கருப்பு குதிரையில் முகிலனின் வெள்ளைக் குதிரையுடன் கூடவே சென்று கொண்டிருந்தான் திண்டு. முகிலன் திண்டுவை அடிக்கடி திரும்பி பார்த்து கொண்டிருந்தார்.
”பரவாயில்லை. சிறுவனாக இருக்கிறாயே எப்படி இந்த குதிரையில் தனியாக வருவாய் என்று பயந்து கொண்டிருந்தேன். நன்றாகவே பயின்றுள்ளாய்” என்றார்.
”ஆம் முகிலன் மாமா. அப்பா எனக்கு நன்கு கற்றுத் தந்தார். நாம் புறப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே இந்த குதிரை என்னை நண்பனாக ஏற்றுக் கொண்டுவிட்டது.
முகிலனுடன் வெள்ளைக் குதிரையில் இருந்த முத்து புறப்பட்ட சிறிது நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தான். குதிரை வேகமாக செல்வதில் மகிழ்ச்சியாக இருந்தான். பிறகு அவனுக்கு தூக்கம் வந்துவிட்டது. அவனை தன் கரங்களுக்குள் வைத்து அவன் கீழே விழுந்து விடாமல் குதிரையைச் செலுத்தினார் முகிலன். அது அவருக்கு சிரமமாக இருந்தது. எனவே மெதுவாக சென்றார்.
”மாமா நாம் முத்துவின் அப்பா தொலைந்து போன இடத்திற்குத் தானே சென்று கொண்டிருக்கிறோம்?” திண்டு கேட்டான்.
”ஆம். திண்டு. அவர் எனக்காக காத்திருந்த காட்டுப் பகுதிக்கு தான் செல்கிறோம். அங்கிருந்துதான் நாம் அவரைத் தேடி எந்த திசையில் செல்வது என்பதை முடிவு செய்ய வேண்டும்”
திண்டு யோசித்தான். பின் ”ஆம்” என்றான்.
அவர்கள் செல்லும் வழியில் இருந்த ஒரு ஊரில் ஒரு நண்பரின் வீட்டில் உணவு உண்டார்கள். சற்று நேரம் ஓய்வு எடுத்து விட்டு மீண்டும் புறப்பட்டார்கள்.
பின் மதிய நேரம். அவர்கள் ஒரு காடு துவங்கும் இடத்தை வந்தடைந்தார்கள்.
”மாமா அங்கே பாருங்கள். ஒரு நீரோடை இருக்கிறது” என்றான் திண்டு.
”ஆம்” என்றார் முகிலன்.
முத்து விழித்துக் கொண்டிருந்தான். ”நாம் அப்பா தொலைந்து போன காட்டிற்கு வந்து விட்டோமா? என்று கேட்டான் முத்து.
”நாம் ஒரு காட்டின் அருகே வந்து விட்டோம். ஆனால் இது உங்கள் அப்பா தொலைந்து போன காடு அல்ல. அதற்கு இந்த காட்டுடன் சேர்த்து இன்னும் ஏழு காடுகளை கடந்து செல்ல வேண்டும்” என்றார் முகிலன்.
”ஏழு காடுகளா?” முத்து ஆச்சரியப்பட்டான்.
”ஆம். அது எட்டாவது காடு. அது மிகப் பெரியது. நம் நாட்டின் எல்லையில் இருக்கிறது” என்றார்.
”அதில் கொடிய விலங்குகள் இருக்குமா?” முத்து கேட்டான்.
”கொடிய விலங்குகள் அல்ல மிகக் கொடிய விலங்குகள் இருக்கும்…பெரிய பெரிய சிங்கங்கள், புலிகள், கழுதைப் புலிகள், காண்டாமிருகங்கள், யானைகள் இருக்கும். அந்த பெரிய காட்டின் குறுக்கே மூன்று ஆறுகள் வேறு வேறு இடங்களில் கடந்து செல்கின்றன. அந்த ஆறுகளில் ஏராளமான முதலைகள் இருக்கின்றன” முகிலன் சொன்னார்.
முத்து அஞ்சினான். ”அப்படி என்றால் அப்பாவை அந்த விலங்குகள் கொன்றிருக்குமா மாமா?” முத்துவிற்கு அழுகை வந்தது.
”மாமா அவன் அழுது விடுவான்” என்றான் திண்டு.
