16.திண்டுவின் பயணங்கள் -3

”என் ஆசி எப்போதும் உனக்கு உண்டு.  உன் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகிறேன் திண்டு” என்றார் தாத்தா. 

”ஆனால் நீங்கள் மட்டும் என்னுடன் வர மாட்டீர்கள்?” 

”இல்லை திண்டு.  என் உள்ளம் எப்போதும் உன்னுடன் இருக்கும்.  ஆனால் இந்த பயணத்தில் நான் உன்னுடன் வர முடியாது” 

”ஏன் தாத்தா?” 

”உனக்கு நான் நிஜமாக உள்ளவன் திண்டு.  உன் ஆர்வத்தினாலும் அன்பினாலும் நான் உன் முன் தோன்றினேன்.  ஆனால் இந்த மலையைச் சுற்றிலும் உள்ள ஊர்களில் உள்ள மனிதர்களுக்கு நான் ஒரு குகை ஓவியம் மட்டுமே.  அவர்களுக்கு நான் முக்கியமானவன் அல்ல.  இந்த குகையில் சில ஓவியங்கள் இருக்கின்றன என்று அவர்களுக்கு எப்போதோ ஒரு முறை தான் நினைவுக்கு வருகிறது.  அப்படி நினைவுக்கு வரும் போதும் சிலர் தான் இங்கு வந்து என்னைப் பார்க்கிறார்கள்.” 

”நீங்கள் என்னுடன் ஊருக்கு வாருங்கள் தாத்தா.  நான் உங்களை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்கிறேன்.” 

”இல்லை திண்டு.  என்னை கட்டாயப்படுத்தாதே”

 திண்டு கண் கலங்கினான்.

”திண்டு கலங்காதே.  நீ செல்லும் பயணம் உனக்கு சுவாரசியமான அனுபவங்களை அளிக்கும் என்று வாழ்த்துகிறேன்” 

”ஆனால் தாத்தா நான் உங்களை எல்லோருக்கும் அறிமுகம் செய்வேன்” 

”நீ அறிமுகம் செய் திண்டு.  ஆனால் இப்போதல்ல.  சில காலத்திற்குப் பிறகு செய்.  அப்போதும் நான் உடன் வர வேண்டிய அவசியமில்லை. 

”தாத்தா……” 

”திண்டு… நான் இங்கே பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட ஓவியமாக இருக்கிறேன்.  என்னை வரைந்த பல லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய அந்த ஓவியனை எண்ணிப்பார்.  அவன் என் மூலமாக உங்கள் காலத்தை சேர்ந்தவர்களுக்கு தன் அன்பைத் தெரிவித்திருக்கிறான்.  அவன் உங்களுக்கு தன் நட்புக் கரத்தை நீட்டி இருக்கிறான்.  அவனது நட்புக் கரம் போல தான் நான்.  அவன் வேறு நான் வேறு அல்ல.  எந்த ஒன்றும் அதை நேசிப்பவர்களைத் தான் சென்றடையும்.  சொல்… உன்னை விரும்பாதவர்களிடம் நீ செல்வாயா? 

”சரி தாத்தா உங்கள் விருப்பம்.  திண்டு தாத்தாவின் காலில் விழுந்து வணங்கினான்.  அவர் அவனுக்கு ஆசி வழங்கினார்.  அவனை அன்புடன் அணைத்துக் கொண்டார்.  கன்னங்கரிய தாத்தாவின் தோள்கள் கரிய பாறைபோல உறுதியுடன் இருந்தன.

பிறகு தாத்தா திண்டுவிற்கு சில அறிவுரைகள் சொன்னார்.  காட்டு வழி செல்லும் போது விலங்குகளை எப்படி எதிர்கொள்வது என்று சொல்லித் தந்தார்.  சில விலங்குகளையும் பறவைகளையும் நாம் நண்பர்களாக ஆக்கிக் கொள்ள முடியும் என்று சொன்னார்.  அவை மனிதர்களை நண்பர்களாக ஏற்றுக் கொள்ளும்.  அவற்றைப் பற்றி விளக்கினார்.  சில விலங்குகள் மனிதர்களின் நட்பை விரும்பாது என்று சொன்னார்.  அவற்றிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

திண்டு அவரிடம் விடைபெற்று குகையின் வெளியே வந்தான்.  அந்த குகை இருந்த மலையின் அடிவாரத்தில் சற்று தொலைவில் மழைநீர் தேங்கிய ஒரு குட்டை இருந்தது.  அதன் அருகே காத்திருந்தான் முத்து.

