”திண்…டு……திண்….டு” தன் கீச்சுக் குரலில் அழைத்தான் திண்டுவின் நண்பன் முத்து. திண்டுவின் அம்மா ஆற்றில் துணி அலசிக் கொண்டிருந்தாள். அந்த ஆற்றங்கரை அருகே சற்று தூரத்தில் ஒரு பெரிய மரம் இருந்தது. அந்த மரத்தடியில் தான் இருந்தான் திண்டு. அந்த பெரிய மரத்தின் இலைகள் காற்றில் உதிர்ந்து கொண்டிருந்தன. வெப்பத்தால் முழுவதும் காய்ந்து உதிர்ந்து கிடந்த இலைச் சருகுகளை காலால் மிதித்து நொறுக்கிக் கொண்டிருந்தான் திண்டு. ஒவ்வொரு இலைச்சருகை மிதித்த போதும் ஒவ்வொரு விதமான ஒலி ஏற்பட்டது. ”க்ர்ர்க்க்க்” என்று ”டப் டப்” என்று. அந்த சத்தம் திண்டுவிற்கு சிரிப்பாக இருந்தது.
”ஏய் திண்….டு…நான் கூப்பிட்டது உன் காதில் விழவே இல்லையா? நீ என்ன செய்கிறாய்?” என்று கேட்டுக் கொண்டே அவன் அருகில் வந்தான் முத்து.
”அய்…..முத்து… நீ எப்போது வந்தாய்?” மகிழ்ச்சியுடன் கேட்டான் திண்டு.
”நான் எப்போதோ வந்துவிட்டேன்”
”சரி வா வா…..இதோ பார்….இந்த சருகுகள் எப்படி ஒலி எழுப்புகின்றன பார்…சிரிப்பாக இல்லை.” திண்டு ஒரு இலைச்சருகை மிதித்து நொறுக்கினான்.
”அப்பளம் நொறுங்குவதைப் போல” என்றான் முத்து.
“ஆமாம். வா….நீயும் ….நாம் இந்த மரத்தைச் சுற்றி உள்ள எல்லா சருகுகளையும் நொறுக்குவோம்”
அவர்கள் இருவரும் மரத்தைச் சுற்றி வந்தார்கள். ஒரு இடத்தில் நின்று அங்கிருந்து இருவரும் இலைச்சருகுகளை வேகமாக நொறுக்கிக் கொண்டே வந்தார்கள்.
”முத்து…நாம் இந்த சருகுகளின் மீது படுத்து உருண்டு கொண்டே போவோமா?”
”உடைகள் அழுக்காகி விடுமே” என்று சொல்லி யோசித்தான் முத்து. பிறகு ”சரி என்றான்.
இருவரும் படுத்துக்கொண்டு மரத்தைச் சுற்றி உருண்டார்கள். சருகுகள் நொறுங்கும் சத்தம் பெரிதாகக் கேட்டது. இருவரும் சத்தமாக சிரித்துக்கொண்டே உருண்டார்கள்.
”ஹஹஹஹ…..கக்கிகி….ஹஹஹஹ”
ஆற்றில் துணி அலசிக் கொண்டிருந்த அம்மா திரும்பிப் பார்த்தாள். ”ஏய் திண்டு…என்ன செய்கிறாய்? யாரது முத்துவா? என்று கேட்டாள். அவர்கள் சிரித்துக் கொண்டே இருந்தார்கள்.
”அப்படி உருளாதீர்கள். சருகுகளின் அடியில் பூச்சிகள் இருக்கும். கடித்துவிடும்” என்றாள்.
முத்து அச்சமடைந்து எழுந்து கொண்டான். திண்டுவும் எழுந்து நின்றான்.
”சரி வா முத்து…நாம் அந்த பாறை வரை போய் வரலாம்” அவர்கள் இருவரும் ஆற்றின் கரையோரத்தில் சற்று தொலைவில் இருந்த பாறையை நோக்கி நடந்தார்கள்.
”எங்கே செல்கிறீர்கள்?” அம்மா கேட்டாள்.
”இங்கேதான் அம்மா. அந்த பாறைக்கு செல்கிறோம்”
அவர்கள் நடந்தார்கள்.
முத்து கேட்டான். ”திண்டு உன் அப்பா எங்கே சென்றார்?”
”அவர் வெற்றிவேல் வீரவேல் என்று வேலுடன் நம் நாட்டின் எல்லைக்கு சென்று விட்டார். அங்கு எதிரிகள் சண்டைக்கு வருகிறார்களாம்” என்றான் திண்டு். பின் ”உன் அப்பா வெளிநாடு சென்றிருக்கிறாரா?” என்று கேட்டான்.
”ஆமாம். அவர் வைரம் வாங்க சென்றிருக்கிறார். மிக விலை உயர்ந்தது” என்றான் முத்து.
”திண்டு…நீ உன் கேள்வியை குகைத் தாத்தாவிடம் கேட்டாயா? அவர் எப்படி மனிதனுக்கு அறிவு தோன்றுவதற்கு முன்னரே யுரேனசுக்கு பறக்கும் குதிரையில் சென்றார்?”
”கேட்டேன்”
”என்ன பதில் சொன்னார்?”
”அவர் சொன்ன பதில் எனக்கு அவ்வளவாக புரியவில்லை. அவர் நீ இன்னும் கொஞ்சம் பெரியவனாகும் போது புரியும் என்று சொன்னார்.
”என்ன சொன்னார்?”
”தாத்தா என்னை குகைக்கு வெளியே அழைத்து வந்து மாலைச் சூரியனைக் காண்பித்தார். பிறகு ”நாம் இப்போது இதோ இந்த சூரியனைக் காண்கிறோமே….இது இப்போது இருக்கும் சூரியன் அல்ல…..எட்டு நிமிடத்திற்கு முந்தைய சூரியனையே நாம் இப்போது காண்கிறோம்” என்றார்.
”ஏன் அப்படி?”
”சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தொலைவின் காரணமாக சூரியனின் ஒளி பூமியை வந்தடைய எட்டு நிமிடங்கள் ஆகின்றன”
முத்து சொன்னான், ”ஆமாம் ஆமாம்…நம் ஆசிரியர் சொன்னது நினைவுக்கு வருகிறது. சூரிய ஒளி பூமிக்கு வர எட்டு நிமிடங்கள் ஆகின்றன என்று”
”ஆம். தாத்தா சொன்னார், ”நீ நிகழ்காலத்தில் காண்பது கடந்த காலத்தின் சூரியனை”
”அதாவது எட்டு நிமிடம் முந்தைய சூரியன்”
”ஆம். அதுபோலவே விண்வெளியில் நாம் காணும் அத்தனை நட்சத்திரங்களும் கடந்த காலத்தைச் சார்ந்தவை. நாம் விண்ணில் கடந்த காலத்தை தான் காண்கிறோம். தாத்தா சொன்னார் ”உன் நிகழ்காலத்தில் நீ காணும் சூரியன் கடந்த காலத்தை சேர்ந்தது. உன் இதே நிகழ்காலத்தில் அங்கே தொலைவில் நிஜமாகவே இப்போது இருக்கும் சூரியன் உன் எதிர்காலத்தில் இருக்கிறது. காலம் என்பது கடந்த காலத்தில் இருந்து எதிர்காலத்திற்கு சென்று கொண்டிருப்பது என்றார். உனக்கு புரிகிறதா முத்து?”
”கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது” என்றான் முத்து.
”எனக்கும் அப்படித்தான் இருந்தது. தாத்தா சொன்னார் ”கடந்த காலமும் எதிர்காலமும் உள்ளவர்களுக்கு நிகழ்காலம் என்பதே இல்லை. நிகழ்காலம் உள்ளவர்களுக்கு கடந்த காலமும் எதிர்காலமும் இல்லை. அவர்களுக்கு எப்போதும் நிகழ்காலம் மட்டுமே உள்ளது.”
”என்ன காலமோ ஒன்றுமே புரியவில்லை. இதற்கும் தாத்தா யுரேனசுக்கு எப்படி சென்றார் என்ற கேள்விக்கும் என்ன சம்பந்தம்? தாத்தா உன்னை குழப்பப் பார்த்திருக்கிறார். அவர் ஏதோ கதை சொல்லிவிட்டு சமாளிக்கப் பார்க்கிறார்.” என்றான் முத்து.
”தாத்தா மிகவும் நல்லவர்” என்றான் திண்டு.
”வேறு என்ன சொன்னார்?” முத்து கேட்டான்.
”குகையின் தரையில் மண்ணில் பல வரைபடங்கள் வரைந்து காட்டினார்” என்றான் திண்டு.
முத்து தன் உடையில் படிந்த சருகுத் துண்டுகளை தட்டிவிட்டுக் கொண்டான். ”ம்……ஆனால் ஒன்று திண்…..டு. நீ அறிவாளி. நம் ஆசிரியரே சொன்னார்” என்றான்.
திண்டு வியந்தான். ”எப்படி?…தாத்தாவும் அப்படி அடிக்கடி சொல்கிறார்” அவன் யோசித்தான்.
”பார்த்தாயா சந்தேகப்படுகிறாய். அறிவாளி தன் அறிவை அடிக்கடி சந்தேகப்படுவான். முட்டாளுக்கு தான் முட்டாள் என்பதே தெரியாது. அவனுக்கு தயக்கமே இருக்காது என்று ஆசிரியர் சொன்னார்” என்றான் முத்து.
வானில் கருமேகங்கள் திரண்டு வந்தன. மழை வரும் போல இருந்தது. முத்து திண்டுவிடம் விடை பெற்றுக் கொண்டான். அவன் செல்வதற்கு முன்பு கேட்டான்.
”என்னை எப்போது குகைத் தாத்தாவிடம் அழைத்துச் செல்வாய்?”
”அடுத்தமுறை அழைத்துச் செல்கிறேன். ஆனால் குகைத் தாத்தா பற்றி வேறு யாரிடமும் சொல்லாதே”
”ஏன்?”
”சொல்ல வேண்டாம் என்று தாத்தா சொல்லி இருக்கிறார்”
”சரி”
திண்டு அம்மாவுடன் வீடு திரும்பினான்.
—–
அடுத்த நாள் காலை திண்டுவின் ஊரில் பெரும் பரபரப்பாக இருந்தது. அவன் வசித்த அந்த கிராமத்தின் பெயர் எல்லைநல்லை. ஊர் மக்கள் சிலர் முத்துவின் வீட்டை நோக்கிச் சென்றனர். திண்டுவின் அம்மாவும் முத்துவின் வீட்டிற்கு சென்றாள். திண்டு அம்மாவுடன் கூடவே சென்றான். என்ன நடந்தது என்று திண்டுவிற்குத் தெரியவில்லை. முத்துவின் வீட்டில் பலரும் ஏதேதோ பேசிக் கொண்டனர். முத்துவின் அம்மா அழுது கொண்டிருந்தது கேட்டது. திண்டு முத்துவைத் தேடினான். பெரியவர்களின் கூட்டம் மறைத்ததால் சரியாக பார்க்க முடியவில்லை. அவர்களிடையே புகுந்து உள்ளே சென்றான். முத்து அழுது கொண்டிருந்த அவன் அம்மாவின் அருகே தான் இருந்தான். அவனும் அழுது கொண்டிருந்தான். திண்டுவின் அம்மா முத்துவின் அம்மாவிடம் சென்று அவள் கையைப் பிடித்து ”அக்கா அழுகாதீர்கள். என்ன நடந்தது என்று சொல்லுங்கள்” என்று கேட்டாள்.
கூட்டத்தில் இருந்த பெரியவர் ஒருவர் நடந்த விஷயத்தை விளக்கமாக சொன்னார். வணிகரான முத்துவின் அப்பா வைரம் வாங்க வெளிநாட்டிற்குச் சென்றார். அவருடன் அவரது பணியாளரான முகிலனும் சென்றிருந்தார். அவர்கள் வைரம் வாங்கி விட்டு வெளிநாட்டிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் காட்டு வழியாக வந்து கொண்டிருந்தபோது ஒரு கொள்ளையர் கூட்டம் அவர்களை வழிமறித்தது. முத்துவின் அப்பாவையும் முகிலனையும் அந்த கூட்டம் பிடித்துக் கொண்டு சென்றது. அவர்களை ஒரு மலையை கடந்து ஒரு காட்டாற்றை கடந்து கொண்டு சென்றார்கள். இரவு நேரத்தில் கொள்ளையர்கள் காட்டில் ஒரு மரத்தடியில் தங்கினார்கள். முத்துவின் அப்பாவையும் முகிலனையும் மரத்தில் கட்டிப் போட்டார்கள். ஒரு கொள்ளைக்காரன் குதிரைகளை கொண்டு சென்று வேறொரு மரத்தின் அருகே இளைப்பாற விட்டான்.
அவர்கள் காட்டில் குச்சிகளை தேடி எடுத்து வந்தார்கள். குச்சிகளுக்கு நெருப்பு மூட்டி சமையல் செய்து சாப்பிட்டார்கள். முத்துவின் அப்பாவையும் முகிலனையும் மரத்தில் இருந்து அவிழ்த்து விட்டு சாப்பிட உணவு தந்தார்கள். அவர்கள் சாப்பிட்டவுடன் மீண்டும் அவர்களை மரத்தில் கட்டிப் போட்டார்கள். பிறகு கொள்ளையர்கள் அனைவரும் உறங்கி விட்டார்கள்.
நள்ளிரவில் மரத்தில் கட்டிப் போடப்பட்டிருந்த முகிலன் கஷ்டப்பட்டு கை விரல்களை நீட்டினார். அந்த மரத்தின் காய்ந்த பட்டையை கொஞ்சமாக உரித்து முறித்து எடுத்தார். அது கத்தி போல கூர்மையாக இருந்தது. அதைக் கொண்டு மெதுவாக சத்தம் வராமல் தன்னை கட்டியிருந்த கயிற்றை அறுத்தார். பின்னர் முத்துவின் அப்பாவின் கட்டுகளை அவிழ்த்தார். பின்னர் அவர்கள் இருவரும் மெல்ல நடந்து கொஞ்ச தூரம் சென்றார்கள். பிறகு வேகமாக காட்டிற்குள் புகுந்து தப்பிச் சென்றார்கள். அவர்கள் அப்படி தப்பி வந்து கொண்டிருந்தபோது முத்துவின் அப்பா கொஞ்சம் யோசித்துவிட்டு நின்றார். அவர் முகிலனிடம் ”முகிலா நில். நாம் வைரத்தை விட்டுவிட்டு வந்துவிட்டோமே. நான் இங்கேயே காத்திருக்கிறேன். நீ போய் அதை அவர்களிடம் இருந்து எடுத்துக் கொண்டு வந்து விடுகிறாயா? என்றார்.
”இல்லை அய்யா அது ஆபத்தானது. அவர்கள் ஒருவேளை விழித்துக் கொண்டிருக்கலாம்” என்றார் முகிலன்.
”இல்லை முகிலா அவர்கள் உறங்கிக் கொண்டுதான் இருப்பார்கள். நீ சென்று மறைந்திருந்து பார். ஒருவேளை அவர்கள் விழித்திருந்தால் வந்துவிடு. உறங்கிக் கொண்டிருந்தால் வைரம் இருக்கும் பையை எடுத்துக்கொண்டு வந்துவிடு. அதற்காகத்தானே நாம் கஷ்டப்பட்டு வெளிநாட்டுப் பயணம் செய்தோம்” என்றார் முத்துவின் அப்பா.
”சரி அய்யா” என்று சொல்லி முகிலன் சென்றார். அவர் கொள்ளையர்கள் இருந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கே யாரும் இல்லை. கொள்ளையர்களும் இல்லை அவர்களின் குதிரைகளும் இல்லை. அந்த வைரம் இருக்கும் பையும் இல்லை. அவர்கள் அதை எடுத்துச் சென்றுவிட்டார்கள். முகிலன் மீண்டும் முத்துவின் அப்பா காத்திருந்த இடத்திற்கு வந்தார். அங்கே முத்துவின் அப்பாவைக் காணவில்லை. முகிலன் அச்சமடைந்தார். அவர் நிலா வெளிச்சத்தில் சுற்றிலும் எல்லா பக்கமும் சென்று தேடிப் பார்த்தார். எங்கேயும் முத்துவின் அப்பாவை கண்டுபிடிக்க முடியவில்லை.
பின்னர் முகிலன் ஊர் திரும்பி முத்துவின் வீட்டிற்கு சென்றார். முத்துவின் அம்மாவிடம் நடந்த விஷயங்களைச் சொன்னார்.
முத்துவின் வீட்டில் கூடியிருந்த ஊர் மக்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கு ஒரு கருத்தைச் சொன்னார்கள்.
”ஒருவேளை அவரை காட்டு விலங்குகள் ஏதாவது செய்திருக்கக்கூடும்” என்று ஒருவர் சொன்னார்.
”அந்த கொள்ளைக்காரர்களே அவரைக் கண்டுபிடித்து மீண்டும் பிடித்துச் சென்றிருப்பார்கள்” என்று வேறு ஒருவர் சொன்னார்.
முத்துவின் அம்மா சத்தம் போட்டு அழுதார். ”அடக் கடவுளே. நான் என்ன பாவம் செய்தேன்? என் கணவர் என்ன பாவம் செய்தார்? ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது?” என்றார். முத்துவும் அப்பாவை நினைத்து அழுது கொண்டிருந்தான்.
ஊரில் சிலம்பம் சொல்லித் தரும் ஆசிரியர் சோமு ”எனக்கென்னவோ இந்த முகிலன் மீது தான் சந்தேகமாக இருக்கிறது. இவன்தான் வைரத்தை எடுத்துக் கொண்டுவிட்டு அவரை என்னவோ செய்துவிட்டான். இங்கு வந்து நாடகம் ஆடுகிறான்” என்றார்.
முகிலன் அதிர்ச்சி அடைந்தார். ”இப்படி என் மீது அபாண்டமாக பழி சுமத்துகிறீர்களே. நான் எப்படி அய்யாவிற்கு துரோகம் செய்வேன்? இப்படி பழி சொல்வதை விட என்னை நீங்கள் கொன்றுவிடுங்கள்” என்று அழுதார்.
திண்டுவிற்கு அவரைப் பார்க்க பாவமாக இருந்தது. அவன் வேகமாக பெரியவர்கள் நடுவே வந்து நின்றான். ”ஆசிரியரே நீங்கள் கூறுவது தவறு. முகிலன் நல்லவர். அவர் அப்படி வைரத்தை எடுத்துக் கொண்டிருந்தால் அவர் அப்படியே எங்கோ சென்றிருக்கலாம். இங்கே வந்து நடந்ததை சொல்லிக் கொண்டிருக்க மாட்டார்” என்று சத்தமாக சொன்னான்.
”ஆமாம். அது உண்மைதான்” என்று சிலர் சொன்னார்கள்.
”முகிலன் அண்ணா நல்லவர். அவர் நேர்மையானவர் என்பதை நான் அறிவேன். என் கணவரும் அதை பலமுறை கூறி இருக்கிறார்” என்று முத்துவின் அம்மா சொன்னாள்.
”இப்போது என்னதான் செய்யப் போகிறீர்கள்?” என்று ஒரு பெரியவர் கேட்டார்.
”அரசிடம் முறையிடுவோம். அத்துடன் நாம் ஒரு குழு அமைத்து அவரைத் தேடுவோம்” என்றார் வேறொருவர்.
”ஆம் அதுதான் சரி” எல்லோரும் ஒப்புக் கொண்டார்கள்.
கூட்டம் கலையத் தொடங்கியது. திண்டு முத்துவை கைப்பிடித்து தனியே அழைத்துச் சென்றான்.
”முத்து அழுவதை நிறுத்து. நான் ஒரு முடிவு செய்திருக்கிறேன்” என்றான் திண்டு.
”என்ன?” கண்களை துடைத்துக் கொண்டே கேட்டான் முத்து.
”முத்து உன் அப்பாவைத் தேடி நாம் செல்வோம். நீயும் நானும். முகிலனையும் அழைத்துச் செல்வோம்” என்றான் திண்டு.
இந்த யோசனைக்கு முத்துவின் அம்மாவும் திண்டுவின் அம்மாவும் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் திண்டுவும் முத்துவும் சம்மதம் கேட்டு தொடர்ந்து கெஞ்சினார்கள். முகிலனும் ஆதரவாக பேசினார். ”நான் இவர்களைப் பார்த்துக் கொள்கிறேன்” என்றார் அவர்.
”விளையாடுகிறாயா? நீ என்ன பார்த்துக் கொள்வாய்? என் கணவரைத் தவறவிட்டாயே. இந்த சிறுவர்களும் தொலைந்து போனால் என்ன செய்வது? என்னால் அதைத் தாங்க முடியாது” என்றாள் முத்துவின் அம்மா.
முகிலன் பதில் சொல்ல முடியாமல் மௌனமாக நின்றார். பிறகு சொன்னார் ”அம்மா அப்படியென்றால் நான் மட்டும் தனியாக செல்கிறேன். அய்யாவை மீட்டுக் கொண்டு வராமல் என் மனம் அமைதி அடையாது”
”ஆனால் ஊர்காரர்கள் அமைக்கும் குழுவுடன் நீ செல்ல வேண்டி இருக்குமே?” என்று கேட்டாள் முத்துவின் அம்மா.
”குழுவுடன் தேடிச் செல்வது பயன் தராது. நான் தனியாகச் சென்று அவரை நிச்சயம் மீட்டு வருவேன்” என்றார் முகிலன்.
திண்டுவும் முத்துவும் தொடர்ந்து அடம்பிடித்தார்கள்.
திண்டுவின் அம்மா முத்துவின் அம்மாவிடம் சொன்னாள், ”அக்கா இவர்கள் சென்று வரட்டும்”
முத்துவின் அம்மா வியப்படைந்தாள். ”நீ என்ன சொல்கிறாய்? இந்த சிறுவர்களை அவர்கள் விருப்பம் போல் அனுப்புவதா? நீ தெரிந்ததுதான் பேசுகிறாயா?”
”ஆம் அக்கா. தெரிந்துதான் பேசுகிறேன். இவர்கள் செல்லட்டும். இவர்கள் நிச்சயம் வெற்றியடைவார்கள். உங்கள் கணவருடன் திரும்புவார்கள்” என்றாள் திண்டுவின் அம்மா.
மேலும் ஏதோ சொல்ல வந்த முத்துவின் அம்மாவிடம் ”நீங்கள் சம்மதியுங்கள். அவர்கள் செல்லட்டும்” என்றாள். பிறகு ரகசிய குரலில் ”சில விஷயங்களை நான் தனியாக உங்களிடம் சொல்கிறேன்” என்றாள்.
திண்டுவும் முத்துவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். அவர்கள் முத்துவின் அப்பாவைத் தேடி பயணத்திற்குத் தயாரானார்கள்.
புறப்படுவதற்கு முன் ஒரு முறை குகைத் தாத்தாவை சென்று காண வேண்டும், என்று தோன்றியது திண்டுவிற்கு. அவரிடம் நடந்த விஷயங்களை கூற வேண்டும் என்று நினைத்தான்.
(மேலும்)