”இல்லை முத்து. நான் விளையாட்டுக்கு சொன்னேன். மன்னித்துவிடு. அப்பாவிற்கு ஒன்றும் ஆகி இருக்காது. அப்பா இல்லாமல் நாம் ஊர் திரும்ப மாட்டோம். நீ அஞ்சாதே” என்றார் முகிலன். பின் முத்துவின் கன்னத்தைப் பிடித்து கிள்ளி கொஞ்சினார்.
முத்து சமாதானமடைந்தான்.
முத்துவும் திண்டுவும் நீரோடையை நோக்கி ஓடினார்கள்.
”இருங்கள். ஓடாதீர்கள். நான் வரும் வரை நீரில் இறங்காதீர்கள்” என்றார் முகிலன்.
அவர்கள் நீரோடையின் அருகே சென்று நின்றார்கள்.
”பார் மீன்கள் எப்படி துள்ளிச் செல்கின்றன” என்று சொன்னான் திண்டு.
”ஆமாம். இந்த மீன்களின் பெயர் என்ன? என்று கேட்டான் முத்து.
”துள்ளி மீன்கள்” என்றான் திண்டு.
முத்து திண்டுவை சந்தேகத்துடன் பார்த்தான். ”துள்ளி மீன்களா? பெயர் கேள்விப்பட்டதே இல்லையே ? என்றான்.
திண்டு சிரித்தான்.
”சாப்பிட நன்றாக இருக்குமா? முத்து கேட்டான்.
”சாப்பிட்டுப் பார்த்துவிடுவோம்” என்றான் திண்டு.
முகிலன் குதிரைகளை நீரோடைக்கு அழைத்து வந்தார். அவை தண்ணீர் குடித்தன.
”எப்படி தண்ணீர் குடிக்கின்றன!” குதிரைகள் தண்ணீர் குடிக்கும் ஒலிகளை கேட்டு வியந்தான் முத்து.
”பாவம் அவை நம்மை நீண்ட நேரம் சுமந்து வந்தன அல்லவா?” என்றார் முகிலன்.
பிறகு முகிலன் ஓடையில் இறங்கினார். பின்னர் முத்துவையும் திண்டுவையும் அழைத்தார். அவர்களை நோக்கி கை நீட்டினார். அவரது கைகளைப் பற்றிக் கொண்டு முத்துவும் திண்டுவும் நீரில் இறங்கினார்கள்.
முத்து நீரில் இறங்கிய போது முதலில் பயந்தான். பிறகு மகிழ்ச்சியடைந்தான். இருவரும் முழ்கி எழுந்து துள்ளி குதித்து விளையாடினார்கள்.
”இந்த மீன்கள் துள்ளுகின்றன. நான் தான் துள்ளும் முதலை” என்று சொல்லி எழுந்து நின்று துள்ளி தண்ணீரில் விழுந்தான் முத்து. பிறகு எழுந்து சந்தேகத்துடன் ”மாமா முதலை துள்ளுமா?” என்று கேட்டான்.
”துள்ளும். ஆனால் இப்படி துள்ளாது” என்றார் முகிலன்.
பின்னர் ’போதும். நீண்ட நேரம் நீரில் இருக்க வேண்டாம். இன்னும் சற்று நேரத்தில் இருட்டத் தொடங்கி விடும்” என்றார்.
அவர்கள் நீரோடையிலிருந்து வெளியே வந்தார்கள். துணிப் பையில் இருந்து துண்டுகள் எடுத்து உடலைத் துடைத்துக் கொண்டார்கள். முகிலன் முத்துவுக்கும் திண்டுவிற்கும் தலையை நன்கு ஈரம் இல்லாதவாறு துவட்டி விட்டார்.
”வழியில் உடம்புக்கு வந்துவிடக் கூடாது குழந்தைகளே. அது நமக்கு மிகவும் சிக்கலாகி விடும்” என்று சொன்னார். குதிரைகள் கரையில் நின்று கொண்டிருந்தன.
இரவில் பயணம் செய்வது சரியல்ல. முகிலன் இரவு தங்க ஒரு இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று எண்ணினார்.
”நாம் இங்கேயே தங்கலாமே மாமா” என்று கேட்டான் திண்டு.
”இல்லை திண்டு. இங்கே தங்க வேண்டாம். விலங்குகள் வர வாய்ப்பிருக்கிறது. கள்வர்கள் வரவும் வாய்ப்பிருக்கிறது. நாம் வேறு இடம் செல்வோம்” என்றார் முகிலன்.
”எனக்கு பசிக்கிறது” என்றான் முத்து. எனவே அவர்கள் ஓடையின் அருகிலேயே சற்று தூரத்தில் அமர்ந்து சாப்பிட்டார்கள். அவர்கள் வந்த வழியில் ஒரு ஊரில் ஒரு நண்பரின் வீட்டில் சாப்பிட்டார்கள் அல்லவா? அந்த நண்பர் வீட்டில் பொட்டலம் கட்டித் தந்த உணவு.
”பரவாயில்லை. ஒரளவிற்கு …..மிகவும் ஓரளவிற்கு…..மிக மிக ஓரளவிற்கு… மிக மிக மிக ஓரளவிற்கு நன்றாக இருக்கிறது” என்றான் முத்து. திண்டுவும் முகிலனும் சிரித்தார்கள்.
பின் ”நாம் துள்ளி மீன்களை உண்ணவில்லையே” என்று கேட்டான் முத்து.
”பரவாயில்லை. நாளை நாம் அள்ளி மீன்களை உண்போம்” என்றான் திண்டு.
”அள்ளி மீன்களா? அது எங்கே இருக்கிறது? என்று கேட்டான் முத்து.
”அது சுள்ளி மீன்களுக்கு அருகே இருக்கும்” என்றார் முகிலன்.
”ஓ……என்ன? நீங்கள் ரெண்டு பேரும் என்னை கிண்டல் செய்து விளையாடுகிறீர்களா? என்ன நினைத்தீர்கள்? எங்கள் வீட்டில் அம்மா எனக்கு திமிங்கலத்தையே சமைத்து தந்திருக்கிறாள். சாப்பிடிருக்கிறேன் தெரியுமா? என்றான்.
”திமிங்கலமா?” என்றான் திண்டு.
”ஆமாம். சாதாரண திமிங்கலம் அல்ல. நீலத் திமிங்கலம்!”
”முத்து சும்மா சொல்லாதே. நீலத் திமிங்கலம் எவ்வளவு பெரிதாக இருக்கும் என்று தெரியுமா உனக்கு? என்று கேட்டார் முகிலன்.
”தெரியாமல் என்ன? அதனால் தான் அதை அறுநூறு நாட்களுக்கு வைத்து சாப்பிட்டோம். அம்மா அதை துண்டுகளாக வெட்டி பக்குவப்படுத்தி இருந்தாள்” என்றான் முத்து.
”அவ்வளவு பெரிய திமிங்கலத்தை எனக்குத் தெரியாமல் எப்போது வாங்கினார் உன் அப்பா?” என்று கேட்டார் முகிலன்.
”அதை அப்பா வாங்கவில்லை. அம்மா தான் வாங்கினாள். ஒரு கடல் வியாபாரியிடம். நீங்களும் அப்பாவும் அப்போது வெளியூர் சென்றிருந்தீர்கள்”
”பரவாயில்லையே முத்து. நீ குகை தாத்தாவை விட அதிகம் கதை சொல்வாய் போலிருக்கிறதே” என்றான் திண்டு.
”நான் கதை சொல்லவில்லை” என்று சொன்ன முத்து, ”அப்படியென்றால் குகை தாத்தா கதை தான் சொல்கிறார் என்று நீயே ஒப்புக் கொள்கிறாயா?” என்றான்.
”இல்லை தாத்தா உண்மை தான் சொல்கிறார்’” என்றான் திண்டு.
”குகை தாத்தாவா? யாரது?” என்று கேட்டார் முகிலன்.
திண்டு நாக்கைக் கடித்துக் கொண்டான். முத்துவுக்கும் சொல்ல வேண்டாம் என்று ஜாடை காட்டினான்.
”இல்லை ஒன்றுமில்லை” என்றான் திண்டு
”ஆம். மில்லையே ஒன்றும்..ஒன்றுமே மில்லை” என்றான் முத்து.
முகிலன் வியப்பாக பார்த்தார்.
பின்னர் அவர்கள் இரவு தங்க இடம் தேடி குதிரைகளில் மீண்டும் புறப்பட்டனர். காட்டின் ஓரமாகவே சென்றார்கள். பிறகு சரிவாக மேலேறிச் செல்லும் பாறைகள் கொண்ட ஒரு இடத்தைக் கண்டார்கள்.