”நீ வந்திருக்கலாம் முத்து.  தாத்தாவிற்கு உன்னை அறிமுகம் செய்து வைத்திருப்பேன்”

”ஆம் திண்டு.  ஆனால் எனக்கு பயமாக இருக்கிறது.  அடுத்த முறை நீ செல்லும் போது வருகிறேன்.  நீ எப்படித்தான் அந்த இருட்டான குகைக்குள் செல்கிறாயோ?”

”எதற்காக பயப்படுகிறாய்? குகை வெளியில் இருந்து பார்க்கும் போது தான் மிகவும் இருட்டாக தெரியும்.  ஆனால் உள்ளே சென்று விட்டால் சுற்றிலும் எல்லாவற்றையும் பார்க்க முடியும்.  அத்துடன் அன்பான தாத்தா இருக்கவே இருக்கிறார்.”

“ம்ம் ம்ம்“ என்று ஆமோதித்தான் முத்து.

——-

மறுநாள் காலை திண்டுவும் முத்துவும் முகிலன் மாமாவும் முத்துவின் அப்பாவைத் தேடி புறப்பட்டார்கள்.  பயணம் முத்துவின் வீட்டிலிருந்து துவங்கியது.  ஏற்பாடுகள் தடபுடலாக செய்யப்பட்டிருந்தன.  ஊர் மக்களில் சிலர் இவர்களை வழியனுப்ப முத்துவின் வீட்டில் கூடி இருந்தனர்.  முத்துவின் அத்தை ஊரிலிருந்து வந்திருந்தாள்.  முத்துவின் அத்தை மகளான சிறுமி எழில் மலரும் வந்திருந்தாள்.  முத்துவின் அம்மா அவன் பயணத்தில் வழியில் சாப்பிடுவதற்காக ஏராளமான தின்பண்டங்களை செய்திருந்தாள்.  எழில் மலர் அவ்வப்போது சென்று சில திண்பண்டங்களை எடுத்து சாப்பிட்டாள்.  முத்துவிற்கும் திண்டுவிற்கும் கொண்டு வந்து தந்தாள்.  முத்து வாங்கி சாப்பிட்டான்.  திண்டு வேண்டாம் என்று மறுத்து விட்டான்.

முகிலன் பயணத்திற்கு இரண்டு குதிரைகள் தயார் செய்திருந்தார்.  ஒரு வெள்ளைக் குதிரை ஒரு கருப்பு குதிரை.

முத்துவின் அம்மா கேட்டாள் ”முகிலன் அண்ணா….இவ்வளவு தின்பண்டங்களையும் கொண்டு செல்ல முடியுமா?”

”இவ்வளவு எதற்கம்மா? வழியில் பார்த்துக் கொள்வோமே?

”ஆனால். இந்த பண்டங்கள் எல்லாம் நீங்கள் செல்லும் இடங்களில் கிடைக்குமோ என்னவோ? இதெல்லாம் முத்து எப்போதும் விரும்பி சாப்பிடக்கூடிய தின்பண்டங்கள்”

முகிலன் மாமா எதுவும் சொல்லவில்லை. 

மொத்தமாக ஆறு பெரிய மூட்டைகள் நிறைய தின்பண்டங்கள்.  அதிரசங்கள், முறுக்குகள், லட்டுகள்……பல நாட்கள் வரை கெடாமல் இருக்கக் கூடிய வகையில் தயாரிக்கப் பட்ட பண்டங்கள்..…இறைச்சி, வறுவல்கள்…இன்னும் ஏராளம்.  முத்துவின் அம்மா முகிலனிடம் எந்தெந்த மூட்டையில் என்ன இருக்கிறது என்று விளக்கிச் சொன்னாள்.

