ஒரே கொத்தாக மரத்தின் மேலிருந்து விழுந்தன பழங்கள். திண்டு மகிழ்ச்சியுடன் கை தட்டினான். முகிலன் அந்த பழக் கொத்தை கையில் எடுத்தார். அந்த பழங்கள் சிறியவையாக பொன்னிறத்தில் இருந்தன. சிலவற்றைப் பறித்து முத்துவிடமும் திண்டுவிடமும் தந்தார். இருவரும் உண்டனர்.
அந்த மரத்தின் மீது ஏராளமான கிளிகள் இருந்தன. அவை அந்த பழக்கொத்து விழுந்த போது கூட்டமாக மரத்திலிருந்து எழுந்து பறந்தன. பிறகு கூட்டமாக வானில் பறந்து வேறு இடம் நோக்கிச் சென்றன.
”என் வாழ்நாளில் இவ்வளவு சுவையான பழத்தை இதற்கு முன் உண்டதே இல்லை” என்றான் முத்து. பிறகு ”இந்த உலகத்திலேயே சுவையான பழம் இதுதான்” என்றான்.
திண்டு பழத்தை சுவைத்துக் கொண்டே சுற்றிலும் பார்த்தான். அந்த பழக்கொத்தை கீழே வீழ்த்திய அம்பு எங்கே என்று பார்த்தான். கண்டுபிடிக்க முடியவில்லை.
அவர்கள் அன்று காலையில் இருந்து பயணம் செய்து அந்த முதல் காட்டின் நடுப்பகுதிக்கு வந்திருந்தனர். மதிய நேரம் அந்த பழ மரத்தின் அருகே வந்து நின்றார்கள். அந்த பழத்தைப் பற்றி முன்னாலேயே முகிலன் முத்துவிடம் சொல்லி இருந்தார்.
மரத்தில் உயரத்தில் இருக்கும் பழத்தை எப்படி பறிப்பது என்று முகிலன் யோசித்தார். திண்டு ”நான் மரத்தில் ஏறுகிறேன்” என்று சென்றான்.
”வேண்டாம்” என்று முகிலன் மறுத்து விட்டார்.
முத்து ஒரு யோசனை செய்தான். ”திண்டு நான் மரத்தை பிடித்து உலுக்குகிறேன். நீ கீழே விழும் பழங்களை எடு” என்றான்.
”இவ்வளவு பெரிய தடிமனான மரத்தை உலுக்க முடியாது” என்றான் திண்டு.
”முயன்றால் முடியாதது எதுவுமில்லை. நான் யானை. என்னால் எந்த மரத்தையும் உலுக்க என்ன முறிக்கக் கூட முடியும்” என்றான்.
முகிலன் சிரித்தார். ஏதாவது வழி கிடைக்குமா அவர் சுற்றிலும் பார்த்தார்.
முத்து மரத்தை இரு கைகளாலும் பற்றி உலுக்க முயன்றான். அதை அசைக்கக்கூட முடியவில்லை.
”இந்த மரத்தை முறிக்க வேண்டாம் என்று பார்த்தேன். எனக்கு வேறு வழியில்லை. முறித்து விட வேண்டியது தான்” என்றான் முத்து.
”ஈ ஊ ஆஆ ஈஈஈ” முத்து தன் முழு பலத்துடன் மரத்தில் மோதினான்.
ஒரே கொத்தாக பழங்கள் கீழே விழுந்தன. அப்போதுதான் திண்டு கை தட்டினான்.
முத்து பெருமிதம் கொண்டான். ”என் பலத்தை அது புரிந்து கொண்டு விட்டது” என்று சொல்லிக் கொண்டே திண்டுவை நோக்கி வந்தான். .
உண்மையில் நடந்ததே வேறு. உண்மையில் என்ன நடந்தது என்று திண்டுவிற்கும் முகிலனுக்கும் தெரியும்.
இவர்கள் பழ மரத்தின் அருகே நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தனர். அது சற்று தொலைவில் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்த நான்கு வீரர்களுக்கும் கேட்டிருக்க வேண்டும். அங்கிருந்து ஒரு அம்பு பறந்து வந்து மரத்தின் மேலிருந்த பழக்கொத்தை வீழ்த்தியது. அதை திண்டு பார்த்து விட்டான்.
அது சிறந்த வில் வீரரான வில்லரின் அம்பாக தான் இருக்கும் என்று திண்டு ஊகித்தான். முகிலனும் அதை புரிந்து கொண்டார்.
திண்டு கை தட்டியதை தனக்கான பாராட்டாக முத்து நினைத்துக் கொண்டான்.