”நாம் இதன் மீது ஏறிச் சென்று மேலே உள்ள பாறை வெளியில் தங்குவோம். இளவேனிற் காலம் என்பதால் குளிர் அதிகம் இருக்காது. மேலே இருப்பதால் சுற்றிலும் பார்க்க முடியும். விலங்குகளோ மனிதர்களோ வந்தால் தெரிந்துவிடும்” என்றார் முகிலன்.
அவர்கள் மேலே ஏறிச் சென்றார்கள். மேலே ஒரு சிறிய பாறையின் அருகே குதிரைகளை விட்டார்கள்.
நன்றாக இருட்டி விட்டது. வானில் நட்சத்திரங்கள் நிறைந்து இருந்தன. பாதி நிலா தன் ஒளியை மந்தமாக வீசிக் கொண்டிருந்தது. திண்டுவும் முத்துவும் வானை நோக்கியவாறு படுத்துக் கொண்டனர். முகிலன் அவர்கள் இருவர் அருகே கால் நீட்டி அமர்ந்து கொண்டார். அருகே ஒரு வேல் வைத்திருந்தார். அவர்தான் அவர்கள் இருவருக்கும் காவல்.
”மாமா நீங்கள் படுத்துக் கொள்ள வில்லையா?” என்று திண்டு கேட்டான்.
”இல்லை. நீங்கள் உறங்குங்கள். நான் கொஞ்ச நேரம் கழித்து உறங்குவேன் என்றார் முகிலன்.
திண்டுவிற்கும் முத்துவுக்கும் உறக்கம் வரவில்லை.
”ஆ…எவ்வளவு நட்சத்திரங்கள்” என்றான் முத்து.
”அழகு” என்றான் திண்டு.
”திண்…டு இதில் யுரேனஸ் எங்கே இருக்கிறது?” என்று கேட்டான் முத்து.
திண்டு வானில் எல்லா பக்கமும் கண்களால் துழாவிப் பார்த்தான். யுரேனசை கண்டுபிடிக்க முடியவில்லை. ”அது வெகு தொலைவில் இருக்கிறது. கண்டுபிடிக்க முடியவில்லை” என்றான். ”அதோ பார் அதுதான் வியாழன். அதோ அது சிறிய சிவப்பு புள்ளி…அதுதான் செவ்வாய்” என்று காண்பித்தான்.
”எல்லாம் சிறிய ரத்தினக் கற்களை போல இருக்கின்றன” என்றான் முத்து.
”ஆமாம் திண்டு. நீ ரத்தினக் கற்களை பார்த்திருக்கிறாயா? என்று கேட்டான்.
”பார்த்ததில்லை” என்றான் திண்டு.
”எங்கள் வீட்டில் அப்பாவின் அறையில் நிறைய இருக்கிறது. நீ இன்னொரு முறை வீட்டிற்கு வரும் போது உனக்கு காண்பிக்கிறேன்” என்றான் முத்து.
”சரி முத்து”
அவர்கள் மௌனமாக விண்வெளியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
”ஊ” என்ற சத்தம் தொலைவில் இருந்து கேட்டது பிறகு மேலும் மேலும் ”ஊ ஊ ஊ” என்று சத்தம் வந்தது.
முத்து பயப்பட்டான். ”என்ன அது?” என்று கேட்டான்.
”ஓநாய்கள் ஊளை இடுகின்றன” என்றார் முகிலன்.
”அவை இங்கு வருமா?” என்று கேட்டான் முத்து.
”அவை இங்கு வராது. வந்தால் நான் அவற்றை விரட்டி விடுவேன். என்னிடம் வேல் கம்பு இருக்கிறது பார்த்தாய் அல்லவா?” என்றார் முகிலன்.
”திண்…டு திண்…டு” ரகசியமாக கூப்பிட்டான் முத்து
”என்ன முத்து?”
”ஓநாயின் ஊளையே இப்படி இருக்கிறதே குகை தாத்தா சொன்ன டெனோசரின் ஊளை எப்படி இருக்கும்? நினைக்கவே பயமாக இருக்கிறது” என்றான் முத்து.
”ஆமாம்” என்றான் திண்டு.
பின் முத்து ”மாமா மாமா” என்று முகிலனைக் கூப்பிட்டான்.
”என்ன முத்து?” என்று கேட்டார் அவர்.
”அப்பா ஞாபகமாகவே வருகிறது. கொஞ்சம் முறுக்காவது கொண்டு வந்திருக்கலாம்” என்றான் முத்து.