”முகிலன் அண்ணா…இந்த மூட்டையில் இருப்பதையெல்லாம் சீக்கிரமாக சாப்பிட்டு விடுங்கள்.  இவை அதிக நாட்கள் தாங்காது…இதை அடுத்ததாக எடுத்துக் கொள்ளுங்கள்” இப்படி விளக்கினாள்.

இந்த ஆறு பெரிய உணவு மூட்டைகளுடன் முத்துவின் உடைகளும் அவனது பொருட்களும் கொண்ட இரண்டு மூட்டைகளும் சேர்க்கப்பட்டது.  மொத்தம் எட்டு மூட்டைகள்.  அத்துடன் இரண்டு நீர் கொண்டு செல்லும் தோல் பைகள் வேறு.  முகிலன் மலைத்துப் போனார்.  இரண்டு குதிரைகளில் இவ்வளவையும் எப்படி வைப்பது? அத்துடன் குதிரைகளின் மீது முகிலன், முத்து, திண்டு என்று மூன்று பேர் ஏறி உட்கார்ந்து பயணிக்க வேறு வேண்டும்? அமர்வதற்கு எங்கே இடம் இருக்கும்?

முத்துவின் அத்தை கோபமாக முத்துவின் அம்மாவைத் திட்டினாள்.  ”அண்ணன் தொலைந்து போனது பற்றி உங்களுக்கு கவலையே இல்லை அண்ணி.  கவலை இருந்தால் இப்படி எல்லாம் செய்ய மாட்டீர்கள்” என்றாள்.

”நான் என்ன தவறு செய்தேன்?” முத்துவின் அம்மா கேட்டாள். 

”பின் என்ன? இவர்கள் என்ன உல்லாச சுற்றுலா பயணமா செல்கிறார்கள்? காணாமல் போன அண்ணனைத் தேடி தானே செல்கிறார்கள்? இவ்வளவு தீனி மூட்டைகள் எதற்கு?

”முத்து குழந்தை இல்லையா? அவனுக்காகத்தான்?’ 

”என்ன குழந்தை? பேசாமல் இந்த தீனி மாடு இங்கே இருந்து தின்று கொண்டு இருக்கட்டும்.  முகிலன் அண்ணா நீங்கள் அந்த மூட்டைகளை இங்கேயே போட்டுவிட்டு செல்லுங்கள்.  நீங்களும் திண்டுவும் மட்டும் செல்லுங்கள்.  இவன் வேண்டாம்” என்றாள் அத்தை.

அத்தை திட்டியதால் முத்துவிற்கு அழுகை வந்தது.  அவன் ”அம்மா” என்று அழுது கொண்டே சென்று அவன் அம்மாவைக் கட்டிக் கொண்டான். 

”அழாதே கண்ணா” என்று சொல்லி அவன் கன்னத்தைத் துடைத்து அவன் வாயில் ஒரு மைசூர்பாகைத் திணித்தாள் அவன் அம்மா.  அவன் வாயில் மைசூர்பாகுடன் அத்தையைப் பார்த்து ”இனிப்பா இருக்கு” என்று சிரித்தான்.

”ச்ச்சீ …மாடு” என்று திட்டினாள் அத்தை.  முத்து மீண்டும் அழ ஆரம்பித்தான்.

”போதும்.  என் குழந்தையை கரித்துக் கொட்ட வேண்டாம்” என்றாள் முத்துவின் அம்மா. 

”என்னமோ செய்து தொலையுங்கள்.  என் அண்ணன் நல்லபடியாக வந்து சேரவேண்டும் கடவுளே” என்று சொல்லிவிட்டு அத்தை அவள் தங்கியிருந்த அறைக்கு சென்று விட்டாள்.

எழில் மலர் முத்துவிற்கும் திண்டுவிற்கும் ”சென்று வாருங்கள்” என்ற டாட்டா காட்டினாள்.  அவர்கள் திரும்ப கை அசைத்தார்கள்.  பின் அவள் அத்தையை பின் தொடர்ந்து உள்ளே சென்று விட்டாள்.

ஊர் பெரியவர் சொன்னார்.  ”அம்மா…இவ்வளவு மூட்டைகள் வேண்டாம்.  மூன்று பேருடைய மாற்று உடைகளை ஒரு பையிலும் நீர் கொண்டு செல்லும் தோல் பைகள் இரண்டையும் மட்டும் எடுத்துக் கொண்டால் போதும்” 

”எனில்….அவர்கள் சாப்பிட வேண்டாமா? 