அவர்கள் பழங்களை உண்ட பின் நீர் அருந்தினார்கள். எங்காவது ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றியது. முகிலன் சுற்றிலும் பார்த்துவிட்டு ஒரு பிரம்மாண்டமான மரத்தைக் காண்பித்தார்.
”அந்த மரத்தின் அடியில் சற்று நேரம் ஓய்வு எடுக்கலாம்” என்றார்.
நீல வானின் சூரியனுக்குக் கீழே அந்த மரம் ஒரு பெரிய குடையைப் போல இருந்தது. சுற்றிலும் நிழல் உண்டாக்கி இருந்தது. அந்த மரத்தின் வேர் புடைப்பில் அவர்கள் அமர்ந்து கொண்டனர். குதிரைகள் சற்று தொலைவில் வேறு ஒரு மரத்தின் அருகே நின்று கொண்டிருந்தன.
சற்று நேரத்தில் முத்துவிற்கு தூக்கம் வந்துவிட்டது. அவன் அப்படியே சரிந்து படுத்து விட்டான். முகிலனுக்கும் திண்டுவிற்கும் கண்கள் சொக்கின. திண்டுவும் உறங்கி விழுந்தான்.
முத்துவின் கனவில் ஒரு பொன்னிற பாம்பு வந்தது. அது மிக நீண்டதாக இருந்தது. அதன் பொன்னிற உடலில் பளபளப்பான கரிய சிறு முக்கோணங்கள் இருந்தன. அதன் கண்கள் வைரக் கற்களை போல இருந்தன. அவை ஜொலித்தன. அது நெளிந்து வந்து முத்துவின் நெஞ்சின் மீது ஏறியது. பின் படமெடுத்து நின்றது. தன் வாயைத் திறந்தது. அதன் பற்கள் ரத்த நிறத்தில் சிவப்பாக இருந்தன. ஆனால் எதனாலோ முத்துவிற்கு அதைக் கண்டு பயமே ஏற்படவில்லை. அவன் அதன் அழகை ரசித்தான்.
திடீரென்று அந்த பாம்பு அவன் கன்னத்தில் கொத்திவிட்டது. முத்து அதிர்ச்சி அடைந்து கத்தினான். ”அய்யோ என்னை பாம்பு கொத்தி விட்டது” என்று அலறினான்.
தூக்கக் கிறக்கத்தில் இருந்த முகிலனும் திண்டுவும் பதறி வேகமாக எழுந்து கொண்டார்கள்.
”எங்கே பாம்பு?” என்று பார்த்தார் முகிலன். பின்னர் ”இவனுக்கு எப்போதும் இப்படித்தான் ஏதாவது கனவு வந்து கொண்டே இருக்கிறது” என்றார்.
திண்டு முத்துவை உலுக்கி எழுப்பினான். முத்து எழுந்து கொண்டு தண்ணீர் வேண்டும் என்று கேட்டான்.
”இருங்கள். கொண்டு வருகிறேன்” என்று சொல்லி முகிலன் குதிரையை நோக்கிச் சென்றார்.
முகிலன் அங்கிருந்து நகர்ந்து சென்று விட்ட பிறகு முத்து தன் கனவை நினைத்துப் பார்த்தான். அந்த மரத்தின் வேர் புடைப்பின் அருகே கையை வைத்து ”திண்டு பாம்பு இந்த வழியாகத் தான் வந்தது” என்றான். கையை அப்படியே நகர்த்திக் கொண்டு வந்தான். அவனை அறியாமலே ஒரு இடத்தில் வேர் புடைப்பின் அடியே இருந்த இடைவெளியில் கை விட்டான். அந்த துளையில் சிறிய சக்கரத்தைப் போன்ற ஏதோ ஒன்று கையில் தட்டுப்பட்டது.
”திண்….டு இதற்குள் ஏதோ ஒன்று இருக்கிறது” என்று சொல்லி அதை வெளியே இழுக்க முயன்றான்.
”முத்து….அதில் ஏன் கைவிட்டாய். உண்மையிலேயே அதில் ஏதாவது பாம்பு இருக்கக் கூடும். கையை வெளியே எடு” என்றான் திண்டு.
”இல்லை திண்….டு….. சக்கரம் போல ஏதோ ஒன்று இருக்கிறது”
”சக்கரமா?”
”ஆமாம். உலோகம் போல தட்டுப்படுகிறது. பல் சக்கரம் போல இருக்கிறது” என்றான்.
”எங்கே கை எடு. நான் பார்க்கிறேன்” என்றான் திண்டு.
அதை வெளியே இழுத்து எடுக்க முத்து முயன்றான். முடியவில்லை. ஆனால் அது சுழன்றது.
”திருப்ப முடிகிறது” என்றான் முத்து.
முத்து அந்த சக்கரத்தைத் திருகினான்.
திடீரென்று முழுவதுமாக எல்லாம் இருட்டாகி விட்டது.
திண்டுவும் முத்துவும் ஒரு பெரிய பள்ளத்தில் விழுந்தார்கள்.
”அய்யோ…அம்மா” இவரும் அலறி அடித்துக் கொண்டு புரண்டார்கள். மேலே கொஞ்சம் வெளிச்சம் தென்பட்டது. பிறகு அது முழுவதுமாக மறைந்து விட்டது. ஒரே இருட்டு.
முத்து அழுதான். ”திண்…டு…திண்…டு …நீ எங்கே இருக்கிறாய்? என்ன ஆனது?” என்றான்.
”முத்து நான் இங்கே இருக்கிறேன். நீ எங்கே இருக்கிறாய்?” என்று கேட்டான் திண்டு.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க முடியவில்லை.
”அம்மா….” முத்து மிகவும் பயந்தான்.
”பயப்படாதே முத்து” என்று சொன்ன திண்டு முத்துவின் குரல் வந்த திசையை கொண்டு அவனை நெருங்கிச் சென்றான்.
இருளில் அவன் முத்துக் கண்டுபிடித்து அவனைத் தொட்டான்.
முத்து அச்சமடைந்த போது ”பயப்படாதே நான் தான்” என்று சொன்னான் திண்டு.
”என்ன ஆனது? நாம் எங்கே இருக்கிறோம்?” என்று கேட்டான் முத்து.
”முத்து நீ அந்த சக்கரத்தை திருகினாய் அல்லவா? அதன் பிறகுதான் நாம் இங்கே விழுந்தோம்” என்றான் திண்டு.
”மேலே ஒளி தென்பட்டு மறைந்ததை நீ கவனித்தாயா? என்று கேட்டான்.
”ஆம்…மேலே” என்றான் முத்து.
”அப்படி என்றால் இது ஏதோ ரகசிய சுரங்க வழி போலிருக்கிறது. மேலே இருந்து நாம் உள்ளே விழுந்தவுடன் அது மூடிக் கொண்டது” என்றான் திண்டு.
”இப்போது என்ன செய்வது?” என்று கேட்டான் முத்து.
”இரு யோசிப்போம்” என்றான் திண்டு.
”நீ என் கை விடாதே” என்று சொன்ன திண்டு முத்துவுடன் ஒரு கையைக் கோர்த்துக் கொண்டான். பிறகு அவர்கள் ஒரு கையை மட்டும் முன்னால் நீட்டி மெதுவாக நகர்ந்து சென்றார்கள்.
திண்டுவின் கையில் சுவர் தட்டுப்பட்டது. ”கற் சுவர் போல இருக்கிறது” என்றான் திண்டு.
”நாம் மீண்டும் மேலே ஏறிச் செல்ல முடியாதா?” என்று கேட்டான் முத்து. பிறகு அவனே ”வெளிச்சம் இல்லாமல் என்னதான் செய்வது?” என்றான்.
திண்டு எதுவும் சொல்லவில்லை. அவன் அந்த கற் சுவற்றை கையால் தடவி ஆராய்ந்து கொண்டிருந்தான்.
இதை அமைத்தவர்கள் நிச்சயம் ஏதாவது ஒன்று செய்து வைத்திருப்பார்கள். அதன் மூலம் பார்வை துலங்கும், வழி தெரியும் என்று யோசித்தான்.
அவனுக்கு அவன் முதன் முதலில் குகைக்குள் சென்று குகைத் தாத்தாவை சந்தித்த நாள் நினைவுக்கு வந்தது. அப்போதும் அந்த குகைக்குள் முதன் முதலாகச் சென்ற போது முழு இருட்டாகத்தான் இருந்தது.
கொஞ்ச நேரம் இருட்டில் அங்கேயே நின்றான். அடர்ந்த இலைகளுக்கு பின்னால் அமர்ந்திருக்கும் சிறிய பறவையை போல இருளுக்குள் இருந்த கொஞ்ச வெளிச்சத்தை கண்டுகொள்ள முடிந்தது.
மின்னலின் கீற்று போன்ற ஒளியுடன் பறக்கும் குதிரை மீது அமர்ந்திருக்கும் தாத்தாவின் ஓவியம் தென்பட்டது. அது தெளிவாக தென்பட்டது.
அந்த ஓவியத்திலிருந்து வௌிப்பட்ட தாத்தா அன்று முதல் திண்டுவின் நண்பனாக ஆகி விட்டார்.
அன்று தாத்தா பல விஷயங்களைச் சொல்லி இருந்தார். திண்டுவிற்கு அது இன்று நினைவுக்கு வந்தது.
”திண்டு….இருளை கண்டு அஞ்சாதே. இருள் தீயதல்ல. இருள் தான் ஒளியாக மாறுகிறது. விளக்கில் இருக்கும் எண்ணையைப் போல இருள். அந்த எண்ணை தான் ஒளிச்சுடராக மாறுகிறது. உண்மையில் இரண்டும் ஒன்றுதான்.”
தாத்தா சொல்வது சில சமயங்களில் ஒன்றும் சரியாக புரியாவிட்டாலும் திண்டுவிற்கு அவர் சொல்வதைக் கேட்க சுவாரசியமாக இருக்கும்.
இப்போது என்ன செய்வது?
திண்டு முத்துவின் கையைப் பற்றிக் கொண்டு சுவரைத் தடவிக் கொண்டே சென்று கொண்டிருந்தான்.
சற்று தூரத்தில் வைரத்தைப் போல ஒளியுடன் நீர்த் துளி ஒன்று மேலிருந்து சொட்டியது. மேலே எங்கோ இருந்து அது வெளிச்சத்தைக் கொண்டு வருவது போல் தோன்றியது.
”ஆம் நீர்த்துளிகள் தான்” என்றான் திண்டு.
”நீர்த்துளிகளா?” என்று முத்து கேட்டான்.
முதலில் விழுந்த துளிக்கு பிறகு அடுத்த அடுத்த துளிகள் வேகமாக விழுந்தன. ஒவ்வொன்றும் ஒளியுடன் மின்னியது.
மேலே ஒரு சிறு இடுக்கின் வழியாக வெளிச்சம் உள்ளே வந்தது. அந்த வழியாகத்தான் நீர் சொட்டிக் கொண்டிருந்தது. அப்படி சொட்டிய நீர் தரையில் அமைக்கப்பட்டிருந்த சல்லடை போன்ற கல் துளைகளின் வழியாக தரைக்கு கீழே சென்றது.
இப்போது அந்த சுரங்கத்தின் பாதையை அவர்களால் பார்க்க முடிந்தது. அவர்கள் நின்றிருந்த இடத்தில் இருந்து எதிரே இரண்டு பாதைகள் பிரிந்து சென்றன.
அவர்கள் வந்த வழியையும் சேர்த்து பார்த்தால் மொத்தம் மூன்று பாதைகள். அவர்கள் அதன் நடுவே சென்று நின்றார்கள்.
”இந்த இரண்டில் எதில் செல்வது? முத்து கேட்டான்.
திண்டு யோசித்தான். அவனுக்கு சட்டென்று முகிலனின் நினைவு வந்தது.
”முத்து முகிலன் மாமாவை நாம் மறந்தே விட்டோமே. அவர் நம்மைக் காணாமல் தேடிக் கொண்டிருப்பார். மிகவும் அஞ்சி இருப்பார்.” என்றான்.
”நாம் வந்த வழியே திரும்பிச் செல்வது தான் நல்லது” என்றான்.
”ஆமாம்” என்றான் முத்து.
அவர்கள் வந்த வழியே செல்லவதற்காக திரும்பிய போது அந்த பாதையை காணவில்லை. அங்கே பாறை போன்ற சுவர் தான் இருந்தது.
”நாம் கவனிக்கத் தவறி விட்டோம். நாம் விழுந்த சுரங்கத்தின் நுழைவை போலவே நாம் வந்த பாதையும் மூடிக் கொண்டு விட்டது.” என்றான் திண்டு.
”எப்படி?” என்று கேட்டான் முத்து.
”தெரியவில்லை. அப்படித்தான் அமைத்திருக்கிறார்கள் போலும்” என்றான் திண்டு.
”இனி இந்த இரண்டில் ஒன்றில் தான் சென்றாக வேண்டும்” என்றான்.
”ஏன் அதை மீண்டும் திறக்க முயற்சி செய்யலாமே?” என்று முத்து கேட்டான்.
”வேண்டாம்” என்றான் திண்டு பிறகு தீர்மானமாக ”நாம் இதில் செல்வோம்” என்று வலது பக்க பாதையின் வழியாக முத்துவை அழைத்துக் கொண்டு சென்றான்.
அந்த சுரங்கப் பாதை மிகவும் குளிர்ச்சியாக இருந்தது.
(மேலும்)