”முறுக்கா? அப்பாவுக்காகவா?” என்று முகிலன் கேட்டார்.
”அப்பாவுக்கு இல்லை. முறுக்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தால் அப்பாவைப் பற்றிய கவலையை மறக்கலாம். தின்பண்டங்கள் சாப்பிட்டால் கவலை போய்விடும்” என்றான் முத்து.
”ஓ அதனால் தான் உன் அம்மா உனக்காக அவ்வளவு தின்பண்டங்கள் செய்தார்களா?” திண்டு கேட்டான்.
”ஆமாம் எனக்கு அவ்வளவு கவலை. ஆனால் என்னுடைய கவலையை மறக்க மட்டும் இல்லை. எனக்கு தின்பண்டங்கள் செய்வதில் அம்மாவும் கவலைகளை மறந்துவிடுவாள்” என்றான் முத்து.
”நாளை உனக்கு ஒரு பழ மரத்தை காண்பிக்கிறேன் முத்து. இந்த காட்டில் தான் இருக்கிறது. அதன் பழங்கள் மிகவும் சுவையாக இருக்கும். நாளை சாப்பிடலாம்” என்றார் முகிலன்.
”என்ன பழம்?” முத்து கேட்டான்.
”ஒரு காட்டுப் பழம். பெயர் நினைவுக்கு வரவில்லை” என்றார் முகிலன்.
பிறகு முத்து உறங்கி விட்டான். திண்டு மட்டும் விழித்திருந்தான்.
திண்டு கேட்டான் ”மாமா நீங்கள் சொன்னீர்களே எட்டாவது காடு அங்கு உண்மையிலேயே மிகக் கொடிய விலங்குகள் இருக்கின்றனவா?”
”இருக்கின்றன திண்டு. அது பெரிய காடல்லவா? இந்த காட்டிலேயே இருக்கின்றனவே? ஓநாய்களின் ஊளை கேட்டாயல்லவா?” என்றார் முகிலன்.
”முத்துவின் அப்பாவை விலங்குகள் ஏதும் செய்திருக்காது அல்லவா? என்று கேட்டான் திண்டு.
”தெரியவில்லை திண்டு. அப்படி எதுவும் நடந்திருக்காது என்று நம்புகிறேன். கடவுள் இருக்கிறார்” என்றார் முகிலன்.
”அவருக்கு எதுவும் ஆகி இருக்காது மாமா” என்றான் திண்டு.
பின்னர் அவனும் உறங்கி விட்டான்.
—
நள்ளிரவில் முகிலனும் உறங்கி விட்டார். திடீரென்று ஊளைச் சத்தம் பெரிதா கேட்டது. முகிலனும் திண்டுவும் விழித்துக் கொண்டார்கள். பாதி நிலா வெளிச்சத்தில் அவர்கள் பார்க்க முடிந்தது. இரண்டு ஓநாய்கள் அவர்களுக்கு முப்பதடி தூரத்தில் அருகே வந்து விட்டன. முகிலன் விரைவாக வேல் கம்பை எடுத்து அவற்றை விரட்ட முன்னால் சென்றார்.
”மாமா” திண்டு அழைத்தான். முகிலன் திரும்பிப் பார்த்தார்.
திண்டு விரல் சுட்டிக் காண்பித்தான். அவன் காண்பித்த இடத்தில் மேலும் மூன்று ஓநாய்கள் நின்றிருந்தன. வேறு ஒரு பக்கத்தில் நான்கு ஓநாய்கள் இருந்தன. பத்துக்கு மேற்பட்ட ஓநாய்கள் அவர்களை சூழ்ந்திருந்தன. அவை அவர்களை நெருங்கி வந்தன. அதற்குள் முத்து எழுந்து விட்டிருந்தன. அவன் பயத்தில் ”அய்யோ…” என்று கத்தினான்.
சற்று தூரத்தில் இருந்த குதிரைகளையும் மூன்று ஓநாய்கள் சுற்றி சூழ்ந்து கொண்டிருந்தன. குதிரைகள் கனைத்துக் கொண்டே சுற்றி வந்தன.
முகிலன் ஓரே ஒரு வேல் கம்பை வைத்துக் கொண்டு எப்படி சமாளிப்பார்?
ஒரு ஓநாய் முத்துவை மெதுவாக நெருங்கி வந்தது. அவன் பயத்தில் நடுங்கினான்.
(மேலும்)