”நீ என்ன? முத்துவுடன் சேர்ந்து நீயும் குழந்தையாக மாறிவிட்டாயா? நான் முகிலனிடம் ஓலை ஒன்றை கொடுத்திருக்கிறேன்.  அவர்கள் செல்லும் வழியில் உள்ள ஊர்களில் என் நண்பர்கள் சிலர் இருக்கிறார்கள்.  அவர்களிடம் அந்த ஓலையைக் காண்பித்தால் அவர்கள் தேவையான உணவை அளிப்பார்கள்.  வேண்டிய உதவிகள் செய்வார்கள்.  அத்துடன் முகிலனிடம் தான் நீ வெள்ளிக் காசுகளை நிறைய கொடுத்திருக்கிறாயே அதைக் கொண்டு தேவைப்படும் போது வியாபாரிகளிடம் வேண்டியதை வாங்கிக் கொள்ள மாட்டார்களா?

”ஊர்களில் சரி ஆனால் காட்டில்….?” என்றாள் முத்துவின் அம்மா.

”இதென்ன உனக்கு என்ன ஆனது? அது தான் முகிலன் இருக்கிறானே” என்றார் பெரியவர்.

”ஆம் அம்மா.  நீங்கள் கவலைப்படாதீர்கள்.  நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார் முகிலன்.

”ஆம் முகிலன் அண்ணா.  உங்களை நம்பித்தான் இந்த சிறுவர்களை உங்களுடன் அனுப்புகிறேன்.”

”கவலை வேண்டாம் அம்மா.  நாங்கள் அய்யாவுடன் திருப்புவோம்.”

அவர்கள் புறப்பட்டனர்.  அனைவரும் அவர்களுக்கு விடை கொடுத்தனர்.  திண்டுவின் அப்பா அவனுக்கு ஏற்கனவே கொஞ்ச நாள் குதிரை சவாரி செய்ய கற்றுக் கொடுத்திருந்தார்.  எனவே அவன் கருப்பு குதிரையின் மீது ஏறிக் கொண்டான்.  வெள்ளைக் குதிரையில் முகிலன் அமர்ந்து கொண்டு தன் முன்னால் முத்துவை உட்கார வைத்துக் கொண்டார்.  முத்து திண்டுவுடன் அவனுடைய குதிரையில் அமர விரும்பினான்.  ஆனால் முகிலன் அதற்கு சம்மதிக்கவில்லை.  நீர்ப் பைகள் இரண்டும் திண்டுவின் குதிரையிலும் உடைப் பை முகிலனின் குதிரையிலும் மாட்டப்பட்டன. 

முத்துவின் அம்மா கண்ணீரை துடைத்துக் கொண்டு கையசைத்தாள்.  திண்டு தன் அம்மா எங்கே என்று தேடினான்.  அவள் அப்போது தான் வந்தவள் போல சிரித்துக்கொண்டே திண்டுவிடம் வந்தாள்.  அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். 

”சென்று வா என் கண்ணே” என்றாள்.

”அம்மா நீ எங்கே சென்றாய்? இவ்வளவு நேரம் இங்கு காணவில்லையே?” என்று கேட்டான் திண்டு.

”உங்களுக்காக சில ஏற்பாடுகளை செய்தேன்” 

”என்ன ஏற்பாடு?” 

”அதை உன் பயணத்தில் தெரிந்து கொள்வாய் திண்டு” 

”சரி அம்மா”

குதிரைகளில் அவர்கள் நகரத் தொடங்கிய போது ஊர் மக்களில் சிலர் வாழ்த்தினர். 

”வெற்றியுடன் திரும்பி வாருங்கள்”

வேறு சிலர் ”வெற்றி வேல் வீர வேல்” என்றார்கள். 

”ஜெய விஜயீ பவ” என்றார்கள் சிலர்.

”நாம் என்ன போருக்கா போகிறோம்?” என்று கேட்டான் முத்து.

”கிட்டத்தட்ட அப்படித்தான்” என்றான் திண்டு.

முகிலன் மாமா சிரித்தார்.

(மேலும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *