென்று அவனுக்கு ஒரு அய்யம் தோன்றிது.  ”பிற்காலத்தில் தான் மனிதர்களுக்கு அறிவு தோன்றியது என்றார் தாத்தா.  ஆனால் எப்படி அதற்கும் நீண்ட காலம் முன்னால் விண்வெளியில் பறக்கும் குதிரையில் யுரேனசுக்கு பயணம் மேற்கொண்டார்?”

திரும்பிச் சென்று தாத்தாவை அழைத்து கேட்க வேண்டும் என்று தோன்றியது.  ஆனால் மாலை நேரம் இருட்டத் தொடங்கி விட்டதால் நாளை கேட்போம் என்று தன் வீட்டை நோக்கிச் சென்றான்.

(மேலும்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *