காட்டு மலரின் நறுமணத்தை
ஏற்றுச் சுழலும் காற்றே
வானிலிருந்து சொட்டிய தேன் துளி ஒன்று
என் நாக்கில் விழுந்தது
அறிவாயா?
காட்டின் எல்லையை கடக்கவில்லை – எந்த
நாட்டிற்கும் ஊருக்கும் செல்லவில்லை
ஊ…ஊ…ஊ என் நறுமணக் காற்றே
தேடி வந்தது சுவையான விருந்து
வாய்க்கு அருகே உணவு
வயிற்றுக்கும் எட்டப் போகிறது
தோழர்களே
உங்களுக்கு வேண்டிய வரை தின்னுங்களே
முத்துவை நெருங்கி வந்த ஓநாய் பாடியது. குதிரைகளை சுற்றி இருந்த ஓநாய்களும், மற்ற எல்லா ஓநாய்களும் முத்துவை நோக்கி வந்தன. அவை அந்த ஓநாயுடன் இணைந்து கொண்டன. எல்லா ஓநாய்களும் முத்துவை சுற்றி நின்று பாடின.
இனிய உணவு
நன்கு கொழுத்த உணவு
வேறொரு ஓநாய் அடுத்த வரிகளைப் பாடியது
காட்டில் திரிந்தால் இளைத்துவிடுமே
இளைக்கும் முன்பே நாம் இன்றே தின்போமே
என்று இன்னொரு ஓநாய் பாடியது
திமிங்கலம் தின்று வளர்ந்தது
முயலைப் போல சுவையாக இருக்கும்
ஊ…ஊ…ஊ எம் தோழர்களே
ஊ…ஊ….ஊ எம் தோழர்களே
முத்து மிகவும் அச்சத்தில் இருந்தான். ”சகிக்கவில்லை. எவ்வளவு கேவலமான பாட்டு” என்று முணுமுணுத்தான்.
ஊ ஊ ஊ எம் தோழர்களே
ஊ…ஊ…ஊ எம் தோழர்களே
”அறிவு கெட்ட ஓநாய்கள் சாப்பிடும் முன்பு பஜனை பாடுகின்றன” என்று நினைத்தான்.
ஆமாம் திண்டுவும் முகிலன் மாமாவும் எங்கே? குதிரைகள் எங்கே? முத்து சுற்றிலும் பார்த்தான். எங்கே என்று தெரியவில்லை.
முதலில் பாடிய ஓநாய் சொன்னது, ”போதும் பாட்டு. வாருங்கள் நாம் உண்போம்”
எல்லா ஓநாய்களும் முத்துவின் மீது ஒரே சமயத்தில் பாய அவன் ”அய்யோ அம்மா” என்று அலறினான்.
”என்ன ஆனது முத்து?” திண்டு முத்துவை உலுக்கினான். ”பயங்கரமான கனவு கண்டிருக்கிறான் போல” என்றார் முகிலன்.
முத்து எழுந்து அமர்ந்து கொண்டான். ”கனவா? ஓநாய்கள்…? ஓநாய்கள் வந்து…நீங்கள்…?”
”கனவில் ஓநாய்களைக் கண்டிருக்கிறான்” என்றார் முகிலன்.
”ஓநாய்கள் இங்கு வரவில்லையா?”
”இங்கு ஓநாய்கள் வராது என்று சொன்னேனே முத்து. இந்த இடத்தில் நானும் உன் அப்பாவும் பலமுறை தங்கி இருக்கிறோம்” என்றார் முகிலன்.
”ஓ…” என்றான் முத்து.
”ஆமாம். இந்த துணி விரிப்பு எப்படி வந்தது? இந்த போர்வை எப்படி வந்தது? என்று முத்து கேட்டான்.
”வேறு எப்படி வரும்? நீங்கள் இருவரும் வெறும் பாறையில் படுத்து வானைப் பார்த்துக் கொண்டே நன்கு உறங்கி விட்டீர்கள். நான் தான் உன் துணிப் பையில் இருந்து இந்த துணி விரிப்பை கொண்டு வந்து இங்கே போட்டேன். உங்கள் இருவரையும் தூக்கம் கலையாமல் எடுத்து இதில் படுக்க வைத்தேன். குளிர் அதிகமானதால் இந்த போர்வையையும் உங்கள் மீது போர்த்தினேன்” என்றார் முகிலன்.
”கோடைகால இரவில் இங்கு இவ்வளவு குளிர்வதை இப்போதுதான் பார்க்கிறேன். வழக்கமாக இப்படி இருக்காது” என்றார்.
”சரி நீங்கள் படுத்துக் கொள்ளுங்கள்” என்றார்.
திண்டு சுற்றிலும் பார்த்தான்.
”என்ன திண்டு?” முகிலன் கேட்டார்.
”குதிரைகளின் குளம்படி ஓசைகள் கேட்கின்றன” என்றான் திண்டு.
”நம் குதிரைகள் இங்கல்லவா இருக்கின்றன?” என்று கேட்ட முகிலன் சற்று கவனித்து கேட்டார். பிறகு ”ஆம் இந்த பாறை மேட்டின் கீழே சில குதிரைகள் வந்து கொண்டிருக்கின்றன” என்றார்.
”கள்வர்களா?” என்றான் முத்து.
”கள்வர்கள் இல்லை. இது……..ஆ……அது” முகிலனின் குரலில் மகிழ்ச்சி வெளிப்பட்டது.
குதிரைகளை சற்று தொலைவில் விட்டு விட்டு நான்கு தீப்பந்தங்களுடன் சிலர் அவர்களை நோக்கி மேலேறி வந்தார்கள். வந்தவர்களில் முன்னால் வந்து கொண்டிருந்தவர் ”நல்லை நல்லை” என்று சொன்னார்.
முகிலன் ”எல்லை நல்லை எல்லை நல்லை” என்றார்.
”நல்லை நல்லை” என்று சொன்னவரின் குரல் திண்டுவிற்கு தெரிந்த குரல் போல இருந்தது. ”அட… அப்பா” திண்டு கண்டுபிடித்து விட்டான். அது அவன் அப்பாவின் குரல். திண்டு ”அப்பா” என்று கத்திக் கொண்டு அவரை நோக்கி ஓடினான்.
”திண்டு….பார்த்து வா” அவன் அப்பா வேகமாக வந்தார். திண்டு அப்பாவைக் கட்டிக் கொண்டான். திண்டுவின் அப்பா தலைப்பாகை அணிந்திருந்தார். அப்பாவுடன் கூடவே நான்கு பேர் வந்தார்கள்.
”வணக்கம் அய்யா. தாங்கள் இவ்வளவு சீக்கிரம் வருவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை” என்றார் முகிலன்.
”ஆம் முகிலா. என் மனைவியின் ஓலை கிடைத்த உடனேயே நான் நாட்டு எல்லையில் இருந்து புறப்பட்டு விட்டேன்.”
முத்து என்ன நடக்கிறது என்று புரியாமல் குழப்பம் அடைந்தான்.
”முத்து அருகே வா” என்று திண்டுவின் அப்பா அழைத்தார்.
முத்து அவரது அருகே சென்றான். அவர் அவனை தோளோடு அணைத்துக் கொண்டார். ”உன் அப்பா நிச்சயம் கிடைப்பார் முத்து” என்றார்.
”நீங்களும் எங்களுடன் வருகிறீர்களா அப்பா?” என்று கேட்டான் திண்டு.
”இல்லை திண்டு. நான் எல்லைக்கு உடனே திரும்ப வேண்டியுள்ளது. இவர்கள் நான்கு பேரும் என் படையின் வீரர்கள். இவர்கள் உங்களுடன் வருவார்கள்’” என்றார் திண்டுவின் அப்பா.
”முகிலா..இவர்கள் நால்வரும் மிகவும் தேர்ச்சி பெற்ற வீரர்கள். இவர்கள் உங்களது பாதுகாப்பிற்காக உங்களைப் பின் தொடர்ந்து வருவார்கள்” என்றார்.
”ஆனால் மற்றவர்களுக்கு தெரியாதவாறு இவர்கள் உங்களைப் பின் தொடர்வார்கள்” என்றார்.
”மிகவும் நல்லது அய்யா. அவசரப்பட்டு சிறுவர்களை தனியாக அழைத்து வந்தோமே என்று எனக்கும் அச்சம் தோன்றியது” என்றார் முகிலன். ”ஆனால் உங்கள் மனைவியார் தகுந்த ஏற்பாடுகள் செய்திருப்பதாக வாக்களித்திருந்தார் அதனால் தான்….” என்றார்.
”ஆம். நீங்கள் இனி அஞ்ச வேண்டியதில்லை” என்றார் திண்டுவின் அப்பா.
”ஓ….இதைத்தான் அம்மா ஏற்பாடு என்று சொன்னாளா?“ என்றான் திண்டு.
”ஆம் திண்டு. ஒரு வீரனாக வளர உனக்கு இந்த பயணம் உதவும் என்று உன் அம்மா எண்ணினாள். எனக்கும் அது சரி என்று தோன்றியது.” என்றார் திண்டுவின் அப்பா.
”உன்னுடைய வயதில் நான் போருக்கு புறப்பட்ட என் அப்பாவிடம், அதாவது உன் தாத்தாவிடம் என்னையும் அழைத்து செல்லச் சொல்லி அடம் பிடித்தேன்” என்றார்.
”தாத்தா உங்களை அழைத்துச் சென்றாரா?” என்று கேட்டான் திண்டு.
”இல்லை திண்டு. அவர் மறுத்துவிட்டார்” என்றார் திண்டுவின் அப்பா.
பின்னர் அவர் அந்த நான்கு வீரர்களையும் முகிலனுக்கு அறிமுகம் செய்தார்.
”முகிலா இவர்கள் நால்வரும் மாறுவேடத்தில் இருக்கிறார்கள். இரவில் இப்போது நீங்கள் காணும் இந்த முகங்களை வைத்து இவர்களை பிறகு அடையாளம் காண்பது சிரமமே. இவர்கள் வேடங்களை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருப்பார்கள். எனினும் தொடர்ந்த பயணத்தில் இவர்களை நன்கு அறிந்து கொள்வீர்கள். தேவை ஏற்படும் போது மட்டும் இவர்களது பெயர்களை கொண்டு நீ அழைக்கலாம்” என்றார்.
”இவர் பெயர் வேலன். சிறந்த வேல் வீரர்” என்று அறிமுகம் செய்தார். முகிலன், திண்டு, முத்து மூவரும் அவருக்கு வணக்கம் தெரிவித்தனர். அவர் பதில் வணக்கம் செய்தார். அப்படியே மற்றவர்களையும் அறிமுகம் செய்தார்.
”இவர் பெயர் வாளன். சிறந்த வாள் வீரர்.”
”இவர் பெயர் வில்லன். சிறந்த வில் வீரர். இவரது குறி ஒருபோதும் தவறுவதில்லை.”
”இவர் சிலம்பன். சிறந்த சிலம்ப வீரர். சிறந்த மதியூகி. காட்டில் விலங்குகளின் நடமாட்டத்தை கண்டறிவதில் தேர்ந்தவர். அத்துடன் கள்வர்களின் திட்டங்களை கண்டறிவதிலும் எதிரிகளை முறியடிக்க திட்டங்கள் வகுப்பதிலும் திறமைசாலி”
முத்து வியந்தான். ”வேல் வீரர் வேலன். வாள் வீரர் வாளன். வில் வீரர் வில்லன். சிலம்ப வீரர் சிலம்பன்….பெயர்கள் என்ன இப்படி இருக்கிறது?” என்றான்.
”ஆம் முத்து. இது இவர்களது உண்மையான பெயர்கள் அல்ல” என்றார் திண்டுவின் அப்பா.
”மாறுவேடத்தைப் போலவே இந்த பெயர்களையும் இவர்கள் அடிக்கடி மாற்றுவார்களா?” என்று கேட்டான் முத்து.
”இல்லை. உங்கள் இந்த பயணம் முடியும் வரை இவர்களுக்கு இதே பெயர்கள் தான்” என்றார்.
ஒவ்வொருவராக நால்வரையும் அறிமுகம் செய்து முடித்த பிறகு ”சரி முகிலா, முத்து நான் புறப்படுகிறேன்” என்றார்.
”சரி அய்யா” என்றார் முகிலன். முத்து சரி என்று தலையசைத்தான்.
”திண்டு… இங்கே வா” என்று அவர் அழைத்தார்.
திண்டு அவன் அப்பாவின் அருகே சென்றான். ”திண்டு இந்த பயணம் ஆபத்தானது என்று நீ உணர்திருக்கிறாயா?” என்று கேட்டார்.
”ஆம் அப்பா. நன்கு உணர்ந்திருக்கிறேன்.”
”உனக்கு அச்சமாக இல்லையா?”
”இல்லை அப்பா.”
”சரி……..உன் நண்பன் முத்துவை எந்த நிலையிலும் காப்பது உன் பொறுப்பு”
”ஆம் அப்பா, என் நண்பனை என் உயிரைக் கொடுத்தாவது காப்பேன்”
அவர் சிரித்தார். ”நீ பெரியவனாகிக் கொண்டிருக்கிறாய் திண்டு” என்று சொன்னார். பின் ”நீ வெல்வாய்” என்று வாழ்த்தினார்.
”வருகிறேன்”
அவர்கள் அவருக்கு விடை கொடுத்தனர். திண்டுவின் அப்பாவுடன் வந்த நான்கு வீரர்களும் அவரைப் பின் தொடர்ந்து சென்றனர்.
”அவர்களும் செல்கிறார்கள்?” என்றான் முத்து.
”அவர்கள் அவருடன் செல்லவில்லை. அவரை வழியனுப்பி விட்டு நம்மை சற்று தொலைவிலிருந்து பின் தொடர்வார்கள்” என்றார் முகிலன்.
——
திண்டுவின் அப்பா அவர் புறப்படுவதற்கு முன் நான்கு வீரர்களுக்கும் அறிவுரைகள் வழங்கினார். எந்நிலையிலும் அவர்கள் முத்துவை பாதுகாக்க வேண்டும். அவனுக்கு எந்த தீங்கும் நேரக் கூடாது. திண்டு போர் வீரனாகப் போகிறவன். அவன் படைத்தலைவனாகிய தன்னுடைய மகன். ஆபத்துகளை எதிர்கொள்வதும் எது நேர்ந்தாலும் ஏற்பதும் வீரர்களாகிய நமக்கு அது இயல்பானதே. ஆனால் முத்து அவ்வாறு அல்ல. அவன் தன் தந்தைக்காக இந்த பயணத்தில் வந்திருக்கிறான். அவனது உயிரை நாம் பணயம் வைத்ததாக ஆகிவிடக் கூடாது என்று சொன்னார். அவர்கள் அதை ஏற்றுக் கொண்டனர்.
மேலும் சில ரகசிய விஷயங்களை அவர் அவர்களுக்கு சொன்னார். பின்னர் புறப்பட்டுச் சென்றார்.
—–
அதிகாலை. கிழக்கு வானம் மெலிதாக ஒளி கொண்டது. பின் செந்நிறம் கொண்டது. இரவின் நறுமணம் விலகியது. விடிகாலையின் வாசம் பரவியது. பறவைகள் ஒலி எழுப்பின. குருவி ஒன்று மரக்கிளையில் அமர்ந்து ”க்விக் க்விக் கிவிக்” என்று இனிய குரலில் சத்தமிட்டது. பின் பொன்நிற சூரியனின் வட்ட விளிம்பு மேலெழுந்தது. அந்த பாறை மேட்டைச் சுற்றி இருந்த புல்வெளியிலும் அருகிலிருந்த காட்டின் மரங்களிலும் மெல்லிய பனி புகை போல இருந்தது. அந்த பனி மெல்ல கலைந்து கொண்டிருந்தது. பச்சைப் பசும் புல்வெளி காண்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. மெல்லிய காற்று புல்வெளியின் மீது கடந்து சென்றது.
திண்டுவும் முத்துவும் சற்று உயரமாக இருந்த பாறையின் மீது ஏறி நின்று சுற்றிப் பார்த்தார்கள்.
”எவ்வளவு அழகாக இருக்கிறது” முத்து வியந்தான்.
”ஆம் முத்து” என்ற திண்டு ”முத்து அதோ பாரேன்” என்று சூரியனைக் காண்பித்தான்
மஞ்சள் நிற வட்ட சூரியன் தொடு வானின் மேலே எழுந்திருந்தது. கிழக்கு அடிவானில் காட்டின் மீது பொன்னிற கோடு போல ஒளி அழகாக இருந்தது. சூரியனைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருந்தது.
முகிலன் அவர்கள் இருவரும் சூரியனை ரசித்துக் கொண்டிருப்பதைக் கண்டார். சிரித்துக் கொண்டே அவர்கள் அருகே வந்தார்.
”சரி சிறுவர்களே. நாம் புறப்படுவோம். முதலில் நீரோடைக்கு சென்று நீராடுவோம்” என்றார்.
திண்டுவும் முத்துவும் மகிழ்ச்சியுடன் முகிலனுடன் சென்றனர்.
(மேலும்)